Sunday, December 06, 2009

பிரபாகரன் கதை அல்ல.

"வெற்றிகள் உலகத்திற்கே அடையாளம் காட்டும்.  ஆனால் தோல்விகள் தான் முழுமையாய் மொத்தத்தையும் உணரவைக்கும்"

இது ஒரு தனி மனிதனுக்கும் மட்டுமல்ல.  தலைவர்களுக்கும் பொருந்தும்.

முள்ளி வாய்க்கால்,சகோதரயுத்தம், நடந்த வந்த ரத்தச்சுவடுகள்,சர்வாதிகாரம் போன்ற எல்லாவற்றையும் இப்போது நாம் பார்த்தால் சோகத்தை அதிகப்படுத்துமே தவிர மறைக்கப்பட்ட சுகமான விசயங்களை நினைவில் தோன்றாது.  காரணம் இழந்த வாழ்க்கை மீண்டும் பெற வேண்டுமானால் நடந்த வாழ்க்கையில் உள்ள நல்ல விசயங்களை மீண்டும் மீண்டும் உள்வாங்கினால் மட்டுமே சாத்தியம்.  இனியும் வாய்ப்பு உள்ளதா? என்பதை உலகத்திற்கு காட்டும்.

"முடிக்கப்பட்ட சரித்திரம்" என்பது எங்குமே இல்லை.  முடிவே இல்லாதது தான் வர்க்கப் போராட்டங்கள்.  தீர்வு என்பது சரியான முறையில் தீர்க்கப்படாமல் இருக்கும் வரைக்கும்  அன்பு மொழி என்பது வெறும் வார்த்தைகளாகத்தான் இருந்து தொலைக்கும்.

ஆயுதம் தான் இனி இறுதி தீர்வு என்று உருவாகும் போது எந்த தத்துவங்களும் தன்னுடைய வலிமை இழந்த வெறும் வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

மொத்த இலங்கை சரித்திரத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர் இல்லை என்றால் எப்போதுமே நிறைவு பெறாது.  அவர் சொன்ன துன்பியல் சம்பங்கள் உள்ளே ஏராளமாய் இருந்தாலும் அவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விசயங்களும் இந்த உலகத்திற்கு உண்டு.

அதிக கல்வி அறிவு இல்லை. எங்கும் பெற்ற முறையான பயிற்சி இல்லை.  ஏன் அவர் எங்கும் எவரிடமும் பயிற்சியும் பெற்றதும் இல்லை.  மொத்தத்தில் அவரைச்சுற்றி எப்போதுமே நல்லவர்கள் இல்லை.  நம்பி மாற முயற்சித்த போது நடந்தவைகளும் நல்ல விதமாகவும் இல்லை. அதனாலே கடைசிவரைக்கும் அவர் எவரையும் நம்பத் தயாராகவும் இல்லை.

அவர் தன்னிடம் உள்ள கொள்கைகள் சரிதானா? என்று யோசிக்கும் போதே ஜெயவர்த்தனே வந்தார்.  ”அவர் மட்டும் உண்மையான பௌத்தராக வாழ்ந்து இருந்தால் நான் ஆயுதம் தூக்க வேண்டிய அவஸ்யம் இருந்து இருக்காது” என்பதாக மாற்றி இன்னும் ஆயுத பாதையை வலுவாக்கி நகர்த்தினார்.

பண்டார நாயகா வேறு வழி இல்லை என்ற நோக்கத்தில் தந்தை செல்வாவுடன் ஒரு சமாதான உடன்படிக்கை செய்ய முயற்சித்தார்.  அப்போதும் இதே இந்த ஜெயவர்த்தனே அதற்கும் முட்டுக்கட்டையாக இருந்தார்.

இடையில் ரணில் விக்ரமசிங்கே உருவாக்க முயற்சித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலே இருந்த சந்திரகாவால் முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது.  இதே இந்த சந்திரிகாவின் கணவர் வாழ்க்கையில் சிங்களர்.  ஆனால் வாழ்ந்த விதத்தில் தமிழர்களின் நலனும் வேண்டும் என்று முயற்சித்தவர்.

இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வேண்டுமானால் மதத்தால், ஜாதியால், குலப்பெருமையால், வாழ்ந்த மண்ணால் தங்களை தாங்ளே பெருமையாக சொல்லிக்கொண்டு வாழ்ந்தார்கள்.  மொத்த சிங்களர்களின் வாழ்க்கையில் இரண்டே விதமாகத் தான் இருக்கிறார்கள்.  தமிழர்கள் அழிய வேண்டும்.  தமிழர்களும் வாழ வேண்டும்.

முன்னால் சொன்ன வாசகம் இங்க நினைவு கூறத்தக்கது.  பண்டார நாயகா சிங்களமே ஆட்சி மொழி என்று கொண்டு வந்த போது அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த இடது சாரி சிங்கள தலைவர் சொன்ன வாசகம்.

"எதிர்காலத்தில் தமிழர்கள் தனி நாடு உரிமை வேண்டும் என்று கேட்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்"

காரணம் அப்போது தந்தை செல்வா கூட வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வர வில்லை.  " தமிழர்கள் தனி நாட்டின் மூலம் தங்களுடைய வாழ்வுரிமையை நிலைநாட்ட முடியும் " என்று தீர்மானமாய் அவரே நம்ப வில்லை.

முடிந்த வரையில் அத்தனை தலைவர்களும், சாத்வீக மொழியில், சமாதான வழியில், சாதாரணமான அறப்போராட்டத்தின் மூலமாகத்தான் தங்களுடைய எதிர்ப்பை காட்டினர்.  கிங்கரர்களாக வாழ்ந்து கொண்டுருந்த சிங்களர்களிடம் எந்த அன்பு மொழியும் எடுபடவில்லை.  போராடிக்கொண்டுருந்தவர்களும் பண்பாட்டை மறந்து நடக்கவும் தயாராய் இல்லை.

உலகமெங்கும் இன்றைய அறிவுஜீவிகள் அத்தனை பேரும் சொல்லும் வார்த்தைகள் " இனி அங்கே ஜனநாயகம் தழைத்தோங்கும்".

போகிற போக்கில் விமர்சனப்பார்வையை தரும் எவருமே உள்ளே வாழ்ந்தவர்கள் அல்ல.  உண்மையை புரிந்தவர்களும் அல்ல.  பிரபாகரன் குறித்து எழுதாத பக்கங்கள் நிறைய உள்ளன.  அவரவர் வினை வழி.  அவரவர் வழியாகத்தான் இந்த ஈழத்தை இனிமா போல் எடுத்தாளுகிறார்கள்.

படித்தவர்களுக்கு தீவிரவாதம்.  அறைகுறையாக புரிந்தவர்களுக்கு ஆதர்ஷண கடவுள்.  அக்கறை இல்லாதவர்களுக்கு பதவி சுகம்.

இந்த மூன்று திசைகளும் ஒன்று இணைந்து முடியும் திசைதான் பிரபாகரன் திசை.  மொத்தத்தில் அவர் ஒரு திசைகாட்டி.  வீரன் என்பதற்கும், வீரனுக்கும் விவேகம் வேண்டும் என்பதற்கும் இந்த நூற்றாண்டின் சாதனையான சரியான மனிதர்.

முள்ளிவாய்க்கால் கோரங்கள் இன்று நடக்காமல் போயிருந்தால் இங்கு எந்த கேள்வியும் இன்றைய மற்றவர்களின் கேலியும் வராது.  பிரபாகரன் மரணச் சான்றிதழ் என்பதை இலங்கை அரசாங்கம் முறைப்படி வெளியிடாத வரைக்கும் அது ஒரு மர்ம பக்கங்கள் தான்.

எப்போதும் அரசியலில் "வலுத்தவன் வலிமையானவன்".  அமரும் ஆசனம் தான் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும்.ஆனால் அந்த வலிமையானவன் இறுதி வரைக்கும் வெற்றி பெற்றால் தான் கருத்துக்களும் உருவாக்கிய கொள்கைகளுக்கும் வெற்றி.

பிரபாகரன் சொல்லியுள்ள வார்த்தைகள் எந்த காலத்திலும் சகாவரம் பெற்றவை. அது தான் அவருடைய உண்மையான பலம்.  தொடக்கம் முதலே ஒரே கொள்கை. ஒரே பார்வை.  ஒரே பயணம்.

மொத்த பலமும் பலவீனமும் அதுவே.

" தமிழீழம் ஒன்று தான் இலங்கைத் தமிழர்களுக்கு இறுதி தீர்வு.  என்னுடைய காலத்தில் வென்று எடுக்க முடியும் என்பது முக்கியம் அல்ல.  எனக்கு முன்னால் போராடியவர்கள் வேறு பாதையில் வந்தார்கள்.  நான் எனக்குத் தெரிந்த புரிந்த பிடித்த பாதையில் வந்துள்ளேன்.  நான் இல்லாவிட்டால் எனக்குப் பின்னாலும் ஒருவர் தோன்றுவார்.  காரணம் உரிமைகள் என்பது உண்மையாக பகிரப்பட வேண்டியது.  இல்லாத பட்சத்தில் இந்த வாழ்வுரிமை போராட்டங்கள் உலகமெங்கம் வீழ்ந்ததாக சரித்திரம் சொல்லவில்லை"

முதலில் பிரபாகரன் குறித்து தெளிவாக புரிந்து கொள்வோம்.  குறிப்பாக நாம் கடந்து போக வேண்டிய அடுத்த 15 ஆண்டுகள் (1975 /1990) குறித்து அத்தனை சாதக பாதக அம்சங்களைக்குறித்து தெளிவாக புரிந்து கொண்டால் தான் "விடாது துரத்திய கருப்பு" குறித்து அறிய முடியும்.

பிரபாகரன் என்பவர் துரோகம் பார்த்து வளர்த்தவர்.  கிடைத்த துரோகங்களையும் தூங்கி எறிந்தும் நகர்ந்தவர்.  தொல்லையாய் தொடர துடைத்து அழித்தும் முடித்தவர்.  தொங்கிக்கொண்டு இருந்த மக்களை தனி ஆட்சி அதிகாரம் மூலம் துயரம் போக்கச் செய்தவர்.  படிக்கட்டுகள் பல உண்டு.  பரிதாபங்களும் கணக்கில் உண்டு.

அவரைப்பற்றி தெளிவாக புரிந்தால் தான் அவரால் அழிக்கப்பட்டவர்களை உள்வாங்க முடியும்.  புதிய புலிகள் என்ற விதையை ஆலமரமாக்கிய வித்தை புரியும்.  வீழ்ந்தவர்களின் கதையும், இன்று ஜெயித்த சிங்கள ஆட்சியாளர்களின் கோர மனமும் புரியும்.

அப்போதைய அதிபர் சந்திரகா சொன்ன வார்த்தைகள் மீண்டும் நிணைவு கூறத்தக்கது.. "இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் வந்து பிடிக்க முடியாத பிரபாகரனை நாங்கள் எங்கு போய் பிடித்து வருவது".

உண்மையிலேயே அந்த அளவிற்கு பலம் வாய்ந்தவரா இந்த பிரபாகரன்? தனிமனித துதி என்பதும் சரித்திரத்திம் ஏற்றுக்கொள்வது இல்லை.  பக்கம் பக்கமாக நிரம்பினால் காலப்போக்கில் செல்லரித்து விடும்.  உண்மையான அவலங்கள் அத்தனையும் மாற்றி விடும். ஆனால் இன்று வரையிலும் மாவீரன் என்று அழைக்கப்படும் அவரின் ஆளுமை குறித்தும் பார்க்க வேண்டும்.

மற்ற இயக்கங்களுக்கும் அவருக்கும் என்ன பெரிதான வித்யாசங்கள்?.  மொத்த இயக்கங்களும் என்று தோன்றிய காலத்தில்,  ஏறக்குறைய 37 முதல் 40 இயக்கங்கள் இருந்து இருக்கின்றன.  இதில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் உண்டு.  அப்போதைய காலகட்டத்தில் இருந்த இலங்கை ராணுவ எண்ணிக்கையை விட இவர்களின் மொத்த போராளிகளின் எண்ணிக்கை அதிகம்.  தடி எடுத்தவன் எல்லோரும் தண்டல்காரன் போல.  அணைவரும் கொண்ட கொள்கை என்னவோ தமிழீழம் தான்.  ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வழிப்பறி, கொலை, கொள்ளை வரைக்கும்.. அவர்வர் வைத்திருந்த கொள்கைகளுக்கும், விலை போன சமயங்களும் மற்ற எவருமே இறுதி வரைக்கும் ஆளுமை செய்யும் நிலைமைக்கு வர வில்லை.

அவரே அழித்தார் என்று எத்தனை தான் கத்தித் தீர்த்தாலும் அரசியல் என்பது "வலுத்தவன் வலிமையானவன்". சூழ்நிலையை சாதகமாக்கும் மனிதன் தான் தலைவன்.  அதன் பிறகு தான் மற்றவையெல்லாம்.

அன்னை இந்திரா காந்தி அம்மையார் பார்வையில் இலங்கை என்பது இந்தியாவிற்கு கீழ் இருக்க வேண்டிய நாடு..  இந்தியாவிற்கு ஆகாத நடவடிக்கைகளில் எப்போதும் இலங்கை ஈடுபடக்கூடாது. எப்போதும் அப்படி இருக்க செய்ய வேண்டுமானால் விடுதலைப்புலிகளை வளர்க்க வேண்டும்.  உள்ளே பிரச்சனைகள் அதிகமாக இருந்தால் தான் அது இந்தியாவிற்கு சரியான பாதை.

ராஜிவ் காந்தியைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு பகடைக்காய்.  கோப்புகள் தந்த மயக்கமும், தரமில்லா அதிகாரிகளின் தனி மனித வன்மும் அவரை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.  மாட்டிக்கொண்டவர் மாண்டு விட்டார்.  மாட்டிவிட்டவர்கள் மீதமுள்ள மக்களையும் வேலிக்குள் அடைத்து மகிழ்வாய் இருக்கின்றனர்.

இன்றைய சீனாவிற்கு மனிதப்பார்வைகளை விட மயக்கும் இடப்பார்வைதான் முக்கியம்.  தளம் வேண்டும்.  தரம் உயர வேண்டும்.  தியாமென் சதுக்க புதைகுழியை விடவா மொத்த இலங்கைக்குழி பெரிது?  கண்ணீர் தீவாக வைத்து இருக்கும் வரையிலும் அவர்களின் கப்பல்களும் கனரக ஆயுதங்களும் கரையை காலம் முழுக்க காத்துக்கொண்டு தான் இருக்கும்.

இந்திய சரித்திரம் என்பது 350 வருடங்கள் உள்ள பாரம்பரியமிக்க வாழ்க்கை தடங்கள்.  தன்னை வருத்திக்கொண்டவர்கள், தங்கள் குடும்ப மொத்தத்தையும் அழித்துக்கொண்டவர்கள் என்று தொடங்கி விதையாய் உள்ளே மறைந்த அத்தனை முகம் தெரியாத தியாகத்தில் தொடங்கிய வரலாறு இன்று திருட்டுத்தனத்திற்கு உடந்தையாக நிற்கிறது.

ஒவ்வொன்றும் ஒரு மர்ம முடிச்சு.  ஒவ்வொரு அத்தியாயமும் பேரவலம்.

இறையாண்மை என்ற போர்வையில் "கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்ற ஒரே காரணத்தினால் கலங்கும் உள்ளத்தை ஆற்றுமை படுத்தக்கூட இங்கு ஆள் இல்லை.  சிலருக்கு பதவி சார்ந்த பெரும் போராட்டங்கள்.  சிலருக்கும் வணிகம் சார்ந்த நிர்ப்பந்தங்கள். ஆனால் பலருக்கும் வன்மம் தீர்த்த திருப்தி.

தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்தை தொடக்கத்தில் விதைத்தவர்கள் கூட இன்றும் சொல்வது "அதன் காரணங்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கிறது".

இங்கு வாழ்வதற்கு இத்தனை வசதிகள் இருந்தும் கேட்ட பிரிவினைவாதங்கள் உயிருடன் இருக்கிறது என்றால், " நீ வாழவே தகுதியில்லாதவன்"  என்று சொல்லும் கூட்டத்திடம் போய் " நீ எடுத்த ஆயுதங்கள் தான் இன்று உனக்கு எமனாக வந்துள்ளது"  என்பவர்களிடம் போய் நீங்கள் எந்த தர்மத்தை எதிர்பார்க்க இயலும்?

ஏன் இத்தனை வன்மம்?

ராஜிவ் காந்தி படுகொலை என்பது ஒரு மேம்போக்கான காரணம்.  மன்மோகன் சிங் பிரதமாக வந்துள்ளாரே? அழித்த இனத்தில் இருந்து ஆள தேர்ந்தெடுத்த சோனியா காந்தி பார்வையில் "இதுவும் கடந்து போகும்"

அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று உள்ளே சென்ற இந்திய அமைதி படையின் அடிவாங்கலில் இருந்து தான் இப்போதை நிகழ்வுகளை ஆராய வேண்டும்.  அது தான் பிரபாகரன் குறித்த ஆளுமையையும், அவது மொத்த உழைப்பையும், வெகு ஜனத்தால் இன்னமும் புரிந்து கொள்ளப்படாத உன்னதமான விசயங்களையும் உலகுக்கு உணர்த்தும்.

வெண்டைகாய் நாட்டில் உள்ள விவேகமில்லாத தலைவர்களின் செயல்பாடுகள் புதிது அல்ல.  பறங்கியர்களிடம் மீட்டு எடுத்த இந்த பறங்கிக்காய் பெற்ற அவமான எச்சமும் சொச்சமும் தான் இன்று வரையிலும் இழுத்து வந்துள்ளது.  முழுமையான காரணம் அது மட்டும்  இல்லை என்றாலும்.
வென்றவர்கள் வீழும் நாள் அருகில்.

முதலில் அன்று அமைதிப்படை வாங்கிய அடியும் அடி கொடுத்த பிரபாகரனும் குறித்த புரிதல்கள்.

இறையாண்மை உண்டு என்று நம்பும் தனிமனிதனுக்கு அதற்கு மேலும் மனிதம் என்பதும் முக்கியம் என்பதை கருதும் பொருட்டு இது கதை அல்ல.  நடந்த நிஜம்.

மொத்த அமைதிப்படைக்கு மேலே இருந்தவர்களால் கொடுக்கப்பட்ட கட்டளை "பிரபாகரனை பிடிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும்?"

தொடர்வோம்.....................

3 comments:

Anonymous said...

good article , keep going ...

greetings

Anonymous said...

good post

Unknown said...

நல்ல பதிவு.