Wednesday, November 20, 2013

வாசித்ததும் (ரொம்பவே) யோசித்ததும் 2

எவராவது கணினி வழியே தங்கிலீஷ் ல் உரையாடத் தொடங்கினால் எனக்குத் தடுமாற்றமாகி விடும். அதனை வாசிப்பதென்பது என்னைப் பொறுத்த வரையிலும் நரகதண்டனைக்குச் சமமானது. தொடங்கும் பொழுதே சொல்லிவிடுவதுண்டு. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாமா? என்று. சிலரால் ஆங்கில வார்த்தைகளைக் கோர்க்க முடியாது. பலரால் தமிழில் தட்டெச்சுச் செய்யத் தெரியாது. திரிசங்கு சொர்க்கம் தான்.

தமிழ் மொழி குறித்து யோசிக்கும் பொழுது இப்போது என் நினைவில் எந்த ஆசிரியர்களும் நினைவில் வருவதில்லை. பாடங்களுக்கு அப்பால் எந்த எல்லையையும் அவர்கள் தாண்டியதில்லை. அவர்கள் மூலம் நான் எதையும் புதிதாகக் கற்றுக் கொண்டதில்லை. மதிப்பெண்களுக்குப் படித்த பல தமிழ் இலக்கணங்கள் கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் வாசித்த வாசிப்பு தான் இன்று வரையிலும் எழுத, வாசிக்க, யோசிக்க முடிகின்றது. வலைபதிவில் எழுத வந்து மூன்றாவது மாதம் தமிழ் மொழி குறித்து எழுதிய கட்டுரை இது.

ஈரவெங்காயம். 

மற்ற இன மக்களை விடத் தமிழர்களுக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் பல உண்டு. தமிழர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதில் முதன்மையானதும் முக்கியமானதும் விவாதிக்கத் தெரியாது.

காரணம் குறிப்பிட்ட விசயங்கள் குறித்து முழுமையான விபரங்கள் எதுவும் தெரியாமல் இருந்தாலும் கடைசியில் தனி மனித தாக்குதல்களில் இறங்கி விடுவது தான் வாடிக்கை. கடந்த 40 ஆண்டுகளில் தான் இந்த கலாச்சாரம் இங்கே வேகமாக பரவியது. இன்று இதுவே தான் கலாச்சாரமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் மட்டும் அரசியலில் நாகரிகம் என்பது அறவே வளராமல் போனதற்குக் காரணம் இந்தக் கட்டம் கட்டும் வேலை தான்.

எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன எழுத்துரு விவாதத்திற்கு வந்த அத்தனை எதிர்க்கருத்துக்களையும் கவனித்த போது ஐந்தில் ஒரு பங்கு அளவே அதன் சாதகப் பாதக அம்சங்களைப் பேசியது. மற்றவை எப்போதும் போலவே தமிழர்களின் தனிச்சிறப்பைக் காட்டியது.

அப்போது தான் இந்தக் கட்டுரை என் கண்ணில் பட்டது.

பிரச்சனைகளுக்காக முண்டாசு கட்டி புறப்பட்டவர்களைப் பற்றி நான் யோசித்த மாதிரியே இவரும் எழுதியுள்ளார். இந்தத் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.

"அச்சம் என்பது மடமையடா" என்று எம்.ஜி, ஆர் பாடிய பாடலில் மூலம் நாம் கேட்டு இருப்போம். ஆனால் இவரே "அச்சப்படாத வாலிப சங்க"த்தின் தலைவராகவே இருக்கின்றார். இவர் யாரென்று பழைய ஆட்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் சில மணி நேரம் ஒதுக்கி உள்ளே குதித்து விடுங்கள். முகமூடிகளைச் சிரித்துக் கொண்டே கிழித்துத் தோரணம் கட்டியுள்ளார்.

ஆடுறா ராஜா! போடறா பல்டி! 

நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த போது தொடக்கம் முதலே கலப்புச் சொற்களைத் தவிர்த்து வந்துள்ளேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக பல தரப்பட்ட ஆளுமைகளின் பதிவுகளை வாசிக்கும் போது தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக எழுத்துப்பிழைகள்.

இயல்பான தமிழ்ச்சொற்களில் பல கடந்த 20 வருடங்களில் தேவையற்றுப் போய்விட்டது. ஆனால் இன்று 90 சதவிகித பத்திரிக்கைகளில் தமிழ்ச் சொற்களை எழுதினால் வாசகர்களுக்குப் புரியாது என்ற நோக்கத்தில் சாலையில் சென்றான் என்பதைக் கூட ரோட்டில் சென்றான் என்று தான் தமிழ்ச்சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இயல்பான நடைமுறை கலப்புச் சொற்கள் என்பதற்கும் வலிய திணித்தல் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு பத்திரிக்கையில் பணியாற்றும் குறிப்பிட்ட நபர் செய்யும் அயோக்கியத்தனத்தாலும், அதைக் கண்டு கொள்ளாத நிர்வாகத்தாலும் அதுவே சரியான தமிழ் போலவே இன்று படிப்பவர்களால் வாசிக்கப்படுகின்றது.

காட்சி ஊடகங்கள் செய்யும் பொருப்பற்ற தனத்தினாலும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் மொழி சார்ந்த விபச்சார நடவடிக்கைகளால் கடந்த இருபது ஆண்டுகளில் பேச்சு மொழி வழக்கில் கூட நாகரிகம் என்ற பெயரில் நாதாரித்தனம் தான் மேலோங்கி உள்ளது.

ஆனால் நண்பர் சுடுதண்ணி எழுதியுள்ள 4 தமிழ் மீடியா வெளியிட்டு வரும் தொடரை படித்துப் பாருங்கள். தற்போதைய அறிவியலில் வளர்ந்த இணையம் குறித்து, உருவாகியுள்ள சவால்களைக் குறித்து இயல்பான தமிழிலில் எழுத முடியும் என்றதொரு சாதனை தான் இந்தத் தொடர்.

இணையம் வெல்வோம்



தொடர்புடைய பதிவுகள்

வாசித்ததும் யோசித்ததும் 1

சொல்ல மறந்த கதைகள்

சொல்ல மறந்த கதைகள் 2


நாம் எழுதுவது சரியா?


12 comments:

Raja said...

அண்ணா,
சுடுதண்ணி வலைப்பூவை அனைவருக்கும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி. அட்டகாசமான தொழ்நுட்ப பதிவர். அசாஞ்சே பற்றிய இவரது கட்டுரை மிக அருமையானது. எந்த ஒரு தொழ்நுட்ப விஷயத்தையும் மிக நகைச்சுவையோடு தருவதில் வல்லவர்.

"wanderer waves" அவர்களின் துணிச்சலும் அசாதரமானது. "சாந்தியும் சமாதானமும்" பிரச்சனயில் தன அவரை பற்றி தெரிய வந்தது. ரொம்பவும் நக்கலான மனிதர்

/ராஜா

”தளிர் சுரேஷ்” said...

தமிங்கிலீஷ் எனக்கும் புரிவதில்லை! நல்ல தள அறிமுகத்திற்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

சுடுதண்ணி வலைப்பூ - வித்தியாசமான தொழிற்நுட்ப தளம்... அறிமுகம் நன்று...

Amudhavan said...

\\மற்ற இன மக்களை விடத் தமிழர்களுக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் பல உண்டு. தமிழர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதில் முதன்மையானதும் முக்கியமானதும் விவாதிக்கத் தெரியாது.\\

ஜோதிஜி, தங்களின் இந்தக் கருத்து மிக அருமையான கருத்து. தமிழில் பல சுவையான இலக்கிய விவாதங்கள் எல்லாம் நடந்தேறியுள்ளன. நம் காலத்தில் என்றால், தமிழர்களிடம் தாலி கட்டும் வழக்கம் இருந்ததா? என்பது பற்றி கண்ணதாசனும் மபொசி அவர்களும் கலந்துகொண்ட விவாதத்தைச் சொல்லலாம். ஆனாலும் பொதுவாகப் பார்க்கும்போது நீங்கள் சொல்லும் கருத்து சரியானதே.
தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் திமுக பிளவுபடுவதற்கு முந்தைய காலகட்டம் வரையில் சரியான நாகரிகம்தான் கடைப்பிடிக்கப்பட்டது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்துதான் 'எல்லாமே' அதல பாதாளத்துக்குச் சரிந்துவிட்டது.

\\எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன எழுத்துரு விவாதத்திற்கு வந்த அத்தனை எதிர்க்கருத்துக்களையும் கவனித்த போது ஐந்தில் ஒரு பங்கு அளவே அதன் சாதகப் பாதக அம்சங்களைப் பேசியது. மற்றவை எப்போதும் போலவே தமிழர்களின் தனிச்சிறப்பைக் காட்டியது.\\
என்னால் உங்களுடைய இந்தக் கருத்தைத்தான் புரிந்துகொள்ள இயலவில்லை. ஒரு விவாதத்திற்குரிய பொருளாகத்தான் திரு ஜெயமோகன் அந்தக் கருத்தை வைத்தார் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்களை ஒரு அப்பாவி என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஜோதிஜி said...

சற்று நேரத்திற்கு முன்பு கூகுள் ப்ளஸ் ல் ஒரு நண்பர் பெட்ரோல் விலை வாசி உயரும் போது நாம் படும் கவலையில் ஒரு பங்கு கூட விவசாய பூமி விளை நிலமாக மாற்றப்படும் போது நாம் கவலைப்படுவதில்லை என்றார்.

அதற்கு மற்றொரு நண்பர் பின்வரும் இந்த தகவலை அவர் பங்குக்கு தெளிவாக சொல்லியுள்ளார்.

படித்துப் பாருங்க.
ஒரு குறுங்கணக்கு.

ஒரு குடும்பத்து வசிப்பிடத் தேவை 1 கிரவுண்ட் ~ 5 செண்ட்.
ஒரு ஏக்கரில் 20 குடும்பங்கள் வசிக்கலாம்.
இந்தியாவில் 120 கோடி மக்கள்.
குடும்பத்துக்கு 4 பேர்.
ஆக 30 கோடி குடும்பங்கள்.
இவர்களுக்கு தேவை 1.5 கோடி ஏக்கர் நிலம்.
இது சுமார் 60,000 சதுரக் கிலோமீட்டர்.
இந்தியாவின் விவசாய நிலப்பரப்பு 18 லட்சம் சதுர கிமீ.
இதில் 3.3% சதவீதம் எடுக்கப்பட்டாலே அத்தனை வசிப்பிடத் தேவைக்கும் போதுமானது(=60 ஆயிரம் சதுர கிமீ)

இந்தியாவில் முன்னெப்போதும் விட விளைச்சல் கூடிக்கொண்டே போகிறது. உணவு உபரியாக இருக்கிறது. அன்னதானத்துக்கு ஆளில்லை என்று ஆசானே அருளிவிட்டார். ஆகவே தமிழகத்தில் விளைநிலங்கள் வீட்டுமனையாவது குறித்து அஞ்சத் தேவையில்லை.

வேகமாக நகரமயமாகிக்கொண்டிருக்கும் மாநிலம். தனிநபர் வசிப்பிட பரப்புக் கூடிக்கொண்டே செல்லுதல் அறிவோம். எங்கே குடியிருக்க ஆள்வர வாய்ப்பிருக்கிறதோ, எங்கே விவசாயம் செய்ய ஆள் கிடைப்பதில்லையோ, எங்கே விவசாயம் வணிகரீதியாக தோல்வியடைந்து வருகிறதோ அங்கேதான் வீட்டுமனைகளாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.

தேவையில்லாத பூச்சாண்டிகளை விட்டொழிப்போம்.

நானே விவசாய பூமிகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் புதிய பொருளாதார ஒப்பந்தம் குறித்து எழுதி தான் இருக்கின்றேன்.

http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post_11.html#comment-form

நண்பர் எழுதிய கருத்தை படித்ததும் நான் இதன் சாதக பாதக அம்சங்களை இப்படி யோசிக்க முடியுமா? என்பதாக யோசிக்கின்றேன்.

மற்றபடி ஜெயமோகன் என்ன நோக்கத்தில் எழுதினார் என்பது போன்ற ஆராய்ச்சியை நான் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் மனதில் இது போன்ற ஒரு கருத்து தோன்ற அதை எழுதியுள்ளார். அவர் நினைத்ததை விட அதை ஒரு விவாத பொருளாக கொண்டு சென்றதும் தான் அதற்கு முக்கியத்துவம் கிடைத்தது என்பது தான் நான் சொல்ல வந்த கருத்து. அதையே தான் ஆடுறா ராஜா போடுடா பல்டி கட்டுரையில் அவரும் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்.

ஜோதிஜி said...

விட்டுப்போன மற்றொரு தகவல்.

நாம் படிக்கும் போது பள்ளியில் புரியாத மனதில் பதியாத ஆங்கில வார்த்தைகள் அப்படியே அந்த வார்த்தையை தமிழிலில் எழுதி வைத்து படிப்போம். நான் அவ்வாறு படித்துள்ளேன். ஆனால் அதே போல 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தங்கிலீஷ் என்றொரு கலாச்சாரத்தில்

Nallama

Naan Nalama Erukkuren? Neenga eppedi Erukkureenga?

இப்படி ஒரு மொழி தோன்றும் என்று எவராவது நினைத்துப் பார்த்து இருப்போமா?

இது குறித்து (அடுத்த பதிவில் ஒருவரைப்பற்றி எழுதப்போகும்) திருப்பூர் வந்திருந்த ஒருவருடன் அவர் சொன்னது சரியா தவறா? என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு.

வாய்ப்புண்டு.

ஆனால் இன்னும் 400 வருடங்களுக்குப் பின்பு உருவாகப் போகும் மாறுதல்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டுமே? இதை ஏன் இப்ப இந்த மாதிரி சொல்லி ஒரு சர்ச்சசைய உருவாக்க வேண்டும்? இது தேவையற்றது என்றார்.
காரணம் தொழில் நுட்பம் வளர வளர எது சந்தைக்கு தேவையோ எதன் மூலம் வருமானம் வருமோ? அதைத்தான் நிறுவனங்கள் முன் நிறுத்தும். நிறுவனங்களுக்கு மொழி ஆர்வம் முக்கியமல்ல. சந்தையில் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம். இது போன்ற சமயங்களில் தான் மொழிகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இருக்கும் என்றார்.

எனக்கே இந்த உரையாடல்தான் சில கதவுகளைத் திறந்தது. மேற்கொண்டு இது குறித்து நீங்கள் சொன்னாலும் தெரிந்து கொள்ள ஆவல்.

வலிப்போக்கன் said...
This comment has been removed by the author.
வலிப்போக்கன் said...

தெரிந்திருக்கிற தமிழும் தெரியாமல் போய்விடக்கூடாதென்ற காரணத்தால்,தங்கிலீஸ. பக்கமே தலை வைத்துப்படப்பதில்லை,சான்.

phantom363 said...

சுடுதண்ணீ ன்னு படிச்சபோது தமிழ் வாத்தியார் நெனவு வந்தது. நாங்க பாலக்காடு தமிழங்க. வாத்தியார் சொல்லுவர் - தண்ணீர் அல்லது வெந்நீர்னு சொல்லணும்னு :). I too have a problem reading english in roman script...btw thank you for reference to the சுடுதண்ணி website. very interesting. !!.. rajamani

டிபிஆர்.ஜோசப் said...

தொழில் தொடர்பு மற்றும் கணினி தொடர்பான தகவல்களை தமிழில் எழுதுவதென்பது கடினமான செயல். அதை முதலில் முயற்சி செய்தது சுஜாதா அவர்கள். ஆனால் அவருடைய தமிழை சுத்தமான அல்லது அழகான தமிழ் என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள சுடுதண்ணி தளம் அதில் வெற்றிக்கண்டுள்ளதை மறுக்க முடியாது. முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது அந்த தளம். பகிர்வுக்கு நன்றி.

saidaiazeez.blogspot.in said...

//தமிழர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதில் முதன்மையானதும் முக்கியமானதும் விவாதிக்கத் தெரியாது//
என்னங்க அப்படி சொல்லீட்டீங்க... பட்டி மன்றம் எனும் ஒரு அருமையான தொகுப்பு நம் மொழியில் மட்டுமே இருக்கும் ஒரு அதிசயமாகும். இதில் ஒரே விஷயத்தை ஆம் என்றும் இல்லை என்றும் வாதாடுகிறோமே!?
//காட்சி ஊடகங்கள் செய்யும் பொறுப்பற்ற தனத்தினாலும்//
இதற்கு முழு முதல் பொருப்பு நமது டமில் வாட்ச்மேன்தான்.

கிரி said...

"இன்று 90 சதவிகித பத்திரிக்கைகளில் தமிழ்ச் சொற்களை எழுதினால் வாசகர்களுக்குப் புரியாது என்ற நோக்கத்தில் சாலையில் சென்றான் என்பதைக் கூட ரோட்டில் சென்றான் என்று தான் தமிழ்ச்சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்."

ஜோதிஜி முன்னரே கூறியபடி இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். விரைவில் எழுத வேண்டும்.

ரோடு - பஸ் போன்றவற்றை எல்லாம் நிச்சயம் சகிக்கவே முடியலை. இதைக் கூடவா மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்! பேருந்து என்று சொன்னால் புரியாதா...! செம்ம கடுப்பாகிறது.