Thursday, June 23, 2011

முற்றுகைக்குள் இந்தியா 3

1990 வாக்கில் விடுலைப்புலிகள் வீரத்துடன் போரிட்டு அடுத்த பத்தாண்டுகள் பல களங்களை வெற்றி பெற்றிருந்தாலும் கூட இந்த காலகட்டத்தில் மொத்த உலகமும் வேறொரு பாதையில் தனது பயணத்தை தொடங்கியிருந்தது. 


1990 ஆம் ஆண்டுக்கு முன்னால் இருந்த உலகளாவிய இராணுவ அரசியல் சூழ்நிலையும் வெகுவாக மாறத் தொடங்கியது.  காரணம் அதுவரைக்கும் நீ அந்தப்பக்கமா? இல்லை இந்தப்பக்கமா? என்று அமெரிக்கா சோவியத் யூனியன்
என்ற இருதுருவங்களில் சோவியத் யூனியன் துருவம் துருப்பிடித்து போக உலகமெங்கும் உலகமயமாதல் தராளமயமாக்குதல் என்ற வார்த்தைகளை உலகத்தை ஆட்சி புரிய ஆரம்பித்தது.

அதுவரைக்கும் இலங்கை சந்தையில் அதிக அளவு இறக்குமதியாகிக் கொண்டிருந்த ஜப்பான் பொருட்களை விட இந்தியா இறக்குமதிகள் ஆட்சி புரியத் தொடங்கின. 1990 /1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் இந்தியப் பொருட்கள் ஏறக்குறைய 556 விழுக்காடு கூடியிருந்தது. 

ஆக இந்தியாவின் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா ஒவ்வொன்றையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தத் தொடங்கினார். காரணம் இதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் சந்திரிகா கண்களில் மட்டுமல்ல உடம்பு முழுக்க விரல் விட்டு ஆட்டும் அளவுக்கு பலமாய் இருந்தனர். இலங்கையை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கும் இந்திய முதலாளிகளைக் கொண்டு காய் நகர்த்த அவருக்கு சாதகமான அம்சங்கள் வந்து சேரத் தொடங்கியது.

1998 ஆம் ஆண்டு அப்போது இருந்த வாஜ்பாய் அரசுடன் சந்திரிகா அரசாங்கம்
இந்திய இலங்கை சுதந்திர வியாபார ஒப்பந்தம் ((Indo Lanka Bilateral Free Trade Agreement –  ILBFTA) கையெழுத்தானது,  இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கோ,இலங்கையிலிருந்து இந்தியாவுக்கோ ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கோ, அல்லது குறைந்தபட்ச வரியோ இரு நாட்டு அரசுகளால் விதிக்கப்பட வேண்டும். மேலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கும்பட்சத்தில் கூடுதல் வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இதே காலகட்டத்தில் உலகமெங்கும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த  GATT  மற்ற தராள பொருளாதர ஒப்பந்தங்களுக்கு உறுதுணை புரிந்த நாடுகளுக்கிடையே இருந்த புரிந்துணர்வு ஒப்பந்த விசயங்களும் உதவி புரிந்தன.


2001 ஆம் ஆண்டு முதல் இது போன்ற ஒப்பந்தங்களினால் இரு நாடுகளின் வியாபார வளர்ச்சியும் செங்குத்தாக உயரத் தொடங்கியது. இலங்கையில் தொடர்ந்து முதலீடுகளை கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கும் இந்திய தொழில் அதிபர்களுக்காகவே இலங்கை அரசு 2005 மே மாதம் பெங்களூரில் இலங்கை முதலீட்டு வாரியத்தின் ( BOARD OF INVESTMENT --Bol) சிறப்பு கிளை ஒன்று தொடங்கப்பட்டது.

சமகாலத்தில் இலங்கைப் பொருட்களை தவிர்ப்போம் என்ற கொள்கை அங்கங்கே எழுந்து மறுபடியும் மறைந்து விடுகின்றது.  ஆனால் நாம் எந்தந்த நிறுவனங்கள் இலங்கை சந்தையில் வலுவாக காலூன்றி இருக்கிறது என்ற பட்டியலை மட்டும் இந்த பதிவில் பார்த்து விடுவோம். இது போல இலங்கை நிறுவனங்களின் பட்டியல்களையும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்கள்.

1. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
2. எல்,ஐ,சி,
3. அரவிந்த் மில்
4. பார்தி ஏர்டெல்
5. அன்சால் வீட்டு வசதி நிறுவனம்.
6. சியெட் டயர் நிறுவனம்
7. அப்போல்லோ மருத்துவமனை
8. ஏசியன் பெயிண்ட்ஸ்
9. தாஜ் ஹோட்டல், டாடா டீ, வி.எஸ்.என்.எல் டாடா குழுமம்
10, ஸ்வீடன் நாட்டின் ஹோல்சிம் சிமெண்ட் (ஏ.சி.சி. மற்றும் குஜராத்
அம்புஜா சிமெண்ட்டின் புதிய முதலாளி)
11. ராம்கோ குழுமம்
12. அல்ட்ரா டெக் சிமெண்ட், கார்பன் ப்ளாக் தொழிற்சாலை (பிர்லா குழுமம்)
13. இந்தியன் ஆயில்
14. மகேந்திரா அண்ட் மகேந்திரா மோட்டார் வாகன நிறுவனம்
15. பிராமல் கண்ணாடி நிறுவனம்
16. கேடிலா மருந்துக் கம்பெனி
17. எக்ஸைடு பேட்டரி
18. பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம்
19. டி.வி.எஸ் குழுமம்
20. ஜெட் ஏர்வேஸ்
21. யு.டி.ஐ. நிறுவனம்
22. சஹாரா ஏர்வேஸ்
23. CAIRN INDIA ( PETROL COMPANY)
இது தவிர உள்ள சிறிய நிறுவனங்களை இந்த பட்டியலில் கொண்டுவரவில்லை.

இந்தியாவில் உள்ள இலங்கை நிறுவனங்கள்.

1. MAS HOLDINGS  ஆயத்த ஆடைகள்
2. தம்ரோ (DAMRO கட்டில், நாற்காலிகள்
3. Ceylon Chocolates Pvt. Ltd.,  சாக்லேட் நிறுவனம்
4. Maliban  பிஸ்கட் நிறுவனம்
5. Edina  சாக்லேட் நிறுவனம்
6. Keels – ஆயதத உணவுகள்
7. Milesna – தேயிலைப் பொருட்கள்
8. DSI – ரப்பர் செருப்புகள் ரப்பர் பொருட்கள்
9. Gloves Lanka Pvt.Ltd – பின்னல் கையுறைகள்
10. Lanka Walltiles – செராமிக் டைல்கள்
11. Eclar Toys – மரப் பொம்மைகள்
12.Tandon Associated Lanka Pvt.Ltd –  Dual Inline Memory Modules
13. Skyspan Asia Ltd – substitute to conventional roofing systems
14. Tantri Trailers – Trailers / Long Vehicles
15. Link Natural – ஆயுர்வேத மருந்துகள்
16. Sri Lankan Airways 

(பட்டியல்கள் சுருக்கப்பட்டுள்ளது)

இது போன்ற நிறுவனங்களின் மூலம் 1998 ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியாவின் முதலீடு 40 லட்சம் அமெரிக்க டாலர். இதுவே 2006 ஆம் ஆண்டில் 1500 லட்சம் அமெரிக்க டாலர்.

இப்போது சொல்லுங்க?

இவ்வளவு வளர்ச்சியுடைய ஈழத்திலிருந்து எடுத்துக் கொண்டிருந்த லாபங்கள் முக்கியமா? இல்லை, ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு முக்கியமா?

9 comments:

லெமூரியன்... said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

என்னாச்சு லெமூரியன். சரியாத்தானே சொல்லியிருக்கீங்க.

லெமூரியன்... said...

சமீபத்தில் தங்கை நிறைய சாவிக் கொத்துகள்(key chains) மற்றும் அவளுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை வாங்கி வந்திருந்தாள்...சாவி கொத்தில் ஒன்றை எனக்கு கொடுத்தாள்...வாங்கி பார்த்து கொண்டே இருந்தேன்..அது ஒரு அழகான மரக்கட்டையில் செய்த வேலைபாடுகளுடனான . மெதுவாக அதன் தயாரிப்பு எங்கு என்று எடுத்து பார்க்க எனக்கு தூக்கி வாரி போட்டது. MADE IN LANKa என பொரிக்கபெற்றிருன்தது அதில். உடனே அதை குப்பை கோடையில் எறிந்து விட்டு இனிமேல் இதைப் போல இலங்கை பொருட்களை வாங்காதே என சொல்லிவிட்டேன்..ஆனாலும் ஆத்திரம் தணியவில்லை...நம்முடைய மண்ணிலே எப்படி அவங்களுடைய பொருட்கள் என்று...

கடல் அன்பன் said...

"ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு வாழும் ஈழத் தமிழர்கள்..."
என்ன தோழரே...,நல்லா எழுதிற நீங்க போய் இப்படி சொல்லலாமா?
தோட்ட வேலைக்கு சென்ற மலையக தமிழர்களே இந்தியாவிலிருந்து போனவர்கள்.
ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு அது தாயக பூமி.

ஜோதிஜி said...

கடல் அன்பன்

நான் சொல்ல வந்ததை நீங்க தவறாக புரிந்து கொண்டு இருக்கீங்க. இந்தியாவின் பார்வை என்பது வேறு. தமிழ்நாடு மற்றும் இங்குள்ள தமிழர்களின் பார்வை என்பது முற்றிலும் வேறானது. ஈழத்தை விடுங்க. போபால் விஷவாயுவை எடுத்துக்கொள்ளுங்க. எத்தனை பேர்கள் இறந்தார்கள். ஈழம் தான் வேறொரு நாடு. இங்குள்ள மக்கள் அழிய காரணமாக இருந்த அமெரிக்க நிறுவனங்களின் அஜாக்கிரதை மற்றும் இழப்பீடு போன்றவற்றை முறைப்படி ஏன் இந்தியா வாங்கி கொடுக்கவில்லை? அல்லது நடவடிக்கைதான் எடுக்க வில்லை.

காரணம் மேலாதிக்க சக்திகளும், பொருளாதாரமும், நிர்ப்பந்தங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதைப் பற்றி குறிப்பிட்டு எழுதினால் அது வளர்ந்து கொண்டே போகும்.

புரிந்துணர்வுக்கு நன்றி.

கடல் அன்பன் said...

நீங்கள் சொல்கின்ற பொருள் புரிகிறது.
"ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன..." என்று இல்லாமல்
"... லாபங்கள் முக்கியமா? இல்லை, அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு முக்கியமா?"
என்று இருக்குமாயின் நல்லா இருந்து இருக்கும்.

ஜோதிஜி said...

நன்றி கடல் அன்பன். நீங்கள் சொல்வது சரியே? ஆனால் இலங்கை என்ற நாட்டைப் பற்றி நாம் பார்ப்பதே நம் தமிழனத்தின் பொருட்டு தானே? அதான் உயர்வு நவிழ்ச்சியாக இதை குறிப்பிட்டேன்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

sathyakumar said...

உயர்வு நவிழ்ச்சியாக இருப்பினும்-இந்தியாவின் பார்வையில் "ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து போன அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு முக்கியமா?"- என்ற வாக்கியம் முரணாகபடுகிறது ....தயவு செய்து கடல் அன்பன் சொல்வதை பரீசிலிக்கவும்.
என்ன தோழரே...,நல்லா எழுதிற நீங்க போய் இப்படி சொல்லலாமா?

கடல் அன்பன் - அமோதிக்கிறேன்

நன்றி -ஜோதி ஜி -கட்டுரைகள் அமர்க்களம் -உங்கள் உழைப்பு ,தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் என்பது உறுதி.

சத்திய குமார் -ருவாண்டா