Sunday, September 15, 2013

கலைஞர் -- கேள்வி பதில்

மற்ற மாவட்டங்களில் எப்படியோ?திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பத்திரிக்கைகளில் விளம்பரங்களுக்கு பஞ்சமில்லை. எதற்கெடுத்தாலும் விளம்பரம் எல்லாவற்றுக்கும் விளம்பரம் என்கிற காலச்சக்கரத்தில் நாம் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்.  

சமீப காலமாக கட்டுமானத்துறை, நகை, ஜவுளி மற்றும் கல்லூரிகள் சார்ந்த முழுப்பக்க விளம்பரங்களை பார்க்கும் பொழுதெல்லாம் இதற்கு என்ன செலவாகும் என்பதை என்னைப் போல நீங்களும் யூகித்து இருக்கக்கூடும். 

சமீபத்தில் நான் படித்த கலைஞர் கேள்வி பதிலில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.  

இது திமுக, அதிமுக லாவணி கச்சேரியாக பார்த்தாலும் சரி அல்லது நம்ம வரிப்பணம் எப்படியெல்லாம் சூறையாடி, பத்திரிக்கையில் விளம்பரம் செய்து தாங்கள் செய்து கொண்டிருக்கும் மக்கள் 'சேவை'களை மக்களுக்கு புரிய வைக்கின்றார்கள் என்பதாக எடுத்துக் கொண்டாலும் சரி.

(ஊடகத்துறையில் இருப்பவர்கள் தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரத்திற்கு கொடுக்கப்படும் விளம்பர கட்டணத்தை பின்னூட்டத்தில் தெரிவித்தால் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும்)

கலைஞர் கேள்வி பதில்

கேள்வி :- அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளை யெல்லாம் மறைத்து, தமிழ்நாட்டு நாளேடுகள் சில ஒரேயடியாகப் புகழ்வதற்குக் காரணம் விளம்பரங்கள் தான் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?

பதில் :- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எவ்வளவு விளம்பரங்கள் அரசின் சார்பில் தரப்பட்டுள்ளன என்பதைப் பற்றி ஒரு விவரம் கூறுகிறேன்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவையொட்டி அரசுக்கு வேண்டிய நாளேடுகளில் முழுப் பக்க விளம்பரம் தரப்பட்டது. மறைந்த ராணுவ வீரர்களுக்கு அதே நாளில் முதலமைச்சர் இரண்டு நிமிடம் மலரஞ்சலி செலுத்தினார் அல்லவா; அதற்காக அனைத்து நாளேடுகளுக்கும் அரைப் பக்க விளம்பரங்கள்.

17ஆம் தேதி நடைபெற்ற சென்னைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவினை யொட்டி அனைத்து நாளேடுகளிலும் முழுப் பக்க விளம்பரங்கள் - அத்துடன் நிறுத்தாமல் அதே விழாவில் நடைபெற்ற தோரணவாயில் திறப்புக்காகத் தனியாக அரைப்பக்க விளம்பரங்கள் (சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பெயரிலே வெளிவந்தன).

அடுத்து 20ஆம் தேதிய நாளேடுகளில் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவினையொட்டி அனைத்து நாளேடுகளிலும் முழுப் பக்க விளம்பரங்கள்.

அதனையடுத்து 22ஆம் தேதி திருவண்ணாமலை புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவிற்காக அனைத்து நாளேடுகளுக்கும் முழுப் பக்க விளம்பரங்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் ஆங்கில நாளேடுகள் அனைத்திலும் முதல் பக்கத்திலேயே இந்த விளம்பரங்கள். அதுமாத்திரமல்ல;

அதே நாளில், திருவரங்கம் தேசிய சட்டப் பள்ளித் திறப்பு விழாவிற்காகத் தனியாக முழுப் பக்க விளம் பரங்கள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே முதலமைச்சர் காணொலி வாயிலாகத் திறந்து வைத்த நிகழ்ச்சிகள். முதல் பக்கத்திலே திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி விளம்பரம் - கடைசிப் பக்கத்திலே சட்டப் பள்ளித் திறப்பு விழா விளம்பரம்.

அடுத்து 23ஆம் தேதிய நாளேடுகளில் காவல் துறையினருக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவிற்காக முழுப் பக்க விளம் பரங்கள்.

இவை அத்தனையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் தரப்பட்ட அரசு விளம்பரங்கள் ஆகும். 

இந்த விளம்பரங்களுக்காக அரசு சார்பில் செலவழித் துள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

இந்து  நாளிதழில் முழுப் பக்க விளம்பரம் வெளியிட வேண்டுமேயானால் அதற்குக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? 26 லட்சத்து 38 ஆயிரத்து 209 ரூபாய்.

இந்த முழுப் பக்க விளம்பரத்தை முதல் பக்கத்திலே வெளியிடுவதென்றால் இரண்டு மடங்கு தொகை செலுத்த வேண்டும். அதாவது 52 லட்சத்து 76 ஆயிரத்து 419 ரூபாய்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முழுப் பக்க விளம்பரத் திற்கு கட்டணம் 31 லட்சத்து 67 ஆயிரத்து 736 ரூபாய்.

டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு முழுப் பக்க விளம்பரக் கட்டணம் 17 லட்சத்து
36 ஆயிரத்து 582 ரூபாய். 

டெக்கான் கிரானிகல் இதழுக்கு விளம்பரக் கட்டணம் 12 இலட்சத்து 4 ஆயிரத்து 632 ரூபாய்.

தினத்தந்தி இதழுக்கு முழுப் பக்க விளம்பரக் கட்டணம் 15 லட்சத்து  27 ஆயிரத்து 240 ரூபாய். "

தினமணி இதழுக்கு 10 லட்சத்து 36 ஆயிரத்து 464 ரூபாய்.

இந்த முழுப் பக்க விளம்பரத்தையே முதல் பக்கத்தில் வெளியிடுவதென்றால் இரண்டு மடங்கு கட்டணம் தரப்பட வேண்டும். 

ஆனால் இந்த இதழ்கள் சார்பாக இரண்டு மடங்கு கட்டணம் தர வேண்டாம், முழுப் பக்க விளம்பரம் கொடுத்தாலேபோதும், முதல் பக்கத்தில் அதே கட்டணத்திற்கு வெளியிட்டு விடுகிறோம் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார்களாம்.

கடந்த ஒரு வார காலத்தில் முக்கிய நாளேடுகளுக்கு மட்டும் தரப்பட்ட விளம்பரத்திற்காக அரசு தரப்போகின்ற தொகை எவ்வளவு தெரியுமா?

இந்து நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான (6 முழுப் பக்கம், 2 அரைப் பக்கம், 1 முதல் பக்கம்) கட்டணம் மட்டும் 2 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 664 ரூபாய்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்"நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 2 கோடியே 53 லட்சத்து 41 ஆயிரத்து 888 ரூபாய்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம்

1 கோடியே 38 லட்சத்து 92 ஆயிரத்து 736 ரூபாய்.

டெக்கான் கிரானிகல்"நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 96 லட்சத்து 37 ஆயிரத்து 56 ரூபாய்.

தினத்தந்தி நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 1 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 920 ரூபாய்.

தினமணி"நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 82 லட்சத்து 91 ஆயிரத்து 712 ரூபாய்.

நமது எம்.ஜி.ஆர்.நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 84 லட்சத்து 56 ஆயிரத்து 448 ரூபாய்.

மாலை முரசு நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 1 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 400 ரூபாய்.

மக்கள் குரல் நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 84 லட்சத்து 56 ஆயிரத்து 448 ரூபாய்.

தினபூமி (இந்த நாளேட்டை யாராவது பார்த்திருக்கிறீர்களா?) நாளேட்டில் கடந்த வாரத்தில் தரப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் 84 லட்சத்து 56 ஆயிரத்து 448 ரூபாய்.

இந்த இதழ்களைத் தவிர ஜனசக்தி, தீக்கதிர், மாலைமலர், எகானமிக் டைம்ஸ் போன்ற ஏடுகளுக்கும் விளம்பரங்கள் தரப்படுகின்றன. அவைகளை நான் கணக்கிலே சேர்க்கவில்லை.

ஒட்டுமொத்தமாக நான் மேலே குறிப்பிட்ட இந்த நாளேடுகளில் கடந்த வாரத்தில் 7 நாட்களில் வெளி வந்த விளம்பரங்களுக்காக மட்டும் அரசு தர வேண்டிய விளம்பரத் தொகை 12 கோடியே 72 லட்சத்து 46 ஆயிரத்து 720 ரூபாய்.

இந்த விளம்பரக் கட்டணம் பற்றிய விவரத்தில் ஏதாவது தவறு இருக்குமென்றால், அதைப் பற்றி தமிழக அரசே உண்மையான விவரம் என்ன என்பதை வெளிப்படையாக அரசு செய்தி வெளியீட்டின் மூலமாகத் தெரிவித்தால் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

2013-2014ஆம் ஆண்டுக்கு செய்தி மற்றும் விளம்பரத்திற்கான நிதி ஒதுக்கீடே 49 கோடியே  45 லட்சத்து 91ஆயிரம் ரூபாய்தான்.

ஆனால் ஒரு வார கால விளம்பரத்திற்கே 12 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-2013ஆம் ஆண்டிலே கூட இந்தத் துறைக் காக 46 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்தான்.

ஆனால் இது திருத்திய மதிப்பீட்டில் 69 கோடியே 64 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இந்த ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் எவ்வளவு உயரப் போகிறதோ?

விளம்பரத்திற்காக அனைத்துத் துறை களுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு என்று பார்த்தால் 2009-2010ஆம் ஆண்டுக்கு 37.48 கோடி ரூபாய்; 2010-2011ஆம் ஆண்டுக்கு 45.67 கோடி ரூபாய்; 2011-2012ஆம் ஆண்டுக்கு 39.97 கோடி ரூபாய். 2012-2013ஆம் ஆண்டுக்கு ஒதுக்கீடு 35.44 கோடி ரூபாய். 

ஆனால் 19 துறைகளின் சார்பில் ஓராண்டு சாதனை குறித்த ஒரு நாள் விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டது மாத்திரம் 40.98 கோடி ரூபாய். 

இதுவே நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைதானே?

செய்தித் துறை சார்பில் விளம்பரம் செய்ய பொதுவாக ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை 12 கோடி ரூபாய்தான். ஆனால் ஓராண்டு சாதனை விளம்பரம், இந்தத் துறையின் சார்பில் மட்டும் 16 கோடியே 64 லட்சம் ரூபாய்.

ஒரு வார காலத்து விளம்பரத்திற்கே இவ்வளவு தொகை கிடைக்கிறது என்றால் எந்தப் பத்திரிகையாவது இதை இழந்து விட்டு அரசுக்கு எதிராக எழுதுவார்களா?

அரசை விமர்சனம் செய்வார்களா?

ஜெயலலிதாவைப் போற்றிப் புகழ்ந்தும்; எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்தும் தானே எழுதுவார்கள்! 

இது மறைமுகமாக அந்த நாளேடுகளுக்கு அரசே தருகின்ற அன்பளிப்புக் கட்டணமா? விளம்பரக் கட்டணமா? அல்லது.... அல்லது .....???

12 comments:

'பரிவை' சே.குமார் said...

போட்டுத்தாக்கு...
விஜயகாந்த் மாதிரி தலைவர் புள்ளி விவரத்தில் கலக்குறாரே.... ஆமா இவங்க ஆட்சியைல் தினகரன், தமிழ்முரசெல்ல்லாம் விளம்பரமா வந்துச்சே.... அப்ப அரசுப் பணம் செல்வாகலையா...

ரெண்டுமே நாட்டைக்கெடுக்க வந்ததுதானே அண்ணா...

Yaathoramani.blogspot.com said...

கடைசியில் சொல்லாமல் விட்ட
அல்லதுதான் உண்மை
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு
விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

மன மயக்கமும் மதி கலக்கமும் ஒருங்கே வருதே:(

Unknown said...

இதுபோல எல்லா மத்திய மாநில அரசு துறைகளில் நுழைந்து பார்த்தால் நம்முடைய வரிப்பணம் எவ்வளவு உதாசீனமாக போகிற போக்கில் வீணடிக்கிறார்கள் என்று தெரிய வரும் .வரி செலுத்தி ,வோட்டு போட்டு,இவர்களுக்கு பயந்து வாய் திறக்காமல் அடிமையாக வாழ்ந்து(இல்லை அழிந்து),இவர்கள் சொல்கிற அபத்தங்களை நம்பி ,இந்த சொரணை இல்லாத சமூகத்தில் வாழ்வதை விட !!!!! எப்படி மனசாட்சி இல்லாமல் மக்களை ஆள்கிறார்கள் .இவர்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது.நான் மற்றவரிடம் பேசுவதையே விட்டு விட்டேன் ,கடையில் சில பொருட்கள் வாங்குவதை தவிர்த்து.இசையும், இணையமுமே இப்போது என்னோட இயக்கு சக்தியாக இருக்கிறது .நீங்கள் இந்த மாதிரி பதிவு எழுதி வசிக்க வைத்து ,யோசிக்க வைத்து தனி மரம் ஆக்கி விடாதீர்கள்.எனவே அறியாமையே நல்ல அறிவுத்தனம் இந்த நாட்டில் வாழ்வதற்கு .உங்கள் பதிவு தலைப்பில் (வாசிக்க மட்டும்,யோசிக்க அல்ல) என்று WARNING CAPTION வைப்பது நல்லது வரும் நாட்களில் வசவுகளில் இருந்து விலகி இருக்க .

”தளிர் சுரேஷ்” said...

மயக்கமடைய மட்டுமல்ல! மலைக்கவும் வைக்கிறது! மக்களின் வரிப்பணம் எவ்வளவு வீணாகிறது! பகிர்வுக்கு நன்றி!

ezhil said...

இவர்கள் ஆட்சியிலும் நடந்தது தானே... அவரைத் தாக்கும்போது இவர்கள் செய்ததும் வெளிவரத்தான் செய்கிறது...மொத்தத்தில் உழைக்கும் மக்கள் பணம் எங்கெங்கோ வீணாகிறது...

எம்.ஞானசேகரன் said...

வயிறு எரிகிறது!? என்னத்தைச் சொல்ல!

thangam said...

Mikavum vethanaiyaka irukku

mukoes said...

Oru RTI pottu details vanguna??

ஜோதிஜி said...

உங்கள் ஆழ்ந்த வாசிப்பும் யோசிப்பும் ஆச்சரியத்தை தந்தது.

Anand said...

ஒரு வருடம் சம்பளமாக 34 கோடி ருபாய் தரப்பட்ட, மக்கள் நலப்பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டார்கள்.

Amudhavan said...

எது எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் அதற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை மட்டும் தூக்கி எறிந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் - என்பது ஒரு 'டைப்பான' சூத்திரம். அதைத் தமிழ்நாட்டு அரசியலில் துவக்கிவைத்தவர் எம்ஜிஆர். அவர் வழிவந்தவர்களால் அது அவரை விடவும் அதிகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.