Wednesday, May 19, 2021

பிணியூர்த்தி கட்டண அரசியல்

நான் இந்த விசயத்தில் கட்சி சார்ந்து யோசிக்க விரும்பவில்லை. எதார்த்தம் சார்ந்தே யோசிக்க விரும்புகிறேன்.  ஆனால் இங்குள்ளவர்களின் மனோநிலை குறித்து அதிகம் வியப்படைகின்றேன்.


1. முதல் தடுப்பூசி போட ஏழு கிலோ மீட்டர் கடந்து அரசு தலைமை மருத்துவமனையில் தான் போய் போட்டுக் கொண்டேன். மனைவி அடுத்த நாள் நான் கொடுத்த நம்பிக்கை பார்த்து அவரும் வந்து போட்டுக் கொண்டார். அதற்கு முன்னால் நண்பர்களில் பெரும்பாலோனோர் தனியார் மருத்துவ மனைகளில் சென்று ரூ 250 கொடுத்துப் போட்டுக் கொண்டோம் என்றே எழுதினார்கள். நானும் மிக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டு இருக்க முடியும். ஆனால் எனக்கு அரசு மருத்துவமனைகள் முக்கியமாகத் தெரிகின்றது. அங்கு செயல்படும் நிர்வாக அமைப்பை உணர விரும்புகிறேன். என்னை விடப் பல படிகள் பொருளாதார நிலையில் கீழே உள்ள மக்கள் அங்கே வரும் போது என்ன மாதிரியான வரவேற்பு பெறுகின்றார்கள்? எப்படி அரசாங்க சேவைகள் அவர்களைச் சென்று சேர்கின்றது? என்பதனை அனுபவப்பூர்வமாகப் பார்க்க விரும்புகிறேன். 

2. நான் சென்ற போது இரண்டு நபர்கள் தான் ஊசி போட வந்து இருந்தார்கள். மருத்துவக்கல்லூரியில் பயிலும் இளம் பெண்கள் தான் ஊசி போட்டார்கள். அற்புதமான சேவை. அழகான உபசரிப்பு. பெருமைப்படக்கூடிய வகையில் இருந்தது.

3. இந்தியாவில் நான் வெறுக்கக்கூடிய இரண்டு விசயங்கள். ஒன்று டோல் ப்ரி எண். மற்றொன்று இணையம் வழியே (விதிவிலக்கு உண்டு) தடுப்பூசிக்குப் பதிவு செய்யுங்கள் என்பது. (இது முற்றிலும் தோல்வி என்பது தனிக்கதை). நான் அங்கே சென்ற போதே அங்கு பணிபுரிந்த ஒருவரின் அலைபேசி எண் வாங்கி வைத்து இருந்தேன். சில தினங்களுக்கு முன்பு மரண அவஸ்த்தைப்பட்டு கோவாக்ஸின் இரண்டாவது ஊசி போட்டுக் கொண்டேன். கோவாக்ஸின் தட்டுப்பாடு குறித்து அதன் பின்புல அரசியலை நோண்டினால் கடைசியில் அமெரிக்கா வரைக்கும் சென்று சேர்கின்றது. உணர்ந்த காரணத்தால் அமைதியாக இருக்க வேண்டியதாக உள்ளது. 

4. என் மகள்களைத் தனிப்பட்ட முறையில் அரசு பொது மருத்துவமனைகளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றுலா போலத் தனித்தனியாக அங்கே அழைத்துச் சென்றுள்ளேன். இங்கே தான் உங்களுக்குத் தேவையான சமூகவியல் பாடங்கள் கிடைக்கும் என்பதனை உணர்த்தி உள்ளேன். அவர்கள் மனம் மாறுமா? என்று எனக்குத் தெரியாது. இதே போலப் பல காரியங்கள் செய்த காரணத்தால் படு பயங்கரக் கஞ்சப் பிசினாரியாக மாறி எனக்கே ஆப்பு வைக்கின்றார்கள். பத்துப் பைசா எடுத்துச் செலவழிக்கவே யோசிக்கின்றார்கள். அவர்களின் உண்டியல் பணத்தை அவசரத்திற்குக் கேட்டால் கூட நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் வட்டி என்கிற அளவிற்கு வந்து நின்று மிரட்டுகின்றார்கள்.

4. நிச்சயம் இவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்று விடுவார்கள் என்றே நம்புகிறேன். அப்படியே பெற முடியாத சூழலில் வாழ நேர்ந்தாலும் எதார்த்த உலகில் எப்படி வாழ்வது என்பதனை கற்று இருப்பார்கள் என்றே நம்பிக்கை வந்துள்ளது. இதைத்தான் இன்றைய ஒவ்வொரு பெற்றோர்களும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எவற்றையெல்லாம் மதிக்காமல் பொருட்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அசட்டையுடன் கடந்து வந்தேனோ அதனை அவர்கள் வாழ்க்கையில் நடந்து விடக்கூடாது என்பதற்காக நிஜ உலகத்தை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டே வருகிறேன்.

இதை இங்கே எழுதக் காரணம் தனியார் மருத்துவமனை மற்றும் பிணியூர்தி கட்டணம் குறித்து இங்கே பல்வேறு விதமாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

5. சென்ற வருடம் மகளுக்காக அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்த போது அந்த மருத்துவமனையின் அத்தனை பகுதிகளையும் பார்வையிட்டேன்.  அங்கு அமர்ந்து இருந்த போது அதன் ஒரு நாள் Over Head Expenses எவ்வளவு ஆகும் என்று கணக்கிட்டு அங்கே வந்து போய்க் கொண்டிருப்பவர்களைக் கணக்கில் வைத்துப் பார்த்த போது பாதிக்குப் பாதி நட்டத்தில் தான் இருக்கும் என்றே யூகித்தேன். பக்கத்து வீட்டுக்காரர் மற்றொரு மருத்துவமனையில் சேர்த்து இருந்த போது அங்கு பார்வையிட்டு அங்குள்ள அதீத மருத்துவக்கட்டணங்களையும் மனதில் யோசித்துக் கொண்டே அங்கே உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை யோசித்த போது அதுவும் நட்டத்தில் தான் இருக்கும் என்றே யோசித்தேன்.

7. வெளியிலிருந்து பார்க்கும் போது இவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள் என்று எளிதாக நாம் சொல்ல முடியும்.  365 நாட்களும் அவர்களுக்குத் தேவையான நோயாளிகளும், வாங்கி வைத்துள்ள மருத்துவ உபகரணங்களுக்கும் வங்கி வட்டி கணக்கையும் கணக்கிட்டால் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது தான் ஒவ்வொரு தொழிலும் உள்ளது. அவரவர் பாடு. இதுவொரு வேட்டைக்காடு. அரசாங்கம் ஏன் இதில் தலையிடுகின்றது என்பதே புரியவில்லை? காரணம் அரசாங்கம் செய்ய வேண்டியது அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை சரி செய்து வரக்கூடிய மக்களுக்கு கட்டாயம் சேவை செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் அது எந்த ஆட்சியிலும் நடைபெறுவதே இல்லை.  அரசு பள்ளிக்கூடங்கள் போலவே அரசு மருத்துவமனையும் தேவையான உள்கட்டமைப்பு இல்லாமல் தடுமாறுகின்றது. மக்கள் விரும்பும் வண்ணம் இருந்தால் ஏன் மக்கள் தனியார் மருத்துவமனைப் பக்கம் செல்லப்போகின்றார்கள்? அரசு தன் கடமைகளைச் செய்வதில்லை. செய்ய விரும்பவில்லை. இதற்குள் நுழைந்தால் அரசியல்வாதிகள் வைத்திருக்கும் மருத்துவமனைகளும் பள்ளிகளைப் பற்றியும் நாம் பேச வேண்டியதாக இருக்கும். கடைசியில் அது அதிமுக, திமுக என்று பிரிந்து நிற்கும். நண்பர்கள் அவர்கள் யோக்கியமா? இவர்கள் யோக்கியமா? என்று பிரிந்து நிற்பார்கள். கடைசி வரைக்கும் இங்கே எந்தத் துறையிலும் கடந்த 30 வருடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை எவரும் உருவாக்கவே இல்லை என்பதனை வசதியாக மறந்து விடுவார்கள்.

8. ஐந்து நட்சத்திர விடுதிகளில் 365 நாட்களில் சில மாதங்கள் மட்டுமே முழுமையாக கூட்டம் நிரம்பி வழியும்.  மற்ற 10 மாதங்கள் அவர்கள் என்ன செய்வார்கள். இட்டு நிரப்பத்தான் செய்வார்கள். லக்சூரியஸ் டேக்ஸ் என்பதெல்லாம் எந்த அளவு? என்று தெரிந்த போராளிக்கூட்டத்திற்கு இதைப் பற்றி என்ன சொன்னாலும் புரியாது. 

9. எந்த தனியார்ப் பள்ளிகளும் எவரையும் கை பிடித்து எங்கள் பள்ளிக்கு வாங்க என்று அழைப்பதில்லை.  அப்படியே அழைத்தாலும் நாம் செல்வது நம் விருப்பம். சென்ற பிறகு கதறுவது முட்டாள் தனம். அரசுப்பள்ளிகள் ஆயிரம் இருக்கிறதே?  உன் பெருமையைக் கௌரவத்தை நிலைநாட்ட உள்ளே நுழைந்து விட்டு குய்யோ முய்யோ என்று கதறுவது முறையாகாது?

10. தனியார் முதலாளிகளை வாழ விடுங்கள். காரணம் அவர்களுக்கு அரசு எந்த வகையிலும் உதவுவது இல்லை. அவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள் என்று கூவாதீர்கள்.  

திருப்பூர் மற்றும் பல்லடம் அவினாசி அரசு மருத்துவமனைகளில் இப்போது படுக்கை வசதிகள் இல்லாமல் தரையில் எஸ் வடிவம், இசட் வடிவம், யூ வடிவத்தில் படுக்க வைக்கின்றார்கள்.  பத்துப் பேர்கள் சேர்ந்து உங்கள் சமஉ விடம் சென்று சொல்லுங்கள். கொஞ்சமாவது மாறும். 

ஆனால் இங்கே எதுவும் கடைசி வரைக்கும் மாறாது.  காரணம் நாம் எந்த அளவுக்கு ஹிப்போகிரசியாக இருக்க வேண்டும் என்ற விரும்புகின்றோமோ? அப்படித்தான் சிஸ்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் இருப்பார்கள்.  வருந்தி பலன் இல்லை.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மகள்கள் உங்களை விட கில்லாடிகளாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை...

Yaathoramani.blogspot.com said...

ஆனாலும் தனியார்களின் ஆஸ்பத்திரிக் கொள்ளை கொஞ்சம் கூடுதலே...அவர்களும் கொஞ்சம் மாறவேண்டும்...