1995 ஆம் ஆண்டு. பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு சீன விஞ்ஞானிகள் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தனர்.அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக இந்த ஆய்வுக்கட்டுரை சீனாவில் உள்ள பல துறைகளுக்குச் சென்றது. ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும் அந்த கட்டுரையில் உள்ள சாத்தியக்கூற்றை ஆராய்ந்தனர்.
கடைசியாக "முடியும்" என்றும் நாம் செயலில் இறங்கலாம் என்று சீன அரசாங்கம் பச்சை கொடி காட்டியது. இன்று உலகின் கண்களுக்கு மண்ணைத்தூவி விட்டு, அந்தத் திட்டத்தின் வேலைதான் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆமாம்.
சீனா தனது ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் ஓடிவரும் சேங்போ என்றழைக்கப்படும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறது. எந்த விளம்பரமும் இல்லாமல் வீண் விவாதங்கள் இல்லாமல் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சில துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. நிதி, விவசாயத்துறை, தொழிற்துறை. ஆனால் இந்த மூன்றும் நிலையாக இருக்க உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உள்துறை முக்கிய பங்காற்றுகின்றது.
இவற்றையெல்லாம் விட அதி முக்கியமானது வெளியுறவுத்துறை.
இந்தியாவின் நிதித்துறையை கையில் வைத்திருக்கும் பிராணாப் முகர்ஜியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. காலஞ்சென்ற பிரமோத் மகாஜன் எப்படி தன்னை நான் அம்பானிக்கு பிறக்காத மகன் என்று சொல்லியிருந்தாரோ அதனைப் போலவே இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் நாட்டை விட நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கார்ப்பரேட் கனவான்களே முக்கியமானவர்கள். நிதித்துறை குளறுபடிகளை கவனிப்பதை விட எப்படி பிரதமர் பதவியை கைப்பற்றுவது என்பதில் தான் அதிக கவனமாக இருக்கிறார். எங்கே மன்மோகன் சிங்கிற்கு அடுத்து ப.சிதம்பரம் வந்து விடுவாரோ என்று அவரால் முடிந்த அத்தனை தகடுகித்த வேலையை செய்து கொண்டிருந்த போதிலும் சோனியா ஆதரவில்லாத காரணத்தால் ஒவ்வொருமுறையும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்.
கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை தொகுதியில் தோற்ற போதிலும் குளறுபடிகள் செய்து குறுக்குவழியில் சென்ற ப.சிதம்பரத்திற்கு உள்துறை அமைச்சர் பதவியென்பது வேப்பங்காய் போன்றது. அவர் எதிர்பார்த்திருந்தது நிதித்துறையே.
ஆனாலும் வேண்டா வெறுப்பாகவே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸின் முதல் ஐந்தாண்டு காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக பதவியில் இருந்து ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற பெரும்புகழை அடைந்தார். அத்துடன் உள்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை பஞ்சம் பிழைக்க வைத்ததில் முக்கிய பங்காற்றினார். இப்போது கூட பாகிஸ்தானிடம், மாவோஸிட்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
அடுத்து தியாகச் செம்மல் சரத்பவார். இவர் பெயர் சொன்னாலே போதும். தரம் எளிதில் விளங்கும். அடுத்து 50 ஆண்டுகள் கழித்து கூட வரக்கூடிய விவசாயிகள் மறக்க முடியாத நபர்.
ஆனால் இவர்களுக்கு அப்பாற்பட்டு ஒரு திறமைசாலி தான் நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா. வெளியுறவுத்துறை என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அதிபுத்திசாலி. அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை கூட மாற்றி படித்து சிறிது கூட வெட்கப்படாமல் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அற்புதமாக கையாண்டு கொண்டிருக்கிறார்.
இதைவிட இந்தியாவிற்கு என்ன பெருமை வேண்டும். இவர்களை தேர்ந்தெடுத்த சோனியாவிற்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த கிருஷ்ணா தான நாம் சீனாவைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை பாப்பா என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சீனாவின் தொழிற் புரட்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இத்துடன் விவசாயத்துறையும் கூட.
உடனடி திட்டங்கள், அடுத்து வரும் திட்டங்கள், நீண்ட கால திட்டங்கள் என்று மூன்று விதமாக பிரித்து ஒவ்வொன்றையும் உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக சீன ஆட்சியாளர்கள். செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய உணவுப் பஞ்சம் எப்படி சவாலைத் தரப்போகின்றதோ அதே சவால் சீனாவுக்கு உண்டு என்ற போதிலும் அதற்கான முயற்சியை 15 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கி விட்டனர் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஆப்ரிக்க நாடுகளில் நிலங்களை குத்தகை அடிப்படையில் வாங்கி அதில் பயிர் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
சீனாவின் செயல்பாடுகள் அத்தனையும் நம் அமைச்சர்களுக்கு கண்களுக்கு தெரிவதில்லை. காரணம் இவர்களுக்கு உண்மையான வேலை பல இருக்கிறது. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை.
சீனா பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதன் முக்கிய நோக்கம் மின்சாரத்திற்கு என்றபோதிலும் இந்த திட்டத்தின் மூலம் ஆற்றின் நீரை சீனாவின் வறண்ட பகுதிகளுக்கு திசை திருப்புவதே மற்றுமொரு நோக்கமாகும். ஆனால் இன்று வரைக்கும் இந்த செய்தியை சீனா உறுதிப்படுத்தவில்லை. ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகள் அத்தனையும் அரசல்புரசல் தான். காரணம் சீன ஆட்சி என்பது இரும்புக்கோட்டையில் இருக்கும் முரட்டுச் சிங்கம்.
எவருக்கு அருகில் சென்று பார்க்கத் தைரியம் வரும்?.
இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் 19 ஆறுகளில் பிரம்மபுத்திராவும் ஒன்று. செமமயுங்டங் பனிப்பாறைகளில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறு சீனா, பூடான்,இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 2900 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கிற்து. திபெத்தில் யார்லாஸ் சாங்க்போ என்று அழைக்கப்படுகின்றது. உலகத்திலேயே மிக உயரத்தில் இருந்து பாயும் ஆறுகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இந்த ஆறு பலவிதமான நிலப்பரப்புகளையெல்லாம் கடந்து காடுகளையும் கடந்து பயிர்விளையும் நிலத்தை அடைந்து செழிக்கச் செய்கின்றது.
பிரம்மபுத்திரா டெல்டாப் பகுதி 580000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும். இதில் 50 சதவிகிதம் அளவு சீனாவிலும். 33.6 சதவிகிதம் இந்தியாவிலும் 6 சதவிகிதம் பங்களாதேஷ் பகுதியிலும் 7.8 சதவிகிதம் பூடானிலும் உள்ளது.
திபெத்திலிருந்து இந்த ஆறு 3500 மீட்டர் உயரத்திலிருந்து பாய்ந்து வருகின்றது. இந்த ஆறு ஓடி வரும் மலைகளுக்கு இடையே உள்ள இடைவெளி என்பது உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்த நதி இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாஸிகட் என்ற இடத்தில் முடிவடைகின்றது.
3500 மீட்டர் உயரத்தில் இருந்து வரும் இந்த ஆறு இறுதியாக 155 மீட்டர் உயரத்திற்கு வருகின்றது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆறு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 17 மீட்டர் என்ற அளவில் சாய்நது பயணித்துக் கொண்டு வருகின்றது. கவுகாத்தி பகுதியில் இதன் அளவு ஒரு கிலோ மீட்டருக்கு 10.செ.மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த நதியை தடுத்து நீரை தங்கள் நாட்டுக்கு திருப்பி விடத்தான் சீனா இப்போது முழுமூச்சாக செயலில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே நாம் பார்த்தோமே?
கங்கை காவேரி ஆற்றுகளை இணைத்தால் தேசிய பேரழிவு என்று நம்மவர்கள் சொன்னார்களே?
அப்படி என்றால் பிரம்மபுத்திரா நதியை அதன் போக்கில் இருந்து மாற்றினால் என்ன ஆகும்?
அதனைப் பற்றி பின்னால் பார்க்கலாம்.
கங்கை காவேரி இணைப்புத்திட்டத்தில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு சவால் நிறைந்த வேலை.
எது குறித்தும் அச்சப்படாத வீரனைப் போலத்தான் இந்த நதியின் பயணமும் வேகமும் இருக்கிறது. இந்த வீரனைத் தான் சீனா அணுக்கதிர் என்ற மாயவித்தையைக் கொண்டு தன் வசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நம்மவர்களுக்கு எந்த திட்டத்தில் கைவைத்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதில் குறியாக இருப்பவர்கள். ஆனால் சீனாவில் லஞ்சம் ஊழல் இருந்தபோதிலும் ஒவ்வொன்றிலும் தன் நாட்டு நலனை முன்னிறுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
2000வது ஆண்டில் "சீனாவின் தானியப் பிரச்சினை" என்றதொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "எதிர்கால சீன விவசாயம் மற்றும் உணவு பற்றாக்குறை" குறித்த விபரங்களை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகட்டும் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சர்வதேச சமூகத்தின் பார்வையில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள திபெத்க்கு சாலை வசதிகளை உருவாக்கும் பொருட்டே வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று மழுப்பலாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறது.
தென் சீனப்பகுதி 700 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. அங்கு பயிரிடும் நிலப்பகுதி மூன்றில் ஒரு பங்கு என்றும் ஐந்தில் நான்கு பகுதி நீர்வளம் உள்ளதாகவும் உள்ளது. ஆனால் வடக்குச் சீனப் பகுதியில் 550 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பயிரிடும் நிலப்பரப்பு மூன்றில் இரண்டு பங்கு என்றும், நீர்வளம் ஐந்தில் ஒரு பங்கு உள்ளதாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
உலக மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி எதிர்காலத்தில் சீனாவின் ஜனத்தொகை 141 கோடி என்று கணித்துள்ளார்கள். ஆனால் சீனா எடுத்துள்ள கணக்கு 160 கோடி மக்கள். இதன் அடிப்படையில் பயிர் செய்யப்பட வேண்டிய நிலத்தின் அளவையும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்போதைய சீனாவின் குறிக்கோள். ஆகவே சீனாவின் வட மேற்குப் பகுதியின் பல பகுதிகள் (கோபிப் பாலைவனம் உட்பட) பயிரிடப்படும் நிலமாக மாற்றப்பட வேண்டும்.
ஆனால் இந்த பகுதி துரதிஷ்டவசமாக சீனாவின் மொத்தப் பரப்பளவில் 45 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நீர்வளம் 7 சதவிகித அளவுக்கு தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே சீனா தனது நாட்டின் எதிர்கால நலனுக்காக பிரம்மபுத்திரா நதியை திசை திருப்புவதற்கான திட்டத்தை தொடங்கி ஆரம்ப கட்ட பணிகளை நடத்தி வருகின்றது. இங்கு அணை கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் இமயமலையின் பல பகுதிகளை குடைநது நீர் செல்ல பாதைகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக சீன அரசு தனியாக ஒரு அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளது. இவர்களின் மேற்பார்வையில் இது நடந்தேறி வருகின்றது.
யார்லஸ் சாங்க்போ அணை கட்டப்பட்டு அதில் 26 மின் உற்பத்தி சாதனங்களை அமைத்தால், ஒரு மணி நேரத்திற்கு 40 மில்லியன் கிலோ வாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும். யாங்சே என்னும் இடத்தில் உள்ள மூன்று திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். இதைத்தவிர பிரம்மபுத்திரா நதியை திசைதிருப்பி விடுவதன் மூலம் வட மேற்குப் பகுதியில் உள்ள வறண்ட நிலப் பகுதிகளுக்கு நீரை அளிக்க முடியும்.
சீனப்பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இது முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் திட்டப்படி பிரம்மபுத்ர நதியை நம்சா பர்வா என்ற இடத்திற்கு முன் திசைமாற்ற முடியும் என்றும் கூறுகின்றனர். இதற்காக இமயமலையில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடைந்து வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
3000 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால் மின் உற்பத்தியை மிகுந்த அளவில் ஏற்படுத்த முடியும் என்பதோடு ஆற்று நீர் பயணித்து வரும் 100 கிலோ மீட்டர் தொலைவை 15 கிலோ மீட்டர் தொலைவாகவும் குறைந்துள்ளது. உபரி நீரை 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு வழங்கவும் முடியும்.
இந்த ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து வழியெங்கும் நிலவி வரும் சுற்றுச் சூழல் மற்றும் அவற்றைப் செழிப்பாகும் முறை ஆகியவை வியக்கத்தக்க வகையில் உள்ளது. சீனாவின் திட்டத்தால் மொத்தமாக மாறிவிடும். மேலும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் பருவமழை இல்லாத போது பிரம்மபுத்திரா நதியில் இருந்து வரும் நீரே ஆதாரமாக இருக்கிறது. சீனாவின்
இந்த திசை திருப்பலால் இந்த பகுதியின் மொத்த வளமும் பாதிக்கப்படும்
ஆற்றின் கீழ் மட்டத்தில் உள்ள நாடுகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை சீனா கண்டு கொள்ளத்தயாராய் இல்லை. சர்வதேச அளவில் நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு குறித்து எவ்விதமான சட்டங்களும் இல்லாத காரணத்தால் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் அணையினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு 200 மில்லியன் மக்களுக்கும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் எதிர்காலத்தில் உருவாகும்.
ஆனால் இந்தியா எப்போதும் போல 2020 வல்லரசு இந்தியா என்ற கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் நாம் கனவு காண பிறந்தவர்கள். சீனா கனவுகளை செயலில் காட்ட பிறந்தவர்கள்
14 comments:
சரியா சொன்னீங்க .
வணக்கம் சகோ
இது இப்பதிவால் தூண்டப்பட்டு இடப்பட்ட பதிவு.பார்த்து கருத்திடுங்கள்
முதாலாளித்துவ குடியரசு சைனா:ஆவணப் படம்:..
http://aatralarasau.blogspot.com/2011/12/blog-post_19.html
நன்றி:
தகவல்கள் மனதை வாட்டுகின்றன. நாம் எப்போது தேசியத்தைக் கற்றுக்கொள்வோம்?
வலையில் யாரும் சீனாவைப் பற்றி சரியாக எழுதுவதில்லை.தங்கள் கட்டுரை நல்ல அலசல்.
சீனர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.,
நம் அரசியல் தலைகள்தான் வாய்சொல்லில் வீரர்கள்.:((
தகவல் பிழைகள் இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் முக்கியமான கட்டுரை. சீனாவைத் திட்டுவது முற்போக்கில் சேராது. அதனால் நம்ம தமிழ் இணையத்தில் இது ரொம்பவே பிற்போக்கான கட்டுரை :)
மன்மோகன் சிங்கோ அலட்டிக்காம அறிக்கை விடுகிறார்.என்னமோ போங்க!
எல்லாப் பயலுகளையும் ஒரு பிடி பிடிச்சிருக்கீங்க போல இருக்குதே!இருங்க கபில் சிபலைக் கூப்பிடுறேன்:)
நடராஜன்
என் எழுத்தில் ஏற்கனவே ஒரு குற்றாச்சாட்டு உண்டு. சொல்ல வந்ததை விட்டு வேறு பக்கம் தாவி விடுவது. அதனால் கபில்சிபிலை விட்டு விட்டேன்(?) அவர் தான் ஜகா வாங்கி விட்டாரே?
அனுஜன்யா
உங்களின் முதல் விமர்சனம் என்று நினைக்கின்றேன். எந்த இடத்திலும் சீனாவை திட்டவில்லையே(?). என்ன நடக்கிறது என்பதைத்தானே சுட்டிக்காட்டியுள்ளேன். ஒரு முக்கிய நண்பர் சொன்னதை உங்களுக்கு சொல்லவிருமபுகின்றேன்.
இந்தியா வெளியே இருந்து பார்க்கும் நிலையற்ற தன்மையாக தெரியும். ஆனால் உள்ளே அந்த அளவுக்கு மோசம் இல்லை.
ஆனால் சீனாவை வெளியே இருந்து பார்க்கும் உறுதியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரியும். ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால் நிலைமை மோசம். இதன் காரணமாக இராணுவ ஆட்சியாளர்கள் பணம் என்பதே பிரதானம் என்று மக்களை பணம் துரத்தும் பறவைகளாக மாற்றிக் கொண்டு இருக்காங்க. பணத்தை விரும்புவன் என்றாவது புரட்சியில் இறங்குவானா? நேற்று கூட ஒரு மாநிலத்தில் விளை நிலங்களை ஆக்கிரமிக்க வந்த சீனா அரசு அதிகாரிகளை எதிர்த்து 20 000 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து சிறைபிடித்து விட்டார்கள். இன்னமும் பிரச்சனை முடிந்தபாடில்லை.
டிடிஈ
நிறைய விசயங்கள் நம்மை போலவே அரசியல் குறித்து அதிகமாகவே எழுதியிருக்கீங்க....
கந்தசாமி பழனியப்பன் ( இப்படித்தானே மாற்றியிருக்கீங்க) மக்கள் தேசிய உணர்வோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்காங்க. அரசியல்வியாதிகள் தான் மழுங்கடித்துக் கொண்டு இருக்காங்க.
உண்மை தான் சிவா. வாய்ச்சொல்லில் மட்டுமல்ல. பணம் எந்த வகையில் சம்பாரிக்க முடியும் என்பதையும் நம் அரசியல்வியாதிகளிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். காரியக்கிறுக்கர்கள்.
சார்வாகன்
வலையில் நீங்கள் ஒரு ஆச்சரிய மனிதர்.
உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி வழக்குரைஞரே.
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
//சர்வதேச அளவில் நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு குறித்து எவ்விதமான சட்டங்களும் 'இல்லாத' காரணத்தால்.. //
நதிநீர் பொறுத்தளவில், பன்னாட்டு சட்டங்கள் உள்ளன. அவ்வளவு எளிதில் பன்னாட்டு சட்டங்களை மீறி செயல்பட முடியாது என்பதை கட்டுரையாளர் தெரிந்து கொள்ளவில்லை என தெரிகிறது. சில புள்ளி விவரங்களை கொடுத்திருந்த போதிலும், கட்டுரை மேம்போக்காக எழுத்தப்பட்டிருக்கிறது என்பதை கட்டுரை படித்தால் தெரிகிறது. பல செய்திகளுக்கு ஆதாரம் இல்லை.
மனிதம்
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. சற்று மேம்போக்காகவே எழுதி உள்ளேன். உள்ளே நுழைந்து புள்ளி விபரங்கள் மேற்கொண்டு ஆதாரங்கள் என்று எழுதப்போனால் டாக்ட்ரேட் கட்டுரை போல அமைந்து விடும்.
பன்னாட்டுச் சட்டங்கள் குறித்த மேற்கொண்டு விபரங்கள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்க.
இதில் சீனா குறித்து சொல்லப்படாத பல விசயங்கள் உள்ளது. உங்களுக்கு ஆதாரங்கள் வேண்டுமென்றால் பல்லவி அய்யர் எழுதிய சீனா திரை விலகும் நேரம் என்ற புத்தகத்தை படித்துப் பாருங்க. அவர்கள் இது போன்ற விசயங்களைக் கூட குறிப்பிடவில்லை. உள்ளே உள்ள சமூக வாழ்க்கையின் முரண்பாடுகளை மட்டுமே எழுதி உள்ளார். ஆனால் மாற்றங்கள், பொருளாதாரத்தில் உள்ள மேடு பள்ளங்களை என்னை விட நன்றாக சொல்லி உள்ளார். உலகத்தில் உள்ள அணைக்கட்டுகளில் 60 சதவிகிதம் சீனாவில் தான் உள்ளது. இது 2003 ஆம் ஆண்டு கணக்கு.
மத்தியில் இருக்கிறவங்க ஒருத்தர் கூட உருப்படி இல்லை. கடுப்பு தான் வருது. விவாசாய அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் அதி முக்கியமா மம்மம் சிங் ... என்னமோ போங்க. இவருக்கு தூங்கியே பொழுதை கழித்த தேவ கவுடாவே பரவாயில்ல போல இருக்கு. இவரை என்னமோ நினைத்து இருந்தேன் இப்படி மகா மொக்கையா இருப்பாருன்னு கனவுல கூட நினைக்கல. மொக்கையாக மட்டுமல்லா ரொம்ப ஆபத்தாகவும் இருக்காரு.
இந்த பதிவை முகநூளில் எனது நண்பர் மதிமுகிலன் தமிழ்வேங்கை போட்டது https://www.facebook.com/photo.php?fbid=10151680723973857&set=a.10151411175013857.1073741826.509388856&type=1&relevant_count=1 .
நதிகள் இணைப்பு சாத்தியமா ?
இப்போது, ரஜினி, நரேந்திர மோடிக்காக பிர்கசாரம் செய்ய வேண்டும் என்று பாஜக'வினர் தவம் கிடக்கிறார்கள்.
இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ரஜினி நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னாராம். எவ்வளவு நல்லவராக இருக்கிறார், அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தால் என்ன என்று சிலர் நினைக்கலாம். அவ்வளவு நல்லவனா இந்த ரஜினி? ஒரு கோடி முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று ஒரு வியாபாரிக்குத் தெரியாதா? ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை தமிழன் தந்தாலும், தமிழனின் உரிமையான காவிரி நீரை கர்நாடகா அரசு மறுக்கக் கூடாது என்று துணிவாக சொல்ல வக்கில்லாமல், நடக்காத ஒரு விடயத்திற்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லும் அயோக்கியன் தான் ரஜினி. இந்திய திட்டக்குழு (Planning Commission of India) ஏற்கெனவே நதிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று கூறி அத்திட்டத்திற்கு ஒப்புதல் மறுத்துவிட்டது. அதற்க்கு வலுவான காரணமும் உள்ளது. ராமசாமி என்பவர் தனது ‘Water perspectives,issues concerns‘ புத்தகத்தில் ‘Linking of rivers: vision or mirage‘ பாகத்தில் ஆறுகளை இணைப்பதன் மூலம் இயற்கையின் சீற்றத்தோடு விளையாடுகிறோம் என்று எச்சரிக்கிறார். மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது இயற்கைக்கு விரோதமானது மட்டுமல்ல , கடினமானதும் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளில் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதோடு ஆறே வறண்டு போகும் ஆபத்தும் உள்ளது. இதற்கு உதாரணமாக ரஷ்யாவின் ஆரல் ஏரியை கூறலாம். இவ்வாறான செயல்களை தவிர்த்து ஆறு ஓடும் பகுதிகளை கணக்கிட்டு வடி நிலங்களை அமைப்பதும், தேவைக்கேற்ப சிறிய நீர் தேக்கங்களை உருவாக்குவதும், நீர் பற்றாக்குறை ஏற்படும்போது அங்கிருந்து எடுத்து உபயோகப்படுத்துவதும், தேவை குறையும்போது வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வது சாலச் சிறந்தது. இது பண்டைய கால ‘அரச நீர் விநியோக முறை‘ எனலாம். ஆங்கிலேய ஆட்சியிலேயே கங்கை-காவிரி இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சர். ஆர்தர் கார்டன் அறிக்கை சமர்பித்திருக்கிறார். "இது சாத்தியமற்றது, விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் " என்று கூறியிருக்கிறார்.அதற்கான காரணங்களையும் தெளிவுபட கூறியுள்ளார். "விந்திய மலை தடுப்பரன் மீது 50,000 கன அடி நீரை, 1400 அடி உயரத்திற்கு மின்சார மோட்டார் மூலம் ஏற்றுவதென்பது சாத்தியமற்றது .அவ்வாறே செய்தாலும் 300 அடி உயரம், 750 மீ நீளமும் மலையை வெட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்வது சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?" என வினா எழுப்பினார். அசாமில் 200 கி,மீ.,மேற்கு வங்கத்தில் 50 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 1000 கி.மீ, மஹாராஷ்டிரத்தில் 500 கி.மீ, தமிழ் நாட்டில் 550 கி.மீ, என மொத்தம் 3750 கி.மீ கால் வாய் வெட்டி நீரை கடத்த வேண்டும். எந்த அளவுக்கு இதெல்லாம் சாத்தியம் என்று யோசிக்க வேண்டும். காவிரி நீரில் தமிழனுக்கான நியாயமான பங்கை கருநாடக அரசு தர வேண்டும் என்று சொன்னால் தன் படம் கர்நாடகாவில் ஓடாது என்று நன்கு அறிந்து, நிறைவேறாத ஒரு திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி பல கோடிகள் சம்பாதித்துவிட்டார் இந்த "கேடி" ரஜினி.
வருண் ரெங்கநாயகி கணேசன் (Varun Renganayagi Ganesan)
https://www.facebook.com/varuneelam
Post a Comment