Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Friday, August 23, 2013

பொன் முட்டையிடும் வாத்து

அமேசான் காடுகள் என்றால் படித்தவர்களுக்கு ஹாலிவுட் பட உபயத்தின் மூலம் கொஞ்சமாவது தெரிந்துருக்க வாய்ப்புள்ளது.  அதேபோல போர்னியோ (BORNEO) குறித்து தெரிந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.

போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவு. 

அமேசான் காடுகளுக்கு அடுத்து கன்னிக்காடுகளை கொண்ட பெரும் நிலப்பரப்பு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு இன்று இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருணை ஆகிய நாடுகளின் பகுதிகளாக அது பகுக்கப்பட்டுள்ளது. கன்னிக்காடுகள் என்பது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் அல்லது இதுவரையிலும் இது போன்ற இடங்களில் எவரும் நுழையாத பகுதிகளாக இருப்பவை.

மாபெரும் உயிர் மண்டலத்தை தன்னகத்தே கொண்டது போர்னியோ காடுகள். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் பார்க்க முடியாத இந்த பகுதிக்கே உரிய திணை உயிரினங்களும் இதில் அடக்கம்.  மனிதனின் கண்ணில் படாத உயிரினங்கள் இது போன்ற இடங்களில் அதிகமாக வாழ்கின்றன. அறியப்படாத ஆச்சரியங்கள் அதிகம் உள்ள பகுதி இது.

இவ்வகையில் 44 வகை பாலூட்டிகளும், 37 வகை பறவைகளும், 19 வகை மீன்கள் மற்றும் நீர்நில வாழ்வனவும் இங்குள்ளன.

இங்கு இன்னமும் கண்டுபிடிக்கப்படாத, வகை பிரிக்கப்படாத உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இவ்வளவு உயிர்ச் செறிவு கொண்ட காடு தான் இப்போது அழிவை எதிர்நோக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேல் இருந்த இக்காடு 2005 ல் 50 சதவிகிதமாக குறைந்தது.  2020 ஆம் ஆண்டு இது 32 சதவிகிதமாக மாறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாம் ஓரு அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது சில வித்தியாசமான சூழ்நிலை அங்கேயிருப்பதை உணர முடியும். உயர்ந்த மரங்கள்.  சூரியனின் கதிர்கள் கூட தரையில் வந்து சேர முடியாத அளவிற்கு மரக்கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்திருக்கும்.

நடந்து செல்லும் தரைப்பகுதியில் நிரந்தரமாக ஈரப்பதம் இருந்து கொண்டேயிருக்கும். சுவாசிக்கும் காற்றில் எப்போதும் ஜில்லென்று இருக்கும். மொத்தத்தில் வெப்பக்காற்றுக்கு தடா.

காரணம் என்ன?

"போன வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகம்"

நகர்ப்புறத்தில் கோடைகாலத்தில் எல்லோரும் சொல்லும் வார்த்தை

ஆனால் சூரியனின் கதிர்கள் காற்றை நேரடியாக வெப்பமூட்டுவதில்லை. அது வெறும் நிலத்தில் பட்டு அதன் மூலம் நிலம் சூடாகி அதனால்அதனையொற்றி உள்ளக் காற்றும் சூடாகி மேலேறுகிறது. அப்படி லேலேறிய காற்றால்தான் வளிமண்டலம் வெப்பமடைகிறது

ஆனால் நிலம் கட்டாந்தரையாக இல்லாமல் மரங்களால் சூழப்பட்டு இருந்தால் அதன் வெப்பநிலை ஒரு மட்டத்துக்கு மேல் உயரமுடியாது. ஏனென்றால் மரங்கள் நீராவியை வெளியிட்டு தன்மீது விழும் வெப்பத்தை குறைத்துக் கொள்கின்றது.

காடுகளில் உள்ள  மரங்களின் உயரமும் அடர்த்தியும் அதிகரிக்க அதிகரிக்க அதன் உட்புற குளுமையும் அதிகரிக்கிறது.  காடுகள் குளுமையாக இருப்பதன் ரகசியம் இது தான்.

மனிதர்களின் வாழ்க்கையில் கடலும் காடும் மிக மிக முக்கியமானது. நமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் இவை இரண்டுமே முக்கியப்பங்கு வகிக்கின்றது.

ஆனால் நாகரிக வளர்ச்சியில் முதலில் பாதிக்கப்படுவது இந்த இரண்டுமே. தற்போது காடுகள் என்றால் அதனை வெட்டு மரங்கள் அதிகம் கிடைக்கும் என்பதாகவும் கடல் என்றால் கழிவுகளை அங்கே கொண்டு போய் சேர்த்து விட்டால் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற பொதுப்புத்தியைத் நாகரிகம் நமக்கு கற்றுத் தந்துள்ளது.

காடென்பது வெறுமனே மரங்களுடன் முடிந்து விடுவதல்ல. அதுவொரு பெரிய இயற்கை சுழற்சியின் ஆதாரம். பல உயிர்கள் சேர்ந்து வாழும் கூட்டுக்கலவை. இதனை பல்லுயிர் பெருக்கம் என்கிறார்கள். காட்டை அழிக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது இந்த பல்லுயிர் பெருக்கமே.

பல்லுயிர் பெருக்கம் சிதைக்கப்படும் போது  இயற்கை சுழற்சி பாதிக்கப்படுகின்றது.

இதனால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை இயற்கை பலமுறை நமக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டேயிருந்தாலும் பேராசை கொண்ட மனித வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு அவலமும் மறக்கக்கூடியதாகவே இருப்பதால் காடுகளும் கடல்களும் இன்று கதறிக் கொண்டு இருக்கின்றது. 

உலகில் உள்ள மழைக்காடுகளை வெப்ப மண்டல காடுகள், மித வெப்ப மணடல காடுகள் என்று இரண்டாக பிரித்துள்ளனர்.  ஒரு காலத்தில் புவியின் மொத்த பரப்பில் 14 சதவிகிதம் மழைக்காடுகள் இருந்தன. தற்போது இது சுருங்கி 6 சதவிகிதம் என்கிற அளவிலே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதுவே துல்லிய விபரமாக இருக்காது.  நாளுக்கு நாள் உலகில் உள்ள காடுகளை வளர்ச்சியின் காரணமாக மனித சமூகம் தினந்தோறும் சூறையாடிக் கொண்டிருப்பதால் இறுதியான கணக்கு என்பது எவராலும் அறுதியிட்டு கூறமுடியாது.

காடுகளை அழிக்கும் போது மரங்கள் மட்டும் மரணிப்பதில்லை.

சூரிய ஒளி புகாத மழைக்காட்டுக்குள் இலை தழைகள் கீழே விழுந்து அதன் மேல் பறவைகள் விலங்குகளின் கழிவுகள் கலக்கின்றது.

இவை நுண்ணியிர்களால் உருமாற்றம் அடைந்து மக்கி மேல்மண் படிவு உண்டாகின்றது. இந்த மேல் மண் படிவு வளமான சத்துக்கள் நிறைந்தது. அப்படி அரை அங்குல மண்ணை உருவாக்குவதற்கு ஒரு மழைக்காடு ஆயிரம் ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறது. போர்னியோ காட்டுக்குள் இது போன்ற மண் படிவு சுமார் ஒரு  அடி உயரத்துக்கும் கூட இருக்கும்.

இது போன்ற இடங்களைத்தான் வளர்ந்த நாடுகள் குறிவைத்து மரங்களை அழித்து இந்த இடங்களில் வணிக பயிர்களை உருவாக்குகின்றார்கள்.

இந்த இடங்களில் மழை நேரிடையாக தாக்கத் தாக்க அக்காடுகளின் மரக்கவிகை (ஒரு வளர்ந்த உயர்ந்த மரத்தின் மேல்பகுதி) தடுப்பால் லட்சக்கணக்கான ஆண்டுகளாய் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்த வளமான மேல்மண்படிவு மண்ணரிப்பு மூலம் அகற்றப்படுகிற்து. நாளடைவில் நிலம் தன இயல்பான வளத்தை இழக்கின்றது. இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் வளராத நாடுகளை நோக்கி வளர்ச்சியடைந்த நாடுகள் எப்போதும் ஒரு குற்றச்சாட்டு வைப்பதுண்டு.  அதாவது இந்த நாடுகள் சுற்றுசூழலை பாதுகாப்பது இல்லை என்று.  ஆனால் இன்று உலகில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருப்பது யார் தெரியுமா?  வேறு யார்? எல்லாம் நம்ம பெரியண்ணன் அமெரிக்கா தான்.

ஒரு காட்டை அழித்து அதன் மூலம் இவர்கள் பெறும் வருமானத்தை காட்டிலும் ஒரு காட்டில் உள்ள உபரிப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது பல மடங்கு அதிகம்.  நம்முடைய ஆசைகள் என்பது உடனடியாக வேண்டும் என்ற பறந்து பட்ட சிந்தனையில் இருப்பதால் மரங்கள் அறுபடுகின்றது. 100 ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் அறுபட்டு கீழே விழும் போது அந்த காடு முழுக்க கேட்கும் ஓசை என்பது எதிர்கால சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடும் மரணயோசையின் துவக்கம்.

இயற்கை வளங்களை அழிக்காமல் நம்மால் வாழ முடியுமா?

அடுத்த பதிவில்........

தரையில் இறங்கும் விமானங்கள்

காடு என்பதை எதைச் சொல்வீர்?