Saturday, April 14, 2018

மேலும் சில குறிப்புகள் 12

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் குறித்து ஏராளமான விமர்சனங்கள் உண்டு. ஆனால் நான் வாழும் காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறந்த தொழில் முனைவோராக, வென்றவராக அவர்களைப் பார்க்கின்றேன்.

பெருமைப்படுகின்றேன்.

தங்கள் அப்பா செய்து கொடுத்த சிறிய உதவியை வைத்துக் கொண்டு தங்கள் திறமைகளால் உச்சகட்ட புகழை, பொருளை ஈட்டியவர்கள் என்ற முறையில் இவர்கள் மேல் பெரிய மரியாதை உண்டு. அதுவும் வட இந்தியர்களின் லாபி வட்டத்தை அசைத்துப் பார்த்துவர்கள். இன்னமும் சொல்லப் போனால் அலறவிட்டவர்கள். டாடா வுக்கே டாடா காட்டியவர்கள்.

இன்று சித்திரை 1. தமிழ்ப் புத்தாண்டு நாள். இன்றோடு சன்டிவி தொடங்கி 25 ஆண்டுகள் முடியப் போகின்றது.

உங்கள் அனுபவத்தில் எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமான வளர்ந்ததற்குப் பின்னால் உங்களால் பல காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் நிறுவனத்தை நடத்தியவரின் புத்திசாலித்தனம், சமயோஜிதம், சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டவர்களால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

அப்படித் தாக்குப் பிடித்துக் காரணத்தினால் மட்டுமே இன்று உலகமெங்கும் வாழும் தமிழர்களின் வீட்டுக்குள்ளே வந்து கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

கடிகாரத்தில் ஓடும் முட்கள் உங்களுக்கு காட்டுவது என்னவோ நிமிடங்கள், நேரங்கள் மட்டுமே.  ஆனால் அது இவர்களுக்கோ ஒவ்வொரு நிமிடமும் லட்சத்தைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருக்கிறது என்றால் இது தானே உண்மையான தொழில். வெளியில் அடிக்கும் வெயில், மழை, புயல் போன்ற எந்தவித இயற்கை சீற்றங்களும் தொழிலை பாதிக்காது.

சொல்லப்போனால் இது போன்ற எந்த மோசமான நிகழ்வுகள் நடந்தாலும் மக்களுக்கு அது துயரத்தின் பாதை.  ஆனால் ஊடகங்களுக்கோ லாபத்தை அதிகப்படுத்தும் பாதை.

சன் டிவி என்பது வெறுமனே வார்த்தையல்ல. தமிழகர்களின் எண்ணத்தை, வாழ்க்கை முறையை, பேச்சு மொழியை, கலாச்சாரத்தை மாற்றிய வார்த்தை.

எது தவறோ அவையெல்லாம் சரி தான் என்று மாற்றப்பட்டது. எது ஆடம்பரம் என்று கருதப்பட்டதோ அவை அவசியம் தேவை என்று தீர்மானமாக கொண்ட வரப்பட்டது. உரையாடலுக்கு உண்டான மொழியை ஏன் கொண்டாட வேண்டும்? என்று தமிழை கொத்துக்கறியாக்கப்பட்டது. மொத்ததில் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என்பதில் தொடங்கி மனிதர்களை தனித் தீவாக மாற்றியதில் வெற்றி கண்டது.  ஒவ்வொரு வெற்றியிலும் நிறுவனம் வளர்ந்தது.  தமிழர்களின் எண்ணங்களில் மாறுதல் உருவாகி மாற்றமே முன்னேற்றம் என்கிற ரீதியில் ஒவ்வொன்றும் பார்க்கப்பட்டது.

ஒரு நிறுவனம் பல நிறுவனமாக மாறியது.  கிளைகளாகப் பிரிந்தது, மேலும் வளர்ந்து இன்று தமிழர்களின் மனக்கவலையைத் தீர்த்து எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருக்கின்றது.  உங்களுக்கு சுய சிந்தனை எதற்கு? எங்களிடம் இருக்கும் விதவிதமான காட்சிகள். கண்டு களியுங்கள். கவலைகளை மறந்து விடுங்கள் என்ற கொள்கையினால் தமிழினமே இன்று பலவிதங்களில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தொடக்கத்தில் சென்னையில் இருந்து ஒளிபரப்ப எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டார்கள் என்பதும், சென்னைக்கும் பிலிப்பைன்ஸ்க்கும் எப்படி அலைந்தார்கள்? என்பதெல்லாம் கடந்த கால வரலாற்றுச் சுவடுகள். இதுவே மாறி தமக்கு வேண்டிய ஒரு ட்ரான்ஸ்பான்டருக்காக எங்கே எப்படி எவரிடமிருந்து எதன் மூலம் பெற்றார்கள் என்பதனை எல்லாம் நீங்கள் கவனித்து இருந்தால் போர் என்பது தொழில். தொழில் என்பது போர்க்களம் என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

வெற்றி பெற முடியாதவர்களின் தேசிய கீதம் புலம்பல் மட்டுமே. அறம் என்பது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகது. அது தேவையும் இல்லை என்பதன் முன்னோடிகளாக இவர்களை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து பண்பலை வானொலியில் நுழைந்து, அதிலும் வளர்ந்து, மாநிலம் விட்டு மாநிலம் சென்று என்று இன்று இந்தியாவெங்கும் மிகப் பெரிய ஊடக சம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். தொட்டதெல்லாம் ஹிட் என்பார்கள். இவர்கள் தொடங்கிய அனைத்தும் வருமானத்தை அள்ளிக் கொண்டு வந்து கொட்டியது. அதே சமயத்தில் மானம் கப்பலேற்றிப் பறந்தது.

அதைப் பற்றி யார் பேசுவார்கள்? ஊடக பலம் என்பது நீங்களும் நானும் நினைப்பதற்கு அப்பாற்பட்டது. ஒரு மணி நேரத்தில் இருப்பதை இல்லை என்று காட்ட முடியும். இல்லை என்பதனை இருப்பதாகக் காட்ட முடியும். கடந்த காலத்தில் செய்து காட்டியுள்ளார்கள். உங்கள் நினைவடுக்கில் இருந்து தேடிப் பாருங்கள்.

ஒரு மாதம் சன்டிவி நிறுவன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்து வந்தீர்களேயானால் இவர்களின் திட்டங்கள், கொள்கைகள் என்னவென்பதை உங்களால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்?

உனக்கு என்ன தேவை? எப்போது தேவை? அது எங்களுக்குத் தெரியும்? நான் கொடுப்பதை வாங்கிக் கொள்? என்பதாக இருக்கும்.

ஒவ்வொரு நிகழ்விலும் கொள்கைகள் உனக்குச் சோறு போடாது என்பதனை திரும்பத் திரும்ப வலியுறுத்துவதாக இருக்கும்.

கொள்கைள், உறவுகளை எந்த இடத்தில் எப்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை கடந்த 25 வருட கால கட்டத்தில் தமிழகத்திற்கு, வளரும் தலைமுறையினருக்கும் கற்றுத் தந்தவர்களின் முக்கியமானவர்கள் இவர்கள்.

காரணம் முதல் முதலாகச் சன்டிவி எப்படித் தொடங்கப்பட்டது. எந்த நிதியில் இருந்து தொடங்கினார்கள்? எந்த வங்கி உதவியது? எந்தப் பணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இவர்களுக்கு உதவினார்கள்? இப்போது திமுகவில் இருக்கும், கடந்த காலத்தில் இருந்த எத்தனைப் பெருந்தலைகள் சன்டிவி யின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் கடந்த கால வரலாறு.

வரலாற்றின் மேலே இருப்பவர்களின் முகம் மட்டுமே தெரியும். அந்த வரலாற்றை உருவாக்கியவர்களின் உருவங்கள் அனைத்தும் அஸ்திவாரத்திற்குள் சென்று விடும்.

சுப. வீரபாண்டியன் ஒரு கூட்டத்தில் பேசும் போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் புராண இதிகாச தொடர்களைப் பற்றிப் பேசி விட்டு மிகவும் வருத்தத்துடன் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

பெரியார் தனது கொள்கைகளைத் தமிழகத்தில் பேசிய போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. 90 சதவிகித தமிழர்கள் நம்பும் விசயங்களுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து தைரியமாகப் பொதுக்கூட்டம், தனது எழுத்தின் வாயிலாகப் பலமான பிரச்சாரத்தின் வாயிலாகச் செய்து கொண்டிருந்தார். அன்றைய சூழலில் அது எரிமலையின் மேல் நின்று கொண்டு செயல்படுவது போல. ஆனால் சாதித்துக் காட்டி மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கினார். தொடர்ந்து அறிஞர் பெரியார் கொள்கைகளில் கொஞ்சம் பாலிஷ் தடவினார். கலைஞர் தேவைப்படும் போது தேவைப்படுவதை எடுத்துக் கொண்டு என் கடன் என்பது என் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதே என்று முன்னேறிக் கொண்டிருந்தார்.

ஆனால் இவர்கள் களப்போராளிகள். சரியோ தவறோ தமிழகத்தில் மிகப் பெரும் மாற்றத்திற்குக் காரணமாக இருந்தார்கள். ஆனால் இவர்களின் வழித்தோன்றலில் வந்து, இந்தக் கொள்கைகளை முன்னெடுக்காவிட்டாலும், நீர்த்துப் போகச் செய்ததில் சன்டிவியின் பங்கு மிக முக்கியமானது.

சன் கொள்கைகள் மிகத் தெளிவானது.

சந்தையில் நிற்பது என்பது மிக முக்கியம். அதன் மூலம் நிறுவனத்திற்கு வரவேண்டிய லாபம் என்பது அதனை விட மிக மிக முக்கியம். அதன் அடிப்படையில் எவரும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதில் அன்று முதல் இன்று வரையிலும் உறுதியாக இருப்பதற்காக இவர்களை நான் எப்போதும் பாராட்டுவேன்.

அம்பானி எதிரிகளை அழிக்கத் தரைமட்டத்திற்கு இறங்கி விளையாடும் போது அது தொழில் திறமை என்கிறோம். ஆனால் தன்னைத் தவிர வேறு எவரும் இங்கே தொழில் செய்து விடக்கூடாது என்ற கொள்கை கொண்ட இவர்களின் கடந்த செயல்பாடுகளை விமர்சனமாகப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
தொழில், அரசியல் என்ற இரண்டிலும் அழித்து முடித்தால் வளர்ச்சி கிடைக்கும் என்பதனை உணர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் இவர்கள்.

ஆனால் காலம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

இன்று வரையிலும் ராஜ் டிவி மூச்சை பிடித்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதே எனக்கு இன்றளவும் ஆச்சரியமாக உள்ளது. ஆட்சி மாற்றம் நிகழாதபட்சத்தில் புதிய தலைமுறை என்ற புதிய நிறுவனம் வந்து இருக்குமா? என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி? பா.ஜ.க வந்தது யாருக்கு லாபமோ நட்டமோ? ஆனால் தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளைப் புத்திசாலி தமிழர்கள் பார்த்து இருக்க வாய்ப்பு அமைந்திருக்காது?

வந்தவன், போனவன், நின்றவன், உட்கார்ந்தவன் என்று கண்டமேனிக்கு பத்துக்குப் பத்து அறை கிடைத்தால் போதும் என்று கட்சிக்கு ஒன்று ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கி விட்டார்கள்.

ஆனாலும் இன்று வரையிலும் சன் டிவி யை எவராலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. காரணம் தமிழர்களை மிக நன்றாகப் புரிந்தவர் என்ற நிலையில் கலைஞருக்கு அடுத்த நிலையில் மாறன் சகோதரர்கள் தான் எனக்குச் சரியாகத் தெரிகின்றார்கள்.

இன்று சன் டிவி பத்து நாட்கள் தொடர்ந்து ஒலிபரப்புத் தடை செய்து விட்டால் தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திலும் வாழும் இல்லத்தரசிகள் பைத்தியம் பிடித்து விடும் அளவிற்கு எட்டரைக் கோடி தமிழர்களின் இதயச் சிம்மாசனத்தில் வீற்று இருக்கின்றது.

இது தானே உண்மையான வெற்றி?

கடந்த காலத்தில் உருவான பல பிரச்சனைகளின் காரணமாகச் சன் நிறுவனப் பங்குகள் அதலபாதாளத்திற்குக் கீழே வந்தது. ஆனால் அசரவில்லையே? அடுத்தடுத்துத் தோல்விகள், அவமானங்கள், வழக்குகள். யாரையும் குறை சொல்லவில்லை. எவரையும் அழைக்கவில்லை. புலம்ப வில்லையே? தங்கள் மேல் உள்ள வழக்குகளுக்காகக் கடந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை பேர்களைப் பார்த்து இருப்பார்கள்? எத்தனை லாபி வட்டத்தை விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள்? எத்தனை ஆயிரம் கோடிகளை வாரி இறைத்திருப்பார்கள்? இன்று வென்று விட்டார்கள்.

அப்புறம் என்ன? சத்தியம் வென்றது.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் திமுக இன்று படக்கூடிய அவமானம், பட்ட அவமானம் என அனைத்துக்கும் காரணம் காங்கிரஸ். அதிலும் குறிப்பாக ப. சி அவர்களின் தில்லாலங்கடிக் காரியங்கள். ஆனால் திமுக வில் உள்ள பெரிய தலைகளால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. ஆப்புக்குள் வாலை விட்ட குரங்கு போல.

இன்று திகார் ல் எடை குறைப்பு உடற்பயிற்சி யில் ஈடுபட்டு, போராடி வெளியே வந்துள்ள கார்த்திச் சிதம்பரத்தைப் பார்த்து முக்கியமாக மகிழ்ச்சியடைந்தவர்கள் மாறன் சகோதர்களாகத்தான் இருக்க வேண்டும். அடுத்து கனிமொழி, ராஜாவாக இருக்க முடியும். இணையத்தில் தீவிரமாகத் திமுக விற்குக் களமாடும் நண்பர்களின் மனசாட்சிக்குத் தெரியும்.

சன் குழுமத்தின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்பாடுகள்.எளிமையாகச் சொல்லப்போனால் கொள்கை என்பது கூட்டத்தில் மட்டுமே பேசுவது.  அது நிறுவனத்திற்கு பொருந்தாது என்பதாக இருக்கும்.  அப்படி இருந்த காரணத்தினால் மட்டுமே திமுக தேய்ந்தது.  திமுக வினால் வளர்ந்த இவர்கள் வெற்றிக் கொடியை நாட்ட முடிந்துள்ளது.

காங்கிரஸ் பற்றி மாறன் சகோதரர்கள் மட்டுமல்ல, திமுக வில் உள்ள எவரும் பேச முடியாது. பேசவும் கூடாது. இது தான் காங்கிரஸ் ன் செக் பாயிண்ட். நீ என்னை விட்டு விலகவும் முடியாது. நான் உன்னை விட்டுப் பிரியவும் மாட்டேன். இது தேசிய கட்சியான காங்கிரஸ் ன் கொள்கை.

ஆமாம் அவர்களுக்கும் திமுக வில் நடந்த பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு? என்று நீங்கள் கேட்டால் நீங்களும் என்னைப் போல வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் பட்டியலில் உள்ளவர் என்பதனையாவது புரிந்து கொள்ளுங்கள்.

நிச்சயமாகச் சொல்வேன் தமிழர்களுக்கு மிகச் சரியான ஆட்சியைத் தர முடியும் என்றால் திமுக வில் என் ஆதரவு தயாநிதி மாறன் அவர்களை மட்டுமே சொல்வேன். கலைஞர் போல ஆயிரம் கலைஞர். காரணம் கலைஞரின் மனசாட்சியின் மகன் அல்லவா?

இந்தக் காணொலிப் பேட்டியில் தயாநிதி மாறன் நான் எப்போது கட்சியில் அடிமட்ட தொண்டனாகவே எப்போதும் இருக்க விரும்புகின்றேன் என்றார். ஆனால் ஸ்டாலின் போன்றோர் அவரைத் தொந்தரவு செய்து கொண்டேயிருப்பது தான் எனக்கு மிகப் பெரிய வருத்தமாக உள்ளது.

இன்று வென்றுள்ளார். வென்றவர்களுக்கான உலகமிது. என் வாழ்த்துகள்.

15 comments:

bandhu said...

உங்களுக்கு perfect dictatorship என்ற மெக்ஸிகன் திரைப் படத்தை சிபாரிசு செய்கிறேன். சில காலம் முன் netflix இல் இருந்தது. கிடைத்தால் பார்க்கவும்.
http://www.imdb.com/title/tt3970854/?ref_=nv_sr_2

பதிவில் குறிப்பிட்டவர்களை பற்றி எழுதக்கூடிய அளவு அபிப்ராயம் இல்லாததால் தவிர்க்கிறேன்.

G.M Balasubramaniam said...

சன் டிவியில் கட்சிக் கொள்கைகளை யாராவது திணிக்கிறார்களா

Amudhavan said...

தமிழகத்தின் பெருமுதலாளிகளாய் சன்டிவியின் மாறன்கள் உருவான காலம் தொடங்கி அவர்கள் தங்களை ஸ்தாபித்துக்கொள்ள செய்த முயற்சிகள் ஒரு 'போர்' என்பது சரியான மதிப்பீடு. இதனை வட இந்திய முதலாளிகள் செய்தால் அதனை திறமை என்றும் தொழில் சூத்திரம் என்றும் பாராட்டும் இந்திய மனம் நம்மவர்கள் செய்கிறார்கள் என்னும்போது மட்டும் சட்டத்தை நோக்கிப் பயணப்பட்டுவிடும். உங்கள் அப்சர்வேஷன் அருமை. கட்டுரையின் கடைசி மூன்றாவது பாராவைத் தவிர மற்றவற்றை அப்படியே ஏற்கிறேன்.

Rathnavel Natarajan said...

சன் டிவி என்பது வெறுமனே வார்த்தையல்ல. தமிழகர்களின் எண்ணத்தை, வாழ்க்கை முறையை, பேச்சு மொழியை, கலாச்சாரத்தை மாற்றிய வார்த்தை.

எது தவறோ அவையெல்லாம் சரி தான் என்று மாற்றப்பட்டது. எது ஆடம்பரம் என்று கருதப்பட்டதோ அவை அவசியம் தேவை என்று தீர்மானமாக கொண்ட வரப்பட்டது. உரையாடலுக்கு உண்டான மொழியை ஏன் கொண்டாட வேண்டும்? என்று தமிழை கொத்துக்கறியாக்கப்பட்டது. மொத்ததில் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என்பதில் தொடங்கி மனிதர்களை தனித் தீவாக மாற்றியதில் வெற்றி கண்டது. = நிஜம். அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

Unknown said...

தமிழகத்தில் இது வரை அதிகமாக விவாதிக்கப்படாத ஒரு நிறுவனத்தினை பற்றிய சிறந்த தொகுப்பு.
சன் டிவி - ஒரு தலைமுறையை வீட்டில் பூச்சியாக்கிய ஓர் ஊடகம். இன்று நம்மால் பூரணமாக ஒத்துக்கொள்ளப்பட்ட , சென்ற தலைமுறையில் ஓதுக்கப்பட்ட பெரும்பாலான விஷயங்களை ஊதித்தள்ளிய ராட்சஷன். இதனால் நல்லதே நடக்கவில்லையென்று அறுதியிட்டு சொல்ல முடியாததெனினும் இழந்தது அதிகம்.
எனக்கென்னவோ இப்பொழுதைய இளவட்டங்கள், பெண்கள் இவர்களின் சீரியல் மாயையிலிருந்து கொஞ்சம் விடுபட்டிருக்கிறார்கள் என்றே தோணுகிறது. நியூஸ் சேனலை வைத்து இவர்கள் படுத்தும் பாடு அப்பப்ப்பா கொடுமை. பணம், பணம், பணம் வேறு ஒரு குறிக்கோளும் இல்லை. இவர்கள் ஆட்சியில் திரைத்துறையில் நடந்த கொடுமை ஒரு சர்வாதிகாரியை போல இருந்தது.
எனது பார்வையில் எப்படி சசிகலா குடும்பத்திரனாருக்கு மக்களிடத்தில் மரியாதை இல்லாமல் பயம் மட்டுமே இருந்ததோ இந்த மாறன் சகோதரர்களுக்கும் பொருந்தும்.
விஷக்கண்ணிகள்..

ஜோதிஜி said...

குறுந்தகடு கிடைக்குமா? என்று பார்க்கிறேன்.

ஜோதிஜி said...

கட்டுரையை முழுமையாக படித்தீர்களா?

ஜோதிஜி said...

நிச்சயம் தற்போதைய சூழலில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தகுதிகள் என்று பார்த்தால் சகோதரர்கள் இருவரிடமும் நிறைய உள்ளது. செவி வழியே கேட்ட பல செய்திகளை எழுத முடியவில்லை. ஆனாலும் இருவரும் செய்துள்ளது மிகப் பெரிய சாதனையும் ஆச்சரியமும்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

ஒன்றை பெரும்பான்மையினர் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இங்கே எதுவும் தவறில்லை என்கிற நோக்கில் பார்த்தால் சன் டிவி என்பது தமிழகத்தின் பல கட்டங்களில் உருவான வளர்ச்சியின் அங்கமாகவே பார்க்கின்றேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி தன்னை மாற்றிக் கொண்டே வந்தார்கள் என்பதில் தான் அதன் சூட்சமம் உள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கலைஞர் டிவி வருமுன் சன் டிவி திமுகவின் டிவி என்ற தோற்றம் இருந்தது.கலைஞர் டிவியைக் காட்டிலும் நடுநிலை கொண்டது என்ற எண்ணத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும். வரட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் பெரும்பான்மையோரின் மனப் போக்கை அறிந்து நடந்தது.திமுக சார்பு இருப்பினும் கலைஞர் டிவி போலவோ ஜெயா டிவி போலவோ செயல்படவில்லை .தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை விடுமுறை தின சிறப்புநிகழ்ச்சிகள் என்று கூறி எரிச்சலை ஏற்படுத்தவில்லை.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

உண்மை தான்.வாழ்க்கை என்பது பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டால் போதும். அதுவே இங்கே வெற்றியாளர் என்று சொல்லப்படுகின்றது. வழிகள் முக்கியமில்லை.

கிரி said...

9 / 10 வருடங்களுக்கு முன்பே இதே போல சன் டிவி குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.. கிட்டத்தட்ட இதே கருத்து. அப்போது தயாநிதி ஜவுளித்துறை அமைச்சர்.

நீங்களும் கருத்து இட்டு இருந்தீர்கள் :-)