Monday, December 30, 2024

டாலர் நகரம் 2.0 சென்னை புத்தக கண்காட்சி 2025

நான் இருக்கும் ஊரில் பிராமணர்கள் பெரிய தொழில் நடத்துவதாகத் தெரியவில்லை.  தணிக்கையாளர்களாக இருக்கின்றார்கள்.  வங்கியில் பணிபுரிகின்றார்கள்.  சில நிறுவனங்களில் வரவு செலவு பார்க்கக்கூடிய உள்ளே இருந்து பணிபுரிபவர்களாக, வெளியே இருந்து உதவக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.  ஆனால் சுயமாக ஏற்றுமதி நிறுவனம் சார்ந்த நேரிடையான  நிறுவனம் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. 

நான் தொடக்க காலத்தில் பணிபுரிந்த நூல் டிப்போ வில் கமிஷனுக்கு பணி புரியக்கூடிய சிலரைப் பார்த்தேன்.  மொத்தத்தில் தொழில் சார்ந்த வேகமான எண்ணங்கள் எவரையும் பார்த்தது இல்லை. சவால்களைச் சந்திக்கக்கூடியவர்கள், பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள், சூழல் அறிந்து பேசக்கூடியவர்கள், 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து செயல்படக்கூடிய போன்ற அடிப்படைக் குணாதிசிங்களை நான் பார்த்தது இல்லை.

பதிலாக மேலே சொன்ன அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஒருவரைக் கடந்த 24 மாதங்களாகப் பார்த்து வருகிறேன். நம்ப முடியாத ஆச்சரியமாக உள்ளது. இவர் ஏன் சென்னையில் இருக்கின்றார்? இவர் ஏன் லாபமீட்ட வாய்ப்பு இல்லாத இந்தத் துறையில் இருக்கின்றார்.  இவரைப் போன்றவர்கள் தான் தொழில் நகரங்களில் ஆணிவேறாக இருக்க வேண்டுமே என்று பலமுறை இருவருக்கும் பொதுவாக உள்ள என் நெருங்கிய நண்பரிடம் கூறியுள்ளேன்.



காரணம்  பலசமயம் என்னால் சில எல்லைகளைத் தாண்ட முடியவில்லை. குடும்ப வளர்ப்பு இன்னமும் படாய் படுத்துகின்றது. மகள்கள் திட்டும் அளவுக்கு வந்து நிற்கின்றது. மனைவி வெறுத்துப் போகும் அளவுக்கு மாறிவிட்டது. எடப்பாடி போலச் சிரித்துக் கொண்டே விஷத்தைத் தடவும் கலையை கற்றுக் கொள்ள முடியாமல் அல்லாடிக் கொண்டு இருக்கின்றேன்.

சந்திக்கும் நபர்கள் அப்படியாகவே இருப்பதால் இங்குள்ள நல்லவற்றுடன் இருக்கும் சாபக்கேடுகளைப் புத்தகமாக்கவே முடிந்தது.  என் எழுத்தை எத்தனையோ பேர்கள் படித்து விட்டு விமர்சித்து உள்ளார். ஆனால் இவர் இசை விமர்சகர் சுப்புடு போல. நான் என் நண்பரிடம் இவரைப் பற்றி நக்கல் அடித்து உள்ளேன். அதே போல அவரும் என்னை நண்பரிடம் நக்கல் அடித்துருக்கக்கூடும். நான்  எழுதியவற்றை வாசித்த பின்பு எழுத்துக்குள் இருக்கும் நேர்மையை ஆதரித்தார். அவரால் சிலவற்றை ஏற்க முடியாததாக இருந்த போதிலும் இதை இவர் தான் உணர்ந்தார். உள்வாங்கினார். ஆச்சரியப்பட்டார். 



என்னை இவருக்குப் பத்தாண்டுகளுக்கு மேலாகவே தெரியும். அப்போது இவர் என்னை எதிரி பட்டியலில் வைத்திருப்பார் என்றே பலமுறை சிரித்துக் கொண்டே இருவருக்கும் எனக்கும் பொதுவான நண்பரிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டதுண்டு. என் எழுத்துக்கள் இவரைக் கவர்ந்தது இல்லை. அங்கீகாரம் அளித்ததும் இல்லை. கண்டு கொண்டதும் இல்லை.

எந்த இடத்திலும் என் சுய மரியாதையை இம்மியளவும் விட்டுக் கொடுத்ததும் இல்லை.  இது பிரச்சனையின் தொடக்கப்புள்ளியாக இருக்கும். இதுவே தனித்திறமைக்கான ஆதாரப் புள்ளியாகவும் இருக்கும்.

ஆனால் காலம் போடும் கோலம் வித்தியாசமானது. 

இவர் பங்குதாரர்கள் துணையுடன் தனியாக நிறுவனம் தொடங்குவார், இவர் என்னைத் தொடர்பு கொள்வார். என் எழுத்துக்களைப் பட்டை தீட்டுவார் என்று கனவிலும் நினைக்கவே இல்லை.  

இருவரும் வெவ்வேறு கொள்கைகளும் சித்தாந்தகளும் கொண்டவர்கள். ஆனால் அவர் ஒவ்வொன்றிலும் ஆழமான புரிதல் கொண்டவர். கரை கண்டவர். எழுத்துலகில் அதி தீவிரமாக செயல்பட்டவர். செயல்பட்டுக் கொண்டு இருப்பவர். ஆனால் நானே இன்னமும் என்னை எந்த இடத்திலும் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளக் கூச்சப்படுகின்றவன். அதற்குண்டான தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவன்.



தனியான நிறுவனம் தொடங்கியவுடன் ஒவ்வொருவரையும் அழைத்துச் சொன்னது போல என்னிடம் சொல்லிவிட்டு புத்தமாக மாற்றக்கூடிய வகையில் ஏதேனும் இருந்தால் கொடுங்கள் என்றார்.  என் நீண்ட நாள் கனவு ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும்.  இந்தப் புத்தகம் இலவச மின் நூல் வழியே கடந்த பத்து வருடங்களில் ஒரு கோடி பேர்களிடம் சென்று சேர்ந்துள்ளது.  நம்பிக்கை இல்லாதபட்சத்தில் ப்ரிஈபுக்டாட்காம் சென்று பாருங்கள். தனியாக அடையாளத்துடன் இருக்கும்.  இது தவிர வேறொரு தளத்தில் அறுபது ஆயிரம் தரவிறக்கம் செய்யப்பட்ட நூலாகவும் இருந்ததை மீண்டும் தொடங்கினேன். 

ஆம். 2023 ஆம் ஆண்டு இதற்காகப் பலரைத் தொடர்பு கொண்டேன். அதன் பிறகே முடிவோடு மீண்டும் எழுதத் தொடங்கினேன். மொத்தம் 14 ஆண்டுகள். என்னளவில் புத்தகம் முழுமையடைந்தது.

 ஆனால் இவர் கைபட்டு உணர்ச்சிகளை நீக்கி, உணர்வுகளை மட்டுப்படுத்தி, நிஜத்தை நம்பும் வண்ணம் கோர்த்து, முன்பின் மாற்றி, முழுமையாக்கிச் சென்ற 2023 வருடம் வெளியிட்டார். 

என் காலம் முடிவதற்குள் இலங்கை முழுக்க சுற்றி வருவேன் என்று நம்பிக்கையுண்டு.  எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தஞ்சாவூருக்கும் அவருக்கும் ஏதோவொரு பூர்வஜென்மத் தொடர்பு இருப்பதாகச் சொல்லியதை வாசித்துள்ளேன்.  அதே இலங்கையில் மேலே உள்ள காலி முதல் கீழே யாழ்ப்பாணம் வரை அனைத்து மாவட்டங்களையும், கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் மலையகம் என்று மானசீகமாக என் கற்பனையில் 2009 முதல் 2023 வரை விடாது பயணித்து வந்துள்ளேன். ஆயிரம் வருட கால சக்கரத்தில் முன்னும் பின்னும் நகர்ந்து பயணித்துள்ளேன். 

இராமேஸ்வரம் என்பதனை இன்று வரையிலும் தாய்வீடு போலவே கருதிக் கொள்வதுண்டு. 

இந்தப் புத்தகம் வெளியான பின்பு ஈழம் குறித்து எண்ணங்கள் அனைத்துமே என்னை விட்டு வெளியேறியது. 

அந்த அளவுக்கு மக்களிடம் இந்தப் புத்தகமும் சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சியடைந்தேன். 



அதே போல நான் பிறந்த ஊரில் ஆறாவது முதல் எங்கள் நூலகத்திலிருந்து அனைத்துப் புத்தகங்கள், வார இதழ்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகள், கதைகள் என்று ஒன்று விடாமல் வாசித்த எனக்குத் தமிழக அரசியலை 360 டிகிரி கோணத்தில் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நிறைவேறியது. அந்த புத்தகத்தையும் இவர் தெளிவாக அழகாகக் கோர்த்து வெளிக் கொண்டு வந்தார்.

நான் விரும்பிய பக்கத்து நாடு.  நான் வாழும் மாநிலம் என்ற எண்ணம் நிறைவேறியது. 

ஆனால் என்னை வாழவைத்த மண் குறித்து எழுதிய ஒரு புத்தகம் 2014 அன்று வெளியானது. அது ஊர் குறித்த கழுகுப் பார்வை.  பொதுவான சுவராசியமான விசயங்கள் மட்டுமே அதில் இருந்தது.  ஆனந்த விகடன் தமிழகத்தில் பத்துப் புத்தகங்களில் சிறந்த புத்தகமாக (ஏழாவது புத்தகம்) தேர்ந்தெடுத்து அங்கீகாரம் அளித்தது.

ஆனால் பருந்துப் பார்வை, கழுகுப்பார்வை, மாடியிலிருந்து அமர்ந்து நிதானமாகப் பார்க்கும் பார்வை, தெருவில் நடந்து கொண்டே பார்க்கும் பார்வை, தத்தமது வாசல்படியில், முற்றத்தில், வெளியே திண்டில் அமர்ந்து கொண்டு பார்க்கும் பார்வை என்று முழுமையாக எழுதியதை அனுப்பி வைத்தேன். 

அவருக்கு உடன்பாடு இல்லை. விரும்புவில்லை என்பதனை புரிந்து கொண்டேன். நான் விட்டுக் கொடுக்கவில்லை. அவரும் விட்டுத் தர மனமில்லை. இரண்டு தண்டவாளம் போலப் பயணம் இருந்தது.  திடீரென்று அவர் மனதில் என்ன மாயம் நடந்ததோ? ஒரு பகுதியை  வாசித்து விட்டுச் சிலாகித்துப் பேசியது என்னால் மறக்கவே முடியாது.

காரணம் இவர் எவரையும் அநாவசியமாகப் பாராட்டிப் பார்த்தது இல்லை. எல்லை வகுத்து வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொண்டவர்.  கிராம் கணக்காகத்தான் பாராட்டுவார். கால் கிலோ பாராட்டு வாங்குவதற்குள் கால் நூற்றாண்டு ஆகலாம். தனிப்பட்ட முறையில் ஏமாற்றங்களை வெளியே காட்டிக் கொள்ளாதவர். நஷ்டங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதவர். தான் கடைப்பிடிக்கும் கொள்கைகளை எவருக்கும் பயந்து கொண்டு பம்மிக் கொண்டு மறைக்காதவர்.

தொழில் வேறு. தன் வாழ்க்கை வேறு என்று கோடு பிரித்து தன்னை வியாபாரக் காந்தமாக மாற்றிக் கொண்டு வருபவர்.  இதனால் தான் பலமுறை யோசித்துள்ளேன்.

தொழில் நகரங்களில் இவரைப் போன்றவர்கள் வாழும் பாக்கியம் கிடைத்திருந்தால் ஒரு தொழிலுக்கான புதிய சூத்திரங்கள் கிடைத்து இருக்கக்கூடும். 2023 மற்றும் 2024 என்ற இந்த இரண்டு வருடங்களில் என்னுடைய மூன்று தலைப்புகளில் நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.

இது வெறும் புத்தகமல்ல. உங்கள் நூலகத்தில் (வீட்டில் இருந்தால்) வைத்து சொத்துப் பத்திரங்கள் மகனுக்கு மகளுக்குக் கொடுக்கும் போது இந்தப் புத்தகத்தையும் நீங்கள் கொடுக்கலாம். இது சுய பிரஸ்தாபம் அல்ல.

என் நண்பர் சொன்னது போல உங்களுக்கு ஓர் எடிட்டர் இருந்தால் உங்கள் எழுத்து ஜொலிக்கும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.

இறைவன் அல்லது இயற்கை இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.  

எழுத்துலகில் நான் விரும்பிய அனைத்தையும் பெற்று உள்ளேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினர்களும் நேரிடையாக மறைமுகமாக எனக்கு உதவினார்கள். அதையே நான் தற்போது எழுத்து மூலம் என் செயல்பாடுகள் திருப்பி அளித்துக் கொண்டு இருக்கின்றேன். இமேஜ் குறித்துக் கவலைப்படுவதில்லை. அதீத புத்தி உள்ளவர்களின் விமர்சனம் குறித்து அஞ்சுவதும் இல்லை. 

என் கடன் பணி செய்து கிடப்பதே.

ஒரு வேளை மாறிய தொழில் நுட்ப உலக வசதிகளையும் மீறி என் புத்தகங்கள் எங்கள் தலைமுறைக்கு அதாவது என் பேரன் பேத்திகள் வரைக்கும் சென்று சேரும் பட்சத்தில், உங்களை, உங்கள் நிறுவனத்தை, உங்களுடன் பணிபுரியும் குழுவை நினைவில் வைத்திருப்பார்கள். 

உங்கள் அனைவருக்கும் நன்றி. 

2025 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

•••

இன்று முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.   

சுவாசம், சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்க எண் 395, 396 மற்றும் 165, 166

நந்தனம் ஒய் எம் சி ஏ வளாகம், டிச 27 முதல் ஜனவரி 12 வரை. 

தொடர்புக்கு +918925845234 

Tuesday, October 08, 2024

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நீங்களும் உதவலாம்.

ஜனவரி 2024 க்குப் பிறகு இன்று தான் இங்கே உள்ளே வந்துள்ளேன். வலைபதிவில் எழுதியது போதும் என்ற மனநிலை உருவானது.  2009 ஜுலையில் வலைபதிவு எழுத்துப் பயணத்தை தொடங்கினேன். முழுமையாக 15 வருடங்கள். மனதில் இருந்த, உருவான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டேன்.

தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டு வந்தேன்.  மே 4  2024 அன்று கடைசியாக எழுதினேன்.  மே 5 அதிகாலை செய்தி வந்தது.  அம்மா காலமாகிவிட்டார்.  ஃபேஸ்புக்கில் எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.  எழுத்துலகில் இருந்து முழுமையாக 150 நாட்களாக என்னை துண்டித்துக் கொண்டு விட்டேன்.

சென்ற வாரம் வரை பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து ஊருக்கு பயணம் செய்வதில் முக்கால்வாசி நேரம் முழுங்கி விடுகின்றது. மே தொடங்கி நேற்று வரை எங்கும் எதிலும் எதைப்பற்றியும் எழுதவில்லை. எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விட்டேன். மிக நெருக்கமானவர்கள் அழைத்துக் கேட்ட போதும் கூட இங்கு இப்போது எழுதும் தகவல்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.  காரணம் எல்லாவற்றிலும் இருந்து விலகியிருக்க விரும்பினேன்.  அடுத்த ஒரு வருடம் இப்படியே இருந்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக.

கடந்த 15 வருடங்களை பின்னோக்கி திரும்பிப் பார்க்கையில் உணர்ச்சி, உணர்வு, அறிவு இவை மூன்றும் என்னை வழி நடத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.  நான் சார்ந்துள்ள தொழில் வாழ்க்கையில் கிடைக்காத நண்பர்கள் அனைவரும் என் எழுத்துலக வாழ்க்கையின் மூலம் தான் கிடைத்தார்கள்.  அதில் ஒருவர் திண்டுக்கல் தனபாலன்.

உலகம் முழுக்க குறைந்த பட்சம் 5000 க்கும் மேற்பட்ட வலைபதிவர்களின் வாழ்க்கையோடு, அவர்களின் நம்பிக்கையோடு, எழுத்துலக வளர்ச்சியோடு தொடர்புடையவர். அசாத்தியமான திறமைசாலி. எதையும் எவரிடமிருந்து எதிர்பார்க்காத தன்னலம் கருதாத யோகி.  அதனால் தான் அவரை வலையுலக சித்தர் என்று அனைவரும் அழைத்தனர். பொருத்தமான பட்டமிது.

சமூகவலைதளங்கள் பக்கம் அதிகம் செல்லாமல் இருந்த எனக்கு நண்பர் ஒருவர் முரளி அவர்கள் திண்டுக்கல் தனபாலன் குறித்து எழுதியிருந்த கடித வடிவத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.  தனபாலன் கடைசியாக என்னிடம் பேசியது என் அம்மா இறந்த அதே மே மாதம். வீடு கட்டியிருந்தார். புதுமனைபுகுவிழாவிற்கு வாட்ஸ் அப் வாயிலாக அழைத்து இருந்தார். அப்போதே பேச முடியாத நிலையில் இருந்தார் என்பதனை சென்ற வாரம் தான் உணர்ந்து கொண்டேன். 

அப்போது கூட அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

திண்டுக்கல்லுக்கு குடும்பத்தோடு செல்ல தயாராக இருந்தோம்.  அம்மா இறந்த செய்தி வர அவரிடம் தெரிவித்து விட்டு மறந்து விட்டோம்.  முரளி கடிதம் பார்த்து தனபாலனை அழைத்து பேசினேன்.  கோவை  மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இதயம் சார்ந்த சிகிட்சை எடுத்து சில மாதங்களாக முழு ஓய்வில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  அவரே என்னிடம் சொன்னது.  ஒரு நிமிடம் கூட என்னால் பேச முடியாத நிலையில் இருந்தேன்.  உங்களுடன் இவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்றார்.  அந்த அளவுக்கு உடல் பலகீனப்பட்டு உள்ளதை உணர்ந்து கொண்டேன்.

அவர் செய்து கொண்டு இருந்த தொழிலை இனி தொடர முடியாது.  தறி மூலம் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள் தொடங்கி பலவிதமான சேலைகள் வரைக்கும் தமிழகம் எங்கும் பெரிய மற்றும் சிறிய ஜவுளிக்கடைகளுக்கு வழங்கிக் கொண்டு இருந்தார்.  சிறிய முதலீடு என்ற போதிலும் அவருக்கு ஏற்கனவே நிரந்தரமாக இருந்த சர்க்கரை நோய் காரணமாக தொழிலை சுருக்கி வேலையாட்கள் மூலம் செய்து கொண்டு இருந்தார்.  

ஓரே மகள் பொறியியல் படிப்பு முடித்து பெங்களூரில் பணியாற்றிவிட்டு இப்போது பணிமாறுதல் கேட்டு கோவையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். இப்போது தான் பணியைத் தொடங்கியிருப்பதால் இயல்பான சம்பளம் தான்.  நிச்சயம் தனபாலன் போன்றவர்களுக்கு வாழும் போதே வலையுலகம் அவரை அங்கீகரிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். காரணம் அவர் வலையுலகத்திற்கு செய்துள்ள பணி என்பது தமிழ்த்தாத்தா உவேசா போன்றதற்கு சமமானதாகவே நான் கருதுகிறேன்.  அவர் ஐம்பெரும் காப்பியங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க அல்லும் பகலும் அயராது பாடுபட்டார்.

தனபாலன் ஆயிரக்கணக்கான பேர்களை நம்பிக்கையூட்டி வலையுலகத்தில் பயணிக்க வைத்தார். அவர்கள் கேட்ட தொழில் நுட்ப பிரச்சனைகளை தீர்த்து உதவினார்.  புதுப்புது வலையுலக ரகசியங்களை வெளியுலகத்திற்கு அப்படியே வெளிப்படையாக எழுதி புரிய வைத்தார். தன்னுடைய பொன்னான நேரத்தை பின்னூட்டம் மூலம் ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதி எழுதியவருக்கு உற்சாகத்தை உருவாக்கி தொடர்ந்து எழுத்துலகில் பயணிக்க வைத்த பெருமை தனபாலன் ஒருவருக்கே உண்டு என்றால் அது மிகையல்ல.

பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் உள்ளார் என்பதனை உணர்ந்து கொண்டேன்.  கடந்த சில மாதங்களில் அவர் மருத்துவமனைகளில் செலவளித்த தொகை என்பது மிகவும் பெரியது.  தொடர்ந்து தொழிலில் இருந்து தேக்கம் என்பது அவரை கடந்த சில வருடங்களாக திக்குமுக்காட வைத்துக் கொண்டு இருந்தது என்பதனை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.  அவர் எதையும் என்னைப் போல தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுவெளியில் வைப்பதில்லை.

அண்ணே எங்கேயாவது உட்கார்ந்து வேலை செய்யும்படி ஒரு வேலை அமைந்தால் கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று அவர் சொன்னபோது திட்டி அலைபேசியை துண்டித்தேன்.  அவர் உடல்நிலை இனி ஒத்துழைக்காது. அடுத்த வருடம் நிச்சயம் மகளுக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளார். தொடர்ந்து செய்தே ஆக வேண்டிய மருத்துவ செலவுகள் ஒரு பக்கம். மற்றொருபுறம் அடிப்படை வாழ்வாதாரத்திற்குத் தேவைப்படும் விசயங்கள் என்று இரண்டு பக்கமும் அவரை இனி வரும் காலம் துரத்தும்.

அவரால் தொடர்ந்து பேச முடியாது. மூச்சு இழைப்பு, தடுமாற்றம் வரலாம். அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம். 

அவர் எந்த உதவியையும் யாரிடமும் கேட்கவில்லை. நான் இப்போது இங்கு எழுதுவதும் அவருக்குத் தெரியாது. அவர் அனுமதியில்லாமல் என் விருப்பத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறேன். அவருடைய இரண்டு  அலைபேசி எண்களை இங்கே எழுதியுள்ளேன்.  இரண்டிலும் ஜிபே வழியாக பணம் அனுப்ப வசதியுள்ளது என்பதனை உணர்ந்து கொண்டேன்.  

வெளிநாட்டில் வாழ்கின்ற நண்பர்கள் நிச்சயம் இந்த பணியை உங்களை சார்பாக தொடங்கலாம். தொடரலாம். அனுப்பியவர்களை வாட்ஸ்அப் வழியாக தகவல் தெரிவிக்கலாம்.  நீங்கள் செய்யக்கூடிய உதவி என்பது மீண்டும் அவரை இயல்பு நிலைக்கு வெகு விரைவில் கொண்டுவரக்கூடும்.  மனச்சிக்கலில் அதிகமாக இருப்பது பணச்சிக்கல் தான்.  இது தீர்ந்து போனால் உளச் சிக்கலில் எவ்வித பிரச்சனைகளும் உருவாகாது என்று நம்புகின்றேன்.

இந்தப் பதிவு எத்தனை பேர்களின் பார்வைக்குச் சென்று சேரும் என்பது எனக்குத் தெரியாது.  நான் ஏன் நீண்ட காலம் எழுதாமல் இருந்த காரணத்தை வலைபதிவு மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்?  இனி இவர் எழுதவே மாட்டார் என்று கேட்பதையும் நிறுத்திவிட்டார்கள். எனவே இதை வாசித்து முடித்தவர்கள் உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கலாம். அதுவும் ஒரு உதவி தான்.

இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் எழுதவிரும்பவில்லை. காரணம் அவ்வுலகம் வேறு. மனிதர்களை அரசியல் ரீதியாக பிரித்து வைத்து இருப்பதும் அநாகரிகத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதே அதன் முதன்மை நோக்கமாக உள்ளது.  உணர்வுகள் மழுங்கிப் போய் வன்மத்தை வகைதொகையில்லாமல் வளர்த்து வைத்திருப்பவர்களிடம் என்ன பேசினாலும் எடுபடாது. வலையுலகம் வேறு. மற்ற சமூக ஊடகங்கள் உலகம் வேறு.

ஏன் திண்டுக்கல் தனபாலன் போன்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் உருவானால் இப்படிப்பட்ட மனிதர்கள் தான் வெவ்வேறு காலகட்டத்தில் தன் குடும்பம் தங்கள் வசதி என்பதனையும் கடந்து அவர்களுக்குத் தெரிந்த வகையில் சமூகத்தின் ஏதோவொரு அசைவில் அடுத்த அடி நகர பலரும் முன்னேற காரணமாக இருந்து உள்ளனர் என்பதனை உங்கள் இதயம் உணரட்டும்.  உங்கள் உதவிகள் மூலம் பலவீனப்பட்டு இருக்கும் தனபாலன் இதயத்தில் மலர்ச்சி உருவாகட்டும்.  

எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு யூபிஐ வழியாக அனுப்ப விரும்பினால் கீழ்கண்ட அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

99443 45233   90439 30051

 வங்கி பரிவர்த்தனை மூலம் அனுப்ப முடியும் என்பவர்கள் இந்தியாவில் உள்ள மற்ற நண்பர்களை அனுப்பச் செய்து அவர்களுக்கு நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள்.  அவர் தற்போது இருக்கும் சூழலில் அதிக நேரம் பேச இயலாது என்பதால், இப்படியொரு ஒரு காரியம் செய்யப்போகின்றேன் என்று சொன்னால் நிச்சயம் மறுப்பார் என்பதால் நான் எதையும் கேட்கவில்லை.

(இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். சிறிய உதவி என்று யோசித்துக் கொண்டு இருக்காமல் தயங்காமல் உதவுங்கள்)