Showing posts with label மூன்றாம் ஆண்டு தொடக்கம்.. Show all posts
Showing posts with label மூன்றாம் ஆண்டு தொடக்கம்.. Show all posts

Sunday, July 03, 2011

வலைபதிவுகள் வரப்பிரசாதம் - 3வது ஆண்டு

என்னுடைய உண்மையான பிறந்த நாளே எனக்கு 20 வயதில் தான் தெரிந்தது. அப்போது தீவிர ஜோதிட ஆராய்ச்சியில் முழு நேரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த நண்பன் கலந்தர் (மத எதிர்ப்புகளையும் மீறி) உந்துதல் காரணமாக நான் பிறந்த அரசு மருத்துமனையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே கண்டு கொண்டேன்.   நான் பிறந்த நாளை கொண்டாடியதும் இல்லை. பிறந்த நாள் வரும் தினத்தன்று அது நினைவில் இருப்பதும் இல்லை.  குழந்தைகள் எனது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அவர்களின் பிறந்த நாளை நாங்கள் மறந்து விடுவோம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதத்திற்கு முன்பாக இன்னும் இத்தனை மாதங்கள் இருக்கிறது? என்று சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். அன்று அவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி தான் எங்களின் மகிழ்ச்சியாகவும் இருந்து விடுகின்றது. 

இந்த மகிழ்ச்சியைப் போலவே இந்த நாள் எனக்கு இருக்கிறது. 


காரணம் நான் பெற்ற அனுபவங்கள், வாசித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள் உருவாக்கிய தாக்கம் எத்தகையது என்பதை எழுதத் தொடங்கிய இந்த இரண்டு வருடங்களின் மூலம் தான் அதிகம் உணர முடிந்துள்ளது. உண்மையிலே உடலுக்கு உண்டான வயதை விட உள்ளத்தின் வயதான மூன்று என்பது இன்று முதல் தொடங்குகின்றது. 

முதலாம் ஆண்டு முடிவுக்கு வந்த அப்போது வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதிய கட்டுரை இது. அப்போது ஈழம் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த காரணத்தால் அதன் புரிதலை எழுதியிருந்தேன்.  அப்போது பெரும்பாலான வர்களுக்கு நான் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. ஆனால் நாகா உருவாக்கிக் கொடுத்த இந்த தளத்தில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பார்வையாளர்களும் ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த வேர்ட்ப்ரஸ் ல் 50 ஆயிரம் பேர்களும் வருகைதந்துள்ளார்.  

இந்த எண்ணிக்கையை இங்கே குறிப்பிடக்காரணம் சில விசயங்களை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

வலையுலகில் இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருப்பவர்களின் ஒரே கருத்து படிப்பவர்களுக்கு வசதியாக குறிப்பிட்ட விசயங்களை நீளம் அகலம் பார்த்து எழுத வேண்டும்.  இல்லாவிட்டால் அது வந்து படிப்பவர்களை அடுத்த முறை வராமல் செய்து விடும் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். . 

ஆனால் இதுவரைக்கும் அந்த விதியை உடைப்பதில் தான் கவனம் செலுத்தியுள்ளேன்.  வெற்றியும் அடைந்துள்ளேன்

இதைப் போலவே வலைப்பூவில் தொடக்கத்தில் எழுத வருபவர்களும் திரைப்படங்களைப்பற்றி எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று தங்கள் எழுத்துப்பயணத்தை திரை சமாச்சாரங்களில் மட்டும் கவனம் செலுத்தி அதன் பாதையிலே போகத் தொடங்கி விடுகிறார்கள். 

வேர்ட்ப்ரஸ் ல் எழுதும் போது சிவகுமார், சேரன், கமல்ஹாசன் குறித்து எழுதியுள்ளேன். குறிப்பாக திரைப்படங்களைப் பற்றி நான் இதுவரையிலும் எழுதியதில்லை. 

வினவு தள நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக முதல் முறையாக திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்து எழுதிய கட்டுரை அப்போதையை சூழ்நிலையில்  சொல்ல வேண்டிய எதிர்மறை நேர்மறை நியாங்களை கோர்வையாக்கியதில் நீண்டதாகவே இருந்தது.  தோழர்களும் அப்படியே வெளியிட்டு இருந்தார்கள். அப்போது உயர்பதவியில் உள்ள கனடாவில் இருந்த நண்பர் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.  ஆனால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்பு கொள்ளவில்லை.  ஆனால் சாயப்பட்டறை கட்டுரையை விட மராத்தான் நீளத்திற்கு அமைந்த நான் வேட்பாளர் ஒரு டைரிக்குறிப்புகள் என்ற கட்டுரையை அவர் படித்தவுடன் அந்த இரவு வேளையில் கனடாவிலிருந்து அழைத்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேசினார். 

அப்போது அவர் பலவிசயங்களைப் பற்றி பேசினாலும் இன்று உங்களுடன் பேசியே ஆக வேண்டும் என்று என் இரவு நேர கடமைகளை ஒதுக்கிவைத்து விட்டேன் என்று சொன்ன போது அந்த கட்டுரை எந்த அளவுக்கு அவருக்கு தாக்கத்தை உருவாக்கியது என்பதை உணர்ந்து கொண்டேன். 

 இதையே சென்ஷியுடன் ஒரு நாள் முழுக்க தஞ்சை பெரிய கோவிலில் இருந்த போது அவரும் இதே கட்டுரையை குறிப்பிட்டதோடு அன்பால் நெகிழவைத்தார். பத்திரிக்கை துறையில் இருக்கும் தமிழ்மலர் கூட இது போன்ற தேர்தல் ஆணைய செயல்பாடுகளின் சம்பவ கோர்வைகளை யாராவது எழுத மாட்டார்களா? என்று காத்திருந்ததை குறிப்பிட்டு இருந்தார். 

சாயமே அது பொய்யடா என்ற கட்டுரை தான் நான் மதிக்கும் பத்திரிக்கையாசிரியரின் தொடர் வாசிப்பு பார்வையில் பட்டு அதுவே தான் முதல் முறையாக பத்திரிக்கையுலகத்திற்கு அறிமுக இல்லாதவனுக்கு அட்டைபட கட்டுரை அங்கீகாரம் வரைக்கும் கொண்டு சேர்த்தது. 

இன்னும் இதே போல பல நண்பர்களின் உதாரணங்களை குறிப்பிட முடியும்.  

இந்த வருடம் முழுக்க நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று தான்.  

உங்கள் எழுத்து நடையும், சொல்ல வந்த விசயத்திற்குரிய சரியான புரிதலையும் உருவாக்கும்பட்சத்தில் அது எந்த அளவுக்கு பெரிதாக இருந்தாலும் நிச்சயம் அது பரவலான பாராட்டுரைக்கு கொண்டு செலுத்தும்.  நீங்கள் விமர்சனங்கள், ஓட்டு, பரஸ்பரம் மார்பில் சந்தணத்தை பூசிக் கொண்டிருந்தால் வாழ்க்கை முழுக்க பூசிக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.  

மொத்தமாக 330  பதிவுகள் எழுதியுள்ளேன். இந்த வருடத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் மின் அஞ்சல், ரீடர், மூலம் இணைத்துக் கொண்டவர்களோடு, வளர்ச்சியின் நீட்சியாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக், கூகுள் பஸ் மூலமாக ஏராளமான நண்பர்கள் எனக்கு தொடர்ச்சியாக அறிமுகமாகிக் கொண்டு இருக்கிறார்கள். பல மேடு பள்ளங்களைக் கடந்து, ஓரளவுக்கேனும் எழுதக்கற்றுக் கொண்டு நாளை முதல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன். 

இந்த சமயத்தில் மூன்று பேர்களுக்கு என் முதன்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி நிர்வாக குழுவினருக்கு அதிலும் தமிழவெளி நண்பர் புருஷோத்தமன் என் மேல் கொண்ட தனிப்பட்ட அக்கறைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மற்றவர்கள் போல வேறு எந்த தளத்திலும் நான் இணைப்பதில்லை. காரணம் அதற்கான நேரம் இருப்பதில்லை. மேலும் நேரிடையாகவே உள்ளே வருபவர்களின் எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டேயிருப்பதால் இந்த சிறிய அங்கீகாரமே எனக்கு போதுமானதாக இருக்கிறது.  

இந்த கட்டுரை வேறொரு வடிவத்தில் வந்திருக்க வேண்டியது.  முக்கியமான நண்பர்களிடம் உறுதியளித்தபடி அதை செயல்படுத்த முடியவில்லை.  காரணம் தமிழ்மணம் குறித்து திரு. செல்வராசுவிடம் உரையாடி பதில்கள் வாங்கி வெளியிடலாம் என்று நண்பர்களிடம் பேசி வைத்திருந்தேன். ஆனால் மே 17 இயக்கம் தொடர்பாக அவருக்கு அனுப்பிய மின் அஞ்சல், மற்றும் அவரின் தொடர் பயணத்தில் நேரம் கிடைக்காத காரணமோ? இந்த முறை நான் நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை.  நிச்சயம் அதை செய்வேன்.. 

சுயமோகம், சுயவிளம்பரம், அதிக சுயபுராணம் எதுவுமின்றி இந்த வலைபதிவுகளை முடிந்தவரைக்கும் செய்திகளை கடத்தும் ஊடகமாகத் தான் கருதுகின்றேன்.  வெகுஜன ஊடகத்தை விட இந்த வலைபதிவுகளின் உண்மையான மதிப்பை இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் உணர்ந்து கொள்ளக்கூடும்.  பிரபல்யமான தொலைக்காட்சிகள் கூட செல்லமுடியாத தீவுப் பிரதேசங்களில் இந்த வலைபதிவுகள் வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் பார்க்க, படிக்க வாய்ப்புள்ள இந்த ஊடகத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படுவர்களும் இருக்கிறார்கள்.

என் வீட்டு தோட்டத்தின் வெளியே திரிந்த சிட்டுக்குருவி ஒன்று ஒவ்வொரு நாளும் அறைக்குள் வர பிரயாசைப்பட்டுக் கொண்டிருப்பதை பல முறை கவனித்துள்ளேன்.  கண்ணாடி ஜன்னலை முட்டி முட்டி முயற்சிப்பதைப் போலத் தான் இந்த எழுத்துப் பயணம் எனக்கு பலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் தொட ஆரம்பிக்க, அதைப் பற்றிய தேடல் தொடங்க அவற்றைக் குறித்து எழுதத் தொடங்கிய பின்பு தான் சரித்திர அறிவும், அதிக அளவில் சமூக அறிவும் எனக்கு கிடைக்கப் பெற்றது. 

பொருள் தேடுவதும், கிடைத்த பொருளை காப்பாற்றுவதுமே இப்போதைய சமூகத்தில் முக்கியமாக இருக்கிறது. அதனை வைத்தே இங்கே ஒவ்வொரு மனிதர்களுக்கும் மதிப்பீடு கிடைக்கின்றது. மனிதர்கள் அத்தனை பேர்களுமே சந்தைச் சரக்காக இருக்கும் சூழ்நிலையில் எனக்குள் உருவாகும் மன அழுத்தத்தை போக்க இந்த எழுத்துப் பயிற்சி பலவற்றையும் எனக்கு கற்றுத் தந்துகொண்டு இருக்கிறது.. 

இந்த வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படிப்பவர்களின் சிந்தனைகளில் முழுமையான மாறுதல்களை உருவாக்க முடியாத போதும்கூட அவரவர் கொண்ட சிந்தனைகளை உரசிப் பார்க்கக்கூடிய வகையில் என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொன்றையும் எழுதியுள்ளேன்.   தொலை தூரத்தில் இருந்து திடீர் என்று அழைத்து பேசியவர்களும், தொடர்பில் வரும் நண்பர்கள் பேசும் உரையாடலின் மூலமே மட்டுமே பலரும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது. 

குறிப்பாக தெகாவுடன் நாலைந்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று ஒரே வயது ஒத்த சிந்தனைகளுடன் அலைந்து திரிந்து உரையாடிய உரையாடல்கள் வாழ்வின் கடைசிவரைக்கும் என்றும் என் மனதில் இருக்கும்.

இந்த இரண்டாவது வருட இறுதியில் என் எழுத்துக்கு பல அங்கிகாரங்கள் கிடைத்துள்ளதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு, இரண்டு தமிழ்மண விருது அங்கீகாரம், வினவு புத்தகத்தில் வந்த கட்டுரை அச்சு ஊடக அங்கீகாரம், புதிய தலைமுறை அட்டைப்படக் கட்டுரை அங்கீகாரம், தொலை தூரத்தில் இருந்து அழைத்துப் பேசியவர்களின் உணர்வு பூர்வமான உரையாடல்கள், வலைபதிவுகளின் மூலம் அறிமுகமாகி குடும்ப அங்கத்தினராக மாறியவர்கள், பல துன்பங்களில் தோள் கொடுத்து சுமந்து நடந்து பாக்கியவான்கள் என்று ஏராளமான ஆக்கபூர்வமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. நான் எப்போதும் விரும்பி வாசிக்கும் 4 தமிழ்மீடியா குழுமம் அவர்களின் இந்த ஆண்டு நிறைவு நாளில் வெளியிட என்னிடம் ஒரு கட்டுரை வாங்கியுள்ளார்கள்.

திருப்பூரில் பத்திரிக்கையாளராக இருக்கும் நண்பர் மணி நான் ஏற்கனவே திருப்பூர் பற்றி தொடராக எழுதியுள்ள கட்டுரைகளில் ஒன்றான நம்பி கை வை என்ற கட்டுரையை அவரே தேர்ந்தெடுத்து மாலைமலர் (என்று தான் நினைக்கின்றேன்) தொழில் மலரில் வரப்போகின்றது என்று சொல்லியுள்ளார். எனது தளத்தில் மற்றவர்கள் போல் பூட்டு எதுவும் போடவில்லை. ஆனால் வந்து படித்தவர்களிடம் அதிகம் வசவுகள் வாங்காமல் நெசவு துணி போல் உருவான கட்டுரைகள் ஒவ்வொன்றும் எனக்கு ஏராளமாய் கற்றுத் தந்துள்ளது 
ஈழம் பற்றி நான் அதிகமாக எழுதக் காரணம் அதைப்பற்றி தான் இரண்டு வருடங்களில் நிறைய படித்துள்ளேன். 

மேலும் சென்ற தலைப்பில் சார்வாகன் கொடுத்துள்ள விமர்சனத்தைப் பாருங்க.  அது தான் முக்கிய காரணம். என்னுடைய புத்தகங்கள் பதிப்பகத்தில் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. கண்டிப்பு வாத்தியாராக இருப்பதாலும், அவர்களின் கடந்த ஆறு மாத கவனங்கள் தொல்காப்பியம் என்ற 3000 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் இருப்பதாலும் மட்டுமே தாமதம். இதற்கிடையே அணைவருக்கும் தெரிந்த பிரபலமான நிறுவனத்தில் உள்ள பொறுப்பாசிரியர் அடிமைகள் குறித்து எழுதச் சொல்லியிருந்தார். தெரியாத விசயங்களைப் பற்றி எழுதும் போது எத்தனை சவாலானது என்பது உணர்ந்து கொண்டேன். 

பத்து அத்தியாயங்களுக்கு மேல் என்னால் நகர்த்த முடியவில்லை. அவரும் பொறுமையாக பலவிசயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளார். அவருக்கு என் வணக்கம். ஆனால் இதன் மூலம் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் அவலவாழ்க்கையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  

மூன்று பெண் குழந்தைகளின் பெயர்களின் இறுதியில் தேவி என்று பெயர் வருவதால் எனது ஆசான் மூத்த பத்திரிக்கையாளர் முத்து முருகேசன் தான் தேவியர் இல்லத்து குழந்தைகள் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் என்று ஒரு முறை குழந்தைகளின் பிறந்த நாளின் போது அவர்களின் நோட்டில் எழுதிக் கொடுத்து வாழ்த்துரைத்தார். 

அதையே இந்த வலைதளத்திற்கு பெயராகவும் வைத்துள்ளேன். வேறெதும் சிறப்பான காரணங்கள் ஒன்றுமில்லை. 

2004 முதல் எழுதிக் கொண்டிருப்பவர்களின் தளத்தை கூகுளில் தேடும் போது அவர்கள் தளத்தில் மாதவாரியான விபரங்களையும் பார்க்க முடியும். கடந்த சில மாதங்களாக தேவியர் இல்லத்திற்கும் அந்த அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளார்கள். இது தவிர நேற்று அவர்களிடம் இருந்து எனது தளத்தின் ஒரு வருட செயல்பாடு குறித்து ஒரு நீண்ட அறிக்கை வந்துள்ளது. அது உங்களின் பார்வைக்கு.  நிறைய விசயங்களைப் பற்றி குறிப்பாக அரசியல் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து வைத்திருந்த அத்தனையும் உடல் நல குறைவால் எழுதமுடியவில்லை.  காரணம் நான் தேர்தல் சமயத்தில் எழுதிய கட்டுரைகள் அத்தனையும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 

அதன் நம்பகத்தனமை உங்களுக்கு பல புரிதல்களை உருவாக்கக்கூடும். 

மறுபடியும் தொழில் வாழ்க்கையில் இப்போது மீண்டும் குறியீட்டுப் புள்ளிகள் உயர்ந்து கொண்டே இருப்பதால் இதற்கென்று தற்போது அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. படிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே போய்க் கொண்டு இருக்கிறது.  எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எழுதி என்ன ஆகப்போகின்றது?
இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கையில் இப்போது இந்த மடிக்கணினி விளையாட்டுப் பொருளாக மாறி என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின ஆர்வத்தை சுதந்திரத்தை கெடுக்க விரும்பாமல் பெரும்பாலும் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கத்தான் நேரமிருக்கின்றது.  

ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு நான் பலவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். பலரும் சென்ற கட்டுரையின் போதே தங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்தியிருந்தார்கள். 

அணைவருக்கும் என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கின்றேன். கூகுள் ஆண்டவர் ஒருவரின் ஜாதக விபரங்கள் போல் நம் தளத்தைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பிரித்து ஏராளமான விசயங்களைக் கொடுத்துள்ளார்கள்.  இந்த ஒரு விசயம் மட்டும் போதுமானது. 

நமக்கு ஓட்டு முக்கியமா? ஈ மொய்ப்பது முக்கியமா? பிரபல்யம் என்ற பட்டம் முக்கியமா? அல்லது பலருக்கும் நமக்கு தெரிந்த, படித்த விசயங்களை,  நாம் வாழும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை இந்த வலைபதிவுகள் மூலம் பகிரிந்து கொள்வது முக்கியமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.



.

 Traffic Sources

.
% Visits from Sources11/1/09 - 2/1/1011/1/10 - 2/1/11Difference
Direct36.5%36.8%+0.3%
Referral21.0%19.4%-1.6%
Search Engines27.0%28.0%+1.0%
Other15.5%15.8%+0.3%