Showing posts with label 375 வது பதிவு. Show all posts
Showing posts with label 375 வது பதிவு. Show all posts

Sunday, May 13, 2012

நிறையவே பொதுநலம்

எழுதுவதை நிறுத்தி முழுமையாக நான்கு மாதங்கள் முடிந்து விட்டது.  இது போன்ற இடைவெளியை நான் ஒவ்வொரு முறையும் கடைபிடித்தாலும் இந்த முறை இணையம் பகக்கம் வரவே முடியாத சூழ்நிலையில் வாழ்க்கை வேறொரு பாதையில் பயணிக்க வைத்துள்ளது. . வாழ்வில் அடைய வேண்டிய உயர்பொறுப்புகள் நம்மை வந்த சேரும் போது அதற்காக நாம் இழக்க வேண்டியது ஏராளம் என்பதை இந்த நான்கு மாதங்கள் நிறையவே புரிய வைத்துள்ளது.

எழுதத் தொடங்கியது முதல் வாழ்க்கை ரொம்பவே சுவாசியமாகவே இருந்தது.  எந்த கவலையென்றாலும், எது குறித்தும் நினைத்த நேரத்தில் எழுத முடியும் என்ற நம்பிக்கையில் பார்க்கும், பழகும் மனிதர்கள் அத்தனை பேர்களும் சுவராசியமானவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மனதிற்குள் எப்போது ஒரு பக்கம் டகடகவென்று டைப்ரைட்டர் சப்தம் உள்ளூற ஓடிக் கொண்டேயிருக்கும்.  காணும் காட்சிகள் எழுத்தாக மாறிக் கொண்டேயிருக்கும்.  இரவு நேரத்தில் பதிவுகளாக மாறி விடும். ஆனால் இந்த முறை எழுதுவதை நிறுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை. 

தினந்தோறும் பத்து பதினைந்து அனுபவ்ங்கள் கிடைத்தால் நம்மால் யோசிக்க முடியும்.  அதுவே நிமிடத்திற்கொரு முறை புதுப்புது அனுபவங்களாக கிடைத்துக் கொண்டேயிருக்க எதைப்பற்றி எழுத முடியும்.  அடுத்தடுத்து என்று தாவி ஓடிக் கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது. இந்திய ஜனநாயகம் என்ற கேலிக்கூத்தில் உள்ளூர் தொழில் வாய்ப்புகளை ஒழித்த தீருவோம் என்று மத்திய மாநில அரசாங்கம் கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலையில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள மிகுதியாக போராட வேண்டியதாக உள்ளது. மின்தடை ஒருப்க்கம்.  மூச்சு முட்டும் அரசாங்க கொள்கைகள் மறுபக்கம்.  எல்லாமே மண்ணு மோகனின் கைங்கர்யம். அவரின் பெண்கள் வெளிநாட்டில் வசதியாக இருப்பதைப் போல இங்குள்ளவர்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலையாட்களாக இருந்து விட்டால் உள் நாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் போய் விடும் என்ற நல்ல எண்ணமாக நாம் எடுத்துக் கொள்வோம்.

ஒரு நிறுவனம். பத்தொன்பது துறை. பல்வேறு கிளைப்பிரிவுகள். ஏராளமான பணியாளர்கள். நிறுவன ஊழியர்கள் என்று ஒவ்வொரு நொடியும் நம்முடைய ந்யூரான்களுக்கு வேலை வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இரண்டு நாட்களாக எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இன்று நண்பர் உமர் அழைத்து நீண்ட நேரம் எப்போதும் போல பேசிக்கொண்டிருந்தார். திடீர் என்று அழைப்பேன்.  மே 17 இயக்க செயல்பாடுகளை விசாரித்து தெரிந்து கொள்வேன்.  இன்று பேசும் போது மே 17 இயக்க ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தார் சென்ற வருட்ம் நண்பர்களின் நிதியளிப்பு உதவியாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.

மே 17 இயக்கம் திருமுருகனை, உமருடன் சென்னையில் ஒரு அவசர சூழ்நிலையில் நண்பர் ராஜராஜனுடன் சந்தித்தேன். சென்னை உயர்நீதிமன்றம் மரச்சோலைகளுக்கிடையே பொறுமையாக அமர்ந்து நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டேயிருந்தேன்.  அதற்கு சில நாட்கள் முன்பாக திருமுருகன் என்னுடன் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ஈழ இனப்படுகொலைக்குப் பின்னால் உள்ள சர்வதேச நாடுகளின் சுயநல வியாபார ஒப்பந்தங்களின் தொடரை படித்து சிலாகித்து பேசினார். என்னை அழைத்துச் சென்ற ராஜராஜன் என் குணாதிசியம் தெரிந்து ஜீ திருமுருகனிடம் பொறுமையாக பேசுங்க என்று சொல்லியிருந்தார். காரணம் திருமுருகனை சந்திக்கும் முன்பே உமருடன் ஈழம் தொடர்பாக, மே 17 இயக்கம் சார்பான எனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விடலாம் என்று மனதில் வைத்திருந்தேன்.  ஆனால் உரையாடல் பொறுமையாக நகர்ந்தது.

நான் திருமுருகனிடம் பேசிக் கொண்டிருந்த போது உமர் நீதிமன்றங்களின் வெளியே தெரிந்த அத்தனை வக்கில்களிடம் கொண்டு வந்திருந்த அத்தனை நோட்டீஸ்களையும் (நடந்து முடிந்த மெரினா கடற்கரையில் ஒன்று கூடல் நிகழ்ச்சிகாக) சேர்ப்பததில் குறியாக இருந்தார். நானும் அன்று மாலை சென்னையில் மெரினாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  அன்று அவசரத்தில் திருமுருகனிடம் பேச முடியாத பல விசயங்களை இன்று அலைபேசியில் உமருடன் பேசும் கேள்வியாகக் கேட்டேன்.  என்னுடைய ஒரே கேள்வி,

இது போன்ற நிகழ்ச்சிகளினால் ஈழ மக்களுக்கு என்ன லாபம்? வாழ்வு இழந்து நிற்கும் அவர்களுக்கு இது எவ்வகையில் உதவும்?  

காரணம் கடந்த மூன்று வருடங்களில் ஈழம் சார்ந்த நான் படித்த புத்தகங்கள் எண்ணில் அடங்காதது. நாலைந்து நாட்களுக்கு முன்பாக நிறுவனத்தில்  மாதம் ஒரு முறை இலங்கைக்கு சென்று வரும் மனிதவள துறை சார்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.  மதுரையைச் சேர்ந்த அவர் அங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணிபுரிந்து கொண்டுருக்கிறார். என்னை விட பிரபாகரன் மேல் பற்றுள்ளவர். ஆனால் வெறித்தனம் இல்லாமல் உண்மையை ஆராயும் அக்கறை கொண்டவர்.இலங்கையில் உள்ள அத்தனை நிறுவனங்களுக்கு சென்று வருவதோடு அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் என்று அத்தனை பேர்களிடம் பேசி உண்மை நிலவரங்களை ஆராய்ந்து கொண்டிருப்பவர். என்னதான் பேசினாலும் மிகப் பெரிய இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கிறது. எந்த சிங்களரும் நடந்து கொண்டிருக்கும் ராஜபக்ஷே அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசத் தயாராக இல்லை என்பது மட்டும் சர்வ நிச்சயமாக தெரிகின்றது.  ஆனால் அத்தனையும் தனது குடும்ப சர்வாதிகாரத்தின் மூலம் ராஜபக்ஷே இன்று வரையிலும் சாதித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்று வரை ஈழம் குறித்து என்ன யோசித்தாலும் குழப்பம் தான் மிஞ்சுகின்றது.  துப்பறியும் தொடர் போலத்தான் முடிவே இல்லாமல் போய் இன்று கலைஞர் டெசோ என்று ஒரு புதிய புராணத்தை தொடங்கியுள்ளார்.  பாவம் ஈழ மக்கள்.  அவர்களை ஊறுகாய் போய இங்குள்ள ஒவ்வொரு அரசியல் வியாபாரிகளும் நக்கி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் தமிழ்நாட்டிற்குள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களையும், ஈழத்திற்குள்ளே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் எந்த விடிவு காலமும் வந்தபாடில்லை.  

வெறும் காட்சிகளாக, செய்திகளாக மாறி அனுதாபமாக மாறி இன்று அடப் போங்கப்பா...... என்று சாராசரி தமிழர்களுக்கு ஒரு சுவாரசியம் இல்லாத துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.  

ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கின்றேன்.  நாம் எடுத்த முடிவு எத்தனை தவறானது என்பதை மன்மோகனும் சோனியாவும் ஏதொவாரு சமயத்தில் உணர்வார்கள்.

அவர்களுக்கும் ராஜபக்ஷேவுக்கும் அடிப்பொடியாகவும் இருந்து தரகு வேலை பார்த்தவர்களும், இன்று வரைக்கும் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் காலம் நல்ல பாடத்தை கற்பிக்கும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.

திருமுருகன் என்னுடன் பேசும் போதும் சரி, இன்று உமர் என்னுடன் உரையாடிய போதும் சரி, மே 17 இயக்க செயல்பாடுகள் குறித்து பொறுமையாக பல விசயங்களை புரியவைத்தார்.  இதையே அவர்களின் மே 17 இயக்க வலைதளத்திலும்  எழுதியுள்ளார்கள்.

கடந்து போன நான்கு மாதங்களில் உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிய நேரமில்லாமல் என்னுடைய பணிச்சுமையில் பலவற்றை மறந்துள்ளேன்.  மொத்தத்தில் பார்த்தால் எல்லாமே என் சுயநலம் சார்ந்த வாழ்க்கைக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் சுயநலமில்லாமல் மே 17 இயக்க நண்பர்கள் தங்களால் முடிந்த கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மே 17 இயக்க நண்பர்கள் நடந்து முடிந்த ஈழப் படுகொலையை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களால் ஆன பல முன்னெடுப்புகளை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளின் மூலம் கவன ஈர்ப்பு மூலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஈழ இனப் படுகொலையை ஏதோவொரு விதத்தில் உலக நாடுகளுக்கு தூதரக செய்திகள் வாயிலாகவும் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இனப்படுகொலையென்பது எந்த சூழ்நிலையிலும் நீர்த்துப் போய்விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

இவர்களை, இவர்களின் நோக்கத்தினை, இந்த இயக்கத்தினை நாம் தாராளமாக விமர்சிக்கலாம், பாராட்டலாம்,  முடிந்தால் நிதியளிக்கலாம்.  காரணம் ஈழம் சார்ந்தவர்களிடம்,  புலம் பெயர்ந்து வாழும் ஈழ மக்களிடமும்  எந்த நிதியை வாங்கக்கூடாது என்பதை தொடக்கம் முதல் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார்கள்.  மொத்தத்தில் சென்ற முறை மெரினாவில் கூடிய போது அதற்கான மொத்த செலவு தொகையை என் கையில் உமர் கொடுத்து வைத்து செலவளிக்கச் சொன்னார்.

உமரை முதன் முதலாக அப்போது தான் சந்தித்தேன். அவர் கொடுத்த பொறுப்பு கொஞ்சமல்ல நிறையவே அச்சப்பட வைத்தது.  காரணம் அங்கங்கே உளவுத்துறை அதிகாரிகளும் இயக்க நண்பர்களின் செயல்பாடுகளை மோப்பம் பிடித்தப்படியே இருந்தனர். ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.

அப்போது தான் தெரிந்தது கைக்காசை செலவு செய்து, கடன் வாங்கி, மொத்தமாக கடன் சுமைகளில் தான் இந்த இயக்க முன்னெடுப்புகளை நடத்திக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் ஆதரவை அளிக்கவும்.  இணையத்தில் உங்கள் வாயிலாகவும் இந்த நிகழ்ச்சி குறித்து எழுதலாம்.  ஆதரவு என்பது கலந்து கொள்வதைப் போல அதற்குண்டான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் வழங்கலாம்.

இனி தொடர்ந்து நிறைய பேசுவோம்.

மே 17 இயக்கத்தின் வலைதளம்


தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்