Tuesday, November 10, 2009

நிலமெல்லாம் ரத்தம்

"இறப்பு என்பது சர்வ நிச்சயம்".

தனி விமானத்தில் போய் அத்தனை ஹோமம் செய்த போதும் கூட திருபாய் அம்பானியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  தள்ளிக்கூட போட்டு விட முடியவில்லை. எந்த கையூட்டும் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் கொடுத்தாலும் நிச்சயிக்கப்பட்டது தான்.

"நின்று போய்விடுகின்ற நிச்சயார்த்த நிகழ்ச்சிகள்" போல் மாறிவிடாது.  நெருங்கி விட்டது என்று உணரும் போது உங்கள் உள் உணர்வு உரையாடலும் தொடங்கி விடும். அறிவாளியா? சிந்தனையாளரா? சிறப்பாய் தான் வாழ்ந்தீர்களா? மற்றவர்களுக்கு சிக்கலைத்தவிர வேறு எந்த மலச்சிக்கலும் எனக்குத் தெரியாது?

எல்லாவற்றையும் புடம் போட்டு நகர்த்தி விடும் "நகர்"வு அது.

அந்த நகர்வின் போது உங்களை நாறடித்துவிட்டு தான் உங்கள் ஆத்மா உங்களை விட்டு நகரும். நம்பவேண்டுமென்ற அவஸ்யமில்லை.  நாள் வரும் போது நீங்கள் உணர்த்த கணத்தில் உங்கள் அருகில் யாரும் இருக்க போவதும் இல்லை.

"உள்வாங்கியவர்களின்" வாழ்க்கை அத்தனையும் இதைத்தான் உணர்த்துகிறது. இனத்தின் போராட்டம் அதன் அழிவு என்பது கூட பெரிதாக தெரியவில்லை.  அலறும் குரல்கள் கூட அத்தனை முக்கியமாய் தெரியவில்லை.  ஆனால் அத்தனை அலறல்களையும் ஆட்சிக்காக வாக்குச் சீட்டாக மாற்ற நிணைப்புள்ளவர்களும், உங்கள் நாற்ற வாழ்க்கை தான் எங்கள் நல்ல வாழ்க்கை என்று உள்ளேயே வாழ்ந்து கொண்டுருக்கும் மாக்களை மனிதர்களை எவ்வாறு உணர்வீர்கள்?

பயம் என்பது வெளியில் தெரியாதவரையில், அல்லது  காட்டிக்கொள்ளாத நேரம் வரையிலும் அதற்குப் பெயர் வீரம்.  மொத்தமும் தெரிந்தாலும் முகம் முழுக்க அமைதியுடன் அச்சப்படாமல் முன்னேறுதல் விவேகம்.  வீரத்துடன் வெள்ளைக் கொடி காட்டி உங்களிடம் வந்து சேர்கிறோம் என்றவர்களுக்கும் நடந்த கதி அதோகதி தான்.  அது தான் சிங்கள "பாசம்".  அதற்குக்கூட பின்னால் இருந்தது உண்மையாக உழைத்துவர்களை ஆயாசம் கொள்ள வைத்துவிட்டது.

ஆனால் வீரம், விவேகம் இரண்டும் அறிந்தும் இச்சைகளுடன் மட்டுமே நகர்வது?

அரசியல்.  ஆட்சி, அதிகார ஆசை/வெறி.

அன்றைக்கு ஒவ்வொரு மன்னர்களுக்குள் உள்ளே உள்ளுக்குள் புகைந்த எரிச்சல், பொறாமை, விவேகமற்ற கொள்கைகள் ஒரு புறம்.

ஆதாயம் அடைய முடியாதவர்கள், அவசரமாய் ஆண்டு விட வேண்டும் என்று சிந்தனையில் இருந்தவர்கள்.

கொள்கை வேறுபாடுகள் என்று கபடி ஆட்டம் ஆடிக்கொண்டுருந்தவர்கள் என்று இருந்தவர்கள் அத்தனை பேர்களும், தமிழ் இனத்தையும், தமிழனின் மொத்த பண்பாட்டு, கலாச்சாரத்தையும் இன்று போல் அன்றும் சிதறடித்தார்கள்.
வந்தவர்களிடம் ஆட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மொத்த கொள்கைகளையும் மகிழ்ச்சியுடன் வராக்கடன் போல் ஒப்படைத்து ஓரமாய் அவர்களிடம் அடங்கி வாழ்ந்தார்கள்.

இந்த ஒரு குணத்தினால் மட்டுமே ஏறக்குறைய 2000 ஆண்டுகள் இந்த தமிழனத்தை வந்தவர்கள் போனவர்கள் அத்தனை பேர்களும் ஆண்டனர்.  அள்ளிக்கொண்டும் சென்றனர்.  கொள்ளி வைக்காமல் கொன்றனர். கொள்கை வேறுபாடுகள் என்று சொன்ன குனக்குன்றுகள் உருவான கலப்பினத்தில் காணாமல் போனார்கள்.

ஒரு பக்கம் பிரபாகரன், நம்பிக்கையாளர்கள்.

அவரை வைத்து வியாபாரம் செய்பவர்கள், உணர்ச்சிகளை தூண்டுபவர்கள், துவண்டு போய் நிற்பவர்கள், மானத்தை மறைக்க ஒரு நீள துண்டு கூட இல்லாமல் துடித்துப் போய் வாழ்பவர்கள்.

மறுபக்கம், கருணா, அம்சா, பிள்ளையான், கிருஷ்ணமூர்த்தி, என்று தொடங்கி டக்ளஸ் வரைக்கும்.  இவர்கள் வெளியில் தெரியும் பட்டியல்.
இங்கே இருக்கும் பல பேர்களையும் டக் டக் என்று பயம் இல்லாமல் இந்த பட்டியலில் சேர்க்க முடியும்.

ஏன் இத்தனை நிகழ்வுகள் தமிழன் வாழ்வியல் முழுக்க?

அறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இருக்கிறதா? என்பதை அச்சத்துடன் தான் யோசிக்க வேண்டி உள்ளது?  நடந்த நிகழ்வுகள், நடத்திக் காட்டிய நிகழ்ச்சிகள், அறிந்த பாடங்கள், புரிந்த கொள்கைகள் ஏதுவுமே தமிழனுக்கு பாடம் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் இனி எந்த அம்மியில் வைத்து மை போல் நச்சு கொடுக்க வேண்டும்?

சோழர் ஆட்சி சிறப்பாக இருந்தபோதிலும் (கிபி 900 முதல் 1200) ஓயாமல் நடந்து கொண்டுருந்த போரினால் அத்தனை வெறுப்பும் உருவானது.  விரும்பத்தகாத பல விளைவுகளும் தோன்றியது.

சோழருக்கு பின் வந்த பாண்டிய ஆட்சியும் (கிபி 1200 முதல் 1300) வீழ்ச்சி அடைந்ததற்கும் முக்கிய காரணம் தமிழர்களின் முக்கிய குணமான ஓற்றுமையின்மையே.

மாறவர்மன் குலசேகர பாண்டியன் மறைவுக்குப் பின் அவரின் புதல்வர்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே கடுமையான வாரிசுப் போர் நடந்து.

ஆனால் இன்று நார்வே போல அன்றும் பஞ்சாயத்து பேச கோவூர்கிழார் இருந்தார்.  சோழ மன்னர்களான நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் அன்று அவர் தான் ஒற்றுமைப்படுத்தி உலகறிய அவர்களின் பெருமையையும், தமிழனத்தின் வளர்ச்சியையும் நீண்டு வாழ வழி செய்தார்.

கோவூர்கிழார் இல்லாத காரணத்தால் வீரபாண்டியனிடம் தோற்று ஓடிய சுந்தர பாண்டியன் செய்த காரியம் என்ன தெரியுமா?

படை எடுக்க பயந்து கொண்டுருந்த டில்லி அலாவூதின் கில்ஜீயின் படைத்தலைவன் மாலிக்கா பூரிடம் சென்றடைந்தான்.

பாண்டிய நாட்டுக்கு படையெடுக்க அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்தான்.  செய்து கொடுத்தான்.  படையெடுத்து வந்தவர்கள் அழித்து, மொத்த வளத்தையும் கைப்பற்றியதோடு அல்லாமல், கொடுக்கப்பட்டுருந்த வாக்குறுதியின்படி ஆசையோடு காத்துருந்த சுந்தர பாண்டியனையும் ஆட்சியில் அமரவிடவில்லை.

வரலாறு காணாத கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல், கலப்பினம், மதமாற்றுதல்.  மொத்தத்தில் மொத்த தமிழனத்தையும் ஊதி தள்ளி விழுங்கி ஏப்பம் விட்டார்கள்.

அதனை தொடர்ந்தும் வந்த அத்தனை அந்நிய படையெடுப்புகளும் அட்டகாசமாக தங்களுடைய ராஜபாட்டையை தொடர்ந்தார்கள். நம் முன்னோர்கள் அத்தனை பேர்களும் இவர்கள் பின்னால் தொங்கினார்கள்.

வட இந்திய படையெடுப்புகள், இஸ்லாமியர்கள், மராட்டியர்கள், தெலுங்கு நாயக்கர்கள் என்று தொட்டு தொடர்ந்து கடைசியாக வந்து உள்ளே நுழைந்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள்.

நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.  துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை.  வாழவும் முடியவில்லை.  ஆனால் இன்று போல் அன்று தூக்கம் மொத்தத்தையும் தொலைத்து தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே.

இன்றைக்கும் அன்றைக்கும் என்ன பெரிதான தமிழன் வாழ்வில் முன்னேற்றங்கள்?

ஒவ்வொரு இனமும், போராட்டங்களும் வீழ்ச்சி அடைவதற்கு எத்தனையோ காரணங்களை நீங்கள் வரலாற்றில் படித்து இருக்கலாம். வீரம் இருக்கும்.  அச்சம் ஆச்சரியம் கூட இருக்கும்.  மொத்தத்தில் எல்லாவற்றிலும் எதிர்மறை நியாயங்கள் இருக்கும்.  ஆனால் மொத்தமாக தமிழனின் தொடக்க வரலாற்று தொடங்கி இன்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத வரைக்கும் ஆட்சிகள் அத்தனையும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.

தமிழர்களிடம்  இல்லாத ஒற்றுமையின்மை.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தூதுவளைக்குழுவும் ஒன்றுதான்.  ஒன்றுபடுங்கள். வென்றிடுவோம் என்று நாக்கு வறண்டு கத்தும் ஊதுகுழலும் ஒன்று தான்.

திருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தானே நாம்?

இவர் தான் மொத்த தமிழனத்தின் துரோகி என்று நாம் யாரை சுட்டிக்காட்ட விட முடிகின்றது,

யாதும் ஊரே. யாவரும் கேளீர் என்று பெருமை பேசிவிட்டு அடுத்து தொடர்ந்து வரும் வரியை எளிதில் மறந்து விடுகின்றோம்.

தீதும் நன்றும் பிறர் தர வரா.

ஒற்றுமை இல்லை என்றால் கூட பராவாயில்லை. ஓதுங்கி ஓரமாய் போய் வாழ்ந்து தொலைத்தால் கூட பரவாயில்லை.

வாழ்ந்தாலும் அடி.  இருந்தாலும் அடி.  உள்ளுக்குள்ளேயே இடி முழக்கம் தொடர்ந்து கொண்டுருக்கும் போது இன்று முள்வேலிக்குள் முகவரி அற்று இருக்கிறோம்?  இதுவே நாளை?

 நீடித்து வாழ்ந்து இருந்த தமிழன் வாழ்வியலை , இந்த எழுத்துக்களை புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் படிக்க்கும் அளவிற்கு நகர்த்த நீங்கள் அளிக்கும் ஓட்டு.  இது ஒன்று மட்டும் தான் மற்றவர்களையும் சென்றடையும் வழி.

விழிகளில் வழியும் நீர் விடியலைக் காட்டாமலே போகும்?

தமிழனின் வாழ்வியல் சங்க காலம் முதல் இன்று முகவரியற்று முள்கம்பிகளுக்குப்பின்னால் முடங்கிக்கிடப்பது வரைக்கும் உள்ள தொடர் ஓட்டம்.

Sunday, November 08, 2009

எழிலாய் பழமைபேசி

"சூரியன் அஸ்தமனம் இல்லாத நாடு"  எங்களுடையது என்று இறுமாந்து இருந்தவர்களின் ஆளுமையில் இந்தியாவும் இருந்தது.  தொடக்கத்தில் உள்ளே வந்தவர்கள் நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை.  அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டும் வந்து இறங்கினார்கள்.  கைமாறி வரும் பொருளுக்கும், நேரிடையான கொள்முதல் என்பதன் சூட்சுமம் உணர்ந்தவர்கள் அவர்கள்.
அதனால் தான் சூறாவழியும் சுறாமீன்களும் அவர்களின் எண்ணத்தை தடை போட முடியவில்லை.

அந்த நிமிடம் வரையிலும் இந்தியாவில் மத மாற்றத்தை வலுக்கட்டாயமாக உள்ளே புகுத்தி உண்டு இல்லை என்று படுத்திக்கொண்டுருந்த,   கொள்ளை லாபத்தால் உண்டு வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை டச்சு,பிரெஞ்சு போன்ற பல கெட்டவர்களின் கொட்டமும் அடங்கியது.
நோக்கம் தெளிவாக இருந்தது.

வணிகம். லாபம்.

அதைவிட இருப்பு முக்கியம்.

அவர்கள் பார்வையில் இல்லாதவர்கள், இருப்பவர்கள் என்ற பாகுபாடு எதுவும் தொடக்கத்தில் இல்லை.

ஆனால் "நாங்கள் இப்படித்தான்" என்று வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் நம்முடைய முன்னோர்கள்.

உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள பக்கத்து நிலம் பல ஆண்டுகள் கவனிப்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள்?  கவனிப்பு இருந்தும் தீர்கக முடியாத பங்காளிச் சண்டை காலம் முழுக்க முடிவே இல்லாமல் போய்க்கொண்டுருந்தால்?

நீங்கள் நியாயம் தர்மம் பார்த்துக்கொண்டு ஆசையை உள்ளே அடக்கிக்கொண்டு இருப்பீர்கள்.  ஆனால் இன்றைய தங்கத் தலைவர்கள் அவ்வாறு இருக்க முடியுமா?  அவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு சும்மா இருக்க விடுமா?

உள்ளே வந்தவர்களை " நீங்க தான் சாமி? " என்று கும்பிட கும்பிட குனிய வைத்து "கும்மாங்குத்து" குத்த தொடங்கினார்கள்.  முழுமையாக மூன்று தலைமுறைகள் , ஊருக்கு அனுப்பி, உள்ளே ஆண்டு வந்தவர்கள் அவர்களின் உல்லாச எண்ணத்தில் என்ன உருவாகி இருக்கும்?

" நீங்கள் ஆண்டை சாமி?  நாங்கள் உங்கள் கீழ் அடங்கிப் போக வேண்டியவர்கள்" .

நேரிடையாக சொல்லவில்லை.  ஒருவருக்கொருவர் அடித்து செத்துக்கொண்டு நிரூபித்தார்கள்.

மூன்றாவது தலைமுறையில் தான் பிரிட்டன் அரசாங்கத்தின் கைக்கு இந்தியா போனது.  கிழக்கிந்திய கம்பெனியும் ஓலமோ, ஒப்பாறி மூலமே ஊரைக்கூட்ட வில்லை.  அவர்களின் ஒரே நோக்கம் வணிகம்.  உள்ளே புகைந்து கொண்டுருந்த கலவரம் ஒரு பக்கம்.

சிந்தனைகள் சிதறினால் வணிகமும் சில்லறை கடை போல் ஆகிவிடாதா?

வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர்களின் சிந்தனைகளை ஊன்றி கவனித்துப் பாருங்கள்? நெருக்கடியான சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவு தான் அவர்கள் சிறப்பானவர்களா? இல்லை சில்லறைத்தனமானவர்களா? என்பதை நமக்கு உணர்த்தும்.

இன்றைய ஓலம் ஊரெங்கும் ஒலித்தாலும் நமக்கு நம்முடைய தலைவர்களை அடையாளம் காட்டவில்லையா?

கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டன் ஆட்சியாளர்களும் தெளிவாக புரிந்து கொண்ட காரணத்தால், உருவாக்கிய சிறப்பான திட்டமிடுதல் காரணமாகத்தான்  இங்குள்ள அத்தனை செல்வமும் சிந்தாமல் சிதறாமல் அங்கே போய்ச் சேர்ந்தது.

கிழக்கிந்திய கம்பெனி அன்று விட்டுக்கொடுத்ததால் கெட்டுப்போய்விடவில்லை. அவர்களின் ஒற்றுமை அன்று தொடங்கியது.

இன்று வரைக்கும் அவர்களை ஐ.நா மேஸ்திரி வேலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.  நாம் எப்போதும் சித்தாள் வேலையே போதுமென்று இன்று வரையிலும் ஊடகம் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறோம்.

உணர்ந்தவர்கள், உள்வாங்கியவர்கள்

இன்றுவரையிலும் உலகை ஆண்டு கொண்டுருக்கிறார்கள்.

நாம் உலக வங்கி பார்வையில் ஆட்சி நடத்திக்கொண்டுருக்கிறோம்.

நம்முடைய தமிழினம் ஏறக்குறைய ஆறு கண்டங்களில் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  ஆனால் ஒற்றுமையாக உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?  இருந்து வாழ ஒரு இடம்.  படுத்துக்கொண்டு பார்க்க ஒரு தொலைக்காட்சி. பரவசமாய் படிக்க ஒரு புத்தகம்.  படுக்கும் போது முடிந்தால் அருகில் மனைவி இல்லையேல் ஒரு பானம்.  போதும்.

சுருக்கமாய் வேண்டும். எல்லாமே சுகமாய் இருக்க வேண்டும்.  சுத்தம் என்பது அடுத்தவர் பின்பற்றுவது.  அடிக்க வருகிறான் என்று ஐயோ சாமி, பேஸில் மட்டும் அடிக்காதே என்று தன் கவுரதயைக் காப்பாற்றிக்கொள்வது.

சிறப்பாக சிந்திக்க கற்றுக்கொண்ட அத்தனை தமிழர்களும் வேறு ஒரு தளத்தில் போய் வாழத் தொடங்கி விடுவார்கள்.  காரணம் ஒரு துளி விசம் என்பது மொத்த பாலையும் கெடுத்து விடக்கூடியது என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்.

தன்னை, தன்னுடைய ஒற்றுமையை இனத்தால் உணர்வால் ஒன்றினைந்து வாழ்வதை விட மதத்தால், ஜாதியால் வெளிக்காட்ட விரும்புவன் தமிழன் என்றால் எந்த சந்தேகமும் இல்லை.  அக்கறை இல்லாமல் அக்கரையில் இருந்தால் என்ன?  எனக்கென்ன என்று இங்கே இருந்தால் என்ன?  உள்ளுக்குள்ளே குழி பறிப்பதாகட்டும்?  உன் யோக்கியதை எனக்கு தெரியாதா  என்பதாகட்டும்?
தலைவிதியே என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொள்ளும் போதே தன்னுடன் தன்னுடைய வழித்தோன்றல்களையும் வாழ வழி இல்லாமல் செய்பவன் என்பதை உணர்வதே இல்லை.  அத்தனை தமிழனும் மூன்றே மூன்று கிளை நதிகளில் தான் பயணத்தை தொடங்குகிறான்.

இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவன்.

ஆனால் மூன்று நதிகளாக பிரிந்து பயணத்தை தொடங்கினாலும் ஒரே இடத்தில் சேர்ந்து "தலைவிதியே இதற்கு காரணம்" என்பதை கெட்டியாக பிடித்துக்கொண்ட உழைப்பு என்ற ஓடத்தை விட்டு ஓலத்துடன் பயணம் முழுக்க பரிதவிக்கின்றான்.

" இப்படி இருப்பதற்கு காரணம் நீ தான் காரணம் இது பௌத்தம் சொல்லும் தத்துவம்.   ஆனால் தமிழனின் மொத்த வாழ்வியலிலும் கடைபிடித்துக்கொண்டு வரும் இறைபக்தி கூட சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆமாம்.  தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது "கர்ம மார்க்கம்".

அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்கு பெயர் "ஞான மார்க்கம்".

ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமாக "பக்தி மார்க்கத்தை" தான் மத வேறுபாடுகள் இல்லாமல் அத்தனை தமிழர்களும் விரும்புகிறார்கள்.

அன்றும் இன்றும் என்றும் இந்த "பக்தி மார்க்கத்தை" கெட்டியாக பிடித்துக்கொண்டு பயணிக்கிறார்கள்.  ஆலயத்திற்குள் சென்று போய் கொட்டி விட்டால் போது.  உடனடி தீர்வு கைக்கு வந்து விடும்.  ஆத்ம திருப்தி.  பூரண மகிழ்ச்சி.

இந்த மார்க்கம் கடைபிடிக்கத் தொடங்கிய தமிழர்களைப் பார்த்து தான் அத்தனை மூட நம்பிக்கைகளும் வரிசை கட்டி வந்து நெருங்கி வந்தது.  அவன் எலும்புகளையும் நொறுக்கிவிட்டது.

நம்பிக்கை என்பது போய் மூடநம்பிக்கைகள் அவனை ஆட்சி புரிய ஆரம்பித்தது.  அத்தனை நல்ல மனிதர்களும் போய் நாற மனிதர்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள்.  பின்பற்றுபவன் விடமுடியாமல்.  பின்பற்ற நினைப்பவன் வினாக்குறியோடு?

மதமும் வளரவில்லை.  மார்க்கமும் புரிபடவில்லை.  மூலமும் போய்விட்டது.  முகவரியும் மாறிவிட்டது.

வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கே வழி பிறந்து இருக்கிறது.

ஒவ்வொரு துன்பமான காலகட்டத்திலும் மேலை நாடுகளில் கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், புரட்சிகள், மேன்மையான சிந்தனைகள் உருவானது. மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவியாய் இருந்தது.

ஆனால் இங்கு ஞானிகளும், ரிசிகளும்,வேதங்களும், விற்பனர்களும், வியாக்கியானங்களும், வினோத நம்பிக்கைகளும் தோன்றின.

இந்த வினோத நம்பிக்கைகள் அத்தனையும் உள்ளே உண்மையாக இருந்த சிந்தனைகளையும் மழுங்கடிக்கப்பட்டதாக மாற்றிவிட்டது.

மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் சொன்ன முதன்மையான காரணம் என்ன தெரியுமா?  அத்தனை மக்களையும் கோழையாக மாற்றி விட்டார்.  தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முடியாத மக்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் என்ன?  வாழாமல் போனால் தான் என்ன?

மேலும் மேலும் உங்கள் பணி என்பது சமூகத்தின் பிணி.  போதும் ஐயா என்று சொல்லாமல் குண்டு மூலம் பதில் உரைத்தார்கள்.

எது எளிதோ, எது கடினம் இல்லையோ? அது தான் தமிழனின் முதல் தேர்வாக இருக்கும்.  விழிப்புணர்ச்சி என்பது அத்தனை சீக்கிரம் உள்ளே நுழைந்து விடாது.  அது எத்தனை விடியாத இரவுகளை அறிமுகப்படுத்தினாலும் கூட.

அறிவை கூர்மையாக்கினால் அது ஆத்மாவை சுத்தப்படுத்திவிடும்.  சுகம் இல்லாத, சுகாதாரம் இல்லாத எந்த விசயங்களையும் உள்ளே அனுமதித்து விடாது,  இதனால் தான் இந்த தமிழனின் உணர்ச்சிகளை நன்றாக உணர்ந்த இன்றைய தலைவர்கள் உணர்ச்சியை தூண்டி தூண்டி தூண்டிலில் சிக்கிய புழு போல் மாற்றி வைத்து இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு நாட்கள் இருக்கிறது.  மறக்க வைக்க மனப்பாடம் செய்துள்ள வரிகள் அன்று நம்மிடம் வந்து சேரும்.  அது வரையில் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு அவர்களை தொடர்வோம்?

தமிழனின் வாழ்க்கையை மூவாயிரம் ஆண்டு வாழ்வியலை முயன்ற வரை முட்டி நின்று பார்க்கும் சிந்தனையோட்டம் இது.

Saturday, November 07, 2009

அறிவுத்தேடல்

இன்றும் என்றும் எந்தக் கொடுமையான சூழ்நிலையிலும் கொண்டு போய் தன்னை பொருத்திக்கொண்டாலும் தமிழன் என்பவனால் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு தன்னுடைய ஆளுமை தன்மையை நிலை நாட்டி விட முடியும்.

முட்டி மோதி உள்ளே நுழைந்து வெளிக்காட்டிக் கொள்ள முடியும்.

முடியாத போதும் கூட முயற்சியில் சாதிக்க அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதும் உண்டு.  கலக்கம் என்பது தமிழன் வாழ்வில் அடுத்தவர் உருவாக்குவது தானே அவனுக்கு அவனால் உருவாவது இல்லை.

கடல் கடந்து போய் தட்டு கழுவுவது முதல் கணிணி ஆளுமை வரைக்கும்.

உழைக்காமல் ஊடகத்தின் முன் ஊத்தப்பல் நாற்றத்தோடு பத்து மணி நேரம் அமர்ந்து இருக்கவும் முடியும்.  உடனே முடிக்க வேண்டிய காரியம் இது என்றவுடன் ஓடிப்போய் ஒன்றிவிடுவதும் உண்டு.  உழைக்க தயங்காத இனம் தமிழினம்.

கடல் கடந்து சென்றவர்கள் இன்று வரைக்கும் எதற்கும் கண்கலங்குவது இல்லை.  காரணம் அவர்களே தெரியாத அத்தனை உழைப்பும் , ஆளுமையும் அங்கு தான் இனம் கண்டு கொள்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை மதியம் என்றால் அடுத்த நாற்பது மணி நேரமும் உழைத்தோம் என்று ஓய்வு எடுக்க கும்மாளம் போட கிளம்புவர்கள் மத்தியில் அந்த நாற்பது மணி நேரத்தையும் தனது குடும்பத்துக்காக உழைப்பின் மூலம் தூக்கம் மறந்து குடும்பத்து தொல்லைகளை தூர விரட்டுபவர்களை எவ்வாறு சொல்வீர்கள்?

ஆனால் தொடக்கத்தில் தமிழனத்தின் முன்னோர்கள் வீரத்தின் மூலம் தன்னுடைய ஆளுமையை, ஆண்மையை நிலைநாட்டினார்கள்.  இன்று தமிழனம் தன்னுடைய தனி மனித உழைப்பின் மூலம் நிலை நாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று திடீர் தலைவர்களின் அக்கப்போர் அறிக்கைகளும்,  திடுக்கிடக்கூடிய வார்த்தை அலங்காரங்களும் எதை உணர்த்திக்கொண்டு இருக்கிறது?

அன்று மன்னர்களும், ஆளுமை புரிந்தவர்களின் மேதா விலாசங்கள் எதையும் இன்று வரையிலும் சரியாக புரிந்து கொள்ளப் படாவிட்டாலும் தமிழன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன்.  தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.

காலம் போட்ட அவசர கோலத்தில் இன்று வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி சகிப்புத்தன்மையாக மாற்றிவிட்டுள்ளது.  கத்தி, வாளை தூக்க முடியாதவர்கள் இன்று புத்தியை மட்டும் சுமந்து கொண்டு கடல் கடந்து சென்று கொண்டுருக்கிறார்கள்.

சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைகக்குள் கொண்டு வந்தவன்.  இறுதியாக இமயத்தில் தமிழர் சின்னத்தை பொறித்து கண்ட வெற்றிகளை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.  இவர் தான் உலகத்தின் முதல் அணையை உருவாக்கி கல்லணையை காவிரிக்குக் குறுக்கே கட்டியவர்.

பூலித்தேவன் (18ம் நூற்றாண்டு) வெள்ளையருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து நின்ற போது அவனை அழித்தே தீருவதென்று வெள்ளை அதிகாரி ஹெரான், பெரும்படைகளுடன் வந்தான்.  அவனுடன் மற்ற தளபதிகள், கும்பனி படைகள் (நம்மவர்கள்), தளபதி கான்சாகிப் என்கிற மருதநாயகம், நவாப் முகமதலியின் படைகள், தலைவன் மகபூல்கான் போன்ற கூட்டணி படைகளும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டது.

ஒற்றுமை என்பது மற்ற இனத்தை விட நம்மவர்களின் பெரிய குறைபாடு என்பதை அன்று முதல் இன்று வரையிலும் நாம் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்?

ஆனால் இவர்கள் அத்தனை வைத்திருந்த அத்தனை நவீன ரக ஆயுதங்கள், பெரும்படை பலம் என அத்தனையும் தன்னுடைய மன உறுதியால் தன்னுடைய சுத்தமான வீரத்தால் விரட்டி அடித்தான்.  கடைசியில் வெள்ளையர் நீ கப்பம் தரவேண்டாம்.  தருவதாக மட்டும் ஒத்துக்கொள்.   காரணம் நீ மறுப்பதாக தெரிந்தால் மற்ற அனைவரும் அதேபோல் மறுப்பார்கள் என்றார்.

இது வரலாற்று உண்மை.  இப்போது புரியுமே குறைந்த வீரர்கள். நிறைந்த வீரம்.  கதறடித்த கட்டுறுதி.

காரணம் தமிழனின் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது.  எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக இருந்தது தமிழினத்தில் மட்டுமே.  வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு காலத்திலும், ஒரு ராஜாவோ, ஒரு நாயகனோ நம் இனத்தை அந்த அளவிற்கு ஆளுமை செய்து இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் சிதறடிக்கப்பட் ஜப்பான் இன்று ஒரு வணிக வல்லரசாக உருவானது. இதை நாம் இன்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

கிரேக்கம், ரோமானியத்தை முன்னோடியாக வைத்து முன்னேறினார்கள்.  ஐரோப்பியர்கள் ஜப்பானியரை காட்டியே சீன இனம் உயர்ந்தது.  அரேபியரைக் காட்டியே யூத இனம் உயர்ந்தது.  ஆங்கிலேயர்களின் வளர்ச்சியைக் காட்டியயே ஜெர்மானிய இனம் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் இன்று தமிழனுக்கு என்று நாடும் இல்லை.  தமிழனை டெல்லியில் நாடுவாரும் இல்லை.

நடுக்கடலில் உணவு ஏற்றிச் சென்ற கப்பலைப் போல, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் நாங்கள் போகத்தயார் என்று நடுக்கடலில் அபயம் கேட்டுக்கொண்டுருப்பவர்களைப் போல நம் தமிழினத்தில் ஒலியும் காற்றில் தான் கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது.

நாடு நல்ல சூழ்நிலையில் இருந்தாலும் நயவஞ்சகத்தால் நல்லதைத் தவிர அத்தனையும் செய்ய முடிகின்ற தலைவர்களால் தமிழினத்தின் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்ப முடியும்?
இன்று பெரிய வெற்றிடம்.
காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும் உண்மையானவர்களாக இல்லை.

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்கள்.  இல்லையேல் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள்.  ஒவ்வொரு தலைவரின் பங்களிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலகத்தில் இருக்கும் தமிழர்களின் பாதிப்பு இன்று வரையிலும் ஏன் ஓலமாய் நம் காதில் வந்து ஒலிக்கின்றது?
முன்னோர்களான மன்னராக இருக்கட்டும்.  ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும்.  அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது.  தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள்.

வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீட அல்ல.  முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செய்ல்களும் செய்தவர்கள் அல்ல.  அவர்களின் ஆளுமை சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.

அன்று வனத்தில் வாழ்க்கை அமைந்த முன்னோர்கள் நறுமணங்களையும் சுவாசித்து சுகமாகவும் வாழ்ந்தார்கள்.  சுகாதாரமாகவும் வாழ்ந்தார்கள்.
இன்று வனமும் அழிந்து கொண்டே வருகின்றது.  மனமும் இருண்டு கொண்டே தொடர்கின்றது.

வனத்தை,தேயிலைத் தோட்டத்தை உருவாக்கியவர்கள் தேம்பி அழக்கூட தெம்பில்லாமல் முள் கம்பிகளுக்கு பின்னால் முகவரி இழந்து வாழ்க்கை எனபதை வாழ முடியாமல் இறப்பு வராதா? என்று ஏங்குகிறார்கள்.

ஆனால் முன்னோர்களாக வாழ்ந்த மூதாதையர்கள் விவேகம் என்று கருத்தில் கொண்டு நம் இனத்தை கதற விட்டது இல்லை.  இனம் முக்கியம்.  அதைவிட வளர்த்து உணர வைக்க வேண்டிய இனமான உணர்வு முக்கியம்.

உணர்ந்து இருந்தால் உணர்த்திக் காட்டியவர்கள் இன்று இருந்து இருந்தால்   ஐந்து லிட்டர் தண்ணீர் கிடைக்காமல் விக்கிக்கொண்டு ராணுவ வீரர்களிடம் தன்னை தொலைக்க வேண்டியதும் இல்லை.

அறிவைத் தேடு.  அது தான் உன் நம்பிக்கை.  வேண்டாம் இந்த மூட நம்பிக்கை  என்றவர் தந்தையாய் மறைந்து விட்டார்.  படிடா.  அது தான்டா சொத்து.  உன் கர்மத்தை போக்கக்கூடியது அதுமட்டும் தான் என்றவர் கர்மவீரராக காட்சியாக சிலையாக நிற்கிறார்.
இதயத்தில் இடம் பெற்றவர்களும், இன்னலை தீர்க்க வந்து விட்டேன் என்றவர்களும் நடத்தும் ஊடகப்போரில் உங்களையும் என்னையும் எங்கே போய் தேடப்போகிறார்கள்?

அவர்கள் தொலைந்து போயே நாளாகிவிட்டது.

தமிழனின் வாழ்வியல் தடங்கள்.  தொடக்கம் முதல் இன்றைய முடக்கம் வரைக்கும்.

சிந்தனையோட்டம் சரியென்றால் ஓட்டுப்பட்டையின் மூலம் முன்னெடுத்து உணர்வை உள்வாங்குவோம்.

தவறென்றால் விமர்சித்து விரும்பாதவைகள் இல்லாமை ஆக்குவோம்.