Friday, November 28, 2014

பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள்

அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும். இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை. இவரை மேலும் இங்கே வைத்திருந்தால் இவரை வைத்து பலரும் பரமபதம் விளையாட பலரும் காத்திருப்பார்கள்.

ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களும் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் முதலாளி வர்க்கம் நம் செயல்பாடுகளை உளவு பார்க்க அவர்களுக்கென்று படை பட்டாளங்களை ஒவ்வொரு இடத்திலும் வைத்திருப்பார்கள்.

ஆடு, புலி ஆட்டம் போலத்தான் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். எவர் நம்மை வெட்டுவார்கள்? எந்த இடத்தில் நாம் வெட்டப்படுவோம்? என்று காத்திருப்பதை விட வெட்டக் காத்திருப்பவர்களை நாம் வெட்டி விட்டு நகர்ந்து முன்னேற வேண்டும். இறைச்சிக் கடையில் நின்று கொண்டு கருணை, காருண்யத்தைப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

இது தொழில் வாழ்க்கை. அதுவும் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் தொழில். கோடிகள் புழங்கும் எந்தத் தொழிலும் மேம்பட்ட பதவியில் இருப்பவர்களும், முதலாளிகளும் அடிப்படையில் கேடிகளாகத் தான் இருப்பார்கள். சிலர் அதனை வெளியே தெரியாதாவாறு மறைத்து வாழ கற்று இருப்பார்கள். வெளியே முலாம் பூசம்பபட்ட தங்க நகை போலத்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.

ஆனால் அவரவருக்குண்டான தர்மநியாயங்கள் தான் அடுத்தக் கட்டத்திற்கு அவர்களை நகர்த்தும். எண்ணங்கள் முழுக்க வக்கிரத்தை சுமந்தவர்களுக்குத் தான் பார்க்கும் எல்லாப் பெண்களும் அனுபவிக்கக் கூடியவர்களாகத்தான் தெரிவார்கள். வயது வித்தியாசமோ, உறவு சார்ந்த உறுத்தல்களோ தோன்றாது. பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்களுக்கப் பிணத்தைக் கூட விலை பேசத்தான் தோன்றும்.


ஒரு முதலாளி யோக்கியவானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கோடிக்கணக்கான முதலீடு போட்டவனின் வலியென்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனின் இழப்புகளை எவரும் பங்கு போட்டுக் கொள்ள வர மாட்டார்கள். 

ஆனால் குறைந்த பட்சம் நாணயமானவனாகத்தான் வாழ்ந்தாக வேண்டிய அவசியமுண்டு. நா நயம் என்பது ஒரு கட்டம் வரைக்கும் நகர்த்தும். வாழ்க்கை முழுக்க வாயால் கப்பல் ஓட்டுபவர்களுக்குக் கலங்கரை விளக்கம் என்பது கடைசி வரைக்கும் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விடும். 


5 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஆயத்த ஆடைத்தொழில் சிறப்பாக அறிந்து கொள்ள தொடர் உதவுகிறது! சுவாரஸ்யமான தொடர்! பகிர்வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றும் நிதர்சனமான உண்மை...

UmayalGayathri said...

உண்மைகள் வலிக்கும் என்பதும் உண்மை.

அந்தப் பெண்....

12 மணிநேரம் கட்டிங்...

எந்திர மனிதர்கள்....மனசும், உடலும் இரும்பாகினால் தான் வாழ்க்கை...

தொடர்...உண்மை விளம்பியாக செல்கிறது சகோ. வேறு ஒரு மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Rathnavel Natarajan said...

பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் = ஆடு, புலி ஆட்டம் போலத்தான் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். எவர் நம்மை வெட்டுவார்கள்? எந்த இடத்தில் நாம் வெட்டப்படுவோம்? என்று காத்திருப்பதை விட வெட்டக் காத்திருப்பவர்களை நாம் வெட்டி விட்டு நகர்ந்து முன்னேற வேண்டும். இறைச்சிக் கடையில் நின்று கொண்டு கருணை, காருண்யத்தைப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.= ஜோதிஜி திருப்பூர் = அருமையான தொழிற்சாலை பற்றிய பதிவு. புத்தகமாகப் போடலாம். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி திருப்பூர்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் தங்களது பதிவுஅறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/