Saturday, June 15, 2013

சிலம்பம் சுற்றும் பின்னூட்டவாதிகள்

இந்த ஐந்து ஆண்டுகளில் என்னோடு பயணித்தவர்கள், எனக்கு முன்னால் எழுதிக்கொண்டிந்த நண்பர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். நான் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்பதே இன்று வரைக்கும் எனக்கு வெற்றியாக உள்ளது. 

சிலருக்கு நேரமில்லை என்கிறார்கள். பலருக்கும் விருப்பம் விலகி விட்டது என்கிறார்கள்.  எனக்கு இரண்டாவது காரணம் தான்  சரியாக உள்ளது போல் தெரிகின்றது. வலையில் எழுதும் எழுத்தில் மட்டுமல்ல.  நாம் பார்க்கும் அன்றாட செயல்பாடுகளில் கூட உள்ளுற ஆர்வம் இல்லாத போது அதில் ஈடுபாடு தோன்றுவதில்லை.

ஆனால் எனக்குத் தெரிந்த நண்பரொருவர் பக்கத்து மாநிலத்தில் இருக்கின்றார்.

மிக நெருக்கடியான தொழில் வாழ்க்கையில் இருந்த போதிலும் அவரின் எண்ணங்கள் வேறு மாதிரி உள்ளது.

எனக்கு ஏதோவொரு கருத்து குறித்து பதிவு எழுதி வெளியிட்டவுடன் தான் நானும் இவ்வுலகில் இருக்கின்றேன் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.  எனது பார்வைகளை பதிவுகளாக மாற்றும் போது அடுத்த விசயத்தின் மேல் ஆர்வம் உருவாகின்றது என்றார்.  பணத்தை தவிர வேறெதும் தேடல் இல்லாத வாழ்க்கையாக இந்த வாழ்க்கை வாழ வேண்டி விடுமோ என்ற அச்சத்தை இந்த வலைபதிவு எழுத்துக்கள் தான் போக்குகின்றது என்றார்.

குடும்பத்தை தாண்டி, தொழில் வருமான எதிர்பார்ப்புகளைத்தாண்டி பலராலும் வெளியே வர முடிவதில்லை.  அப்படி வர வாய்ப்பு இருப்பவர்களுக்கும் இது போன்ற ஆர்வங்கள் தோன்றாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.  

சுருக்கமாகச் சொல்லப் போனால் அமைதியாக வாழ வேண்டிய இந்த வாழ்க்கையில் நாம் ஏன் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டும். எதுவும் மாறப்போவதில்லை. அதற்காக நாம் ஏன் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டும். இவ்வுலகில் ரசிக்க ருசிக்க நிறைய சமாச்சாரங்கள் உள்ளது. ஒருவகையில் பார்க்கப்போனால் அறியாமையே பெரிய ஆயுதம் போல உள்ளது. எல்லாமே தெரிந்து கொள்ளும் போது நம்முடைய மன அமைதி பாதிக்கப்படுகின்றது. ஏன் நம் வாழ்க்கை அமைதியை இழக்க வேண்டும்? என்று பலருக்கும் தோன்றி விடுவது இயல்பானதாக இருக்கின்றது.

அதையும் மீறி நாமும் வலையில் இருக்கின்றோம் என்பதை காட்டிக் கொள்ள  பலருக்கும் இருக்கவே இருக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்.  

நாம் மனதில் நினைத்த கருத்தை சுருக்கமாக நாலு வரிகளில் எழுதலாம். அதற்கு மேலே எழுத தோன்றாமல் போனால் லைக் பட்டனை தட்டி அவரவர் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ளலாம்.  

இவ்வாறு முடங்கிப் போனவர்களை பார்த்துக் கொண்டே இன்னமும் எழுத வேண்டும் என்று தோன்றுவதோடு அதற்கான வாய்ப்புகளும் எனக்கு இருப்பதால் இன்று வரைக்கும் இந்த எழுத்துப் பயணத்தில் சலிப்பு என்பது ஒரு சதவிகிதம் கூட உருவாகவில்லை.

இன்று வரையிலும் இந்த எனது விருப்பத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டதே இல்லை என்பதே மகிழ்ச்சியாக உள்ளது. பலருக்கும் நேரம் ஒதுக்குவது சவாலாக உள்ளது என்கிறார்கள். ஆனால் நம் தூக்கத்தை தியாகம் செய்ய விருப்பம் இருப்பதில்லை. எனது குடும்பத்தில் எவ்வித எதிர்ப்புமின்றி என்னை அனுமதித்த எங்கள் வீட்டு நான்கு திசைகளுக்கும் இந்த நாளில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.காரணம் என்னுடைய குடும்ப கடமைகள் என்பதை தனியாக அதன் தன்மை மாறாமல் வைத்திருப்பதும் முக்கிய காரணமாக உள்ளதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் நண்பரொருவர் என்னிடம் பேசும் போது உங்கள் பதிவின் மூலம் வேறு சிலரையும் அடையாளம் கண்டு கொண்டேன். அவர்கள் பதிவுகளையும் இப்போது எனது தொடர் வாசிப்பில் வைத்து படித்துக் கொண்டிருக்கின்றேன்.  உங்களுக்கு கிடைத்த நண்பர்கள் அத்தனை பேர்களும் நல்ல புத்திசாலிகளும் கூட என்றார்.

உண்மைதான் நம்மைச் சுற்றி அல்லது நம்மோடு புத்திசாலிகள் இருக்கும் போது பார்க்கின்றவர்களுக்கு நாமும் புத்திசாலி என்றே தோன்றக்கூடும்.  அந்த பார்வையில் நான் பலருக்கும் தெரிகின்றேன் என்று ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வதுண்டு. பூவோடு சேர்ந்தும் நாறும் மதிப்பு பெறுகின்றது என்பதும் உண்மைதானே.

இந்த வலைபதிவில் எனக்கு உருவான ஒவ்வொரு நிகழ்வையும், அதன் அனுபவங்கள் குறித்து பெரும்பாலும் எழுத்தாக மாற்றியிருந்த போதிலும் இன்னும் ஒரு விசயம் பாக்கியுள்ளது.  

தொடக்கத்தில் வலைபதிவுகளை படிக்கும் போது எனது விமர்சன கருத்தை எழுதி வைத்து விட்டு வந்து விடுவதுண்டு.  ஆனால் பதில் அளிப்பார்கள் என்பதை சில வருடங்கள் கழித்தே உணர்ந்து கொண்டேன்.  அப்போது என்ன பதில் அளித்தார்கள் என்பதையும் பார்த்ததுண்டு.  சிலர் பிரபல்யம் என்ற போதையில் எந்த பதிலும் அளிப்பதில்லை.  நாம் கேட்ட கேள்வி அனாதையாக இருக்கும்.  அடுத்தடுத்து நண்பர்கள் அறிமுகமாக அப்போது தான் விமர்சனத்தை எழுதி வைத்து விட்டு மின் அஞ்சல் வழியே தொடர்ந்து வரும் விமர்சனங்களை கவனிக்க முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

நான் வலைபதிவுகளை ரசித்து படிப்பதை விட இது போன்ற பின்னூட்டங்களின் மகா ரசிகன்.  சிலர் வலைபதிவுகளில் எழுதுவதில்லை. ஆனால் இது போன்ற விமர்சனங்களில் கலக்கியெடுப்பவர்கள் பலரையும் பார்த்து மிரண்டு போயுள்ளேன்.  சிலர் குறள் போல நச் சென்று குத்துவார்கள். சிலர் கோனார் நோட்ஸ் போல விளக்கவுரையாய் பேசுவார்கள்.  

பலவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கு இந்த பின்னூட்டம் நல்லதொரு வட்டத்தை உருவாக்கும்.  பல துறை குறித்த விசயங்கள் பலரின் உரையாடல் மூலம் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். நாம் எழுதியது மொக்கையாகி விடும்.  காரணம் அகாயசூரர்கள் களத்தில் கபடியாட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

நான் பலமுறை இந்த அவஸ்த்தை பட்டுள்ளேன். 

விந்தைமனிதன் ராஜாராமன் தான் முதன் முதலாக நீங்கள் பின்னூட்ட பெட்டியை மூடி வைப்பது ஜனநாயக விரோதம் என்றார். தம்பி வயது என்றாலும் அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அன்றே கதவை திறந்து வைத்தேன். 

இந்த சமயத்தில் என் தளத்தில் பின்னூட்ட புயல்களை உருவாக்கியவர்களை நினைவில் வைத்திருக்க விரும்புகின்றேன்.  அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 

அந்த பதிவுகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

முதன் முதலாக கதை என்ற பெயரில் நெடுந்தொடர் பாணியில் எழுதிய பெண்ணே நீ யார் என்ற தொடர் பதிவின் இறுதியில் பெண்கள், ஆண்கள் என்று பாரபட்சம் இல்லாமல் புகுந்து கலக்கினார்கள். சொடுக்க

                                                                             ++++++++++++++++++++++++

கும்மி என்றொரு பெயரில் நண்பர் ஒருவர் இருக்கின்றார்.  இன்று வரையிலும் என் தொடர்பில் இருக்கின்றார்.  

மே 17 இயக்கத்தின் முக்கிய செயல்பாட்டாளர்களில் இவரும் ஒருவர்.

என் பார்வையில் அதீத புத்திசாலி.  நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகள்.  ஒவ்வொரு விசயத்திலும் இருவரும் மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்கள்.  ஆனால் இன்று வரையிலும் இருவரின் நட்பிலும் பழுதில்லை.

எந்த விசயத்தை பேசத் தொடங்கினாலும் அதன் நுனி முதல் வேர் வரைக்கும் விரல் நுனியில் வைத்திருப்பார். இராமநாதபுரம் மாவட்டத் தொடரில் சாதி ரீதியாக உள்ளே நுழைந்த போது தளம் கலகலகத்தது.  காரணம் உமர் வந்து சிலம்பம் ஆடினார்.



                                                                          ++++++++++++++++++++++
ந்த எழுத்துப் பயணம் இன்னமும் எத்தனை வருடங்களுக்கு என்னை கொண்டு செலுத்தும் என்று தெரியவில்லை. ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏராளமானோர் இந்த வலைபதிவில் எழுதிக் கொண்டிருப்பது ஆச்சரியமே.  அவர்களின் வயதில் என்னால் எழுத முடியுமா? என்பதை பல முறை யோசித்துள்ளேன்.

ஆனால் இந்த தளத்தில் இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து எவர் வந்து படித்தாலும் இந்த கட்டுரைகள் மிக முக்கியமாக அவர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.  





திருப்பூர் குறித்து நான் எழுதிய கட்டுரைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. எனக்கு முன்னால் திருப்பூரில் இருந்து பலரும் இந்த வலைபதிவில் எழுதிக் கொண்டிருந்தாலும் திருப்பூரை மையமாக வைத்து இங்குள்ள பிரச்சனைகளை பேசு பொருளாக வைத்து எழுதியவர்கள் மிகக் குறைவு.

எழுத்தாளர்கள் எப்போதும் போல கதைகளாக, கட்டுரையாக புத்தக வடிவில் கொண்டு வந்தவர்கள் தான் அதிகம்.  வலைபதிவில் இதனை தொடராக, சிறு சிறு நிகழ்வாக கொண்டு வந்த போது அதற்கு கிடைத்த ஆதரவின் இறுதிப் புள்ளி தான் எனது முதல் புத்தகம் டாலர் நகரம்.

இப்படித்தான் வினவு தளத்தில் இருந்து தொடங்கினேன். 


                                                                  ++++++++++++++++++

திருப்பூர் குறித்து எழுத்து வடிவில் படித்த பலருக்கும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் எப்படி செயல்படுகின்றது என்பதை ரசித்துப் பார்க்க இந்த காணொளிகள் உதவக்கூடும்.





                                                                +++++++++++++++++++++

வலைபதிவில் தலைப்பு ரொம்பவே முக்கியம் என்பதை நானும் கற்றுக் கொண்டு கரகாட்டம் நடத்திய பதிவுகள். ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தின் உளவுத்துறை குறித்து கொஞ்சம் அருகே சென்று பார்த்த முயற்சி இது.

இன்று வரையிலும் இது பொருத்தமாக இருப்பது தான் உண்மையும் கூட.


பதினெட்டுபட்டி பஞ்சாயத்து ரா வுகள்

                                                             +++++++++++++++++++++++


100க் கணக்கில் கவிதைகள் ஒளிந்திருக்கும் இந்த இடுகையாக நன்றாக வந்திருக்கிறது. எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்கும் கலை உங்களுக்கு நன்றாக வந்திருக்கிறது.
கோவி கண்ணன் தந்த விமர்சனம் இது. 
இயல்பாக நம்முடைய அனுபவங்களை எழுதும் போது அதுவே ஒவ்வொரு சமயமும் நம்முடைய எழுத்து நடையை மாற்றிப் பார்க்கும் போது நமக்கே சிறிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதை இந்த பதிவுகள் எனக்கு உணர்த்தியது.
காதலைப் பற்றி, அதுவும் முதல் காதலைப்பற்றி எழுதினால் எவருக்குத் தான் பிடிக்காமல் போகும்? இதையே நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு நாள் அனுபவத்தை ஒரு டைரிக்குறிப்புகள் போல எழுதிப் பாருங்கள்.  இந்த வித்தியாசம் உங்களுக்கே புரியக்கூடும்.
ஆசை மரம்

தினந்தோறும் மலரும் பூக்கள்

                                                                     +++++++++++++++++++++++

ஈழம் குறித்து எழுதத் தொடங்க அதுவே என்னை இன்று வரையிலும் சுழல் போல இழுத்துக் கொண்டே வந்தது.  வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து அறிந்து கொள்ளத் தொடங்க தொடக்கத்தில் பக்தி போல உருவானது. பதட்டம் உருவானது. மாற்றுக் கருத்து எவராவது சொன்னால் எரிச்சல் வந்தது. நிறை குறைகளை அலசத் தோன்றியது.

இன்று பலவகையில் மனதில் பக்குவம் வந்தாலும் அவரின் மேல் உள்ள பாசம் கலந்த மரியாதை மட்டும் இன்றளவும் மாறவில்லை. இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துள்ளேன் என்பதை எனக்கு பதிவு செய்வதே போதுமானதாக உள்ளது.

இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து இங்கே வந்து படிப்பவர்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து அறிந்து கொள்ள இந்த கட்டுரைகள் நிச்சயம் அவர்களுக்கு ஏதோவொரு வகையில் சில புரிதலை உருவாக்கக் கூடும்.

இலக்கணம் படிக்காத பிரபாகரன்

பிரபாகரன் சர்வாதிகாரம் காரணம்

பிரபாகரன் சமாதானத்தை விரும்பாதவர்

ராஜீவ் காந்தி பிரபாகரன் சந்தித்த வேளையில்

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழம் என்றொரு பிரதேசம்

14 comments:

சிவ.சரவணக்குமார் said...

ஜோதிஜி அவர்களே...... நானும் திருப்பூர்க்காரன் தான்......தங்களது டாலர் நகரம் புத்தகம் எங்கே கிடைக்கும்?

அம்பாளடியாள் said...

எழுத எழுத இன்பம் பொங்கும்
இதயம் முழுதும் அமைதி தங்கும்
வலையுலகில் விழுந்த மனிதா வாழ்க என
வாழ்த்துகின்றேன் அன்புச் சகோதரரே !!.....

உங்களையும் எங்களையும் எழுத்தின் மூலம் அறியத் தந்தது இந்த வலையுலகம் தான் ஏதோ ஒரு பொழுதுபோக்கிற்க்காக மட்டும் நாம் இந்த வலைத் தளத்தில் நிலைத்து நிற்கவில்லை மன அமைதி
தரக்கூடிய எத்தனையோ விஷயங்கள் இங்கு பகிரப் படுகின்றது அவை சில சமயங்களில்
பின்னூட்டமாகவும் வந்து விழுவதை நான்
அனுபவித்துள்ளேன் என்னைப் பொறுத்தவரையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வலைத் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றேன் அவை இன்னும் பல வருடங்கள் தொடர வேண்டும் என்பதிலும் உறுதியாக
உள்ளேன் காரணம் வலைத்தளத்தின் மூலமாக நான் அறிந்த எழுத்தாளர்கள் அத்தனை பேரும் எனது குடும்ப அங்கத்தவர்கள் போல் தான் இதுவரைக்
காட்சியளிக்கின்றனர் .எழுதுவது என்பதும் வாசிப்பது என்பதும் சுவாசிப்பதைப் போல் இருந்தால் அதை எவ்வாறு நிறுத்த முடியும் ?....:) நீங்கள் சுவாசியுங்கள் உங்களின் ஆக்கத்தினை வாசிக்கும் நாங்களும் சுவாசத்தை இழக்க மாட்டோம்
அன்புச் சகோதரரே வாழ்க தம் பணி வளரட்டும் இந்த வலைத்தள உறவுகளின் நட்பும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

திண்டுக்கல் தனபாலன் said...

/// அமைதியாக வாழ வேண்டிய இந்த வாழ்க்கையில் நாம் ஏன் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டும். எதுவும் மாறப்போவதில்லை. அதற்காக நாம் ஏன் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டும்.///

வாழ்த்துக்கள்...

துளசி கோபால் said...

என்னால் தியானம் செய்யாமல் இருக்க முடியாது.

தியானம்= எழுத்து.

உண்மையில் தட்டச்சு செய்து கணினியில் எழுதுவது கொஞ்சமே. ஆனால் மனதில் என்ன எழுதணும், எப்படி எழுதணும் எதைப்பற்றி, என்ன தலைப்பு இப்படி இதனுடன் சம்பந்தமுள்ள எதாவது ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது ...உறக்கத்திலும் கூட!

உங்களின் இந்தப்பதிவு நல்ல 'திரும்பிப் பார்.'

மனிதனுக்குக் கட்டாயம் வேண்டிய குணாம்சம் இது. அப்போதுதான் நாம் நம்மைத் திருத்திக்கொண்டு மேலே மேலே போக முடியும்.

”தளிர் சுரேஷ்” said...

சில சமயம் வலைபதிவு ஒரு போதையோ என்று தோன்றுகிறது! நீங்கள் சொல்வது போல பின்னூட்டத்தில் வெளுத்து வாங்குபவர்கள் சிலரை நானும் படித்து மகிழ்ந்துள்ளேன்! நன்றி!

ஜோதிஜி said...

ஆனால் மாற்றுக் கருத்து சொல்கின்றவர்களை எவரும் இங்கே ஆதரிப்பது இல்லை. அது போன்ற எந்த கட்டுப்பாடுகளும் என்னிடம் இல்லாத காரணத்தால் வவ்வால் எனக்கு கற்றுத்தருபவராக இருக்கின்றார் என்பதை இந்த இடத்தில் பெருமையுடன் எழுதி வைக்க விரும்புகின்றேன். ஒருவரின் கருத்தை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் நம்மை தெளிவாக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

நன்றி சுரேஷ்.

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனத்தைப் பார்த்ததும் அடுத்து என்ன எழுதுவது என்ற யோசித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு ஒன் லைன் கிடைத்துள்ளது. அடுத்த பதிவில் பாருங்க. நன்றி டீச்சர்.

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன் தனபால்

ஜோதிஜி said...

நன்றிங்க.

எம்.ஞானசேகரன் said...

விமர்சனங்களால்தான் நம் பார்வை கூர்மையாகின்றன. விசாலமாகின்றன. மாற்றுக்கருத்துக்களும் புரிய ஆரம்பிக்கின்றன. ஒருவேளை நமது கருத்துக்களில் தவறு இருப்பினும் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சரிதானே ஜோதிஜி!

ஜோதிஜி said...

உண்மைதான்.

தாராபுரத்தான் said...

நான் வலைபதிவுகளை ரசித்து படிப்பதை விட இது போன்ற பின்னூட்டங்களின் மகா ரசிகன். சிலர் வலைபதிவுகளில் எழுதுவதில்லை. ஆனால் இது போன்ற விமர்சனங்களில் கலக்கியெடுப்பவர்கள் பலரையும் பார்த்து மிரண்டு போயுள்ளேன். சிலர் குறள்....போல....என்னைத்தானே..என்னைத்தானே..

ஜோதிஜி said...

அட நீங்க வேற. நீங்க தொடர் வாசகராச்சே.

ஜோதிஜி said...

இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள
9 8 9 4 777 278