சென்ற வருடம் திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியில் வழங்கப்பட்ட ஒரு காகிதத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய வாலில் தீ என்றொரு கவிதை இருந்தது. அந்த கவிதையை தீக்கதிர் 28.09.2012 இதழிலில் வெளியிட்டு இருந்தார்கள். பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த கவிதை கண்ணில் பட்டது. இயற்கை, வெளிநாட்டு முதலீடு, தற்போதைய இந்தியா என்று பலதளங்களில் பயணிக்கும் இந்த அருமையான கவிதையை கமல்ஹாசன் தனது முகப்பு பக்கத்தில் பதிந்துள்ளார் என்று போட்டுருந்தது.
அங்கே சென்று பார்த்த போது அங்கே கவிதையாக இல்லாமல் பத்தியாக இருந்தது. பல மாறுதல்களுடன் இருந்தது. நிச்சயம் இது பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும் என்பதால் இந்த கவிதையை இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.
ஒரு கடும் வேனல்கால மாலைப் பொழுதில்
நதிக்கரையின் முன்பு யாரோ தோண்டி வைத்திருந்த
ஊன்றுக் குழியை நோக்கியவாறு நான் நிற்கின்றேன்.
குனிந்து மண்டியிட்டு அந்த குழியிலிருந்து
தாகத்தோடு ஐந்து கை மண்ணை நான் அள்ளி
எடுத்தேன்.
மூன்றாவது தடவையிலேயே எனது கை சிறிதாக நனைந்தது.
ஆறு, ஏழு, எட்டு தண்ணீர் எட்டிப் பார்க்கிறது.
தாகத்தால் வறண்ட எனது முகத்தை பிரதிபலித்துக் கொண்டு
எனது தாகத்தை தணிக்கிறது.
மூக்கின் நுனியில் ஒட்டிய நனைந்த மணலையும்
எனது சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும்
தட்டி விட்டு நானும் எழுந்து நிற்கின்றேன்.
கனவு கலைந்தது. எல்லாம் கனவு.
ஒரு பரமக்குடியகாரனாகிய எனது அறிவுக்கு
எட்டிய வரை
இது போன்றவொரு சம்பவம் இப்பொழுது நடைபெற
எந்தவித சாத்தியமில்லை.
பரமக்குடியைக் கடந்து செல்லும் ஆற்றின் கரைகளுக்கு
மூடுவிழா நடந்தப்பட்டு பல மாதங்கள்
ஆகிவிட்டன.
அருகாமையில் இருந்த வீடுகள் பலவும்
திருடர்களைப் போல தங்களது இடம் விட்டு நகர்ந்து
நதிக்கரை ஓரத்தில் புதிய வடிவில்
தங்களது கழிவுகளை ஆற்றில் கலக்கத்துவங்கிய
ஓன்றிரண்டு மாதங்கள் ஆகி விட்டன.
பன்றிகளைப் போலவே
மனிதர்களாகிய நாமும்
அனைத்துண்ணிகள்....
ஆகிப்போனோம்....
கழிவுகளையும் நச்சுப்
பொருட்களையும்
நமது உணவாக
மாற்றிவிட்டு
இயற்கை நமக்களித்த உணவுகளை
நாடு கடத்திக் கொண்டிருக்கின்றோம் நாம் இப்போது.
இங்கு கூறியதற்கும் வால்மார்ட் இந்தியாவில்
பிரவேசிப்பதற்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்டால்
அது குறித்து விரிவாக விவாதிக்க
நிறைய இந்தியர்கள் காத்திருக்கின்றார்கள்.
தமிழகத்தின் வாசல்கதவை தற்காலிகமாக
முதல்வர் அடைத்து வைத்திருக்கின்றார்...
அதற்காக என்னைப் போல உள்ளவர்களின்
தற்காலிக நன்றி முதல்வருக்கு உண்டு.
முதல்வர் தனது நிலையில் உறுதியாக இருந்தால்
நாங்கள் என்றென்றும் அவருக்குக்
கடமைபட்டவர்களாக இருப்போம்.
மேலும் வரும் தலைமுறையும் முதல்வருக்கு
நன்றிக் கடன் பட்டிருக்கும்.
இந்த வால்மார்ட் என்ன செய்யும் என்று கருதி
நீங்கள் இவ்வளவு அச்சப்படுகிறீர்கள்
என்று கேட்டால்
வால்மார்ட் என்ற அமெரிக்க பன்னாட்டுக் குத்தகை
பாவம் கிராமத்தானையும்
தங்களது உபயோகிப்பாளனாக மாற்றிவிடும்.
அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது
கழுத்தில் கை வைத்து தங்களது
பணப்பெட்டியில் காசு போடச் செய்யும்.
பன நொங்கு குடிக்கும் என்னைப் போன்ற
பழைய ஆட்களுக்கு பாட்டிலில்
பன நொங்கை விற்கும்
இந்த வால்மார்ட்.............
ஒன்றும் சொல்ல முடியாது.
மீனுக்கு வாலும் பாம்பிற்குத் தலையும்
காட்டி மயக்கும் தந்திரத்தைக் கற்ற
இத்தகைய அமெரிக்க வியாபாரக் குத்தகைகள்
கிராமோத்யோக் பவனின் காந்தியக்
கொள்கைகளையும்
அனுமதியில்லாமல் அபகரிக்கும்.
நெல்,கப்பைக் கிழங்கு என்னவென்று தெரியாத
இந்தியக் குழந்தைகள்
பீட்சா தான் நமது பராம்பரிய உணவு
என்று நினைத்துக் கொள்வார்கள்.
நினைத்துக் கொள்ளட்டும்.
இதில் என்ன தவறு என்று
சிலர் கேட்கக்கூடும்.
சிந்தித்துப் பார்த்தால் ஒரு நஷ்டமும் இல்லை.
கம்யூனிசமும், ஜனநாயகமும் இறந்து போனாலும்
நெல்லும் கப்பைக்கிழங்கும் உயிருடன் இருக்கும்.
ரோம் சாம்ராஜ்யம் உண்டாவதற்கு
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,
மகாவீரர், தீர்த்தங்கரர் ஆகியோருக்கு முந்தைய
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இந்த தேசத்தை பசுமை படரச் செய்த
மண்ணும் மரங்களும் இறக்காது.
மனிதர்களெல்லாம் இறந்து
மண்ணுக்குள் புதைந்து பலர்
நூற்றாண்டுகளில் மரங்கள்
உயிர்த்தெழுந்து காடாகும்.
நதிக்கரைகளில் இருக்கும்
இன்றைய வீடுகளெல்லாம்
மண்ணோடு புதைந்து புதிய காடு வளர்ந்து
நதிக்கரையாகும்.
இவையெல்லாம் முன்பு மனிதர்களும்
வீடுகளும் நிறைந்திருந்த இடங்கள் தான் என்று
நினைத்துப் பார்க்கக்கூட ஒரு ஜீவனும் இருக்காது.
நாம் அழிவோம். ஆனால் உலகம் அழியாது.
நாம் உலகின் அச்சாணி அல்ல.
சுழலும் அந்த சக்கரத்தின்
சரித்திரப் புத்தகத்தில் வரும்
ஒரு சிறு வாக்கியத்தின் இறுதியில் வரும்
ஒரு சிறு புள்ளி மட்டுமே.
நடிகர் கமல்ஹாசன்
இன்று மாறிய கலாச்சாரத்தில் வயதான பெற்றோர்களுகளின் நிலையை பழனிச்சாமி என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். கடந்த ஜுலை மாதத்தில் எனது கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து கொண்ட இந்த கவிதை ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாக இருப்பதால் படத்துடன் அந்த கவிதை இங்கே.
ஆசையாய் பெயரிட்டு
மெல்ல நடை பழக வைத்து
சிந்திய சோற்று பருக்கைகளை
சிரித்தவாறு சாப்பிட்டு
"கக்கா" வை மிதிக்காதே என்று
அதை கையினால் எடுத்ததும்
பல முறை தூக்கத்தை
கெடுத்துக் கொண்டு
நெஞ்சின் மேல் தாலாட்டியதையும்
பள்ளியில் சேர்பதற்கு
பல மணி நேரம்
வரிசையில் நின்றதும்
மானத்தை விற்று
கடன் வாங்கி
இரு சக்கர வாகனம்
வாங்கி கொடுத்தும்
தினமும் துடைத்து அதற்கு
பெட்ரோல் வாங்க காசு கொடுத்ததும்
இருந்த நிலத்தை விற்று
கல்லூரிக்கு அனுப்பியதும்
கண் பார்வை மங்கிய பின்னும்
அதிகாலை எழுந்து
பால் வாங்கி வந்ததும்
இல்லாத பரிச்சைக்கு பணம் கொடுத்ததும்
வேலைக்கு சேர்வதற்கு
வீட்டை வித்து பணம் கொடுத்ததும்
தலைக்கு மேல் கடனை வாங்கி
கல்யாணம் செய்து வைத்ததும்
சம்பளம் இல்லா வேலைக்காரனாய்
அனு தினமும் உழைத்ததும்
கொஞ்சம் கூட நினைவில் இல்லை
உன்னை முதியோர் இல்லத்தில்
ஓர் அகதியாய் விட்டு விட்டு
வந்த பின்னும் ....
எப்போதும் ரசிக்கக்கூடிய என் கணினியில் வால்பேப்பராக இருக்கும் படம்.
நம் இந்திய பொருளாதார மேதைகளின் மூலம் நாம் பெற்ற பலன்கள் பல இருந்தாலும் இந்த ஒரு படம் சொல்லும் செய்திகள் ஏராளம்.
6 comments:
வரிகள் ஒவ்வொன்றும் உண்மை - மனதை கலங்க வைத்ததும்...
கவிதைகள் இரண்டும் அருமை...
பறையடிக்கும் போட்டோ கலக்கல்...
கார்ட்டூன் அருமை...
மொத்தத்தில் கலக்கல் பகிர்வு அண்ணா...
Arumai. Sathi
பன்றிகளைப் போலவே
மனிதர்களாகிய நாமும்
அனைத்துண்ணிகள்....
ஆகிப்போனோம்....
கமல் இன்னொரு கவிதையில்
எல்லோர்குள்ளும் மலம்
இருக்கத்தான் செய்கிறது
என்று எழுதி இருப்பார்
யதார்த்தத்தை விமர்சிப்பதில்
கமல் கைதேர்ந்தவர்.
கமலின் கவிதை அந்தச் சமயத்தில் முக நூலில் படித்திருந்தேன்...முதியோர் இல்லக் கவிதை இன்றைய வாழ்வின் நிதர்சனம் ..தப்பாட்டப் புகைப்படம் அருமை...
மிக அருமையான கவிதைகள். கமலுக்குள் ஒரு மாகா கவிஞன்!
Post a Comment