Thursday, May 20, 2021

புகழ் போதை

மது, மாது போதையை விடப் புகழ் போதை கொடூரமானது. முதல் இரண்டும் ஆரோக்கியமே குறிப்பிட்ட காலத்திற்குள் தடுத்து நிறுத்திவிடும். உங்களைச் செயல்படாத முடியாத அளவிற்கு மாற்றி விடும். ஆனால் புகழ் என்பது சாவதற்கு முதல் நாள் வரைக்கும் வெறி கொண்டு வேட்டை நாய் போலவே அலைய வைக்கும்.




பணம் சேர்ந்தவுடன் உங்கள் பாதை மாறத் தொடங்குகின்றது என்றால் நீங்கள் புகழின் மலை உச்சிக்குச் செல்லத் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

உங்களுக்குப் பிடித்த பிடிக்காத இறந்த அரசியல்வாதிகளை நினைவில் கொண்டு வாருங்கள். பாரபட்சமின்றி அவர்களின் கடைசிக் காலத்தை நினைத்துப் பார்த்தால் இது புரியும். நரக வாழ்க்கை என்பதனை வாழும் போதே அனுபவித்து மரணித்திருப்பார்கள். நமக்குத் தெரியாது. உள்வட்டத்திற்குத் தெரியும். ஆனால் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்கள் எப்போது சாவார்? என்று காத்துக் கொண்டிருப்பவர்கள். 

நடிகர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை புகழும் பணமும் அதிகமாக இருக்கும் எல்லா இடங்களிலும் இது இயல்பானது தான்.

இந்தப் புகழ் போதையில் புதிய ஆட்சியில் அமைச்சராக உள்ளவர்கள் சிக்கிக் கொள்ளப் போகின்றார்களோ என்று கவலைப்பட வேண்டியதாக உள்ளது. 

களப்பணியில் இறங்கியுள்ளோம் என்பதனை நிரூபிப்பதற்காக எந்தப் பக்கம் திரும்பினாலும் ஊடகங்கள் புடை சூழ, கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு, இதையே வேலையாக வைத்துக் கொண்டு தினசரி கடமையாகவே இருப்பதாகத் தெரிகின்றது. 

மக்களுக்குத் தெரிய வேண்டாமா? ஊடகங்கள் தானே மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்? என்ற உங்கள் கேள்விக்கு மனசாட்சியில் கை வைத்துச் சொல்லுங்கள் முதல் அலை இரண்டாம் அலையில் நம் ஊடகங்கள் சாதித்தது என்ன? அவர்களால் மக்கள் துன்பப்பட்டது அதிகம். 

பயத்தில் பாதிப் பேர்கள் செத்தது தான் நடந்தது. மீதிப் பேர்களைப் பதட்டத்தில் வைத்திருப்பது தான் இன்னமும் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பிடுங்கியது அனைத்தும் தேவையில்லாத ஆணிகள். முக்கால்வாசி வட இந்திய ஊடகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். ஆனால் இவர்கள் கொள்ளை நோயில் கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படித்தான் புதிய ஆட்சியின் துவக்கமும் உள்ளது. மு க ப விறகு அதிகப்படியான இடம் கொடுப்பதும், பரஸ்பரம் புகழ்மாலை சூட்டிக் கொள்வதும் பார்க்க சகிக்க முடியாததாக உள்ளது. ஆனால் இதற்கு நிச்சயம் ஒரு முடிவு மிக விரைவில் வரப்போகின்றது என்றே எனக்குத் தோன்றுகின்றது.

காரணம், குடும்ப பாரம்பரியம், தனிப்பட்ட செல்வாக்கு, சமூக அந்தஸ்து, வெளிநாட்டுப் படிப்பு என்று சொல்லக்கூடிய வகையில் மாற்றுக் கருத்து இருப்பவர்களும் எதிர்பார்த்தபடி வந்த நிதியமைச்சர் இப்போது செய்து கொண்டிருப்பது அப்பட்டமான வெற்றி கொண்டான் மூன்றாம் தர அரசியலாகவே தெரிகின்றது.

தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களில் வந்தமர்ந்த ஒரு நிதியமைச்சருக்குக் கூட அதிகாரிகள் கொடுக்கும் கோப்புகளை வைத்து கேள்வி எழுப்பத் தெரியுமா? என்பதனை யோசித்துப் பாருங்கள். அதிகாரிகள் கொடுப்பதை சட்டமன்றத்தில் காற்புள்ளி அரைப்புள்ளியோடு அப்படியே ஒப்பித்து விட்டுக் காணாமல் போய்விடுவார்கள். சென்ற வருடம் கூட நிதிச் செயலாளர் தான் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரே காரணம் ஓர் அமைச்சருக்குக்கூட அந்தத் தகுதியில்லை என்பது தான் உண்மை. நிதி சார்ந்த படிப்பு இல்லை. அனுபவம் இல்லை. அக்கறையில்லை. மக்கள் நலன் மேல் அனுதாபம் இல்லாதவர்களின் கையில் இருந்த காரணத்தால் மட்டுமே அதிகாரிகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று இன்று வரையிலும் முரசு கொட்டிச் சென்ற ஆட்சி ஆறு லட்சம் கோடி என்ற உன்னத சாதனையைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.

பிணியூர்த்தி கட்டண அரசியல்

யார் காரணம்? ஏன் இப்படி நடந்தது? என்பதனை பேசும் நேரம் அல்ல இது. சிறப்பு சிகிச்சையுடன் அவசர சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளியை வைத்துக்கொண்டு பூ மாலை சூட வந்தான் பூக்கள் இல்லையே? என்று பாடும் நேரமா இது?

வெளியே சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் எங்கள் கட்சி. இவர்கள் எங்கள் கட்சி. அவர் திறமையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று ஆயிரம் கேள்விகள் கேட்கலாம்.

ஓர் ஏற்றுமதி நிறுவன தொழிற்சாலையின்  மிகக் குறைந்த அளவாக வைத்துக் கொண்டாலும்,  வாரச் சம்பளத் தொகையான 50 லட்சத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் கணக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் பணிபுரிந்து இருந்தால் நிதி என்பதன் அர்த்தமும் அதற்குப் பின்னால் இருக்க வேண்டிய பயமும், அர்ப்பணிப்பு உணர்வும் உங்களுக்குப் புரிய வாய்ப்புண்டு. 

வாராந்திரச் செலவு கணக்கைப் புள்ளி விபரக் கணக்கோடு அறிக்கையாக மாற்றி, புள்ளிப் புள்ளியாக எண்ணிக்கையைக் கோர்த்து, பூச்சி பூச்சியாக லாப நட்டக் கணக்கைத் தனியாக பிரித்து, அதில் பல வண்ணங்களைத் தீட்டி, எது சரி? எது தவறு? எங்கு அதிகம்? எங்கு குறைவு? எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது? எது தேவையில்லாத செலவு என்பதனை நாலைந்து பேர்கள் துணையோடு மீண்டும் மீண்டும் சோதித்து முடித்து இறுதி அறிக்கை தயார் செய்வதற்குள் உங்கள் தாயிடம் குடித்த பால் வெளியே வந்து விடும்.

என்ன மாதிரியான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும்? போன்றவற்றை அணுக தனிப்பயிற்சி வேண்டும்.

அக்கவுண்ட்ஸ் மேலாளர், நிதி மேலாளர் கடந்து முதலாளியிடம் சென்று அவர் ஒகே என்று சொல்லும் வார்த்தையைக் கேட்பதற்குள் உங்கள் கிட்னி சட்னியாகி விடும்.

அந்த சமயத்தில் மனைவி அழைத்தால் கூட முதல் முறை ஒரு மணி நேரம் கழித்து அழைக்கின்றேன் என்று இயல்பாக சொல்லும் நாம் புரிந்து கொள்ளாமல் மீண்டும் அழைத்தால்  இன்று முழுவதும் அழைக்காதே என்று கடுப்படிப்போம்.

காரணம் நிதி என்பது இதயம் போன்றது. உயிர் போய்விடும். அதாவது பணிபுரியும் போது மானம் மரியாதை அனைத்தும் நின்று விடும். ஆனால் தமிழ் நாட்டில் நிதித்துறை என்பது கோயம்பேடு சந்தை போலவே உள்ளது. நிதித்துறையில் இருப்பவர்களுக்கு செயல் மட்டுமே முக்கியம். பேச்சல்ல. 

இவர் மாற்றுவார் என்றே நம்பினேன். 

ஆனால் நம் நிதியமைச்சர் நிதியைத் தவிர மற்ற அனைத்தையும் பேசுகின்றார். அவர் பொட்டு வைத்துக் கொண்டு சமூகநீதி பேசுவது அவரின் தனிப்பட்ட விருப்பம் அல்லது சமூக நீதி, மதநல்லணிக்கம் அவர் கட்சியின் கொள்கை. ஆனால் இவையெல்லாம் நிதித்துறைக்கு தொடர்பில்லாதது. எட்டு கோடி தமிழர்களுக்கும் பொதுவானது. அனைத்து மக்களின் நலன் சார்ந்தது. எதிர்காலம் சார்ந்த நம்பிக்கையை அளிப்பது.

1350 கோடி ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தில் தணிக்கையாளராக பணிபுரியும் என் நெருங்கிய நண்பர் மாதம் தோறும் இரண்டு நாட்கள் Internal Auditing நடக்கும் சமயத்தில் அவர் அலைபேசி இணைப்பு முழுமையாக உயிர் இழந்து இருக்கும். நான் புரிந்தே வைத்துள்ளேன்.

மற்ற துறைகளை விட நிதித்துறை என்பது நூறு மீட்டர் ஒட்டப் பந்தயம் போன்ற வேகத்தில் செயல்பட்டே ஆக வேண்டிய துறையாகும். பத்து நாட்கள் தானே ஆகின்றது? புரிந்து கொள்ளவே முப்பது நாட்கள் ஆகாதா? என்று கேள்வி வரும்.  அது அந்தத் துறையைப் பற்றித் தெரியாதவர்களுக்கு. இவர் அப்படியல்ல என்று தான் உலகம் முழுக்க நம்ப வைத்துள்ளனர்.  வானத்தை வளைத்து தோரணம் கட்டி நட்சத்திர சீரியல் பல்பு போட்டு ஒளிமயமான தமிழ்நாட்டின் விடியலை இவர் தரப் போகின்றார் என்று நான் சொல்லவில்லை. ஆதரிக்கும் ஊடகங்கள் தேர்தலுக்கு முன்பேயிருந்து சொல்லிக் கொண்டேயிருந்ததே?

அவருக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை? அவர் தவறானவராகத் தெரிகின்றார்? அவருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஒரு துறை உள்ளது? அதற்கென ஓர் அமைச்சர் உள்ளார்? சட்டம், சம்பிரதாயங்கள் உள்ளது.  நினைத்தவுடன் இந்த நாட்டில் எதுவும் செய்து விட முடியாது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

தமிழக நிதி குறித்து எனக்கே புரியும் வண்ணம் ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்க வேண்டும் என்கிறார்.  நல்லது. எவரும் இதுவரையிலும் செய்யாதது. செய்ய விரும்பாதது. ஆனால் அதிகாரிகளை வேலை வாங்கி இந்நேரம் வெளியிட்டு இருக்க வேண்டும். வெளியிட்ட பின்பு கடந்த பத்து நாட்களாக நான் இதில் மட்டும் தான் கவனம் செலுத்தினேன். நான் பணிபுரியும் வேலை என்பதே இனி தான் எனக்குப் புரியும். இதன் அடிப்படையில் நீங்கள் கருத்துச் சொல்லுங்கள் என்று பொது சமூகத்திடம் தூக்கிக் கொடுத்து இருந்தால் மு க ப பாராட்டுகின்றார்களோ இல்லை உலகம் முழுக்க இருக்கக்கூடிய நிதியாளர்கள் உச்சி முகர்ந்து பாராட்டித் தள்ளியிருப்பார்கள்.  தொழில் துறையினர் முதல் அரசாங்கத்தோடு நாம் இனியாவது இணக்கமாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்களின் மனதில் நிச்சயம் மாறுதல் உருவாக வாய்ப்புண்டு. 

கடந்த பத்தாண்டு காலத்தில் எந்தந்த துறையில் எப்படியெல்லாம் அலங்கோலம் நடந்தது என்பதனை இவர் பேட்டி மூலம் சொல்லிக் கொண்டு தன் வேலைத்திறனை உலகம் முழுக்க பரப்பத் தேவையில்லை. அந்த அறிக்கையே அடுத்த பத்தாண்டுகளுக்குப் பேசும் அல்லவா?

ஏன் செய்யவில்லை?

செய்ய முடியாது என்பது தான் தமிழக அரசியல். 

என் நோக்கம் புதிய ஆட்சி குறித்து அவநம்பிக்கையை விதைப்பதல்ல. பரஸ்பரம் பங்காளிகளுக்குள் உருவாகும் பாகப்பிரிவினைகளை விரைவில் சுமூகமாக பேசித் தீர்த்து கொள்வார்கள் என்று நம்பிகையை உங்களுக்கு விதைக்கவே விரும்புகிறேன்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... என்னது புகழ் போதையா...? புகழ் என்றால் என்னவென்று தெரியும் தானே...? அடியேன் முதலில் செய்த ஆய்வே அது தான்...

முடிவு பத்தி தான் அருமை...! ஹா... ஹா...

புதிதாக "எரியுதடி மாலா" குழுமத்திலும் சேர்ந்தமைக்கு வாழ்த்துகள்...

கிரி said...

"இவர் மாற்றுவார் என்றே நம்பினேன். "

நானும் இவர் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன், இப்பவும் உள்ளது.

ஆனால், இவரது பேட்டிகள் பொறுப்பான நபராக இவரைக் காண்பிக்கவில்லை.

மத்திய நிதித்துறை பற்றி பல தகவல்களை விளக்கினார் ஆனால், பல தகவல்களைப் பற்றிப் பேசவில்லை குறிப்பாக காங் காலத்தில் ஏற்படுத்திய கடன் சுமை.

சுருக்கமாக அவருக்குத் தேவையான தகவல்களை மட்டும் பேசினார்.

ஜக்கியை அவன் இவன் என்று பேசியது எல்லாம் பொறுப்பான நபருக்கு அழகல்ல.

அவசரப்பட்டுப் பேசினாரா என்னவோ.. மேலிடத்து அழுத்தம் காரணமாகவோ தற்போது இனி பேச மாட்டேன்.. என்று அறிக்கை விட்டுள்ளார்.

எப்படியிருந்தாலும் நிச்சயம் பன்னீர் செல்வத்தை விட சிறப்பாகவே பணி புரிவார்.

ஸ்ரீராம். said...

குடும்ப பாரம்பர்யம் மட்டுமே ஒருவரின் தகுதியை வரையறுத்து விடாது என்பது புரிகிறது.