Tuesday, May 18, 2021

அரவிந்த் கேஜ்ரிவால் என்ற அக்மார்க் கிரிமினல்

என் மேல் தனிப்பட்ட முறையில் அன்பு வைத்துள்ள நெருங்கிய நண்பர்கள் வருத்தப்படுகின்றார்கள்.  என் எழுத்தை வரிக்கு வரி வாசிக்கின்றேன் என்கிறவர்கள் சங்கடப்படுகின்றார்கள். நீங்கள் இப்படி எழுதலாமா? இதனைப் பகிரலாமா? என்று உரிமையுடன் தனித் தகவல்களில் கேள்வி எழுப்புகின்றார்கள். ஆனால் இங்கு அரசியல் என்பதே அநாகரிகத்தின் உச்சம் தொட்டவர்களால் மட்டுமே இயக்கப்படுகின்றது என்பதனை உணர மறுக்கின்றார்கள்.


சென்ற ஆண்டு பரவிய கோவிட் அலைக்கு முக்கிய மூளையாக இருந்த இடம் டெல்லி. நானே வருத்தப்பட்டு வலையொளியாக, எழுத்து வடிவத்தில் பாஜக அரசின் மேல் குற்றம் சுமத்தி இருந்தேன். டெல்லியில் பணிபுரிந்த என் நண்பர் என்னிடம் பேசிய போது என் வருத்தம் அதிகமாகத்தான் இருந்தது. டெல்லி என்ற யூனியன் பிரதேசத்தில் காலம் காலமாக இருந்து வரும் அக்கிரமச் செயல்பாடுகளை உள்வாங்க முடிந்தது. 

பாஜக அரசு தொடர்ந்து தவறு தான் செய்து கொண்டிருக்கிறது என்பதனை உறுதியாக நம்பினேன். 

ஆனால் தொடர்ந்து அதனைக் கவனித்த போது இப்போது தான் அரசியல் என்பதன் உண்மையான இயங்குதளம் எங்கிருந்து? எப்படி? எதனால்? எவர் மூலம் தொடங்கப்படுகின்றது என்பதனையே புரிந்து கொள்ள முடிந்தது. அரசியல் என்பது ஈவு இரக்கம் அற்றது என்பதனை இப்போது என்னால் உணரமுடிகின்றது.

சென்ற ஆண்டு முதல் அலை தொடங்கிய போது அங்கு பணிபுரிந்த அருகே உள்ள ஏழெட்டு ஹிந்தி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த அத்தனை பேர்களையும் டெல்லியிலிருந்து நகர்த்தும் பணியை அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணும் காதும் வைத்தாற் போலச் செய்து முடிக்க மிகப் பெரிய களேபரம் உருவானது. முதலில் அவரவர் ஊருக்குச் சென்று விடுங்கள் என்றார்கள். எவரும் நகரவில்லை. தங்கியிருந்த இடங்களில் தண்ணீர் மின்சாரம் நிறுத்தப்பட சலசலப்பு உருவானது. வதந்திகள் இறக்கை கட்டி பறக்க பயம் ஒவ்வொருவருக்கும் தொற்றிக் கொண்டது. ஒரே சமயத்தில் அனைவரும் தத்தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட அவர்களின் கால்நடைப் பயணம் உலகத்திற்குக் காட்சிப் பொருளாக மாறியது.

உலகமே அதனைப் பார்த்து பாஜக மேல் புழுதி வாரித் தூற்றியது. 

பல்வேறு மாநிலங்களில் டெல்லியில் உருவான இடப்பெயர்வு ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கியது. இதன் மூலம் அந்தந்த மாநில முதல்வர்கள் தான் அனைத்து விதமான கெட்ட பெயர்களையும் பெற்றார்கள். கிரிமினல் எப்போதும் போல ஒன்றும் தெரியாதவர் போல இருந்து விட்டார். இந்த அலை அடங்கவே அடுத்த சில மாதங்கள் ஆனது. ஆனாலும் மத்திய அரசு மீண்டு வந்தது.

இப்போது தெருவுக்குத் தெரு நான் மருத்துவமனை கட்டியுள்ளேன் என்று மக்களிடம் ஓட்டு வாங்கி வந்தவர் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உச்சநீதிமன்றம் தலையில் கொட்டும் அளவிற்கு மாறியுள்ளது.

டெல்லியில் அரசு பள்ளிக்கூடங்களில் அரவிந்த் கேஜ்ரிவால் கொண்டு வந்த மாற்றங்கள், மொகல் மருத்துவ விடுதி என்ற பெயரில் மக்களுக்காக ஒவ்வொரு தெருவிலும் சிறிய அளவில் கொண்டு வந்த மருத்துவமனைகள் என்று அவர் செய்த காரியங்கள் அனைத்தும் பார்ப்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு ஆகா ஓகோ என்றே இருந்தது.  ஊடகங்கள் செய்யும் மாயத்தை நீங்கள் நம்புகின்றீர்கள் என்று நண்பர்கள் என் மேல் குற்றச்சாட்டு வைத்தார்கள்.

இப்போது மொகல் மருத்துவமனை சார்நத வலையொளியை டெல்லியில் உள்ள பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்கள். பன்றிகளும் மாடுகளும் ஒதுங்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. சுவர் முழுக்க அரவிந்த் கேஜ்ரிவாலின் முகம். இவனின் முகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மருத்துவமனை என்ற பெயரில் குட்டிச்சுவர்கள் பல் இளிக்கின்றது. 

உருவாக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்திற்கு ஒதுக்கிய நிதியின் அளவு ரூபாய் 1400 கோடி. இறுதியாக இப்படி வந்து நிற்கின்றது. 

இன்றைய சூழலில் கூட இதனைக் கவனிப்பவர் யாருமில்லை. 

எந்த ஊடகமும் இன்று வரையிலும் இதனைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஒரு வேளை இந்த மருத்துவமனைகள் செயல்பாட்டிலிருந்து இருக்கும் பட்சத்தில் டெல்லியில் இந்த அளவுக்குக் கோரம் நடந்து இருக்க வாய்ப்பில்லை?  இன்று இந்தியா முழுக்க பரவிய கோவிட் அலைக்கு காரணமும் இதுவே தான். கூடவே இப்போது உருவான வைரஸ் ன் மியூடண்ட் அளவு வீபரிதமாக மாறி விட இந்தியாவின் பொது சுகாதாரத்துறையே திகைத்துப் போய் நிற்கின்றது.  வெட்ட வெட்ட பூதம் போல மாறி மாறி வளர்ந்து கொண்டேயிருக்கிறது?

ஆக்ஸிஜன் மத்திய அரசு தரவில்லை. ஒத்துழைப்பு இல்லை. எங்களிடம் நிதி இல்லை. பிணக்காடாக டெல்லி மாறிக் கொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும் என்று அலறி இந்தியா என்பதே பாதுகாப்பு அற்ற நாடு என்பதனை உலகம் முழுக்க பரப்பிய  அரவிந்த் கேஜ்ரிவாலை இந்திய அரசியலில் மட்டுமல்ல. பொது வாழ்வின் கறையாக இருப்பவரை அகற்ற வேண்டும்.