முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. தற்போது நீக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி ஒரு விவாத அலையை உருவாக்கியுள்ளது. சென்ற கலைஞர் ஆட்சியில் உச்சநீதி மன்றம் வரைக்கும் சென்று வெற்றிக் கொடி நாட்டிய சமச்சீர் கல்வி அதோகதியாக மாறியுள்ளது. சென்ற வருடம் நீதிமன்றத்தில் தோற்றுப் போய் திரும்பிய தனியார் பள்ளிகள் காட்டில் இப்போது சரியான அடைமழை.
அரசியல் காழ்புணர்ச்சியால் தற்போதைய அரசு இந்த நல்ல திட்டமான சமச்சீர் கல்வியை நீக்கியது தவறு என்று சொல்ல வேண்டிய நடுத்தரவர்க்க மக்களின் குரல் ஒன்றும் மேலெழுந்தாக தெரியவில்லை. எங்கள் பிள்ளைகளில் மாற்றுச் சான்றிதழ்களை எங்களைக் கேட்காமல் துரித அஞ்சலில் அனுப்பியுள்ளார்கள் என்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் நடவடிக்கை குறித்து பெற்றோர்கள் புலம்புகின்றார்களே தவிர அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளியில் கொண்டு போய்ச் சேர்க்கும் எண்ணமில்லை. காரணம் பெற்றோர்களின் மனோபாவம் ஒன்றே ஒன்று தான். என் பிள்ளையின் கல்வியென்பது நாளை வருமானத்திற்கான இன்றைய முதலீடு. இவர்களின் கணக்கைப் போலவே தனியார் பள்ளிக்கூடங்களும் முடிந்தவரைக்கும் மூதலீட்டை வட்டியோடு உடனடியாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று கொடிநாட்டி வந்த இந்த சமச்சீர் கல்வி பிரச்சனை நிச்சயம் இந்த அரசுக்கு முதல் ஆப்பாகத்தான் இருக்கப் போகின்றது. ஆனால் இதனால் முழுமையாக பாதிக்கப்படப்போகும் நடுத்தரவர்க்க, கிராமப்புற பெற்றோர்கள் மத்தியில் எந்த அலையும் உருவாகவில்லை. காரணம் என்ன?
கிராமப்புற மாணவன் படிக்கும் கல்வியும் நகர்புறத்தில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்திட்டத்தின் படி படிக்கும் போது இருவருக்குண்டான இடைவெளி இருக்காது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சமச்சீர் கல்வியைப்பற்றி பேசுவதற்கு முன்பு நம் மக்களின் கல்வி அறிவு குறித்த தற்போதைய மனோபாவத்தை பார்த்து விடலாம்.
என் பார்வையில் கடந்த ஓராண்டாக பார்த்து வந்த நிகழ்வுகள் இது.
திருப்பூரில் உள்ள 90 சதவிகித முதலாளிமார்களுக்கு அருகே உள்ள குன்னூர், ஊட்டி இதைத்தவிர்த்து ஏற்காடு தான் முக்கிய கல்விக்கோயிலாக உள்ளது. பல புண்ணிய ஆத்மாக்கள் குழந்தையை மூன்று வயதிலேயே கொண்டு போய் தள்ளிவிட்டு வந்து விடுவதுண்டு. காரணம் ஒழுக்கத்தை தொடக்கத்தில் இருந்தே கற்று கொடுத்து விடுவார்களாம். ஆய் போனால் கழுவத்தெரியாத குழந்தைகளை அங்குள்ள ஆயாம்மா கைபட்டு விடுதிகளின் கூண்டில் வளர்ந்து கடைசியில் கண்ணியவானாக வளர்ந்து வந்து நிற்பார்களாம்.
இது போல வளர்ந்து நிற்பவர்கள் பெரும்பாலும் அப்பா வளர்த்த நிறுவனத்தை வளர்க்கின்றார்களோ இல்லையோ நடிகைகளுக்கு ப்ளாங் செக் கொடுத்து மாட்டிக் கொள்ளும் அசமந்த மக்குப் பிள்ளையாகவே இருந்து தொலைந்து விடுகிறார்கள். மூன்று தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் தகப்பன்மார்கள் எப்படியோ இவர்களை சகித்துக் கொண்டு பிள்ளைகள் படித்த கல்விக் கோயில்கள் கற்றுக் கொடுக்காத நல்லொழுக்கங்களை தங்களை சொத்துக்களை இழந்து கற்றுக்கொடுக்கும் அபாக்யவான்களா இருக்கிறார்கள். பிள்ளைகள் கரைத்துக் கொண்டிருக்கும் சொத்துக்களை ஆஞ்சியோகிராம அல்லது பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கண்ணியவான்கள் படித்த கல்விகோயில்கள் வாங்கிய பள்ளிக்கட்டணம் வருடத்திற்கு 1.50 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரைக்கும் உள்ளது.
தான் வளர்த்து வைத்துள்ள நிறுவனத்தில் ஒரு சாதாரண பட்டதாரியாக வந்து உட்கார வைக்க வேண்டும் என்று நினைக்கும் தகப்பன் மகனின் கல்விக்கென்று செலவழித்த தொகை குறைந்தபட்சம் 20 லட்சம். காரணம் பெரும்பாலான உயர்தர வர்க்க மக்கள் படிக்கும் கல்விக்கூடங்கள் கல்விக்கு கொடுக்கும் மரியாதை மாணவனின் ஒழுக்கத்திற்கு கொடுப்பதில்லை. விதிவிலக்குகளை தவிர்த்து.
அடுத்து?
சென்ற கல்வியாண்டின் தொடக்கத்தில் அந்த நண்பரை அவரின் அச்சகத்தில் சந்தித்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு என் கையை பிடித்து பலங்கொண்ட வரைக்கும் கைகுலுக்கினார்.
" நீங்க சொன்ன நண்பர் பள்ளித் தாளாளரிடமிருந்து போராடி ஒரு சீட்டு வாங்கி கொடுத்து விட்டார் " என்றார். காரணம் வேறொன்றுமில்லை. காங்கேயம் சாலையில் இருந்த ஒரு பள்ளியில் அவர் குழந்தையை ப்ரிகேஜியில் சேர்த்து விட்ட மகிழ்ச்சி. அந்த பள்ளிக்கூடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. அவர் கட்டிய கட்டணம் அதிகமில்லை. நன்கொடையோடு ஒரு வருட கட்டணம் 40.000. குழந்தை படிப்பது ப்ரிகேஜி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
"சர்வதேச தரத்தில் இருக்கிறது. என் குழந்தையை அங்கே தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்று முந்தைய ஆண்டில் இருந்து அந்த பள்ளி குறித்த நினைவாகவே இருந்தவர். நீச்சல் குளம் முதல் வகுப்பறை ஏசி வரைக்கு இருக்கிறது என்ற மகிழ்ச்சி வேறு. நண்பர் மிகுந்த வசதி படைத்தவர் அல்ல. நடுத்தரவர்க்கத்திற்கு சற்று மேம்பட்ட வாழ்க்கை. ஆனால் இப்போதுள்ள திருப்பூர் வாழ்க்கையில் அவர் குழந்தைக்கு கட்ட வேண்டிய கட்டணத்திற்காக
படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு பள்ளியில் சேர்க்கும் எண்ணமுமில்லை. நண்பரின் குழந்தை பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது உத்தேசமாக பத்து லட்சமாவது செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும்.
மற்றொருவர்?
அவர் உடன் பணிபுரிந்த நண்பர். இங்கு பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தவர். ஒரு வருடமாய் அடித்த சுனாமியில் பதவியிழந்து, சிறிய நிறுவனங்களில் சேர முடியாமலும், தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமலும் கடைசியாக சிறிய தொழிலை தொடங்கி அதிலும் இழந்து அதோகதியாக இருப்பவரின் ஒரே பையன் படித்த பள்ளிக்கூடமென்பது பணப்பிசாசு கூட்டம். அவர்கள் கேட்கும் கட்டணத்தை கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். சென்ற வருடங்களில் இவருடன் பேசும் போது நீங்க தப்பு பண்ணிட்டீங்க? என் பையனோட பேசிப் பாருங்க. அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்தை பார்க்கும் போது நான் படுற கஷ்டமெல்லாம் பெரிசா தெரியலை என்றார். இன்று அவர் பையன் நாக்கு இருக்கும் வாய் சாப்பிடுவது ஒரு ரூபாய் அரிசி.
இறுதியாக?
வீட்டுக்கு அருகே பெரிய குடியிருப்பு உண்டு. அங்குள்ளவர்கள் பெரும்பாலும் தொழிலாளவர்க்கத் தோழர்கள். வாரம் முழுக்க வேலையிருந்தால் தான் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் பாட்டம். இரவு முழுக்க டாஸ்மாக் கொடுக்கும் சந்தோஷம். குழந்தைகளை அருகே இருக்கும் ஆங்கில வழி கல்விகூடத்தில் தான் படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இதில் பாதிப்பேர்கள் ஊரை காலி செய்து போய்விட்டார்கள். மீதியிருப்பவர்கள் பணம் கட்ட முடியாத காரணத்தால் இந்த வருடம் சற்று தொலைவில் உள்ள அரசாங்கப்பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்கள்.
சம்ச்சீர் கல்விக்கும் மேலே உள்ள சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா?
மாறிவரும் சமூக சிந்தனையில் இப்போது கல்வி என்பது அறிவுக்குரிய விசயம் அல்ல. அது குடும்ப கௌரவத்திற்குரிய விசயமாகவே மாறியுள்ளது. என் குழந்தை எப்படி படிக்கிறான்? என்பதை விட எந்த பள்ளியில் படிக்கிறான் என்பது தான் இப்போது பெற்றோர்களிடம் இருக்கும் முக்கிய பேசு பொருளாக உள்ளது. முந்தைய அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வியென்பது பெரும்பாலான பெற்றோர்களிடம் ஒரு விதமான எதிர்மறை சிந்தனைகளைத்தான் உருவாக்கியது. பெரும்பாலான பெற்றோர்கள் அரசாங்கம் கல்விக் கொள்கையில் தலையிடக்கூடாது என்கிறார்கள். அதிலும் சமீப காலமாக புற்றீசல் போலவே முளைத்து, கல்வியை வியாபாரக்கும் கொழுந்துகள் கொடுக்கும் உத்திரவாதமென்பது இப்போது வேறு விதமாக உள்ளது.
எங்கள் பள்ளியில் அரசாங்க பாடத்திட்டம் அல்ல. சர்வதேச தரத்திற்கு இணையாக போட்டி போடக்கூடிய வகையில் உள்ள பாடத்திட்டம் என்பதாக பெற்றோர்களை மூளைச்சலவை செய்து மொத்த முட்டாளாக மாற்றி இருக்கும் போது அரசாங்கம் உருவாக்கிய சமச்சீர் கல்வி என்ன தாக்கத்தை உருவாக்க முடியும்? இப்போது காசு வாங்கிக் கொண்டும் கமுக்கமாக குத்தி தள்ளிய மக்கள் விபரமாகவும் பேசத் தொடங்கி விட்டனர். சமச்சீர் கல்வி கொண்டு வந்த கலைஞர் குழந்தைகள் எங்கே படித்தார்கள். ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்திக் கொண்டிருக்கும் பள்ளிக்கூடம் (பள்ளிக்கூடத்தின் பெயர் சன் ஷைன் என்னவொரு தமிழ்பற்று?) எந்த பாடத்திட்டத்தின் படி நடத்துகிறார்கள் என்று வக்கணையாக கேள்வி வேறு கேட்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இப்போது தங்கள் குழந்தைகள் குறித்து அவரவர் மனதில் உள்ளது ஒன்றே ஒன்று தான்.
என் குழந்தை நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும்.
இந்த ஆங்கில மோகமென்பது ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்க தனியார் கல்விக்கூடங்களும் முடிந்தவரைக்கும் லாபம் என்பதாக கல்லாகட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இப்போது மெட்ரிக் சிலபஸ் என்பதிலிருந்து சிபிஎஸ்சி வரைக்கும் வந்து நின்று அடுத்த கட்டண கொள்ளையை வேறு தொடங்கியிருக்கிறார்கள். இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது எல்லாவற்றுக்கும் ஒன்றே தான். இந்த பாடத்திட்டத்திற்கு இத்தனை என்று எங்குமில்லை?
ஆனால் இதற்காக மொத்தமாக தனியார் கல்விகூடங்களை மட்டும் குறை சொல்ல முடியாது.
தற்போது மாநில அளவில் முதன்மை இடங்களில் வந்து கொண்டிருக்கும் மாணவர்களும், நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளில் சமீப காலமாக அரசாங்க பள்ளிக்கூடங்களும் அதிக அளவில் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் மாநில அரசாங்கம் கல்வி குறித்து உண்மையான அக்கறை கொள்ளாத பட்சத்தில் தான் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கின்றது.
தனியார் கல்விக்கூடங்கள் செய்வதோடு அதற்குண்டான கட்டணங்களையும் இரண்டு மடங்காக வசூலிக்கும் போது தான் பிரச்சனையின் தொடக்கமே உருவாகின்றது. அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை இந்த பாழுங்கிணற்றில் மறைமுகமாக கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கிறது.
சென்ற ஆட்சியில் செம்மொழி மாநாடு என்று அதிகாரபூர்வமாக 380 கோடிகளை கொண்டு போய் கொட்டினார்கள். இப்போது சமச்சீர் கல்வியை மாற்றுவதால் 200 கோடி நட்டம் என்று தொடர்ந்து காட்டுக் கத்தலாய் ஊடகத்தில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த செம்மொழி மாநாட்டினால் யாருக்கு என்ன லாபம் வந்தது? மாநாடு முடிந்த அடுத்த நாள் முதல் ஒரு தமிழ்ப்புரட்சி நடந்து மக்கள் என் மொழி என் இனம் என்று பேசியிருப்பார்களோ?
செம்மொழி மாநாடு குறித்து, தன்னைப் பற்றி அவசரமாய் பாடப் புத்தகத்தில் கொண்டு வந்த பதவியை இழந்த கலைஞர் அரசின் கல்வித் துறையின் சாதனைகளை சிலவற்றை பார்த்துவிடலாம்.
இப்போதும் தமிழகத்தில் சுமார் 1500 அரசாங்கப் பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டே செயல்படுகின்றது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் 80 சதவிகித மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களை நம்பியே படித்து வருகின்றனர். தொடக்கக்கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரைக்குமான வகுப்புகளுக்குரிய 60 000 ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. இது போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சுமார் 10 000 காலியிடங்கள் உள்ளது. இதையெல்லாம் விட மற்றொரு கொடுமையும் உண்டு. ஏறக்குறைய 17 000 ஆசிரியர்களின் முக்கியப் பணியென்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் அடையாள அட்டை விநியோகம், பஞ்சாயத்து யூனியன் வேலைகள் என்று வருட்ந்தோறும் வேறு வேலை செய்ய வேண்டும்.
கர்மவீரர் காமராஜர் காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்களின் சதவிகிதமென்பது இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக இருந்தது. இதுவே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி தற்போது 49 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற ரீதியில் வந்துள்ளது. பள்ளிக்கூடங்களில் தான் இந்த குளறுபடியென்றால் கல்லூரியிலும் இதே நிலைமைதான்.
தமிழகத்தில் 62 கலைக்கல்லூரிகள் உள்ளது. இதில் ஷிப்டு முறையில் செயல்படும் சுயநிதிக்கல்லூரிகளும் உள்ளது. இவை அனைத்திலும் நிரப்பப்படாமல் இருக்கும் காலியிடங்களின் எண்ணிக்கை 3000.
பேராசிரியர்கள் இல்லாமலேயே நமது மாணாக்கர்கள் அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் 500 ஆகும்.
ஏன் தனியாரைத் தேடி பெற்றோர்கள் செல்கிறார்கள் என்பதை இந்த கணக்குகள் நமக்கு உணர்த்தும். கல்விப்பானையே ஓட்டையாக இருக்கும் போது அதில் உள்ள தண்ணீர் குறித்து யாருக்கு அக்கறை?
முடிந்தவரைக்கும் கல்விக்கட்டணம் என்கிற ரீதியில் தனியார் பள்ளிகள் சுருட்ட, நாங்கள் உழைத்து சுடுகாடு போனாலும் போவோமே தவிர எங்க பிள்ளைங்க இங்கீலிஷ் படித்தே ஆகனும் என்கிற ரீதியில் இருக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரைக்கும் சமச்சீர் கல்வி என்பது சமாதிக்குரிய சங்கதிதான். எந்த அரசாங்கமும் இப்போதுள்ள தனியார் கல்விக்கூடங்களை அடக்கத் தேவையில்லை. அவர்களின் கட்டணக் கொள்ளையைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இந்த சமச்சீர் கல்வியை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பது குறித்தும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
தெரிந்தே சவக்குழியில் போய் விழுபவர்களை காப்பாற்றுவதை விட வேறு சிலவற்றை தற்போதைய அரசாங்கம் உடனடியாக செய்தாலே போதுமானது. இப்போது சமச்சீர் கல்வியை விட வேறு சில முக்கிய கடமைகள் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கிறது. இப்போதுள்ள அரசாங்கப் பள்ளிக்கூடங்களை தெளிவான முறையில், சரியான ஆசிரியர்கள் கொண்டு, முறையான வசதிகள் செய்து கொடுத்தாலே போதுமானது. இப்போதும் கூட பல பெற்றோர்களும் அரசாங்கப் பள்ளியில் இடம் கிடைக்காதா? என்கிற ரீதியில் தான் அலைந்து கொண்டிருக்கிறார்க்ள். முறையான கட்டிட வசதிகள் இல்லாமல் ஆட்டு மந்தைகளைப் போல மாணவர்களை அடைத்து எத்தனை நாளைக்குத் தான் அரசாங்க பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் அறிவுக்கண் திறக்கும் பணியில் ஈடுபட முடியும்?.
காரணம் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு நன்றாகவே தெரியும். பிள்ளைகள் சரியான முறையில் படிக்காத வரைக்கும் அது அம்பானி பள்ளியில் சேர்த்தாலும் தறுதலையாகத்தான் வெளியே வரும்.
சமச்சீர் கல்வி குறித்து எழுதுங்க என்று உறுதுணையாக இருந்த ருவாண்டா நண்பர் சத்யகுமாருக்கு நன்றி.
41 comments:
சம சீர் கல்வியோ,கான்வெண்ட் படிப்போ நம்ம குழந்தைகளின் ஐ.க்யூ எனும் புத்திசாலித்தனம் சராசரி உலக குழந்தைகளுக்கும் மேலானது.பகிர்வுகள் மட்டுமே தேவை.
முதல் படம் இளைஞனுக்கு முன்னாடி ரிலிஸா?பின்னாடியா?
இல்ல உளியின் ஓசைக்கு முன்னாடி
ஜோதிஜி...இன்னும் தூங்கலயா...படிச்சிட்டு இருக்கீங்கபோல !
// என் பிள்ளையின் கல்வியென்பது நாளை வருமானத்திற்கான இன்றைய முதலீடு. இவர்களின் கணக்கைப் போலவே தனியார் பள்ளிக்கூடங்களும் முடிந்தவரைக்கும் மூதலீட்டை வட்டியோடு உடனடியாக எடுத்துக் கொண்டிருக்கிறது. //
முற்றிலும் உண்மை விரும்பிய துறையில் ஒளிர வேண்டும் என்ற எண்ணம் நம்மவரிடம் இல்லை ... அதிகம் பணம் கொட்டும் துறையில் அனைவரும் நுழைந்து அந்த துறையே காலவாதியாக வேண்டும் என்ற எண்ணமே நம்மவரிடம் உண்டு .. அதற்கு சிறந்த முன்னுதாரணமானோர் குற்றாலீசுவரனின் பெற்றோர்.. ஒலிம்பிக்கில் தங்கம் குவிக்க வேண்டிய ஒரு இளைஞன் இன்று எந்தக் கம்பெனியில் குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்காரோ ...
சமச்சீர் கல்வியில் கைவைத்து அதிமுக அரசு - '' நாம் ஒன்றும் புதுமையானவர்கள் இல்லை எனவும், மாற்று சக்தி இல்லை எனவும் '' நிரூபித்துவிட்டார்கள்.
ஆனால் இந்த அரசியல் இழுப்படியில் பாதிக்கப்படுவது சாதாரண வீட்டுப் பிள்ளைகள் தான் ... மக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து ஒரு பெரும் போராட்டத்துக்குத் தயாராக வேண்டும் ...
மேன்வர்க்கம் எனப்படும் கோஸ்டி தமிழகத்தின் சிறுபான்மைக் கூட்டமே.. மெற்ரிக், ஆங்கிலோ-இந்தியன் என தனித்தனிப் பாடத்திட்டங்கள் மக்களையும், மாணவர்களையும் வர்க்க ரீதியாக பிரிக்கும் பெரும் தந்திரமே.. இதில் சாதியமும் ஊடுருவி உள்ளது என்பதே உண்மை ..
மெற்ரிக்கில் படிப்போர் பெரும்பாலானோர் ஆதிக்க வர்க்கத்தினரின் பிள்ளைகள், வர்க்க ரீதியாக வசதிப் படைத்தோர் ஏனையோ பணம் செலவு செய்து படிக்க வைக்க முடியாத நிலை. அப்படியே படித்தாலும் - அவர்கள் ஓரங்கட்டப்படுவதை சொந்த அனுபவத்தில் கண்டுள்ளேன் ...
சமச்சீர் கல்வியில் இந்த பருப்பு எல்லாம் வேகாது ??
தங்களின் புள்ளிவிவரங்கள் ஆச்சர்யப் படுத்துகின்றன சகோ. மிக்க நன்றிகள்.
எத்தனை இளையவர்கள் வேலைக்காக காத்திருக்கும் போது, ஏகப்பட்ட பணியிடங்கள் நிரப்பப் படாமலும், புதிய பணிகள் உருவாக்கப்படாமலும் இருப்பது வேதனையானது .. இதனை அரசுகள் வேண்டுமென்றே செய்வதாகவும் தோன்றுகின்றது ..
தனியார் பள்ளிகள் கொடுக்கும் லஞ்சங்களைப் பெற்றுக் கொண்டு - அரசே இப்படி செய்வதையும் உணர முடிகின்றது. கேவலமான நிலைமை !!!
சமச்சீர்க் கல்வித் திட்டம்,
அருகாமைப் பள்ளியில் சேர்தல்,
தனியார்ப் பள்ளிகளின் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாகும் ,
சமச்சீர் கல்வி குறித்து ஏன் ட்விட்டரில் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யக் கூடாது என்ற வினாவும் எழுகின்றது சகோ ?
நல்ல பதிவு
சமச்சீர் அதாவது பொதுக் கல்வி தமிழ்நாடு முழுவதும் வழங்கும் திட்டம் என்பது மிக அவசியமான ஒன்று. எந்த முறையில் கல்வி கற்றோரும் உயர்வகுப்புகளில் ஒரே மாதிரி கல்வியையே கற்கின்றனர்.இதில் பள்ளி கல்விக்கு பல பெற்றோர் செய்யும் செலவு மலைக்க வைக்கிறது.
தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு மாணவர்கலை தயார் படுத்தும் ஒரு கார்ப்பரேட் நிறுவன்மாக்வே செயல் படுவதால் சராசரியாக மதிப்பெண் அதிகம் பெறுகிறார்கள்.இந்த அதிக மதிப்பெண்,நுனி நாக்கு ஆங்கிலம் இரண்டும் பெற்றோரை கவர்ந்து இழுக்கிரது.இங்கு பணிபுரியும் பல ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் கிடையாது.அனைவருமே பதிவு செய்து அரசு வேலை கிடைக்க எதிர்பார்ப்பவர்கள்.
அரசு பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பி,வசதிகளை அதிகரித்து,தரம் கண்காணித்தால் தனியார் பள்ளிகளை விடவே சாதிக்கலாம்.இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சையில் சிக்குவதை வழ்க்மாக கொண்டுள்ளது.இப்போது சமச்சீர் கல்வியில் இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பார்த்தால் 5 ஆண்டும் ஆட்சியின் இலட்சணம் புரிந்துவிடும்.
நன்றி.
அரசு நடத்தும் பள்ளிகளில் தரமே இல்லைன்னுதானே மக்கள் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க அலையுறாங்க?
முதலில் அரசுப்பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் உண்டா? எத்தனையோ பணி இடங்கள் காலியாத்தான் இருக்குதாம். லஞ்சம் கொடுக்கும் தொகையைப் பொறுத்து ஆசிரியர் பணி கிடைக்கும் போல!
அரசு கண்ட செலவுகளைக் குறைச்சுப் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்யணும்.
காசு கொடுத்து வேலை வாங்குனவங்க தியாகிகளா என்ன? 'வாங்குன' வேலைக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்குன்னு அலட்சியம்தான் மிஞ்சும்.
அதான் நானும் சொல்லிக்கொடுத்தேன். நீ படிச்சா படி இல்லாட்டிப்போன்னு இருக்காங்க.
பள்ளிக்கூடங்களிலும் மாணாக்கர்களுக்கு அவசியமான வசதிகள் இல்லை. எடுத்துக்காட்டா.... வயசுப்பெண்கள் படிக்கும் இடங்களின் கழிப்பறையை நினைச்சுப் பார்க்கணும்:(
இப்படி எல்லாக் குறைகளையும் தன்னகத்தே வச்சுக்கிட்டு அரசு சமச்சீர் கல்வின்னு புத்தகத்தை மட்டும் கொண்டு வந்தாப் போதுமா?
சரியான பதிவு. முதலில் சரி செய்யப்படவேண்டியது அரசு பள்ளிகளின் தரம்தான். அதை சரி செய்யாமல் பாடத்திட்ட மாற்றம் மட்டுமே சமச்சீர் கல்வியை தந்துவிடாது
இங்கு சிலர் சமச்சீர் கல்விக்கு அரசுப் பள்ளிகளை முழுவதும் குறை சொல்லி - மெற்ரிக் மாந்திரிகம் ஊதுவதை அறிய முடிகின்றது.
சமச்சீர் கல்வி என்பது அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளியாக்குவது அல்ல ! தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளாகவே இயங்கும் .. அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவே இயங்கும்..
நம் தங்கத் தமிழ் நாட்டில் மட்டும் தான் 1 முதல் 10 வகுப்பு வரை STATE BOARD ( SSLC ), MATRICULATION, ORIENTAL ( OSLC ), ANGLO-INDIAN எனப் பல போர்டுகள் இயங்குகின்றன. இந்த போர்டுகள் எல்லாம் மாநில கல்வி வாரியத்தின் கீழ் இயங்கினாலும் - மெற்ரிக் பள்ளிகளின் புத்தகங்கள், பாடத்திட்டங்கள் அனைத்தும் வரன்முறை இல்லாமல் இருக்கும். ஆங்கிலம் 1,2 தமிழ் 1,2 என ஐந்துப் பாடங்களை வேண்டும் எனவே 11 பாடங்களாக பிரித்து - அனைத்துப் புத்தங்களையும் தனியார் கம்பெனியிடம் வாங்கி பாடம் நடத்துவார்கள், இதனால் தனியார் கம்பெனி - மெற்ரிக் பள்ளி ஒப்பந்தகாரர்கள் போல வியாபாரம் நடத்துவார்கள். அத்தோடு இல்லாமல் மெற்ரிக் பாடங்கள் உசத்தி என மார்க்கேட் செய்வார்கள்.
ஆனால் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்ததும் 11, 12-யில் எல்லாரும் எந்தப் பாடத்தில் படிக்கின்றார்கள். அரசு தரும் பாடத்திட்டத்தில் ஒரே STATE BOARD தான் .... !!!
முதலில் பத்தாம் வகுப்பு தேர்வே அவசியாமா ? என்பதை நாம் கேள்விக் கேட்க வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வு இல்லாவிடின் மெற்ரிக் கல்வித் திட்டமே தேவை இருக்காது. அடுத்தது அனைத்து போர்டுகளையும் களைத்துவிட்டு ஒரே போர்டு ஆக்குவதால் எந்தக் குடியும் முழுகிவிடாது .... !!! மெற்ரிக் படித்தவனுக்கு என்ன அறிவு இருக்கோ, அதே அறிவு தான் அரசுத் திட்டத்தில் படித்தவனுக்கும் இருக்கு .. இது யதார்த்ததில் நான் கண்ட உண்மைகள் ...
முதலில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்தாக வேண்டும்.
இரண்டு பிற போர்டுகளைக் கலைத்துவிட்டு, அனைத்து பொதுப் பள்ளியில் கொண்டு வரவேண்டும்.
மூன்று 9 -12 வரை உள்ள வகுப்புகளை CREDDIT BAESDE SEMESTER SYSTEM கொண்டு வரவேண்டும். கல்லூரிகள் போல செமஸ்டர் முறை பள்ளிகளில் வந்துவிட்டால் - 12ம் வகுப்புத் தேர்வுக்கு ரோபோ போல மாணவர்களைத் தயார் செய்யும் சில ராசிப் புரம் பள்ளிகள் போல பல பள்ளிகளின் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை கோச்சிங்க முறை ஒழியும்.
நான்கு மெற்ரிக் முறையை ஒழித்துவிட்டால் பல தரம் கெட்ட தனியார் பள்ளிகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும். அத்தோடு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்திவிட்டால் 80 சதவீத தனியார் பள்ளிகள் வேறு தொழிலுக்குத் தாவ வேண்டியது என்பதே நிதர்சனமான உண்மை .... !!!
அரசுப் பள்ளிகளில் அனைத்தும் டுப்பாக்கூர் பள்ளிகள் கிடையாது 20 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகள் ஏ1 தரம் கொண்டவை என்பதை கண்கூடாகப் பார்த்தவன் நான்.
முதலில் இதனை செய்வோம் - அப்புறம் மற்றவற்றை மாற்றலாம் என்பது எனதுக் கருத்து .. மக்களிடம் விழிப்புணர்வுக் கொண்டு வரவும், அரசை நிர்பந்திக்கவும் இணையம் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு போராட்டம் நடத்த முனைய வேண்டும் என்பது எனது அவா ?
இப்போது புரியும் சமச்சீர் கல்வி எதுவென?
சும்மா தரத்தை உயர்ந்துங்கள் அப்புறம் நான்க வரோம் என பட்டர் கிரீம் சமூகம் திசைத்திருப்பும் வேலை இங்கு வேகாது ....
தனியார் கல்வி என்ற ஒன்றில்லாமல் இருந்திருக்குமாயின் - அரசியல் வாதி பிள்ளை, பணக்காரன் பிள்ளை, சினிமா நடிகன் பிள்ளை, அரசு ஊழியர்கள் பிள்ளை, பாங்க் உத்தியோகத்தர் பிள்ளை என மேம்பட்டோரின் பிள்ளைகள் எல்லாம் எங்கேப் படித்திருக்கும் அரசுப் பள்ளியில் தானே !!! அப்போது என்ன நடந்திருக்கும் ? இவர்கள் அனைவரும் தானாகவே அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நிர்பந்தம் செய்திருப்பார்கள். ஆனால் இன்று மேற்கூறிய மேம்பட்ட சமூகத்தினர் எவரும் அரசுப் பள்ளிகளுக்கு செல்வதில்லை. அது தரமான பள்ளியே ஆனாலும் கூட .... அதனால் வேறு வழியற்றோர், நாதியற்றோர் தான் அரசுப் பள்ளிகளில் சேரவேண்டிய நிலை .. இதனால் இந்த மக்கள் அரசு அரசுப் பள்ளிகளை உயர்த்த ஒருபாடும் செய்யவில்லை .... கண்டுக்காமல் விட்டுவிட்டது ... சமூகத்தின் மேம்பட்டோரின் கன்றோரில் தான் அனைத்தும் இயங்குகின்றது .. ஏழை எளியோர் எல்லாம் வெறும் வாக்கு வங்கிகளே ஆவார்கள் ....
நாம் இப்போது கோருவதெல்லாம் -- தனியார் பள்ளியில் படிப்போர் படிக்கட்டும் ஆனால் - அனைத்தும் ஒரே STATE BOARD-யின் கீழ வரட்டும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்ந்துங்கள் ... இதற்கு குறுக்கே சப்பைகட்டுக் காரணங்களை கூறி திசைத் திருப்போவோரை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் ....
80 சதவீதமான மெற்ரிக் பள்ளிகள் நன்றாக வித்தைக் காட்டிப் பிழைக்குதுங்க.. அப்படிப்பட்ட வித்தைக் காட்டிப் பள்ளியில் படித்து நொந்தவன் தான் நான் ................ !!!
கனடாவில் 99 சதவீதமானவை அனைத்தும் பொதுப் பள்ளிகள் தான், அதே போல இங்கு மெற்ரிக், ஆங்கிலோ இண்டியன் லொட்டு லொசுக்கு ஒன்னியும் காணோம் .... அனைத்து மாநில கல்வி வாரியத்தின் கீழ் மாநில கல்வித் திட்டம் தான். தனியார் பள்ளிகள் சில இயங்குகின்றன - விரல் விட்டு எண்ணும் அளவுக்கு, சில கத்தோலிக்கப் பள்ளிகளும் இயங்குகின்றன - ஆனால் எல்லாமும் சமச்சீர் கல்வி தானுங்க .... !!!
நம்ம தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒன்னியும் மாத்தாமா ஏமாத்திட்டே இருப்பானுங்க... அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்பதே உண்மை. பதிவுலகில் பலரும் கமுக்கமாக இருப்பது வருத்தம் தருகின்றது ............ !!!
படிக்கற பையன் எங்கிருந்தாலும் படிப்பான், படிக்காத பசங்க எங்க படிச்சாலும் படிக்க மாட்டாங்க, கூடவே அரசு பள்ளியின் சுற்றுப்புற சூழல், கழிப்பறை வசதி இன்மை, பாதி பள்ளிக்கு மேற் கூறையே இல்லாதது போன்றதையும், இன்னும் சில அரசு பள்ளிகளில் வழங்கும் மதிய உணவுக்காகவே பள்ளிக்கு செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ள மாணவர்களுக்கு இந்த சமச்சீர் கல்வி எந்த அளவுக்கு பயன்படும் என்பதையும் எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறாது சார், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தத முயற்சிக்காமல் தனியார் பள்ளிகளின் கல்வி கொள்கைக்கு அரசாங்கம் துணை போவது சரியல்ல,
ஓட்டுக் கேட்க வரும்போது மட்டும்தான் இவர்களுக்கு ஏழைகள் தெய்வங்கள்.
பத்து, பதினொன்று, பனிரெண்டு ஆகிய மூன்று தேர்வுகளையும் சேர்த்து சராசரி மதிப்பெண்கள் வைத்து கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கலாம். அல்லது பனிரெண்டாம் வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வு வைக்கலாம். ஏனென்றால் பத்தாம் வகுப்பில் ஸ்டேட் லெவலில் வந்த ஒரு பெண் தற்போது +2வில் அவள் பள்ளியிலேயே மூன்றாவதுதான் வர முடிந்தது. காரணம் ப்ரெசர். நடுவில் +1 அவர்கள் வேகத்தைக் குறைத்து விடுகிறது.
என்னைக் கேட்டால் 9வது வரை மாணவர்களுக்கு போட்டி மனப்பான்மையையே தவிர்க்க வேண்டும். எல்லாருக்கும் சமமான வாய்ப்புகளை மட்டுமே தர வேண்டும். அதற்கு சமச்சீர் கல்வி முறைதான் சரியானது. தயவு செய்து பெற்றோர்களின் டாம்பீகத்துக்கும், தனியார் கல்விக் கொள்ளையர்களின் நிர்ப்பந்தத்துக்கும் அரசு இரையாகக் கூடாது.
ஆனால் பள்ளி நிர்வாகிகளின் புன்சிரிப்பைப் பார்த்தால் அரசு விலைபோய்விட்டமாதிரிதான் தெரிகிறது.
அரசாங்க பள்ளியின் அடிப்படை வசதிகள் .
சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை சொல்லி கொடுக்கும் தரத்தில் உள்ளார்களா என சோதித்து அவர்களை சரியானப்படி வேலைவாங்குவது ...
குறிப்பிட்ட கால இடைவெளியில் பாடதிட்டங்களை மாற்றினாலே பெரிய பலன் நிச்சயம் அன்பின் ஜோதிஜி.
இருந்தாலும் சமச்சீர் கல்வியை மெருகூட்டி தருவதில் குறையொன்றும் இல்லை.
நீங்கள் கட்டுரை எழுதுங்கள், நாங்கள் பின்னூட்டம் இடுகிறோம்.. எவனாவது வெயிலில் சாலையில் நின்று போராடி பெற்ற உரிமைகளை புதிய மேனா மினுக்கி அரசுகள் ரத்துசெய்யட்டும்.. நீங்கள் மட்டும் சாலையில் நின்று போராடுபவனை இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல.. என்று பைக்கிலோ காரிலோ அமர்ந்து திட்டிவிட்டு செல்லுங்கள்.. ஒரு நாளும் சாலையில் இறங்கி போராடிவிடாதீர்கள் மேனிகளுக்கு தடவிய ஃபேர் அண்ட் லவ்லி கரைந்துவிடபோகிறது...
அருமையான பதிவு.
நடைமுறையில் இருக்கும் அரசு,கடந்தகால அரசினால் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை நிர்ரகரிக்க வேண்டிய அவசியமே இல்லை.புதிய சட்டமன்ற கட்டிடதில் தமிழக அரசின் நிர்வாகத்தை நடத்துவதில் உள்ள சிரமங்களை ஜெயலலிதா விளக்கிய போது அதனை ஏற்றுக் கொள்ள முடிந்தது.தமிழகத்தை ஆட்சி செய்பவர்களிடம் தொடர்ச்சியாக ஒரு குறைபாடு உண்டு.ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்காக என்பதைவிட தங்கள் கட்சியின் பெயரை முன்னிலைப்படுத்துவதிலேயே அக்கறையாக இருப்பர்ர்கள்.சமகாலத்தில் அரசை நிர்வகிப்பவர்கள் தாங்கள் மக்களுக்கு இந்த கடமையை செய்ய வேண்டியவர்கள் என்பதை உணரத் தவறுகிறார்கள்.அரசியல் என்பது மிகப் பெறுமதி வாய்ந்த வாழ்வியல் பாதை.மக்களின் வளமான வாழ்க்கையை நோக்கிச் செல்லும் பாதை.என்ன காரணதுக்காக சமச்சீர் கல்வித்திட்டத்தை நிராகரிக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக,அதனால் ஏற்படும் பாதிப்பை அக்குவேறு ஆணிவேறாக நேர்மையாக நியாயபூர்வமாக கருத்தியியல் ரீதியாக மக்களுக்கு விளங்கபடுத்த வேண்டும். நல்லது கெட்டதை நடுநிலை நின்று நிறுவ வேண்டும்.எவர் பக்கமும் சாயாத கல்விமான்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கபட்டு தீர்வுக்கு வர வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் கல்வி மீது நிர்பந்தம் திணிக்கக் கூடாது.மாணவர்களும் கல்வியும் சமூகத்தின் ஆணி வேர்.ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் ஒரே விதமான கல்வி என்பது வரவேற்க வேண்டியதே.கருணாநிதி ஊழல் பேர்வழி என்பது வேறு விடயம்
சமச்சீர் கல்வி இதுவ்ரை உள்ள பல்வேறுபட்ட கல்வித் தரங்களை ஓரளவு சீராக்கவும், அரசுப்பள்ளிகளும் முறையான கல்வி தரவும் முனைய வைக்கின்ற ஒரு புது ஊக்குவிப்பானாக இருக்கும் என நம்புகிறேன்.
கலக்கிடிங்க திரு.ஜோதிஜி .....வாழ்த்துக்கள்.தாங்கள் நிறைய எழுதவேண்டும் .
உங்களின் ஒரு வலைப்பூ வாசகனை நண்பராக ஏற்று கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி...நன்றி..நன்றி.!!
வாசகர்கள் படித்துவிட்டு ...வெறும் வாசகர்களாகவே இருக்க கூடாது....உங்களைபோல் நடுநிலை எழுத்தாளர்களை ஊக்குவித்து....நிறைய சிந்தனைகளை பெற்று...தமிழ்நாட்டில் சமுதாய மாற்றத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்பதே மிக முக்கியமான பணி.
தமிழகம் வரும்போது கண்டிப்பாய் உங்களை சந்திக்கிறேன் .
சத்திய குமார்,ருவாண்டா -ஆப்ரிக்கா கண்டத்திலிருந்து..
அன்புள்ள தமிழர் திரு இக்பால் செல்வன் அவர்களுக்கு,
உங்களுடைய அணைத்து பின்னூட்டம் கருத்துகளையும் படித்தேன்... வியந்தேன் !!
என் மனதில் இருப்பதை அப்படியே உங்களுடைய அணைத்து பின்னூட்டம் பிரதிபலித்ததுசமச்சீர் கல்வி குறித்து ஏன் ட்விட்டரில் ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யக் கூடாது என்ற வினாவும் எழுகின்றது சகோ ?"
உங்கள் அணைத்து கருத்துகளையும் அப்படியே முன்மொழிகிறேன் .....வழிமொழிகிறேன்....செயல்படுவோம்
நன்றி
nallapathiu
thankyou
அருமையான பதிவு. பிள்ளைகள் சரியான முறையில் படிக்காத வரைக்கும் அது அம்பானி பள்ளியில் சேர்த்தாலும் தறுதலையாகத்தான் வெளியே வரும்.
தொடர்புடைய மற்ற சில பதிவுகள்
http://malaikakitham.blogspot.com/2011/05/blog-post_6008.html
http://www.writerpara.com/paper/?p=2280
நண்பர்கள் வேறு பதிவுகள் பற்றி அறிய நேர்ந்தால் பகிருங்கள்
one more
http://lawforus.blogspot.com/2011/05/blog-post_28.html
வருக ராஜசூரியன். தேனம்மை இது குறித்து எழுதி உள்ளளார்களே? உங்கள் தகவலுக்கு நன்றி.
நன்றி சுரேஷ்
சத்யகுமார் உங்கள் தொடர் அழைப்பு இல்லாபட்சத்தில் இந்த கட்டுரை உருவாகியிருக்க வாய்ப்பில்லை. உங்கள் உரையாடலுக்கும் நன்றி.
வணக்கம் தருமி அய்யா. இந்த கட்டுரை இன்னோரு தொடர் போல எழுத விசயங்கள் உண்டு. காரணம் கல்வித்துறையில் புழங்கும் லஞ்சமும், தனியார் பள்ளிகளின் ஈவு இரக்கமற்ற தன்மைகளும்.
இங்கு ஆதங்கத்தில் வந்து மற்றொரு நண்பர் சொன்னது போல வெறுமனே எழுதிவிட்ட நகரத்தான் முடிகின்றது.
நடுநிலை நின்று நிறுவ வேண்டும்.எவர் பக்கமும் சாயாத கல்விமான்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கபட்டு தீர்வுக்கு வர வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் கல்வி மீது நிர்பந்தம் திணிக்கக் கூடாது.மாணவர்களும் கல்வியும் சமூகத்தின் ஆணி வேர்.ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் ஒரே விதமான கல்வி என்பது வரவேற்க வேண்டியதே.
மிக அற்புதமான ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பரே.
செல்வன் என் நீண்ட கட்டுரையை விட உங்கள் நீண்ட விமர்சனத்தை ரொம்பவே ரசித்தேன் விரும்புகின்றேன். வெகு அற்புதம். நன்றி.
வருக ரத்னவேல் அய்யா.
இருந்தாலும் சமச்சீர் கல்வியை மெருகூட்டி தருவதில் குறையொன்றும் இல்லை.
இது புலிவால் பிடித்த கதை தவறு அவர்களே. அரசியல்வாதிகள் கலப்பு இல்லாமல் தனியான ஒரு சுயாட்சி அமைப்பு மூலம் செயல்படுத்தினால் நீங்கள் சொன்னது நடக்க வாய்ப்பு உள்ளது.
பத்து, பதினொன்று, பனிரெண்டு ஆகிய மூன்று தேர்வுகளையும் சேர்த்து சராசரி மதிப்பெண்கள் வைத்து கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கலாம். அல்லது பனிரெண்டாம் வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வு வைக்கலாம். ஏனென்றால் பத்தாம் வகுப்பில் ஸ்டேட் லெவலில் வந்த ஒரு பெண் தற்போது +2வில் அவள் பள்ளியிலேயே மூன்றாவதுதான் வர முடிந்தது. காரணம் ப்ரெசர். நடுவில் +1 அவர்கள் வேகத்தைக் குறைத்து விடுகிறது.
நன்றி ராமலிங்கம். நிச்சயம் இந்த எழுத்துக்கள் ஏதோவொரு அதிகாரியின் பார்வையில் என்றாவது படக்கூடும்.
நன்றி டீச்சர் நீங்க சொல்லியிருப்பது தான் கட்டுரையின் அடிநாதம்.
நசர்ஜீ நடாஜி ரெண்டு பேரும் சௌக்கியம் தானே?
நன்றி ஹேமா.
ஒன்னும் சொல்றதுக்கில்லை!
பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்பாமல் ஒரு நண்பர் வீட்டில் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். அவரைப் பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். :))
ஷங்கர் நானும் இதையே வேறுவிதமாக யோசித்துக் கொண்டிருக்கின்றேன். இயல்பான பள்ளியில் சேவை மனப்பான்மை கொஞ்சம் இருப்பவர்கள் கூட இந்த வருடம் சம்மந்தம் இல்லாமல் உயர்த்திய தொகை 3000.
இங்கு பணிபுரியும் பல ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் கிடையாது.அனைவருமே பதிவு செய்து அரசு வேலை கிடைக்க எதிர்பார்ப்பவர்கள்.
அரசு பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பி,வசதிகளை அதிகரித்து,தரம் கண்காணித்தால் தனியார் பள்ளிகளை விடவே சாதிக்கலாம்.இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சையில் சிக்குவதை வழ்க்மாக கொண்டுள்ளது.இப்போது சமச்சீர் கல்வியில் இந்த அரசு என்ன செய்யப் போகிறது
அது தான் அந்தம்மா தெளிவா சொல்லியிருக்காங்களே? அரசுக்கும் கமிட்டிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேவைப்பட்டால், மக்கள் விரும்பினால் தலையை உள்ளே கொடுப்பாங்களாம்?
கொடும?
அருமையான இடுகை.
//திருப்பூரில் உள்ள 90 சதவிகித முதலாளிமார்களுக்கு அருகே உள்ள குன்னூர், ஊட்டி இதைத்தவிர்த்து ஏற்காடு தான் முக்கிய கல்விக்கோயிலாக உள்ளது. பல புண்ணிய ஆத்மாக்கள் குழந்தையை மூன்று வயதிலேயே கொண்டு போய் தள்ளிவிட்டு வந்து விடுவதுண்டு. காரணம் ஒழுக்கத்தை தொடக்கத்தில் இருந்தே கற்று கொடுத்து விடுவார்களாம். ஆய் போனால் கழுவத்தெரியாத குழந்தைகளை அங்குள்ள ஆயாம்மா கைபட்டு விடுதிகளின் கூண்டில் வளர்ந்து கடைசியில் கண்ணியவானாக வளர்ந்து வந்து நிற்பார்களாம்.//
வங்கியில சேமிப்பு கணக்கு தொடங்கச் சொன்னாலோ, இல்ல டிமாண்ட் ட்ராப்ட் எடுக்கச் சொன்னாலோ, இல்ல சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பற்றிக் கேட்டாலோ இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்றைய பள்ளிக்கல்வியைப் பற்றிக் கொஞ்சம் கொச்சையா சொல்லணும்னா பசங்கள வாந்தி எடுக்கக் கத்துக் கொடுக்குது. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கொஞ்சம் அதிகமாகவும், ஆங்கிலத்திலும் வாந்தியெடுக்க கத்துக் கொடுக்குது. அவ்வளவுதான்.
இதுல மெட்ரிக் பள்ளிகள் என்னா பில்டப்பு? நாங்க வேகமா, அதிகமா, நாலு கலர்ல வாந்தியெடுக்க வைப்போம்னு.
25-30 வயசு ஆட்களிடம் trigonometry, differentiation, integration, organic chemistry, Doppler effect இப்படிக் கொஞ்சம் விளக்கச் சொல்லிக் கேட்டுப் பாருங்க. யாருக்கும் எதுவும் ஞாபகம் இருக்காது (விதிவிலக்குகள் வெகு குறைவு). அப்போ மனப்பாடம் பண்ணி பரிட்சையில கக்கினத அப்பவே மறந்தாச்சு. Use and throw படிப்பு.
எங்க புரபொசர் computer graphics பாடம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால மூணு நாள் 12ஆம் வகுப்பு புத்தகத்திலிருந்து vector algebra பாடம் நடத்தினார். அவருக்குத் தெரியும் vector அடிப்படை தெரியாம graphics பாடம் எதுவும் விளங்காதுன்னு.
என் புரிதலில் மெட்ரிக் பள்ளிகளின் கடும் கொந்தளிப்புக்குக் காரணம் ஒரே மாதிரியான பாடத் திட்டம், அவர்கள் பீத்திக் கொள்ளும் syllabus பிரீமியத்தைச் சாய்த்துவிடும். பின்னர் என்ன சொல்லி காசு பிடுங்குவது? அதனால்தான் அடுத்த பிரீமியமான CBSE அங்கீகாரத்தை நோக்கி அவை ஓடின.
Back-of-envelope கணக்குப்படி இன்றைக்கு பெயர் பெற்ற ஒரு மெட்ரிக் பள்ளியின் வருமானத்தில் லாபம் ஆண்டிற்கு 1 கோடியைத் தொடுகிறது. அப்புறம் எப்படி அதை இழக்கச் சம்மதிப்பார்கள்?
பெற்றோர்களும் புரிந்து கொள்ளத் தவறும்/மறுக்கும் ஒன்று, ஆங்கில அறிவு ஒருவனை புத்திசாலியாக்காது. புத்திசாலிக்கு ஆங்கிலப் போதாமை தடைக்கல் அல்ல. இது அமெரிக்காவில் நேரடியாக கண்ட அனுபவம்.
இந்த ஆங்கில மோகமும் பெற்றோர்களை மெட்ரிக் பள்ளியை நோக்கி விரட்டும் முக்கியக் காரணி.
இந்தியன் உங்க ஆதங்கத்தை தெளிவா சொல்லியிருக்கீங்க. இரண்டாவது பாகம் எழுதும் அளவிற்கு நிறைய விசயங்கள் உண்டு. என்ன செய்வது? இந்த கச்சடாவில் இருந்து தான் குழந்தைகளை கரை சேர்க்க வேண்டியுள்ளது. ஷங்கர் சொல்வது போல வீட்டில் பாதி கற்று கொடுத்து ஆத்ம திருப்தி அடைய வேண்டியிருக்கிறது. எம்பிஏ முடித்து இங்கே வருபவர்களின் மனோபலம் அறிவின் தாக்கம் எல்லாவற்றையும் பார்க்கும் போது பாதிக்கு மேற்பட்ட சுயநிதி அரசாங்க கல்லூரிகளை மூடி வைத்து விட ஒரு சட்டம் போடலாம் போலிருக்கு.
உங்களுக்கு நன்றி.
1 2 3
ஏற்றத் தாழ்வின்றி அனைத்து மாணவரும் ஒரே தளத்தில் சிறப்பான கல்வியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், சமச்சீர் கல்வி நாட்டிற்கு நிச்சயம் அவசியம். இச் சமச்சீர் கல்வியுடன் சார்ந்த அரசியல் பின் புல அறிவு எனக்கு குறைவாக உள்ள காரணத்தினால் பதிவு தொடர்பாக நிறையக் கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை. மன்னிக்கவும்,
சமசீர் கல்வி சாத்தியமா ? i have penned down my thoughts here.
All are welcome to comment and criticize.
http://vithai-nel.blogspot.com/2011/05/blog-post.html
நல்லதொரு பதிவு. பின்னூட்டங்கள் நன்றாக உள்ளன. சமச்சீர் கல்வி சமச்சீர் கட்டணம் பற்றி என்னுடைய கருத்துக்களை என்னுடைய வலை பூ வில் பதிவு செய்துள்ளேன். உங்கள் அனைவரின் பார்வைக்கு : சமசீர் கல்வி சாத்தியமா ? : http://vithai-nel.blogspot.com/2011/05/blog-post.html
ஆங்கில வழிகல்வி அவமானத்தின் உச்சகட்டம்
Post a Comment