Sunday, December 11, 2011

புள்ளி ராஜாக்கள் ஆளும் இந்தியா

புள்ளிராஜா விளம்பரம் உங்களுக்கு தெரியும் தானே? அவர் எய்ட்ஸ்க்கு சுட்டிக்காட்டப்பட்ட ராஜா. ஆனால் மற்றொரு புள்ளி ராஜா தான் இந்தியாவை காத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இவரை வைத்து தான் இந்தியாவின் தொழில் துறை வளர்கின்றது என்று நம்முடைய பொருளாதார மேதைகள் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். .

இந்த புள்ளிராஜா வாழுமிடம் பங்குச்சந்தை. இந்த புள்ளிராஜாவை, சென்செக்ஸ், நிப்டீ, பிஎஸ்இ. என வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நாட்டுக்கு நாடு இந்த பெயர் சொற்கள் மட்டும் சற்று மாறிக் கொண்டேயிருக்கிறது.

இந்த சொற்களை, வார்த்தைகளைச் சொல்லித்தான், இதோ பார் குதிக்குது. அதோ பார் செங்குத்தாக ஏறி விட்டது. என்று படித்த புத்திசாலிகள் நமக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே போல பலரும் தினந்தோறும் சொல்லிக் கொண்டிருப்பதை டீ குடிக்க காசில்லாதவன், காதில் வாங்க நேரமில்லாமல் பொழைக்கிற வழியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்.

நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட, பங்கு சந்தை குறியீடு மட்டுமே முக்கியம். இதை வைத்துக் கொண்டே இந்தியா வளர்கிறது ஒளிர்கின்றது என்று கலர் கலராக நம் காதில், இன்று வரை பூச்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகளவில் செயற்படும் அத்தனை பங்குச்சந்தை குறியீடுகளுமே ஒரு உத்தேச கணக்கு மட்டுமே. உத்தேசம் தான் இந்த துறையில் முக்கிய குறியீடு. ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிட்ப்பட்ட ஒரு நிறுவனத்தின் உண்மை நிலவரம் என்பது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் எவருக்கும் முழுமையாகத் தெரியாது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிறுவன தணிக்கையாளர் மந்திரிக்கும் தாயத்து கயிறு மூலமே அந்தந்த நிறுவன பங்குகள் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தான் நாம் பல மந்திர வித்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிறுவனத்தின் உண்மையான நிலவரமே ஆண்டு இறுதியில் தான் தெரியும்? பலரையும் பணத்தை கொண்டு போய் முதலீடு செய்ய வைக்கின்றது. ஏமாறவும் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய இந்தியாவின் நிஜ வளர்ச்சி யாருக்குத்தான் தெரியும்?

இங்கே மூதலீட்டை கொட்டியுள்ள பத்து பன்னாட்டு நிறுவனங்கள் மனம் வைத்தால் போதும். ஒரே நாளில், அல்லது ஒரே இரவில் இந்தியாவை போண்டியாக்கி விடமுடியும். இது தான் எதார்த்தமான உண்மை. ஆனால் இந்தியாவில் அவ்வாறு நடக்க வாய்பில்லை என்கிற வரைக்கும் சந்தோஷம் என்றாலும் மற்றொன்றையம் இபபோது பார்க்கலாம். உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் இந்திய மக்களாட்சியைப் போல நம்முடைய உள்நாட்டு பொருளாதாரம் மட்டும் நம்மை காப்பாற்றி விடாதா? வெளிநாட்டு முதலீடுகள் இருந்தால் மட்டும் தான் நாம் பிழைக்க முடியமா?

காலங்கடந்து போன போதிலும் நிச்சயம் முடியும். வாய்ப்பு அநேக வழிகளில் இருக்கிறது. அப்படியானால் வேறென்ன பிரச்சனை?. இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாது. ஆதலால் சற்று விரிவாகவே பார்க்கலாம்..


இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று காந்தி சொன்னார் என்ற பழைய பஞ்சாங்கத்தையெல்லாம் இப்போது பார்க்க வேண்டிய அவசியமில்லை. காரணம்;  மேற்கு வங்காளத்தில்  தோழர்களின் கடந்து  போன ஆட்சியில் நடந்த நந்திகிராம  துப்பாக்கி சூட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் கோபால கிருஷ்ண காந்தியும் ஒருவர்.

அவர் தான் நம்முடைய காந்திஜியின் பேரன். அப்போது அவர் தான் கவர்னராக இருந்தார்.

அவரென்ன..?

காந்தியே இப்போது அரசியல் தலைவராக இருந்தாலும் கூட இதே நிலைமை தான். காரணம் தற்கால அரசியல் வல்லமையின் முக்கியத்துவம் கொள்கை அல்ல. கொள்ளை.

கவனியுங்கள் கொள்கை அல்ல..

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் விவசாயத் துறைக்கு மட்டும் ஏன் இத்தனை ஓரவஞ்சனை செய்கிறார்கள்?

இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 121 கோடி. 2000 ஆம் ஆண்டில் 100 கோடி இருந்த மக்கள் தொகை இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. நாம் உத்தேச கணக்காக 115 கோடி மக்களை எடுத்துக் கொள்வோம்.

ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு அரை கிலோ உணவு தானியம் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நமக்கு 210 மில்லியன் டன் தேவைப்படும். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் 180 மில்லியன் டன் கணக்கிற்கே ததிங்கிணந்தோம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

அப்படியென்றால் நம் தலைவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?.

எவராலும் குறை சொல்ல முடியாத அப்பழுக்கற்ற தியாகச் செம்மல், நம்முடைய விவசாய அமைச்சர் சரத்பவார் தன்னுடைய மாநிலமான விதர்பா பகுதியில் விவசாயிகள் இறந்த போது உதிர்த்த தத்துவம்

 "குடித்துவிட்டு சாகின்றவர்கள் எல்லோரையும் குடியானவர்கள் வரிசையில் சேர்க்க முடியாது" என்பது. 

இவருக்கு ஒரு படி மேலே ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா வேறொரு வகையில்."குஜராத் விவசாயிகள் புகையிலையை வாயில் போடுகிறார்கள். ஒரு நிமிடத்தில் குதம்பி துப்பி விட்டு வயலில் இறங்கி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுகிறார்கள். ஆனால் விதர்பா விவசாயிகளான நீங்களோ புகையிலையோடு முழுக்க குடித்தனம் நடத்திவிட்டு முழுச் சோம்பேறியாக மாறி விடுகின்றீர்கள். அப்புறம் கடன் வராமல் கௌரவமா வரும்?" எனக் கேள்வியெழுப்பினார்.

சரி இவர்கள் தான் புரியாமல் பேசுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். காரணம் இவர்களுக்கு கக்கூஸ் முதல் கட்டையில் வைத்து எரிக்கின்ற மயானம் வரைக்கும் குளு குளு அறையில் இருந்தே அனுபவப்பட்டவர்கள். ஆனால் சென்ற முறை காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த நம்ம ப. சிதம்பரம் திருவாசகம் போல் நச்சென ஒரு வாசகம் சொன்னார்.

"விவசாயிகள் வீட்டுல சனி வக்கிரமெடுத்து உட்கார்ந்து ஒன்பது வருசம் ஆகிவிட்டது.  அதை ஒரே நாள்ல விரட்ட நான் ஒன்றும் அனுமன் இல்லையே"

ஆகமொத்தம் நம்மை ஆள்பவர்களுக்கு விவசாயிகள் என்றாலே வேண்டாத பொருட்களை பார்ப்பது போலவே இருக்கிறது.

இந்தியர்களின் கனவான 2020 வல்லரசு என்ற நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்களே இந்த விவசாயிகள் தான்.

"ஏன் இன்னமும் 60 சதவிகித மக்கள் இந்த விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்று தொழிலில் இறங்கிவிட வேண்டியது தானே".

இது நான் சொன்னதில்லை. மன்மோகன் சிங் அலுவலகத்தில் உள்ள ஒரு பொருளாதார மேதை சொன்னது.

ரகுராம் ராஜன் என்பவரைத் தெரியுமா?

இவர் தான் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிதி ஆலோசகராவும் இருக்கிறார்.  சிகாகோ வர்த்தகப் பள்ளியில் பொருளாதார பேராசியராகவும்  இருக்கிறார். இவர் தான் இந்தியாவில் விவசாயம் செய்ய மிகக் குறைவான சதவிகித மக்கள் இருந்தாலே போதுமானது. நவீன தொழில் நுட்பங்கள் மூலம் நாம் சாத்தியப்படுத்த முடியும் என்கிறார்.

ஆனால் நம்முடைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் எப்போது தீர்க்கதரிசியாய் யோசிக்கக்கூடியவர்.

'இப்போதைய வருத்தத்தை விட எதிர்கால சந்தோஷங்களைப் பாருங்க... ' என்று அவரால் மட்டும் தான் சொல்ல முடிகின்றது. அத்தனை நல்ல விசயங்களை படிப்படியாக செய்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய 9 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்கு கிராமத்தை விட்டு பல்வேறு காரணங்களால் குடியேறியுள்ளார்கள்.

ஆனால் இத்தனை சிரமத்திலும் இருண்டு போய்க் கொண்டுருக்கின்ற விவசாயிகளின் வாழ்க்கை நிலை பற்றி,  இரண்டு பேர்கள் பொட்டில் அறைந்தது போல கொட்டித் தீர்த்தார்கள்.

ஒருவர் கமல்நாத் மற்றொருவர் முரசொலி மாறன்.

ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் கமல்நாத் பேசிய போது "மற்ற நாடுகளில் விவசாய மானியத்தை நிறுத்தச் சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிக்கு கொடுக்கும் மானியத்தை நிறுத்தும் வரை ஒரு நெல் மணியைக் கூட இறக்குமதிக்கு அனுமதிக்க மாட்டோம்."

இதையே முரசொலி மாறன் "வயிறு வேறு வாணிபம் வேறு. வாணிபத்துக்காக மானியத்தில் விளைந்து குவியும் பணக்கார நாட்டு விஷ தானியங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயத்துக்கு கொட்டிக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தாதவரை விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பில் சேர்க்க முடியாது "

தோகாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் சிங்கம் போலத்தான் கர்ஜித்தார். ஆனால் என்ன ஆச்சு? பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிங்கமாவது புலியாவது?

கத்துவது உங்க வேலை. கறப்பது எங்க வேலையென்று அவர்கள் பணியை இடைவிடாது செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். சில நாடுகளில் போராடி உள்ளே நுழைகின்றார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் அத்தனை சட்டதிட்டங்களையும் செல்லாக்காசாக்கி விட்டு செல்வாக்கோடு வலம் வருகிறார்கள்.


ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.

இன்று விவசாயிகள் மத்தியில் அலற வைத்துக் கொண்டிருக்கும் பி.டி ரக பருத்தி வகை (BI- BACILLUS THURINGIENSIS) விவசாயத்தில் ஈடுபட்டுருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இது உள்ளே வந்த கதையை பார்க்கலாம்

இப்போது திஹார் சிறையில் இருக்கும் ராஜாவின் கீழ் முன்பு இருந்த துறைகளில் வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளும் இருந்தது. ராஜாவின் கீழ் வந்த துறையில் இருந்த முக்கியமானது சுற்றுப்புற துறை.

GEAC - Genetic Engineering Approval Committee. மரபியல் சார்ந்த தொழில் நுட்பத்தின் கீழ் மாற்றப்பட்ட விதைகளுக்கு இந்த துறை அனுமதி கொடுத்தால் தான் உள்ளே வர முடியும். ஆனால் இந்த பி.டி பருத்தி விதை விவகாரம் இவர் பார்வைக்கு போனதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விதைக்குச் சொந்தமான நிறுவனம் எப்படி அனுமதி வாங்கினார்கள் தெரியுமா?

Science and Technology துறையின் கீழ் வரும் RCGM (Review Committee on Genetic Manipulation) மூலம் மேலோட்டமான அனுமதி பெற்ற போது வயல் வரைக்கும் இந்த விதைகள் வந்து விட்டது. இது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளது. ஒன்றும் பிரச்சனையில்லை என்பதாகவும், இல்லை பருத்தி இலைகளை உண்ணும் மாடெல்லாம் செத்துப் போய்விட்டது என்றும் முரணான தகவல்கள் உண்டு. இந்த சர்ச்சைகள் முடிவே இல்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஆனால் இறந்த விலங்கினங்களை ஆராய்ச்சிக்கூடம் வரைக்கும் கொண்டு போய் இன்று வரைக்கும் உண்மையான அறிக்கை வெளியே வந்தபாடில்லை.

பி.டி பருத்தியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய மன்சாண்டோவின் மேலாண் இயக்குனர் டி.வி.ஜெகதீசப் ஒரு பயமுறுத்தும் உண்மையை 'தெஹல்கா' இதழில் அம்பலமாக்கியிருக்கிறார்.

"பல களைக்கொல்லிகள் எனது தலைமையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் எல்லாம் கம்பெனி தரப்பில் என்ன தகவல்கள் கொடுக்கப்பட்டதோ அவை அப்படியே ஏற்கப்பட்டு அனுமதிகள் தரப்பட்டன. இந்திய அரசு அமைப்புக்களிடம் அந்தத் தகவல்களைப் பரிசோதிக்கும் வசதியோ, சக்தியோ கிடையாது. கம்பெனிகளின் தகவல்களை நம்பி அனுமதிகள் தரப்படும்போது, அந்தத் தகவல்களையே தங்களுக்கு சாதகமானதாக அவை தயார் செய்து விடுகின்றன" என்கிறார்.

மொத்தத்தில் இந்திய வயல்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பரிசோதனைக் கூடங்கள். நம்முடைய விவசாயிகள் ஆராய்ச்சிக்கான பொருட்கள்.

அதெல்லாம் சரி? மாறிவரும் யுகத்தில் மரபணு மாற்றம் மூலம் எத்தனை பெரிய லாபங்களை விவசாயத்தில் பெற முடியும்? ஏன் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு பின்னால் உள்ள சர்வதேச அரசியலை புரிந்து கொள்ளப் பார்க்கலாம். அப்போது தான் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை புழுவைப் போல பார்க்கப்படுவதை புரிந்து கொள்ள முடியும்

4 தமிழ் மீடியா தளத்தில் காக்க.. காக்க.. நோக்க.. நோக்க என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கும் கட்டுரை.  தமிழ் மீடியா தள குழுவினருக்கும், ஆசிரியர் திரு. மலைநாடன் அவர்களுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.

தொடரும்.......

11 comments:

ப.கந்தசாமி said...

நல்ல அலசல். ஆழமாகப் படிக்க சிறிது அவகாசம் தேவை.

ஜோதிஜி said...

வணக்கமுங்க.... டக்ன்னு உள்ளே வந்துட்டீங்க.

படிச்சுட்டு சொல்லுங்க......

ஊரான் said...

'இப்போதைய வருத்தத்தை விட எதிர்கால சந்தோஷங்களைப் பாருங்க...

புராணங்கள் சொல்லும் "சொர்க்கத்துக்கும்" இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆட்சியாளர்கள் இப்படித்தான் ஏழைகளை அன்றும் இன்றும் ஏய்த்து வருகின்றனர்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனசு கொதிக்கிறது.

HOTLINKSIN.com said...

கொஞ்சம் நீளமான... பொருளாதாரத்தையும் வரலாற்றையும் மிக்ஸ் பண்ணியிருக்கும் பதிவு. அருமை.
--------------------
உங்கள் பதிவுகள் ஏராளமான வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாமே!

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
பங்கு பொருளாதாரம்,ஊக வணிகம் என்பவை பல ஏமாற்று வேலைகளுக்கு வழி வகுக்கின்றன.
அந்நிய முதலீடு சுதேசி பொருளாதரத்தை,விவசாயம் அழித்து விடும் என்றால் யார் கேட்கிறார்கள்? பட்டால்தான் புரியுமா?இதில் மரபணு மாற்றப் பட்ட விதைகள் என்று ஒரு விஷம் வேறு.கொடுமை!!!!!!!!!!!!!

நல்ல பதிவு.தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி

துளசி கோபால் said...

அரசியல் வியாதிகள் அவ்வப்போது 'முத்து' உதிர்ப்பது புதுசா என்ன?

நல்ல ஆழமான அலசல். நன்றி.

தொடர்கின்றேன்.

சத்ரியன் said...

வணக்கம் ஜோதிஜி,

வளரும் / ஏழை நாடுகளை இந்த ‘சர்வதோச’ சாரி சர்வதேச அரசியல் படுத்தும் பாட்டை உங்கள் கட்டுரை நன்கு விளக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

விவசாயக் குடும்பங்களைச் சார்ந்த நம்மில் பலரும் இதை கற்று தெளிதல் மிக அவசியம்.

Unknown said...

துரை மார் ஆராய்ச்சிக்கு இந்தியாவை தேர்தெடுத்திருப்பதே நம் பூர்வ ஜென்ம புண்ணியம்..

இது புரியாமல் சில முண்டங்கள் வல்லரசு, மேலாண்மை நாடு சுயட்சி, மக்கள் நலன்னு எதுனா உளரும்..

அதேல்லாம் பார்த்தா துறைமார் மனம் திருப்தியாகுமா? நம்ம சுவிஸ் வங்கி கணக்கு தான் நிறையுமா?

அதனால பன்னாட்டு கம்பனிக்கு ஜே..போடு..

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான அலசல்!
தெரியாத பல தகவல்கள். அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

எஸ் சம்பத் said...

ஜோதி

இந்த கட்டுரையை இன்றைக்குத்தான் பார்த்தேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தை மட்டுமே வைத்து காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இங்கெல்லாம் நம் நண்பர் அதியமான் கமென்ட் அடிக்க மாட்டாரோ?