Friday, December 04, 2009

ஐ.நாவில் ஒலித்த தமிழீழம்

இடம். நியூயார்க்.  அமெரிக்கா.

அப்போதைய இலங்கையில் நடந்து கொண்டுருந்த கோரங்களை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதர் செய்த புத்திசாலித்தனமான முயற்சி இது.

அங்கீகரிக்கப்பட்ட நாடுகள், பட்டியலில் உள்ள தலைவர்கள், இது போக தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் கொண்ட ஐக்கிய நாட்டு சபை கூட்டத்தின் ஒரு தமிழர் ஆங்கிலேய கணவான் போல் உள்ளே நுழைகிறார்.

எந்த அனுமதி சீட்டும் அவரிடம் இல்லை.  அவர் அழைப்பாளர் பட்டியலிலும் இல்லை.  எந்த நாட்டின் சார்பாளர்களின் பட்டியலிலும் இல்லை.

ஆனால் எப்படியும் உள்ளே நுழைந்து உரையாற்றி "தமீழழம்" என்ற வார்த்தையை பதிவு செய்து விட வேண்டும்.  மொத்த நாட்டு தலைவர்களுக்கும் தெரிவித்து விட வேண்டும்.  பின்னால் வரும் விளைவுகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவோடு உள்ளேயும் நுழைந்து விட்டார்.

ஒரு வாரமாக வாசலின் ஒரு ஒரமாக நின்று மொத்த ஐ.நா இயக்கத்தையும்,  அனுமதிக்கும் முறைகளையும் வெளியில் நின்று கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தார்.

1978 அக்டோபர் 5 பகல்பொழுது.,அவர் அணிந்துருந்த கோட் சூட், கையில் வைத்துருந்த சிறிய கோப்புகள் அடங்கிய சூட்கேஸ் போன்ற மொத்த அவருடைய தோற்றமும் ஒரு நாட்டின் பிரதிநிதி போல் தோற்றமளித்த காரணத்தால் வாசலில் நின்றவர்களின் பார்வையில் இருந்து எளிதாக தப்பி உள்ளே நுழைந்து விட்டார்.

அவர் உள்ளே நுழைந்த நேரம் மதிய இடைவேளை உணவுக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது.

ஐ.நா. பொதுப்பேரவையில் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளும் மேடையேறி உரையாற்றிக்கொண்டுருந்தனர்.  சைப்ரஸ். அதற்கடுத்து ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் வந்து உரையாற்ற வேண்டும்.

ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சருக்கான அழைப்பு மேடையில் இருந்து அழைத்த போது எவரும் சற்றும் எதிர்பாரா தருணத்தில் மேடையில் ஏறியவர், ஒலிப்பெருக்கி முன் நின்ற உரையாற்றத் தொடங்கினார்.

"பேரவைத் தலைவர் அவர்களே, உலகத் தலைவர்களே!

அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்.

ஸ்ரீலங்காவில் தமிழ் ஈழம் போன்ற ஓடுக்கப்படும் சிறுபான்மை மக்களை கொண்ட நாடுகள், உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது?

என் பெயர் கிருஷ்ணா என்ற வைகுந்த வாசன்.  இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள 35 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட "தமிழீழம்"  என்ற நாட்டில் இருந்து பிரதிநிதியாக வந்துருக்கின்றேன்.

ஸ்ரீலங்கா அரசு சிறுபான்மை இனத்தை துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.  தனிநாடாக வாழ்வதற்கு எங்களுக்குள்ள உரிமையை நாங்கள் பயன் படுத்துவதற்கு அறிவித்துள்ளோம்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சிங்களர் உருவாக்கும் வனமுறைப் போராட்டங்கள் மிகுந்த இன்னல்களை எங்களுக்கு உருவாக்கிக் கொண்டுருக்கிறது.

உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், நாளை எங்கள் பிரச்சனையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் போல் சைப்ரசு போராட்டம் போல, உருவாகும். உருவெடுக்கும்."

ஆங்கிலத்தில் மடமடவென்று தெள்ளத்தெளிவாக ரத்னச்சுருக்கமாக மிக விரைவாக உரையாற்றி முடித்த போது மிகப் பெரிய நிசப்தமும் தொடர்ந்து சலசலப்பும்.

நிமிடத்திற்குள் உரையாற்றிய வேகமும், தெளிந்த ஆங்கில வார்த்தைகளும் சபையை புரட்டிப்போட்டது.  பணியாளர் ஓடிவந்து ஒலிப்பெருக்கியை நிறுத்துவதற்கு முன் தன்னுடைய உரையை முடித்து இருந்தார்.  இலங்கையின் வெளியுறவு அமைச்சர் வந்து சேர்வதற்குள் தான் பேச விரும்பியதை முழுமையாக சொல்லிவிட்டார்.

இதுவரையிலும் அங்கே அமர்ந்து இருந்த அத்தனை உலகத் தலைவர்களுக்கும் இந்த "தமிழீழம்"  என்ற தெரியாத வார்த்தையை அவர்களின் உதடுகள் உச்சரித்த போது காவலர்கள் தன்னை நோக்கி வருவதற்குள் மின்னலென வாசல் புறம் ஓடி மறைந்தார். பிறகு இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

அப்போது நடந்த இந்த திடீர் குறுக்கீட்டை, பன்னாட்டு வானொலிகளும், தொலைக்காட்சிகளும், லண்டன் பிபிசி வானொலியும் ஒலிப்பரப்பின.
நியூயார்க்கில் இருந்து வெளிவரும் "இந்தியா அப்ராட்" என்ற தினசரியில்
செய்தியாளர் திரு. கூப்பர் என்பவர் பின்வருமாறு எழுதினார்.

"தமிழீழ விடுதலை முழக்கத்தை முதன் முதல் ஐ.நா. பேரவையில் ஒலித்த திரு. வைகுந்தவாசனின் தீரச்செயல் மிகமிகப் பாராட்டத் தக்கதே"

இவர் இலங்கை உயர்நீதிமன்றத்தில், சென்னை நீதிமன்றத்திலும் வக்கீலாக பணியாற்றியவர்.  ஆப்பிரிகா கண்டத்தில் உள்ள சாம்பியா (Zambia) நாட்டில் ஏழு ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி பின்னாளில் லண்டனில் நிரந்தரமாக குடியேறியவர்.
"அன்புமொழி " போதித்த புத்தன் கூறிய போதனைகள் ஆண்ட அத்தனை கிறிஸ்துவ சிங்கள தலைவர்களுக்கு புரியவில்லை. உணர்ச்சிகளால் மட்டும் வளர்க்கப்பட்ட, வளர்ந்த சிங்கள மக்களும் கேட்கும் மனநிலையிலும் இல்லை.  மொத்தத்தில் அவர்கள் மனதில் நல்ல சிந்தனைகளும் இன்று வரையிலும் உருவாகவில்லை.
"காந்திய மொழியே மொத்த வாழ்க்கை" என்று அறப்போராட்டத்தை நம்பி முன்னெடுத்த போராட்டங்கள் மொத்தமும் அன்றைய தமிழன தலைவர்களுக்கு மிகப் பெரிய படிப்பினையே இறுதியில் தந்தது.

1957ல் தந்தை செல்வா மேலை நாட்டு(இங்கிலாந்து) ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில்   " ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போதே இவர்களுடன் எந்த காலத்திலும் இணைந்து வாழவே முடியாது என்று அன்றே தனி நாடு கேட்டு வாங்காமல் எதிர்கால தமிழனத்திற்கு மிகப் பெரிய மோசமான முன் உதாரணமாக இருந்து தொலைந்து விட்டோம்"  என்று அவரை கடைசி வரையிலும் வருத்தப்படச் செய்தது.

" பொறுத்தாள்வார் பூமி ஆழ்வார் " என்ற வாசகம் பழைய பஞ்சாங்கமாக மாறி பரணில் ஏறியது.

" இனி தமிழனை அழிக்க வேண்டும் என்று சிந்தனை வந்தாலே அச்சப்படும் அளவிற்கு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் " என்ற ஆயுத போராட்ட இளைஞர்கள் தோன்றினர்.

அன்று ஆளுமைப்படுத்தவும், இளைஞர்களை அமைதிப்படுத்தவும்,  தந்தை செல்வாவிற்கு பிறகு ஆட்களுமில்லை.  அவருக்குப் பிறகு தோன்றிய தலைவர்களும் தன்னலமற்று சொல்லும் அளவிற்கு வாழவும் இல்லை.

இனி.........?

ஆரம்ப மொழி......
ஆயுதமொழி.......
ஆயுதப்பாதைகள்..
குருதியில் நனைந்த ஈழம்..........
முடிக்கப்பட்டதாய் சொல்லப்படும் "தமிழீழம்".................?
மொத்தத்தில் கண்ணீர் தீவு.............

(நான்காம் பாகம் முடிவு)


உங்கள் மெளனம் உடைய வேண்டிய தருணமிது. 


தொடர்ந்து கொண்டுருக்கிறோம் என்று அமைதியாய் தொடர்ந்து கொண்டுருப்பவர்களும், படைக்கப்பட்ட நிகழ்வுகளில் வலியுடன் வாழ்ந்தவர்களும்,மொத்தத்தையும் வெறும் வாசிப்பாக கருதியவர்களும்.


இதுவரை கடந்து வந்த பாதைக்குமான மொத்த விமர்சனத்தை, நீங்கள் இந்த இடுகையில் ஓட்டு மூலம் முன்னெடுத்துச் செல்லும் போது,  படைக்க வேண்டிய நோக்கமும், பாதையும் புரியவைக்கும்.


நான்காம் பாகத்தின் இறுதியில் நிற்கிறோம். காரணம் இனிமேல் வரக்கூடிய சம்பவங்கள் அத்தனையும் சமகால ஊடகத்தின் பரபரப்பு சம்பவங்களாக பார்க்கப்பட்ட படைக்கப்படட படைப்புகள்.  வெகுஜனத்தால் பரபரப்பாய் வாசிக்கப்பட்டவை. 


ஆனால் உண்மையான தீர்வுகள் இலங்கை வாழ் அப்பாவி மக்களுக்கு கிடைக்காமல் முள்வேலிக்குள் நிறுத்திய காரணங்கள்?


காரணம் நார்வே தொடங்கி அமெரிக்கா வரைக்கும் உலகமெங்கும் அறிவார்ந்த "தமிழீழம்" கருவில் இருந்து உருவாகிக்க்கொண்டுருக்கிறது.


"தமிழீழம்" என்பது தீர்வுகள் சரியான முறையில் தீர்க்கப்படாதவரையில் காலகாலத்திற்கும் உயிர்ப்புடன் தான் இருக்கும்? நாளை ராஜபக்சே மகன் ஆள வந்த போதிலும்.


1.வரலாறு என்பது மொத்த நிறை குறைகளுடன் மொத்த சரித்திரமாக இருக்க வேண்டும் 
2. உணர்வு மட்டும் மேலோங்கி நிற்க வேண்டும். 


இரண்டில் ஒன்று என்பது உங்கள் விமர்சனமும் ஓட்டும் புரியவைக்க வேண்டும். அமைதி உடையும் வரையில் ?

3 comments:

ஜோதிஜி said...

உங்கள் மெளனம் உடைய வேண்டிய தருணமிது.

தொடர்ந்து கொண்டுருக்கிறோம் என்று அமைதியாய் தொடர்ந்து கொண்டுருப்பவர்களும், படைக்கப்பட்ட நிகழ்வுகளில் வலியுடன் வாழ்ந்தவர்களும்,மொத்தத்தையும் வெறும் வாசிப்பாக கருதியவர்களும்.

இதுவரை கடந்து வந்த பாதைக்குமான மொத்த விமர்சனத்தை, நீங்கள் இந்த இடுகையில் ஓட்டு மூலம் முன்னெடுத்துச் செல்லும் போது, படைக்க வேண்டிய நோக்கமும், பாதையும் புரியவைக்கும்.

நான்காம் பாகத்தின் இறுதியில் நிற்கிறோம். காரணம் இனிமேல் வரக்கூடிய சம்பவங்கள் அத்தனையும் சமகால ஊடகத்தின் பரபரப்பு சம்பவங்களாக பார்க்கப்பட்ட படைக்கப்படட படைப்புகள். வெகுஜனத்தால் பரபரப்பாய் வாசிக்கப்பட்டவை.

ஆனால் உண்மையான தீர்வுகள் இலங்கை வாழ் அப்பாவி மக்களுக்கு கிடைக்காமல் முள்வேலிக்குள் நிறுத்திய காரணங்கள்?

காரணம் நார்வே தொடங்கி அமெரிக்கா வரைக்கும் உலகமெங்கும் அறிவார்ந்த "தமிழீழம்" கருவில் இருந்து உருவாகிக்க்கொண்டுருக்கிறது.

"தமிழீழம்" என்பது தீர்வுகள் சரியான முறையில் தீர்க்கப்படாதவரையில் காலகாலத்திற்கும் உயிர்ப்புடன் தான் இருக்கும்? நாளை ராஜபக்சே மகன் ஆள வந்த போதிலும்.

1.வரலாறு என்பது மொத்த நிறை குறைகளுடன் மொத்த சரித்திரமாக இருக்க வேண்டும்
2. உணர்வு மட்டும் மேலோங்கி நிற்க வேண்டும்.

இரண்டில் ஒன்று என்பது உங்கள் விமர்சனமும் ஓட்டும் புரியவைக்க வேண்டும். அமைதி உடையும் வரையில் ?

Jerry Eshananda said...

தொடர்கிறேன்.

ஜோதிஜி said...

வாருங்கள் ஆசிரியரே. நீண்ட இடைவேளைக்குப் பிறகு. பெரியார் வழித்தோன்றலுக்கு ஒரே போடாக போட்டு விட்டீர்கள்?