Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

Sunday, August 27, 2023

நடிகர் விஜயகாந்த் - அரசியல் தலைவர் விஜயகாந்த் பிறந்த வாழ்த்துகள்.

 தேமுதிக நிறுவனர் நடிகர் திரு. விஜயகாந்த் அவர்களின்  (ஆகஸ்ட் 25 1952) 72 வயது தொடங்குகின்றது. சமகாலத்தில் பலவிதங்களில் நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய மனிதர்களில் ஒருவர். 



Friday, October 18, 2013

அதிர்ஷ்டத்தை அலறவைக்கும் விஜயகாந்த்

வைகோவின் திறமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மணிக்கணக்கான பேச்சாற்றலும், எது குறித்து வேண்டுமானாலும் பேசக்கூடிய திறமையும், நாடாளுமன்ற அனுபவங்கள், களப் போராட்டங்கள் என்று எதற்கும் பஞ்சமில்லை. 

தனிமனித ஒழுக்கம், ஊழல் இல்லாத மனிதர். வாஜ்பாய் அரசில் காபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி கிடைத்த போதிலும் வேண்டாம் என்று ஒதுக்கியவர். சரியோ தப்போ இன்று வரையிலும் ஈழம் சார்ந்த கொள்கையில் தன்னை மாற்றிக் கொள்ளாதவர். 

இதற்கு மேலாக எவரும் எளிதில் அணுகக்கூடியவர் என்று நீங்கள் எத்தனையோ கூட்டல்களை போட்டுக் கொண்டே போகலாம்.

வலது, இடது சாரிகள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாரிப்பா.... என்கிற நிலைமையில் தான் உள்ளது.  தா.பா ஒருவர் தான் சூறாவளி என்றாலும் பிழைத்துக் கொள்வதும், டெல்லி உயர்மட்ட காம்ரேட்கள் ஒதுக்க நினைத்தாலும்  தப்பிப்பிழைப்பது எப்படி? என்றும் டெல்லியில் உள்ள காம்ரேட்டுகளுக்கே கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். 

ஒரு வேளை ஜெயலலிதா தலைமையில் கூட்டஞ்சோறு கிண்டி பந்தி பாறிமாறும் சூழ்நிலை அமைந்தால் அதிமுகவின் கொ.ப.செ பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ராமதாஸ் அப்பழுக்கற்றவர் என்று சொல்லப்போனால் அடிக்க வருவார்கள். அவரின் தனிப்பட்ட தமிழ்நாடு சார்ந்த அத்தனை அக்கறையும், அவரின் சாதிய கொள்கைகளால் வெறுப்புக்கு ஆளானாலும் கூட தமிழைச் சொல்லி பிழைப்பு வாதம் நடத்தியவர்கள் மத்தியில் இன்று வரையிலும் தமிழ்நாட்டில் குழந்தைகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி மட்டுமே இருக்கின்றது. 

தமிழ்நாட்டு இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை உண்மையிலேயே அக்கறையோடு தொடக்கம் முதல் தனது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டு வருபவர்.

அவரின் கருத்துக்கள் தடாலடியாக இருந்தாலும் பலரின் பார்வையில் தரமற்ற கொள்கைகளாகவே இன்று வரையிலும் பார்க்கப்படுவதால் அவரும் என் வழி தனி வழி என்று ஆதிக்க சாதித் தலைவர்களை கூட்டுவதும் பீதியைக் கிளப்புவதும் என்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்று போய்க் கொண்டேயிருக்கின்றார்.

சமீப காலத்தில் நரேந்திர மோடியின் புண்ணியத்தால் தமிழ்நாட்டில் உருவான அலையினால் இப்போது தான் பாரதிய ஜனதா கட்சி ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது என்பதே தெரியவந்துள்ளது. தற்போது மோடி அலை வீசுவது பா.ஜ.க. ஜெயிக்க உதவுமோ இல்லையோ இவருடன் கூட்டணி அமைத்தால் நமக்கு எதிர்காலத்தில் பலன் இருக்குமோ? என்று இங்குள்ளவர்களை யோசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 

நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றொரு கட்சி இருக்கின்றது என்கிற அளவுக்குத் தான் இருக்கின்றது.  தலைவர்கள் அதிகமாகவும் தொண்டர்களை தேடிக் கொண்டிருந்த போதிலும் இதே காங்கிரஸின் பொருளாதார மேதைகள் தான் நமக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.  

தேர்தல் சமயத்தில் சுமக்க, சுமக்க வைக்க தில்லாலங்கடி வேலைகள் தெரியுமென்ற காரணத்தினால் அவர்களும் கட்சி குறித்து கவலைப்பட்டுக் கொள்வதில்லை.

நேற்று வந்த நடிகர் சரத்குமார் குமார் கூட தேறிவிட்டார்.

சிறந்த ஒட்டுண்ணியாக மாறுவது எப்படி என்று பாலபாடம் கற்றுக் கொண்டதால் அவரின் எந்த திறமையும் வெளியே தெரிய வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு தன்னை அதிமுக உறுப்பினர் அட்டை தேவைப்படாத ரர வாக மாற்றிக் கொண்டுள்ளார். 

அவரின் டெல்லி வாழ்க்கை, கர்நாடகத்தில் வாழ்ந்த வாழ்க்கை, படித்த கல்லூரி என்று பன்மொழித் திறமையை வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய திறமை தேவையில்லை. வசதியான இடத்தில் ஒட்டிக் கொண்டாலே போதும் என்ற மரத்திற்கு மரம் தாண்டி வந்து இன்று இதுவே போதும் என்கிற அளவுக்கு நினைத்த போது மாநாடு நடத்தி தன்னையும் ஒரு ஆளாக காட்டிக் கொண்டிருக்கின்றார். 

ஆனால் எந்த இடத்தில் கால் வைக்கின்றாரோ அத்தனை இடங்களிலும் ஊழல் ஆர்ட்டீசியன் ஊற்று போல பெருக்கெடுத்து பொங்குகின்றது. புத்திசாலி பிள்ளை எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்ளும் என்பதற்கு இவரே நல்ல உதாரணம்.

திமுக மற்றும் அதிமுக தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள இத்தனை திறமைசாலிகளின் மத்தியில் விஜயகாந்த் இன்றுவரையிலும் வித்தியாசமானவராக வினோதமாகத் தான் தெரிகின்றார். 

தொடக்கத்தில் வந்த படங்களை தவிர்த்து பிற்பாடு வந்த விஜயகாந்த் படங்களைப் பார்த்தால் இன்றும் ஆச்சரியமாகவே உள்ளது. உண்மையிலேயே எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வேண்டும் என்று காட்சிகளை, வசனங்களை அமைக்கச் சொன்னாரா? இல்லையா? என்று தெரியவில்லை.  

அநீதிக்கு எதிராக போராடுபவனாக, கூர்மையான எளிமையான வசனங்கள் மூலம் சராசரி தமிழனுக்கு போய்ச் சேரக்கூடிய வகையில் மிகத் தெளிவாகவே அமைத்துள்ளார்.பலரும் ஒவ்வொரு படத்திலும் உதவியிருப்பதை பார்க்க முடிகின்றது.  

திருப்பூரில் சாயப்பட்டறைகள் மொத்தமும் செயல்பட்டுக் கொண்டிருந்த போது அதில் பணிபுரிந்த பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய, பெரிய, வயதான அத்தனை பேர்களுக்கும் விஜயகாந்த் படமென்றால் அது முக்கியமானது.  பழைய படமென்றாலும் திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழியும்.  சனி, ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம்.  திருவிழா கூட்டம் தான்.  

ஆனால் மாறிப் போன திருப்பூர் சூழ்நிலையில் விஜயகாந்த் படங்கள் எந்த திரையரங்கிலும் போடுவதாக தெரியவில்லை.  ஏறக்குறைய மூன்று லட்சம் பேர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூரை விட்டு வெளியே சென்று விட்டதால்  பல திரையரங்கில் இன்று எந்த படங்கள் என்றாலும் மூன்றாவது நாளே தூக்கி விட்டு வேறு படங்களை மாற்றி விடுவதும் நடந்து கொண்டு தானிருக்கிறது. இப்போது கூட சாயப்பட்டறைகளில், பல இடங்களிலும் பணிபுரியும் பலதரப்பட்ட கிராமத்து இளைஞர்களிடம் பேசும் போது விஜயகாந்த் மேல் உள்ள பிரியம் குறைந்தபாடில்லை.  

ஏதோ ஒரு ஈர்ப்பு.  எப்படி ஒரு காலத்தில் ராமராஜனின் சிவப்பு பச்சை நிறத்திற்கு ஒரு மதிப்பு இருந்ததைப் போல விஜயகாந்தின் கருப்பு நிறத்தை களையான முகம் அண்ணே என்று தான் சொல்கின்றார்கள்.

சிங்கத்தின் குகையிலே சென்று பிடறியை உலுக்கியவராக விருத்தாச்சலத்தில் நின்று ஜெயித்து வந்த போது அடித்தட்டு மக்கள் அவரை திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றாக கருதுவதாகத் தோன்றியது. தமிழ்நாட்டில் தேமுதிக விற்கு மொத்தமாக கிடைத்த பத்து சதவிகிதமென்பது சிலருக்கு ஆச்சரியத்தை தந்ததைப் போல பலருக்கு எரிச்சலையும் உருவாக்கியது. அந்த எரிச்சல் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் உதவியது. நம்பமுடியாத எதிர்க்கட்சி பதவியையும் கொண்டு வந்து சேர்த்தது. 

தனிப்பட்ட திறமையைவிட அசராத நம்பிக்கையும் ஆச்சரியப்படும் அதிர்ஷ்டமும் கைகோர்க்க தமிழ்நாட்டில் கலைஞரின் அனுபவங்கள் தோற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தையும் பெற முடிந்தது. 

எல்லாமே சரி தான்.

வளர நம்பிக்கைத் தேவை.  அந்த நம்பிக்கை கனவாக இல்லாமல் நிஜமாக மாற அதிர்ஷ்டமும் தேவைத்தான்.  

ஆனால் மேலும் வளர பயிற்சியும் உழைப்பும் தேவை தானே?

கலைஞர் அளவுக்கு திறமையில்லாத எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு மேலேறினார்.  ஆனால் அவருக்கு இயல்பாகவே இருந்த மக்கள் செல்வாக்கு என்பது அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்த உதவியது.

எம்.ஜி.ஆர் அளவுக்கு விஜயகாந்திற்கு முழுமையான மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் கூட சரியான சந்தர்ப்பங்கள் அவரை நகர்த்திக் கொண்டே வந்தது. ஆனால் திறமையில்லாமல் வரும் அதிர்ஷ்டம் என்பது என்னவாகும்? என்பதற்கு விஜயகாந்த் உதாரணமாக இருக்கின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

எந்த அரசியல்வாதிகளும் முழுமையான புத்திசாலிகள் அல்ல. 

கலைஞருக்கு இன்று வரையிலும் அறிக்கைகள் தயார் செய்வது முதல் பலதரப்பட்ட வகையில் உதவியாய் இருப்பதில் முதன்மையாக இருப்பவர் சண்முகநாதன்.  எவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதினாலும் கலைஞரின் எடிட்டிங் உழைப்பு இல்லாமல் அறிக்கை வெளியே வராது. அவரின் அபார உழைப்பும், ஞாபக சக்தியும் சுட்டுப்போட்டாலும் தமிழ்நாட்டில் எவருக்கும் வராது. அதே போல ஜெயலலிதாவுக்கு புலவர் மற்றும் அவர் மகன் (தற்போது யாரோ?) என்று பெரிய படைபட்டாளமே இருக்கின்றார்கள்.  

ஆனால் விஜயகாந்த் பின்னால் மூன்று அல்லக்கைகளும், மனைவி, மச்சினன் என்ற கிச்சன் காபினெட் குழுவும் இருப்பதால் கட்சியில் இருந்தவர்களை ஓட வைத்தது தான் மிச்சம்.

இவர் மேடையில் பேசும் பேச்சு முதல் பொது இடங்களில் உளறிக் கொட்டும் விசயங்களையும் பார்க்கும் போது வியப்பாகவே உள்ளது.  கற்றுக் கொள்ள பொறுமையில்லையா? இல்லை கற்றுக் கொள்ளும் "சூழ்நிலை"யில் இல்லாமல் இருக்கின்றாரா? என்று எண்ணவே தோன்றுகின்றது.  

உருவாகப் போகும் கூட்டணி தர்மத்தின் படி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விஜயகாந்தின் பேச்சுக்களை நேரிலையாக ஒளிபரப்பி பீதியை கிளப்புகின்றார்கள்.  இத்தனை விசயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் ராகுல் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி தூண்டில் போட மறுபக்கம் நாங்க வந்து பார்க்கலாமா? என்று பா.ஜ.க. முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கலைஞர் கூட ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்புகின்றார்.

அதிர்ஷ்டத்திற்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ?

தொடர்புடைய பதிவுகள்


Saturday, March 05, 2011

விஜயகாந்த் அதிர்ஷடக்காரர்?

இந்த முறை தேர்தலில் தொடக்கம் முதல் இரண்டு பேர்களை கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஒன்று சீமான்.  மற்றொருவர் விஜயகாந்த.  

சீமானைப் பொறுத்தவரையில் அவரின் உண்மையான நிலைப்பாடு இந்த முறை தேர்தலில் பங்கெடுப்பது இல்லை.  அடுத்து வரும் தேர்தலுக்கு (2016)முன்னோட்டமாக இன உணவாளர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.  குறிப்பாக காங்கிரஸ் கட்சியை முடிந்த வரைக்கும் முடித்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறார்.  சீமான் பேசும் கூட்டங்களில் இளையதலைமுறையினர் ஆர்வமாக பங்கெடுத்துக் கொள்கின்றனர்.  முக்கியமாக படித்தவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. 

சீமான் மனதிற்குள் போட்டுள்ள கணக்கை விட இந்த தேர்தல் முடிவுதற்குள் கிங்கர ராஜாக்கள் என்ன மாதிரியான கணக்கை வைத்துள்ளார்களோ?  

காரணம் புதுக்கோட்டையில் முதல் களப்புலியை காவு வாங்கி தங்களது புனிதப்பணியை தொடங்கியுள்ளனர். இதற்குள் உள்குத்து அதிகமாக இருந்தாலும் முழுமையாக எந்த ஊடகமும் இதைக் குறித்து ஆராயாமல் சற்று மேம்போக்காகவே போய்விட்டது.  இன்னும் எத்தனை பேர்களை பலி பீடத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களோ?  சென்னையில் இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்தை யார் தலைமையில் சூறையாடினார்கள் என்று அணைவருக்கும் தெரிந்து போதிலும் அத்தனை பேர்களும் அமைதி காத்தனர். காரணம் கடந்த தேர்தலில் ப. சிதம்பரம், இளங்கோவன் போன்றவர்களை மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் ஈழம் என்ற ஒரு சொல்லும் அதன் ஆதரவாளர்களுமே காரணமாக இருந்தனர்.  

ஆனால் ப. சிதம்பரம் அழிச்சு கிழிச்சு கெஞ்சி கூத்தாடி கழைக்கூத்தாடி போலவே ஆளை விட்டால் போதுமடா சாமின்னு ஓட்டமாய் பின்வாசல் வழியே மேலே போய் உட்கார்ந்து விட்டார்.  இப்போது காங்கிரஸ் மக்கள் கொஞ்சம் உசாராகவே இருக்கின்றனர். ஈழம் என்று சொல்லிக்கொண்டு வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்பதை உணர்த்திக் காட்ட எதற்கும் தயாராகவே உள்ளனர். மீறி உணர்த்திக் காட்டிவர்களுக்கு முடிந்த வரைக்கும் அவ்வப்போது ஒவ்வொரு கணக்கும் தீர்த்துக் கொண்டே வரப்படுகின்றது. 

செயலில் இறங்கிய இளங்கன்றுவின் வேகம் இன்று வாசன் கோஷ்டியை விட மேலேறி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துள்ளது. உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் தொண்டர்களுக்கு நான் எந்த வகையில் சளைத்தவன் அல்ல என்று இளங்கன்றுவின் வேகத்தை உள்துறை கூட மனதில் உள்ளே வைத்து ரசித்து இருக்கக்கூடும்.  காரணம் இது அரசியல்.  இப்போது தவறவிட்டால் எப்போதும் தவறாய் போய் முடிந்து விடும்.  

ஆனால் இந்த 2011 தேர்தல் என்பது தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை என்பதை விட உண்மையிலே ஈழம் இனப்படுகொலை என்பது தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? என்பதை உணர்த்தக் கூடும். இதை வைத்து தான் சீமான் களத்தில் இறங்கியிருக்கிறார்.  முடிந்த கதையை எத்தனை நாளைக்கு பேசிக் கொண்டு இருக்கப்போகிறாய்? என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் கேட்கப்போகிறார்களா? அல்லது சீமானின் கர்ஜனை எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கும்? என்று தெரியவில்லை.  பெரும்பாலும் இந்த தேர்தல் முடிவை வைத்து சீமான் செல்வாக்கானவரா இல்லை செல்லக்காசா? என்று முடிவு தெரிந்து விடும்.


விஜயகாந்த்.   

நான் தான் முதலமைச்சர்!!!! என்று தைரியமாக கூவியதற்கே முதலில் பாராட்டுரை வழங்க வேண்டும்.  பெரும்பாலும் தேமுதிக என்ற கட்சி தொடங்கிய பிறகு தான் விஜயகாந்த் அரசியல் குறித்து கொஞ்சமாவது படித்து கேட்டு இருக்கக்கூடும். பண்ட்ருட்டி ராமச்சந்திரன் மனம் மாறாமல் இன்னமும் விஜயகாந்த பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் அனுபவ பாடங்களும் கிடைத்து இருக்கக்கூடும்.  ஒரு பக்கம் மனைவி பிரேமலதா மற்றொரு புறம் மச்சினன் சுதிஷ் பின்பக்கம் பண்ட்ருட்டி முன்பக்கம் எப்போது அவர் சொல்லிக் கொண்டு இருப்பது அந்த ஆண்டவன். 

விஜயகாந்த மேடையில் பேச்சும் தெளிவாக இல்லை. கோர்வையாகவும் சொல்லத் தெரியவில்லை.  மொத்தத்தில் நிதானமும் இல்லை.  ஆனால் தொடக்கம் முதல் இந்த தில்லுதுர வைத்திருந்த நம்பிக்கை இன்று வீணாகிப் போய்விடவில்லை. பட்டையைக்கிளப்பி போய்க் கொண்டு இன்று அதிமுக வில் 41 சீட்டு பெற்றுள்ளார்.  பாவம் வைகோ, கம்யூனிஸ்ட்கள்.


விஜயகாந்தின் பழைய படங்களைப் பார்த்தால் அந்த வெண்திரையில் விஜயகாந்த சிரித்தால் அந்த பற்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாக தெரியும்.  நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும்.  கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது. 

பாசமுள்ள மகன் கட்சிக்கு சொந்தக்காரன ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே.  வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை.  மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது.  

கலையுலகம் முதல் இன்றைய அரசியல் உலகம் வரைக்கும் அத்தனையிலும் தான் கொண்ட நம்பிக்கையை விஜயகாந்த் இன்று வரைக்கும் மாற்றிக் கொள்ளவேயில்லை. இந்த நம்பிக்கை தான் இன்றைய அதிர்ஷ்ட திசையின் ஆரம்பம்?

டெல்லியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி நபர்களையே வாசலில் காக்க வைத்த போயஸ்தோட்டம் இன்று வேறு வழியே இல்லாமல் விஜயகாந்தை வெத்தலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.. குறிப்பாக பா.ம.கா வை கலைஞர் உள்ளே இழுத்தது காங்கிரஸ்க்கு எரிச்சலாக இருந்து இருக்குமே தவிர விஜயகாந்த்திற்கு மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு.  மீதி இருக்கும் ஒரே வாய்ப்பு தேமுதிக மட்டுமே என்கிற நிலை வந்த போது அதிமுக வேறு என்ன செய்ய முடியும்?  

தொடக்கம் முதல் விஜயகாந்த் கடைபிடித்த அமைதி ரொம்பவே ஆச்சரியமானது. எதிலும் பிடிகொடுக்கவில்லை. எந்த வாய்ப்புகளையும் தவற விட தயாராய் இல்லை. டெல்லிக்கு படையெடுத்தது முதல் காங்கிரஸ் ஒரு பக்கம், மற்றொரு புறம் தனது அக்கா விஜயலெட்சுமி மூலம் அழகிரி ஒரு பக்கம் என்று உருவாக அரசியல் சந்தையில் தேமுதிக முக்கியமானதாக போய்விட்டது. 

விஜயகாந்த் அரசியல் வாழ்வில் இத்தனை பெரிய அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்று அவரே நினைத்து இருக்கமாட்டார்.  

' நான் ஆண்டவனுடன் மற்றும் மக்களுடன் கூட கூட்டணி வைப்பேன் ' என்று சொன்னவர் இன்று அதிமுகவுடன் வந்து சேர்ந்துள்ளார்.  விஜயகாந்த் வைத்திருக்கும் பத்து சதவிகித ஓட்டுகள் இந்த முறை அதிமுகவுக்கோ உதவுகின்றதோ இல்லையோ நிச்சயம் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் தேமுதிகவுக்கு உதவும்.  போயஸ் தோட்டத்தில் கனகம்பீரமாக உள்ளே நுழைந்த நபர் இவராகத்தான் இருப்பார்.

இவர் தொடக்கம் முதல் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு வாக்குறுதி வித்யாசமானது.  "நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் அத்தனையும் ஒவ்வொருவரின் வீட்டுக்கே வந்து சேரும்.  இதைப் போலவே பல ஐடியாக்கள் வைத்துள்ளேன்.  இப்போது அதை வெளியே சொன்னால் திமுக காப்பி அடித்து விடும்" என்று வேறு பயமுறுத்தி வைத்துள்ளார்.  ஏற்கனவே இதைப்போலவே பா.மா.க, விடுதலை சிறுத்தைகள். தனிப்பட்ட முறையில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.  இன்று அத்தனையும் காற்றில் அலைகின்றது.  இவரின் ஐடியாக்களை இவர் முதலமைச்சராக ஆகும் போது இவருக்கு கீழே இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி புரிந்து கொள்ளப் போகின்றார்களோ?

காங்கிரஸை வழிக்கு கொண்டு வர திடீர் ஞானோதயம் பெற்ற கலைஞர் எப்படி ராமதாஸை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளாரோ அதைப் போலவே இந்த முறையும் ஓட்டு பிரிந்து போய் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பலமடங்கு கீழிறங்கி நம்ம கேப்டன் அதகளத்தை கடைவாயில் அடக்கிக் கொண்டு போயஸ் தோட்டம் புன்னகை சிந்தியுள்ளது.


இன்னும் 90 நாட்களில் அதிமுக ஜெயித்து வரும் பட்சத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் திரைக்கதையில் உருவாகப்போகும் முடிச்சுகள் அவிழத் தொடங்கும். என்னையே அலைக்கழித்தாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் போல தேமுதிக வின் உண்மையான பலம் பலவீனம் அப்போது நமக்குத் தெரியும்..

இன்றைய விஜயகாந்தின் அதிர்ஷ்டத்தை விட அன்று உருவாகப்போகும் துரதிஷ்டத்தை எப்படி சமாளிப்பார் என்பதில் தான் விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பற்றி அத்தனை எளிதாக கணித்து விட முடியாது.  கடைசி நிமிடம் வரைக்கும் சாவடித்து விடக்கூடியவர்கள். 

சொல்லமுடியாது.  ஒரு வேளை நடைபெறப் போகும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்??

கேப்டன் காட்டில் அடைமழையல்ல.  மழைக்குள் கேப்டன்.