Friday, June 28, 2013

திறந்து வைப்பது நல்லதா?

ன்றாடம் நான் படிக்கும் சில பதிவுகளில் எழுதப்பட்ட எந்த வரிகளையும் அடுத்தவர் எடுக்க முடியாதபடி பூட்டு போட்டு வைத்திருப்பதை பார்த்து பல முறை வியந்திருக்கின்றேன். இது போன்று செய்துள்ள ஒரு நண்பரிடம் ஏன் இப்படி? என்று கேட்டேன்.  "அண்ணே குறிப்பிட்ட பத்திரிக்கையில் என் பதிவை உட்டலாக்கடி வேலை செய்து வெளியிட்டிருக்கின்றார்கள்.  ஒரு நன்றி கூட சொல்லவில்லை" என்று பொங்கினார். 

னால் இன்று இணைய தளங்களில் நான் பார்க்கும் பல படங்களை பத்திரிக்கையில் வார இதழ்களில் பார்க்கின்றேன்.இதே போல பத்திரிக்கையில் படித்த பல விபரங்கள் அடிப்படையில் ஜாலக்கு வேலை செய்து பதிவாக மாற்றி வெளியிட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். இணைய தளங்களில் வந்த துணுக்கு செய்திகளை அடிப்படையாக வைத்து தோரணம் கட்டுபவர்களையும் பார்க்க முடிகின்றது. தொடக்கத்தில் ஆங்கிலப் பத்திரிக்கைகள் நமக்கு உதவியது.  இன்று தமிழ் இணைய தளங்களே அந்த வேலையை செய்து கொண்டிருப்பது வளர்ச்சி தானே?

நான் கூகுள்ப்ளஸ் ல் தினந்தோறும் பகிர்ந்து கொள்ளும் படங்கள் திரு. சங்கர நாரயணன் என்பவர் எனக்கு அனுப்பும் படங்கள்.  இவரைப் போல வேறு சிலரும் தாங்கள் ரசித்த படங்களை அனுப்பி வைக்கின்றனர்.  அவர்களும் அவர்கள் படித்த பார்த்த தளங்களில் இருந்து தான் இந்த படங்கள் எடுக்கின்றனர்.

அவரவர் பணியின் காரணமாக சிலருக்கு முகநூலுக்குள் மட்டும் வந்து செல்லும் பழக்கத்தை வைத்திருப்பவர். சிலருக்கு கூகுள் ப்ளஸ் மட்டுமே. சிலர் ட்விட்டர். சிலரோ குறிப்பிட்ட வலைபதிவுகள் தவிர வேறு எந்தப்பக்கமும் செல்வதில்லை.  இப்படித்தான் இணையதள வாசக கூட்டம் இருக்கின்றது.  எல்லா பக்கமும் செல்லக்கூடிய வாய்ப்பிருப்பவர்கள் பார்த்த படித்தவற்றை பகிரும் போது அது பலருக்கும் செல்ல வாய்ப்பாக இருக்கின்றது.  மும்பையில் இருக்கும் வருண்கணேசன் என்பவர் நான் கூகுள் ப்ளஸ் ல் பகிரும் படங்கள் ஒரே இடத்தில் சேர்ந்துள்ள இணைப்பை எனக்கு அனுப்பி வைத்தார். சொடுக்க

ன்று எல்லா விசயங்களையும் பற்றி என்னால் எழுத முடிகின்றது. ஆனால் தொடக்கத்தில் எனது சொந்த அனுபவங்கள் குறித்து வேர்ட்ப்ரஸ் வலைபதிவில் எழுதிக் கொண்டிருந்த போது பெரிதான சரிபார்ப்பு குறித்த அக்கறை எதுவும் தேவையில்லாமல் இருந்தது. ஆனால் பல விதமான சமூகம் மற்றும் அரசியல் கட்டுரைகள் எழுதும் போது ஆண்டுகள், மாதங்கள் குறித்து எழுத கட்டாயம் இணையமோ ஏதோவொரு புத்தகமோ தேவையாய் இருக்கின்றது.  எப்படி பார்த்தாலும் எழுதத் தொடங்கி விட்டால் நிச்சயம் நமக்கு மற்றவர்களின் தேவை இருக்கத்தான் செய்கின்றது.

என்னவொன்று? சிலசமயம் நாம் படித்த பின்பு உருவாகும் தாக்கத்தை நாம் எப்படி மாற்றி எழுத்தாக மாற்றுகின்றோம் என்பதில் தான் சவாலும் நம் திறமையும் உள்ளது. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் காபி பேஸ்ட் பதிவாக வெளியிடுவர்கள் கூட பூட்டு போட்டு தான் வைத்துள்ளார்கள்.  

ஒரு வேளை வடையை மீண்டும் எண்ணெய்யில் பொறித்தால் வாடை வந்து விடும் என்ற பயமோ?

ருடல் ஓர் உயிராக பழகிய  தமிழ்மீடியா குழும ஆசிரியர் மலைநாடன் கொண்டு வந்த டாலர் நகரம் நூலை படித்தவர்கள் இன்று பலரும் பலவிதமாக பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கான முழு உரிமை கூட தினமலர் பத்திரிக்கைக்குத் தான் போய்ச் சேர வேண்டும். காரணம் இதில் வரக்கூடிய என் அனுபவம் சார்ந்த விசயங்களை விட இதில் வரக்கூடிய ஆய்த்த ஆடைகள் சார்ந்த பல்வேறு விசயங்கள் அனைத்து தினமலர் பத்திரிக்கையில் வந்த துணுக்குச் செய்திகள் முதல் பெரிய கட்டுரைகள் வரைக்கும் அனைத்தும் படித்து முடித்த பிறகு உருவான தாக்கத்தில் தான் வலைபதிவில் கட்டுரையாக எழுதினேன்.

நான் தினமலரில் படித்த கட்டுரைகளின் அடிப்படையில் எழுதாமல் அதை என் பார்வையில் என் வாழ்வில் உள்ள அனுபவங்களைக் கொண்டு எழுதினேன். இன்று டாலர் நகரம் புத்தகம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் இளம் முனைவோர் பட்டம் வாங்கப்போகும் ஒரு பெண்மணி தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைக்காக என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தை எடுத்துள்ளார்.  இந்த கட்டுரை வருகின்ற ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் சமர்ப்பிக்கப் போவதாக சொல்லியுள்ளார்.  

முதன் முறையாக ஒரு பெண் என்னை பேட்டி காணப் போகின்றார்.

ருப்படியான எண்ணங்களை மக்களிடம் விதைத்து விட்டு சென்ற மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் இறப்பு குறித்து வலைபதிவில் எழுதிய போது பலருக்கும் அது போய் சேர்ந்தது.

முகநூல் முதல் பல இடங்களில் அவர் குறித்த செய்திகளை படித்தேன்.

அதற்குப் பிறகு கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் பதிவைப் பார்த்தும் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்திருந்ததை பார்த்த போது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.  குறிப்பாக நான் பதிவில் கொடுக்கும் இணைப்புகள் பலரின் பார்வையில் பட்டு இணைப்பு கொடுத்த பதிவில் உள்ள முக்கிய விசயங்கள் தனியாக ஒரு தனிப்பதிவாக கட்டுரையாக இணைய தளங்களில் வரும் அளவுக்கு இருந்ததையும் ரசித்தேன்.  பகிர்தல் என்பதில் இங்கே எவரும் சொந்தம் கொண்டாட முடியாது.  

ஒரு குறிப்பிட்ட செய்தி பரவ நாமும் ஒரு காரணமாக இருக்கின்றோம் என்கிற அளவுக்கு மகிழ்ச்சியடைய வேண்டியது தான். 

ரே உலகம் தான். இன்று உலகம் தான் ஊர் என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில் வலைபதிவுக்கு மட்டுமல்ல பத்திரிக்கை உலகத்திற்கும் கூகுள் தான் எல்லாவிதங்களிலும் உதவியாக இருக்கின்றார். என் பழக்கத்தில் உள்ள நண்பர்கள் தாங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் நன்றி கூகுள் மற்றும் குறிப்பிட்ட தளங்கள் பெயரைப் போட்டு எழுதுவார்கள். நான் அவ்வாறு எதையும் தொடக்கம் முதல் குறிப்பிடுவதில்லை.

காரணம் எனக்குச் சொந்தமானது என்று இங்கு எதுவுமே இல்லை.

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஒன்றை வெட்டி ஒட்டி அதை எழுதாக்கும் உழைப்பு மட்டுமே நமக்குச் சொந்தம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.  மேலும் நான் எழுதியதில் தவறு இருக்கின்றது என்று கருதுபவர்கள் அது குறித்த தளங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கும் போது அந்த துறை சார்ந்தவர்களுக்கு அது மேலும் பலன் அளிக்கக்கூடும்.  சமீபத்தில எழுதிய மிகச் சாதாரணமாக சர்க்கரை நோய் குறித்து எழுத நந்நதவனம் மற்றும் வவ்வால் இருவரும் நடத்திய சிலம்பாட்டம் இது.

இது போல அதிசயமாக பலசமயம் நடக்கும். பெரும்பாலும் நூறில் இரண்டு பேர்கள் கூட ஆர்வத்துடன் தேடுதலுடன் வலைபதிவில் படிக்க வருபவர்கள் இல்லை என்பதே நான் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை.  

நண்பர் நந்தவனம் சொன்னது போல விழியிருப்பவர்கள் ஏதோவொரு சமயத்தில் வந்து படிப்பார்கள் என்ற கருத்தில் இன்று வரையிலும் உறுதியாக இருக்கின்றேன்.

ல்லா பத்திரிக்கைகளிலும் பார்த்துக் கொண்டே தான் வருகின்றேன். பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளில் கூட இது குறித்த செய்தி வேறொரு பத்திரிக்கையில் வந்தது என்று சொல்லிவிட்டு அது குறித்த விபரங்களை குறிப்பிடுவார்கள். அது எந்த பத்திரிக்கையில் வந்தது என்று கோடிட்டி கூட காட்டமாட்டார்கள்.  அதைப்போலவே வலைபதிவுகளிலும் ஒரு கலாச்சாரம் கடைபிடித்துக் கொண்டு வரப்படுகின்றது.  தாங்கள் ரசித்த எந்த தளத்தையும் மறந்து கூட தங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்வதில்லை என்பதை உறுதியாக கடைபிடித்துக் கொண்டு வருகின்றார்கள்.  

இது கொஞ்ச காலமாக மனதில் ஒரு உறுத்தலாகவே இருக்க படித்த சில சிறப்பான தளங்களை இங்கு பகிர்ந்து கொண்டே வருகின்றேன்.  மற்றவர்களை அறிமுகம் செய்வதில் நமக்கு தயக்கம் இருக்கின்றது என்றால் நம் திறமையில் நமக்கே சந்தேகம் உள்ளது என்று அர்த்தம்.

நான் பார்த்த, படித்த தளங்களை கட்டுரைகளின் இடையே இணைப்பாக கொடுத்துக் கொண்டு வருகின்றேன்

இயக்குநர். மணிவண்ணன் இறப்பு குறித்து நான் பகிர்ந்த தளம் பலரின் பார்வைக்கும் சென்றது.

காரணம் அந்த கட்டுரை நிகழ்கால மக்களின் மனோபாவத்தை அழகாக சுட்டிக்காட்டியிருந்தது.

அதைப் போல நான் சமீபத்தில் படித்த வினவு தளத்தில் வந்த பாட்டில் தேசம் கட்டுரை.

இதை கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்த போது ஒருவர் எழுதியிருந்தார்.  சில கட்டுரைகளை படித்து முடிக்கும் போது நிகழ்கால சந்தோஷங்கள் அத்தனையும் மறந்து ஒரு இயலாமை மனதில் வந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது என்றார்.

மாற்றம் என்பது நம்மிலிருந்து தொடங்குவது.

னோ தெரியவில்லை? வரலாற்று சம்பவங்களைப் பற்றி தேடிப்படிக்கும்  பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது.  சமீப காலமாக நான் விரும்பி படித்துக் கொண்டிருப்பது எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தும் எழுத்தாளர் எஸ்ரா என்று அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணன்.

குறிப்பாக இந்தியாவின் சரித்திரம் சார்ந்த அவரின் எழுத்து நடையும், சொல்லும் விதமும் என்னைக் கவர்வதாக இருக்கின்றது.  ஆனால் பத்திரிக்கையின் குறிப்பிட்ட பக்க அளவுக்கு வரும் அவரின் கட்டுரைகள் முழு வீச்சோடு வருவதில்லை என்ற வருத்தம் மட்டும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

யோ ஏனிந்த நிலைமை என்று யோசிக்க வைக்கின்றது. 

இந்தியாவின் சரித்திரம் சார்ந்த நிகழ்வுகள் குறித்து எவர் எழுதினாலும் கட்டாயம் சில பல ஆங்கிலப் புத்தகங்களைத்தான் எப்போதும் ஆதாரமாக காட்டுகின்றார்கள்.  நாலைந்து வருடமாக ஏன் நம்மவர்கள் எவருமே இது போன்ற விசயங்களை எழுதுவதில்லையா? என்ற குழப்பம் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.  

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் வாழ்க்கையில் அறிமுகமான பின்பு நினைத்த நேரத்தில் குறிப்பிட்ட விசயத்தைப் பற்றி புரிந்து கொள்ள அவரை அழைத்து கேட்டுக் கொள்வதுண்டு.

"வரலாற்றுச் செய்திகள் என்றால் எழுதும் நபர் அந்த நாட்டுக்கு அல்லது அந்த இடத்திற்கே சென்று வாழ்ந்து அறிந்து புரிந்து எழுத வேண்டும்.  தொடக்கம் முதல் நம்மவர்களுக்கு இது போன்ற விசயங்களில் ஆர்வம் இருப்பதில்லை என்பதோடு இன்று வரையிலும் பொருள்வாதிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பதால் மேலைநாட்டினர் மட்டுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இது போன்ற அரிய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வந்துள்ளனர்" என்றார்.

நம் நாட்டைப் பற்றி அறிய இன்னமும் நாம் அடுத்தவரைத் தான் சார்ந்துள்ளோம் என்பது தான் இன்று வரையிலும் நாம் சாதித்த சாதனை?

ப்பாரி போலவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்த பதிவுகள் கட்டுரைகள் என் பார்வைக்கு தெரிகின்றது. 

சில வாரங்களுக்கு முன்பு நரேந்திர மோடி குறித்து எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் ஒவ்வொரு பதிவுக்கும் வருகின்ற எதிர்வினைகளை பார்த்த போது அந்த ஆசையே போய்விட்டது. முகநூல் முதல் வலைபதிவுகள் வரைக்கும் ரவுண்டுகட்டி மங்கத்தா ஆட்டத்தை ரணகளமாக நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அய்யோ இவர் வந்தால் பெரிய ஆபத்து என்கிற கூட்டம் ஒரு பக்கம்.  இவர் வந்தால் நாடு உருப்படும் என்கிற கூட்டம் மறுபக்கம்.  

ஆனால் "அரசியல் வரலாற்று சாதி சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதாதே" என்கிறார் ஞானாலாயா கிருஷ்ணமூர்த்தி.

"அது உனக்கு எதிரிகளைத்தான் அதிகம் பெற்றுத்தரும்.  படிப்பவர்களும் அதன் நம்பகத்தன்மை குறித்தோ அதில் சொல்லப்படுகின்ற விசயங்கள் குறித்தோ எவரும் அக்கறை காட்ட மாட்டார்கள். அவர்கள் பார்வையில் எப்படி தெரிகின்றதோ அப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள். முஸ்லீம் என்றால் இந்துக்கு எதிரி. இந்து என்றால் முஸ்லீம்க்கு எதிரி. இது போல கிறிஸ்துவம் என்றால் அதற்கு தனியாக ஒரு கோஷ்டி" இதே போல ஒடுக்கப்பட்டடவர்கள், தாழ்த்தப்பட்டவர்களை குறித்து உன் பார்வையில் எழுதினால் நீ சாதி வெறி பிடித்தவன் என்று அடையாளம் காணப்படுவாய்? என்று தனிப்பட்ட பல நபர்கள் மூலம் உதாரணம் காட்டி அறிவுரை சொன்னார்.

"கட்டுரை இலக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் மிகக்குறைவு.  உனக்கு இயல்பாகவே இது கைவந்த கலையாக இருப்பதால் அதில் மட்டும் கவனம் செலுத்து" என்கிறார்.  அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்களைப் பற்றி காரண காரியத்தோடு அவர் ஆதாரப்பூர்வத்தோடு பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.  

அவர் சொன்ன அறிவுரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் ஒரு அரசியல் கட்டுரை எழுத நிச்சயம் ஆதாரப்பூர்வமான தகவல்கள் அடிப்படையாக வைத்து அதை செதுக்க வேண்டும். சும்மா ஜல்லியடிப்பது என்பது குப்பையில் கலந்த மற்றொரு குப்பையாகத்தான் போய்விடும் என்பதால் சமய சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றேன். ஆனால் நான் மோடி குறித்து படித்த சிறப்பான கட்டுரையில் ஒன்று எழுத்தாளர் ஞாநி அவர்கள் எழுதிய கட்டுரை

ஞாநி அவர்களின் மோடி குறித்த பார்வைக்கும் என் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் ஒரு அரசியல் கட்டுரையாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது இது போன்ற அற்புதமான தகவல்களின் கோர்வையில் தான் எழுத்தாளரின் வெற்றி இருக்கிறது.

ராயிரம் பார்வையை இன்றைய நம்முடைய கல்வித்திட்டங்கள் தந்து என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் சென்ற புதுக்கோட்டை பயணத்தில் நண்பர் ஒருவரை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார்.

ஆள் குட்டையாக கட்டையாக என் மார்பு உயர்ம் அளவே இருந்தார்.  ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவதாக சொன்னபோது கிறுக்குத்தனமாக "உங்களை பசங்க கலாய்ப்பார்களே" என்று உளறி வைத்து விட்டேன்.  அவரும் கூச்சப்படாமல் "கொஞ்சம் உண்மை தான். ஆனால் நீங்க நினைப்பது போல தனியார் கல்லூரியில் மாணவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது.  ஏறக்குறைய மற்றொரு பள்ளி வாழ்க்கை தான்" என்றார்.  

காரணம் ஒவ்வொரு மாணவனின் மதிப்பெண் குறித்து ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் அதிக கவனம் வைப்பதால் ஒவ்வொரு மாணவனுக்கும் மறைமுக சிறை வாழ்க்கை தான் என்றார். "உங்கள் பணி எப்படியுள்ளது?" என்ற போது அவர் பங்குக்கு பொங்கி விட்டார்.  கல்லூரி விடுமுறை விட்டதும் பணியாற்றும் குறிப்பிட்ட கல்லூரியின் பெருமைகள் அடங்கிய மொத்த பைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு இடங்களிலும் பிள்ளை பிடிக்கப் போகின்றவர்கள் போல நிற்க வேண்டும்.

இதிலும் டார்க்கெட் போன்ற சமாச்சாரங்கள் உண்டு.  காரணம் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகி விட்டதால் ஒவ்வொரு +2 தேர்வு முடிவு வெளிவரும் சமயத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கல்லூரியும் இப்படித்தான் மாணவர்களை தங்கள் கல்லூரிக்கு வளைத்து உள்ளே கொண்டுவருவதாகச் சொன்ன போது என் மனதில் ஆச்சிரியமாக பல விசயங்கள் வந்து போனது. 

ஆகா நாம் படிக்கும் போது கல்லூரி வாசல் கதவு திறக்காதா? என்று தவமாய் தவம் இருந்தோம்.  விண்ணப்ப படிவம் வாங்கவே தள்ளு முள்ளு தாண்டி சென்று அதனை வாங்க வேண்டும். பூர்த்தி செய்து கொடுத்தாலும் நமக்கு கிடைக்குமா? கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தூக்கம் வராத நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. 

ஆனால் இன்று  கல்வி தெரு வரைக்கும் வந்து மாணவர்களை மரியாதையுடன் அழைத்துச் செல்வதாக மாறியுள்ளதே? என் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் மருத்துவ படிப்பும் இப்படி ஆயிடுமோ?

திறந்து வைத்தால் எல்லாமே இப்படித்தானோ?

25 comments:

எம்.ஞானசேகரன் said...

பல கூட்டுக் கலவைகளின் தொகுப்பு. அனுபவங்களை எழுத்தாக்குவது மேலும் மேலும் மெருகேறுக் கொண்டு வருகிறது.

நான் கூட நமது பதிவுகளை யாரும் திருடக்கூடாது என்பதற்காக ஒரு ஆர்வம் காரணமாக ஆரம்பத்தில் யாரும் வெட்டி ஒட்டாதடி செய்திருந்தேன். அப்புறம் மறந்தே போனேன்.

நல்ல தளங்களை படிக்க வாய்ப்பு கிடைக்கும் போது அதற்கு நம்முடைய தளத்திலும் இணைப்பு கொடுப்பது நல்ல விஷயமே. நானும் இனி முயற்சிக்கிறேன்.

ஒரு வகையில் மனம் திறந்து எழுதக்கூட பயமாய்த்தான் இருக்கிறது. அரசியல் பற்றியோ, ஜாதிகள் பற்றியோ, மதங்கள் பற்றியோ, காதல், காமம் குறித்தோ எப்படி மனதில் தோன்றுவதை எழுதுவது? எல்லாவற்றிற்கும் எதிர்ப்புகள் தோன்றி கும்மியடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஆபாசமான வசவுகள் என்றால் கஷ்டம்தான்.

இணையதளம் என்பதே நம் இருப்பை, நமது எண்ணங்களை பகிரத்தான். இன்னும் நமக்கு பிடித்த விஷயங்கள், சில முக்கியமான நிகழ்வுகள் என ஒரு பெட்டகம் போலவும் பயன்படுத்தலாம்.

அடுத்தவர் பற்றிய அக்கறை இல்லையென்றால் நம் இஷ்டத்துக்கும் கலக்கலாம்.

அதானல் தான் புனைப்பெயர் என்கிற முகமூடி போடவேண்டி இருக்கிறது.

தி.தமிழ் இளங்கோ said...

// நான் தினமலரில் படித்த கட்டுரைகளின் அடிப்படையில் எழுதாமல் அதை என் பார்வையில் என் வாழ்வில் உள்ள அனுபவங்களைக் கொண்டு எழுதினேன். இன்று டாலர் நகரம் புத்தகம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் இளம் முனைவோர் பட்டம் வாங்கப்போகும் ஒரு பெண்மணி தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைக்காக என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தை எடுத்துள்ளார். இந்த கட்டுரை வருகின்ற ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் சமர்ப்பிக்கப் போவதாக சொல்லியுள்ளார். //

உங்களது “டாலர் நகரம்” – குறித்த எனது விமர்சனத்தின் முடிவுரையில்
( http://tthamizhelango.blogspot.com/2013/03/blog-post.html )

// ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய “டாலர் நகரம்” – என்ற நூல் அனைவருக்கும் பயன்படக் கூடியது. எனவே இந்நூலை ஆங்கிலம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்த நூலுக்காகவே ஆசிரியருக்கு “முனைவர்” பட்டம் தரலாம். //

என்ற எனது ஆசை, மெய்ப்படும் நாள் தூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.

// ஆனால் "அரசியல் வரலாற்று சாதி சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதாதே" என்கிறார் ஞானாலாயா கிருஷ்ணமூர்த்தி. //

அரசியல், ஜாதி மற்றும் மதம் இவற்றோடு, இன்னொன்றையும் சொல்லலாம். அது இலங்கைத் தமிழர் பிரச்சினை.

வவ்வால் said...

ஜோதிஜி,

இப்பதிவு வழக்கம் போல "நான்,எனது" என்ற வகையறா கட்டுரையாகத்தான் இருக்கு :-))

நீங்க போயஸ் தோட்டத்தில் இருக்க வேண்டியவர்!

//பெரும்பாலும் நூறில் இரண்டு பேர்கள் கூட ஆர்வத்துடன் தேடுதலுடன் வலைபதிவில் படிக்க வருபவர்கள் இல்லை என்பதே நான் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை.
//

நீங்க ஏன் அந்த ரெண்டு பேரில் ஒருத்தராக முயற்சிக்க கூடாது(ஹி..ஹி அந்த இன்னொருத்தன் அடியேன் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு), தேடுதலுடன் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பியுங்கள், உங்கள் பார்வை விசாலமாகும்.

// நான் அவ்வாறு எதையும் தொடக்கம் முதல் குறிப்பிடுவதில்லை.

காரணம் எனக்குச் சொந்தமானது என்று இங்கு எதுவுமே இல்லை.
//

அப்படிக்குறிப்பிடாமல் எழுதுபவர்கள் எல்லாம் அவங்களே "ரூம் போட்டு யோசிச்சு சொந்தமாக எழுதுவதாக" நினைப்பவர்க்ள், நீங்களே குறிப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு ,எனக்கு சொந்தம்னு நினைக்கவில்லை என்பதே முரண்பாடானது. அப்படி எனக்கு சொந்தமானது இல்லை என நினைப்பவர் எனில் தரவுகளை வெளிப்படையாக குறிப்பிடவும்.

வவ்வால் said...

விட்டுப்போச்சு,

//டாலர் நகரம் புத்தகம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் இளம் முனைவோர் பட்டம் வாங்கப்போகும் ஒரு பெண்மணி தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைக்காக என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தை எடுத்துள்ளார். இந்த கட்டுரை வருகின்ற ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் சமர்ப்பிக்கப் போவதாக சொல்லியுள்ளார்.

முதன் முறையாக ஒரு பெண் என்னை பேட்டி காணப் போகின்றார்.//

வாழ்த்துக்கள்!

# //இந்தியாவின் சரித்திரம் சார்ந்த நிகழ்வுகள் குறித்து எவர் எழுதினாலும் கட்டாயம் சில பல ஆங்கிலப் புத்தகங்களைத்தான் எப்போதும் ஆதாரமாக காட்டுகின்றார்கள். நாலைந்து வருடமாக ஏன் நம்மவர்கள் எவருமே இது போன்ற விசயங்களை எழுதுவதில்லையா? என்ற குழப்பம் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது. //

நீங்க தேடிப்படிச்சிப்பார்த்துட்டு ஒரு கருத்தை சொல்லி இருக்கலாம், ஏகப்பட்ட இந்திய ஆசிரியர்கள் நூல்கள் இருக்கு,ஆனால் அதை எல்லாம் சொன்ன கவுரதையா இருக்காதுனு ஆங்கில ஆசிரியர்கள் நூல்களையே சொல்வாங்க,அதையும் நம்பிட்டு இருக்கிங்க, முதலில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய சில நூல்களையாவது படிச்சுப்பாருங்க.

ஆனால் இதில் என்ன டிரிக்குனா இந்திய ஆசிரியர்கள் கொஞ்சம் மறைப்பாங்க ,அதை வெள்ளைக்காரன் மறைக்கமாட்டான், வெள்ளைக்காரன் மறைச்சதை இந்திய ஆசிரியர்கள் வெளிப்படுத்திடுவாங்க எனவே ஒரே வகைக்கு ரெண்டு புக்கும் படிச்சாத்தான் "முழு உண்மை" வெளிப்படும்.

Valmeegy said...

ஜோதிஜி, வவுஜி வந்துடருல்ல வந்துடருல்ல வந்துடருல்ல
சும்மா எங்கியாவது ஆரம்பிக்க வேண்டியது ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி அடுத்த பராவுலையே மாத்தி சொல்ல வேண்டியது,இருட்டா இருந்தாலும் கண்ணு தெரியுமாக்கும்.
தலை கீழாய் பார்த்தாவது கண்டு புடிசிடுவோம்

வவ்வால் said...

தி.தமிழிளங்கோ சார்,

// இன்னொன்றையும் சொல்லலாம். அது இலங்கைத் தமிழர் பிரச்சினை.//

இத எப்பவோ சொல்லிட்டேன், ஆனால் நான் சொன்னது வேறக்காரணத்துக்காக ,மேம்போக்க விக்கிப்பீடியா மட்டுமே படிச்சிட்டு எழுதுறாப்போல இருக்கு,எனவே நன்றாக படித்து எழுதவும் இல்லைனா எழுதாமலே இருக்கலாம்னு சொன்னேன்.

ஆனால் "ஈழத்தமிழர் பிரச்சினை"னு எழுதினால் வேறு சில பல லோகாதாய அனுகூலங்கள் உண்டு, அதெல்லாம் புரியாம நாம பாட்டுக்கு "கருத்து" சொன்னா முட்டாப்பசங்கனு தான் பேரு கிடைக்கும் :-))

இத சொன்னதுக்கு என்ன "பட்டம்" கிடைக்க போகுதோ, பட்டம் பற பற , குருவி பற பற ,மைனா பற பற ... யே யேஹ்!

? said...

ஜோதிஜி, பிரபல பதிவர் வவ்வாலுடன் சேர்த்து எழுதி லெட்டர்ஸ் டு எடிட்டர் டைப்பில் பின்னூட்டம் மட்டும் போடும் சாதாரண வாசகனான எனக்கும் ஓசி விளம்பரம் குடுத்துள்ளீர்கள் (இதை வைத்து ஒரு சிங்கிள் டீகூட வாங்க முடியாது என்பது வேறு விடயம்.) எப்போதும் தகுதிக்கு மீறிய பாராட்டினை வழங்குபவர் தாங்கள் - எனது தெரிந்த தமிழை பாரட்டியது கூட அந்த வகைதான். ஆனால் பாராட்டுக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காகவாவது உழைக்க வைக்கும் வகையறா உமது பாராட்டுக்கள்.

ஜெயகாந்தன் 'இப்ப படிப்பவர்களை விட எழுதுபவர்கள் அதிகமாகவிட்டார், அதான் நான் எழுதுவதில்லை' என்ற காலத்தில் இணையம் இல்லை. இப்போது இன்டர்நெட் யுகத்தில் கூகில் பண்ண தெரிந்தவன் எல்லோரும் எழுத்தாளராக கருதப்படும் சாத்தியக் கூறு உள்ள காலத்தில் அனைவரும் பாராட்டும் படி ஒரு புத்தகம் எழுதி அதையும் அக்டமிக் முக்கியத்தும் பெற்றதாக ஆக்குவது பெரிய விடயம்தான். வாழ்த்துக்கள்!

//அரசியல் வரலாற்று சாதி சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதாதே//

அநேகமாக இவை குறித்துதான் பாதிக்கும் மேற்பட்ட பதிவுகள் வருகின்றன என நினைக்கிறேன். இலக்கியம், தத்துவம் போன்றவை குறித்தெல்லாம் ஆர்வமுள்ளோரும் எழுதுபவரும் குறைவுதான், இல்லையா. மேலும் பின்னூட்டக்காரர்கள் வரலாறுடன் புவியியல், அறிவியல் என ஐட்டங்களை சேர்க்க ஆரம்பித்தால் அநேக எழுதுவதற்கே விடயமில்லாமல் போகும் அபாயமிருக்கிறது.

Avargal Unmaigal said...

உங்கள் பதிவை படித்தேன்... பதிவின் நீளம் மிக அதிகம். அதுபோல அத்ற்கு கருத்து இடவேண்டுமானாலும் நீளமாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது அதனால் சில சம்யங்களில் படித்தாலும் கமெண்ட் இட முடியாமல் போகிற்து. முடிந்தால் தலைப்பை ஒட்டி சிறிய பதிவாக இடுங்கள் உதாரணமாக திறந்து வைப்பது நல்லதா? என்று தலைப்பை வைத்தீர்களானால் அதை ஒட்டி மட்டும் எழுதுங்கள்... ஆனால் நீங்கள் அந்த தலைப்பை வைத்துவிட்டு அதைப்பற்றி பேச ஆரம்பித்து இறுதியில் நீங்கள் முடிக்கும் போது வேறு எங்கோ போய் முடிந்தது போல இருக்கீறது


அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களை விட உங்கள் எழுத்தும் கருத்தும் மிக அதிக தேர்ச்சி மிக்கதாக இருப்பாதாக எனக்கு தோன்றுகிறது. நிறைய உங்களிடம் சொல்லத் தோன்றுகிறது ஒரு நாள் உங்களுக்கு போன் பண்ணித்தான் பேச வேண்டும் நான் போனில் யாரிடமும் சாட்டில் யாரிடமும் பேசுவதில்லை ஆனால் ஒரு நாள் உங்களிடமும் திண்டுக்கல் தனபாலிடமும் பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் பேச நினைக்கும் போதே அவர்களை நாம் தேவையில்லாமல் தொந்தரவு ப்ண்ணுகிறோமோ என்று நினைத்து கூப்பிடவே தயக்கமாக இருக்கிறது

ஜோதிஜி said...

இளங்கோ உங்கள் விமர்சனத்தின்படி வேறு சிலதும் நடந்து கொண்டிருக்கின்றது.வேறொரு சமயத்தில் அதை பகிர்ந்து கொளகின்றேன். பெருமகனார் ரொம்ப ஓய்வா இருப்பார் போல. பறந்து பறந்து தாக்குறார்.

ஜோதிஜி said...

நீங்க சொன்னது உண்மை தான். நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய பல நூல்களை ஞானாலயா எடுத்துக்காட்டினார். கடைசி இரண்டு பத்திகளை அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன்.

ஜோதிஜி said...

நான் இதைத் சொன்னா என்னை மிரட்டுவாரு.

ஜோதிஜி said...

இன்னும் சில பதிவுகளுடன் ஒரு பெரிய இடைவெளி விட நேரம் வந்து விட்டது நந்தவனம்.

ஜோதிஜி said...

ஏன் கடிதம் எழுதலாமே. இது டைரிக்குறிப்புகள் போல. அவ்வப்போது எழுதி வைப்பதுண்டு. வேறு வழியில்லை. ஒரு இடைவெளி விட்டு எழுத வருவேன். அப்போது நீங்கள் சொன்னதை கவனத்தில் வைத்துக் கொள்கின்றேன். நன்றி.

ஜோதிஜி said...

புனைப்பெயர் வைத்து எழுதுபவர்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் எழுதிக் கொண்டிருப்பவர்கள் குறித்து ஒரு பதிவாக எழுத வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன்.

Avargal Unmaigal said...

முகமூடி போடுவது என்னவெல்லாம் சொல்லலாம் என்பதற்க்காக அல்ல.... ஒரிஜனல் பெயரைப் போட்டால் நீ இந்த ஜாதி இந்த மதம் என்று சொல்லி நாம் சொல்ல வந்த விஷயத்தை திசை திருப்பவர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கதான்

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வதும் உண்மை தான். எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்த உதவும். எது குறித்தும் கவலைப்படத் தேவையிருக்காது.

ஜோதிஜி said...

நன்றி.

Avargal Unmaigal said...

ஜோதிஜி என்ன ஆச்சு ஏன் இந்த இடைவெளி தகவல்

ஜோதிஜி said...

இது புதிதல்ல நண்பா. வருடந்தோறும் குறிப்பிட்ட மாதங்கள் எழுதாமல் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் பழக்கம் உண்டு. சென்ற வருடம் முதல் ஆறு மாதங்கள் எழுதவிலலை. தொடர்ந்து என்னை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஆச்சரியமல்ல.

வவ்வால் said...

ஜோதிஜி,

//நான் இதைத் சொன்னா என்னை மிரட்டுவாரு.//

ஜம்படிச்சு ,மாத்தி சொல்றதா உங்களைத்தான் வால்மீகி சொல்லுறார்,என்னையல்ல, என்னக்கொடுமை சார் இது ,தன்னைத்தான் சொல்லுறாங்கனு கூட புரியாத நிலையில் இருக்காரே அவ்வ்!

கூகுள் மூலம் பெறப்படும் தகவல்களை குறிப்பிட்டு நன்றி என சொல்வதே சரியான அனுகுமுறை,ஆனால் அப்படிலாம் செய்ய மாட்டேன்,ஏன்னா இங்கே எதுவும் யாருக்கும் சொந்தமில்லைனு சொல்வது ,செய்த திருட்டை நியாயப்படுத்தும் செயல். நீங்க அப்படித்தான் பேசிட்டு இருக்கீங்க.அதைத்தான் நான் குறிப்பிட்டேன்,என்னமோ நான் மாத்தி சொலிட்டாப்போல சொன்னா மிரட்டுவாருனு சொல்லிக்கிட்டு.

இணையத்தில் பெற்றதை குறிப்பிட்டு நன்றி சொல்லுபவர்கள் பலர் இருக்காங்க,தி.தமிழிளங்கோ சார் கூட படங்கள் எடுத்துப்போட்டால் ,நன்றி கூகுள்னு சொல்லும் வழக்கம் உள்ளவர், நான் எப்பொழுதும் எல்லாம் கூகிளாண்டவர் கடாட்சம்னு சொல்லிடுவேன்,தரவுகளும் கொடுத்து நன்றி சொல்லிடுவேன்.ஏனெனில் நான் எழுதுவது எல்லாம் என்னோட "கண்டுப்பிடிப்பு" ரூம் போட்டு யோசிச்சு எழுதுன எழுத்துனு யாரையும் ஏமாற்ற விரும்புவதில்லை.

# ஓய்வா இருந்தா பின்னூட்டம் தான் போடுவேன்,நான் பதிவு போட்டு பல நாள் ஆச்சு,,நீங்க ஓய்வா இருந்தா பதிவே போடுவீங்க :-))

வவ்வால் said...

ஜோதிஜி,

//நீங்க சொன்னது உண்மை தான். நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய பல நூல்களை ஞானாலயா எடுத்துக்காட்டினார்.//

ம்கூம் நான் சொன்னதும் ஆமாம்னு சொல்லிடுங்க,ஆனால் பதிவுல இந்தியர்கள் யாருமே வரலாற்று நூல்கள் எழுதலையானு நாலஞ்சு வருஷமா யோசிச்சேன்னு சொல்லுங்க :-))

ஞானாலயானு அருமையான நூலகத்தினை அனுகும் வசதி உங்களுக்கு வாய்ச்சும் இப்படி இருக்கிங்களே, ஒருக்கா அந்த பக்கம் வந்தால் நூலகத்தினை பார்க்கனும்.

கே.ஏ.நீலகண்டம் அல்லாமால்.இன்னொரு ஏ.நீலகண்டம் என்பவரும் வரலாற்று நூல்கள் எழுதி இருக்கார்,ஶ்ரீனிவாச அய்யங்கர், திரு.வி.க கூட விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்குனு ,எழுதி இருக்கார், வானமாமலை என்பவரும் எழுதி இருக்கார், வி.எஸ்,நைப்பால், அமர்த்தியா சென் ,ராமசந்திர குஹா, ரோமிலா தாப்பர், பிபின் சந்த்ரா என நிறைய பேரு வரலாறு எழுதி இருக்காங்க,ஆனாலும் நம்ம இந்திய மனப்பான்மை படி நாம வெள்ளைக்காரன் புக்க தான் ரெஃபெரன்சா காட்டுவோம் :-))

சவார்க்கார் போன்றவர்கள் எழுதிய இந்திய வரலாற்றால் தான் ,காவித்துவமான வரலாறு எழுத நிறைய பேரு கிளம்பி,இந்திய வரலாற்று ஆசிரியர்களின் நம்பகத்தன்மை குறைய ஆரம்பிச்சது எனலாம்.

vishwa said...

'நம் நாட்டைப் பற்றி அறிய இன்னமும் நாம் அடுத்தவரைத் தான் சார்ந்துள்ளோம் என்பது தான் இன்று வரையிலும் நாம் சாதித்த சாதனை?'

முற்றிலும் உண்மை. ஒவ்வொருவரின் குடும்பப்பின்னணி குறித்த தகவல்கள் மூன்று தலைமுறைக்கு முன்னாள் தேடினால் கூட கிடைப்பதில்லை (தாத்தாவின் அப்பாவின் பெயர் கூட) பெரும்பாலோரின் நிலை இதுதான். எழுதுவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.தயவுசெய்து நீண்ட இடைவெளி
விட்டுவிடாதீர்கள்.
பகிருவுக்கு நன்றி.

? said...

உருப்படியாக எழுதுபவருள் ஒருவரான சகோ சார்வாகன் ஸ்லோவாகி விட்டார். இக்பால் கடையையே மூடிவிட்டார் போலிருக்கிறது. நீங்கள் இடைவெளி விடப் போகிறீர்கள். இடைவெளி நிச்சயம் புத்துணர்வு தரும். நன்றி

மின்துறை செய்திகள் said...

முடிவைத்தால்தான் நமது நாட்டின் மிக சிறந்த வைத்திய முறைகள் அழிந்துவிட்டன அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுத்தால்தான் ஆங்கில மருத்துவம் வளர்ச்சியடைந்நதுள்ளது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.