எழுதிய தொடர் பதிவு பாதியில் நிற்கின்றது. அரசியல் ரீதியான பதிவுகள் எழுதும் போது அதன் ஆயுசு மிகவும் குறைவு. காரணம் அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்தமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் கூட அப்படித்தான் தேசத்தையே திருப்பிப் போட்டுள்ளது. எவருமே யூகிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமான புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இன்னும் எழுத வேண்டிய சில பதிவுகளுக்காக எழுதி வைத்துள்ள குறிப்புகளைக் கோர்க்க முடியாத நேரத்தில், நான் பணிபுரியும் தொழிற்சாலையில் நடந்த சில நிகழ்வுகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.
"எல்லோரும் மாற்றம் வேண்டும்" என்று விரும்புகின்றார்கள். ஆனால் எங்கிருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும்? என்பதில் தான் பிரச்சனை உருவாகின்றது. படித்தவர், படிக்காதவர், பாமரன் தொடங்கி இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முகமூடி. எவரும் எதையும் கழட்டி வைக்க விரும்பவில்லை. ஆனால் தன்னுடைய கொள்கை, விருப்பங்கள் என்று முழங்கிக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.
கடைசியாக அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் ஊழல்வாதிகள், அயோக்கியர்கள் என்று பொத்தாம் பொதுவாக முடித்து விட்டு அடுத்தக் கேளிக்கை விசயத்தில் ஈடுபட்டு முதலில் நடந்ததை மறந்து விடுகின்றோம்.
நாம் விரும்பும் மாற்றம் என்னில் இருந்து தொடங்க வேண்டும். என் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். நான் பணிபுரியும் இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.
அது சிறியதோ பெரியதோ, பாதிப்பை உருவாக்குமோ உருவாக்காதோ? எது குறித்தும் நான் கவலைப்பட்டதில்லை. அதற்கு ஆதரவு கிடைக்குமோ? என்று நான் அச்சப்பட்டதில்லை. மற்றவர்களின் பார்வையில் அது எப்படித் தெரியுமோ? என்பது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. முதல் அடியை எடுத்து வைக்காமல் எந்தப் பாதையின் பயணமும் தொடங்குவதில்லை.
தேர்தல் பார்வையாளர்?
வருடந்தோறும் நடத்தப்பட வேண்டிய ஒவ்வொரு அமைப்பிற்கும் உரிய தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று மனிதவளத் துறை மேலாளர் என்னிடம் வந்து கோரிக்கை வைத்த போது மனதிற்குள் அந்த விபரித ஆசை வந்தது. விட்டுக்கொடுத்தல் மூலம் தகுதியானவர்களை ஆதரிப்பார்களா? என்ற எண்ணம் உருவானது.
கூடவே அச்சமும் உருவானது. காரணம் நான் தான் தேர்தல் பார்வையாளர்.
என்னவொரு ஆச்சரியம்?
நடந்த ஏழு அமைப்பு ரீதியான தேர்தலிலும் ஓட்டுச்சீட்டு முறை ஒழிக்கப்பட்டுக் கை தூக்கி ஆதரவு முறை உருவாக்க முடிந்தது. கூடவே கூச்சல் குழப்பமின்றி, கையூட்டு இல்லாமல், 144 தடையுத்தரவு போட்டுப் பணம் கடத்த ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லாமல் அத்தனை பதவிகளுக்கும் போட்டியின்றி ஒவ்வொரு தொழிலாளர்களும் அவர்களாகவே விட்டுக் கொடுத்தல் மூலம் தலா மூன்று பதவிகள் ஒவ்வொரு அமைப்புக்கும் தேர்ந்தெடுத்தல் இன்று நடந்து முடிந்தது.
#விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போனதில்லை.
###############
மனதிற்குள் வைத்திருந்த மற்றொரு விசயத்தையும் இன்று சாதிக்க முடிந்தது. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி மற்றும் இரத்தப் பரிசோதனை முகாம் நடத்தி தொழிலாளர்களுக்குப் புதிய பாதையை உருவாக்க முடிந்தது. பரிசோதனை செய்த எல்லோருமே நெகடிவ் தான் என்று பரிசோதித்தவர் ரகசியமாக (என்னிடம் மட்டும்) வந்து சொல்லிவிட்டுச் சென்ற போது உருவான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒவ்வொருவரும் தயக்கத்துடன் தடுமாறி தவித்த போது நானே முதல் ஆளாகச் சென்று ரத்த மாதிரி கொடுத்த பிறகே ஒவ்வொருவரும் வரிசையாக வரத் தொடங்கினர்.
#தவறான பாதை தொடக்கத்தில் இனிக்கும். பிறகு வாழ்க்கை நம்மைப் பார்த்து சிரிக்கும்.






