Saturday, September 14, 2013

இந்தியா 2013 - தங்க மீன்கள்

தங்க மீனகள் 

இன்று ரசனை மாறிவிட்டது என்பவர்களுக்கும், ரசிப்பதற்கான எல்லை விரிவடைந்து விட்டது என்று சொல்பவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் தங்கமீன்கள்.

எது ரசனை என்பதே தெரியாமல், ரசிப்பதன் ருசியும் புரியாமல் வாழும் கூட்டத்தில் இது போன்ற படத்தை எடுத்த இயக்குநர் ராம் தனித்துவம் பெறுகின்றார்.

ரசிக்கத் தெரியாமல் ஆர்வமாய் டூரிங் டாக்சியில் சுற்றிலும் கட்டப்பட்டு வைத்திருந்த கீற்றுக்களை பிய்த்துக் கொண்டு திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து பார்த்த படங்களும், நான் இவரின் ரசிக குஞ்சு என்று சொல்லிக் கொண்டு வளர்ந்த பருவத்தில் பார்த்த படங்களும் இப்போது எதுவுமே என் நினைவில் இல்லை.  

என் கற்பனைகளை வளர்த்தவர்களுக்கு வயதாகி விட்டது. நம் நிஜ வாழ்க்கை கற்றுத்தந்துள்ள ரசனைகளும் மாறிவிட்டது. ஆனாலும் ஆழத்தில் இருக்கும் மாறாத கிராமத்து வாழ்க்கையின் மிச்சம் மீதியை சுரண்டிப்பார்க்க வைத்த படம் தான் தங்க மீன்கள்.

தொலைக்காட்சி, இணையம் போன்ற அனைத்தும் பொழுது போக்க மட்டுமே என்று கங்கணம் கட்டி ஒரு சாரார் காசு பார்க்க மட்டுமே என்று மாற்றி விட நம் மொத்த சிந்தனைகளும் மழுங்கடிக்கப்பட்டு விட்டாலும் மிச்சம் மீதி இருக்கத் தான் செய்கின்றது என்பதை  தங்க மீன்கள் படம் பார்த்த போது உணர முடிந்தது.   


படம் பார்த்து விட்டு இரண்டு நாட்களுக்கு மேல் மனம் முழுக்க பாரமாய், வெளியே சொல்ல முடியா துயரத்துடன் திரும்பத் திரும்ப அந்த படத்தில் வந்த ஒவ்வொரு காட்சியும் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.  காரணம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை எவரோ ஒருவர் நமக்குத் தெரியாமல் படமாக்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும் உள்ளது.

காகிதம் தான் என்பதற்காக எவரும் பணத்தை மதிக்காமல் இருக்கின்றார்களா? என்று எவரோ எழுதிய வார்த்தைகளை படிக்கும் போது இயல்பாகத்தான் உள்ளது.  ஆனால் தற்போது காகிதம் தரும் வாய்ப்பு, அங்கீகாரம், வசதிகள் என அனைத்தும் தான் நம்மை வாழவைக்கின்றது.  தினந்தோறும் இடைவிடாது ஓடவைத்துக் கொண்டும் இருக்கின்றது.

பிரியங்கள் பின்னுக்குத் தள்ளி, பிடித்தமானவர்களின் எண்ணங்களும் மாறிப்போய்விட எப்படி வாழ்வது? எதை நோக்கி போவது? என்ற குழப்பங்கள் அலையடித்துக் கொண்டே எனக்காக கொஞ்சம், என் மனைவிக்காக, குழந்தைகளுக்காக, உறவினர்களுக்காக என்று மாறி மாறி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு இந்த வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நமக்கு உணர்த்துகின்றது. 

நம் இயல்பான விருப்பங்களுக்கும் எதார்த்த உலகத்திற்கும் உண்டான வாழ்வியலை, நீண்ட நாளைக்குப் பிறகு அப்படமாக உணர்த்திய படம். ஒரு புத்தகம் படிக்கும் போது என்ன மாதிரியான உணர்வுகள், கற்பனைகள் நமக்குள் உருவாகுமோ அத்தனை உணர்ச்சிக்குவியலையும் தங்கமீன்கள் தந்தது.

கஷ்டமான விசயங்களை நான் விரும்பி பார்க்க மாட்டேன். மனப் பாரத்தை அதிகமாக்கி விடும் என்று சொல்பவர்கள் இந்த படத்தை அவசியம் பாருங்கள். உங்களின் உண்மையான முகத்தை திரையில் பார்க்க முடியும்.

இருட்டுக்குள் வாழ விரும்பும் பறவைகள் வெளிச்சத்தைக் கண்டதும் மிரண்டு சப்தமிடுமே அதைப் போல உங்கள் மனம் கூக்குரலிடும்.

மதிப்பெண்கள் தேவையில்லாத மகத்தான படம்.

இந்தியா 2013

இந்தியாவும் ஒரு தங்க மீன் தான்.  

மாய மான் வேட்டை போல இந்தியாவை சந்தையாக வைத்துக் கொண்டு உள்ளே வரும் கூட்டமும், உழைப்பவர்கள் ஒரு பக்கமும் அதை சுரண்ட கற்றுக் கொண்டவர்கள் வளர்ந்த வளர்ச்சியில் இன்று இந்தியா என்பது தங்கமீன் போல பளபளப்பாக ஒளிர்கின்றது.  

இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு நம்பிக்கை இருக்க, அதுவே அவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. வேட்டைக்குச் செல்வதைப் போல இங்கு அனைவருக்கும் ஒரு லட்சியம் உண்டு. படித்தேன். இன்று வளர்ந்தேன் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் ஒரு பக்கம்.

அனுசரிக்க கற்றுக் கொண்டேன். அளவில்லாத செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றேன் என்பவர்களும் தரும் நம்பிக்கை வார்த்தைகள் எதுவும் சாதாரண மக்களுக்கு புரியப்போவதில்லை. 

புரியாமல் அவர்கள் எப்போதும் போல இயல்பான வாழ்க்கை வாழும் வரையிலும் இந்த இந்தியாவில் எந்த மாற்றமும் நிகழப்போவதும் இல்லை.

120 கோடி மக்களின் கனவு மீனைப் பற்றி பிபிசி ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளார்கள்.

இந்தியா மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கைகளுக்கும், உண்மையான இந்தியா எப்படி உள்ளது என்பதையும் உங்களுக்கு புரியவைக்கும்.  

பழைய வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டம் முக்கியம் தானே?

காரணம் எதார்த்த வாழ்க்கை வாழ்ந்து காலம் முழுக்க வாய்க்கும், வயிற்றுக்கும் என வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும், திடீர் வளர்ச்சியில் எட்டிப்பிடிக்க முடியாத பணக்காரர்களாக மாறிப்போனவர்களும் வாழும் இந்த பூமியில் சாலையோரத்தில் வசிக்கும் ஒரு பெண் அழகான ஆங்கிலத்தில் சொன்ன வாசகம்.

"என்ன செய்வது? பொருளாதார மாற்றங்கள் பணக்காரர்களை மேலும் பணக்காரனாக மாற்றுகின்றது. எங்கள் வாழ்க்கை இப்படித்தான்.  கழிப்பறை அதோ தெரிகின்றது பாருங்கள்.  இரண்டு ரூபாய் கொடுத்து காலையில் சீக்கிரம் போய்விட்டு வந்து விட்டால் அன்றைய முக்கிய பிரச்சனை தீர்ந்தது."

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வந்தால் நாட்டில் மதவாதம் தலைதூக்கும் என்று சொல்லும் நபர்கள் அனைவரும்  பார்க்க வேண்டிய படமிது. கையில் காசிருந்த போதும் ஆடம்பர குடியிருப்பில் முஸ்லீம் என்பதால் வீடு கிடையாது என்று மறுக்கப்பட்ட போது அவர் அடைந்த துயர வார்த்தைகளை இப்படிச் சொல்கின்றார்.

"நான் அடைந்த அவமானமும் மன உளைச்சலும் அதிகம்" என்று சொல்லும் அவரின் வார்த்தைகள் இன்றைய உண்மையான நிலவரத்தை நமக்குச் சொல்கின்றது. மதவாதிகள் மத துவேசங்களை வளர்க்கின்றார்கள் என்பது போல மதவாதமற்ற நாடு என்று சொல்லும் ஆட்சியில் அத்தனை மத சண்டைகளும் இங்கே உருவாகின்றது. இது மதவாத நாடல்ல என்று சொல்லும் அரசியல் தலைகளும், படித்த பொருளாதார மேதைகள் கூட கடைசியில் ஆண்டவனின் தங்கத்தை அடகு வைத்து நாட்டை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் தான் இன்றைய இந்தியாவின் பொருளாதாரம் நம்மைப் பார்த்து சிரிக்கின்றது. 

பஞ்சாப்பில் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினர் தரும் வாக்குமூலம், சிறிய விவசாயிகள் இந்த நாட்டில் படும் அவலங்கள், விளம்பரங்கள் மூலம் இந்திய ஒளிர்கின்றது என்பதற்குப் பின்னால் உள்ள அத்தனை விசயங்களையும் ஒரு கதை படிப்பது போல பார்க்க முடிகின்றது. 

கூடவே கோட் சூட் போட்டு கணவான்களாக பேட்டி தரும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இந்திய தொழில்துறை அமைச்சர் தரும் நம்பிக்கை வார்த்தைகளை கேட்கும் போது வாயில் வரும் எச்சிலை துப்பி விடாதீர்கள்.  

உமிழ்நீர் சத்தானது.  அது சாக்கடையில் துப்புவதற்கல்ல.


8 comments:

கவிதை வானம் said...

தங்களின் இந்தியா பதிவு......அருமை
அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி
நன்றி

vimal said...

அர்த்தமுள்ள பதிவு , உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் மனித நேயம் இந்த மண்ணில் தழைக்கும் .

Anonymous said...

உலகில் எத்தனை விதிகள், மதங்கள், சட்டங்கள், கோட்பாடுகள், தத்துவங்கள், கலாச்சாரங்கள், நாகரிகங்கள் ஏற்படுத்தப் பட்டாலும் உழைத்து வாழும் எளிய மனிதர்களின் மனம் கொஞ்சம் கூட குதூகலம் அடையவில்லை எனில், அவர்கள் வாழவும், அடிப்படைத் தேவைகளைக் கூட ஈடு செய்ய இயலவில்லை எனில் மேற்கூறியவை ஒன்றும் பயனற்றவை, குப்பைத் தொட்டியில் தான் வீச வேண்டும். நாட்டின் வீட்டின் வளத்தை கையிருப்பின் ரொக்கம் கொண்டும், உடுத்தும் உடை கொண்டும், ஜீவனற்ற, ஜீவிதம் வளர்க்க உதவாத சாதனங்கள் கொண்டும் அளவிட்டுக் கொண்டிருந்தால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம், ஆக ஏழைகளை ஏழைகளாய் வைத்துக் கொண்டு அவ்வவ்ப்போது கிள்ளிப் போட்டு கிச்சு கிச்சு மூட்டுவோம் எனக் கூறிக் கொண்டே இருக்க வேண்டியது தான். எத்தனைப் படங்கள், விவரணங்கள், எழுத்துக்கள் மூலம் நம்மை உறங்கச் செய்யும் மாயங்களில் இருந்து விடுபட வைய்ய முயன்றாலும், உள்ளத்தில் சிறு விழிப்பும், உணர்வும் அற்றுப் போய் விட்டால் உறக்கத்தில் இருந்து எழுவது இயலாத காரியம். எத்தனை ஆழ்ந்த உறக்கத்திலும், கலர் கனவுகள் நமது எதார்த்ததை மறைத்து மாயமான இன்பத்தைக் கொடுத்தாலும் இதயம் துடித்துக் கொண்டிருக்க வேண்டும், புறத்தின் ஆபத்துக்களை உணர்ந்து எச் சமயமும் விழித்துக் கொள்ள ஐம்புலன்களும் தயாராய் இருக்க வேண்டும். இல்லை என்றால் வாழ்ந்தும் இறந்த பிணம், வெறும் பிணமாய் போவோம். நம் நாட்டுக்கு இன்று தேவை விழிப்பதற்க்கு தயாராகும் உணர்வுகளும், மாய கனவுகள் தந்து கொண்டிருக்கும் இன்பங்கள் மெய்யல்ல என்பதை உணரச் செய்ய, உணர வேண்டிய நிர்பந்தங்களுமே. அது வரை ஆடம்பர வீட்டுக்குள் அடைக்கப்பட்ட தங்க மீன்கள் தான் நாம். வெளியில் இருப்போருக்கு அழகு, நமக்கோ அது நரக வேதனை.

ஜோதிஜி said...

நன்றி முத்து

ஜோதிஜி said...

வாங்க விமல். நம் பொருளாதார மேதைகளுக்குத் தான் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஜோதிஜி said...

ஓரே மூச்சில் எழுதியிருப்பீங்க போல. நன்றி செல்வன்.

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா....

aavee said...

இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது உங்க பதிவு..