போராட்ட குணத்திற்கும், போரட்டத்திற்கும் பெயர் பெயற்றவர்கள் ஓரிஸ்ஸா மக்கள்.
தொடக்கம் முதலே விளைநிலத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முடிந்தவரைக்கும் எதிர்த்தே வந்துள்ளார்கள். ஆனால் 2000 ஆம் ஆண்டு முதல் ஒரிஸ்ஸா பூமி இடுப்பு ஒடிந்த பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரிஸ்ஸா மேல் தனிக்கவனம் உண்டு. இதைப் போலவே வடகிழக்கு மாநிலங்களிலும் உண்டு. காரணம் அங்கே உள்ள இயற்கைச் செல்வங்கள். நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் உலோகக் கனிமங்களும் அதிக அளவில் கொட்டிக் கிடப்பதே முக்கிய காரணமாக உள்ளது.
கண்களுக்கு எட்டிய வரையிலும் நீண்டதாக இருக்கும் விவசாய நிலங்களும் அதனைச் சார்ந்துள்ள துறைமுக வசதிகளும் இருப்பதால் பல பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் இந்த ஓரிஸ்ஸாவே முக்கிய இடத்தில் உள்ளது.
இதன் காரணமாகவே ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் நாங்கள் இங்கே தொழில் தொடங்க ஆசைப்படுகின்றோம் என்று உள்ளே வரத் தொடங்கினார்கள். இதன் வழியில் உள்ளே வந்தவர்கள் தான் தென் கொரியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான பொஹாங் ஸ்டீல் நிறுவனம் (POSCO )
இந்த நிறுவனம் இங்கே வருவதை எதிர்த்து ஒரிஸ்ஸாவில் உள்ள ஜகத்சிங்பூரில் 30 000 கிராம மக்களும் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழந்து கொண்டிருப்பவர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிறுவனம் இங்கே மூதலீடு செய்வதாக வாக்களித்த தொகை எவ்வளவு தெரியுமா? 52,000 கோடி.
2005 ஜுன் மாதம் 22 ஆம் தேதி ஓரிஸ்ஸா அரசும் போஸ்கோ நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் 120 டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் உருவானது.
இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இங்கே சுற்றியுள்ள நிலக்கரி சுரங்கங்கள் அணைத்தும் வந்துவிடும். இந்த நிறுவனத்தோடு ஓரிஸ்ஸா அரசு முப்பது ஆண்டுகள் என்ற நோக்கில் இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் இருபது ஆண்டுகள் நீடித்துக் கொள்ளலாம்.
இது இயல்பான நடைமுறைதானே என்கிறீர்களா? இனிமேல் தான் நாம் சந்தோஷப்படவேண்டிய பல விசயங்கள் உள்ளது.
இங்குள்ள நிலங்களில் உள்ள கனிம வளங்களான குரோமியம், மங்கனீஷ் போன்ற தாதுப் பொருட்களை மிக குறைந்த விலைக்கு ஒரிஸ்ஸா அரசாங்கம் இந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 6000 லட்சம் டன் இரும்புத்தாது அரசாங்கம் வழங்க வேண்டும். அதுவும் ஒரு டன் ரூபாய் 2000 முதல் 2600 விலையில் கொடுக்க வேண்டும்.
இது போதாதென்று தொழிற்சாலைக்கான மானியம் என்ற வகையில் டன்னுக்கு 400 ரூபாய் அரசு வழங்கவேண்டும். இந்த வகையில் மட்டும் நிறுவனத்திற்கு 96,000 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும்.
இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாரதீப் பகுதியில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. ஏறக்குறைய இந்த துறைமுகமே ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும்.
இந்திய கடல்சார் பகுதியில் ஒரு தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் குளறுபடிகள் உருவாகும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டால் போதும்.. 'மாவோயிஸ்ட்களுக்கு எந்த காலத்திலும் வன்முறை என்பது தீர்வாகாது..' என இன்று வரைக்கும் அவர் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
துறைமுகம் எளிதில் அமைத்து விடமுடியுமா? இந்த துறைமுகத்திற்கு தேவைப்படும் சாலை போக்குவரத்து முதல் மற்றும் ரயில், மின்சார வசதிகள் வரைக்கும் அரசாங்கமே செய்து தரவேண்டும்.
சரி தொழிற்சாலை அமைத்தாகிவிட்டது. நிர்வாக அலுவலகம் வேண்டுமே? அதற்கும் சில ஏக்கரை தலைநகர் புவனேஷ்வரில் அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து இத்துடன் முடியவில்லை. இன்னமும் அனுமன் வால் போலவே இருக்கிறது.
இந்த நிறுவன கட்டுமானத்திற்கு மகாநதியில் இருந்து வருடந்தோறும் 12,000 முதல் 15,000 கோடி லிட்டர் நீரை எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக அருகில் உள்ள கட்டக்கிலும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.
மாநில அரசாங்கம் கொடுத்துள்ள சலுகைகளைப் போலவே மத்திய அரசாங்கமும் பல சலுகைகளை வழங்கி உள்ளது. இந்திய தொழிற்சாலைச் சட்டங்கள், இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் செல்லுபடியாகாது.
சரி. இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதே? இந்த நிறுவனத்தினால் இந்தியாவிற்கு எந்தந்த வகையில் லாபம் என்பதையும் பார்த்து விடலாம்.
ஒப்பந்தம் போடப்பட்டுள்ள முப்பது ஆண்டுகளில் வரி வகையில் 22,500 கோடி மாநில அரசாங்கத்திற்கும்,89,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கும் கிடைக்கும். அதாவது முப்பது ஆண்டுகளில் மத்திய மாநில அரசாங்கத்திற்கு வரிகளாக 1,11,500 கோடி ரூபாய் கிடைக்கும். சுருக்கமாகத் சொல்லப்போனால் மத்திய மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக 3,700 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் இரும்புத்தாதுவுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம் மட்டுமே இதை விட பல மடங்கு அதிகம்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் என்று அறிக்கை சொல்கின்றது. ஆனால் உண்மை நிலவரமென்பது இந்த நிலங்கள் நன்றாக விளையக்கூடியது மட்டுமல்லாது விலை அதிகம் போகக்கூடிய இடங்களாகும்.
இந்த நிறுவனத்திற்காக உருவாகப்போகும் பாரதீப் துறைமுகப்பகுதியில் மீன்பிடித்து வாழக்கூடிய 30 000 மீனவர்களின் வாழ்க்கையும் அதோகதியாகிவிடும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த ஜகத்சிங்பூரில் உள்ள விவசாய நிலங்களுக்கு வேறொரு வகையில் சிறப்புண்டு. நெல், வெற்றிலை, தென்னை, முந்திரி, பாக்கு போன்ற விவசாயத்தின் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வருடந்தோறும் ஏதோவொரு வேலை இருந்து கொண்டே இருக்கும். இதேபகுதியில் உள்ள ஜடாதரி பகுதியில் மீன்பிடித்தல் தொழிலும் நடந்து கொண்டேயிருக்கும்.
சாதகபாதக அம்சங்களை பார்த்தாகிவிட்டது.
இப்போது மற்றொன்றையும் நாம் பார்கக வேண்டும்.
எந்த நாட்டிலும் ஒரு அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் தானே? மக்கள் கிளர்ச்சி என்பது கடைசி தான். அதற்குள் சாம, பேத, தான, தண்டம் அத்தனையும் கையில் எடுத்து முடிந்தவரைக்கும் அடக்கப் பார்த்தாலும் கடைசியில் சில நாடுகளில் மட்டுமே ஆட்சி மாற்றம் நடக்கின்றது. ஆட்சியில் வருபவர்கள் மாறுவார்களே தவிர பன்னாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கப்படும் நலன்கள் மாற்றப்படுவதில்லை.
இது தான் எதார்த்தம்.
குண்டர் படைகள் ஒரு பக்கம். அரசாங்கத்தின் கெடுபிடிகள் மறுபக்கம் என இன்று ஒரிஸ்ஸா யுத்தபூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக அரசாங்கம் இந்த பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த பொருட்களையே நிறுத்தும் அளவுக்கு தங்கள் விசுவாசங்களை பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் வாங்கித்தின்ற எலும்புத்துண்டுகளை கடித்து கடித்து வாயில் ரத்தம் வந்த போதிலும் விசுவாசம் மட்டும் இன்று வரையிலும் குறைந்தபாடில்லை.
ஆனால் இன்று வரையிலும் போராடிக்கொண்டிருக்கும் இந்த பகுதி மக்களைப் பற்றி எந்த இந்திய ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் இதில் உள்ள சிறப்பம்சம்.
இப்போது நீங்கள் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு அருகே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் ஹரியானா வரைக்கும் உள்ள அத்தனை நிறுவனங்கள் வரைக்கும் ஒரு விசயத்தில் கெட்டியாக இருப்பதை கூர்ந்து கவனித்தால் நம்மால் சரியாக புரிந்து கொள்ளமுடியும்.
ஒரு ஆலைக்கு தேவைப்படும் நிலத்தைப் போல நூறு மடங்கு இடத்தையும் வளைத்து வைத்துக் கொள்கிறார்கள். காரணம் நில மதிப்புக்காக.
இதன் காரணமாக சுற்றியுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அங்குள்ள விலைநிலங்கள் மாறிவிடுகின்றது. இது தவிர அந்த ஆலையின் காரணமாக வெளியேறும் நச்சு வாயுக்கள் மூதல் கழிவு நீர் வரைக்கும் சுற்றியுள்ள அத்தனை பகுதிகளில் உள்ள நிலங்களின் தன்மைகளையும் மாற்றி விடுகின்றது. ஏறக்குறைய அந்த தொழிற்சாலையை நம்பியே அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை இயல்பாகவே உருவாகி விடுகின்றது. இது தான உண்மை.
இதைத்தான் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது என்கிறார்களோ..?. இதைக் கொண்டாடுங்கள் என்று மேலைநாட்டு சமூகம் நமக்கு அறிவுரை தருகிறது. உள்ளுர் கிராமங்கள் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. கிராமத்துக்கு தண்ணீர் ஆதாரங்கள் தரும் கண்மாய், ஏரிக்களும் படிப்படியாக தூர்த்து பட்டா போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றோம்.
நாம் பன்னாட்டு நிறுவனங்களை, நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை எத்தனை குறைகள் சொல்கின்றோமோ அந்த அளவுக்கு நமக்குள் இருக்கும் வியாதிகளையம் நாம் கண்டு கொள்ள வேண்டும்.
மாநிலத்திற்கு மாநிலம் நீருக்காக குடுமிபிடி சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. மழையும் பொய்த்துப் போனது. கடலில் கலந்தாலும் பரவாயில்லை. ஆனால் உனக்கு தரமாட்டோம் என்கிற மாநில அரசாங்க கொள்கைகளும் பிடிவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே?
நதி நீர் பிரச்சனையிலே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதே?
அதுக்கு என்ன தான் தீர்வு?
கங்கை காவேரி இணைப்பு சாத்தியம் தானா?
15 comments:
after compeleting 8th std in harwrd university, our prince say .. if ganga cavuery project will cause earth quake. and the project started by BJp with prabu salva trown away altest for 2014 it wont happend for sure
ஜோதிஜி,
நெடுநாட்களாக தெரிந்துக்கொள்ள நான் எதிர்ப்பார்த்திருந்த நிறைய தகவல்களை உள்ளடக்கி வளர்கிறது இத் தொடர்.
தகவல் சேகரிக்க உங்களின் கடின முயற்சிக்கு பாராட்டுக்களும், பகிர்விற்கு நன்றிகளும்.
தகவல்களை எல்லாம் தெரிந்துக்கொண்டும் எழும்புக்கு ஏங்கும் அரசின் பற்சக்கரத்தில் சிக்குண்டு கிடக்கும் நம்மால் ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்க முடிந்தால் நாளையநாளை வெற்றி கொள்ளலாம். சமூகம் சுயநலத்தை தலை முழுகிவிட்டு வெளிவருமா பொருத்திருந்து பார்ப்போம்.
சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
பன்னாட்டு மயமாக்க சுரண்டலில் இவ்வளவு அட்டூழியமா?வேதனை.மேலோட்டமாக,அதுவும் தெரியாமல்,புரியாமல் இருப்பவர்களை சிந்திக்க வைக்கும் புதிய தகவல்கள் அடங்கிய தொடர்பதிவுக்கு நன்றி சார்.
பல தகவல்கள் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
ஜோதிஜி,
நன்றாக எழுதி இருக்கிங்க,ஆனால் அடிப்படையே இல்லாமால் அரசியல்வாதியின் அறிக்கைப்போல இருக்கு!ஏன் இந்த அவசரம் பொறுமையாக தகவல்களை தேடிப்பார்த்து பதிவிட்டிருக்கலாம்.
போஸ்கோ சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் ஒரு திட்டம், நிறைய வனப்பகுதிகள் பாழடையும் ,நிறைய மக்கல் இட பெயரப்படுவார்கள் என்பதால் கவனம் வேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளக்காரணங்கள் அல்ல.
//ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் 120 டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் உருவானது.//
120 டன் அல்ல 120 லட்சம் அல்லது 12 மில்லியன் மெட்ரிக் டன் என வர வேண்டும்.
6000 ஏக்கர் என்பது உருக்கு ஆலைக்கு மட்டும் அல்ல இரும்புத்தாது சுரங்கம், உருக்கு ஆலை, உருக்காலைக்கான தனி நகரம் என அனைத்தும் கொண்டது.
அவர்களுக்கு தேவையான இரும்பு தாதினை அவர்களே வெட்டி எடுத்துக்கொள்வார்கள்.
இதற்கும் நிலக்கரி சுரங்கமும் அடக்கம்.
------------
//இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இங்கே சுற்றியுள்ள நிலக்கரி சுரங்கங்கள் அணைத்தும் வந்துவிடும். இந்த நிறுவனத்தோடு ஓரிஸ்ஸா அரசு முப்பது ஆண்டுகள் என்ற நோக்கில் இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் இருபது ஆண்டுகள் நீடித்துக் கொள்ளலாம்.//
சுரங்கள் எப்படி அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் போகும், அவர்களே எடுத்துக்கொள்வார்களா?
அவர்களது நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் வரைக்கும் மற்ற சுரங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் தேவைக்கு நிலையாக நிலக்கரி வழங்க ஒப்பந்தம் செய்யப்படும் என்றே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
-----------------------
//இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 6000 லட்சம் டன் இரும்புத்தாது அரசாங்கம் வழங்க வேண்டும். அதுவும் ஒரு டன் ரூபாய் 2000 முதல் 2600 விலையில் கொடுக்க வேண்டும்.//
30 ஆண்டுகளுக்கு இந்த இரும்புத்தாது வழங்க வேண்டும் என்று இல்லை வெட்டி எடுத்துக்கொள்வார்கள். அதற்கான அனுமதிக்கட்டணம் தான் அது என நினைக்கிறேன். சர்வதேச சந்தையில் 6000 ரூபாய்க்கு மேல் விலை உள்ள தாதினை குறைந்த விலைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி எனப்பார்க்க வேண்டும்.அரசாங்கம் இரும்பு தாது வழங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஏன் அனுமதிக்கொடுக்க வேண்டும், அவங்களே இரும்பு உற்பத்தி செய்துக்கொள்ளப்போறாங்க!ஒரிசா அரசாங்கம் என்ன இரும்பு சுரங்கம் நடத்துகிறதா?
ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுக்கவே 245 மில்லியன் டன் தான் இரும்பு தாது உற்பத்தியாகிறது. நீங்க சொன்ன 6000 லட்சம் என்றால் 600 மில்லியன் டன் ஒரு ஆண்டுக்கு எப்படி ஒரிசா அரசு அந்த நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளும். கற்பனைக்கு கூட ஒத்துவராத விஷயமா இருக்கே, ஏதாவது ஆதாரம் இருக்கா?
நீங்க சொன்ன மான்யம் எல்லாம் அரசாங்கம் பணமாக வழங்குவதை சொல்ல வில்லை, அதே அளவுக்கு வரிச்சலுலை, ஒரு டன்னுக்கு உற்பத்தி வரி என்னவோ அதை தள்ளுப்படி செய்வதால் உண்டாகும் இழப்பு என்பதாக இருக்கும்.
இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் இப்படி வரிச்சலுகை பெறுகின்றன, அதில் இந்த போஸ்கோ உருக்கு ஆலையும் ஒன்று. அநேகமாக சிறப்பு பொருளாதார அந்தஸ்து பெற்ற ஒரே உருக்கு ஆலை போஸ்கோ என நினைக்கிறேன். எனவே நிறைய வரி சலுகை கிடைக்கும்.
சாலை, ரயில்ப்பாதை ,நீர் ஆதாரம் அமைக்க என அனைத்துக்கும் போஸ்கோ பணம் கொடுக்கும், ஆனால் மலிவு விலையாக இருக்கும். மற்றபடி நீங்கள் சொன்னது போல முழுக்க அரசுப்பணம் அல்ல.
எப்படிப்பார்த்தாலும் அரசாங்க வருவாய் வீணாகப்போக போவதென்னமோ உண்மை ஆனால் நீங்கள் ஒரே அடியாக மிகைப்படுத்தி விட்டீர்களே!
வவ்வால் உங்களைப் போன்ற ஆட்களைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன். சரிக்குச் சமமாக நிற்க வேண்டும். சவாலாக இருக்க வேண்டும். உண்மையில் இது போன்ற விசயங்களை எழுதத் தொடங்கும் போது தான் நமக்கு உள்ளே நுழைந்து நுழைந்து சில விசயங்களை நாமே கற்றுக் கொள்கின்றோம் என்று தான் நினைக்கின்றேன். உங்கள் கூற்றுப்படி அரசியல்வாதி தகுதி வந்து விட்டதாக நினைக்கின்றேன். அரசியலைப் பற்றி எழுத இது ஒன்று தானே இன்றைக்கு தகுதியாக இருக்கிறது.
போஸ்கோ சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் ஒரு திட்டம், நிறைய வனப்பகுதிகள் பாழடையும் ,நிறைய மக்கல் இட பெயரப்படுவார்கள் என்பதால் கவனம் வேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளக்காரணங்கள் அல்ல.
ஆச்சரியமாக இருக்கு உங்கள் பதில். 30 000 மக்களின் வாழ்க்கை என்பது உங்களுக்கு கிள்ளுக்கீரையாக தெரிகின்றதா? ஓரிஸ்ஸாவில் இருந்து சங்கர நாராயணன் என்பவர் அழைத்து இருந்தார். 4 தமிழ் மீடியாவில் இந்த தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த பதிவுக்கு அவர் அளித்துள்ள ஆங்கில விமர்சனம் இது.
http://www.4tamilmedia.com/special/news-review/2386-5
Views are appreciated. I am aware of this Posco plant area very well. Betel cultivation keeps the people relatively in comforts. Total family is involved in this work. Even an half acre betel cultivation fetches enough revenue to keep a family moving. They have been doing this for generations. Even the people of 70s and 80s say their grandfathers were doing this betel cultivation. State and centre were bent up on to commence the plant under Anglo-American pressure. MOU already expired. Posco is a Korean company for name sake only. It is much much more than iron ore and steel. Sovereignty of India is at risk because of the port offered to this company. America wants this port for strategic interest. Movement leader Abhay Sahoo is a friend of mine. Last month when I and two journalists from Delhi met him in a remote hamlet, he expected his arrest any moment. One more case was filed against him implicating him in a dowry death in a nearby village. He carries 54 cases. Now he is under arrest. Another leader took over the movement in his absence. Last week Orissa govt employed a criminal contractor (without tender) to make a road to connect the would be port with plant area. People and the contractor's goons clashed. One contractor's labour died. This created a furore in Assembly and an autocratic officer (Addl Chief Secy) was transferred. Six years passed. But the indomitable spirit of these people is seen to be believed. When I tour across these hamlets, I feel like being in a hill station. Very serene and tranquil. Fishing, cashew, coconut, more than two dozen vegetables and fruit bearing trees, pulses, paddy and what not. It is a nation by itself. Govts at the centre and staate are desperately trying to disturb the community of 30000 people using all foul means. But these people cannot be defeated. Kongunadu people who are dying under pollution should meet the people to know what is courage
120 டன் அல்ல 120 லட்சம் அல்லது 12 மில்லியன் மெட்ரிக் டன் என வர வேண்டும்.
நீங்கள் சொன்னது சரிதான். 120 லட்சம் டன் என்பதே சரி.
அந்த பகுதியில் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் பல சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த சுரங்கங்கள் எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும். அது தவிர கர்நாடாகவில் நடந்து கொண்டு இருக்கும் ரெட்டி சகோதரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் கூத்துக்களைப் போல தெரிந்தும் தெரியாமல் மொத்த பகுதியும் இவர்களின் கட்டுப்பாட்டில் வந்து விடும். நமது இந்திய சட்டங்கள் குறித்து உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை?????????????
ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுக்கவே 245 மில்லியன் டன் தான் இரும்பு தாது உற்பத்தியாகிறது. நீங்க சொன்ன 6000 லட்சம் என்றால் 600 மில்லியன் டன் ஒரு ஆண்டுக்கு எப்படி ஒரிசா அரசு அந்த நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளும். கற்பனைக்கு கூட ஒத்துவராத விஷயமா இருக்கே, ஏதாவது ஆதாரம் இருக்கா?
இந்த கட்டுரை அபய் சாஹு ( போராட்டக்குழுவின் தலைவர்) எழுதிய ஒரு ஆங்கில கட்டுரையின் சுருக்கம். நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அரசாங்க அறிக்கையின் அறிக்கை சராம்சமாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் என்பது உள்ளூர்வாசிகளுக்கு நிச்சயம் நம்மை விட நன்றாகவே தெரியும் என்பது என் கருத்து.
நீங்க சொன்ன மான்யம் எல்லாம் அரசாங்கம் பணமாக வழங்குவதை சொல்ல வில்லை, அதே அளவுக்கு வரிச்சலுலை, ஒரு டன்னுக்கு உற்பத்தி வரி என்னவோ அதை தள்ளுப்படி செய்வதால் உண்டாகும் இழப்பு என்பதாக இருக்கும்.
உங்கள் கருத்து வினோதமாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் மூலம் அது உள்ளூர் அல்லது வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் மொத்த கணக்கில் அந்த நிறுவனங்களால் அரசாங்கத்திற்கு என்ன லாபம் என்பதைத்தானே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி பார்த்தால் இந்த ஒப்பந்தம் மூலம் நமக்கு கிடைக்கும் லாபம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
உள்ளூர் மின்சார பற்றாக்குறை என்பது அணைவருக்கும் தெரிந்தது தானே. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் என்ற முக்கிய நோக்கத்தில் தானே உள்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவைப்படும் உண்மையான மின்சாரத் தேவைக்கு தட்டுப்பாடாக இருக்கிறது.
உங்கள் மகன் மகளை காப்பாற்ற முடியாத தந்தையாக இருந்து கொண்டு மற்ற விசயங்களில் கவனம் செலுத்தினால் உங்கள் குடும்பத்தின் பார்வையில் நீங்க எப்படி இருப்பீங்க.
எப்படிப்பார்த்தாலும் அரசாங்க வருவாய் வீணாகப்போக போவதென்னமோ உண்மை ஆனால் நீங்கள் ஒரே அடியாக மிகைப்படுத்தி விட்டீர்களே!
அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள் என்ற தலைப்பை படித்தீர்களா? இது போன்ற நிலவரங்களினால் இந்திய வெளிநாட்டு கடன்கள், மற்றும் வருடந்தோறும் ஏறிக்கொண்டிருக்கும் வராக்கடன்களின் தொகைகள் போன்றவற்றை படித்து விட்டு நீங்கள் சொல்லியது சரியா என்று ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்களேன்.
நாம் நம் நாடு எந்தப் பாதையில் போய்க் கொண்டு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்
ஜோதிஜி,
நன்றி!,
நான் சொன்னது சரியா புரியலையோ? போஸ்கோவை சுற்றுச்சூழல் காரணி, மக்கள் இடம் பெயர்வு முதலிய காரணங்களுக்காக தான் எதிர்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.
நீங்கள் அவர்களுக்கு கிடைக்கும் , மின்சாரம், நீர், இடம் , பணச்சலுகையை மட்டும் முன்னிறுத்தி இருந்தீர்கள்.
மேலும் நம்பகத்தன்மை இல்லாத புள்ளி விவரங்களும் இருந்தன, அதையும் சுட்டிக்காட்டி இருந்தேன், இப்போது தானே இது ஆங்கில மூலத்தின் தமிழ் வடிவம் என்கிறீர்கள். நல்ல வேளை அதில் ஒரு டாலர் 25 ரூபாய் என போடவில்லை :-))
//நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அரசாங்க அறிக்கையின் அறிக்கை சராம்சமாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் என்பது உள்ளூர்வாசிகளுக்கு நிச்சயம் நம்மை விட நன்றாகவே தெரியும் என்பது என் கருத்து.//
நானாவது 245 மி.மெ டன் என போட்டேன் "reuters" செய்தி நிறுவனம் போட்டுள்ள விவரம் பாருங்க,
//Here are some key facts about the Indian iron ore industry:
PRODUCTION:
- India produced 212.6 million tonnes of iron ore in 2010/11 and exported 97.6 million tonnes.
- There are about 500 mines in the country, half of which are operational. These are held by about 80 companies.
- High-grade ores with 62-65 percent iron are produced mainly in the east and south. Low-grade ores with 50-60 percent iron are produced in the west and south.
- The largest mining firm is state-run NMDC, which produces about 29 million tonnes annually, mostly for local sales.//
http://in.reuters.com/article/2011/08/15/idINIndia-58789320110815
உள்ளூர் வாசிகளுக்கு தகவல் தெரியலாம் ஆனால் அவர்கள் தேசிய உற்பத்தியை விட பல மடங்கு சொல்லிக்கொள்வார்களா :-))
மின்சாரம், மான்யம், வசதிகள் என்று எதிர்ப்பதாக இருந்தால் அனைத்து சிறப்பு பொருளாதர மண்டலங்களும் எதிர்க்கப்பட வேண்டியவை.
போஸ்கோ 2005 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள் 2011 இல் கூட தொடங்கவில்லை, பேசாமல் ரத்து செய்யலாமே அரசாங்கம், ஆனால் 2011 ஜூனில் மீண்டும் ஏன் வலிய அழைத்து புதுப்பித்தார்கள்?
மேலும் இடைப்பட்டக்காலத்தில் குறைந்த்அ பட்ச சேவை வரி என சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மீது விதித்ததால் ஒரு நாலு பேர் அவர்களது அனுமதியை திரும்ப ஒப்படைத்து விட்டார்கள்.
//மொத்த கணக்கில் அந்த நிறுவனங்களால் அரசாங்கத்திற்கு என்ன லாபம் என்பதைத்தானே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி பார்த்தால் இந்த ஒப்பந்தம் மூலம் நமக்கு கிடைக்கும் லாபம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.//
நீங்களே அப்படிப்பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள், மொத்தமாகப்பார்த்தால் அரசுக்கு லாபம் வருகிறது என NCAER (national council for applied economics and research) ஆய்வு சொல்கிறது.இது ஒரு தன்னாட்ச்சிப்பெற்ற ஆய்வு நிறுவனம். கூகிள் செய்தால் நிறைய கிடைக்கும்.
என்னோட பார்வை என்னவென்றால், பொருளாதாரக்காரணங்களை விட சுற்றுச்சூழல் காரண்ங்கலைப்பார்க்க வேண்டும், போஸ்கோ இந்தியாவின் பெரிய உருக்கு ஆலை சுரங்கமாக வரப்போகிறது, ஒரே இடத்தில் இத்தனைப்பெரிய ஆலை அமைத்தால் பாதிப்பு தானே.ஏன் இந்தியாவின் 4-5 இடங்களில் பரவலாக வைக்க கூடாது.
உங்கள் நக்கலை ரசித்தேன் வவ்வால். அப்படியே ஒரு மின்அஞ்சல் எனக்கு தட்டி விடுங்க. கீழே இருக்கிறது என் மின் அஞ்சல் முகவரி.
ஒரு விவசாய நாட்டில் நம்முடைய ஆதாரமான விவசாயம் ஏன் அழிகின்றது? என்ன காரணங்கள்? அரசாங்கத்தின் செயல்பாடுகள்? பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள் என்று பொதுவாக அல்லது மேலோட்டமாக இந்த தொடரில் சொல்லி உள்ளேன். அத்துடன் சீனா குறித்து ஒரு ஒப்பீடு. நீங்கள் சொல்வதும் உண்மை. எழுத்தை தொழிலாக கொண்டு ஆய்வு அறிக்கையை ஒப்பிட்டு அதற்குள் நுழைந்து புகுந்து இனம் கண்டு எழுத என்னைப் போன்ற ஆட்களுக்கு நிச்சயம் வாய்ப்பு இருக்காது. ஆனால் நிச்சயம் பொய்யான விசயங்களை எழுதவும் கூடாது என்பதால் முதன் முதலாக இது போன்ற விசயத்தில் ஆர்வம் செலுத்தினேன். நேரு குறித்து படித்த புத்தகம் குழந்தைகள் விவசாயம் குறித்து பேசிய சில கேள்விகள் இந்த தொடரை எழுத வைத்தது. பெரும்பாலும் பழைய பத்திரிக்கைகளை அதன் செய்திகளை, இது தவிர நாலைந்து புத்தகங்கள் துணை கொண்டு எழுதி முடித்தேன். இதன் இறுதி அத்தியாயத்தை அவசியம் படித்து விட்டு சொல்லவும். அப்போது ஏன் ஓப்பீடு செய்கின்றேன் என்பது புரியும்?
arumaiyana padivu
Post a Comment