Sunday, April 21, 2019

எழுதிய சில குறிப்புகள் 2



இங்குள்ள பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களுக்கு மிகப் பெரிய நிர்ப்பந்தங்கள் உண்டு. முதலீட்டைக் காக்க வேண்டும். வளர்க்க வேண்டும். தொழிலில் முன்னேற வேண்டும். பலவற்றுக்கு முயன்று பார்க்க வேண்டும். அதிகார வர்க்கத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் விட தங்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் உங்களுக்குச் சேவை செய்ய வரவில்லை. அவர்களின் தொழிலைச் சரியான முறையில் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் தான் நேர்மை, நீதி, நியாயம், அறம் என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றீர்கள்? அவர்கள் செய்து கொண்டிருப்பது அவர்களுக்கான நீதி, நியாயம், தொழிலுக்கான அறம் என்று தான் சொல்கின்றார்கள். அது உங்களுக்குப் புரியாவிட்டால் அவர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. 1

150 ரூபாய் கொடுத்து எல்லாச் சேனல்களையும் பார்த்துக் கொண்டிருந்த நீங்கள் இன்று கட்டாயம் 260 கொடுத்தால் தான் பார்க்க முடியும். அத்துடன் எங்கள் விளம்பரங்களையும் நீங்கள் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்று அவர்களும் அவர்களை ஆளும் அரசும் சொன்ன போது அப்படியே அடிபிறழமல் இணைப்பைத் துண்டிக்காமல் பார்க்கத்தானே செய்கின்றார்கள்.

இது தான் அவர்களின் வெற்றி. இது தான் அந்தத் துறையின் சூட்சுமம்.

அது போலத்தான் பிரபல்யங்களும்.

நீங்களும் நானும் காலையில் வெறும் டவுசர் பனியனோடு அருகே உள்ள சாலையோர தேநீர்க்கடையில் பத்து பேரோடு உட்கார்ந்து டீ குடித்து விட்டு வேடிக்கை பார்த்து விட்டு வர முடியும். எங்கே வேண்டுமானாலும் இயல்பாகச் சென்று விட்டு வந்து விட முடியும். காசிருந்தால் பேருந்தில், இல்லாவிட்டால் பொடி நடையாகச் சென்று வந்து விடலாம். ஆனால் தங்கள் முகத்தை மற்றும் பேச்சை  வைத்து பிரபல்யமாக ஆனவர்களின் கதை அப்படியா?

பொழுது விடிந்து இரவு வருவதற்குள் அவர்களுக்கு சில ஆயிரமாவது தேவைப்படும். இவர்கள் சோரம் போய்விட்டார்கள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் பிழைப்பதற்கான வழியில் சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று பாராட்டுங்கள்.

இப்போது நட்சத்திர பேச்சாளர்கள் யாருமில்லை. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பேச்சாளர்களும் எங்கே காணப்படவில்லை. திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் வானில் மறைந்து விட்டது.

நேரிடையான கொள்முதல் போல இவற்றுக்கு செலவளிக்கும் தொகையை இப்போது நேரிடையாகவே மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்.

முகம் தெரிந்த பேச்சாளர்களின் இன்றைய சந்தை மதிப்பு 30,000 முதல் 50,000 வரைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு நாளைக்கு இரண்டு கூட்டம் என்றாலும் ஒரு லட்சத்தை வீட்டுக்கு அலுங்காமல் கொண்டு போய் சேர்த்து விடலாம். டாக் ஷோ வில் கலந்து சாயங்காலம் பெறும் சொற்ப தொகையும், எவனும் தன்னை நம்பி படம் எடுக்கத் தயாராக இல்லை என்று யோசித்த தருணங்களிலும் சிலர் சரியான முடிவை எடுத்துத் தான் ஆக வேண்டும்.

அதாவது காற்றுள்ள போது தானே தூற்றிக் கொள்ள முடியும்?

இது போன்ற சமயங்களில் கரு.பழனியப்பன் போன்றவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாக இருக்க வாழ்த்துங்களேன்.

********

தேனியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசும் பேசியதை பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயர்த்தார். அற்புதம் என்ற வார்த்தைக்கு மேலே ஏதாவது ஒரு வார்த்தை இருக்குமேயானால் அதை இங்கே எழுதி வைக்கலாம்.

மொழி பெயர்ப்பு என்பது வெறும் மொழிப் புலமை சார்ந்தது மட்டுமல்ல. அது உணர்வு மற்றும் உள்ளக்கிடக்கை சார்ந்ததும் கூட.

மாறுபட்ட கொள்கைகள், விருப்பங்கள், நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றோம் என்பது தான் அரசியலின் அஸ்திவாரம். அந்த வகையில் பீட்டர் அல்போன்ஸ் செய்த மொழி பெயர்ப்பு என்பது தயிரில் கடையும் போது உருவாகும் நெய் போன்ற அற்புதமாக இருந்தது.

இவரை ஏன் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்வதில்லை என்று அதன் பின்புல அரசியலுக்குப் பின்னால் சென்று பார்த்தால் காங்கிரஸ் முன்வைக்கும் மதநல்லிணக்கம் என்ற வார்த்தை அம்மணமாக நிற்பதை நம்மால் காண முடியும்.

நேற்றைய பேச்சில் ராகுல் ஒரு வித்தியாசமான முக்கியமான தகவலைச் சொல்லியுள்ளார்.

இளம் தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஆசைப்பட்டால் தாராளமாகத் தொடங்கலாம். முதல் மூன்று வருடங்கள் அரசாங்கத்தில் உள்ள எந்த துறையிலும் அனுமதி வாங்கத் தேவையில்லை. மூன்று வருடங்கள் கழிந்தபின்பு அதற்குப் பிறகு தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம். அதாவது அந்தத் தொழிலின் லாப நட்டங்களைப் பொறுத்து. செய்த தொழில் தேவையில்லை அல்லது தொடர விருப்பமில்லை என்றால் வேறு தொழில் தொடங்கலாம். மீண்டும் மூன்று வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள் இதற்குப் பின்னால் உள்ள பிரச்சனைகளை.

உண்மையிலேயே ராகுலுக்கு இது போன்ற ஆலோசனைகளைச் சொல்லிக் கொடுக்கும் அந்த பொருளாதார நிபுணர்களைப் பார்க்க வேண்டும் போல ஆசையாக உள்ளது.

சொல்லிக் கொடுப்பவர் பைத்தியமா? இல்லை அதை நம்பிப் பேசும் தான் ராகுலா? என்று வியப்பாக உள்ளது.

மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழகத்தில் ஒரு தொழில் தொடங்கி வேர் பிடித்து வளரத் தொடங்கினால் இங்கே உள்ள எத்தனை நந்திகள் உருவாகும்? 
எத்தனை நவக்கிரகங்களுக்கு மாதந்தோறும், வருடந்தோறும், தேர்தல் சமயங்களில், கூட்டம் நடத்தும் சமயங்களில் தட்சணை செய்யப்பட வேண்டும் என்று திருப்பூர் நிறுவனங்களில் வந்து ராகுல் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இந்தச் சூழலில் அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை. உங்கள் விருப்பம் போலச் செயல்படலாம் என்று சொல்வதற்குப் பின்னால் நிழலுக ஆதிக்கம் மிகுந்தவர்களின் அரசாங்கம் நடக்க அனுமதி அளிப்பதாகவே இதற்கு அர்த்தம். ஒரு வேளை அந்த மூன்று வருடங்களில் ஒருவர் செய்த தொழில் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் மக்கள் எங்கே போய் முறையிட முடியும்?

தவறு செய்தவர்கள் சட்டத்தின் பார்வையில் எப்படித் தெரிவார்கள்?

அரசாங்கம் வரி, வருவாய்களின் அடிப்படையில் தான் செயல்படுகின்றது. இந்தியா முழுக்க இப்படிப்பட்டவர்கள் உருவாகும் பட்சத்தில் மூன்றாண்டுகளுக்கு எங்கிருந்து நிதியைப் பெறுவார்கள்? இன்னும் பல கேள்விகள் இதற்குப் பின்னால் உள்ளது.

ஒரு வேளை ராகுல் பெரியார் புத்தகங்களை மோடிக்குக் கொடுப்பதற்கு முன்பு அவர் அம்மாவுக்குக் கொடுத்து இருந்தால் ரேபரலி தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்பு பூஜை புணஸ்காரங்கள் செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பாரா? என்ற கேள்விக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

************

எங்கள் கட்சிக்குக் கொள்கையுண்டு. நாங்கள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவோம் என்று சொன்ன, சொல்லிக் கொண்டு இருக்கும் கட்சிகளும் சரி, மக்களிடம் கடந்த ஐம்பது வருடங்களாக அறிமுகமாகி எங்களுக்கு நிரந்தரமாக இத்தனை சதவிகிதம் ஓட்டு இருக்கின்றது என்று மார் தட்டி களத்தில் நிற்கும் கட்சிகளும் பணத்தை வெவ்வேறு வழிகளில் வாரி இறைத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

ஊடக பலம் ஒரு பக்கம். சாதியை வைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சி மறுபக்கம். ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் கட்சிகளின் பிரச்சாரங்களும், பேச்சுகளும், அவர்களை முன்னிலைப்படுத்தும் செயல்பாடுகளும் ஊடகத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை கவனித்துப் பாருங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ஏன் நிரந்தர ஓட்டு வங்கியுள்ளவர்களால் இத்தனை சிரமப்பட வேண்டியதாக உள்ளது?

மொத்தத்தில் ஒவ்வொரு பெரிய கட்சிகளும் இந்த தேர்தலில் பெறக்கூடிய ஓட்டுக்களும் அவர்கள் செலவளித்த பணத்திற்குக் கிடைத்த வெகுமதி. அப்படியென்றால் கட்சிக்காரர்கள்? அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

நான் இருக்கும் பகுதியில் ( மொத்த பத்து பகுதிகளிலும்) ஒரு வேட்பாளர் கூட வந்து ஓட்டுக் கேட்க வரவில்லை.

முக்கியமான இடங்களில் தான் அனைவரும் ஓட்டுக் கேட்கச் சென்றதாக பத்திரிக்கையில் வந்தது. அவர்களுக்கு நேரமில்லை என்பதனை விட அவர்களின் உடம்புக்கு இந்த வெயில் கொடுத்த பரிசாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த தேர்தல் இதுவரையிலும் நடந்த தேர்தல்களில் மொத்தமாகவே வித்தியாசமாக உள்ளது. வாக்காளர்களைச் சந்திக்காமல் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்ற புதிய பாதையை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ளதாக எடுத்துக் கொள்ள முடியும்.

சீமான் தமிழகம் முழுக்க எத்தனை சதவிகிதம் ஓட்டு பெறப் போகின்றார் என்பதனை கவனிக்க அதிக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் பரப்புரை தாக்கத்தை உருவாக்குமா? உருவாக்கியதா? இல்லை தமிழக மக்கள் குறிப்பிட்ட சின்னம், குறிப்பிட்ட அரசியல்வாதி என்ற எண்ணத்திலிருந்து வெளியே வந்துள்ளனரா? கிராமத்து மக்கள் மாறியிருக்கின்றார்களா? மாற்றப்பட்டு உள்ளனரா? விலைக்கு வாங்கப்பட்டு உள்ளனரா? மதம் ஆதிக்கம் செலுத்தியதா? இல்லை எப்போதும் போலச் சாதி தான் தீர்மானித்து உள்ளதா? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்?

*************

சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் மனித வள பயிற்றுவிப்பாளர் நடத்திய குளறுபடியால் மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர் மரணம் அடைந்தார். செய்தித் தாள்களில் இது வந்தது. சில நாட்களில் இது குறித்த செய்தி இல்லை. நண்பர் அழைத்துக் கேட்டார். அந்த கல்லூரி யாருடையது? தெரியுமா? என்று கேட்டு விட்டு பாராளுமன்ற துணைச் சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை குறித்துச் சொன்ன போது மிரட்சியாக இருந்தது. கோவை கல்லூரி தம்பிதுரை மனைவி பெயரில் தான் இருந்தது.

இந்த பேச்சில் செந்தில் பாலாஜி பேசுவதைக் கேட்ட போது மிரண்டு போனேன். அன்று நண்பர் சொன்னதும் இதுவே தான். இந்தியா முழுக்க 45க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளார். இப்போது மருத்துவக்கல்லூரி வேறு கட்டிக் கொண்டு இருக்கின்றார். ஆனால் எந்த இடத்திலும் இவர் பெயர் அடிபட்டுள்ளதா? என்று யோசித்துப் பாருங்கள். சசிகலா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இவர் தான் அன்றைய சூழலில் சசிகலாவிடம் கெஞ்சி (அதிகமாக) கேட்டுக் கொண்டார்.

இப்போது தம்பிதுரை கரூர் தொகுதியில் அதிமுக சார்பாகப் பாராளுமன்ற உறுப்பினராக நிற்கிறார். தொகுதி மக்கள் இவரை மதிக்கத் தயாராக இல்லை. இவரும் மக்களை மதிப்பது போல நடிக்கவிரும்புவதும் இல்லை. நீ ஓட்டு போட்டா போடு. போடாவிட்டால் போய்யா... என்பது போலப் பேசி எல்லா இடங்களிலும் வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டு இருக்கின்றார்.

செந்தில் பாலாஜிக்கு இப்போது திமுக சீட் கொடுத்துள்ளது. தற்போது அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் குறித்துப் பேசுவதைக் கேளுங்கள். ஒரு நாளைக்கு 200 ஏக்கர் பத்திரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றது. (பா.ஜ.க. அரசு இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் படி சொத்துப் பத்திரங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கும்பட்சத்தில் இந்த நாட்டில் பல இருட்டு மனிதர்களின் வெளிச்சத்தை நம்மால் பார்க்க முடியும்) தேர்தல் ஆணையம் வேலை எளிதாக முடிந்து விடும். ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்.

மாறி மாறி உண்மையைச் சொல்பவர்கள் தெய்வத்திற்குச் சமம் என்று நம் குலசாமி நடிகர் வடிவேல் சொல்லியுள்ளார்.

நாம் கேட்டுக் கொள்ள முடியும். அவ்வளவு தான் நம்மால் முடியும்.

வாக்களிப்போம். வாழ வைப்போம். வளர வைப்போம். யாரை? என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


***********

நூறு நாள் வேலைத்திட்டத்தை எப்போதும் எங்கே சென்றாலும் ப.சி பெருமையாகச் சொல்லுவார். இப்போது மகன் தன் தொகுதியில் 32 ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி.

வழங்கப்படும் நிதியின் அளவு ரூபாய் 800
ஆரத்தி எடுத்த பெண்களின் எண்ணிக்கை 25 பேர்கள்
ஒரு நபருக்கு ரூபாய் 32

(கடைசியில் இந்தப் பணம் பிரிப்பதில் கூட அடிதடி வரைக்கும் போயுள்ளது)

இப்போது தெரியுமே? சிவகங்கை வாக்காளர்கள் எந்த அளவுக்குக் காய்ந்து போய் இருக்கின்றார்கள் என்று புரியுமே?

இப்போது சொல்லுங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே எந்த அளவுக்குச் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதனை மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஏழை வேட்பாளர் குட்டி ப.சி உங்கள் ஆதரவு கொடுக்க வேண்டாமா?


15 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அண்ணா...

முதலில் நாம் திருந்த வேண்டும்...

என்ன சொன்னாலும் தலையாட்டிகளை இருப்பதுதான் கேவலம்...

இப்படி ஒரு திட்டம் சாத்தியமா என்பதை நாம் யோசிப்பதில்லை... நம்ம யோசனை எல்லாம் எவன் எவ்வளவு தருவான் என்பதில்தான் இருக்கிறது.

KILLERGEE Devakottai said...

//மொழி பெயர்ப்பு என்பது வெறும் மொழிப் புலமை சார்ந்தது மட்டுமல்ல. அது உணர்வு மற்றும் உள்ளக்கிடக்கை சார்ந்ததும் கூட//

மிகச் சரியான பதம் நண்பரே...

என்னைப் பொருத்தவரையில் இந்திய மக்களுக்கு வாக்குரிமை தேவையற்றது.

குரங்கு கையில் பூமாலை எதற்கு ?

G.M Balasubramaniam said...

எனக்கு புரியாத ஒன்று உங்கள் பதிவுகளில் நிறைய விஷயங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும்பற்றி உங்கள் குறிப்பிட்ட அபிப்பிராயம் இருப்பதில்லை நிறையவே ஹேஷ்யங்களோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது டிமானிடைசேஷனால் பலர் துன்பத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்று படித்துஅறிந்ததாக நினைவு எப்படி என்று சொல்லித் தெளிவிக்க வேண்டுகிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடையாது... தெரிந்தாலும் ம்ஹிம்... ஆனால், தேடிக் கொண்டிருப்பதற்கான பதிலுக்கு கேள்விகள் நினைய உண்டு...!

இப்படிக்கு
???

ஸ்ரீராம். said...

தம்பிதுரைகள் மிரள வைக்கிறார்கள்.

ஜோதிஜி said...

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பற்றி எந்த பத்திரிக்கையும் கண்டு கொள்வதில்லை. ஆனால் நம்மைவிட அவர்களுக்கு எல்லாமே முழுமையாகத் தெரியும். அதில் தான் சூட்சமம் உள்ளது. சம்மந்தப்பட்டவர்களின் திறமையும் உள்ளது.

ஜோதிஜி said...

அழகான விமர்சனம். எழுதுபவர்களின்நோக்கம் என் பக்கம் நீ வந்து விடு? இது தான் சரி? இது மட்டுமே சரி? என்பது சொல்வது அல்ல. அப்படியே எழுதினாலும் வாசிப்பவன் மனதிற்குள் மர்மப் புன்னகை பூத்து விட்டு அடுத்த முறை நம் பெயரைப் பார்த்தவுடன் அவன் மனதில் தோன்றும் வேறு விதமான எண்ணங்களுடன் நகர்ந்துவிடுவான். இங்கே பலரும் பாதிக்கப்பட்டது அப்படித்தான். இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. நானும் உட்பட். பொதுவில் எழுதத் தொடங்கினால் இதையெல்லாம் இயல்பாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஜெ குறித்த என் அபிப்ராயங்களை பார்வைகளை எழுதியுள்ளேன். அது என் பார்வை. படிப்பவர்களின் பார்வை வேறு விதமாக இருக்கலாம் அல்லவா? வாய்ப்புகளை எடுத்துக் கொடுப்போம். வாசிப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பணமதிப்பு விவகாரத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு கீழே இருந்த மக்கள் துன்பப்பட்டது வேறு வகையில். காரணம் அவர்கள் கையில் பல லட்சம் கோடிகள் போன்று எந்தப்பணமும் கையிருப்பில் இல்லை. அதிகப்பட்சம் ஒரு லட்சம் கையில் இருந்தால் ஆச்சரியமே. ஆனால் அந்த சமயத்தில் ஒரு வாரத்தில் துன்பப்பட்டு இருப்பார்கள். ஆனால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இதன் மூலம் பெற்ற துன்பங்கள் பல. மோடி இதன் மூலம் நாட்டுக்கு நல்லது செய்துள்ளார் என்பது பத்து சதவிகிதம். ஆனால் அவரின் எதிரிகளின் பலங்களை வழித்துத் துடைத்து விட்டார் என்பது தான் உண்மை. அவர் பெற்ற ஆதாயங்கள் பல என்றாலும் இது முக்கியமாகத் தெரிகின்றது.

ஜோதிஜி said...

வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியர்களின் 2047 ல் தான் சுதந்திரம் என்றால் என்ன என்பது தெரிய வரும் என்று சொல்லியுள்ளார். ஆகவே தயவு செய்துஇன்னும் 28 வருடங்கள் பொருத்தருள வேண்டுகிறேன்.

ஜோதிஜி said...

குமார் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க நான் பேசிய வரைக்கும் இலவசம் மற்றும் வாங்கிய பணம் இத்துடன் கவர்ச்சி தேர்தல் அறிக்கை இந்த மூன்றும் தான் இந்த முறை வாக்காக மாறியுள்ளது.

ஜோதிஜி said...

என்ன தனபாலன் கேள்வி கேட்டு இருக்கீங்க? தைரியமா இங்கே எழுதி வைங்க. அதை தனிப்பதிவாக கேள்வி பதிலாக எழுதி கலக்கிடுவோம். காசா? பணமா?

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மொழிபெயர்ப்பு தொடர்பான சிக்கல்களை நான் அறிவேன். இப்போது களத்தில் ராகுலுக்கு அவர் மொழிபெயர்ப்பு செய்வது அருமை.

ஜோதிஜி said...

https://www.youtube.com/watch?v=SbdV7wnl0QQ&list=FLICflI1OwSEcm1LiInI4zjg&index=2&t=0s பார்க்கவும். மொழி பெயர்த்த கேரள பெண்மணி (வழக்குரைஞர்) திருமதி ஜோதி

ஜோதிஜி said...

நன்றி

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி