Sunday, June 19, 2011

சீனாவின் பொருளாதார அடியாள் -- 3

நீங்கள் சந்திக்கும் உங்கள் நண்பர் புதிதாக செல்போன் ஒன்று வாங்கி இருக்கிறேன்? என்று சொன்னால் உங்கள் எண்ணம் எப்படியிருக்கும்? என்ன மாடல் என்று வேண்டுமானால் கேட்பீர்கள்?  காரணம் இன்று ரோட்ரோட காய்கறிக்கடை பாட்டியம்மா கூட பேசிக்கொண்டிருக்கும் செல்போனுக்கு எந்த மதிப்புமில்லை. வேண்டுமென்றால் நம்மால் ஒழுங்காக அனுபவிக்க முடியாத 2ஜி 3ஜி வகையான கைபேசிகளை வைத்துருப்பவர்களை பார்த்து வேண்டுமென்றால் காதில் புகைவர பார்த்துக் கொண்டிருப்போம்.

ஆனால் ஆனந்த கிருஷ்ணன் இந்த அலைபேசி துறையில் காலடி எடுத்து வைத்த ஆண்டு 1993. இப்போது தொடக்க அத்தியாயத்தில் ஆனந்த கிருஷ்ணன் தனது தொழில் கொள்கையான அதிக லாபத்திற்காக காத்திருக்க வேண்டிய அவஸ்யத்தையும், அதற்காக தேர்ந்தெடுக்க வேண்டிய தொழிலையும் பற்றி அவர் சொன்ன சமாச்சாரங்களையும் இப்போது உங்கள் மனதிற்குள் கொண்டு வர வேண்டும்.  



மலேசியாவில் 1983 ஆம் ஆண்டு வாக்கில் தொலைபேசித் துறையில் தனியார் மயமாக்கல் நடந்தாலும் இது முழு வீச்சாக செயல்படத்தொடங்கிய ஆண்டு 1990.  1993 முதல் 1995 வரை நிலைத்த தொலைபேசி அமைப்புகளை (FIXED LINE TELEPHONE) நிறுவ ஐந்து உரிமங்கள் மலேசிய அரசாங்கத்தால் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த ஐந்து உரிமங்களில் ஆனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான Maxis Communications நிறுவனமும் ஒன்று.

இந்த உரிமங்களில் முதல் உரிமம் 1985 ஆம் ஆண்டிலும் இரண்டாவது உரிமம் 1989 ஆம் ஆண்டிலும் மலேசிய அரசாங்கத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் மேக்ஸிஸ் நிறுவனம் மூன்றாவது உரிமத்தை கைப்பற்றிய ஆண்டு 1993. இந்த மேக்ஸிஸ் நிறுவனம் தான் இப்போது சன் குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு சிவசங்கரனிடம் இருந்து ஏர்செல் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளதுமான நிறுவனம்) 

இந்த மேக்ஸிஸ் நிறுவனம் முறைப்படி 1995 முதல் செயல்படத் தொடங்கியது.  இதன் வளர்ச்சி 2000 ஆம் ஆண்டில் மலேசியாவின் தொலை தொடர்புத் துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் 12 லட்சம் என்கிற அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டதாகவும் இருந்தது. இப்போது தான் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் வேறொரு பாதையை நோக்கி திரும்பியது.

தன்னுடைய பிராட்பேண்ட் சேவைகளை உள்நாட்டுப் பிரச்சனைகள் அதிகமுள்ள பகுதிகளில், நாடுகளில் தனது விரிவாக்க சேவையை விரைவு படுத்தியது. அதுவும் தான் கைப்பற்றிய ஏர்செல் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் மற்றும் சீனாவின் நேரிடையான கண்காணிப்பு உள்ள பகுதிகளில் தன்னுடைய வாடிக்கையாளர்களை கவரும் வேலையைத் தொடங்கியது. இப்போது இந்த இடத்தில் கிளைக்கதையாக சிவசங்கரன் வடகிழக்கு மாநிலங்களில் தனது ஏர்செல் நிறுவனத்திறகாக உரிமம் கேட்ட போது தயாநிதி மாறன் நொண்டிச் சாக்குச் சொல்லி கிடப்பில் போடப்பட்டதும் அதுவே ஏர்செல் ஆனந்த கிருஷ்ணன் நிறுவனமான மேக்ஸிஸ் கைவசம் வந்ததும் எந்த கேள்விகளும் இல்லாமல் சட்டென்று திரைவிலகி காட்சிகள் மாறி உடனடி ஒப்புதல் கிடைத்ததையும் நாம் நினைவில் கொண்டு வரவேண்டும். ஏன்? எதற்காக? என்பதெல்லாம் மேக்ஸிஸ் நிறுவனத்தின் பரந்த சாம்ராஜ்யததையும் அதன் மூலம் சன் குழுமம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதையும் உணரும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் விடுதலைப்புலிகளுடன் கூடிய கடைசி கட்ட ஈழ போராட்டத்தின் போது தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களும், வடநாட்டில் உள்ள என்டிடிவி போன்ற இன்னும் பல நிறுவனங்களும் ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான சாட்டிலைட் மூலம் தான் தங்கள் ஒலிஒளி பரப்பை செய்து கொண்டிருந்தார்கள்.  மீதி உங்கள் யூக்த்திற்கு இப்போது விட்டு விடுகின்றேன்.  தொடர்ந்து பின்னால் வேறு சில விசயங்களைப் பார்க்கலாம்.

ஏன்?  எதனால்?  எப்படி? என்பதை பார்ப்பதற்கு முன்பு இப்போது வண்டியை ரிவர்ஸ் எடுத்து இலங்கை பக்கம் நாம் இப்போது செல்ல வேண்டும். 

காரணம் சில நாட்களுக்கு முன்பு இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்திய பாதுகாப்பு செயலர் சிவசங்கர மேனன் சந்தித்து விட்டு கொழும்பு சென்றார் என்ற செய்தியை நாம் படித்து இருக்கக்கூடும். ஏற்கனவே இருந்த கலைஞரை இந்த மத்திய அரசாங்க அதிகாரிகள் வந்து சந்திப்பது ஒரு வாடிக்கையாகவே இருந்தது. அதன்பிறகு எப்போதும் போல கலைஞர் ஈழப் பிரச்சனைக்காக மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதிக் கொண்டும் மீதி நேரத்தில் திரைக்கதைக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்ததும் நாம் அணைவரும் அறிந்ததே.  ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை?  இந்த முறை ஜெயலலிதா சற்று ஆச்சரியமாக ஈழம் சார்ந்த விசயங்களில் முன்பை விட சற்று ஆர்வமாக ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் வண்டியை கொண்டுப் போய்ச் சேர்க்குமா? என்பதை இப்போது யோசித்துப் பார்ப்பதைவிட இதைக்கூட கலைஞர் ஏன் செய்யாமல் இருந்தார் என்பதே சராசரி தமிழர்களின் ஆச்சரியம்?

ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வெளியே வந்த தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர மேனன் எப்போதும் போல பத்திரிக்கையாளர்களிடம் அதிகாரிகள் சொல்லும் வசனமான "இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு" என்று சொல்லிவிட்டு கொழும்புக்கு பறந்து சென்று விட்டார். ஏறக்குறைய சிவசங்கர மேனனும், நாராயணனும் ராஜபக்ஷேவுக்கு உடன்பிறவாத தம்பிகள் போலத்தான் தொடக்கம் முதல் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.  இவர்களைச் சொல்லிக்குற்றமில்லை. காரணம் இது போன்ற அதிகாரிகளை இயக்குவதும், பேசவைப்பதும் யார் என்று தெரிந்தால் நமக்கு இன்னும் பல விசயங்கள் புரியும்.  ஆனால் அதற்கான களம் இதுவல்ல. சிவசங்கரமேனன் ஜெயலலிதாவை தமிழ்நாட்டில் வந்து சந்தித்தது கூட பிரதமர் அறிவுறுத்தலின் பேரில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அன்றைய சந்திப்பின் போது ஜெயலலிதா சற்று ஆணித்தரமாக வேறு சில விசயங்களையும் சிவசங்கர மேனனிடம் சொன்னதாக ஊடகத்தில் ஒரு தகவல் வந்ததை நீங்கள் கூர்ந்து கவனித்து இருந்தால் படித்திருக்க வாய்ப்புண்டு. ஜெயலிலதா அவருடன் பேசும் போது முறைப்படியான உரிமைகள் அங்கு வாழும் தமிழர்களுக்கும், மற்றபடி முகாமில் இருப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்கும் கொண்டு செல்ல இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக் வேண்டும் என்றும் சொன்னதற்கு சிவசங்கரன் மேனன் சொன்னது என்ன தெரியுமா?  

"அது நீங்க பிரதமரை சந்திக்கும் போது பேசிக் கொள்ளுங்க" என்றாராம்.

அதற்கு அவர் காரணமாக சுட்டிக்காட்டிய விசயம் தான் இப்போது நமக்கு முக்கியம். நாம் இலங்கை விவகாரத்தில் ரொம்ப நெருக்கடி கொடுத்தால் நம் இடத்தை சீன அரசு எடுத்துக் கொள்ளும் என்றாராம்.  இவர் மட்டுமல்ல. மத்திய அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் இந்த ஈழப்பிரச்சனையைப் பற்றி பேசும் போது வயித்துப்புள்ளகாரி கணக்கா சீனாவை நினைத்துக் கொண்டே வயிற்றை தடவி பார்க்கும் ஒரு மேம்பட்ட சிந்தனை இன்று மன்மோகன் சிங் அரசாங்கத்தில் உருவாக்கி உள்ளது.  இதுவே தான் இன்று ராஜபக்ஷேவுக்கு இந்தியாவை பார்க்கும் போது கிள்ளுக்கீரையாக தெரிகின்றது. அவரும் வெல்லக்கட்டி போல இனித்து பல பக்கமும் நாட்டுக்கொரு விதமாக நடித்துக் கொண்டு இன்று வரையிலும் தன் விளையாட்டை காட்டிக் கொண்டிருக்கிறார். 

இதுவரைக்கும் ஆனந்தகிருஷ்ணன் என்ற தனிமனிதரை அரசு ஊழியரின் மகனாக பிறந்தது முதல் அவரே மலேசிய அரசாங்கத்தின் மிகுந்த செல்வாக்கான ஆளானது வரைக்கும் பார்த்தோம்.  ஆனால் இவர் இப்போது சீனாவிற்கு எந்த அளவிற்கு முக்கிய ஆளாக இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்?  சீனா இவரை வைத்து எந்தவித காரியங்களை சாதித்துக் கொண்டிருக்கிறது?  இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் எவ்விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஆனந்த கிருஷ்ணன் என்பவர் வெறும் தொழில் அதிபராக இருக்கும் வரைக்கும் அவரும் சராசரியாக சுனில் மிட்டல், அம்பானி போன்ற ஒரு மகா கோடீஸ்வரர் வட்டத்தில் தான் வந்து நிற்பார்.  ஆனால் நமக்கு முக்கியமென்பது ஆனந்தகிருஷ்ணன் செய்து கொண்டிருக்கும் தொழிலும் அதன் மூலம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களுமேயாகும்.

அது தெரிந்தால் தான் ராஜபக்ஷே இப்போது காட்டிக் கொண்டிருக்கும் படங்களைப் பற்றி ஓரளவுக்கு நம்மால் புரிந்து கொள்ள முடியும்? நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆனந்த கிருஷ்ணன் பச்சை தமிழர் தான்.  அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  ஆனால் தொழில் அதிபர்களுக்கு இனம், மொழி, பச்சை, சிவப்பு என்ற பாகுபாடும் இருக்காது. செய்யப் போகும் தொழில் மூலம் பெருத்த லாபம் உண்டா இல்லையா? இது தான் முக்கியம். 

அதுவும் இவரைப் போன்ற தொழில் மூளையுள்ளவர்களின் லாபம் என்பது பில்லியன் என்பதை மையமாகக் கொண்டு தான் ஒவ்வொரு தொழிலிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்.  இவர் தொடக்கம் முதலே பல தொழில்களை செய்து கொண்டிருக்கும் சீனா போன்ற நாடுகளில் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் இன்றைய சீன அரசாங்கமே தனது மொத்த நாட்டு மக்களையும் அடிமையாகவே வைத்துள்ளது. 

உனக்கு புரட்சி வேண்டுமா? இல்லை பணம் வேண்டுமா?

இரண்டே கேள்வி தான். இந்த எண்ணத்தை உருவாக்கி ஒரு போட்டி சமூகத்தை உருவாக்கியுள்ளது.  ஒவ்வொரு துறையிலும் படித்து வரும் இளைஞர்களுக்கும், தொழில் திறமையுள்ளவர்களுக்கென்றும், அவரவருக்கு தகுந்த அத்தனை வாய்ப்புகளையும் அரசாங்கமே அங்கு உருவாக்கி கொடுத்துக் கொண்டேயிருப்பதால் இன்று சீனப் பொருட்கள் இல்லாத நாடே இல்லை என்கிற அளவுக்கு சீனா உலக சந்தைப் பொருளாதாரத்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.  பிழைக்க வழியிருக்க வாய்ப்பு இருக்கும் போது யாராவது புரட்சியைப் பற்றி யோசிப்பார்களா? இதற்கு மேல் அங்கேயுள்ள கம்யூனிச நிர்வாக அமைப்பு. 


வெளியே இருந்து பார்த்தால் சீன அரசாங்கமென்பது கம்யூனிச நாடு.  ஆனால் உண்மையிலே இப்போது அக்மார்க் முதலாளித்துவ நாடு. அமெரிக்காவைப் பார்க்கும் போது அதன் முதலாளித்துவம் வெளிப்படையாக உலகத்திற்கு தெரிகின்றது. அது போன்று நாம் சீனாவை சொல்லிவிட முடியாது.

இது ஒன்று தான் முக்கியமான வித்தியாசம்.

கடந்த 30 ஆண்டுகளில் சீனா பெற்ற வளர்ச்சியென்பது மந்திரவாதி வைத்துள்ள மந்திரக்கோல் மூலம் பெற்ற வளர்ச்சிக்கு ஒப்பானது. இன்னும் சுருங்க கூறவேண்டுமென்றால் இன்றைய சீனா அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள பல ட்ரில்லியன் டாலர்கள்தான இன்றைய அமெரிக்காவை காத்துக் கொண்டிருக்கிறது என்றால் யோசித்துக் கொள்ளுங்க.  இன்று வரைக்கும் சீனா முதலாளிகளை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கும் நாடாகவும் மாறியுள்ளது. இன்றைய சீனாவால் நினைத்த நேரத்தில் ஒரு நகரையே காலி செய்து மக்களை வேறு பக்கம் நகர்த்தி விட முடியும்.

அரசாங்க திட்டங்களுக்கென்று எங்கங்கு நிலங்கள் இருக்கிறதோ அத்தனையும் நொடிப் பொழுதில் எடுத்துக் கொள்ள முடியும்.  எவரும் ஏன் என்று கேட்க முடியாது.  கேட்டாலும் கேட்ட ஆள் இருப்பார்ரா? என்பதும் சந்தேகமே.  ஆனால் ஈழத்தில் மட்டும் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஒரு இனத்தையே காவு வாங்கி ரத்தச் சகதியில் நனைந்து இவரைப் போன்ற பல தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலை வளர்க்க வேண்டியதாகி விட்டது. பணம் அதிகமாக சேர்ந்து விட்டால் பணக்காரர்கள் என்ன செய்வார்கள்?  தனது செல்வாக்கை காட்ட அரசியல் துறையில் நுழைந்து நாட்டமையாக மாற எண்ணுவதைப் போல இப்போது சீனாவுக்கும் அந்த ஆசை தான் மேலோங்கிக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாகத்தான் தெற்காசியா முழுக்க தனது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து இன்று அஸஸாமில் பிரம்மபுத்திரா நதியை இஷ்டத்திற்கு வளைக்கும் அளவிற்கு அச்சமூட்டும் ஆளுமையாக இந்தியாவிற்கு படம் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியா?

இப்போது ராஜபக்ஷே இந்த அளவுக்கு ஆட்டம் போட காரணம் என்ன?  இவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்?  அப்படியென்ன ஈழத்தில் பாலும் தேனும் ஒட அதை அள்ளிக்குடிக்க சீனாவும் அதைப் பார்த்து இந்தியாவும் முந்திக் கொண்டு ஓடுகிறார்கள்? விடுதலைப்புலிகளுடன் கூடிய ஈழ இறுதிக்கட்ட போரில், போருக்கு முன்னால் இந்தியாவின் செயல்பாடுகள் எப்படியிருந்தது.

கேள்விகளை துரத்தி ஓடுவோம்?

8 comments:

Ashwin Ji said...

நன்றி ஜோதிஜி.
அருமையாக விளக்குகிறீர்கள். இந்தியாவுக்கு எதிரிகள் யார் என்பதை விளக்கும் ஆணித்தரமான ஆதாரங்கள். காங்கிரஸ் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அறுத்தெறிய வேண்டிய நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை உடனடியாகச் செய்யாவிட்டால் இவர்கள் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவை தாரை வார்த்து விடுவார்கள்.

dharma said...

Naalla pathivu, valthukal

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.

உலக சினிமா ரசிகன் said...

மலேசியா இரட்டை கோபுரத்தில் ஏறிப்பார்க்கும் போது கட்டிடத்தை விட அனந்தகிருஷ்ணன் உயரமாக தெரிந்தார்.அதன் அஸ்திவாரத்தில் இருக்கும் எலும்புகளை உங்கள் பதிவின் மூலம் கண்டு கொண்டேன்.

அவன் இவன் இயக்கியது எவன்?...
என்ற தலைப்பில்
எனது கோபத்தை
எனது வலைப்பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன்.
வருகை புரிந்து கருத்துக்ளை கூறுமாறு அன்போடு அழைக்கிறேன்.

Unknown said...

நன்றி ஜி..

தாராபுரத்தான் said...

பின்னாலேயே ஓடி வருவோமல்ல..

இராஜராஜேஸ்வரி said...

நிறைய அருமையான விழிப்புணர்வு தரும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி...

துளசி கோபால் said...

அட! புதுத் தகவல்கள்.

நன்றி ஜோதிஜி.