Sunday, June 01, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 3


தேர்தல் நடந்த நாள் மட்டுமல்ல முந்தைய வாரங்களிலும் வீட்டில் யாருமில்லை. வீட்டில் இருந்த நான்கு பெண்களும் கோடை விடுமுறையைக் கொண்டாட முறை வைத்து ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தனர். வீடே மயான அமைதி போல இருந்தது. இது போன்ற சமயங்களில் என் தனிப்பட்ட சோம்பேறித்தனமாகக் குணாதிசியங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். 

வீட்டில் எந்த இடத்தில் எதை வைத்தோம்? என்று மறந்து தடுமாறிக் கொண்டிருக்கும் போதெல்லாம் நான்கு பேர்களும் சேர்ந்து திட்டிக் கொண்டே எடுத்துக் கொடுப்பார்கள். இப்போது என் வாக்காளர் அடையாள அட்டை எங்கே இருக்கிறது? என்பது ஒரு பெரிய பிரச்சனை உருவாக, மனைவியை அழைத்துக் கேட்ட போது "இந்த இடத்தில் பாருங்க?" என்றார். 

கொடுத்த பூஜையை வாங்கிக் கொண்டே ராகுல் அடுத்த ஐந்து வருடங்கள் இந்தியாவில் இருப்பாரா? இல்லை அவரின் கூட்டாளிகளுடன் அவர் "விருப்பம் சார்ந்த செயல்பாடுகளில்" கவனம் செலுத்துவரா? என்பதை யோசித்துக் கொண்டே தூங்கிப் போனேன். 

தேர்தல் குறித்துப் படித்த ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே தூங்கிய போதிலும் தனிமை என்னைக் கொன்றது. தொழிற்சாலை பரபரப்பில் இருந்தவனுக்கு வீட்டின் அமைதி உறுத்தியது. இது போன்ற சமயங்களில் எனக்கு எப்போதும் உற்ற தோழன் புத்தகங்கள் மட்டுமே. ஆனால் எந்தப் புத்தகங்களையும் படிக்கப் பிடிக்கவில்லை.  அமுதவன் புத்தகங்களை படிக்க எடுத்த போதிலும் அடுத்த நாள் அலுவலக வேலைகளுக்கு திட்டமிட வேண்டிய பணிச்சுமைகள் அழுத்திக் கொண்டிருந்தது.

செய்தித்தாள்கள், வார இதழ்கள் என்று வீடு முழுக்க இறைந்து கிடக்கும். எந்தப் பக்கம் கால் வைத்தாலும் ஏதோவொரு புத்தகம் கிடக்கும். இது தவிர மகள்களின் புத்தகங்கள் அதுவேறு தனியாக அங்கங்கே சிதறிக்கிடக்கும். என் வாசிப்புப் பழக்கம் இப்போது மகள்களுக்கும் வந்து விட்டது. நான் வாங்கிக் கொண்டு வருகின்ற வார இதழ்களையும் இருவர் போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருப்பார்கள். 

தேர்தல் அறிவிப்பு வந்த போது எனக்கு மற்றொரு வகையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. வாங்கிக் கொண்டிருந்த அத்தனை வார இதழ்களிலும் பக்கங்கள் அதிகமாகி, பலதரப்பட்ட செய்திகள், யூகங்கள், கற்பனைகள், முடிவுகள், பேட்டிகள் என்று வந்து கொண்டேயிருக்கச் சுவராசியமாக இருந்தது. காசு கொடுத்து வாங்குவதற்குத் தகுதியாகவே இருந்தது. ஆனால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரும் கொடுக்கும் பொய்த்தகவல்களும், புழுகு மூட்டைகளையும் படித்துப் படித்து வெறுப்பாகத் தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் எந்த வார இதழ்களையும் வாங்கக்கூடாது என்று முடிவுக்கு வந்தேன். இரவு நேரத்தில் மட்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மட்டும் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுப்பவர்களின் சொற்போர்களைக் கண்டு கொண்டிருந்தேன். 

பல சமயம் சிரிப்பு சில சமயம் ஆச்சரியம் கலந்த அதிசயமாகவும் இருக்கும். எனக்கு விருது கொடுக்கும் அதிகாரம் இருந்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணாவுக்குத் தான் கொடுப்பேன். நம்ம நாராயணசாமியை விட ஒருபடி தாண்டி அசராமல் சிக்ஸர் அடித்துக் கொண்டேயிருந்தார். கேட்பவர்கள் சிரிப்பார்களே? என்பதைக்கூட யோசிப்பாரா? மாட்டாரா? என்று ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருந்தார். 

அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து தயாராகிக் கொண்டிருந்த போது தான் அந்தக் குழப்பம் உருவானது. சென்ற முறை ஒவ்வொரு கட்சிக்காரர்களுக்கும் வீட்டுக்கே வந்து எந்தப் பள்ளிக்கூடம் என்பதைத் தெரிவித்து, அவர்கள் கட்சி சின்னம் உள்ள சிறிய சீட்டை கொடுத்து விட்டு சென்றனர். இந்த முறை அது வாங்காத காரணத்தால் எனக்குக் குழப்பமாக இருந்தது. தொழிற்சாலைக்கு விடுமுறை என்ற போதிலும் எனக்கு அலுவலகம் சார்ந்த பல வேலைகள் இருந்த காரணத்தால் சீக்கிரம் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருந்தேன். அப்போது இரண்டு கட்சிகளை நினைக்கத் தோன்றியது. 

ஒன்று கம்யூனிஸ்ட் மக்கள் மற்றொன்று திமுக கட்சிக்காரர்கள். 

இரண்டு கட்சியிலும் அடித்தளம் பலமாக இருக்கும். தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டாமல் தீவிரத்தோடு பணியாற்றுவார்கள். எவராயினும் மரியாதை அளிப்பார்கள். கேட்கும் கேள்விகளுக்குப் பொறுப்பாகப் பதில் அளிப்பார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கட்சியிலும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரைக்கும் உள்ள அத்தனை பேர்களுமே கட்சியின் கொள்கை சார்ந்த விசயங்களில் பிடிப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால் தற்பொழுது மேல் மட்டம் பிரபல தொழில் அதிபர்களாக மாறிவிட் கீழ் மட்டம் "இனிமே இவனுங்கள நம்பி நம் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது" என்று உசாரகிவிட்டனர். 

"முன்பு தோழர்களே அணி திரண்டு வாரீர். நாம் யார் என்று முதலாளிகளுக்குக் காட்ட வேண்டும்" என்று மீன்பாடி வண்டியில் மைக் மூலம் அறைகூவல் விடுத்தால் போதும். திருப்பூர் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம செங்கொடியைத் தான் காணமுடியும். ஆனால் இன்றோ? கூவிக் கூவி அழைத்தாலும் "குடிக்கக் காசு தருவியா?" என்கிற அளவுக்கு மக்களின் மனம் மாறிவிட்டது. 

இவர்களில் யாரோ ஒருவரிடம் சென்றால் நிச்சயம் நம்முடைய சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் சென்றேன். 

நான் சென்ற முறை வாக்களித்த அரசு பள்ளிக்கூடம் இருந்த சந்தில் சென்று பார்த்த போது நினைத்த மாதிரியே அந்த அதிகாலை வேலையில் கம்யூனிஸ்ட் தொண்டர் படை சுறுசுறுப்பாக ஒரு வீட்டின் வாசல்படியில் இருந்து கொண்டு ஓட்டளிக்கச் செல்பவர்களிடம் தங்கள் கட்சி சின்னத்தைச் சொல்லி ஓட்டளிக்கச் சொன்னதோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தனர். 

மற்ற எந்தக் கட்சிகளையும் காணவில்லை. நான் அவர்களிடம் கேட்ட போது வைத்திருந்த மடிக்கணினியில் சோதித்துப் பார்த்து விட்டு எனக்குரிய சீட்டை எழுதி பள்ளியில் எந்த அறையில் சென்று ஓட்டளிக்க வேண்டும் என்பது வரைக்கும் மிகத் தெளிவாகக் கூறிவிட்டு மறக்காமல் "கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிங்க தோழரே" என்றார்கள். 

மனதிற்குள் சிரித்துக் கொண்டே திருப்பூர் வாழ்க்கையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாதகப் பாதகங்களை யோசித்துப் பார்த்துக் கொண்டே பள்ளியை நோக்கி நகர்ந்தேன். 

அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்கள். பல நிறுவனங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தார்கள். முதலாளிகளுக்குச் சிம்ம சொப்பமான இருந்தார்கள்.  சங்கத்துகாரர்கள் வருகின்றார்கள் என்றால் ஓடி ஒழிந்த பல முதலாளிகளை எனக்குத் தெரியும்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் என்றால் திருப்பூர் முழுக்க எங்குப் பார்த்தால் சிவப்பு நிறக் கொடிகளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொழிலாளர்களுக்கு (அவர்கள் நம்பாத) கடவுளாக இருந்தார்கள். நான் கடந்த கால அனுபவத்தில் இவர்களால் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளேன். மிரட்டப்பட்டுள்ளேன். 

ஆனாலும் நியாயவான்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. சில்லறைத்தனமான கட்டைப்பஞ்சாயத்துச் செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டியும் தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தர பாடுபட்டனர். டாலர் நகரம் புத்தகத்தில் கூட ஒரு அத்தியாயத்தில் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவில் கூட மரியாதைக்குரிய தோழர் திருத் தங்கவேல் (சட்டமன்ற உறுப்பினர்) தான் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

ஆனால் இன்று? 

டெபாசிட் வாங்கக்கூட லாயக்கு இல்லாத அளவுக்கு மகத்தான சோக வரலாற்றின் ஒரு அத்தியாயமாக நடந்த 2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டது. 

அவர்களின் கொள்கை காலாவதியாகிவிட்டதா? அல்லது தவறான கொள்கையைப் பிடித்துக் கொண்டு இன்றும் தொங்கிக் கொண்டிருக்கின்றார்களா? இல்லை தொழிலாளர்கள் இவர்களை நம்பத்தயாராக இல்லையா? 

அதை விட முக்கியக் காரணம் ஒன்று உண்டு.

சிலரின் பண ஆசைகளுக்காக ஒரு கட்சியின் கொள்கையே ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. தோழர்கள் முதலாளிகாக மாற நினைத்தால் என்ன விளைவு உருவாகும்? என்பதனை மக்கள் நடந்து முடிந்த தேர்தல் மூலம் உணர்த்தி உள்ளனர். இங்கு மட்டுமல்ல. மொத்த இந்தியாவிலும் இப்படித்தான்,

இங்கு நடந்த ஒரு மிகப் பெரிய செல்வந்தரின் திருமணத்தில் சில மாதங்களுக்கு முன்பு கலந்து கொண்ட போது நான் அமர்ந்து இருந்த வரிசைக்கு முந்தைய வரிசையில் இங்குள்ள திமுக, அதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த அத்தனை பெரிய தலைகளும் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். கட்சி ரீதியாகப் பிளவு பட்டு இருந்தனரே தவிர எல்லோருமே ஏதோவொரு வகையில் நெருங்கிய சொந்தங்களாகத்தான் இருந்தனர். 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த ஒவ்வொன்றும் என் காதிலும் விழுந்து கொண்டே தான் இருந்தது. பரஸ்பரம் கலாய்த்துக் கொண்ட போதிலும் அவர்களின் அந்தரங்க லூட்டிகளும் அவ்வப்போது வார்த்தைகள் வழியாக வந்து விழுந்து கொண்டேயிருந்தது. 

ஒரு காலத்தில் பிரபல பேச்சாளராக இருந்தவர் வாரிசை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைத்து அவர் கட்சிப்பற்றை அவர் பாணியில் காட்டியவரும் அங்கே இருந்தார். இது தவிரத் தொழிலாளர்களின் எட்டுமணி நேரத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இங்குள்ள முதலாளிக் கூட்டத்தோடு மத்திய அரசிடம் போய் நின்ற காரணத்தால் கட்சி கட்டம் கட்டி வெளியே தூக்கி எறிந்தது. அவரும் அசராமல் "உண்டியல் குலுக்குவது உடம்புக்கு ஆகாது. இதற்கு மேல் கட்சி நம்மைக் கரை சேர்க்காது" என்று திமுகவிற்கு மாறியவரும் அங்கே இருந்தார். 

ஒவ்வொரு தலைகளுக்குப் பின்னாலும் ஓராயிரம் சொத்துக்களைச் சேர்க்க உழைத்த அவர்களின் உழைப்பை புரிந்து கொள்ள முடிந்தது. 

கட்சி தான் தோற்று விட்டது. அவர்களைப் பொறுத்தவரையிலும் தோற்கவில்லை. 

அவரவர் விரும்பிய சொத்துக்களைச் சேர்த்து விட்டனர். காட்சிகள் மாறும் என்று அவர்கள் வாரிகளைக் களம் இறக்குவார்கள். கட்சிக்கு 3000 ஓட்டுக்குள் விழுந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எந்தப்பக்கம் பொட்டல்காடு உள்ளது. எவரைப் பினாமியாக வைத்து வளைத்துப் போடலாம் என்று வாரிசுகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். 

எப்போதும் போல உண்மையான கம்யூனிஸ்ட் தோழன் ஜிந்தாபாத் என்று தொண்டை தண்ணீர் வற்ற செங்கொடியை ஏந்தி கூட்டத்தில் களைத்துப் போயிருப்பான்.

தொடர்புடைய பதிவுகள்



16 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல அலசல் ஐயா

மகிழ்நிறை said...

தலைவர்கள் தாங்கள் மேடையில் பேசுவதை மட்டுமே மக்கள் கேட்கிறார்கள் என்று நினைகிரார்களோ? முன்பெல்லாம் பஞ்சாலையில் மாதம் ஒரு முறை மாலை எரிமலை எப்படி பொறுக்கும் என குமுறிக்கொண்டிருந்த எங்கள் தெருவில் (மணப்பாறையில்) இப்போ கம்யுனிஸ்ட்களை காணவில்லை போட்டு தேடும்படி அகிவியது அண்ணா. அப்புறம் மருமகள்கள் விடுமுறை முடிந்து வீடு திரும்பிவிட்டனரா?

மகிழ்நிறை said...

ஆகிவிட்டது என திருத்தி வாசிக்கவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

கொள்கை மட்டுமா...? பலதும் ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது...

ராஜி said...

அவரவர் விரும்பிய சொத்துக்களைச் சேர்த்து விட்டனர்.
>>
அரசியல்ல சேர்ந்த நோக்கம் நிறைவிட்டதுன்னு சொல்லுங்க.

தனிமரம் said...

நல்ல அலசல் ஐயா

”தளிர் சுரேஷ்” said...

அருமையாக சொன்னீர்கள்! கட்சி தோற்றுவிட்டது அவர்கள் தோற்கவில்லை! உண்மை!

கிரி said...

ஜெ 37 இடம் வாங்கிய அதிர்ச்சியே எனக்கு இன்னும் தீரல... இதுல தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி 1,56,000 வாக்கு பெற்று இருப்பது தலை சுற்ற வைக்கிறது.. யாருங்க இவர்களுக்கேலாம் வாக்களிப்பது.

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல அரசியல் விமர்சனம். அரசியல் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை (அதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களுக்குள் இருக்கும் ஆவலை ) இந்த பதிவு காட்டுகிறது.

ஜோதிஜி said...

இந்த ஆர்வம் பள்ளிக்கூட ஆர்வத்தில் இருந்தே வந்து விட்டது. இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தில் ஒருவருக்குக் கூட அரசியல் ஆர்வம் என்பது துளி கூட இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஜோதிஜி said...

உங்களுக்கு அதிர்ச்சி. எனக்கோ மயக்கம். முதலில் ராஜீவ் காந்தி மரணம் வாழ்க்கையை தொடங்கி வைத்தது. தற்போது கலைஞரின் குடும்ப அரசியல் இவரை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. வேறென்ன சொல்ல? அதிர்ஷடம் ஒருவருக்கு உதவும் என்பதற்கு வாழும் காலத்தில் இவரே உதாரணம்.

ஜோதிஜி said...

ஆனால் இது குறித்து எவரும் கவலைப்படக்கூட தயாராக இல்லை என்பதே உண்மை.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நிச்சயம். தொழில் என்றால் லாபம் தானே முக்கியம். அரசியல் இவர்களுக்கு தொழில் தானே?

ஜோதிஜி said...

அறம் இல்லாத வாழ்க்கையும் கொள்கை இல்லாத அரசியலும் மக்களின் வாழ்க்கையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதே உண்மை. அது தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது.

ஜோதிஜி said...

அவர்களுக்கென்ன? மிரட்டலும் மிரட்டி என்னை பணிய வைப்பதுமான வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கின்றது. உங்கள் அன்புக்கு நன்றி மைதிலி.