Tuesday, December 01, 2009

புதைந்த ஈழ வலி (25) மீளும் வழி.

இலங்கையில் சுந்திரம் பெற்றதில் இருந்து முதல் 25 வருடங்கள்.

மாட்டு வண்டியின் இரண்டு பக்கம்.

ஒரு பக்கம் சேனநாயகா, அவரது மகன் டட்லி சேனநாயகா,பண்டாராநாயகா, அவரது மனைவி சீறீமாவோ பண்டார நாயகா.

மறுபக்கம்.  அருணாச்சாலம், ராமநாதன்,ஜீஜீ.பொன்னம்பலம்,தந்தை செல்வா, தொண்டைமான்.

என்ன நடந்தது?  என்ன கிடைத்தது?

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆட்சி என்று ஆட்சியில் வந்து அமரும் கட்சியானது, ஆட்சியை பிடிக்கும் வரையிலும் அத்தனை உரிமைகளையும் அறிக்கை, போராட்டங்கள் மூலம் தன்னுடைய இருப்பை உறுதிபடுத்திக்கொண்டு சில சமயம் ஆட்சியையும் பிடித்து அமர்ந்து விடுவதுண்டு.   ஐந்து ஆண்டுகள் எதிர்கட்சியில் இருப்பவர்கள் (எதிரிகட்சியாக )செயல்படும் அத்தனை நிகழ்வுகளை சமாளிப்பதில் முக்கால்வாசியும், தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கான வளமைக்கு உண்டான முன்னேற்பாடுகளுக்குப் பிறகு மிச்சமும் சொச்சமும் கொஞ்சம் தமிழர் நலன் சார்ந்து விசயங்கள்.

அடுத்து வரும் எதிரிக்கட்சி அந்த கொஞ்சத்தையும் நஞ்சாக நினைத்து ஓரமாக போட்டு விட்டு ஆட்டம் பூஜ்யத்தில் இருந்து தொடங்கும்.

ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருக்கும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் ஒரே ஒரு விசயத்தில் தொடக்கம் முதல் மிகத் தெளிவாக இருந்துள்ளனர்.  "எந்த சூழ்நிலையிலும் தமிழர் ஆதரவு என்ற முத்திரை தங்கள் கட்சியின் மேல் விழுந்து விடக்கூடாது".

காரணம் இலங்கை ஆட்சியைப் பொறுத்தவரையிலும் அன்று முதல் இன்று வரையிலும் தமிழர் எதிர்ப்பு தான் அங்கு வாக்கு வங்கி.  உணர்ச்சிகளை சிங்களர்களிடம் தூண்டத்தூண்ட வாக்குகளின் சதவிகிதமும் உயர்ந்து கொண்டே இருக்கும். சிறுபான்மையினரை சிதைக்க சிதைக்க அவர்களின் அரசியல் வாழ்க்கையும் அவர்கள் சார்ந்துள்ள கட்சியும் பெரும்பான்மையாக மாற்றம் பெற்றதாக அமைந்து விடுகின்றது என்பது மொத்தத்தில் கண்கூடு.

சிங்களர்களின் தந்தையான சேனநாயகா தான் கொண்டு வந்த தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைச் சட்டத்தை அதை சட்ட தீர்மானமாக மாற்ற உதவிய தமிழர் ஜீஜீ பொன்னம்பலம். அதற்கு கிடைத்த பரிசு அமைச்சர் பதவி.

சிங்கள மொழி தான் ஆட்சி மொழி என்று கொண்டு வந்த பண்டார நாயகாவிடம் ஒருங்கிணைந்து தந்தை செல்வா கொண்டு வந்த ஓப்பந்தங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டது.  அன்றைய சூழ்நிலையில் ஜெயவர்த்தனே உருவாக்கிய பல்முனை போராட்டங்களும், சிங்களர்களின் மொத்த கோபமாக நடந்து முடிந்த புத்தபிக்குவால் சுடப்பட்ட பண்டாராயகாவின் சாவு அதற்குப் பிறகு வந்து அத்தனை சிங்கள தலைவர்களையும் சிந்திக்க வைத்தது.

சிங்களர்-தமிழர் எந்நாளும் சேர்ந்து வாழ முடியாது.  கூடாது என்று பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கி வைத்து இருந்தனர். அதுவரையிலும் வாழ்ந்த ஆட்சியில் இருந்த எதிர்கட்சி, சிறிய சிங்கள இனவாத கட்சிகள் என்று அத்தனை பேர்களுக்கும் எதிர்காலத்தில் கட்சியை கொண்டு போக வேண்டிய பாதையின் நிதர்சனத்தை உணர்த்திய மரணம் அது.

சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகாவை "பிரதேச தன்னாட்சி ஒப்பந்தம்" என்ற அடிப்படையில் தமிழ் தலைவர்கள் ஆதரித்து அவர் ஆட்சியையும் தாங்கி பிடித்து இருந்த போதிலும், அவரும் காரியம் முடிந்தது அந்தர் பல்டி அடித்து சாத்வீக போராட்ட தமிழ் தலைவர்களைப் பார்த்து ஏகடியமும் எகத்தாளமுமாக நகைத்தார்.
ஆனால்" உங்கள் மொத்த பிரச்சனைகளையும் என்னால் தீர்த்து வைக்க முடியும்.  என் கணவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியும் கூட" என்று தந்தை செல்வாவிடம் வந்த பெண் கண்ணீர் சீறீமாவோ பண்டார நாயகாவை ஆட்சிக் கட்டிலில் அமர உதவியது.
ஆனால் ஆட்சியை கலைத்து ஆட்டத்தில் இருந்து சீறீமாவோ வெளியேறிச் செல்வதற்குள் அவர் உருவாக்கிய வடக்கு கிழக்கு மகாணங்களில் கூட சிங்கள மொழியே வழக்காடு மன்ற, மொத்த அரசு மொழியாக இருக்க உருவாக்கிய திடீர் நிர்ப்பந்தங்கள் அனைத்தும் அன்று அத்தனை தமிழ் தலைவர்களையும் ஒன்றிணைக்க உதவியது.  மேலும் தோட்டத் தொழிலாளர்களை நாட்டை விட்டு விரட்ட உதவிய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஓப்பந்தமும் முழுமையாக உறுதிப்படுத்தியது.

தொடக்கத்தில் காந்திஜியின் பார்வைக்கு இலங்கை பிரச்சனை வந்தது.  தோட்டத் தொழிலாளர்கள் குறித்து சேனநாயகா காந்தியிடம் வந்து பேசினார்.  தொடர்ந்து காந்திஜி நேருவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.  இருவரும் இலங்கைப் பிரச்சனையில் ஈடுபட்ட போது எந்த துவேசமும் இல்லாமல் என்ன தீர்வு கண்டால் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க முடியும்? என்று பார்த்தனர்.  ஆனால் சேனநாயகாவின் பிடிவாதத்தின் மூலம் மொத்தமாய் அன்று எந்த தீர்வும் கிடைத்தபாடில்லை.

நேரு ஆட்சிக்கு வந்த போது தோட்டத் தொழிலாளர்களை இந்தியா திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போது '" இது என்ன சுத்த பைத்தியக்காரத்தனம்"  என்று மறுத்துவிட்டார்.

அன்றைய நேரு ஆட்சிகாலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து இன்று வரையிலும் எத்தனையோ மாற்றுக்கருத்துக்கள் உண்டு.  ஆனால் மொத்தத்தில் நேரு இன்று போல் எந்த கீழ்த்தரமான செயல்களையும் செய்யவில்லை.  இலங்கை, இந்தியா என்று எந்த பாகுபாடும் அவர் பார்வையில் இல்லை.

பகுத்தறிவாளர் என்பதோடு மூடத்தை எதிர்ப்பதிலும் முக்கியமானவராக இருந்தார்.  மொத்தத்தில் மூடத்தை வளர்ப்பவர்களை அருகில் கூட அனுமதிப்பது இல்லை.  நேருவின் ஒவ்வொரு பார்வையும் இனம், மதம் தாண்டிய தெளிவான தீர்க்கமான பார்வைகள்.

அவருடைய இறப்பு இந்தியர்களுக்குப் போலவே ஈழ மக்களுக்கும் ஒரு பேரிழப்பு.  விதியின் விளையாட்டைப் பாருங்கள்.  அவருக்குப் பிறகு அவரது மகள் அன்னை இந்திராவிடம் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் வந்து சேர்ந்தது.

அன்றைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் தொங்கும் தொழிலாளர்களாக பந்தாடப்பட்டனர்.  ஆனால் நேருவுக்கு பின்னால் வந்து ஆட்சியில் அமர்ந்த லால் பகதூர் சாஸ்திரியிடம் சிங்கள தலைவர்கள் ஓத வேண்டிய முறையில் ஓதி ஓட்டத் தொழிலாளர்களாக மாற்ற வைத்தனர்.

"இவர்களுக்கு உருவான நிலைமை நாளை நமக்கும் வரும்" என்று தமிழ் தலைவர்கள் மெல்லிய குரலில் சப்தமிட்டாலும் அதுவும் அன்று ஒரு அபஸ்பரமாகவே முடிந்து விட்டது.  "காந்திய வழி" என்று தன்னையும் தன் மக்களையும் வழி நடத்திக்கொண்டுருந்தவர்கள் சீறீமாவோவை ஆட்சி அமரவைக்கும் வரைக்கும் ஒற்றுமையும் இல்லை. மொத்த தமிழர்களின் நல்வாழ்வு குறித்து தெளிவான புரிந்துணர்வும் உருவாக்கவில்லை.

சிங்களர்களின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அன்றைய அவர்களின் வாழ்க்கையும் அமைய வில்லை.

தெரிந்த பேய்.  தெரியாத பிசாசு.

இரண்டே வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய அவஸ்யம்.  அன்று அவர்கள் உருவாக்கிய அத்தனை முயற்சிகளும் , முன்னேற்பாடுகளும் இறுதியில் அணர்த்ததில் தான் வந்து முடிந்ததுள்ளது.

தமிழ் தலைவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி என்று எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்த போதிலும் கூட அவர்களால் ஒரு அளவிற்கு மேல் எதையும் எட்டும் சூழ்நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்க்கி வைத்துருக்கவில்லை.

சில சந்தர்ப்பங்கள் கனிந்து கைக்கு கிடைக்கும் சூழ்நிலை வரும் போது கூட அப்போது, எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், கிடைத்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக செயல்பட்டனர்.  காரணம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி "புரிந்துணர்வு" மொத்தத்தில் சமாதி கட்டியது.

தமிழ் தலைவர்களுக்கு மொத்தமாய் தங்களைப் பற்றிய "சுய அலசல்" 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறீமாவோ ஆட்சியின் மூலம் தான் புரிந்தது. மூன்று கட்சிகளாக செயல்பட்டுக்கொண்டுருந்த. பல் சங்கங்களாகயிருந்தவைகள் (தோட்டத் தொழிலாளர்) தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்த போது மொத்த வெள்ளமும் தலையை தாண்டி சென்று கொண்டுருந்தது. மூழ்கிய வெள்ளத்திற்குள் தான் அன்றைய மொத்த ஈழ தமிழர்களின் வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டுருந்தார்கள்.

ஆனால் இந்த 25 ஆண்டுகளுக்குள் சிங்கள தலைவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறுதியாக "இலங்கை என்பது சிங்கள தேசம்" என்ற கட்டுமானப்பணியை" முழுமை" என்ற நிலைமைக்கு கொண்டு வந்து இருந்தனர்.   காரணம் உள்ளே நடந்த அத்தனை நிகழ்வுகளும் அதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.

கொள்கை அளவில் சட்டங்கள் மூலம் தீர்மானத்தை ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போதிலும், நேரிடையாக, மறைமுகமாக நடத்தப்பட்ட நிகழ்வுகளும் நமக்கு பல தீர்க்கதரிசனமாக பாடத்தைக் கற்று தருகிறது.

நமக்கு சிங்களர்களின் இன்றைய செயல்பாடுகளை மொத்ததிலும் எரிச்சலைத் தந்தாலும், ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் மொத்த சிங்கள தலைவர்களும் தன்னுடைய கொள்கைகளுக்காக, நோக்கத்திற்க்காக எந்தந்த வகையில் பாடுபட்டு உள்ளார்கள்? எத்தனை முன்னேற்பாடுகளை மிக தீர்கக தரிசனமாக தொடக்கம் முதல் செயல்படுத்தி உள்ளார்கள் என்பதை பார்க்கும் போது பல அரசியல் அறிவுகள் நமக்கு கிடைக்கின்றது.

கடந்து போன 25 ஆண்டுகளில் மொத்த சிங்கள தலைவர்களும் உருவாக்கிய சிங்கள நலவாழ்வு திட்டங்கள், தமிழர் எதிர்ப்புணர்ச்சி, சூறையாடப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதரம், இழந்த இழப்புகள், அழிந்த உயிர்கள், அழிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரங்கள்,  உயிர் பிழைத்தால் போதும் என்று தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் என்று ஏராளமான வலிகள் உண்டு.

இன்று வரையிலும் வழி கிடைத்தபாடில்லை.

அப்போது மொத்த இலங்கைக்குள் நடந்த சிங்கள தலைவர்களால் நடத்தப்பட்ட குடியேற்றங்கள், திட்டங்களின் மூலம் உருவாக்கப்பட்ட பொருளாதார வேறுபாடுகள், வேறுபாட்டின் மூலம் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் நடந்த மாற்றங்கள்?

அப்போது நடந்தவைகள்?

இந்த வார சிரிப்"பூ"

"சிங்களர்களின் தேசத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களின் உரிமையை பாதுகாப்பேன்"

பொதுவேட்பாளார் சர்த்பொன்சேகா

3 comments:

புலவன் புலிகேசி said...

//
எதிர்கால அறிவு சார்ந்த தமிழீழம் உருவாக வேண்டுமானால் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு உரிய தண்டனைகள் கிடைக்க வேண்டும்.//

நிச்சயம்....

ஜோதிஜி said...

Comments திடீர் என்று அடம்பிடிக்கின்றது. நன்றி புலிகேசி.

Anonymous said...

People (Singala / any Majorities) must have broad view, instead of having thought of dominating minority peoples. Each and every one should have adequate education, clear view about life to create this situation. Till that, leaders will keep the country in wrong way.
- Peace