Tuesday, April 03, 2018

ஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...


மேலும் சில குறிப்புகள் 10

தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரசியல் அமைப்பு மக்களுக்காக உருவாக்கிய அனைத்தையும் பாழ்படுத்தினார். 

இது போன்ற அர்த்தம் வரும் வார்த்தைகள், இன்னும் நீதிபதிகளின் கோப வார்த்தைகள், ஜெயலலிதாவின் மேல் குன்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட நகலில் உள்ளது. 

ஆனால் இதனைப் பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை. இன்று வரையிலும் இப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்துள்ளார்கள் என்பதே தமிழகத்தில் பலருக்கும் தெரியாது. 

இந்த வார்த்தைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகளும் மௌனமாகி விட்டது. ஓரே காரணம் நீ ரொம்ப யோக்கியமா? என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் மட்டுமே. 

மொத்தத்தில் பழி மொத்தமும் யார் மேலாவது சுமத்த வேண்டுமே? கிடைத்தார் சசிகலா? இன்று வரையிலும் மாறவில்லை அல்லது மாறுவதற்கான காலம் கனியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

சந்திரலேகா ஐஏஎஸ். 

இவரின் வசீகர முகமும், ஆசிட் வீசிய பின்பு முதல்முறையாக அந்த முகத்தைப் பார்த்த எவருக்கும் இப்படியொரு படுபாதகச் செயலை எவர் செய்திருப்பார்? என்ற எண்ணம் வந்திருக்கும். 

இவர் இப்போது தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். 

நிதானம் என்ற வார்த்தை வெறும் வார்த்தையல்ல. ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் மந்திரச் சொல். இருப்பவன், இல்லாதவன் எனப் பாகுபாடு இல்லாமல் இந்த மந்திரச் சொல்லை சரியாகக் கடைபிடித்து வந்தாலே மன அழுத்தம் நிச்சயம் இருக்காது என்பதற்குச் சந்திரலேகா பேசியதை வைத்து உணர்ந்து கொண்டேன். 

இவர் அனுபவித்த வேதனைகளை, அதனைத் தாண்டி வந்த விதம், இன்னமும் ஜெயலலிதா குறித்துப் பேசும் போது காட்டும் நிதானம் உண்மையிலேயே வியப்பாகவே உள்ளது. 

எதிரிகளிடம் பரிவு காட்டு. எதிரியை மன்னித்து விடு என்று வார்த்தையாக வாசிக்கும் போது எளிதாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில்? அது தான் கற்ற கல்வியும், பெற்ற அனுபவங்கள் கொடுக்கும் வரம். எடுத்துக் கொள்பவர்கள் குறைவான நபர்களே. அதில் ஒருவராகச் சந்திரலேகா மிளிர்கின்றார். 

நான் சசிகலா குறித்து மனதில் வைத்திருந்த சித்திரங்கள் மிகவும் சரியானது என்பது இவர் உரையாடலை முழுமையாகக் கேட்ட பின்பு தோன்றியது. காரணம் சூரியனுக்கு மிக அருகே இருப்பவனைப் போல அதிகாரம் படைத்தவர்களின் அருகே இருப்பவர்களின் நிலையும் இருக்கும் என்பதற்குச் சசிகலாவே உதாரணம். 

எந்தத் தகுதியும் இல்லாமல், வாய்ப்பு வந்த பிறகும் தேவைப்படும் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் வாழ்ந்த ஜெ வுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு சசிகலா. 

தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும், அதிகாரம் சார்ந்த முடிவுகளும் போய்ச் சசிக்கிட்ட பேசிக் கொள்ளுங்கள் என்ற ஜெ வின் ஒற்றை வார்த்தையில் முடிந்துள்ளது என்பதனை இவர் வார்த்தையில் கேட்ட போது நாம் யார் ஆட்சியில் இருந்துருக்கோம் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. 

ஆளுநர் முதல் அமைச்சருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் போது சொல்லப்பட்ட வாசகங்கள் அனைத்தும் கிண்டலாய், கேலியாய் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றது. 

ஜெ. வைப் பொறுத்தவரையிலும் அதிகாரம் என்பது தன் சுய ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே என்பதில் தொடக்கம் முதலே தெளிவாக இருந்துள்ளார். அதற்காகத் தன்னைச் சுற்றிலும் அரண் அமைத்துக் கொண்டு அந்தக் கோட்டையைச் சுற்றிலும் அகழி அமைத்துக் கொண்டு பாதுகாப்பு என்ற பெயரில் பல முதலைகளை அனுமதித்துள்ளார். சசிகலா முதன்மையாக இருந்துள்ளார். 

ஒருவர் இருவராகி, பல நபராக மாறி கடைசியில் மன்னார்குடி மாஃபியா என்கிற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. 

ஜெ. முதல் முறை ஆட்சிக்கு வந்த போதே நூறு கோடி வாங்கிக் கொண்டு அனுமதித்த திட்டம் தான் இப்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். இது போலத் தேவையில்லாத ஆளைக் கொல்லும் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு விலை வைத்து அனுமதித்த அவரின் கொள்ளைப் பசிக்கு மக்களுக்குத் தேவைப்பட்ட எந்தத் திட்டங்களும் அவர் எதிர்பார்த்த பேரங்களுக்குப் பணியாத காரணத்தினால் அண்டை மாநிலங்களுக்குப் பறந்தன. 

தான் விரும்பிய வசூலுக்காகவும் அரசியல் வாழ்க்கை வாழ்ந்த அவரின் செயல்பாடுகளுக்கும், அதற்கு உதவியாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கும் கிடைத்த பரிசைத்தான் இப்போது சசிகலா அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். 

எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் மறைய வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே கவனமாக இருந்த ஜெ செய்து கொண்டு வந்த ஒவ்வொரு காரியங்களும் கடைசியில் அவருக்கு அம்மா என்ற வார்த்தைக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. 

ஆனால் சசிகலா கணப்பொழுதில் உருவத்தை, நடை, உடை, பாவனைகளை மாற்றி மற்றொரு ஜெ வாக மாற நினைத்ததே அவரின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது. சுற்றிலும் உள்ள அடிமைக்கூட்டத்தை வைத்துக் கொண்டு ஆமை போல நகர்ந்து வந்திருந்தால் இந்நேரம் தமிழக அரசியல் அரங்கில் காட்சிகள் மாறியிருக்கக்கூடும். 

நடராஜன் என்று ஆடிட்டர் குருமூர்த்தியை எதிர்த்து பேசத் தொடங்கினாரோ அன்றே பகவான் தலையில் அமர்ந்து விட்டார் என்பதனை அறியாமல் இருந்தது தான் இவர்கள் முப்பது வருடங்களில் நிஜ சூழ்ச்சி அரசியலை கற்றுக் கொள்ளாமல் இருந்துள்ளார்கள் என்பதனை உணர வைத்தது. 

குருமூர்த்தி உருவாக்கியது யுத்தமல்ல. சப்தமே இல்லாத சாணக்கிய தந்திர அரசியல். எங்குத் தொட வேண்டும்? எப்போது தொட வேண்டும்? எவர் மூலம் தொட வைக்க வேண்டும்? என்று செய்து காட்டினார்.  காலம் காலமாக அதிகாரத்தை தங்களை கைகளில் வைத்துப் பழகியவர்கள் அத்தனை எளிதாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்களா? 

சரஸ்வதி சபதம் படக் காட்சிகள் அரங்கேறியது. தெருவில் நின்றவருக்கு மாலை விழுந்தது. 

காலம் சுழன்றது. 

இன்று ஒருவர் மண்ணுக்குள். மற்றொருவர் மனம் முழுக்க அழுத்தத்தில். 


ஏணிகள் என்பது காலம் முழுக்க ஏணியாகவே இருக்கும். ஏறியவன் ஏணியைக் கொண்டாடி பார்த்து இருக்கின்றோமா?


கடந்து சென்ற பதிவுகள் (மேலும் சில குறிப்புகள் 1 முதல் 9)

நடராசன் சசிகலா

முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ. ராசா

திரைப்பட பாடல்களுக்குப் பின்னால்

ஆண்டாள் சர்ச்சை ஹெச் ராஜா மற்றும் வைரமுத்து

தமிழ் திரைப்பட இசைத் துறை

திருப்பூர் கொங்கு நகர் (வட சென்னை)

சொந்த வீடென்பது?

இளையராசா ஆன்மிகவாதியா?

பணம் (மட்டுமே) துரத்தும் மனிதர்கள்

மறைந்த எழுத்தாளர் ஞாநி அஞ்சலி கடிதங்கள் (மின் நூல்)


3 comments:

Rathnavel Natarajan said...

ஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...

மேலும் சில குறிப்புகள் 10 = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

G.M Balasubramaniam said...

இருக்கும்போது கைகட்டி வாய் புதைத்து இருந்து காலம் கடந்து செத்த பாம்பை அடிக்கிறார்களோ

கிரி said...

"சுற்றிலும் உள்ள அடிமைக்கூட்டத்தை வைத்துக் கொண்டு ஆமை போல நகர்ந்து வந்திருந்தால் இந்நேரம் தமிழக அரசியல் அரங்கில் காட்சிகள் மாறியிருக்கக்கூடும். "

சரியா சொன்னீங்க. பதறிய காரியம் சிதறிப்போனது.

கைது ஆகிடுவோம் என்று உணர்ந்ததும் முதலமைச்சர் ஆகி சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர் காட்டிய அவசரம், அடக்குமுறை ஆகியவை வினையாகி விட்டது.


ஆனாலும், கூவத்தூரில் எல்லோரையும் கட்டுப்பாடுடன் வைத்து இருந்தது பெரிய விஷயமே!

நல்லவேளை தமிழகம் தற்போதும் கேவலமாக தான் உள்ளது என்றாலும், இவர் முதலமைச்சர் ஆகி இருந்தால், என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.