சமீபத்தில் நடந்து முடிந்த ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த போது இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரிலை விவாதத்தில் தற்போது (அதிமுக முன்னாள் அமைச்சர். சுடுகாட்டு ஊழலின் மூலம் புகழ்பெற்றவர்) திமுகவில் இருக்கும் செல்வகணபதி பேசும் போது ஒரு விசயத்தைப் போகின்ற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.
"ஏற்காடு இடைத்தேர்தலில் பணபலம் தான் ஜெயித்தது" என்று சொன்னதோடு மட்டுமல்லாது அங்கே ஒரு குடும்பத்தில் நடந்த சாவைப் பற்றிச் சொன்னார். அது குறித்து எந்தப் பத்திரிக்கையாவது எழுதுகின்றார்களா? என்று ஒவ்வொரு பத்திரிக்கையையும் கவனித்துக் கொண்டே வந்த போது இந்த வார நக்கீரனில் அது குறித்துப் பதிவு செய்துள்ளார்கள்.
இதை இங்கே பதிவு செய்யக்காரணம் கடந்த நாற்பதாண்டு காலத் தமிழ் நாட்டு அரசியலில் ஆண்ட, ஆண்டுக் கொண்டிருப்பவர்கள் உருவாக்கிய பாதைகள் என்ன என்பதையும்,வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சராசரி வாழ்க்கைக்குக் கீழே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது? மனோபாவமும் எப்படி உள்ளது? என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
இதில் உள்ள ஒவ்வொரு வரியிலும் ஒரு துயரக்கதை ஒழிந்துள்ளது. முழுமையாகப் படிக்கும் போது உணர்ந்து கொள்ள முடியும். இனி வரும் தமிழ்நாட்டுத் தேர்தல்களில் பணம் மட்டுமே தீர்மானிக்கப் போகின்றது. இது மதுரையில் திருமங்கலத்தில் தொடங்கிய ப(ய)ணமிது. ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய கொள்கைகளை உருவாக்கியவர்களை மக்கள் மறக்காமல் இருப்பது இயல்பு தானே?
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்.
நக்கீரன் பதிவு செய்துள்ள விசயம் தற்போது நடந்து முடிந்த ஏற்காடு தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவத்தை மட்டுமே. ஆனால் நான் புதுக்கோட்டையில் சந்தித்த ஒரு மருத்துவர் சொன்ன வாசகம்
"நமக்கிட்டே இருந்து தான் இவனுங்க கொள்ளையடிக்குறானுங்க. இது நம்ம காசு. இவனுங்க கொடுக்குறத வாங்கினா என்ன தப்பு?" என்றார். அவர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பணம் வாங்கிக் கொண்டே ஓட்டுப் போட்டதாகத் தயக்கமில்லாமல் சொன்னார்.
இன்னும் சில வருடங்களில் இதன் வீரியம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதால் இப்பொழுதே இதை இங்கே பதிவு செய்து விடலாம் என்று தோன்றியது. இதன் மூலம் நமது சமூகத்தின் உண்மையான நிலவரத்தினைக் கொஞ்சமாவது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
காரணம் இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் நம் பகுதிக்கு இடைத் தேர்தல் வந்துவிடாதா? என்று எதிர்பார்க்கும் மனோநிலையில் தான் மக்கள் இருக்கின்றார்கள்.
இறந்தவரின் மாமியார் வாக்குமூலம்
"நாங்கெல்லாம் கூலி வேலைக்குப் போறவங்க. ஒரு நாளைக்கு 70 ரூபாய் வந்தால் பெரிய விஷயம். எங்க போயர் ஜாதில படிச்சவங்களும் பெருசா இல்லை. அந்த நேரத்துல தான் தேர்தல் வந்துச்சு. கட்சிக்கார்களா வந்தாங்க. எங்க ஊரையே திருவிழா போலக் கவனிச்சுகிட்டாங்க. எங்க ஊரே சந்தோஷப்பட்டுச்சு. ஆனா எங்கூட்டுல மட்டும் அப்பப்போ நிம்மதியில்லை. என் மருமக மலரு மகன் முருகன்கிட்ட பொழுதினிக்கும் சண்டை போட்டுகிட்டே இருப்பா. அன்னைக்குத் தேர்தலில் ஓட்டு போட்டுட்டு பேரன் கண்ணனை கூட்டிக்கிட்டு போனா.
எப்பவும் போல அவங்கம்மா வீட்டுக்குத்தான் போவான்னு பார்த்தோம். ஆனா ரெண்டு நாள் கழிச்சு உம்மருமவளும், பேராண்டியும் ராமலிங்கபுரத்துல இருக்குற கெணத்துல பொணமா மெதக்குறாங்கடின்னு சொன்னாங்க".
மாமனார் வாக்குமூலம்.
"எங்க ஊட்டுல அஞ்சு ஓட்டு. இரட்டை இலை கட்சிக்காரங்க ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம்ன்னு கணக்கு வச்சு மொத்தம் பத்தாயிரம் ரூபாய் தந்தாங்க. மூணு மாசம் உழைத்தாலும் இம்புட்டு காசு பார்க்க முடியுமா? சொளையா கிடச்ச பணத்துல எம் மகன் முருகன் நாலாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கினான். அது தான் புருஷன் பொஞ்சாதிக்குப் பிரச்சனை வந்து ஊசுரையே விட்டுட்டா. போனவ எம் ஆறு வயச பேரனையும் கூட்டிட்டு போயிட்டாளே? அவன் என்ன பாவம் செஞ்சான்?"
கணவர் வாக்குமூலம்.
"நாம் இருக்குற நிலைமையிலே எதுக்குச் செல்போன் வாங்கினேன்னு மலரு கேட்டா? அதுல ரெண்டு பேருக்கும் சண்டை. அப்படி இருந்தும் அன்னைக்கு (டிசம்பர் 4ந்தேதி) போயி ஓட்டு போட்டுட்டு வீட்டுக்கு வந்தவ, இனி உன்கூட ஒரு நிமிஷம் கூட வாழ முடியாதுன்னு கோவிச்சுக்கிட்டுப் பையனை கூட்டிக்கிட்டு போனாள். 6ந்தேதி சாயந்திரம் கெணத்துல மிதக்குறா. பாழாப் போன தேர்தல் வந்து என் பொண்டாட்டிய பிரிச்சுடுச்சே".
இதே போல இது போன்று மற்றொரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டும்.
சேலத்தில் இருந்து 60 கிமீ இருக்கும் தும்பல் மலையில் உள்ள வீரன் குடும்பத்திலோ இன்னோரு வகையான துயரம். 70 வயது கணவன் வீரன் இறந்து கிடக்க அவர் உடலை வைத்துக் கொண்டே அவரின் மனைவி (65 வயது) பாப்பாத்தியம்மா வாக்களிக்கச் சென்று தன் ஜ(ப)னநாயக(?) கடமையைச் செய்து வந்தார்.
மகள் வசந்தா
"அப்பா ஆறு மாசமா படுத்த படுக்கையா இருந்தாரு. தேர்தல் அன்னைக்கு மொதநாள் நைட் எட்டு மணி இருக்கும். அப்பா எறந்துட்டாரு. ஆனாலும் மக்காநாளு ஓட்டு போட்டுட்டு வந்துதான் அப்பாவ அடக்கம் செஞ்சோம்"
இறந்தவரின் மனைவி
"செத்தவரு எழுந்தா வரப்போறாரு. அவரு நேரம் போயிட்டாரு. அதுக்காக ஓட்டு போடாமலா இருக்க முடியும். மதுரைவீரன் படம் பார்த்ததுல இருந்து ஒரு முறை கூட நான் ஓட்டு போடாம இருந்ததில்ல. அதான் ஒரு பையனை கூப்பிட்டு அவன் புல்லட்டுல உக்காந்துட்டு போயி ஓட்டு போட்டுட்டு வந்தேன்".
அருகே வசித்தவர்களின் வாக்குமூலம்
"இங்கே முக்கால்வாசி பேருங்க ரெட்டை எலை ஆளுங்கதான். அதுவும் இந்த முறை வோட்டுக்கு ரெண்டாயிரமும், வழி செலவுக்குன்னு எரநூறு ரூபாயும் கொடுத்தவங்கள மதிச்சு அந்தம்மா ஓட்டு போட்டு வந்துச்சு. சடங்கு செய்ய ஆரம்பிச்சுட்டா வெளியே போகமுடியாதே?"
தொடர்புடைய பதிவுகள்
45 comments:
Common wealth countries ல் உள்ளவர்கள் இங்கிலாந்து குடியுரிமை பெறாவிட்டாலும், அங்கு வோட்டு போடலாம். இந்தியர்க்கள் வோட்டு போடலாம்! 1987 வரை இருந்தது; இன்றும் அப்படிதான் என்று நினக்கிறேன்.
அதுவும் நாங்கள் இந்தியாவில் பிறந்தவர்கள்! எங்களை மாதிரி ஏமாந்த சோகிரிகளுக்க்கு வோட்டு போட நம் அரசு ஆவன செய்யுமா?
திருமங்கலம் முன்பே குடம் தான் முதலில் என்று கேள்வி!
+1
சாரி மன்னிக்கணும்: வோட்டு போட முடியவில்லை; ஒட்டுபட்டையை தேடினா கிடைக்கவில்லை! எங்கே ஒளித்து வைத்துள்ளீர்கள்
தமிழ்நாட்டுத் தேர்தல்களில் பணம் மட்டுமே தீர்மானிக்கப் போகின்றது....!
இல்லை.., அப்படி இல்லவே இல்லை.., பணம் மட்டுமே தீர்மானிக்கிறது என்றால் சென்ற பொதுத் தேர்தலில் யார் அதிகம் கொடுத்தார்கள்? கொடுத்டிருக்க முடியும்? ?
ஆனாலும் அரசியல் கட்சிகளிடையே பணம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் ஓட்டு கைமாறிவிடும் என்ற பயம் இருக்கிறது. மக்கள் இவ்வளவு பணம் கொடுப்பவர்களை ஏன் கொடுக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். அந்த அந்த ஊரைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்களுக்கு வாக்களிக்க முன் வர வேண்டும்.
//வழி செலவுக்குன்னு எரநூறு ரூபாயும் கொடுத்தவங்கள மதிச்சு அந்தம்மா ஓட்டு போட்டு வந்துச்சு// தயவு செய்து அந்த பெண் மணியைக் கொச்சைப் படுத்தாதீர்கள். அவர் இதுவரை எந்த தேர்தலிலும் ஓட்டுப் போட தவறியதே இல்லையாம். சமீப காலமாய் தான் ஓட்டுக்குப் பணம் அதற்கு முன்னால் யார் காசு கொடுத்தார்கள். அப்போதெல்லாம் கூட இவர் தனது பிரச்சனைகளைப் ப்ற்றி கவலைப் படாமல் போய் வாக்களித்துத்தான் வந்திருக்கிறாராம்
நாம எல்லாத்தையுமே உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறோம்.
முதல் கதையில் வீட்டில் பணம் வந்தால் (எப்படி வந்தது என்பது அடுத்த விஷயம்) அதை ஊதாரித்தனமாக செலவிடும் கணவனும் அதை தடுக்க முடியாத மனைவியும் மகனும்! பாவம் அவள் எடுத்த முடிவு அது.
இரண்டாவது கதையில் வருபவர் இதுவரை பல தேர்தல்களில் தவறாமல் வாக்களித்துள்ளவர். நம்மில் பலர் வெயில் அதிகமாக இருக்கு என்ற காரணத்திற்காகவே வாக்களிக்காமல் "சும்மா" இருந்து வீட்டில் தொலைக்காட்சியில் வரும் முடிவுகளை கண்கொட்டாமல் பார்த்து நொட்டு சொல்லுபவர்கள். அது போக காந்திஜியே மரணித்த தன் தாயின் உடல் வீட்டிலிருக்கும்போது தன் மனைவியோடு வீடுகூடியவர். எனவே மரணம் என்பது ஒரு இயல்பான விஷயம் என்பதை அப்பெண்மணி நன்கு புரிந்துள்ளார்.
நாம் தான் குழப்பிக்கொண்டிருக்கிறோம்.
பொதுவாக, கடந்த பல இடைத்தேர்தல்களில், தமிழகத்தில் ஆளுங்கட்சியே வெற்றி பெருகிறது என்பது எழுதப்படாத ஒரு விதியாகிவிட்டது. அப்படி இருந்தும் ஆளுங்கட்சியானது இன்றும் பணம் கொடுத்தேதீரவேண்டும் எனும் கட்டாயத்தில் இருப்பதை பார்த்தால், அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையே காட்டுகிறது.
முதலில் வாக்களிப்பது நம் கட்டாய கடமை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர்தான் கடமையை செய்ய கையூட்டு பெறுவது என்பது லஞ்சம் வாங்குவதற்கு சமானம் என்பது விளங்கும். அதுவரை எல்லாமே நடந்துகொண்டுதான் இருக்கும்.
மக்களாட்சி என்பது வெறும் மேம்போக்கான வழிமுறையாகவும், தேர்தல் என்பது சம்பிரதாயமான ஒன்றாகவும் மாறிவிட்டது. பணம் கிடைக்கும் எனில் அவர்கள் மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களும் வாக்குப் போடவே தயாராய் உள்ளனர். அவர்களுக்கு 2000 ரூ. கிடைக்கும் போது தம் வாக்கை விற்கத் தயங்காதது வியப்பில்லை. நமக்கு 20,000 ரூ. கொடுத்து வாக்குப் போடச் சொன்னால் போடாமலா இருப்போம். எளிய மக்களும் பங்கேற்கும் ஜனநாயகம் என்பது இன்று வெறும் பகல் கனவாகி விட்டது. பொதுமக்கள் அரசியல், அரசு என்பதில் இருந்து ஒதுங்கியே கிடக்கின்றனர். அரசாங்கம் என்பது ஆதிக்க நிலையில் உள்ளோருக்கானது என்ற மன்னராட்சி மனோநிலை நம்மிடையே மாறவே இல்லை, அவற்றை மாற்றவும் நமக்கு விருப்பமோ, துணிவோ இல்லை.. இதன் நீண்ட்கால விளைவுகள் ஏற்கனவ்ர் ஊழல், விலையேற்றம், இயற்கை அழிவுகள், சீரற்ற வளர்ச்சி, ஏற்றதாழ்வுகள் என பல்வேறு வடிவங்களில் கண்டு கொண்டும் இருக்கின்றோம். அது உச்சத்தை அடைந்து வாழ்க்கை வாழவே இயலாது என்ற நிலை வரும் வரை சகிப்புத்தன்மையும், நெகிழ்வுதன்மையும மிகுந்த நம் மக்கள் கமுக்கமாகவே இருப்பார்கள். பணத்துக்காய் வாக்களித்துக் கொண்டு.
வியாதி முற்றினால்தான் அதற்கான மருந்தை நாம் தேடுவோம். அந்த வகையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
[[முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்.]]
இது உண்மை என்று என் நண்பர்கள் சொன்னார்கள்; அவர்கள் பேச்சை நம்புகிறேன்..
அதே மாதிரி... அவர்கள் சொன்னது, திருமங்கலம் முன்பே, குடம் கொடுத்தார்கள், புடவை கொடுத்தார்கள்...குடம் கொடுக்கு முன் குடத்தின் மீது கற்பூரம் வைத்து சத்தியம் வாங்கி கொடுத்தார்கள் என்றும் சொன்னார்கள்.
இது உண்மையா இல்லையா என்று ஏன் யாரும் பேச மறுக்கிறீர்கள்; அது பொய் என்று சொல்ல மறுக்கும் நீங்கள் திருமங்கலம் பற்றி பேசுவது என்ன காரணம்?
இரு பக்கம் பேச வேண்டும்--இல்லாவிட்டால் கம்முன்னு இருக்கணும்!
இந்த பணம் கொடுக்கும் வைபவத்தை கும்மிடிபூண்டியிலும் காஞ்சிபுரத்திலும் தொடங்கி வைத்ததே சாட்சாத் மம்மிதான்.என்பதை கவனத்தில் கொள்ளவும்.
திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்கிற ரீதியில்தான் எல்லாரும் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களும் அப்படிச் சொல்லவேண்டும் என்றுதான் விரும்புகின்றன. சமீப காலத்தில் வேண்டுமானால் இதற்கான பாதை திருமங்கலத்தில் அமைக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளலாம்.
ஆனால் இங்கே பின்னூட்டங்களில் திரு நம்பள்கியும், திரு பராரியும்தான் மாறுபட்ட தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவை உண்மைதான். ஆனால் இதற்கான கால்கோள் போட்டவர் திரு எம்ஜிஆர்தான். அவர் ஆட்சியில் இருக்கும்போது நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலில் (மருங்காபுரி என்று நினைக்கிறேன்) மூக்குத்தி, மற்றும் குடம் என்றுதான் மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார் அந்தத் திருமகன். அங்கிருந்துதான் இது ஆரம்பிக்கப்பட்டது.
பள்ளியில் படிப்பவர்களுக்கு மதிய உணவு திட்டத்தைக் காமராஜர் ஆரம்பித்து வைத்தார் என்பதை இருட்டடிப்புச் செய்து எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்வதற்காக மதிய 'சத்துணவு' திட்டத்தை ஆரம்பித்துவைத்தவர் எம்ஜிஆர் என்று சொல்லும் ஊடகங்கள், இந்த விஷயத்தில் மட்டும் எம்ஜிஆரை மறைத்து திருமங்கலத்தையும் அழகிரியையும் முன்னிறுத்தும் அரசியலை எல்லாம் மக்கள் புரிந்துகொண்டால்தான் (அது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது வேறு விஷயம்) தமிழகத்தில் ஒரு நல்ல அரசியலைக் கட்டமைக்க முடியும்.
அண்ணா,
இந்த பதிவு எனக்கு புரியவில்லை. பணம் வங்கி ஓட்டுபோடுவது தப்பென்று கூறுகிறத அல்லது பணம் நிறைய வருவதனால் எழைகுடும்பங்களில் சண்டை வருகிறது கூறுகிறதா அல்லது ஆளும்கட்சி நிறைய பணம் கொடுத்தது என்கிறதா
அரசியல்வாதிகள் மக்களை கொள்ளை அடிக்கிற பணம் தான் திரும்ப அவர்களிடம் வருகிறது, இரண்டு தரப்பும் திருந்தனும்.
"வரும் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?" - "வரும் தேர்தலில் யார் வெற்றியாளர் ?" என்றிருக்கலாமே தலைப்பு.
யோசிக்க வைத்த தலைப்பு கண்ணன்.
"நாங்கெல்லாம் கூலி வேலைக்குப் போறவங்க. ஒரு நாளைக்கு 70 ரூபாய் வந்தால் பெரிய விஷயம்.
இந்த வரி தான் என்னை அதிக அளவு பாதித்த விசயம். நாம் நம்முடைய விருப்பத்திற்காக சர்வசாதாரணமாக எப்படியெல்லாம் ஆரம்பரமாக செலவளித்துக் கொண்டு உல்லாசமாக இருக்கின்றோம். ஆனால் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைப்பாடுகள் எப்படி உள்ளது என்பதை உணர்த்திய வாசகமிது.
மற்றபடி நீங்கள் சொன்ன மூன்றையுமே எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்த பதிவு ஊர்ப்பக்கம் சென்று வந்த போது நாம் பார்த்த உலகத்தை பதிவு செய்துள்ளேன். நீங்க சொல்வது தான் உண்மைதான் என்றாலும் இன்னமும் பெரும்பான்மையான மக்களிடம் எம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவராகத்தான் இருக்கின்றார். ஏதாவது தவறாகச் சொன்னால் நம்மை அடித்தே கொன்று விடுவார்கள் போல.
ஏற்றுக் கொள்கின்றேன்.
சரிங்க.
இதுவே தான் என் பார்வையும்.
உண்மையான தெளிவான பார்வை. நன்றி.
தேர்தல் கமிஷன் நீங்க சொன்னது போன்ற தேர்தல் சீர்திருத்தத்தை அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பியது. அது பத்திரமாக கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றது. நீங்க சொன்ன சமாச்சாரமும் அதில் உள்ளது.
இரட்டை இலையின் தாக்கம் அல்லது அதன் மேல் உள்ள ஈர்ப்பு என்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
இனி இப்படித்தான் தனபாலன். ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு கணக்குப் போடுவதை படிக்கும் போது கண்டெயினர் லாரியில் தான் பணத்தைக் கொண்டு வர வேண்டும்.
நீங்க இங்கு வந்ததே எனக்கு ஓட்டு போட்டதற்கு சமம் தான்., நன்றி,
வெற்றி பெற்ற பின் விளம்பரப்படுத்தி கொடுத்தா அது மக்கள் நலத்திட்டம் , போட்டி போடும்போதே , விளம்பரப்படுத்தாம கொடுத்தா அது லஞ்சம் ... அவ்வளவுதானே ...
நாமளும் டாக்டர் கட்சிதான் ... அது நம்ம காசுங்க .... ! ரெண்டாவது, காசு வாங்குன கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவம்னு என்ன நிச்சயம் ...!
எங்க வீட்டுல , ரெண்டு கட்சியும் வந்து பணம் கொடுத்தாங்கன்னும் ... அப்பா ஒரு கட்சிக்கும் , அம்மா ஒரு கட்சிக்குமா ஒட்டுப்போட்டதாகவும் சொன்னாக .. ஏன்னு கேட்டேன் ... நம்பித்தானே கொடுத்தாக ன்னு சொல்றாங்க :)
வறுமையிலும் நேர்மை போய் , ஊழலிலும்/லஞ்சத்திலும் நேர்மை :)
டெல்லிக்கு ஒரு ஏகே 47 வந்தமாதிரி , தமிழ் நாட்டுல அட்லீஸ்ட் ஒரு ரிவால்வராவது வராதான்னு ஏக்கத்தோடு இருக்கேன் ... அதுவரை இருக்குற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளியோ அத எடுத்து தலையில வச்சுக்கவேண்டியதுதான் .
ஏழைகளின் அவல நிலையை சாதகமாக்கி ஓட்டுப் பெறும் கட்சிகளைப் பற்றி என்ன சொல்வது? அவர்களை அந்த நிலைமையில் வைத்திருப்பதே தங்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க உதவும் என்று அவர்களை முன்னேற விடாமல் வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
நாம் என்ன செய்கிறோம்? இவற்றைப்பற்றி இங்கு பதிவு செய்கிறோம். இதனால் என்ன பலன்? இந்த செய்திகள் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அவர்களால் இங்கு எழுதியிருப்பதை படிக்க முடியுமா? யார் அவர்களுக்கு இதையெல்லாம் புரிய வைக்கப் போகிறார்கள்?
நிச்சயம் இந்த நிலைமையை மாற்ற வேண்டும் நாம்.
வெற்றி பெற்ற பின் விளம்பரப்படுத்தி கொடுத்தா அது மக்கள் நலத்திட்டம் , போட்டி போடும்போதே , விளம்பரப்படுத்தாம கொடுத்தா அது லஞ்சம் ... அவ்வளவுதானே ...
அடடே இது கொஞ்சம் புதுமையான சிந்தனையாக இருக்கே?
இதனால் என்ன பலன்?
அடுத்து வரும் சந்துக்குள் சிந்து பாடலாம் என்ற பதிவு உங்களுக்குண்டான புரிதலை உருவாக்கக்கூடும்.
I understand that you are upset with my last statement, "இரு பக்கம் பேச வேண்டும்--இல்லாவிட்டால் கம்முன்னு இருக்கணும்!" I sincerely apologize for that; it is directed NOT against you but against who put ALL the blame on MK and family! MK is part of the problem but HE is NOT the problem!
காமராஜரைப் பற்றி அவர் செய்துள்ள சேவையைப் பற்றி நான் ஒரு இடுகை எழுதியுள்ளேன். நீங்கள் காசு கொடுத்து படித்து இருப்பீர்கள்; நாங்கள் ஓசியில் படித்தோம்!
ராமசந்திர மருத்துவ கல்லூரி வருமுன் ஒரு வருட MBBS பீஸ் ரூபாய் 380 மட்டுமே! பத்ம சேஷாத்ரி பள்ளி க.க. நகரில் வரும் வரை பள்ளி படிப்பு இலவசம்-Incuding Don Bosco and MCC, chetput
எல்லாவற்றிக்கும் கராணம் நம்ம புரட்சி தான். உங்களுக்கு மூன்று பெண்கள்; காசு கொடுத்து படிக்க வேண்டும் என்பது கொடுமை; காமராஜர் இல்லாவிட்டால்--எங்கள் குடும்பம் உங்களுடைய குடும்பத்தை விட பெரிது...நான் இப்ப இங்கு இருக்கமுடியாது! பாவம் அவர் ஐயார பிறந்து இருந்தால் எல்லா சூத்திர்ணக்ளும் போற்றி இருப்பார்கள்!
பிராமண பத்திர்க்கை படித்தவர்களுக்கு தெரியும். காமராஜரை பயங்கரமாக தூற்றி உள்ளார்கல்; முக வந்தவுடன் காமராஜரை தூக்கி எழுதினார்கள்;? எம்ஜீயார் வந்தவுடன் மதிய உணவு திட்டத்தை எதோ அவர் கண்டு பிடித்தா மாதிரி எழுதினார்கள்.
சிந்தியுங்கள் ஒரு மூன்று சதவீத மக்கள் எப்படி ஊடகங்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களை முட்டாள்கள் ஆக்கு கிறார்கள் என்று?
ஒரு சிந்தனை? கருணாநிதி ஐயாரக இருந்தால்?
இருந்தால் எம்ஜீயார் இல்லை!
மொத்தமாக உங்கள் பார்வையில் கலைஞர் குறித்து தெரிந்து கொள்ள ஆசை.
என்ன அக்கிரமம் ? இது இங்கு மட்டுனில்லை நாடெங்கும் இதே நிலைதான் .
வலிக்கிறது
எப்படி ஒரு வேலையை முடிக்க இலஞ்சம் கொடுப்பதை இயல்பாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டோமோ ...அதே போல் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதையும் பழகிக்கொள்வோம்....(வேதனையான உண்மை.)
பணம் மட்டுமல்ல குடியும் தான்....
அண்ணே நாம பணத்தை (லஞ்சமாக) கொடுக்கும் போதும் சரி ஓட்டுக்கு பணமாக வாங்கும் போதும் ஏன் என்று சிந்திப்பதே இல்லையே;
இரட்டை இலையின் அல்லது எம்.ஜி.ஆர் மேல் இன்றும் கிராமப் பகுதிகளில் இருக்கும் ஈர்ப்பு அல்லது செல்வாக்கின் அளவு நமது கற்பனைக்கும் எட்டாத்தே....
அண்ணே தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது புதுமையான சிந்தனை அன்று.. நாம் தவறாக புரிந்து வைத்துள்ள சிந்தனை. பொது மக்கள் அனைவரும் பயன்பட ஏற்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எதையுமே சரியாக நிறைவேற்றாமல் அதன் மூலம் தவறாக திருடப்பட்ட பணம்.. இவ்வாறு ஒட்டுக்கு கொடுக்கப்படும் பணமும் அனைத்து தரப்பினருக்கும் தருவதில்லை.
சமூகத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத தரப்பினருக்கும் கிராம்ப்புறங்களிலும் மட்டுமே கொடுத்து ஏமாற்றுகின்றனர். நமது வீட்டில் 50000 திருடிய ஒருவன் அதில் 500 மட்டும் நமது வீட்டில் உள்ள பெரும்பான்மை தரப்பினருக்கு தந்து உங்கள் அனைவருக்கும் நானே பிரதிநிதி என்று சொன்னால் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலுமா? அவ்வளவு தானே என்று சொல்ல முடியுமா?
மக்கள் நலத்திட்டங்களை தான் நமது உரிமை என்று சொல்லுங்கள் தயவுசெய்து கொள்ளைப்பணத்தை பெற்றுக்கொள்ள நியாயப்படுத்தாதீர்கள்...
பொதுவாகவே சூத்திர்ர்களாகிய நாம் அனைவரும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு உணர்வுபூர்வமாக மட்டுமே தமது பெரும்பாலான முடிவுகளை எடுக்கிறோம். தினசரி நடக்கும் இயல்பான நடஙடிக்கைகளுலும் சரி. திருப்புமுனையாக எடுக்கும் முடிவுகளும் சரி. கொள்கைரீதியாக யோசித்து தர்க்கரீதியாக சிந்தித்து அமைப்புரீதியான முடிவுகளை எடுப்பதில்லை . அல்லது அவ்வாறு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவில்லை. சிறுவயதில் இருந்தே கல்வஇநமக்கு அவ்வாறு கற்று கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒரு நாட்டின் அடிப்படையான கல்வி என்று தனியாருக்கு ஏலமாக இனாமாக கொடுக்கப்பட்டதோ அன்றே அதற்கு அழிவு ஆரம்பித்து விட்டது . அனைத்து கல்விநிலையங்களையும் அரசுடமையாக்கி கல்வியை மட்டும் மக்களுக்கு இலவசமாக கொடுத்தாலே மக்கள் ஏன் ஏதற்கு என்று யோசிக்கவும் கேட்கவும் ஆரம்பிப்பார்கள் ஆனால் இதை திறம்பட தைரியமாக செயல்படுத்தும் தலைமைதான் அவசியம் ஆனால் கண்ணுக்கெட்டிய வரை நம்பிக்கையின் ஒளிக்கற்றைகள் கூட இல்லை என்பதுதான். வேதனையான உண்மை.
திரு ஜோதிஜி .. உங்கள் அனுமதியுடன் இதற்கு பதில் கூற விரும்பிகிறேன்
//////
சிந்தியுங்கள் ஒரு மூன்று சதவீத மக்கள் எப்படி ஊடகங்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களை முட்டாள்கள் ஆக்கு கிறார்கள் என்று?/////
ஒன்று அவர்கள் அதி புத்திசாலிகள்.மற்றவர்கள் அடி முட்டாள்கள்
அப்படியா ......
தினத்தந்தி , தினகரன் ,சன் டிவி , ... இவை எல்லாம் பிராமண நிறுவனங்களா ...
IRS survey பார்த்தால் .. முதல் இடம் தமிழில் தினத்தந்தி. 2. தினகரன்...
டிவி யில் சன் டிவி / கலைஞர் முதல் இரண்டு இடங்கள் //.. இப்போது விஜய் டிவி .. அதுவும் ஆட்சி மாறியபின் தான் ...
மீதி யார் ஆனந்த விகடன் ... யார் ஆட்சியாளர்களோ அவர்கள் பக்கம் தான்
நக்கீரன் -- திமுக ஆதரவு (ஒரு காலத்தில் நிறைய வாசகர்கள்...இன்று குறைவு தான்).
தி ஹிந்து ..இதுவும் திமுக /கம்யூனிஸ்ட் /காங்கிரஸ் ஆதரவு தான் ...
மிச்சம் மீதி தினமலர் , துக்ளக் ( இவை இரண்டும் திமுக எதிர்ப்பு).. ஆனால் 1996 ல் சோ திமுக பக்கம் இருந்தார் ...
தினமலர் 90 களுக்கு பிறகு தான் பெரும் வளர்ச்சி பெற்றது ...
தினமலர் அலுவலகம் தாக்கப்பட்டது எல்லாம் மறந்து விட்டார்கள் போல ....
ஏன் ஐயா !! காமராஜர் தோற்றது விருதுநகரில்.... இங்கே பிரமினரா பெரும்பான்மையினர் ??????
"விருதுநகரில் விலை போகாத மாடு" ... இவை எல்லாம் காமராஜரை பற்றி கழகங்கள் கூறியவை .. ஆதாரம் (கொட்டில்பாடு துரைசாமி வரலாறு).. நாகர்கோவில் இடைத்தேர்தல் பற்றி பல தகவல்கள் உள்ளன.
... இந்தி எதிர்ப்பு , அரிசி பஞ்சம் பக்தவத்சலம் அரசின் மீது வெறுப்பு , பல தொழிலாளர் போராட்டங்கள் ,மேலும் 66ல் சாஸ்திரி இறந்து விட்டார். இந்திராவுடன் பகை .69ல் காங்கிரஸ் பிரிவு ...இவை அவரை வீழ்த்தியது ..
உண்மை அய்யா .. ஆனால் அவர் கட்சி ஆட்களே மதிய உணவு திட்டம் காமராஜரால் கொண்டு வரப்பட்டது என்று சொல்ல தயங்கும் போது நாம் என்ன சொல்வது??
//எம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவராகத்தான் இருக்கின்றார். ஏதாவது தவறாகச் சொன்னால் நம்மை அடித்தே கொன்று விடுவார்கள் போல.//
உண்மை ஜோதிஜி ...
அய்யா.. ..70களில் இருந்தே இதை போன்று பொருள்/பணம் கொடுக்கும் பழக்கம் உள்ளது...
வித்தியாசம் ஒன்றுதான்..அவை மிக .பெரிய அளவில் நடக்க வில்லை. மற்றும் ஊடகங்கள் அதை பற்றி பெரிய அளவில் எழுதவில்லை ..... இன்று மாறியுள்ளது....அவ்வளவே...
போன ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தல்...மறக்க முடியாதது !!!!!!!
நம்பிக்கை வைப்போம். மாற்றம் ஒன்றே மாறாதது. நன்றி எபினேசர்.
படித்தவர்களுக்குக்கூட குற்ற உணர்ச்சி என்பது இல்லை என்பது தான் எனக்கு வேதனையாக உள்ளது.
ரணமாக இருந்தால் சீக்கிரம் கொப்புளம் உடையப் போகின்றது என்று அர்த்தம்.
மற்ற மாநிலங்களில் எப்படி உள்ளது என்பதைப் பற்றி ஒரு பதிவு நீங்க எழுதலாமே?
Post a Comment