Showing posts with label விஜய் மல்லையா. Show all posts
Showing posts with label விஜய் மல்லையா. Show all posts

Saturday, August 25, 2012

விஜய் மல்லையா கொடுத்ததும் - திறக்காத கதவுகளும்


"இப்ப கொஞ்சம் நேரம் சரியில்லப்பா...". 

இப்போது இதுவொரு சாதாரண வாக்கியமாகி விட்டது, ஆடி முடிந்து ஆவணி வந்தா டாப்புங்ற மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கணக்கு. நாட்டை ஆளும் சக்திவாய்ந்த அமைச்சர்கள் முதல் அடுத்தநாள் சோத்துக்கு காத்திருப்பவர் வரைக்கும் தினந்தோறும் நல்ல நேரத்திற்காகத் தான் காத்துக் கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் எதிர்பார்த்தது நடக்காத போது இறுதியில் சொல்வதும் இப்படித்தான் இருக்கிறது, 

விஜய் மல்லையா (ஆகஸ்ட் 25) இன்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு பரிகாரமாக தங்ககதவு (80 லட்சம்) செய்து கொடுத்த கதவுகளை பார்த்த போது பரிகாரத்திற்கும் எதார்த்ததிற்கும் உள்ள வித்யாசங்களை நம்மால் உணரமுடிகின்றது, 

Liquor baron என்றால் நாலைந்து அர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம், சாராய சக்ரவர்த்தி, சாராய சாம்ராஜ்யம், சாராய தொழிலதிபர், லிக்கர் மேக்னெட் என்று நமக்கு தோன்றிய வகையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்,  சபரிமலை ஐயப்பன் முதல் இன்று இந்த கர்நாடக கோவில் வரைக்கும் மல்லையாவும் எதை எதையோ கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். ஆட்சியாளர்களுக்கு தேர்தல் சமயங்களில் கொடுத்தது போக மீதி இருப்பதை இப்படி கோவிலுக்கு கொண்டு போய் கொடுத்து விடுகிறார் போலும், ஆனால் கிங்பிஷர் விமான ஓட்டிகளுக்கு மட்டும் மாதமானால் சரியான தேதிக்கு சம்பளம் மட்டும் அவரால் கொடுக்க முடியவில்லை. 

விஜய் மல்லையா பெட்ரோல் கேட்டுப் போனால் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவனங்களும் உள்ளே வராதே என்று கதவை சாத்துகிறார்கள்,  வங்கி மக்களோ அலறி ஓடுகிறார்கள்,  இவரிடம் வாங்கி தின்ன பாவத்திற்காக மட்டும் அமைச்சர் பெருமக்கள் கொடுத்த காசுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகவே கூவினார்கள்,  ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை,  பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை.  முறைப்படி தீர்ப்பவர்கள் எவரும் அருகிலும் இல்லை.  இவரை நம்பி முக்காடு போட்டவர்கள் எத்தனை பேர்களோ? 

சாரயம் குடித்தவனை தப்பாக பார்த்த காலம் போய் அது கௌரவத்தின் அடிப்படையில் பார்க்கப்படுவதால் சாராய அதிபருக்கு கோவிலுக்குள் இருக்கும் சாமியே வந்து வரவேற்பு அளிக்கும் போல. இது அம்பானி முதல் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதி முதலாளிகள் வரைக்கும் இப்படித்தான் கோவிலில் கொண்டு போய் கொட்டுகிறார்கள்.  ஆனால் தங்கள் நிறுவனம் வளர காரணமாக இருக்கும் எவரையும் கண்டு கொள்ளக்கூட தயாராய் இல்லை.

இன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியும் வலையில் சிக்கவைத்து விட வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமியும் தலைகீழாக நின்று கொண்டு ஒவ்வொரு அஸ்திரமாக ஏவிக் கொண்டே தான் இருக்கிறார்,  ஆனால் அவர் குடும்பமோ ஊர் ஊராக ஒவ்வொரு கோவிலாக அலைந்து கொண்டுருக்கிறார்கள், காரைக்குடிக்கு அருகே உள்ள சிதம்பரத்திற்கு சொந்தமான மானகிரி பண்ணை வீட்டிலும் ஏதோவொரு யாகம் பூஜைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது,  இவர் தான் ஜெயலலிதாவைப் பார்த்து யாகத்தை நம்பும் வரைக்கும் அவருக்கு விமோசனம் இல்லை என்றார், ஒரு வேளை அவர் விரும்பியுள்ள பிரதமர் பதவி கிடைப்பதற்காக குடும்பம் அலைகின்றனரோ? ஆனாலும் விடாது கருப்பாய் அவரை ஒவ்வொன்றாக துரத்திக் கொண்டேயிருக்கிறது.  

தொடக்கம் முதல் ஜெயலலிதா பூஜை ப்ரியர்,  நடந்தால் பூஜை, உட்கார்ந்தால் யாகம் என்று அவர் மூலம் தமிழ்நாட்டில் பாழடைந்த பல கோவில்கள் புதிய அவதாரங்களாக சுற்றுலா தளங்களாக மாறியது, எதிரியை அழிக்க என்று இவர் யாகத்தில் கொட்டிய மிளகாயக்கு புதிய பார்வை கிடைத்தது, இந்த யாகத்தினால் இன்று அந்த கோவிலைச் சுற்றிலும் மிளகாய்க்கு சரியான கிராக்கி,  ஆனால் எதிரியான கலைஞர் அழிந்தாரா? என்றெல்லாம் கேட்கக்கூடாது, 

ஆனாலும் இன்று ஜெயலலிதாவோ கலைஞருக்கு பாடம் எடுக்கக்கூடிய தகுதி வாய்நத நபராக மாறி அசராமல் கோர்டு வாசலில் சிக்ஸராக விளாசித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்,  சாட்சிகள் ஓடி ஒளிகின்றார்கள், பிறழ் சாட்சியாக மாறுகிறார்கள்,  உச்சகட்டமாக அரசு வழக்குரைஞரே என்னை ஆளை விட்டால் போதும் என்று ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் காட்சியெல்லாம் அரங்கேறிக் கொண்டுருக்கிறது, வாய்தா மேல் வாய்தா வாங்கி வாய்தா ராணியாகிக் கொண்டுருக்கிறார்,  ஆனால் இன்று வரையிலும் அவர் செய்யும் பூஜை புனஸ்காரங்கள் குறைந்தபாடில்லை,

இது போன்ற தொந்தரவுகள் கலைஞருக்கு இல்லை,  அவர் சார்பாகத்தான் குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களும் உலகத்தில் உள்ள அத்தனை கோவில்களுக்கும் சென்று நேர்த்திக்கடன் செய்து விடுகின்றார்களே?

சோனியாவுக்கு பிரச்சனையே இல்லை,  இத்தாலியில் உள்ள கோவில்களைப் பற்றி நமக்கு தெரிய வாய்ப்பில்லை,  வீட்டுக்குள் இருந்து கொண்டு ஜெபிக்கின்றாரா என்று தெரியவில்லை,  மன்மோகன் சிங் அதற்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துருக்கக்கூடும், 

ஆனால் பிரச்சனைகளை உருவாக்குபவர்களும், பிரச்சனையில் சிக்கியவர்களும், சிக்கப் போகின்றோம் என்ற தெரிந்து வைத்திருப்பவர்களும் மறக்காமல் ஒன்றை செய்யத் தவறுவதில்லை,  யாகம் வளர்ப்பது, கோவில் கோவிலாக செல்வது, அன்னதானம், கல்யாணம் செய்வதற்களுக்கே மறுபடியும் கல்யாணம் செய்து வைப்பது.  எதுவுமே முடியாவிட்டால் இருக்கவே இருக்கு பரிகாரம்,  இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு ஆஸ்தான ஜோதிடர்களும் மாநிலம் விட்டு மாநிலம் பறந்து சென்றாலும் நேரம் போதவில்லை என்ற நிலையில் சேவையாற்றிக் கொண்டுருக்கிறார்கள்,  இப்போது நாட்டில் மருத்துவர்களை விட இந்த ஜோதிடர்களுக்குத் தான் அதிக கிராக்கியாக இருக்கிறது, 

தற்போது கம்பி எண்ணிக் கொண்டுருக்கும் பிஆர்பி நிறுவன அதிபர் பழனிச்சாமியும் இது போன்ற அதிக நம்பிக்கை கொண்டவர் தான்,  அவருக்கு பிடித்த எண் 56,  அவர் பிறந்த வருடமும் 1956 என்பதால் சற்று கூடுதல் பாசம் போல, அவரின் தொழில் ரீதியான ஒவ்வொரு முடிவுகளுமே ஜோதிடர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்படுவதும் இல்லையாம்,  என்ன செய்வது?  56 வயது நடக்கும் இப்போது தான் அத்தனையும் தலைகீழாக போய்விட்டது,

ஒருவேளை பழனிச்சாமியின் நேரம் பார்த்த ஜோதிடரின் மனதை கிரகங்கள் தப்பாக மாற்றியிருக்குமோ?

அறம் என்பதும் பக்தி என்பதும் ஒன்றோடு ஒன்று கலந்த உடன்பிறவா அண்ணன் தம்பிகள்,  ஓழுக்கமாக வாழ் என்பதற்காக உருவாக்கப்பட்ட போதனைகள் அத்தனையும் தொடக்கம் முதல் பக்தி என்ற தேன் கலந்து கொடுக்கப்பட்டது.  "தப்பு செய்யாதே. சாமி கண்ணை குத்தி விடும்" என்று குழந்தைகளுக்கு கதை சொல்வதில் தொடங்கி "அவன் செய்த பாவத்திற்கு தான் இப்படி ஆயிட்டான்" என்று சுட்டிக்காட்டப்படுவதும் வரைக்கும் இந்த அண்ணன் தம்பிகளின் உறவு ஏதோவொரு வகையில் பாசகார பயலுகளாகவே இருந்தார்கள், 

ஆனால் காலம் மாற மாற இந்த அண்ணன் தம்பிகளுக்குள் மக்கள் பிரிவினையை உருவாக்கி விட்டார்கள்,  பெரிய தப்பு செய்தால் அதற்கு ஒரு விதமான பரிகாரம், சின்னதென்றால் அதுக்கு ஒரு மாதிரி, மொத்தத்தில் அது தவ்று என்று உணரத் தேவையில்லை, அடுத்த முறை மாட்டாமல் செய்து விடு என்பதாக மற்றவர்கள் சொல்லிக் கொடுக்க அப்படித்தான் உலகம் நகர்கின்றது, மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம், பரிகாரம் என்பது பாவ மன்னிப்பாக மாறுகின்றது,  அவ்வளவுதான், இன்று இறை பக்தி என்பதே ஒரு ஃபேஷனாகி விட்டது,

இறை பக்தி என்பதன் மூலம் கலந்து கொடுத்த பயமுறுத்தல்கள் போன்ற எந்த பப்புகளும் இன்று மக்களிடம் வேகாது, காரணம் மக்கள் பக்தியையும் ஒழுக்கத்தையும் தனித்தனியாக பிரித்து விட்டார்கள்.  பக்தி ஒரு பக்கம், வாழ்வதற்காக செய்ய வேண்டிய நடைமுறை எதார்த்தம் என்பது மறுபக்கம்.

எந்த தப்பான் காரியங்களும் இன்று எவரையும் உறுத்துவதே இல்லை, ஊழல் புகாரில் மாட்டியவர்கள் என்றால் திருடன் என்று தானே அர்த்தம்.  எவராவது முகம் கருத்துப் போய் புகைப்படத்தில் போஸ் கொடுக்கின்றார்களா?  வாயெல்லாம் பல்லாகத்தான் கையாட்டிக் கொண்டு செல்கிறார்கள், படிப்பவனுக்கும், பார்ப்பவனுக்கும் கோபம் வந்து பார்த்துருக்கிறீர்களா? 

தேனை எடுத்தவன் நக்காமலா போவான்? என்று இயல்பாக எடுத்துக் கொண்டு போக அடுத்து வருபவன் அகாய சூரனாக மாறிக் கொண்டுருக்கின்றான்.