Showing posts with label புத்தக விமர்சனம்.. Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம்.. Show all posts

Tuesday, February 12, 2013

டாலர் நகரம் - விமர்சனம் (தமிழ்மணம்) காசி ஆறுமுகம்



சமீப காலங்களில் எதையுமே ஆழ்ந்து வாசிக்காத மனநிலை, நண்பர் ஜோதிஜி எழுதிய டாலர் நகரம் நூலை வாசித்த எடுத்த போது பயமுறுத்தியது. இருப்பினும் ஞாயிறு பகற்பொழுதில் கிடைத்த ஓய்வில் ஓரளவு வாசித்துவிட்டேன்.

முதலில் தன்வரலாறாகவே தொடங்கும் நூல் விரைவில் திருப்பூரின் பொதுவரலாறாகவும் 20 வருட திருப்பூர் நிகழ்வுகளின் ஒரு பரந்த பார்வையாகவும் விரிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கருவை எடுத்துக்கொண்டு உள்நாட்டு வணிகம், ஏற்றுமதி, பன்னாட்டு நிகழ்வுகளின் தாக்கம், சமூக சூழலின் போக்கு, சுற்றுச்சூழல், மைய மாநில அரசுகளின் பாராமுகம், என்று பெரும்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் ஜோதிஜி.

வழமையான தமிழ் ஊடகங்களில் இவைபற்றி இத்தனை ஆழமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் எதுவும் வந்ததா, வர வாய்ப்பு இருக்கிறதா என்பது ஐயமாகவே இருக்கிறது. கனமான பொருளில் எழுதினாலும் ஆர்வம் குறையாமல் நம்மை வாசிக்க வைக்கிறது ஜோதிஜியின் எழுத்து லாவகம். 'சுவாரசியத்துக்காக எழுதுகிறேன் பேர்வழி' என்று துல்லியத்தை பெரிதும் இழந்து சறுக்கும் ஊடகப் புலிகளுக்கு நடுவில், கம்பிமேல் நடப்பதுபோல சுவாரசியமும் குறையாமல் தகவல் செறிவுக்கும் பங்கம் வராமல் சாதித்திருக்கிறார்.

திருப்பூருடன் ஏதாவது தொடர்பு காரணமாக அவ்வூரைப்பற்றி அறியவிரும்பினாலும்,  பொருளாதார, சமூக நிகழ்வுகள் எப்படியெல்லாம் தம்மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அறிந்துகொள்ள வேண்டிய தொழில்முனைவோராக இருந்தாலும், வெறுமனே ஆர்வத்துக்காக வாசிப்பவராயினும் ஒவ்வொருவருக்கும் பெறுவதற்கு 'டாலர் நகர'த்தில் ஏதேனும் உள்ளது.

இந்நூல் ஜோதிஜியின் எழுத்துப் பயணத்தில் ஒரு மைல்கல். பயணம் தொடர்ந்திடவும் அது வெற்றிப்பயணமாக அமையவும் வாழ்த்துகள். ஜோதிஜிக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக தமிழ்நாடனின் 4தமிழ்மீடியாவுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்,
காசி ஆறுமுகம்
'தமிழ்மணம்' வலைப்பதிவுத் திரட்டியை உருவாக்கியவர்

டாலர் நகரம் புத்தகம் முதல் பல புத்தகங்களை வாங்க 4 தமிழ் மீடியா தளம் தனியாக ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார்கள்.  இங்கே சொடுக்கவும்.