Sunday, December 13, 2009

150. கொரில்லா குரங்கு அல்ல

தொடக்கத்தில் எந்த ஆட்சி முறையும் மக்களுக்கு தேவையாய் இல்லை.  சிற்றூர்.  கூடிப்பேசும் கூட்டம்.  உடனே தீர்வு. காழ்புணர்ச்சி இல்லாத சம உரிமைகள். மொத்தத்தில் அமைதி.

நட்ட கல்லை சுற்றி வந்த கூட்டம் அது.  நல்ல வளர்ச்சி எது என்று தெரியாமல் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.  கலப்பும் இல்லை அவர்களின் வாழ்க்கையின் மொத்தமும் எந்த கலக்கமும் இல்லை.

மன்னர் வந்தார்.  அறிமுகமானது மன்னராட்சி.  அருகே இருந்தவர்கள் வாழ்ந்தார்கள்.  மன்னர் எப்போதும் போல ஆண்டார்.  ஆண்டவன் வாழ்ந்தார்.  அருகிப்போனது மக்களின் வாழ்க்கைத் தரம் மட்டும் அல்ல.  அச்சப்படுத்தும் சுயநல கொள்கைகளால் ஆன்மீகம் என்ற பதமே செல்லரிக்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் படை எடுத்து வந்தவர்கள் பாடையில் ஏற்றினார்கள்.  பல் இளித்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் பதவியுடன் வாழ்ந்தார்கள் ஆங்கியலேயர்கள் வெளியேறும் வரைக்கும்.

ஜனநாயகக் குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் வெளியே வந்து சொன்னார்கள்.

வெற்றி. வெகு சிறப்பு. ஆனால் நடக்க நாளாகும்.

காரணம் கருவிலே உருவான போதே கண்டதையும் தின்று செரிக்காத பிண்டமாய் தான் அதன் பிரவசம் நிகழ்ந்தது.

மன்னர்களால், படை எடுத்தவர்களால் பிரச்சனை என்பது போய் உள்ளே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்திகளால் மொத்தமாய் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை தரம் சகதியாய் நாறத் தொடங்கியது.

ஜனநாயகம், பாராளுமன்றம், சட்டமன்றம், சட்டங்கள் எல்லாமே மேலே உடுத்திய ஆடைகள்.  உள்ளே சீழ் வடியும் கோர கொப்புளங்கள்.  தீர்வுகள் சரியான முறையில் தீர்க்கப்படாமல் உலகமெங்கும் உருவானது தான் கிளர்ச்சிகள், வர்க்கப்போராட்டங்கள்.  அதன் தொடர்ச்சி தான் கொரில்லா தாக்குதல்கள்.
சுடத் தெரிந்தவனுக்கு ஓரு குறியும் ஒரு தோட்டாவும் போது.  அவனைப் பொறுத்தவரையில் உடனடித்  தீர்வு.  ஆனால் கொரில்லா தாக்குதல் இழப்பும் வலியும் அதிகம்.  அதைவிட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களுக்கும், உடன் வாழும் சக மனிதர்களுக்கும் தினந்தோறும் கொடூரம்.

விடுதலைப்புலிகள் தேர்ந்தெடுத்த தொடக்க கொரில்லா தாக்குதல்கள் முறைப்படுத்தாத, ஆனால் முகம் முழுக்க பரவிய ஆவேசத்தால் ஆட்டம் காணத்தொடங்கியது மொத்த இலங்கையும்.

பொடியன்கள் உருவாக்கிய தாக்கம் என்பது அவர்களின் செல்லரித்த ஜனநாயகத்ததை பொடிப் பொடியாக்கியது.

நெல்சன் மண்டேலா, யாசர் அரபாத், சே குவாரா,ஹோ சி மின், மா சே துங், பிடல் காஸ்ட்ரோ என்று தொடங்கி இன்று வரையிலும் நின்றபாடில்லை. தீர்வுகளும் தீர்ந்தபாடில்லை.

"பதுங்கு தாக்கு" என்ற இந்த இரண்டு வார்த்தையில் பல உயிர்கள் பறிபோனது.  பதில் அளித்தவர்களின் மொத்த குறியும் அப்பாவியை மட்டுமே வந்தடைந்தது.  இலங்கையின் பார்வையில் தீவிரவாதம்.  விடுதலைப்புலிகளின் பார்வையில் தமிழீழம் என் தாகம்.

மக்கள் கண நேரத்தில் துளைத்த தோட்டாவால் விக்கிக்கொண்டு செத்தார்கள். சாகாதவர்களை சமரசம் ஏதுமின்றி கொளுத்தி கொண்டாடினார்கள். இது மக்களுக்கு வழங்கிய இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு பக்கம்.

விடுதலைப்புலிகள் மறுபக்கம்.  தீர்மானம் ஒன்று.  தமிழர்களின் மானம் பெரிது.  அதை விட வாழ்வுரிமை மிகப் பெரிது.

நம்முடைய சக்தியை காட்ட வேண்டுமென்றால் நீங்கள் பொறுத்து தான் ஆக வேண்டும் என்று பொங்கி எழுந்த போதெல்லாம் அப்பாவி மக்கள் அனுபவித்த வலி நிறைந்த வாழ்க்கை என்பதும் வாழ்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.  இனியும் இங்கு வாழ்ந்து தான் தொலைக்க வேண்டுமா? என்கின்ற அளவிற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டுங்கெட்டானாக்கி தத்தளிக்க வைத்தது.

பிரபாகரன் தவிர்த்து உருவான மற்ற அத்தனை பேராளிகளுக்கும் ஜனநாயக கதவு திறக்காதா? என்ற எதிர்பார்ப்பில் அவ்வப்போது தன்னை மாற்றிக்கொண்டார்கள்.  மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தார்கள்.  தங்களுக்கான வாழ்க்கையையும் அதில் தேடித் தினம் அலைந்தார்கள்.

33 வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, இலங்கை நாடாளுமன்றம் என்ற போலியான பதம் இனி எந்த நாளும் தமிழ் மக்களுக்கு உண்மையான இதமான சூழ்நிலையை உருவாக்க வாய்ப்பே இருக்காது என்று தீர்மானமாய் நம்பிய ஒரே காரணம் தான் இறுதிவரையிலும் பிரபாகரன் ஆளுமையை சுட்டிக்காட்டியது.  அதன் தொடர்ச்சியாக உலகம் முழுக்க அவர் மேல் அச்சப் பார்வையையும் பார்க்க வைத்தது.

பாலஸ்தீனம் இஸ்ரேல் என்று உலகம் முழுக்க சுற்றி வாருங்கள்.  இன்று ஆந்திரா தெலுங்கானா, ஜார்கண்ட் மாவோயிஸ்ட் என்று உள் நாட்டுக்குள் வந்து நில்லுங்கள்.  கடைசியாக கருவில் இருக்கும் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென்மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற உள்ளுருக்குள் வந்து நில்லுங்கள்.

போராட்டங்கள் தவறு என்றால் போராடத்தூண்டும் காரணங்கள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறது.  இது தான் ஜனநாயகம் தந்த பாலபாடம்.  காந்தி சொன்ன " கிராமத்திற்குள் சென்று வாழ்ந்து விட்டு ஆட்சியில் அமருங்கள்"  என்ற எளிமை சூத்திரம்.

ஐனநாயகத்திற்கே இத்தனை பிரச்சனைகள் என்றால் "நீங்கள் வாழ்க்கை வாழவே தகுதியில்லாதவர்கள்" என்று சொன்ன, சொல்லிவிட்டு போன, சொல்லிக்கொண்டுருக்கும் அத்தனை இலங்கை ஆட்சியாளர்களையும் எங்கு கொண்டு சேர்ப்பீர்கள்?  தீவிரவாதம் தவறு என்றால் தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்று தீர்வு காணப்படும்?

போராளிகள் என்று சொல்லிக்கொண்டு களம் புகுந்தவர்கள் தனக்கு தானே சூட்டிக்கொண்ட பட்டங்களும், வாழ்க்கையும், வசதிகளும், எதிர்பார்ப்புகளும் உள்ளுற வன்மத்தையும், வக்கிரத்தையும் தான் வளர்த்து.  தமிழ் மக்களின் வாழ்க்கையை புறந்தள்ளியது.  ஒரு வகையில் பிரபாகரனால் மதிப்பு பார்வையில் இருந்தவர்.  தனக்கு தகுதியான இணையான பதவியை உருவாக்கி உட்கார வைத்து அலங்கரித்து பார்த்தவர் என்ற பெருமை உடைய உமா மகேஸ்வரன் என்ற முகுந்தனை முதலில் அழைப்போம்.

இலங்கை தேசிய காங்கிரஸ் என்று தொடக்க காலம் முதல் இருந்த ஜனநாயக பாதை கடைசியில் தந்தை செல்வா காலத்தில் மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து மாறியது.  அமிர்தலிங்கம் அதையும் மாற்றி வேறு ஒரு பாதையில் பயணித்தார்.  தமிழர்களுக்கு பலன் இல்லை.  ஆனால் தமிழன் பெயரைச் சொல்லி பலன் அடைந்தவர் பலர்.

தமிழ் மாணவர் பேரவை, புதிய தமிழ் புலிகள் என்ற மாற்றம் பெற்றது இனி எத்தனை விதமாக மாற்றம் பெறப்போகிறது?  என்ன காரணங்கள்?

6 comments:

ஜோதிஜி said...

இறுதி யுத்தத்தின் ஆரம்பமும் முடிவும் தலைவரின் இறுதி வியூகம் என்ன ? எப்படி முற்றுகையிலிருந்து வெளியேறினார் ?
சிங்களத்தால் காட்டப்பட்ட உடலுக்குரிய தளபதி யார் ?
எல்லாவற்றுக்கும் விடை கொடுக்கப்பட்டிருக்கின்றது

http://www.ponmaalai.com/2009/12/blog-post_8596.html

Jerry Eshananda said...

உங்களோடு பயணிக்கிறேன் ஐயா.

geethappriyan said...

வழக்கம் போல மிக அருமையான ஆக்கம்,ஓட்டுக்கள் போட்டாச்சு,

Anonymous said...

கொரில்லா அல்ல அது கெரில்லா...

ஜோதிஜி said...

வாங்க கார்த்திக், ஆசிரியரே.

ஜோதிஜி said...

உருவம் இல்லாமல் தந்த" பாடம் " பாலபாடம். நன்றி.