Sunday, March 30, 2014

அன்புள்ள ஆசானுக்கு

அன்புள்ள ஜோதிஜி,   
                                  
வணக்கம்.

நீங்கள் யோகக்கலை மற்றும் ஆசான் திரு கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய படம் (ஆவணப்படம்?) எடுப்பதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். யோகக்கலை (நீங்கள் எழுதியிருப்பது போல யோகா கலை அல்ல) பற்றிய சில புரிதல்கள் தேவை. இந்தக் கலையை பற்றிய சில அடிப்படை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 

யோகம் ஆசனம் ஸ்திரம் சுகம் என்பார்கள்.

எந்த ஒரு யோகாசனம் செய்யும்போதும் – அதாவது ஆசனத்தில் நம் உடல் இருக்கும்போது - நமது நிலை ஸ்திரமாக இருக்கவேண்டும். உறுதியாக நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நமது உடல் எடையை நமது உறுப்புகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கத் தெரியவேண்டும். அப்போதுதான் இந்த ஸ்திரத் தன்மை வரும். இந்த ஸ்திரத்தன்மை வந்துவிட்டால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடல் லேசாக இருக்கும்.

நான் ஒரு ஆசனம் செய்யும்போது கால் சறுக்குகிறது; கை நடுங்குகிறது என்றால் என் ஆசிரியை உங்கள் உடல் எடையை நீங்கள் கை கால்களில் சமமாக விநியோகிக்கவில்லை என்பார். இதைப் புரிந்துக்கொண்டு செய்தால் கால் சறுக்காது; கை நடுங்காது. எங்கள் ஆசிரியை வகுப்பு முழுவதும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார். ஒவ்வொருவரையும் கவனித்து சரி செய்துகொண்டே இருப்பார். 

இரண்டாவதாக எந்த ஒரு ஆசனத்தில் இருந்தாலும் - காலைத் தூக்கி தலைமேல் வைத்தாலும், தலையைக் கீழே வைத்து சிரசாசனம் செய்தாலும் -அது எனக்கும் சுகமாக (comfortable) இருக்கவேண்டும் பார்க்கிறவர்களுக்கும் நான் ஏதோ கஷ்டப்பட்டு செய்வது போலவோ சர்க்கஸ் செய்வது போல இருக்கக்கூடாது. இந்த ஸ்திரம், சுகம் இரண்டும் யோகக்கலைக்கு மிகவும் முக்கியம். 

இதனாலேயே இந்தக் கலையை கற்றுத் தேர்ந்த ஒருவரின் மேற்பார்வையிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆசான் இரண்டு இடங்களில் தானே புத்தகத்தைப்பார்த்து செய்ய ஆரம்பித்ததாகச் சொல்லுகிறார், வீடியோவில். இது தவறான ஒரு செய்தியை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும். முடிந்தால் இதை எடிட் செய்துவிடுங்கள்.

இன்னொரு விஷயம்: ஆசான் செய்யும் ஆசனங்கள் எல்லாம் பலபல வருடங்களின் இடைவிடா பயிற்சி மூலம் வருவது. இப்படிச் செய்வதற்கான அடிப்படை இரண்டு விஷயங்கள் இருக்கின்றன யோகாவில். முதலாவது நீட்சி (streching) அடுத்து முறுக்குதல் (twisting). எந்த ஒரு ஆசனம் செய்வதற்கும் முன்னால் நமது உடலை தயார் செய்வது மிகவும் முக்கியம். அதற்குத் தான் இந்த நீட்சியும், முறுக்குதலும் தேவை. 

சின்னக்குழந்தைகள் வெகு அனாயாசமாக கால் கட்டை விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கொண்டு விடுவார்கள், அவர்களிடம் இருக்கும் நெகிழ்வுத்தன்மை காரணமாக. நாமும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தோம். வயதாக ஆக, இந்த நெகிழ்வுத் தன்மை குறைகிறது. யோகாசனம் செய்வதால் இந்த இழந்த நெகிழ்வுத்தன்மையை மெல்ல மெல்ல மீண்டும் பெறலாம். 

நமது உடலுக்கு ஒரு தத்துவம் தான் அதாவது use it or lose it. எந்தவொரு அவயவத்தை நாம் பயன்படுத்தவில்லையோ அதை நாம் இழக்கிறோம். கால் வலிக்கிறது என்று சிலர் நடக்கவே மாட்டார்கள். முழங்கால் வலி என்று கீழே உட்காருவதையே தவிர்த்து விடுவார்கள். சில வருடங்களில் இரண்டுமே முடியாமல் போய்விடுகிறது.

அதேபோல எல்லோருக்கும் எல்லா ஆசனங்களும் செய்ய வராது. இதற்குக் காரணம் அவரவர்களுக்கு இருக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility). நமக்கு ஏற்கனவே இருந்த நெகிழ்வுத்தன்மையை யோகாசனங்கள் மீட்டுத் தரும் – விடாமல் பயிற்சி செய்தால் மட்டும். 

ஹோமியோபதி மருந்து போலத்தான் யோகாசனங்களும் – நிதானமாகத்தான் பலன் கிடைக்கும். நிதானமாகத்தான் செய்ய வேண்டும். ஆசனங்களின் கடைசி நிலைக்கு நிதானமாகத்தான் செல்லவேண்டும். அதேபோல வெளியே வருவதும் நிதானமாகத் தான் வர வேண்டும். அதனாலோ என்னவோ நிதானமான எனக்கு இந்தக்கலையும் ஹோமியோபதி மருந்துகளும்  ரொம்பவும் பிடித்திருக்கிறது! இரண்டாலும் பலனும் காண்கிறேன். அவசர யுகத்தில் இந்த நிதானமான யோகக்கலையை நிறைய நபர்கள் கற்க வருகிறார்கள் – சில காலத்திற்குத்தான் பிறகு விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து செய்வதன் மூலமே இதன் நன்மையை உணர முடியும். 

இப்போது பவர் யோகா (Power Yoga) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். உடல் இளைப்பதற்கென்று யோகா என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறார்கள். நிறைய காசும் பார்க்கிறார்கள். 

நான் கற்றுக் கொள்ளும் யோகாசனங்கள் திரு BKS ஐயங்கார் அவர்களால் முறைப்படுத்தப்பட்டவை. மைசூரைச் சேர்ந்த திரு ஐயங்காருக்கு இப்போது 96 வயது. பூனாவில் இருக்கிறார். இன்னும் திடமாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு ஐயங்காருக்கு வெளிநாட்டிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். 

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நெகிழ்வுத்தன்மை வயதாக ஆக குறையும். அப்படிப்பட்டவர்களுக்கு பயன்படுவதற்காக  திரு ஐயங்கார் சில பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் ஆசனமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அவற்றை props (properties) என்று குறிப்பிடலானார். டேப் அல்லது பெல்ட், மரத்தால் ஆன செங்கல், யோகா நாற்காலி. (இன்னும் நிறைய இருக்கிறது) இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் என்னைப் போன்றவர்கள் ஸ்திரமாகவும், சுகமாகவும் ஆசனங்களைச் செய்ய முடியும். இதற்கான சில புகைப்படங்களை இணைக்கிறேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு props வைத்துக் கொண்டு யோகாசனம் செய்வோம். எங்கள் ஆசிரியை மிகத் திறமைசாலி. வேறு வேறு விதங்களில் எங்களை யோகாசனம் செய்ய வைத்து வகுப்பை ரொம்பவும் சுவாரஸ்யமாக்கி விடுவார். சில நாட்கள் பிராணாயாமம் மட்டுமே ஒரு மணி நேரம் செய்வோம். 

சின்ன வயதுக்காரர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஆசனங்களை நாங்களும் (என்னைப்போன்றவர்களும் செய்யக் காரணம் திரு ஐயங்கார் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் உரித்தாகுக. 

உங்களது ஆவணப்படத்தில் இந்த விஷயங்களை எல்லாம் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். 

அன்புடன்,
ரஞ்சனி நாராயணன்


தொடர்புடைய பதிவுகள்








7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரஞ்சனி அம்மா சொன்னது மிக மிகச் சரி... ஆசனங்கள் எல்லாம் உடனே யாரும் செய்து விட முடியாது... தொடர் பயிற்சி வேண்டும் என்பது 100% உண்மை...

யோகா மையங்கள் ஒன்றா இரண்டா...? பணம் போனாலும் பரவாயில்லை... ஏதோ ஆர்வத்துடன் ஒரு வருடமோ, சில மாதங்களோ சென்று விட்டு தொடர முடியாமல் இருக்கும் உடலையும் கெடுத்துக் கொண்டவர்கள் பல பேர்...

சரி... ஆவணப்படத்தில் மாற்றம் வருமா...?

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம் ஐயா யோகா கூட இன்று வணிகப் பொருளாக மாறிவிட்டது.

Amudhavan said...

ஜோதிஜி நீங்களும் திருமதி ரஞ்சனி நாராயணனும் சேர்ந்து உங்கள் ஆசான் மற்றும் திரு ஐயங்கார் ஆகியோர் துணையுடன் இணைய நேயர்களுக்கு நிறைய உபயோகமான செயல்களைப் புரிந்து வருகிறீர்கள். மிக நல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் திருமதி ரஞ்சனி அவர்கள். அவர் இணைத்திருப்பதாகச் சொல்லும் புகைப்படங்கள் காணவில்லையே. அவற்றையும் இணைத்திருந்தால் பதிவு முழுமைப் பெற்றிருக்கும் என்றே நினைக்கிறேன்.

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அம்மாவின் கருத்துக்கள் சிறப்பானது! பகிர்ந்தமைக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

அம்மாவின் தளத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்... (http://ranjaninarayanan.wordpress.com/2014/03/31/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/)

Pandiaraj Jebarathinam said...

யோகாசனம் பற்றிய சிறப்பான தகவல்...அவர் கொடுத்த படங்கள் காணவில்லையே...சிறப்பான முறையில் காணொளியை எதிர்பார்கிறேன்.