Saturday, June 25, 2011

ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 2

இப்போது ராஜபக்ஷே உள்ளே வந்துள்ள நேரம்.  இவரைப்பற்றி நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர் முதன் முதலாக பிரதமர் பதவிக்கு வந்த விதத்தையும், பிறகு அதிபராக மாறிய வித்தைகளை நாம் இப்போது அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டும். .  இலங்கையில் இதுவரைக்கும் ஆண்டுவிட்டு சென்ற பிரதமர்கள், அதிபர்களை விட மகிந்தா மிக லாவகமாக கம்பி மேல் நடக்கும் வித்தையை கற்று வைத்திருபவர். திருமாவளவனை கட்டிப்பிடித்து எகத்தாள சிரிப்பு சிரித்து உதிர்த்த வார்த்தைகளை இன்று திருமா மறந்திருக்கக்கூடும்.

இலங்கை அரசியலில் ஏறக்குறைய மூன்றாம் நிலை தகுதியில் இருந்தவர். இந்த அளவுக்கு மேலேறி வர எப்படி சாத்யமானது?

காரணம் இவர் ஆட்சி அதிகாரத்தில் வந்தபிறகே அடுத்தடுத்த 33 மாதங்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளாக இருந்தது.

இப்போது சரித்திர பாதைக்குள் சென்று மீண்டும் இங்கே திரும்பி வந்து விடலாம்.  

இலங்கைக்கு சர்வதேச நதி உதவி கோருவதற்கான மாநாட்டை 2003 ஜுன் ஜப்பானில் டோக்கியோ நகரில் நடத்த ஏற்பாடாகியிருந்தது.  இந்த ஏற்பாட்டை செய்து இருந்தவர்கள் அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன்,நார்வே,ஜப்பான் மற்றும் சார்பு நாடுகள். 

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நார்வே நாட்டின் தூண்டுதல் மூலம் ரணில் விக்கிரமசிங்கே சமாதான ஒப்பந்தங்கள் முன்னெடுத்துச் சென்றார் என்று பார்த்தோம் அல்லவா?  அதனைத் தொடர்ந்து திட்ட வரைவுக்காக அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 2002 ஏப்ரலில் ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. 

ஏற்கனவே அமெரிக்கா விடுதலைப்புலி இயக்கத்தை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக வைத்திருந்த காரணத்தால் கடவு சீட்டுக்கான அனுமதியும் கலந்து கொள்ள அனுமதியும் அளிக்கவில்லை. இது வரை ரணில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு சுற்று பேச்சு வார்த்தையின் போது உறுதியளித்திருந்தபடி எந்த செயல்பாடுகளும் நடைமுறைக்கு வந்தபாடியில்லை.  இதுவே பிரபாகரன் மனதில் ஏராளமான கேள்விகளை உருவாக்கி அளவு கடந்த வெறுப்பையும் உருவாக்கியிருந்தது. 

திட்ட வரைவுக்காக இப்போது வாஷிடங்டனில் நடக்கப் போகும் கூட்டத்தில் விடுதலைப்புலி இயக்க சார்பாளர்களைகளை கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கினார்கள். ஆனால் இதற்கு பின்னால் இருநது செயல்பட்டவர் ராஜீவ் நம்பியார். அது பின்னாளில் தான் வெளியே வந்தது. அமெரிக்காவில் நடைபெறப் போகும் கூட்டத்தில் அனுமதி மறுத்த நிலையில் பிரபாகரனுக்கு கோபத்தை உருவாக்க பொறுத்தது போதும். பொங்கியெழு என்று பிரபாகரன் சமாதான பேச்சு வார்த்தையில் இருநது விலகின்றோம் என்று அறிவித்தார். 

இதற்குப் பிறகு தான் ஒவ்வொன்றும் கோணலாக நகரத் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகி நிற்க்ப் போவதாக ஒருதலை பட்சமாக அறிவிக்க அமெரிக்காவில் வாஷிடங்டன் மாநாடு ஏப்ரல் 14 ./15 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கலந்து கொள்ளாமலேயே நடந்தது.  இதன் காரணமாக ஜுன் 9 மற்றும் 10 தேதிகளில் ஜப்பான் நகர் டோக்யோவில் நடந்த ஈழப் புனரமைப்புக்கான உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தையும் விடுதலைப்புலிகள் புறக்கணித்தனர்.  

ரணில் ஆட்சியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போது இந்தியா வெளியே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தது.  உடல் நலம் குன்றியிருந்த ஆன்டன் பாலசிங்கம் இந்தியாவில் இருந்து கொண்டு எளிதாக சிகிச்சை பெற அனுமதி கேட்ட போது கூட மறுத்து விட்டார்கள்.  இதன் மூலம் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளில் இந்தியாவையும் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த புலிககளின் நோக்கமும் அடிபட்டுப் போனது.

ஆனால் புலிகள் இயக்கத்திற்கு பன்னாட்டு நிர்ப்பந்தம் வேறு வகையில் உருவாக்கப்பட்டது.  ஜப்பான் மற்றும் நார்வே பிரதிநிதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி முகாமில் பிரபாகரனை சந்தித்தனர். டோக்கியோ மாநாட்டில் சந்திக்க அழைப்பு விடுத்தும் பிரபாகரன் அதனை நிராகரித்தார். ஏற்கனவே நடந்த பலசுற்று பேச்சுவார்த்யின் போது பேசியபடி வட கிழக்கிற்கான இடைக்கால சபையை முழுமையாகவும் உடனடியாகவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆன்டன் பாலசிங்கம் இலங்கை பிரதமருக்கும் நார்வே அரசுக்கும் கடிதம் எழுதினார். இலங்கைக்கு பன்னாட்டு நிதி கிடைத்தாலும் புனரமைப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் புறக்கணிப்பு என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். .

51 நாடுகள், 22 சர்வதேச அமைப்புகள் ஈழ புணரமைப்பு என்ற பெயரில் இலங்கை பெற்ற நிதியென்பது விடுதலைப்புலிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே எளிதில் கிடைத்தது இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்து போயிருந்த 3000 கோடி தொகையை விட 4500 கோடி நிதியை டோக்யோ மாநாட்டில் அதிகமாகப் பெற்று மகிழ்ச்சியாக திரும்பினர்.  .

தள்ளாடிக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்திற்கு இப்போது தண்ணீர் வரத்து காய்ந்த நிலத்தில் பாய்வது போல சர்வதேச கரன்சிகள் வரத்தொடங்க காத்திருந்த சந்திரிகா கனகச்சிதமாக காய் நகர்த்த தொடங்கினார். 

ரணில் செல்வாக்கை மட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஆட்டத்திலிருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கு முன்பு உள்ளேயிருந்த ஜேவிபியுடன் கூட்டணியையும் வெற்றிகரமாக அமைத்திருந்தார். ஆட்சிக்கு வருபவர்கள் உள்ளேயிருக்கும் தமிழர் கட்சிகளை கருவேப்பிலை மாதிரி எப்படி பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் உள்ளேயிருக்கும் சிங்கள கட்சிகளும். இந்தியாவில் மைனாரிட்டி ஓட்டுக்கள் எத்தனை முக்கியமோ அதுபோல இந்த சிங்கள உதிரிக்கட்சிகளின் ஓட்டுக்களும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ரொம்பவே முக்கியம். ரணிலின் பிரதமர் பதவி முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டு காலத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ரணில் அமெரிக்கா சென்ற சமயத்தில் பார்த்து 2004 பிப்ரவரி 7 அன்று சந்திரிகா நடாளுமன்றத்தை கலைத்தார். 

சந்திரிகா எதிர்பாத்ததைப் போலவே ஏப்ரல் 2ல் நடந்த தேர்தலில் சிங்கள இனவாத கட்சிகளாக ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறமயவுடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றார். 

விடுதலைப்புலிகள் மீதான கடும் விமர்சனத்தை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த போதும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தான் வெற்றி பெற முடிந்தது.  அதுவே பின்னாளில் “ அவசரப்பட்டு ஆட்சியை கலைத்தது தவறு. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து அமைதிக்கு பாடுபட்டுருக்க வேண்டும் ” என்பதை சூசமாக அவர் வாயாலே சொல்லவும் வைத்தது. 

காரணம் கூட்டணி வைத்து போட்டியிட்ட ஜேவிபியும் சிங்கள கட்சியும் வலுவாக தங்கள் கால்களை ஊன்றியிருந்தனர். தனது அதிபர் பதவியை விட்டுக் கொடுக்க விருப்பமில்லாமல் தன்து கட்சியில் தனது கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சேவை ஏப்ரல் 6 2004 அன்று பிரதமராக நியமித்தார். 

மகிந்த ராஜபக்ஷே இலங்கை வரலாற்றில் 13 வது பிரதமர் கூடவே எந்த நாட்டு அரசியல்வாதிகளும் விரும்பும் துறையான நெடுஞ்சாலைத்துறை அமைச்சக பொறுப்பும் வந்து சேர்ந்தது. இப்போது தான் தன்னுடைய மாமா பாணியில் தோளில் ஒரு நீண்ட அங்கியை அணிய ஆரம்பித்தார்.  தனக்கென்று ஒரு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும், விவசாயப் பயிரான வரகுப் பயிரை நினைவுப் படுத்தும் விதமாகவும் அணிவதாக ஊடக பேட்டியில் தெரிவித்தார்.

டிசம்பர் 26 2004 உருவான ஆழிப்பேரழையில் விடுதலைப்புலிகளின் நிர்வாக பகுதிக்குள் இருந்த 15000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பிரபாகரன் இறந்து போனதாக தமிழ்நாட்டில் இதற்கென்று காத்திருந்த ஊடகங்கள் ஒப்பாறி போல் பாடிக் கொண்டுருந்தது.  சுனாமி பேரவலத்தை போக்க வெளிநாட்டு நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்தை எதிர்பார்க்காமலேயே பிரபாகரன் பாதிக்கப்பட்ட அத்தனை பகுதிகளையும் நேரிடைப் பார்வையில் களத்தில் இறங்கி அவசர கதியாய் செயல்பாடுகளை முடுக்கி விட்டுக் கொண்டுருக்க வேறொரு முக்கிய நிகழ்வும் அப்போது நடந்தேறியது.
.

இதே வருடம் மார்ச் மாதம் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன் வெளியேற வெற்றிகரமாக இரண்டாவது கோணல் உருவானது. 

டோக்யோ மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை மேலைநாடுகள் பார்த்த பார்வைக்கும் இப்போது கருணா இயக்கத்தை விட்டு வெளியே வர,   காத்துக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்திற்கும், கருணாவை வெளியே கொண்டு வர உழைத்த உளவுப் படைகளுக்கும் கொண்டாட்டமாக போனது.  கருணாவை கொழும்புக்கு கொண்டு போய்ச் சேர்ந்த முக்கியமானவர் ஒரு முஸ்லீம் அரசியல்வாதி, 

கருணா கிழக்கு மகாணத்தின் தளபதியாக இருந்தவர்.  கருப்பு ஜுலை கலவரத்திற்குப் பிறகு இயக்கத்தில் இணைந்து 1984ல்தமிழ்நாட்டில் சேலத்தில் பயிற்சி பெற்றவர்.  புலிகளின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியதோடு பிரபாகரனின் மெய்காப்பளாராகவும் பணியாற்றியவர். 

2004 மார்ச்சில் வெளியேறி கருணா தனியாக தமிழ் ஈழ மக்கள் விடுதலைப்புலிகள் என்றொரு இயக்கத்தை தொடங்கினார்.  வன்னிப் பேரரசை பிரபாகரன் உருவாக்கியிருந்தாலும் உள்ளேயிருந்த கிழக்கு பிராந்தியங்கள் முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதற்கு மேலாக இவர் தனக்கென்று தொடக்கம் முதல் உருவாக்கி வைத்திருந்த அடிப்படை கட்டமைப்புகளை விடுதலைப்புலி இயக்கத்தால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு தப்பிப் பிழைத்து இலங்கை அரசாங்கத்தின் ஆள்காட்டியாக மாறினார். அதுவே அவரின் உயிரைக் காப்பாற்றி இன்று அவரும் ஒரு மந்திரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் விடுதலைப்புலிகளுக்கு பயந்து அவரின் ஓடி ஒளிந்த ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் இந்தியாவின் ரா அமைப்பினர்.

இந்திய உளவுத்துறையான ரா மூலம் கேரளாவிலும் மலேசியாவிலும் இவரை ஒழித்து வைத்து காப்பாற்றும் அளவிற்கு இவர் முக்கியமானவராகத் தெரிந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உருவான இந்த இரண்டாவது கோணல் பின்னால் உருவாகப் போகும் விபரீதமான பாதைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சந்திரிகாவுடன் விடுதலைப்புலிகள் இயக்கம் சுனாமி நலத்திட்டத்திற்காக கையெழுத்திட்டு இருந்தனர்.  சுனாமிக்கு பிறகு செயலாக்க நடைமுறைகளை விடுதலைப்புலி இயக்கத்தோடு சேர்ந்து செய்யக்கூடாது என்று எதிர்த்த சிங்கள கட்சிகள் சந்திரிகாவையும் எதிர்க்கத் தொடங்கினர். 

அதிபர் பதவிக்கு காத்துக் கொண்டுருந்த மகிந்த ராஜபக்ஷே உருவான வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். 

சிங்கள கட்சிகளான ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய போன்ற உதிரிக்கட்சிகளின் முக்கிய கோரிக்கை ஒன்றே ஒன்று தான்.  

சுனாமி பேரவலத்தை போக்க வரும் எந்த வெளிநாட்டு நிதியும் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர்.  அதைப்போலவே புலிகள் இயக்கம் வெளிநாட்டில் நடத்திக்கொண்டுருந்த சமாதான உடன்படிக்கை மாநாட்டுக்களை நிறுத்தி விட வேண்டும்.  நார்வே தலையீட்டை தடுத்தி நிறுத்தி விடவேண்டும் என்பது போன்ற பக்கம் பக்கமாக அடித்தாலும் சோர்வு தருகின்ற அத்தனை கோரிக்கைகளையும் மகிந்தா ஏற்றுக் கொள்ள செப் 13  2005 ல் கண்டியில் மகிந்தாவுக்கும் இனவாத கட்சிகளுக்குமிடையே உடன்படிக்கை உருவானது. 

நீதிமன்றத்தின் மூலம் இடைக்கால உத்தரவு வர உருவாகியிருந்த சுனாமி புனரமைப்பு நிர்வாகம் புழுக்கம் காணத் தொடங்கியது. ஆனால் இந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பகுதிகளே.  அதிலும் கடற்கரையோரமாக வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தேவைப்படும் நிதியும் வராமல் காப்பாற்ற நாதியுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பிணமாக மாறியது தான் மிச்சம்.

நவம்பர் 17 2005 நடந்த தேர்தலில் அதிபர் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பா மகிந்த ராஜபக்ஷேவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக ரணில் விக்ரமசிங்கேயும் போட்டியிட்டனர்.  பண்டரா நாயகா உருவாக்கிய இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சந்திரிகாவின் ஆளுமையையும் மீறி, சந்திரிகா விரும்பிய அவரின் தம்பியையும் ஓரங் கட்ட வைத்து மகிந்த ராஜபக்ஷே அதிபர் வேட்பாளராக மாறினார்.   எதிர் வேட்பாளராக சந்திரிகா நினைத்துருந்தால் அவரின் வலது இடது கரமாக செயல்பட்டுக் கொண்டுருந்த தமிழர் லஷ்மணன் கதிர்காமர் வந்துருக்க முடியும்.  ஆனால் இலங்கை அரசாங்கத்தில் ஒரு தமிழர் அதிபர் பதவிக்கு வரமுடியுமா?

இனிமேல் மகிந்த ராஜபக்ஷே பெறப் போகும் அத்தனை வெற்றிகளுக்கும் அடிகோலியவர் கதிர்காமர் தான். 

அதில் எந்த சந்தேகமும் இல்லை.  

காரணம் ராஜீவ் காந்தி படுகொலை என்ற நோக்கத்தில் இந்தியா மட்டுமே விடுதலைப்புலி இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தடை செய்து இருந்தது.  ஆனால் சந்திரிகாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இலங்கை தீவின் நான்கு புறமும் நீர் என்பது போல இலங்கைக்கு வெளியே உள்ளே மேலை நாடுகள் அத்தனையையும் புலிகள் இயக்கத்திற்கு எதிராக மாற்றி வெற்றிகண்டவர் தமிழர் லஷ்மணன் கதிர்காமர்.  

ஏற்கனவே உழைத்த பல தமிழர்களைப் போலவே இவரும் சிங்களர்களுக்காவே உழைத்து தன்னை மிகச் சிறந்த இலங்கை குடிமகனாகவே காட்டிக் கொண்டு கடைசியில் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் போது விடுதலைப்புலி இயக்கத்தால் சுட்டு கொல்லப்பட்டு மேலோகப் பதவியை அடைந்தார்..

ஆனால் நடந்த தேர்தலில் பிரபாகரன் பார்வை எப்படி மாறியதோ? 

அடுத்த நான்காவது கோணல் உருவானது. 

விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தபடி பெரும்பாலான தமிழர்கள் ஓட்டுப் போடாமல் புறக்கணிக்க மகிந்த ராஜபக்ஷே மயிரழையில் தப்பி பிழைத்து அதிபராக மாறினார்.  மகிந்தா பெற்ற வாக்கு 50,29 சதவிகிதமும் ரணில் 48.43 பெற மகிந்தா அதிபராக உள்ளே வந்தார். நான்கு கோணல்கள்.

இப்போது விடுதலைப்புலி இயக்கத்திற்கு இலங்கைத் தீவின் நான்கு புறமும் எதிரிகள், . காரணம் இந்தியா முதல் ஏறக்குறைய 30 நாடுகள் விடுதலைப்புலி இயக்கத்தை தடை செய்து இருந்தனர்.

தமிழர்களின் ஆதரவு இல்லாமலேயே வென்று நவம்பர் 23 2005 ல் அதிபர் பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷே தனது புனித திருப்பணிகளை செய்யத் தொடங்கினார்.

11 comments:

THOPPITHOPPI said...

1

THOPPITHOPPI said...

அதிக நாள் ஆகிவிட்டது உங்கள் வலைத்தளத்தில் முதல் இடம் வாங்கி.

THOPPITHOPPI said...

நிச்சயம் ஈழம் பற்றி பேசப்போகும் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் படிக்கவேண்டிய பதிவு.

ஜோதிஜி said...

நன்றி தொப்பி.

சீமான், நெடுமாறன் போன்றவர்களிடம் பேசிப்பாருங்க. அவர்களால் வெளியே செர்ல்லிக் கொள்ள முடியாத விசயங்கள் நிறைய உண்டு. சீமான் கூட நண்பர்களுடன் பேசும் போது பல உண்மைகளை போகிற போக்கில் சொல்லிக் கொண்டு செல்கிறார்.

ஈழம் பற்றி எல்லாமே பெரும்பாலனவர்களுக்குத் தெரியும். எவரும் உருப்படியாக செயல்பட விரும்பாமையே இந்த பிரச்சனை ஆமை வேகத்தில் நடக்கின்றது.

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

//ஈழம் பற்றி எல்லாமே பெரும்பாலனவர்களுக்குத் தெரியும். எவரும் உருப்படியாக செயல்பட விரும்பாமையே இந்த பிரச்சனை ஆமை வேகத்தில் நடக்கின்றது.//

ஒரு தனியார் தொலைக்காட்சியில் சில நாட்களுக்குமுன் சீமான் பேச்சை கேட்டேன். நிறைய வித்தியாசம், ஈழம் விவகாரத்தில் முதலில் இந்தியாவை குற்றம் சொல்லிவிட்டு பிறகு தானே அதை திருத்தும் வகையில் இந்தியா என்றால் இந்திய மத்திய அரசு என்று கூறினார்.

ஒரு தோழர் ஏன் அரசியல் தலைவர்கள் ஈழம் விவகாரத்திற்காக ஒன்று கூடவில்லை என்றுகேட்டபோது சீமான் அந்த தோழரிடம் கேட்டார் நீங்கள் ஏன் முயற்சி செய்யவில்லை என்று. இங்கே தலைமைக்குதான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள் அதனால்தான் ஒன்று கூட முடிவதில்லை என்று கூறினார். அருமையான பேச்சி, தெளிவு. நிச்சயம் சீமான் ஒரு பத்து அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பே தனது போராட்டத்தை தொடங்கி இருந்தால், போராட்டத்தை தீவிரப்படித்தி இருந்தால் நிச்சயம் தமிழர்களின் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம. என்ன செய்வது சீமான் என்ற போராளியையும் விதி கட்டிப்போட்டே வைத்திருந்திருக்கு தமிழர்கள் சாகும் வரை.

ராஜ நடராஜன் said...

பின்னோக்கிப் பார்த்தால் இப்பொழுது மிஞ்சுவது துயரம் மட்டுமே!

ஹேமா said...

தமிழனின் தலைவிதியே கோணல்தானோ !

'பரிவை' சே.குமார் said...

படிக்கவேண்டிய பதிவு...


//சீமான் ஒரு பத்து அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பே தனது போராட்டத்தை தொடங்கி இருந்தால், போராட்டத்தை தீவிரப்படித்தி இருந்தால் நிச்சயம் தமிழர்களின் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம. என்ன செய்வது சீமான் என்ற போராளியையும் விதி கட்டிப்போட்டே வைத்திருந்திருக்கு தமிழர்கள் சாகும் வரை.//

Correct Mr. ThoppiThoppi.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
கடுமையான, உண்மையான உழைப்பு.
வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

நன்றிங்க...தொடர்கிறேன்..தொடருங்கள்.