Sunday, March 11, 2018

மேலும் சில குறிப்புகள்............



தொழிற்சாலையின் விரிவாக்கம் தொடர்பாகக் கடந்த ஏழெட்டு வாரங்களாகத் திருப்பூரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகம் செல்ல வேண்டியிருந்தது. 

தொழிலாளர்களை வரவழைப்பது, அவர்களுக்குத் தங்க வைக்க இடத்தை அடையாளம் காண்பது, வீட்டு உரிமையாளருடன் பேசி தங்கப் போகும் தொழிலாளர்களைப் பற்றித் தகவல் தெரிவிப்பது என்று மனிதவளத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்ததால் இதுவரையிலும் நான் செல்லாமல், பார்க்காமல் இருந்து திருப்பூரின் புறநகர்ப் பகுதிகளை அனைத்தையும் இந்தத் தருணத்தில் தான் பார்த்தேன். 

பல அனுபவங்கள் கிடைத்தது. 

குறிப்பிட்ட சமயத்தில் ஐந்து சென்ட், பத்துச் சென்ட் இடத்தை மிகக் குறைந்த விலையில் வாங்கிப் போட்டவர்கள் இன்று மாதம் தோறும் பல லட்சம் சம்பாரிக்கும் லட்சாதிபதியாக மாறியுள்ளனர். பத்துக்குப் பத்து அறை. பத்து அறை. ஒரு அறைக்கு 2000 முதல் 3000 ரூபாய் வாடகை. முன் தொகை பத்து மாதம் என்று நோகாமல் பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கின்றார்கள். 

எனக்கு இவையெல்லாம் பெரிய ஆச்சரியமாகத் தெரியவில்லை. 

எனக்குத் தெரிந்து பல சிறிய பெரிய முதலாளிகள் வாடகை மூலமாக மட்டும் மாதம் தோறும் 50 லட்சம் வருமானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பலரையும் நான் அறிவேன். எதுவும் கணக்கில் வராது. மோடிஅரசாங்கம் கொண்டு வந்துள்ள பல கட்டுப்பாடுகளின் காரணமாகப் பாதிப் பணத்தைக் காசோலை மூலமாக மீதிப் பணத்தை ரொக்கமாக வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். 

புறநகர்ப் பகுதிகளில் தொழிலாளர்களுக்காகக் கட்டியுள்ள தீப்பெட்டி அளவுள்ள வீடுகளில் பத்து வீடுகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை வசதி. நான் திகைத்துப் போய்விட்டேன். ஒரு அறையில் நான்கு பேர்கள் தங்கினால் கூட 40 பேர்கள் எப்படி இதனைப் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படை அறிவு இவர்களுக்கு இருக்காதா? என்று யோசித்துக் கொண்டு வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் கேட்டேன். 

சார் தண்ணீர் அதிகமாகச் செலவாகும். நாங்கள் பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குச் செல்கின்றோம் என்கிறார். 

அவருக்கு வாடகை வருமானம் மட்டும் மாதம் ஐந்து லட்சம் வருகின்றது. 
பணம் சேரச் சேர மனம் குறுகிக் கொண்டேயிருக்கின்றது என்பதனை கடந்த ஏழெட்டு வாரங்களில் முதலாளி, தொழிலாளி என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்துப் பேர்களிடமும் பார்த்த போது ஆள் இல்லாத திரையரங்கில் நான் மட்டுமே உட்கார்ந்து கொண்டு படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போல வினோத ஜந்துவாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமோ? என்று தோன்றுகின்றது. 

சமூகம் வேறொரு பாதையில் பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றது. 

எங்கே செல்லும் இந்தப் பாதை?

+++++++++++++++++

நான்கு மாதங்களுக்கு முன் பெரிய பெரிய புத்தகங்களாக தொடந்து படித்துக் கொண்டேயிருந்தேன். 

மூன்று மாதங்களுக்கு முன் திரைப்படங்களாக தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். 

இரண்டு மாதங்களுக்கு முன் உள்ளே சேகரித்து வைத்திருந்த நான் படிக்காமல் இருந்த வாரப் பத்திரிக்கைகள், தினசரி என்று தொடர்ந்து நேரம் ஒதுக்கி படித்துக் கொண்டேயிருந்தேன். 

கடந்த ஒரு மாதமாக எதையும் படிக்க, பார்க்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கின்றேன். 

நேற்று கூட மகள் ஒருவர் கேட்டார் அப்பா இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருப்பீர்களா? என்று. நிச்சயம் இருப்பேன் என்றேன். 

எனக்கான குடும்ப அமைப்பு வலுவாக உள்ளது. வருமானம் உள்ளது. குழந்தைகளைக் கவனிக்க வீட்டில் மனைவி இருக்கின்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் தொழிற்சாலைக்குள் சென்று வெளியே வரும் போது பகல் பொழுது, இரவுப் பணி, பல சமயம் நள்ளிரவு பணி என்று தொடர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களைப் பார்க்கும் போதும், குறிப்பாக பெண்களைப் பார்க்கும் போது இவர்கள் எப்படி குடும்ப வாழ்க்கை முடியும்? கணவன் தேவைகள், குழந்தைகளின் விருப்பங்கள் போன்றவற்றை எப்படி இவர்கள் நிறைவேற்றுவார்கள்? என்பதனை பல முறை யோசித்துக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்ப்பதுண்டு. 

பாலின ஈர்ப்பு என்பது வயது மாறும் போது அது வேறொரு விதமாக மாறி விடுகின்றது. காதல் என்பதன் வரையறை வேறொரு நிலையில் பயணிக்கத் தொடங்கி விடுகின்றது. இந்த காணொலித் துண்டை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். இன்றும் பார்த்த போது எந்தக் கிளர்ச்சியும் உருவாகவில்லை. ஆனால் இந்தப் பருவத்தையும் நாம் தாண்டி வந்துள்ளேன் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்தது. 

ஆனாலும் தமிழ் திரைப்படம் என்பது காதல் தவிர இங்கே பேசுவதற்கு, எழுதுவதற்கு வேறு எதுவும் இல்லை என்கிற ரீதியில் தான் படமாக எடுத்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். உண்மையான காதல் என்பதன் அர்த்தம் மாறிவிட்டது. குறிப்பாக காதலைப் பற்றி அக்கறைப் பட்டுக் கொள்ளவும் எவரும் தயாராக இல்லை. 

ஒரு பெண்மணி போன வாரம் பேசிய போது சொன்ன வாசகம். 

என் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பகல் இரவு என்று தொடர்ந்து இங்கே வேலை செய்கின்றேன். ஆனால் என் புருசன் பக்கத்து வீட்டுக் காரியை நான் வந்தவுடன் தொடர்பு வைத்துக கொள்கின்றார். எனக்கும் தெரியும். என் பிள்ளைகளுக்காக அதனை பொறுத்துக் கொண்டு தான் வாழ்கிறேன். 

ஏம்மா புருசனும் தானே சம்பாரிக்கின்றார். அப்புறம் ஏன் இரவுப் பணி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே? என்றேன். 
சார் காசு நிறைய இருந்தா சந்தோஷம் தானே? 

கண்களை விற்று சித்திரம் வாங்க நினைக்கும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் வந்து விட்டேன்.

11 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பணம் சேரச் சேர மனம் குறுகிக் கொண்டேயிருக்கின்றது

உண்மை ஐயா

Amudhavan said...

கடைசியில் வெறும் அனுபவங்கள் மட்டும்தான் மிஞ்சும்.......

Sowmyan said...

சமூக பொருளாதார கோபுரத்தின் அடித்தளத்தை பார்க்கிறீர்கள். இதற்கு அடுத்த அடுக்கு, இவர்களுக்கு வீடு / அரை கட்டி வாடகைக்குத் தரும் அடுக்கு வேகமாக முன்னேறிவிட்டதாக தோன்றுகிறது. எல்லோருக்கும் அவசரமோ? புதையல் கிடைத்துவிட்ட பாவனையில் வேலை செய்து வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் உத்வேகமோ? நீங்கள் பரிதாபப்படும் அடுக்கு, வேறு விதத்தில் திருப்தியுடன் இருப்பதாக பட்டது. எது முக்கியம் என்பதை நீங்கள் உங்கள் பார்வையில் மதிப்பிடுகிறீர்களோ? அவர்கள் பார்வையில் முக்கியம் வேறாக இருக்கிறதோ? உங்கள் பதிவுகளால் எனக்கு தோன்றும் கேள்விகள் அதிகம். பாராட்டுகிறேன்.

ஜோதிஜி said...




நன்றி சௌம்யன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக விதிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றது. மக்களின் எதிர்பார்ப்பு அது சார்ந்த மனவோட்டம் என்று அனைத்தும் வேறு விதமாகப் போய்க் கொண்டேயிருக்கின்றது. ஆனால் எப்போதும் போல இயற்கை அதன் விதிகளைச் சரியாகவே வைத்துள்ளது. அதனை நாம் உணர்வதே இல்லை. உங்களுக்கு மேலே அமுதவன் எளியமையாகப் பதில் அளித்துள்ளார். கடைசியில் அனுபவம் மட்டுமே மிஞ்சும் என்று.

அதன் அர்த்தம் கையில் பத்துப் பைசா இல்லாமல் வறட்டுத் தத்துவங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது அர்த்தம். நம்மை நம்பி உள்ளவர்களுக்குக்கூட நம்மால் எதுவும் செய்து விட முடியாது என்ற சூழ்நிலை உருவாகும் போன்ற கொடூரங்களை நாம் சந்திக்க வேண்டும் என்று அர்த்தம்.

ஒரு வகையில் பார்க்கப்போனால் இது உண்மை.


இதனை நீங்க சொன்ன மாதிரி மற்றொரு வகையில் பார்க்கலாம். மேலை நாடுகளில் பணம், வசதி என்பதனை தங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பதற்காகப் பயன்படுத்துகின்றார்கள். வாழ்நாளில் கடைசித் தினம் வரைக்கும் அப்படித்தான் வாழ்ந்து முடிகின்றார்கள். ஆனால் நம் வாழ்க்கை அப்படி இல்லையே?
நினைத்த இடங்களுக்கு நம்மால் நினைத்த நேரத்தில் செல்ல முடியாது. கடமைகள் என்று ஒரு பாறாங்கல்லை நாம் சாகும் வரைக்கும் சுமந்து கொண்டேயிருகின்றோம். குழந்தைகள் படிப்பு, திருமணம், அதன் பிறகு உண்டான கடமைகள் என்று மாறி மாறி நம்மை உள்ளே வைத்துக் கொண்டே ஆக வேண்டிய சமூக விதிகள் நம்மைக் கட்டிப் போட்டு வைத்து விடுகின்றது.

எதையும் அனுபவிக்காமல், எது வாழ்க்கையின் உண்மையான தத்துவம் என்பதனை அறியாமல் திடீரென்று ஒரு நாள் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகின்றோம்.

நான் மேலே சொன்ன வீட்டுக்குச் சொந்தக்காரர் மாதம் தோறும் மருத்துவமனை செல்கின்றார். பெரிய தொகை செலவளிக்கின்றார். நான் பார்க்கும் நேரமெல்லாம் எது எதற்கோ அலைந்து கொண்டேயிருக்கின்றார்? மாதம் பல லட்சம் வாடகைப் பணம் வருமானம் வருகின்றது? மேலும் மேலும் இடங்கள் வாங்கிக் கொண்டேயிருக்கின்றார். அவரின் வாழ்க்கைத் தத்துவம் என்பது பணம். பணம்.
ஒவ்வொரு முறையும் என்னுடன் பேசும் போது உங்கள் அளவுக்கு நாங்க படிக்கல சார் என்று சிரித்துக் கொண்டே சென்று விடுகின்றார்.

நம் வாழ்க்கை என்பது பணம் இருந்தால் மட்டும் எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து தொடங்குகின்றது. எல்லாமே இருந்தாலும் உடம்பில் ஆரோக்கியம் இல்லாத போது எல்லாவிதமான கொள்கைகளும் தளர்ச்சியடைகின்றது. அதனைப் பற்றி யாரும் பேச விரும்புவதில்லை. பேசுபவர்களை எளக்காரமாகப் பார்க்கும் மனோநிலையைத் தற்போதைய சமூக விதிகள் உருவாக்கி வைத்துள்ளது.

G.M Balasubramaniam said...

இந்த சிந்தனைகளை வளை குடா நாடுகளில் வேலைக்குப்போகும் பலருடன் பொருத்திப்பார்க்க வேண்டும் என்றும் நினைக்கிறேன் இருந்தாலும் வாழ்க்கை என்பது எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்றாகி விட்டது

S. Arivazhagan said...

அனைத்தும் புரியும் பொழுது வயது முதிர்ந்து விடுகிறது. அனுபவம் மிஞ்சுகிறது ஆனால் நம் அனுபவத்தை கேட்க இளம் வயதினருக்கு விருப்பம் இல்லை. எப்படி நாம் இளம் வயதில் பெரியவர்களின் பேச்சை கேட்டதில்லையோ அது போல. இவை அனைத்தையும் தக்க வயதில் புரிந்தவன் ஞானியாகிறான் , புரியாதவன் மனிதனாக இருக்கிறான். இது தான் உலக நியதி.

Rathnavel Natarajan said...

புறநகர்ப் பகுதிகளில் தொழிலாளர்களுக்காகக் கட்டியுள்ள தீப்பெட்டி அளவுள்ள வீடுகளில் பத்து வீடுகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை வசதி. நான் திகைத்துப் போய்விட்டேன். - அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

Rathnavel Natarajan said...

நிஜம். அருமை.

தி.தமிழ் இளங்கோ said...

இந்த தொடரை இப்போதுதான் படிக்க தொடங்கியுள்ளேன். சமூக அலசல் என்பது உங்களுக்கு புதிது அல்ல. பாராட்டுகள். தொடர்கின்றேன்.

மெய்ப்பொருள் said...

நான் இதுவரை திருப்பூர் போனதில்லை - உங்கள் வர்ணனை ஊரை பார்த்தது போல இருக்கிறது.
பணம் முக்கியம் என்பதற்கும் , பணம்தான் முக்கியம் என்பதற்கும் பெரிய இடைவெளி உள்ளது.
பணம் ஒரு சாதனம் - வசதியாக இருக்க செலவுக்கு பணம் வேண்டும் .
நெறைய பணம் இருந்தால் அரைப் படி அரிசியை வடித்து ஒரு வேளைக்கு சாப்பிட முடியுமா ?

வாடகை மூலம் லட்சக் கணக்கில் பணம் வருகிறது - அப்புறம் பாக்டரி போட்டு ,
ஆள் வைத்து , ஆர்டர் எடுத்து கடினமா எதுக்கு உழைக்கணும் ?

அண்ணன்காரன் கொழிக்கிறான் - தம்பி அவ்வளவு இல்லை - useless !
நெறைய பேர் வயித்தெரிச்சலில் இருப்பார்கள் என தோன்றுகிறது !

கையில் காசு உள்ளவன் பெரிய மனுஷன் - இது எங்கு போய் முடியும் ?
இப்ப வீடு வைச்சிருக்கானா , காசு பணம் இருக்கா , அதை அடிச்சுப் பிடுங்கு
என்றும் வரலாம்

ஜோதிஜி said...

அங்கங்கே நீங்க சொன்ன மாதிரி விசயங்கள் இப்போதே நடந்து கொண்டு தான் இருக்கின்றது.