Saturday, March 17, 2018

மேலும் சில குறிப்புகள் 5

"கலைஞர்கள் உணர்ச்சிவசமானவர்கள். இதன் காரணமாகவே அவர்களின் சொந்த வாழ்க்கையில் பல சூறாவளி உருவாகி விடுகின்றது. அவரவர் புகழின் உச்சிக்குச் சென்றாலும் அவர்களின் சொந்த வாழ்க்கை கேள்விக்குரியதாக, கேலிக்குரியதாக மற்றவர்களால் பார்க்கப்படுகின்றது." 

நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்துறையைத் தொடக்கம் முதல் பத்திரிக்கை வாயிலாகவே பலவற்றை உள்ளும் புறமும் ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் நானே சில உத்தேச கொள்கைகளை மனதிற்குள் வைத்திருந்தேன். 

இவர் , இவர்கள் இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பல விசயங்கள் சென்ற இரண்டு வருடங்களில் மாறியது. 

அதுவரையிலும் நான் நினைத்துப் பார்க்காத நம்ப முடியாத அளவிற்குப் பலவற்றை நேரில் பார்க்க வாய்ப்பு அமைந்தது. 

நான் புரிந்தவற்றை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் திரைப்படத்துறையில் எந்த துறையாக இருந்தாலும் தன் தகுதிக்கு மீறிய பண ஆசையில் வெறி கொண்டு அலைகின்றார்கள். உண்மையான திறமை உள்ளவர்கள் பின்னால் உள்ளவர்கள் எந்த திறமையும் இல்லாத போதும் கூட அதிக பணத்தை தவறான வழியில் பெறுகின்றர்கள். தயாரிப்பாளர் என்ற ஒரு ஆலமரத்தை கிளை, இலை தொடங்கி ஆழத்தில் உள்ள ஆணி வேர் வரைக்கும் பிளந்து அவரவர்கள் எடுத்துச் சென்று விடுகின்றார்கள். 

அவர்கள் மீண்டும் அடுத்தவரை நோக்கி நகர்ந்து விடுகின்றார்கள்.  அதிசியமாக புதிய நபர் ஒருவர் சிக்கி விடுகின்றார். அவர்களின் பயணம் இப்படித் தான் தொடர்ந்து தொடங்கிக் கொண்டேயிருக்கிறது. 

இசைத்துறையும் விதிவிலக்கல்ல.

பாடகர்கள் என்றால் பள்ளிப் பருவம் முதல் இன்று வரையிலும் கொள்ளைப் பிரியம். அதுவும் பெண் பாடகர்கள் என்றார் அலாதி பிரியம். கல்லூரி வரைக்கும் வாணி ஜெயராம் தான் பிரியமானவராக இருந்தார். பிறகு அனுராதா ஸ்ரீராம் வந்தார். இவருக்குப் பின்னால் ஸ்வர்ணலதா வந்தார். ஆனாலும் இன்று வரையிலும் ஜென்சி எல்லாக் காலங்களிலும் பிரியமானவராகவே இருக்கின்றார். என் அலைபேசியில் அவரின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களைப் பதிவு செய்து வைத்துள்ளேன். இது தவிரக் கானா பாடல்கள், டப்பாங்குத்துப் பாடல்கள் என்று தனிப்பட்டியல் உண்டு. 

மனம் என் கட்டுப்பாட்டில் இருந்து நகர்கின்றது என்ற சூழ்நிலையில் இந்தப் பாடல்கள் என்னைத் தாலாட்டத் தொடங்கும். இதற்கு மேலே அடங்காத மனத்தை அலைபாயும் எண்ணங்களை நிறுத்த ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பேச்சாளர் உதவுவார். கலைஞர், வைகோ, தமிழருவி மணியன், தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன், வலம்புரி ஜான் என்று மாறிக் கொண்டேயிருப்பார்கள். 

தற்போது சுப. வீரபாண்டியன் பேச்சு என்னைக் கவர்வதாக உள்ளது. 

சுப.வீரபாண்டியன் காணொலிப்பேச்சுகளை அலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று விடுவதுண்டு. மகள்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மணி நேரம் வானவெளியை ரசித்துக் கொண்டு, அலுவலகத் தினசரி நிர்ப்பந்தங்களை இறக்கி வைத்து விட்டு புத்துணர்வுடன் கீழே இறங்கி வந்தால் அனைவரும் சாப்பிடத் தயாராக இருப்பார்கள். 

சுப. வீரபாண்டியன் பேச்சு ஒரு அலைக்குள் அடக்கி விட முடியாது. அவர் பல்வேறு இடங்களில் பேசிய பேச்சுக்களின் வாயிலாகப் பழைய வரலாறு, மதம், சாதி, நம்பிக்கைகள் மேல் கொண்ட மனித நம்பிக்கைகள் என்று அவர் பேசும் பேச்சில் எனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்வதுண்டு. 

நேற்றும், நேற்றைய முன்தினமும் தொழிற்சாலையில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை. ஞாநி இறப்புக்குக் கூடச் செல்ல முடியாத வருத்தம் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. 

எப்போதும் போல இன்று அதிகாலையில் மனதைக் கழுவ பலவற்றைப் பார்த்துக் கொண்டேயிருந்த பிரணதி என்ற குழந்தையின் காணொலித் தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது. இவர் குரலை எங்கேயோ கேட்டு இருக்கின்றோம்? என்று யோசித்த போது தான் ஆனந்த யாழை மீட்டுகின்றாய் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. 

இன்று காலை ஆறு மணிமுதல் இந்தக் குழந்தையின் மொத்த பாடல்களையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் அம்மையார் வந்து அமர்ந்திருந்ததைக் கூடக் கவனிக்கவில்லை. அந்த அளவுக்கு இந்தக் குழந்தையின் குரல் என்னை ஈர்த்தது. கடந்த பத்து நாளில் உடம்பில் சேர்த்து வைத்திருந்த சோர்வு அனைத்தையும் நீக்கி இப்போது புத்துணர்ச்சி பெற்றவனாக மாற்றியுள்ளார். கூடவே இன்று காலை அம்மையார் கொடுத்த பூண்டுக்கஞ்சி வயிற்றை சுத்தம் செய்தது.

டி.இமான் இசை கூடத்திற்குத் தொடர்ந்து சென்று வரும் வாய்ப்பு அமைந்த போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்குப் பின்னால் உள்ள அனைத்து அரசியல் சார்ந்த விசயங்களையும் கூர்வையான கவனித்தேன். பலருடனும் பேசினேன். அப்போது தெளிவான ஒரு முடிவு கிடைத்தது. 

பாடகராக, பாடகியாக வாய்ப்புக் கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்து விட்டாலும் தக்க வைத்துக் கொள்வதும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நகர்த்திச் செல்வதற்கும் வெறும் திறமை மட்டும் போதாது. 

காரணம் இன்று தினந்தோறும் ஒரு பாடகர் பாடகி அறிமுகம் ஆகிக் கொண்டேயிருக்கின்றார்கள். 

எவர் பெயரும் எவருக்கும் நினைவில் இருப்பதில்லை. அவர்கள் என்ன பாடினார்கள்? எந்தப் படத்தில் பாடினார்கள்? என்பது குறித்து யாரும் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. இது தவிர தொலைக்காட்சியில், திரைப்படங்களில் பாடும் பாடகர், பாடகிகள் தற்போது 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் படித்தவர்களாகவே இருக்கின்றார்கள்.  

தமிழ் மொழியின் சூட்சமம் பற்றி தெரியவில்லை.  கற்றுக் கொள்வதில்லை ஆர்வம் இல்லை.  பாடல்கள் மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கங்களை உள்வாங்கி, தனக்குள் மூழ்கி, தன்னை அந்த கதாபாத்திரமாக உருவகப்படுத்திக் கொள்வதில்லை. 

வெள்ளைத் தாளில் எழுதி வைத்துக் கொண்டு இயல்பாக பாடாமல் கைபேசியில் வைத்துக் கொண்டு அவஸ்த்தையுடன் தான் பாடுகின்றார்கள்.  அடுத்து என்ன வரி என்று யோசிக்கும் போது அதன் பாவனைகள், பாவங்கள் மனதில் வருவதில்லை.  நவீன தொழில் நுட்பங்கள் இவர்களின் குறைகளை நிறைகளாக மாற்றி நம்மிடம் தந்தாலும் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகின்றது. 

15 வரி பாடலை, 60 வார்த்தைகள் அடங்கிய ஒரு பாடலை 24 மணி நேரம் சில சமயம் 48 மணிநேரம் பாட வைத்து ஒலிப்பதிவு செய்யும் கொடுமைகளைக் கண்ட போது மொழியறிவு இல்லாதவர்கள் தான் இந்தத் துறைகளை ஆள்கின்றார்கள் என்ற வருத்தமே மேலோங்கியது.  

கேட்பவர்களுக்கு மொழியறிவு இல்லாத காரணத்தால் போகின்ற போக்கில் காற்றில் கரைந்து விடும் பாடல்களாகவே இப்போது வரும் பாடல்கள் அமைந்து விட்டதில் எனக்கு பெரிதான ஆச்சரியமில்லை.

ஆனால் இந்தக் குழந்தைக்கு அற்புதமான எதிர்காலம் உள்ளது என்று மனம் சொல்கின்றது. காரணம் திறமை ஒரு பக்கம். சந்தைப்படுத்தும் விதம் மற்றொரு பக்கம். இவை இரண்டையும் சரியான முறையில் கையாளத் தெரிந்தவர்கள் இவர் பின்னால் இருப்பதாகத் தோன்றுகின்றது. 

இந்தக் குழந்தைக்குச் சகலவிதமான திறமையும் உள்ளது. பல சமயம் நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. கோடியில் ஒருவருக்குத்தான் இது போன்று அமையும். 


பார்க்கலாம்?

எதிர்காலம் என்பது அடுத்த நொடி ஆச்சரியங்களைச் சுமந்து வரும். 

பாடகி ஸ்வர்ணலதா வாழ்க்கை போல முடிந்து விடக்கூடாது. 

நமக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச சக்திகள் இவரை காத்தருள வேண்டும். எஸ். ஜானகி அம்மா போல சுசிலா அம்மா போல இவரும் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும். தன் நிலை உணர்ந்து தனக்கான இடத்தை அடைய உற்றவர்கள் உதவ வேண்டும் என்று வேண்டு கோளை வைக்கின்றேன்.


8 comments:

 1. பணம் எனும் மாயையை அகற்றி விட்டால், புகழின் உச்சிக்கு செல்லலாம்... ஆனால் இன்றைய நிலைக்கு "கூட இருப்பவர்கள்" அகற்ற விட மாட்டார்கள் என்பது தான் வேதனை...

  ReplyDelete
 2. ஏதோ சொல்லவந்து எங்கெங்கோ போய் எதையோ சொல்லி முடித்திருக்கிறீர்கள். உங்கள் விருப்பம்போல் அந்தப் பிரணதி என்ற குழந்தை புகழ்பெறட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே வெளியிடும் குறிப்புகள் கூகுள் ப்ளஸ் ல் எழுதியது. அது போன்ற தளங்களில் முழுமையாக எழுத முடியாது. அது தான் உங்களுக்கு தொடர்பில்லாதது போல தோன்றுகின்றது என்று நினைக்கின்றேன்.

   Delete
 3. இப்போது பாட்டை யாரும் பாடுவதில்லை .
  அதே போல் இசைக்கருவிகளும் கிடையாது .
  Synthesizer !
  கித்தார் ,தபேலா ,டோலக் ,மிருதங்கம் எல்லாமே இதில்தான் .
  கொஞ்சம் கொஞ்சம் இசையை ரெகார்ட் செய்து கொள்கிறார்கள்
  அப்புறம் பாடுபவர்கள் குரலை இங்கு கொஞ்சம் ,அங்கு கொஞ்சம்
  பிச்சுப் போட்டு .ஒரு கிளறு கிளறிவிட்டால் பாடல் ரெடி .

  முன்னால் அது போல் கிடையாது .
  பாடுபவர் , இசை எல்லாம் சேர்ந்தே ரெகார்டிங் நடக்கும் - Live !

  அந்த கால பாடகிகள் குரல் பெரிய ஆச்சர்யம் .
  P லீலா , ஜிக்கி போன்றவர்கள் பன்னிரண்டு வயதில் பாட வந்தார்கள் .
  S ஜானகி , P சுசீலா தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ்
  தனியாக படித்தவர்கள் - பாடல் புரிந்து உணர்வை குரலில் கொடுப்பார்கள் .

  இதில் கே பி சுந்தராம்பாள் , டி ஆர் மகாலிங்கம் பின்னால் இசை இல்லாமலே
  பாடக் கூடியவர்கள் .

  ReplyDelete
  Replies
  1. சமீப காலங்களில் ஏஆர் ரகுமான் பாடல்களைக் கேட்கும் போது வருத்தமாக உள்ளது. தமிழே தெரியாதவர்கள் தான் அவர் விருப்பத் தேர்வாக இருக்கும் போல.

   Delete
 4. நன்றாக அலசியுள்ளீர்கள். இந்த திறமைசாலி முன்னுக்கு வருவார், நம்புவோம்.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.