மூத்தவளுக்கு பள்ளி செல்ல மிதி வண்டி வேண்டுமாம்.
கடந்த நாலைந்து வாரமாக வீட்டுக்குள் ஒரே அமளி. நான் கண்டு கொள்ளவே இல்லை. காரணம் பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும்
தொலைவு ஐநூறு மீட்டர் மட்டுமே. மூன்று
வருடங்களுக்கு முன்பே வாங்கிய வண்டி ஒன்று வேறு வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மூன்று பேர்களின் கைங்கர்யத்தில் அது
பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. பிரித்து மேய்ந்து விட்டார்கள். முக்கிய சாலைகள் தவிர அத்தனை சந்துகளிலும்
இவர்களின் ராஜ்யங்களை நடத்தி முடித்து விட்டார்கள்.
தற்போது இருவர் மிதி வண்டியை அநயாசமாக கையாள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும்
இன்னும் கைகூடவில்லை. மெதுவாகவே கற்றுக் கொள்ளட்டும் என்று நானும்
கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இப்போது மூத்தவளின் எதிர்பார்ப்பு வேறு விதமாக
உள்ளது.
நான் மிதி வண்டியை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். புது வண்டி தான் வேண்டும் என்ற கோரிக்கையுடன்
நச்சரிக்கத் தொடங்கினாள்.. என்னுடன் படிக்கும் தோழிகள் பலரும் எடுத்து
வருகிறார்கள். நானும் இந்த வருடம் எடுத்து
வரப்போவதாக சொல்லி விட்டேன் என்று வீட்டின் நிதி மந்திரியிடம் சொல்லி வைக்க அதுவே
இப்போது விஸ்ரூபமாக வந்து நிற்கிறது.
இந்த பிரச்சனையை மனைவி தான் தொடங்கி வைத்தார். இப்போது மாட்டிக் கொண்டு
முழிக்கிறார்.. அசந்தர்ப்பமாக பள்ளி
இறுதித் தேர்வின் போது கொடுத்த வாக்குறுதி இது.
இப்போது புயலாக தாக்கிக் கொண்டு இருக்கிறது.
“அம்மா நீங்க சத்தியம் பண்ணி கொடுத்துருக்கீங்க. மீற மாட்டீங்க தானே” என்றவளை பார்த்துக் கொண்டே வீட்டின் உள்ளே
நுழைகின்றேன். மூத்தவள் மனைவியுடன்
காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு வாரமாகவே நினைவூட்டிக் கொண்டு
இருந்தவள் இப்போது அடிதடி இறங்கி விட அபயக்குரலுடன் மனைவி என்னருகே வந்து விட்டார்.
காரணம் பள்ளி நாளை திறக்கப் போகிறார்கள். இப்போது அதற்கான செலவு செய்யும் நேரம்.
கீழ் சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என் பார்வைக்கு வந்து
நின்றது. நானும் கடத்திக் கொண்டே வந்து
விட தற்போது உச்சகட்ட போராட்டமாய் வீட்டில் சட்டம் ஒழுங்க கெட்டு 144 தடையுத்தரவு
போடும் அளவுக்கு மகளின் வார்த்தைகளை மனைவியால் எதிர்கொள்ள முடியாமல் என்னை
உதவிக்கு அழைக்கத் தொடங்கினாள்.
மகளிடம் ஒரு விதமான சாமர்த்தியம் உண்டு.
ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் முதலில் அறிவிப்பாக வெளியிடுவாள். பிறகு சந்தர்ப்பம் பார்த்து
நினைவூட்டுவாள். பிறகு எப்போது
வாய்ப்புண்டு என்பதை நோட்டம் விட்டுக் கொண்டு அதற்கான நேரத்தை வாக்குறுதியாக
பெற்றுக் கொள்வாள். அந்த நேரத்திற்காக
காத்திருந்து வாக்குறுதியை
பெற்றுக் கொண்டு கைபேசியில் நினைவூட்டலாக பதிந்து வைத்து விடுவாள். முட்டாள்தனமாக நாங்களும் மறந்து விடுவாள் என்று
நினைத்துக் கொண்டே இருப்போம். அவளும் மறந்து
விடுவாள். ஆனால் கைபேசி ஒலி அவளுக்கு
மறுபடியும் நினைவூட்டி விடும். மறுபடியும்
ரணகளம் தொடங்கும்.
அந்த ரணகளம் தான் நடந்தது.
நான் தாமதப்படுத்தியத்திற்கு வேறு சில காரணங்களும் இருந்தது. முக்கியமாக பள்ளியில்
நான்கு வருடத்திற்கு ஒரு முறை பள்ளிச் சீருடையை மாற்றுகிறார்கள். இது என்ன யுக்தியோ தெரியவில்லை. சுளையாக ஒரு
பெரிய தொகையை இறக்க வேண்டியுள்ளது. சாதாரண உடைகள் அது தவிர குறிப்பிட்ட நாளைக்கு
என்று தனியான உடைகள். இது தவிர விளையாட்டு
என்பதற்கு அதற்கு தனியாக ஒரு உடை. பள்ளியில் தான் வாங்க வேண்டும்.
அதைவிட கொடுமை இந்த சீரூடைகளை தைப்பவரிடம்
கொடுத்து அதை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது. மகா சவாலான விசயமாக இருக்கிறது. காரணம்
பள்ளிக்கு அருகே இருக்கும் அவரிடம் மலை போல குவிந்து கிடக்கும் மொத்த
சீரூடைகளையும் பார்க்கும் போது அவரிடன் உழைப்பும், வருமானமும் மனக்கண்ணில் வந்து
போனது. உத்தேச கணக்காக அவருக்கு சுமாராக இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம்
ரூபாய் வருமானம்.
இயல்பான வருமானம் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் கதறிக் கொண்டு தான் உடைகளை
வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
இது போன்ற சமயங்களில் தான் என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் தபால் பெட்டி
டவுசரோடு பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வந்து போகின்றது.
மற்ற பள்ளிகளை விட ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பள்ளிக் கட்டணம் இருக்கிறது. நன்கொடை என்பது இல்லை. தேவையில்லாத அக்கிரம செயல்பாடுகள் எதுவுமே இல்லை. இருந்த போதிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட வகையில் பள்ளிக்கட்டண தொகையை ஏற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது எதனால் என்று புரியவே இல்லை. ஆனால் உள்ளே பணிபுரியும் எந்த ஆசிரியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தை ஏற்றியதாக தெரியவில்லை.
எல்லா அப்பாக்களின் வாழ்க்கையுமே ஏறக்குறைய பட்ஜெட் பத்மநாபன் வாழ்க்கை
தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு மகளின் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை.
ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ஆனால் சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. வீட்டுக்ள் நடந்து
கொண்டிருந்த உரையாடல்களை கவனித்துக் கொண்டே எதுவும் பேசாமல் சட்டையை கழட்டி விட்டு
மெதுவாக குளியலறைக்கு நகர முற்பட்ட என்னை நான்கு பேர்களும் ரவுண்டு கட்டி நகர
விடாமல் தடுத்தார்கள். இல்லை என்று சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு என்
பாணியில் சமாளிக்க இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு அதிரடி திட்டத்தை
அமல்படுத்தினேன்.
ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்ன் செய்ய வேண்டும் என்று
பட்டியலிட்டு கொடுத்தேன்.
குறிப்பாக மூன்று பேர்களுக்குள் சண்டை வரக்கூடாது. தினந்தோறும் இரண்டு முறை குளிக்க
வேண்டும். குறைந்த பட்சம் ஒரு முறையாவது
தியானம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கட்டளைகள்., அப்படா.... இப்போதைக்கு தப்பித்தாகி விட்டது என்று
நகர்ந்தேன்.
ஆனால் என்ன ஆச்சரியம்?
ஒவ்வொரு நாளும் அட்சரம் பிறழாமல் எல்லாவற்றையும் கடைபிடித்து அசரடித்து என்னை
கலங்கடித்தார்கள். அத்துடன் மற்றொரு
காரியத்தையும் கூடவே செய்தார்கள்.
அலுவலகத்தில் இருக்கும் எனக்கு குறுஞ்செய்தி மூலம் இதை முடித்து விட்டோம்
என்ற சாட்சி கடிதம் வேறு. எனக்கு புரிந்து விட்டது. இந்த வாரம் மாட்டிக் கொள்ளப் போகின்றோம் என்று.
சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது. மூத்தவளின்
மூஞ்சி சுருங்கிப் போனதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு பொருளை அடைவதற்கு
முன்பு இருக்கும் அவளின் முஸ்தீபுகளை குறித்துக் கொண்டேன்.
இன்றைய தின ஞாயிற்று கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை? இன்று காலையில் பக்குவமாக நடந்து மூவரும் சேர்ந்து அதே கடைக்கு அழைத்துச் சென்றார்கள். எப்போதும் போலவே பூட்டியிருந்தது. அப்பா இங்கே வாங்கப்பா என்று நாலைந்து கடைகள் தாண்டி
மற்றொரு மொத்த கொள்முதல் கடைக்கு அழைத்துச் சென்ற போது தான் எனக்கு புரிந்தது. ஏற்கனவே வீட்டுக்கருகே இருந்தவர்களிடம் விசாரித்து
திட்டமிட்டு இங்கே கொண்டு வந்து நிறுத்திய விதம்.
அமைதியாய் பணத்தை கட்டி விட்டு உள்ளே கவனித்தேன்.
எந்த வகையான வண்டி, என்னென்ன வசதிகள் அதில் இருக்க வேண்டும் என்று உள்ளே மிதி வண்டியை
கோர்த்துக் கொடுப்பவர்களிடம் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் அங்கே இருப்பதை மூவருமே கண்டு கொள்ளவேயில்லை என்பது தான் யான் பெற்ற இன்பம்.