Tuesday, January 19, 2010

இந்திரா காந்தி ஈழம் பின்னால்

1984 ஆம் ஆண்டு. இந்திரா காந்தி இறப்புக்குபிறகு ராஜீவ் காந்தி பதவிக்கு வந்த நேரம்.  இந்திரா காந்தியின் உள்வட்டாரத்தில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பார்த்தசாரதி என்ற தமிழர் புறந்தள்ளப்பட்டு மொத்த பொறுப்பும் ரொமேஷ் பண்டாரியிடம் மாற்றப்பட்டது.  ரா தலைமைப் பொறுப்பு சக்சேனா வசம்.  இந்திரா காந்தி இறுதிசடங்கில் ஜெயவர்த்னே கலந்து கொண்டு ராஜீவ் காந்தியை சந்தித்ததும், அதன் பிறகு மொத்த இலங்கை குறித்த வெளியுறவு கொள்கை மாற்றம் பெற்று வேறு ஒரு பாதையில் நகர்ந்தது. வெள்ளந்தியான ராஜீவ் காந்தியிடம் விபரமான ஜெயவர்த்னே என்ன மந்திரம் ஓதினார் என்பதை அந்த புத்தர் மட்டுமே அறிந்து இருக்க வாய்ப்புண்டு?

இந்திரா காந்தி எந்த அளவிற்கு இலங்கை தமிழர்களின் மீது அக்கறை கொண்டு செயல்பட்டாரோ அதன் மாற்று என்று சொல்லும் அளவிற்கு ராஜீவ் அணுகுமுறை இருந்தது.  " இலங்கை என்ற நாடு துண்டாட அனுமதியோம்.  ஆனால் தமிழர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா பொறுப்பு"  இதன் மற்றொரு அர்த்தம் தமிழர்களின் நலன் அதே சமயம் இலங்கை எப்போது இந்தியாவை சார்ந்து இருக்க வேண்டும். மற்ற அந்நிய நாடுகள் இலங்கையில் தளம் அமைக்கும் பட்சத்தில் நிரந்தர தலைவலியாய் அமைந்து விடும் என்பதால் இந்திரா காந்தியின் அணுகுமுறை மறைபொருள் போல் விவேகமாய் இருந்தது.  முதிர்ந்த அனுபவம் மிக்க நரசிம்மராவ், ஜி.பார்த்தசாரதி போல் ஆட்கள் அமைந்து விட எல்லாமே நல்லபடியாக போய்க்கொண்டுருந்தது.  ஜெயவர்த்னே பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு.  காரணம் அமிர்தலிங்கத்தை சிறப்பு விருந்தினர் என்ற அளவிற்கு அனுமதித்த இந்திரா காந்தியின் தீர்ககதரிசனம் ஜெயவர்த்னேவுக்கு தீராத தலைவலியாக இருந்தது.
ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.  மறுபக்கம் ரா மூலம் கொடுக்கப்பட்ட ஆயுதப்பயிற்சி மூலம் இலங்கைக்குள் நடத்தப்பட்டுக்கொண்டுருந்த கிளர்ச்சியின் வித்துக்கள்.  ஆனால் ராஜீவ் காந்தியிடம் ஜெயவர்த்னே எவ்வாறு அறிமுகம் செய்து கொண்டார்?  என்ன பேசினார்கள்? என்பதை விட அதற்குப்பிறகு ராஜீவ் காந்தியின் ஒவ்வொரு இலங்கை குறித்தான அணுகுமுறையும் மாற்றம் பெற்றதென்பது ஒரு வகையில் அரசியல் ஞானி ஜெயவர்த்னேயின் வெற்றிகரமான சாதுர்யத்தின் ஒரு மைல்கல்.

கல்வியறிவும், நேர்மையும், தெளிந்த உள்ளமும், அரசியல் சூழ்ச்சிகள் எதையும் அறியாத ராஜீவ் காந்திக்கு பின்புலமாக இருந்த அத்தனை அதிகாரிகளும் உருவாக்கிய கோடுகள் அத்தனையும் கோப்புகளாக மாற்றம் பெற ஒரு வகையில் இலங்கையில் போராடிக்கொண்டு மொத்த போராளிகளுக்கும் மிகுந்த நெருக்கடியும், ஜெயவர்த்னே மனதிற்குள் சிரித்துக்கொள்ளும் அளவிற்கு ஒவ்வொன்றும் விரைவாக நடந்தேறத் தொடங்கியது. தந்திர அரசியல் ஞானி ஜெயவர்த்னே ஒரு பக்கம்.  விவேகமில்லாத வீரத்தை மட்டும் வைத்துக்கொண்டு போராடிக்கொண்டுருந்த போராளிக்குழுக்கள் மறுபக்கம்.  இதற்கிடையே உண்மையான அடிப்படையான பிரச்சனைகள் என்னவென்று தெரியாத இந்திய அதிகாரவர்க்கத்தினர் நடுவில்.  இந்தியாவைப் பொறுத்தவரையில் ராஜீவ் விரும்பும் ஒப்பந்தம் வேண்டும்.  பின்னால் வரும் பிரச்சனைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

இதே வருடத்தில் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் மிஞ்சிப்போனால் 1500க்குள் தான் மொத்த போராளிகளே இருந்தார்கள்.  ஆனால் மற்ற இயக்கங்களான TELO. EROS. EPRLF. PLOT இதைத் தவிர சிறிதும் பெரிதுமாக இருந்த ஏறக்குறைய நாற்பதுக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதைகள்.  விடுதலைப்புலிகளைத் தவிர மற்ற பெரிய இயக்கங்களில் சுமாராக 6000 முதல் 7000 வரைக்கும் போராளிகள் இருந்தனர்.  எல்லாவகையில் அன்றைய சூழ்நிலையில் பிரபாகரனை விட மற்ற போராளிக்குழுக்கள் நல்ல கட்டமைப்பு. சொல்லப்போனால் அன்றைய சூழ்நிலையில் மொத்த போராளிக்குழுக்களை ஒன்று சேர்த்தால் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை என்பது குறைவு தான்.

ஒன்றைத்தவிர, அது பிரபாகரன் தலைமையில் இருந்த அத்தனை பேர்களுக்குள் இருந்த ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை போன்ற பல விசயங்கள் வேறு எந்த இயக்கத்திலும் பெரிதாக காணப்படவில்லை.  தனி ஈழம் என்பதை தீர்வாக வைத்து இருந்தார்களே தவிர பிரபாகரன் போல் அதே உறுதியோ, அதைத் தவிர வேறு ஒன்று இருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையில் தான் இருந்தார்கள்.  இந்த குணாதிசியங்கள் தான் இவர்கள் ரா வலையில் சிக்க உதவியதும், விலை போக காரணமாக இருந்ததும், இறுதியில் சகோதர யுத்தங்கள் மூலமாக ரத்த ஆறு ஓடியதும் என்று தனியான பாதை பயணிக்கின்றது. ரா இந்தப் போராட்டத்தில் உள்ளே நுழைந்த போது, சந்திரஹாசன் மூலம் டெலோ அமைப்பு முக்கியத்துவம் கொடுத்து நடத்திக்கொண்டுருந்த ஆட்டங்கள் கடைசி வரைக்கும் தொடர்ந்தது.  கிட்டத்தட்ட டெலோ அமைப்பு ரா அமைப்பின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு.  ஆனால் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒவ்வொரு பகுதியிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டக்கூடிய மக்கள் ஆதரவு இருந்து என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்ட ஆகவேண்டும்.

ஜெயவர்த்னேக்குப் பிறகு அதிகார ஆசையின் பொருட்டு அமைச்சர்களாக இருந்த அதுலத் முதலி ஒரு பக்கமும், காமினி திச நாயகா மறுபக்கமும் தமிழர் அழிப்பு நடவடிக்கையில் இறங்கி பட்டாசு வெடித்துக்கொண்டாடும் தீபாவளி பண்டிக்கை போல் கொண்டாடிக்கொண்டுருந்தார்கள்.  இதே வருடத்தில் பிரபாகரனுக்கு மொத்த போராளிக்குழுக்களும் ஒன்றினைந்து செயல்படவேண்டிய அவஸ்யத்தை ஆன்டன் பாலசிங்கம் பலவிதமாக உணர்த்தி இறுதியாக (1984 ஏப்ரல்)  Eelam National Liberation Front (ENLF) என்ற பெயரின் கீழ் EROS. PLOT. EPRLF. LTTE  என்று தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டுருந்தவர்கள் ஒரே குடையின் கீழ் வந்தனர்.  பிரபாகரன் EPRLF தலைவர் பத்மநாபா வை முதல் முதலாக சந்தித்ததும் இப்போது தான்.

இதன் பிறகு ஒவ்வொருவரும் ரவுண்டி கட்டி அடிக்கத் தொடங்கினர்.  ஆனால் இவர்களின் கொரில்லா தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கிய இராணுவத்தினர் அப்பாவி பொதுமக்களை கொல்லுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.  அதுவரையில் பொறுமையாக இலங்கை இராணுவத்துடன் போரிட்டுக்கொண்டுருந்த போராளிக்குழுக்கள் முதன் முறையாக (1985 மே 14) அனுராதபுரத்தில் சிங்கள அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் (இது பெரிய கரும்புள்ளி) நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களை சாகடித்தனர்.

இலங்கையில் நிற்காத தாக்குதல்களும், அகதிகளின் வருகையும், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலும் என தொடர்ந்து கொண்டே போக ராஜீவ் காந்தி உத்தரவின் பேரில் இருதரப்பினரை எதிரெதிரே அமர வைத்து பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பத்மநாபா, சீறீசபாரெத்தினம்,பாலகுமார்,பிரபாகரன் நான்கு பேர்களும் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்தனர்.  அமிர்தலிங்கம் நேரிடையாக கலந்து கொண்டார்.  இவர்களின் செயல்பாடுகளைப் போலவே மற்றொரு ஆச்சரியம்?
ஜெயவர்த்னே தன்னுடைய தம்பி ஹெக்டர் ஜெயவர்த்னேவை அனுப்பி வைத்தார்.   ஜுலை முதல் சுற்றும் ஆகஸ்ட் இரண்டாம் சுற்றும் பேச்சுவார்த்தை நடந்தது.    இந்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டுருந் போதே திருகோணமலையில் பேரூந்தில் சென்று கொண்டுருந்த அப்பாவி தமிழ்மக்களை இராணுவம் இறக்கி சுட்டுக்கொன்றது.  இதற்கு பதிலடியாக மன்னார் மாவட்டத்தில் இருந்த இராணுவ முகாம் புலிகள் தாக்கி அழித்தனர்.  இது சங்கிலி போல் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இரு தரப்பிலும் அதிக சேதம் உருவாக்க, திம்பு பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த திம்பு பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திக்கொண்டுருந்தவர் ரொமேஷ் பண்டாரி.  இந்திரா காந்தி காலத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டுருந்த ஜீ.பார்த்தசாரதிக்கும் இவருக்கும் அணுகுமுறையில் தலைகீழ் மாற்றம்.  காரணம் அது வரைக்கும் ரா மூலம் மொத்த போராளிகுழுக்களுக்கும் ஆயுதப்பயிற்சி இது போக நிதி உதவி என்று  செய்து கொண்டுருந்த காரணத்தால் தாங்கள் சொல்வதை மொத்த போராளிகளும் எளிதில் கேட்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.

ஒவ்வொருவரும் பிரிந்து செயல்பட்டுக்கொண்டுருந்தார்களே தவிர தமிழர்களுக்கான மொத்த உரிமைகளை எவரும் விட்டுத் தயாராய் இல்லை.  இந்திய அதிகார வர்க்கத்தினருக்கு அவசர உணவு விடுதி சாப்பாடு போல் எல்லாமே கையெழுத்து போட்டு விட்டால் முடிந்து விடும் என்ற நம்பிக்கை.  ஆனால் அதுவரைக்கும் வலியுடன் வாழ்ந்தவர்களுக்கு இவர்கள் காட்டும் வழி மேல் நம்பிக்கை இல்லை.  இந்தியாவிற்கும், ஜெயவர்த்னேவுக்கும் சாதமாகவே இருக்க, மொழிபெயர்ப்பாளாராக செயல்பட்டுக்கொண்டுருந்த ஆன்டன் பாலசிங்கம், ரொமேஷ் பண்டாரியின் கடுமையான மிரட்டலுக்கும், அசிங்க வார்த்தைகளுக்கும் ஆளாகி நாடு கடத்தப்பட்டார்.  இவருடன் மற்ற போராளிக்குழுக்களுக்கு ஒருங்கிருணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டுருந்த சந்திர ஹாசன்,மற்றொரு போராளித் தலைவர் சத்யேந்திராவும் நாடு கடத்தப்பட்டனர்.  ஒவ்வொன்றும் ரொமேஷ் பண்டாரியின் கண் அசைவில் நடத்தப்பட்டுக்கொண்டுருந்தது.

ரொமேஷ் பண்டாரியின் ஓய்வுக்குப் பிறகு ராஜீவ் காந்தியால் இலங்கைக்கென்று உருவாக்கப்பட்ட குழுவில் இருந்தவர்கள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், நட்வட்சிங்.  அப்போது வெளியுறவுச் செயலாளர் ஏபி வெங்கடேஸ்வரன்.  காரணம் தொடங்கப்போகும் (1986 ஏப்ரல் பெங்களூர்) சார்க் மாநாட்டில் ஜெயவர்த்னேவை அழுத்தம் கொடுத்து தமிழர்களுக்கான தீர்வுக்கான முன் வரைவு ஒப்பந்தத்தை மாநாட்டில் சமர்பிக்க ஏற்பாடு நடந்து கொண்டுருந்தது.

இந்திரா காந்திக்கே போக்கு காட்டிய ஜெயவர்த்னேவுக்கு ராஜீவ் காந்தி எம்மாத்திரம்? இந்த குழு பேச்சுவார்த்தைக்கு போக அவரோ இனரீதியான அரசியல் மாநாட்டை கூட்டுவதும், வடக்கு கிழக்கு தமிழர் இணைப்பு என்பதை விட முன்று கூறுகளாக தமிழர் சிங்களர் முஸ்லீம் என்று பிரித்து, திரிகோணமலை பகுதியை சிங்களப்பகுதியில் வரும் அளவிற்கு, இடப்பெயர்ச்சி, சிங்களர்களின் முக்கியத்துவம் என்றொரு தந்திர ஒப்பந்தத்தை சார்க் மாநாட்டில் சமர்பிக்க காத்து இருந்தார்.

காரணம் இது போன்ற ஒரு திட்டத்தை அது வரைக்கும் இந்தியாவிடம் சொல்லவும் இல்லை.  விவாதிக்கவும் இல்லை.  போராளிகள் சொன்ன ஜெயவர்த்னே குணாதிசியங்களை இந்திய அதிகார வர்க்கத்தினர்களுக்கும் புரிந்து கொள்ள உதவிய தருணமிது.

இந்திய அமைச்சர்களுக்கு அதிர்ச்சி.  அவர்களைப் பார்த்து ஜெயவர்த்னே என்ன செய்துருப்பார்?  நம் தலைவர்களைப் பார்த்து மனதிற்குள் மௌனவாக சிரித்துருப்பார்.  காரணம் அரசியல் என்பதே கொள்கை என்பது இரண்டாம் பட்சம்.  தந்திரம், சமயோஜிதம், சாமர்த்தியம் தானே இன்றுவரைக்கும் முக்கியமாய் இருக்கிறது?

தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்தம், கச்சத்தீவு ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை என்று ஒவ்வொரு முறையும் வல்லரசு இந்தியா முகத்தில் பேயரசு இலங்கை கரியை பூசினாலும் முழுமையாக புரிந்து செயல்படும் அதிகாரம் பெற்றவர்கள் இந்தியாவில் இன்று வரையிலும் யாருமில்லை? இதனால் தான் தூதுக்குழுவாக சென்ற திருமாவளவனைப் பார்த்து ராஜபக்ஷே எகத்தாளமாக கட்டிப்பிடித்து " நீங்கள் தப்பி விட்டீர்கள்.  இல்லாவிட்டால் பிரபாகரன் கூட போய் சேர்ந்து இருப்பீர்கள்"  என்ற கெக்கேபிக்கே தத்துவத்தை உரத்துச் சொல்ல முடிகின்றது.  பாவம் அவருடைய வழித்தோன்றல்கள்.  கணக்கை தொடங்கி விட்டார்.  முடிவு எப்படி இருக்கும் என்பதை காலம் அவருக்கு விரைவில் உணர்த்தும். அதுவரைக்கும் அவர் இருப்பாரா, இல்லை பாக்கியை வழித்தோன்றல்கள் வாங்கிக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை?

Sunday, January 17, 2010

ரா (RAW) வலையில் சிக்கிய பிரபாகரன்

இந்தியா ஏன் இலங்கை பிரச்சனையில் தலையிட்டது? என்பதற்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்று தான்.  ஆமாம் அப்போது ஆண்டு கொண்டுருந்த ஜே.ஆர். ஜெயவர்த்னே வின் பிடிவாதப் போக்கும், அளவுகடந்த தமிழர்களின் மீதான வெறுப்பும் தான் முக்கியமாக தெரிகிறது.  பிரபாகரன் என்ற சக்தியை வளர்த்தும் இவரே?

கருப்பு ஜுலை கலவரத்திற்குப் பின்பு புலம்பெயர்ந்தோர்களின் மொத்த ஆதரவும் மெதுவாக பிரபாகரன் பக்கம் திரும்பியது.  உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மக்களும் மற்ற போராளி குழுக்களின் ஆதிக்கத்தை விட  விடுதலைப்புலிகள் வரி வசூல் செய்து தனது உள்கட்டமைப்பை உருவாக்கும் அளவிற்கு நம்பிக்கை பெற காரணமாக இருக்க விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மற்ற இயக்கங்களை விட மேம்பட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் வளர்ந்து கொண்டே இருந்தது.  இலங்கை இராணுவமும், காவல்துறையும் குறிப்பிட்ட காலத்திற்குள் இவர்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிக்கு செல்ல பயப்படும் அளவிற்கு மாற்றம் பெற்றது.
இந்திரா காந்தி இரும்பு மனிதராக செயல்பட்டு,  பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் என்ற நாட்டை பிரித்ததற்கு பிறகு, இந்தியா கொண்டுருந்த ரஷ்யா ஆதரவு நிலைக்கு எதிராக, அருகே இருக்கும் இலங்கை ஜெயவர்த்னேயின் அமெரிக்கா ஆதரவு இந்தியாவிற்கு காலில் குத்திய முள் வலி போல் உறுத்திக்கொண்டுருந்தது.

அதுவரைக்கும் கண்டும் காணாமல் இருந்த இந்தியா அதற்குப்பிறகு தான் முழுமையாக இலங்கையின் மேல் கவனம் செலுத்த தொடங்கியது. தமிழ்நாட்டுக்குள் வந்து கொண்டுருந்த தொடர்ச்சியான அகதிகளின் வருகையும், இலங்கையின் தறிகெட்ட வெளியுறவு கொள்கைகளும் நாளுக்குள் நாள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற்றம் பெற்றுக்கொண்டு வந்தன.

அப்போது இந்திரா காந்தியின் ஆளுமை என்பது உலகமெங்கும் பிரசித்தம்.

பின்னாளில் இந்திரா காந்தியின் இறப்புக்குப் பிறகு, ஜெயவர்த்னேவுடன் ஜே என் தீட்சித் பேசிய போது இந்திரா காந்தியின் மரணம் தனிப்பட்ட முறையில் ஜெயவர்த்னேவுக்கு சந்தோஷமாய் இருந்தது போல் அவருடைய வார்த்தைகள் உணர்த்தியது.

  " இந்திரா காந்தி உயிரோடு இருந்து இருந்தால் இலங்கை என்பது இரண்டு நாடாக துண்டாக்கி இருக்கும்"

அந்த அளவிற்கு ஜெயவர்த்னே சொப்பன ஸ்கலிதமாகியிருந்தார்.

அமெரிக்க ஆதரவு ஜெயவர்த்னே மூலம் வளர்க்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தென் இந்தியாவிற்கு மட்டுமல்ல மொத்தமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய அவசர அவஸ்ய காரணங்கள் ஏராளமாய் இருந்தது.

தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க மொத்தமாக சட்டம் ஓழுங்கு வரைக்கும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை.  இதற்கிடையே தான் தோன்றித்தனமாக போராளிக்குழுக்களின் செயல்பாடுகள்.

இரண்டு பக்கத்தையும் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டிய அவஸ்யம்.  கலவரத்திற்குப்பிறகு இந்திரா காந்தி நேரிடையாக தொலைபேசியில் ஜெயவர்த்னே கூட பேசியதும், நரசிம்மராவ், பார்த்தசாரதி,ரொமேஷ் பண்டாரி போன்ற இயல்பான அதிகார வர்க்கத்தினரின் முன்னேற்பாடுகளைக்கூட ஜெயவர்த்னே கேட்கக்கூட தயராய் இல்லை.  மொத்தமாக ராஜதந்திர முயற்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிந்த போது தான் ஒரு பக்கம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் அதேசமயம் மறுபக்கம் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி என்று முடிவு எடுத்து மொத்த பொறுப்பும் ரா உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேர்மையான வழியில் சென்றால் ஜெயவர்த்னே வழிக்கு வரமாட்டார்.  உள்நாட்டு கலவரங்களை உருவாக்கும் பட்சத்தில் தான் இந்தியா எதிர்பார்க்கும் வழிக்கு வருவார் என்று போட்ட கணக்கு சரியாகவே வேலை செய்யத்தொடங்கியது.

ரா வின் பார்வையில் முதலில் பட்டதும், அதுவே பரஸ்பர நல்ல புரிந்துணர்வை உருவாக்கியதும் சந்திரஹாசன் மட்டுமே. இவர் தந்தை செல்வாவின் மகனாவார். சந்திரஹாசன் மூலமாக அப்போது இலங்கையில் TELO இயக்கத்தினர் சாரை சாரையாக தமிழ்நாட்டில் வந்து இறங்குவதும், அது போக ரா வால் தேர்ந்தெடுத்த மற்ற போராளிக்குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதும் நடந்து கொண்டுருந்தது.   தமிழ்நாட்டு க்யூ உளவுத்துறைக்குக் கூட தெரியாத அளவிற்கு ரா வின் நேரிடையான பார்வையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. அப்போது தமிழ்நாட்டு காவல்துறை உயரதிகாரி அலெக்ஸாண்டர்.

மொத்த நிகழ்வுகளையும் உள்வாங்கிய பிரபாகரன் லண்டனில் (1983) கல்லூரிப் பேராசியராக பணிபுரிந்து கொண்டுருந்த ஆன்டன் பாலசிங்கத்தை சென்னைக்கு வரவழைத்தார். அந்த நாள் வரைக்கும் பிரபாகரனை தங்கள் ஆட்டத்தில் ரா சேர்க்கவில்லை.  பிரபாகரனும் எதிர்பார்க்கும் சூழ்நிலையில் இல்லை.  ஆனால் தங்களைப் போலவே வளர்ந்து கொண்டுருந்த மற்ற போராளிக்குழுக்களுக்கு கிடைத்துக்கொண்டுருந்த முக்கியத்துவம் மனதில் என்ன மாறுதல் உருவாக்கியதோ ஆன்டன் பாலசிங்கம் மூலமாக விடுதலைப்புலிகளுக்கும் தேவையான ஆயுதப்பயிற்சிக்கு ரா மூலமாக ஏற்பாடு செய்யும் பொருட்டு ஆன்டன் பாலசிங்கத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1978 முதல் 1983 வரை சென்னைக்கு ஆன்டன் பாலசிங்கம் வருவதும், இயக்கப் போராளிகளுடன் பழகி, அரசியல் பாடம் நடத்துவதும் போன்ற தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் இடையே நடந்து கொண்டுயிருந்தது.

அப்போது ரா நிகழ்வுகளை, அவர்களின் தொடர்புகளை உருவாக்க முடியாமல் தவித்த பாலசிங்கத்திற்கு அப்போது உதவியர் தமிழ்நாட்டு காவல்துறை உயரதிகாரி அலெக்ஸாண்டர்.  அலெக்ஸாண்டர் வகுத்து கொடுத்த பாதையின்படி நீண்ட கடிதம் ஒன்றை இந்திரா காந்திக்கு பாலசிங்கம் எழுத, ரா அதிகாரிகள் அதன் தொடர்ச்சியாக வந்து சென்னையில் சந்திக்க பட்டும் படாமல் புரிந்துணர்வு உருவாக்கப்பட்டது.  ஒரு வகையில் பார்க்கப்போனால் பிரபாகரன் கூட மற்றவர்களின் வளர்ச்சியினால் வேறுவழியே இல்லாமல் சிக்கிக்கொண்ட மீன் போல் ரா விரித்த வலையில் தானாகவே வந்து மாட்டிக் கொண்டவர் தான்.

எம்.ஜி.ஆர் பார்வையில் பிரபாகரன் என்பது போல் மொத்த ரா உளவுத்துறையின் பார்வையில் மொத்த போராளிக்குழுக்களையும் பிரித்து தனித்தனியாக வளர்ப்பதில் உறுதியாக இருந்தனர்.  அன்றும் இன்றும் போராளிக்குழுக்கள் வளர்வதை விட தங்களுடைய பேச்சை கேட்கும் அளவிற்கு உருவாக்கி வைத்திருக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.

இந்திரா காந்தியின் நேரிடையான பார்வையில் இலங்கைக்கென உருவாக்கப்பட்ட குழுவில் மூவர் இடம் பெற்று இருந்தனர்.  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆர்.என்.ராவ்.  மொத்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் கிரீஷ் சக்சேனா. இவர் ரா உளவுத்துறையின் வெளியுறவு புலனாய்வுத் துறையின் தலைவர்.  மூன்றாவது நபர் சங்கரன் நாயர்.  இவர் வகித்த பதவி பிரதம மந்திரியின் செயலக ஆணையாளராக பணியாற்றிக்கொண்டுருந்தவர்.

" பாதுகாப்பு ஏஜென்சி"  என்றழைக்கப்பட்ட இவர்களின் அதிகாரம் வானளாவிய அதிகாரங்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் பல்வேறு துணை குழுக்கள். நேரிடையாக, மறைமுகமாக.  இவர்களின் மொத்த செயல்பாடுகளும் தமிழ்நாட்டு அரசுக்குக் கூட தெரியாத அளவிற்கு அத்தனை ரகஸ்யமானது.

இவர்களின் முன்னேற்பாடுகள் ஒரு பக்கம்.  ஜி. பார்த்தசாரதியின் சமாதான ராஜதந்திர பேச்சுவார்த்தை மறுபக்கம். ரா வின் ஆயுதப் பயிற்சி ஒத்துழைப்பு அப்போது மூன்று இயக்கங்களுக்கு கிடைத்து பயிற்சிகள் தொடங்கப்பட்டு இருந்தது.  ERRLF. TELO. EROS. இந்த மூன்று இயக்கங்களுக்கும் பொறுப்பாளாராக இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்தவர் மேலே பார்த்த தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன்.  பிரபாகரனை தனக்கு கீழே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சித்து தோல்வி கண்டவர். டெல்லியின் பார்வையில் விடுதலைப்புலிகளை மறைத்தவர்.

1983 ஆம் ஆண்டு ரா உயரதிகாரி தமிழர் சந்திரசேகரன் (மதுரையைச் சேர்ந்தவர்) மூலம், பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, பாண்டிச்சேரியில் வைத்து பேசி முடித்த போது 100 பேர்கள் என இரண்டு குழுக்கள் என மொத்தம் 200 இளைஞர்கள் பயிற்சிக்கென்று ரயில் மார்க்கமாக டெல்லி அடைந்து அங்கிருந்து டேராடூன் சென்றடைவது என்று திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதில் மற்றொரு ஆச்சரியம் ரா உருவாக்கி இருந்த மற்றொரு பிரித்தாளும் சூழ்ச்சி.  விடுதலைப்புலிகளுக்கு உண்டான ஆயுதப்பயிற்சி என்பது, ஏற்கனவே பயிற்சி எடுத்துக்கொண்டுருந்த போராளிக்குழுக்களுக்கு தெரியாது.  ஏன் அந்த மூன்று இயக்க பொறுப்பாளரான சந்திரஹாசனுக்கே தெரியுமா? என்பதே சந்தேகம்.
பிரபாகரன் அனுப்பிய 200 பேர்கள் பெற்ற முறைப்படியான ஆயுதப்பயிற்சி இயக்க வளர்ச்சிக்கு உதவியதே தவிர முழுமையடையவில்லை.  அதிலும் நவீன ரக ஆயுதங்களுக்கான பயிற்சியும் அளிக்கப்படவில்லை.  கொடுத்த ஒன்றிரண்டு ஆயுதங்களும் அத்தனை தூரம் சிறப்பாக இல்லை.  மிகப் பெரிய செலவீனங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் பிரபாகரன் தடுமாறி விழி பிதுங்கிக்கொண்டுருந்த காலம் இது.  சந்திரஹாசன் ரா மூலம் பெறப்படும் நிதி என்பது மற்ற மூன்று இயக்கங்களுக்கு மட்டும் சென்று கொண்டுருந்தது.  இது போக வெளிநாட்டு வாழ் மக்களிடம் மற்ற இயக்கங்கள் பிரபாகரன் குறித்து அவதூறு பரப்பிக்கொண்டுருந்த காரணத்தால் முழுமையான நிதி ஆதாரங்களையும் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை.  கனவுகளை சுமந்து கொண்டுருந்த பிரபாகரனின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்து கொண்டுருந்தது.

அந்த சூழ்நிலையில் தான் (1984) எம்.ஜி.ஆரின் நிதி உதவி என்பது பிரபாகரன் உருவாக்கி இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் மொத்த பின்னடைவுகளை மாற்றி முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்க உதவியது.

அதற்குப் பிறகு வந்த 25 ஆண்டுகளும் பிரபாகரன் வாழ்க்கையில் எந்தப் பெரிதான வீழ்ச்சிகளும் வரவில்லை. தொட்டுக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல்.  வாங்கியவர் செம்மையாக பயன்படுத்தியதும் முக்கிய காரணம்.

Saturday, January 16, 2010

பதினெட்டுபட்டி பஞ்சாயத்து ரா வுகள்

1983 க்குப்பிறகு, இலங்கை "கருப்பு ஜுலை" கோரத் தாண்டவங்களுக்குப் பிறகு, கொத்து கொத்தாக மக்கள் தமிழ்நாட்டில் வந்து இறங்கத் தொடங்கிய பிறகு தான் இந்தியா இலங்கையின் மேல் தன்னுடைய பார்வையை பதித்தது.  அதுவரைக்கும் இலங்கை என்பது அண்டை நாடு.  முதல் பிரதமர் நேரு முதல், சாஸ்திரி தொடர்ந்து இந்திரா காந்தி ஆட்சிக்கு வரும் வரைக்கும் இது தான் நிலவரம்.

அது வரைக்கும் ஐ.பி (இண்டலிஜென்ஸ் பிரோ) என்ற அமைப்பு மட்டுமே இருந்து வந்தது.  ஆனால் சீனாவுடன் நடந்த போரில் உளவு ஓற்றறிதலில் உண்டான குளறுபடிகள், தோல்விகள், அவமானங்கள் என்று ஒன்றன்பின் ஒன்றாக இந்தியா பெற்ற பாடங்கள் அத்தனையும் சுய பரிசோதனை செய்யும் அளவிற்கு அன்னை இந்திரா காந்தியை யோசிக்க வைக்க உருவானது ரா  RAW (ரிசர்ச் அண்ட் அனாலிஸ் விங்க்) என்ற அமைப்பு.  பக்கத்து நாடுகளின் மேல் கண் வைத்து இருத்தல், இந்தியாவிற்குள் உள்ளே உள்ள தீவிரவாத குழுக்களை கலைத்தல், அழித்தல் முடிந்தால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்களை வளர்த்து அவர்களுக்குள்ளே சண்டையை உருவாக்குதல் என்று அவர்களின் புனிதப்பணிகள் எல்லாமே பாகிஸ்தான் நாட்டில் இருந்து பங்களாதேஷ் என்ற நாட்டை பிரித்துக்கொடுக்கும் வரைக்கும் சிறப்பாகத் தான் இருந்தது.
எந்த நாட்டிலும் வாழ்பவர்களுக்கும் புரிந்தோ புரியாமலோ அமெரிக்கா என்பது இன்று வரைக்கும் சொர்க்க தேசம்.  அது போல் உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் அத்தனைக்கும் அமெரிக்காவின் சிஐஏ என்பது அடிவயிற்றை கலக்கும் வஸ்து.  உண்ணவும் வேண்டும்.  அடிவயிறு கலங்கினால் கக்கூஸ் போகாமல் கையை வைத்து அடக்கிக்கொள்ளவும் வேண்டும்.  காரணம் அவர்களின் நோக்கம் என்பது அத்தனை துல்லியமானது.  ஒற்றை இலக்கத்தில் தான் அவர்களின் தோல்வி முயற்சிகள்.  ஆனால் வெற்றிகள் என்பது எப்போதும் எண்ணிக்கையில் அடங்காது.

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் தொத்தல் வத்தல் நாடுகளில் உள்ள அத்தனை உளவு ஸ்தாபனங்களிலும் சிஜஏ இருப்பதும், அந்த நாட்டின் மொத்த முன்னேற்பாடுகளை இருந்த இடத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்வதும் அன்றும் இன்றும் அமெரிக்காவின் தனிச்சிறப்பு.  உளவுத்துறையில் பணிபுரியும் ஒரே நபர் வாழும் நாட்டிடம் ஒரு சம்பளமும், அந்த அதிகாரி சிஜஏ விடமிருந்து சம்பளம் மற்றும் வெகுமதிகள் வாங்கிக்கொண்டு வாழ்வதும் மிகுந்த ஆச்சரியம்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும், நேற்று வரைக்கும் கைது செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகளின் பின்புலத்தை நோண்டிப் பாரத்தால் அங்கு சிஜஏ கைங்கர்யம் தெரியும்.  ஆனால் இதுவெல்லாம் வெகுஜன பத்திரிக்கையில் அந்த அளவிற்கு எளிதாக வந்து விடாது.  அதற்குப் பின்னாலும் பல காரணங்கள் உண்டு.  அண்ட சாரச்சரங்கள் அத்தனை இடங்களிலும் ஆண்டவன் இருக்கின்றான் என்றால் சிலர் அடிக்க வருவீர்கள்.  ஆனால் இந்த சிஜஏ உலக உருண்டை முழுக்க பரவி இருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
இதை படிக்கும் நீங்கள், இந்தியாவின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட மிக முக்கியமான ஏதோ ஒரு துறையில் பணிபுரிந்து கொண்டுருக்கும் பட்சத்தில் உங்களுடன் பழகும் ஒருவர், உங்கள் மொத்த அலுவலகத்தில் ஒருவர் நிச்சயம் சிஜஏ விசுவாசியாக இருந்து தான் ஆக வேண்டும்.  சிரிப்பு வருகிறாதா?  மனதிற்குள் சிரித்துக்கொள்ளுங்கள்.  காலப்போக்கில் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.  இத்தனை விபரமாக இதைக்குறிப்பிடக் காரணம் அந்த அளவிற்கு வல்லமை பெற்றவர்கள் நம்முடைய ரா என்ற அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்தவரே சிஜஏ விசுவாசியாக இருந்து கைது செய்யப்பட்டவர்கள் என்றால் நம்புவீர்களா? முக்கிய காலகட்டத்தில் கோப்புகள் காணாமல் போவதும், அதிகாரிகள் அமைதியாக இருக்கவும் என்ன காரணமாக இருக்க முடியும்? என்பதை உங்களால் இப்போது யூகிக்க முடிகிறதா?

ரா என்ற உளவுத்துறையின் துணை இயக்குநராக பணியாற்றியவர் கே.வி. உன்னிகிருஷ்ணன்.  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தவர். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ்நாட்டுக்கென்று ஒதுக்கப்பட்டவர்.  1962ல் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லை மாவட்டங்களில் உயர் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி, பின்னாளில் கொழும்புவில் நான்கு ஆண்டுகள் இந்திய தூதரகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றியவர்.  கடைசியாக செங்கல்பட்டு மற்று சென்னை காவல் துறை பயிற்சிக் கல்லூரியில் குறுகிய காலம் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணிபுரிந்து விட்டு உளவுத்துறையான ரா வுக்கு இடம் பெயர்ந்தவர்.

தொடக்கத்தில் சொன்னது போல் இலங்கைப் பிரச்சனை தமிழகமெங்கும் 1983க்குப் பிறகு கொழுந்து விட்டு எறியத் தொடங்கிய பிறகு மத்திய அரசாங்கத்திடம் செல்லும் இலங்கை பிரச்சனை குறித்த கோப்புகள் அத்தனையும் ரா கொடுக்கும் செய்திகள் மட்டுமே.  வெளியில் உள்ள மற்ற செய்திகள் அத்தனையும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கும் உதவாதது.  ஆனால் தொடக்கம் முதல் இவர் கையாண்ட ஒவ்வொரு வழக்கும், பிரச்சனைகளும் முடிவே இல்லாமல் நீள ஒவ்வொரு நிலையிலும் சிஜஏ பங்களிப்பும், வெகுமதியும் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு ஐ.பி (IB) யின் புலனாய்வுக்கு உட்பட்டு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பிறகு தான் ஒரு முடிவுக்கு வந்தது.  அப்படி என்றால் நாட்டின் பாதுகாப்பு?  இலங்கை தமிழர்களின் இன்று வரைக்கும் நீண்டுகொண்டுருக்கும் மொத்த பிரச்சனைகள்?

இதில் மற்றொரு ஆச்சரியம் 1979/83 ஆம் ரா வின் இயக்குநராக இருந்த NF சன்டுக் பதவிக்காலம் முடியும் முன்னே காணாமல் போனவர்.  கடைசியில் தேடிப்பார்த்தால் அமெரிக்காவில் குடியேறியிருந்தார்.  இந்த உழுத்துப் போன அமைப்பை வைத்துக்கொண்டு தான் இன்று வரைக்கும் மொத்த இந்தியாவின் பாதுகாப்பும், வெளிநாட்டு கொள்கைகளும் தீர்மானிக்கப்படுகின்றது.  இவர்கள் அத்தனை பேர்களும் நம்மை அந்நிய தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார்களாம்?

                                                       சிவசங்கர மேனன்
இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எந்த இந்திய அதிகாரிகளும் இன்றுவரையிலும் விதிவிலக்கல்ல.  சம்பளம் இந்தியா.  பணி அமெரிக்காவிற்கு.  முடிந்தால் இலங்கை ஆட்சியாளர்களை சந்தோஷப்படுத்துதல்.  அப்படியென்றால் அங்குள்ள தமிழர்கள்?  "கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை" என்ற கதை தான்,

இந்தியாவின் பனி போர்த்திய மலை முகடுகளில், சுவாசிக்கக்கூட வழியில்லாது, சுமக்க முடியாத சுமைகளுடன், அடுத்த நிமிடம் சாவா? வாழ்வா? என்று அனுதினமும் தன்னை அர்பணித்துக்கொண்டுருக்கும் அத்துவான பனிக்காட்டில் வாழும் அந்த தனியொரு வீரனின் தியாகம் அத்தனையும் டெல்லியில்  உள்ள நாலைந்து தறுதலைகளின் தான் தோன்றி போக்கினால் தீர்மானிக்கப்படுகின்றது என்றால் உங்களால் என்ன சொல்லத் தோன்றும் ?

தொடக்கத்தில் தமிழ்நாட்டில், டேராடூனில் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தது, பிரிந்து  செயல்பட்டுக்கொண்டுருந்த போராளிக்குழுக்களுக்கு அவரவர் கொண்டுருந்த மறைமுக ஒப்பந்தப்படி கொடுக்கப்பட்ட கூடுதல் குறைவான மரியாதைகள், அடங்கி நடந்த போது கொடுக்கப்பட்டவைகள், கீழ்ப்படிய மறுத்த போது புடுங்கப்பட்ட உரிமைகள், துரத்தப்பட்ட, கொல்லப்பட்ட போராளிகள் என்று தனியாக ஒரு பாதை செல்லும்.  காரணம் இவையெல்லாம் ராஜ ரகஸ்யங்கள்.

ரா வைப் பொறுத்தவரையில் போராளிகள் என்பவர்கள் இந்தியாவின் அடியாள்கள் அல்லது கூலிப்பட்டாளம்.  நில் என்றால் நிற்க வேண்டும்.  உட்கார் என்றால் படுத்து சாஷ்ட்டாங்கமாக படுத்து வணங்க வேண்டும்.  ஜெயவர்த்னே எப்போதும் பயந்து போய் இருக்க வேண்டும்.  அவருடைய உதவிகள் அத்தனையும் இந்தியாவின் மூலம் மட்டுமே நிறைவேற வேண்டும்.  போராளிகள் என்பவர்கள் ஜெயவர்த்னேவுக்கு வைத்த ஆப்பு.  அவ்வளவு தான்.  இதில் எங்கே தமிழர் ஆதரவு?

டெல்லிக்கு உன்னி கிருஷ்ணன் என்றால் தமிழ்நாட்டுக்கு மோகன்தாஸ்.  இவருக்கு இடது வலது அலெக்ஸ்சாண்டர், வால்டர் தேவாரம்.  கூட்டணி சிறப்பாக இருக்கிறது.  ஆனால் தமிழர்களின் வாழ்க்கை தான் அன்றே பரிதாபமாக மாற்றம் பெறத் தொடங்கியது என்றால் அது தான் நிஜம்.  காரணம் புரிந்து கொள்ள அக்கறையில்லை.  புரிந்தவர்கள் சொன்னால் கேட்கவும் அவர்களுக்கு மனமும் இல்லை.  ஒரு வகையில் இந்தியா கொண்டுருந்த மேலாதிக்க எண்ணங்களின் வெளிப்பாடு, இவர்களைப் போன்ற அதிகாரிகளின் மூலம் நிறைவேற்ற காரணமாக இருந்தது தான் முக்கியமான காரணம்.

சார்க் மாநாட்டில் ஜெயவர்த்னே பெங்களூருக்கு கலந்து கொள்ள வந்த போது இங்கிருந்த அத்தனை போராளிகளும் "கவனிக்க"ப்பட்டார்கள். மொத்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.  தேவையில்லாமல் உள்ளூர் ரௌடிகள் சூளை மேட்டுப் பகுதியில் தகராறு செய்த போது அதைக்காரணம் காட்டியே தேவாரம் மொத்த மனதில் வைத்திருந்த கோபத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.  அதுவே தான் கடைசி வரைக்கும் சந்தன கடத்தல் வீரப்பன் இறப்பு வரைக்கும் நடந்தது.

சட்டம் ஒழுங்கு முக்கியம் என்றால், உள்ளே வாழ்வர்களின் நலமும் முக்கியமாகத் தானே?  அயல்நாட்டு இந்தியர்களின் முதலீடு உள்ளே வர வேண்டும் என்று விரும்புவர்கள் அங்கு அவர்களுக்கு உருவாகும் பிரச்சனைகளை நீக்கி அவர்களுக்கான நல்வாழ்க்கையில் அக்கறை செலுத்துதலும் தேவைதானே? உளவுத்துறை மட்டுமல்ல எந்த அதிகாரவர்க்கத்தினரும் நமக்கேன் இந்த வம்பு என்று ஒதுங்க மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக அரசியலும் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டது. காரணம் படித்தவர்கள் பயந்தாங்கோலிகள்.  பன்றிகள் ஆட்சியாளர்கள்.  அப்புறமென்ன மொத்த அறிவுஜீவுகளும் அரசியல் என்பது சாக்கடை என்று சொல்லி அடுத்த சந்து வழியாக போய்விட வேண்டியது தானே?

கோப்பில் கையெழுத்துப் போடாத காரணத்தால் தண்ணி இல்லா காட்டுக்கு அவரை மாற்றிவிட்டார்கள்?  நமக்கேன் வம்பு என்று அடுத்தவர் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கும் போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் உள்ள அமைச்சர்கள் கூட ஆட்டம் போடத் தொடங்கிவிடுகின்றனர்.  நூறில் நான்கு அதிகாரிகளின் கண்டிப்பு காரணமாகத் தான் இன்று இந்த இந்திய அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டுருக்கிறது.

ரா விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும் அவர்கள் முதலில் செய்த வேலை, இலங்கையில் உள்ள பிரபாகரன் முதல் பத்து பேர்கள் கொண்ட சிறு குழுவரைக்கும் மொத்தமாக தகவல் திரட்டியதும், மொத்த சாதக பாதக அம்சங்களை கணக்கில் கொண்டு அவர்களை கவனித்து வந்ததும் தான்.

ரா வின் முக்கிய குறிக்கோள் எந்தப் போராளிகளும் கம்யூனிச பாதையில் போய் விடக்கூடாது என்பது தான்.  இதற்கென்று தனிப்பட்ட அக்கறை.  " வங்கம் தந்த பாடம் "   என்ற கட்டுரையை பிளாட் அமைப்பு வெளியிட்ட போது ரா அழைத்து எச்சரித்து அவர்கள் உள்ளே உள்ள அமைப்பை சீர்குலைக்க முடிவு செய்தது.    அதே சமயம் ஈராஸ் அமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் பிரிந்ததற்கான காரணம் குறித்து " ஈராஸ் மாஸ்கோ ஆதரவாளர்கள், நாங்கள் மாவோயிஸ்டுகள்"  என்று EPRLF போராளிகள் பேசும் அளவிற்கு அவர்கள் ரா மாற்றி இருந்தனர்.  மிரட்டிய பிறகு ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்தனர்.

தொடக்கம் முதல் எம்.ஜி.ஆருக்கு வெளிப்படையாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு பக்கமும், மறைமுகமாக மறுபக்கம் உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸ்.  அதேபோல் விடுதலைப்புலிகளுக்கு பழ. நெடுமாறன், வக்கில் ராதாகிருஷ்ணன் (மதிமுகவில் இருந்தது மாறி மறுபடியும் உள்ளே வந்து மறுபடியும் மாறி...............?),  ஈராஸ் அமைப்புக்கு பெரியார் தாசன், வைகறைவாணன் என்பவரும் பின்புலமாக செயல்பட்டுக் கொண்டுருந்தனர்.  சந்திரகாசன் என்பவர் டெலோவுக்கும், ஈபிஆர்எல்எப் க்கு பின்புலமாக செயல்பட்டார்.   ரா உளவுத்துறை டெலோ அமைப்புக்கு மற்ற போராளி அமைப்புகளை விட முக்கியத்துவம் கொடுக்க ஒரே காரணம் சந்திரஹாசன் ரா அதிகாரிகளுடன் கொண்ட புரிந்துணர்வு,  அதுவே ஈபிஆர்எல்எப் ஒன்றிணைக்க இந்த இரு அமைப்புக்கும் ரா கொடுத்த முக்கியத்துவம், ஆயுதங்கள், பயிற்சி என்று மூன்று கால் பாய்ச்சலில் போய்க்கொண்டுருக்க கேட்கவா வேண்டும் மற்ற போராளிக்குழுக்களுக்கு.

ஈராஸ் மற்றும் பிளாட் அமைப்பும் வலிய போய் ராவிடம் போய் சிக்கிக்கொண்டது. பின்னாளில் பழ நெடுமாறன் மூலமாக பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் உள்ளே வந்தது.  விரும்பாத பிரபாரகன் வேறு வழியே இல்லாமல் இதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அனுப்பி பயிற்சி எடுக்க வைத்தார்.  ஒரே காரணம் 250 பேர்கள் பெற்ற முறைப்படியான பயிற்சி பின்னால் வரும் மொத்த இளைஞர்களுக்கும் உதவுவதாக இருக்குமே?  அதுவே தான் பின்னாளில் நடந்தது.

ரா வின் திருவிளையாடல் அப்போதே தொடங்கி விட்டது.  முதல்கட்ட பயிற்சி முடிந்ததும், ஈழப் பிரச்சனையை தீவிரப்படுத்தும் பொருட்டு, டெலோ அமைப்பை தூண்டி விட்டு மன்னாரில் 35 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டுருந்த (தாத்தா பாட்டி இரண்டு இளம் பெண்கள்) சிங்கள குடும்பத்தின் மேல் தாக்குதல்களை தொடுக்க, மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையுறுமாக தெருவில் கிடந்தனர்.  பார்த்த பாதிரியார் காப்பாற்றி மருத்துவணையில் கொண்டு வந்து சேர்க்க உள்ளே வந்தவர்கள் மீதம் இருந்த உயிரையும் பறித்தனர்.  தொடங்கியது இலங்கை இராணுவத்தின் கோரத்தாண்டவம்.  மன்னாரில் வாழ்ந்த 400 தமிழ் குடும்பங்களும் சமாதியானார்கள்.  அப்போது தொடங்கிய அகதிக்கூட்டங்கள் இன்று வரையிலும் நின்றபாடில்லை.   தொடங்கியது ரா.  மொத்த வாழ்வுரிமை போராட்டத்தையும் முடிக்க காரணமாக இன்றுவரைக்கும் காரணமாக இருப்பதும் இந்த ராரா தான். இதன் அடிப்படையில் தான் தொடக்கத்தில் பிரபாகரன் சொன்ன வாசகம் " எதிர்காலத்தில் நாங்கள் இதே இந்த இந்தியாவுடன் போர் செய்ய வேண்டியிருக்கலாம்"
அன்று பதினெட்டு பட்டி பஞ்சாயத்து நாட்டமையாக இந்தியா முடிசூட்டிக்கொண்ட கதாபாத்திரத்தை இன்று வரையில் கெட்டியாக பிடித்துக்கொண்டுருக்கிறது ரா என்ற அமைப்பு.  ஆலமரம், சொம்பு என்று எல்லாமே இருக்கிறது.  பஞ்சாயத்து சொல்லும் ஆள் மட்டும் சீனா கையில் இருக்கிறது.