Sunday, June 30, 2013

அந்த பொம்பள

யாருக்குத்தான் ஆசையில்லை?

ஒவ்வொருவரும் தான் செய்யும் செயலுக்கு அங்கீகாரம் வேண்டும் என்று விரும்பத் தொடங்குகிறார்கள். நாளாக அது தனக்குரிய புகழாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிறகு நீடித்த புகழாக மாற்ற உழைக்கத் தொடங்கி விடுகின்றார்கள். அதற்கான தகுதி இருக்கின்றதோ இல்லையோ? எல்லோருமே புகழுக்கு ஆசைப்படுபவர்களாகவும் எந்நேரமும் அதற்கே அலைபவர்களாகவும் இருக்கின்றோம். .

இன்று புகழுக்கு ஆசைப்படாதவர்களே இல்லை என்கிற அளவுக்கு சமூகம் மாறியுள்ளது.

ஏக்கம் வந்தால் தூக்கம் போய்விடும் பதிவில் புகழை விரும்பும் இணையதள வாசிகளைப் போல ஒவ்வொரு துறையிலும் இன்று செய்யும் கடமையை விட அதற்குண்டான உடனடி பலனை எதிர்பார்க்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால்  "புகழ் பெற்ற உலகமாக" மாறிக் கொண்டிருக்கின்றது.

எல்லோருக்கும் தெரிந்த "கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே" என்று இன்று யாரிடமாவது சொன்னால் சொன்னவரை மேலும் கீழும் பார்ப்பார்கள். அதெப்படி பலனை எதிர்பார்க்காமல் எவன் உழைப்பான்? என்பார்கள். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் "கடமையைச் செய். பலனில் பற்று வைக்காதே" என்பதாகும்.

காரணம் நாம் செய்யும் காரியத்தில் பலன் கிடைத்தால் சந்தோஷப்படுவோம். அதுவே கிடைக்காத போது பட்ட மரம் போல மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி அர்த்தப்படுத்தினார்கள்.

சில மாதங்களுக்கு முன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த ..................  

"சிலரின் சாவு என்பது வெறுமனே மரண நிகழ்ச்சி.

சிலரது சாவு பத்திரிக்கைக்கு தேவைப்படுகின்ற செய்தி.

ஆனால் சிலருக்கு இறப்பு என்பதே இல்லை. அவர்களின் மரணம் என்பது வெறுமனே அவரின் உடம்புக்கு கிடைக்கும் ஓய்வு. அவ்வளவு தான். ஆனால் அவர்களின் புகழ் என்பது பஞ்சபூதம் புகழைப் போன்றது" என்றார்.  

"புரியும்படி சொல்லுங்களேன்" என்றேன்.  

"பஞ்ச பூதங்களான பூமி, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் போன்றவைகளுக்கு என்றாவது அழிவுண்டா?" என்றார்.

"அதைப்போல இந்த உலகம் இருக்கின்ற வரைக்கும் சிலருக்கு அவர்களின் புகழுக்கு அழிவென்பதே இருக்காது" என்றார்.  

"ஆனால் இங்கே வாழும் போது அத்தனை அக்கிரமங்களையும் செய்து விட்டு தன்னுடைய பெயர் பல நூற்றாண்டுகளுக்கு இருக்க வேண்டும் என்று விரும்பிகின்ற அரசியல்வாதிகளின் புகழ் அவர்கள் விரும்பியபடி நீடித்து இருக்கின்றதா? அப்படி விரும்பி வாழ்ந்தவர்களில் இன்று எத்தனை பேர்களை நம்மால் இப்போது நினைவில் கொண்டு வரமுடிகின்றது".

"இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் எத்தனை முதலமைச்சர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர்கள் நம் நினைவில் இருக்கின்றது?  என்றார்.

அரசியலில் நேரிடையாக களத்திற்கு வராமல் ஆட்சி, அதிகாரம் இல்லாத போதும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரும் தங்களை அசைக்க முடியாத ஒரு தலைவராக நிலை நிறுத்தியுள்ளார்கள்? ".

"இப்போது 20 வயதுள்ள இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள்.  வாழ்ந்து மறைந்த பல தலைவர்களில் இரண்டு பேர்கள் கூட அவர்கள் வாயிலிருந்து வராது

இப்போது நாற்பது வயதை கடந்து கொண்டிருப்பவர்களிடம் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.  இன்னும் நாலைந்து பேர்களைப் பற்றி சொல்லக்கூடும்.  கொஞ்சம் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏழெட்டு பெயர்களை சொல்லக்கூடும்".  

"ஆனால் காந்தியின் பெயரை இந்தியர்களின் நினைவிலிருந்து எவராலும் அகற்றி விட முடியுமா?, எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் காந்தி கண்டது அது வெறுமனே கனவாகத்தான் போய்விட்டது.  

அவரைத் தொடர்ந்து வந்த நேரு கூட இந்திய வளர்ச்சியை செயலாக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்று துடிப்பாகத்தான் முயற்சிகளை தொடங்கி வைத்தார். 

அது இன்றும் கூட முழுமையடையவில்லை. காந்தி சொன்னபடி இன்று காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போனால் நன்றாக இருக்கும் என்கிற அளவுக்குத் தான்  இன்று மாறியுள்ளது.

ஆனால் இவர்களை விட சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் தந்தை பெரியார்.  தான் மக்களின் மனதில் ஆழமாக ஊடுருவினார்கள்.

காந்தியும் நேருவும் தொடக்கம் முதல் மேம்பட்ட அரசியலில் தான் கவனம் செலுத்தினார்கள்.ஆனால் அம்பேத்காரும் பெரியாரும் அடிமட்டம் வரைக்கும் ஆழமாய் ஊடுருவினார்கள். அதனால் இன்று வரைக்கும் அவர்களால் வாழ்ந்தவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள் இருவரையும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் எந்த இடத்திலும் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளவில்லை. எந்த மாற்றம் வேண்டுமோ அதற்காகவே தங்களை மாற்றிக் கொண்டு அதன் பின்னே சென்றார்கள். 

அதாவது கொள்கைகளுக்காக மக்கள் அல்ல.

மக்களுக்காகத்தான் கொள்கைகள் என்கிற ரீதியில் வாழ்ந்தார்கள்." 

"அறிஞர் அண்ணா இறந்ததை நீங்கள் உங்க வயதுக்கு செய்தி தாள்களில் தான் படித்து தெரிந்திருக்க முடியும். அவரின் இறுதி ஊர்வலமென்பதை இனி எந்த தலைவர்களும் நினைத்தே பார்க்க முடியாது.  

இப்போது அவரின் நிலை என்ன? 

"அண்ணா அறிவாலயம்" என்பது இன்று "கலைஞர் அறிவாலயமாக" மாறிக்கொண்டு வருகின்றது. நாளை அது "ஸ்டாலின் அறிவாலயமாக" மாறிவிடக்கூடும்".   

அடித்தட்டு, கிராமத்து மக்களிடம் அசைக்க முடியாத இடத்தில் இருந்த எம்.ஜி.ஆரின் நிலைமை இப்பொழுது எப்படி உள்ளது?

அவர் உருவாக்கிய இரட்டை இலை கொடுத்த வாழ்க்கை ஜெயலலிதாவை உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. இன்று மாநகராட்சி குப்பைத் தொட்டி வரைக்கும் "அம்மா " என்று புகழ்பாடிக் கொண்டிருக்கிறது. 

அதாவது அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பின்னுக்குப் போய்விட்டார்கள். முன்னுக்கு வந்தவர்கள் முடிந்தவரைக்கும் அவர்களை மறைப்பதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.  

ஓட்டரசியலை மையம் கொண்டு வைத்து செயல்படும் ஒவ்வொரு தலைவரும் காலப்போக்கில் இப்படித்தான் காணாமல் போய்விடுவது வாடிக்கையே.. ஆனால் உலக அளவிலும் சரி உள்ளூர் அரசியலிலும் சரி சமூகம் மாறுதலுக்கு காரணமாக இருந்தவர்களின் புகழை எவர் நினைத்தாலும் அத்தனை சீக்கிரம் மாற்றி விட முடியாது.

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பெருந்தலைவர் காமராஜரை சொல்லலாம்.

" 9 ஆண்டுகளே தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக இருந்த காமராஜரின் புகழை எவராவது மறைத்து விட முடியுமா?   அவர்  ஒரு முதலமைச்சரைப் போல செயல்படவில்லை. சமூக சீர்சிருத்த பேராளியாகத்தான் செயல்பட்டார். சாதி ரீதியாக அடிமைப் பட்டவர்களை கல்வி மூலம் அவர்களை மேலே கொண்டு வந்தார். அப்படித்தான் தந்தை பெரியார் காமராஜரை பாராட்டினார்.

பசியினால் பள்ளி வர முடியாதவர்களை, விரும்பாதவர்களை பல திட்டங்கள் மூலம் வரவழைத்தார்.

ஊழல் என்பதை அண்டவிடவில்லை என்பது ஆச்சரியமல்ல. அவரே அதற்கு முன் உதாரணமாக இருந்து அவர் இறந்த பிறகு அவரின் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டைகளைத்தான் தமிழ்நாட்டிற்கு சொத்தாக விட்டுச் சென்றார்.

இன்று வரையிலும்  தமிழ்நாட்டில் அவர்  உருவாக்கிய மாற்றங்களைப் போல செய்ய வாய்ப்புள்ளதா? செய்யத்தான் மனம் வருமா?

ஆரம்ப பள்ளிக்கூடங்களை  இனி எந்த கிராமத்திலும் திறக்க தேவையில்லை.  வேண்டிய அளவுக்கு திறந்தாகி விட்டது. அந்த எண்ணிக்கை முடிவுக்கு வந்து விட்டது.  இனி அடுத்த கட்ட கல்விக்கூடங்களை திறக்க நாம் பாடுபட வேண்டும் என்றாரே? 

சாதிகளை ஒழிக்க தந்தை பெரியார் கத்திய போதும் மாறாத தமிழர்களை கல்வி மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்ட அத்தனை மனிதர்களையும் கல்வி மூலம் மேலே கொண்டு வந்து நிறுத்தினாரே."

தமிழ்நாட்டில் திமுக முதல் முதலாக ஆட்சியைப் பிடித்தது.

"நாம் வெற்றிவிழா கொண்டாடக்கூடாது. மாபெரும் தலைவர் காமராஜர். அவர் தோற்ற நேரத்தில் நான் விழா கொண்டாடுவது முறையல்ல" என்று அறிஞர் அண்ணா விழா கொண்டாட்டங்களை  நிறுத்தினார்.

இதற்கு மேலும் காமராஜர் குறித்து அண்ணா தன் தம்பிமார்களுக்கு சொன்ன வார்த்தை  "நான் உங்களைத் தான் வளர்த்தேன். ஆனால் காமராஜர் தான் தமிழ்நாட்டை வளர்த்தார்" என்றார்.

நேரு இறந்த போது "அவர் சவ ஊர்வலம் முடியும் வரைக்கும் எவரும் அடுத்த பிரதமர் குறித்து பேசக்கூடாது" என்று அனைவரையும் அடக்கி வைத்தவர் காமராஜர். இந்திரா காந்தி இது குறித்து பேசிய போது கூட "உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாமல் வீட்டில் போய் இரு" என்றார்.

இந்திராவை பிரதமராக கொண்டு வந்ததும் காமராஜர் தான்.

எமர்ஜென்சி காலத்தில் கூட இந்திரா காந்தி கைது செய்ய ரொம்பவே பயந்து யோசிக்க வைத்த ஆளுமை கொண்டவர் காமராஜர்.

காமராஜரும் இந்திராவை "என்னய்யா அந்த பொம்பள இப்படியெல்லாம் செய்யுது" என்று தான் குறிப்பிடுவார்.

இன்று புகழ் தான் எப்படியெல்லாம் மாறியுள்ளது.

இறவா புகழ், நீடித்த புகழ், நிலையான புகழ் என்பது இன்று நிமிட நேர புகழ்வரைக்கும் மாறியுள்ள இந்த சூழ்நிலையிலும் இவர்களைப் போன்ற தலைவர்கள்  தான் "பஞ்சபூத புகழுக்கு" சொந்தக்காரர்" என்றார்.  


(நேரு முதல் அண்ணா ஆட்சிக்கு வந்த காலம் வரைக்கும் உள்ள அரசியல் நிகழ்வுகளோடு காமராஜரின் தனிப்பட்ட மனோதைரியத்தை தெளிவாக விளக்கும் ஒலிக்கோப்பு இது).

மொத்த தொகுப்பு அடங்கிய இந்த ஒலித்தொகுப்பு படிக்க நேரம் இல்லாதவர்களுக்கு கேட்க உதவும் தளம்.

15 comments:

Unknown said...

என்ன சொல்வது ?காமராஜர் புகழ் ஓங்குக! ! !.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒலிக்கோப்பு இணைப்பிற்கு நன்றி...

துளசி கோபால் said...

அன்னாரது இல்லத்தை ஒருமுறை தரிசித்தபோது, 'ஐயா... நாட்டைக் கெடுத்துப்புட்டாங்கையா'என்று சொல்லி கண்ணீர் விட்டது நினைவுக்கு வருது.

அவரைப்போல் இனி ஒரு தலைவரை ............... ப்ச்:(

Anonymous said...

காந்தி, அம்பேத்கார், பெரியார், காம்ராஜர் என சில தலைவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். உண்மையின் பால் கொண்ட அன்பால் மக்கள் மனதில் இன்றும் நீடிப்பவர்கள். அவர் தம் கொள்கைகள், வாழ்க்கைகள் குறித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும்.

saidaiazeez.blogspot.in said...

child cries for recognition
men dies for recognition
(ஆமாம் காமராஜ் காமராஜ் என்கிறோமே அவரை அந்த காங்கிரஸ்காரனே மறந்திட்டானே, நீங்க என்னடான்னா காமெடி பண்றீங்க!)

'பரிவை' சே.குமார் said...

காமராஜர் மாமனிதர்.

ஜோதிஜி said...

வருகின்ற 15 அன்று காமராஜருக்கு விசேடத்தை கொண்டாட காங்கிரஸ் மக்கள் இப்பொழுதே முயற்சி எடுத்துக் கொண்டு இருக்காங்க. அவரை எப்படி (?) மறப்பாங்க அஜிஸ்

ஜோதிஜி said...

ஓய்வு நேரத்தில் இதில் உள்ள பல ஒலிக்கோப்புகளை கேட்டுப்பாருங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

saidaiazeez.blogspot.in said...

அப்படின்னா மார்ச்சுக்கு முன்னால் தேர்த்தல் வராது என்பது கன்ஃபர்ம்.
அண்ணாவுக்கும் எம்ஜியாருக்கும் என்ன மரியாதையோ அவ்வளவுதான் கர்மவீரருக்கும். (தேர்தல் சமய ஊறுகாய்?)

ஜோதிஜி said...

இப்படி குண்டக்க மண்டக்க எல்லாம் கேட்கக்கூடாது

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஒரு தலைவரை பற்றி சிறப்பாக சொன்னீர்கள்! இன்றுள்ளவர்கள் தலைவர்கள் அல்லர்! வெறும் வியாபாரிகள்! பகிர்வுக்கு நன்றி!

SNR.தேவதாஸ் said...

தங்களது பதிவுகளில் மகுடம் வைத்த சிறந்த பதிவு.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

இராய செல்லப்பா said...

அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, பெரியார் ஈ.வெ.ரா., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகிய அனைவரின் இறுதி ஊர்வலத்தையும் நான் கண்டிருக்கிறேன். மக்களின் மனத்தில் நிற்கவேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்த்து. (‘தம்’ மக்களின் மனத்தில் மட்டும் அல்ல).

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Mohan said...

//பசியினால் பள்ளி வர முடியாதவர்களை, விரும்பாதவர்களை பல திட்டங்கள் மூலம் வரவழைத்தார்.// இத்தகைய திட்டங்களால் படித்து முன்னேறியவர் என் தந்தை, ஆதலால் காமராசர் தமிழகத்தை மட்டுமல்ல அமெரிக்காவையும் மாற்றியிருக்கிறார்.