Tuesday, March 10, 2020

CAA குடியுரிமை போராட்டங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா சென்ற வாரம் நடந்தது. அப்போது எடப்பாடி, 

"சிறுபான்மை மக்களுக்கு அரணாக எங்கள் அரசு திகழும்".

எனக்கென்னவோ "கவுண்டர் அட்டாக்" என்பது அவர் சார்ந்த சாதியைக் குறிக்காமல் தமிழக அரசியலை சசிகலாவிடம் இருந்து எடப்பாடியார் கற்றுக் கொண்ட வித்தையைக் காட்டிக் கொண்டு இருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

•••••

சென்ற வாரம் இந்து முன்னணி "புஷ்பா திரையரங்கம் அருகே "சிஏஏ ஆதரவு கூட்டம்" நடத்தினார்கள். மகளுடன் சென்ற போது அவர் கேட்க வேண்டும் என்பதற்காக சில நிமிடம் ஓரமாக நிறுத்தினேன். பயந்து விட்டார். "என்னப்பா இப்படிப் பேசுகின்றார்கள்?" என்றார். ஆயிரம் வருடத்தைத் தோண்டித் தோண்டி எடுத்துக் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் சாலை ஓரத்தில் கூட்டம் நடத்தக் காவல் துறை அனுமதி வழங்கியிருந்தனர். போக்குவரத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். ஷாமியானா பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியே கடந்து போய்க் கொண்டேயிருந்தவர்கள் எந்தச் சலனமின்றி கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.





*******

இன்று எஸ்ஏபி திரையரங்கம் அருகே உள்ளே மசூதி உள்ளே சந்துக்குள் மற்றும் பெரியார் காலணி செல்லும் வழியில் சந்துக்குள் இஸ்லாமியர்கள் சிஏஏ எதிர்ப்புக்கூட்டம் நடத்தினார்கள். ஷாமியானா பந்தலில் பெண்கள் ஆண்கள் குழுமியிருந்தனர். கூட்டம் குறைவாகவே இருந்தது. வேலம்பாளையம் அருகே இதே போலக் கூட்டம் நடந்தது. மிகவும் அமைதியாகவே நடத்தினார்கள். மூன்று இடங்களிலும் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தில் நடந்த காரணத்தால் ஆட்கள் பெருமளவு இல்லை. இரண்டு கூட்டங்களைக் கவனித்தேன். சொல்லிவைத்தாற் போலப் பேச ஆளில்லை. விளக்கங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. மதம் தொடர்பான விருப்பங்கள் ஆர்வங்கள் போன்ற ஆவேசங்கள் தான் பேச்சாளர்கள் பேசினார்கள்.

•••••••

வண்ணாரப்பேட்டையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு காவல் துறை யார் யாரையெல்லாம் அழைத்துப் பேசினார்கள் என்ற பட்டியலைப் பார்த்த போது அதிகாரப்பூர்வமான அமைப்புகள், அதிகாரப்பூர்வமற்ற அமைப்புகள், மற்றும் ஜமாத்தில் உள்ளவர்கள் என்று பெரிய பட்டியலைப் பார்த்தேன். எடப்பாடியார் இதனைத் தெளிவாகச் சட்டசபையில் தெரிவித்தார். சென்னையில் மட்டும் இத்தனை அமைப்புகள். தமிழகம் முழுக்க கணக்கிட்டால் இன்னமும் அதிகம் வரும். பல பிரிவினைகள், கட்சி சார்ந்த, சாராத, மதம் சார்ந்த பல பிரிவுகள். இவர்கள் இஸ்லாமிய மத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு இதுவரையிலும் என்ன செய்துள்ளார்கள்? என்ற கேள்வியும் வந்து கொண்டேயிருக்கிறது. தமிழகத்தில் வாழும் பத்து சதவிகித இஸ்லாமிய மக்களில் எட்டு சதவிகித மக்கள் இன்னமும் அடித்தட்டு மக்களாகவே பொருளாதார ரீதியாக உயர்வான இடத்திற்கு வர போராட்ட வாழ்க்கை வாழ்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

••••••••••

யாரை எதிர்க்கின்றோம்? எந்தச் சூழலில் எதிர்க்கின்றோம்? நம்முடன் மதம் கடந்து யார் யாரெல்லாம் உடன் இருக்கின்றார்கள்? என்பது போன்ற அரசியல் புரிதல் இது போன்ற கூட்டத்தின் வாயிலாக வழிகாட்டுபவர்களுக்கு இருக்கின்றதா? என்றே தெரியவில்லை. எங்கிருந்தோ கட்டளை வருகின்றது? இவர்கள் தாங்களும் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று கூட்டம் நடத்துகின்றார்கள். முப்பது பேர்கள் குழுமியுள்ள கூட்டத்தில் 50 காவல் துறையினர் சுற்றிலும் உள்ளனர். அரசியலைக் கையாளுதல் என்பதனை கிறிஸ்துவ மக்களிடம் இருந்து தான் இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கு தேவை? எப்போது தேவை? எவரைச் சந்திக்க வேண்டும்? என்பதனை சொல்லிவைத்தாற் போல ஆர்ப்பாட்டமின்றி காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர். அவர்களின் லாபி அரசியல் என்பது சர்வதேச அரசியலுடன் தொடர்புடையது. காருண்யா எப்படி டீம்டு யூனிவர்சிட்டி ஆனது? எப்போது மாறியது? என்று யாருக்காவது தெரியுமா? அவர்கள் செய்வது கணவான் அரசியல். தற்போதைய சூழலில் அது தான் செல்லுபடியாகும். பிரதமர் கனவில் மொத்தமாக கூட்டம் போட்டு கையைத் தூக்கி போஸ் கொடுத்த மத நல்லிணக்கப் போராளிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

•••••••••••

2021 அரசியல் பேரத்தில் எத்தனை குழப்பங்கள் இவர்களுக்குள் உருவாகும் என்பதனை வைத்தே நாம் முடிவு செய்து கொள்ள முடியும். பாஜக சித்தாந்தம் என்பது கண்களுக்குத் தெரிந்த ஒற்றை எதிரி. ஆனால் இவர்களுக்கு இவர்களுடன் இருந்து கொண்டே இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் ஓட்டு அரசியல்வாதிகள், பிழைப்பு வாதிகள், சம்பாரிக்கத் தெரிந்தவர்கள் என்று இங்கே ஆயிரக்கணக்கான எதிரிகள் இருப்பதை எப்போது உணர்வார்கள்? சென்ற வாரத்தில் நான் சென்ற இங்குள்ள மூன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்த மாணவியர்களில் காற்பங்கு இஸ்லாமியப் பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றார்கள் என்பதனை இஸ்லாமிய நண்பருக்கு அழைத்துச் சொன்னேன். மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

••••••••••••

வெளியுலகம் ஒன்று இங்கே உள்ளது. அதற்கு மதம் தேவையில்லை. இங்கு ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அது மனதோடு தொடர்புடையது. ஆனால் வெளியுலகத்திற்கு அணுகுமுறைகள் தான் அவசியம். உலக இஸ்லாமிய அரசியல் என்பது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களோடு எந்தக் காலத்திலும் தொடர்பு இல்லாமல் தனித்தே தான் இயங்கி வருகின்றது. உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் இங்கிருப்பவர்கள் போராட்டம் நடத்தி ஆதரவு தெரிவிப்பார்கள். வேறு எந்த நாட்டிலும் இங்கே இருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது இதுவரையிலும் இல்லாமல் தான் உள்ளது.

இது தான் நிதர்சனம்.

••••••••

வீட்டுக்கு அருகே நடந்த கூட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்க வந்துள்ள காவல்துறை கண்மணிகள் (மூன்று இளவயது பெண்கள்) எங்கள் வீட்டின் சந்தின் வழியாகச் சென்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டே இருப்பதைப் பார்த்தேன். பரபரவென்று கண்கள் அலைபாய்ந்து கொண்டு அவர்களிடம் ஒரு விதமான தவிப்பு இருப்பதைக் கண்டு கொண்டேன். சென்றார்கள். வந்தார்கள். வேறு பக்கம் பார்த்தார்கள். புரிந்து கொண்டேன். மகளிடம் சொல்லி உள்ளே பாத்ரூம் உள்ளது. என்று சொல்லி வரச்சொல் என்றேன். அவர்கள் வந்த வேகம் திகைப்பாக இருந்தது. நான் கவனித்துக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் கடமைகளை முடித்து விட்டு வெளியே வந்த போது தண்ணீர் கொடுத்தேன். மூன்று தண்ணீர் பாட்டில்கள் வழங்கினேன். பேசிய போது கொடுமை புரிந்தது.

இது போன்ற கூட்டங்களில் (திருவிழா கூட்டங்கள் தவிர்த்து) கூட்டம் நடத்துபவர்கள் வழங்கும் எதையும் வாங்கக்கூடாது என்பது முக்கியக் கட்டளை. கட்டாயம் தமிழக காவல் துறை பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி வழங்க வேண்டும் என்பதனை அன்போடு கோரிக்கை வைக்கின்றேன்.



கொரானா வைரஸ் COVID -19

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

கூட்டம் நடத்தும் இடங்களில் பெண் காவலர்களின் அவதி - ரொம்பவே கடினம் அவர்கள் நிலை. உதவிய உங்கள் நல்லுள்ளத்திற்கு பாராட்டுகளும் பூங்கொத்தும்.

G.M Balasubramaniam said...

இந்த சட்டங்களைப் பார்த்துபலரு அச்சமடைகிறார்கள் என்றா ஏதோபூனை இருக்கும்போல் இருக்கிறது சட்டத்தை அமல்படுத்த தேவையற்ற கெடுபிடிகள் இருக்கும்

திண்டுக்கல் தனபாலன் said...

காவல்துறை பெண்களுக்கு, நீங்கள் செய்த உதவி சிறப்பு...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஓர் அசாதாரண சூழலை சில இடங்களில் காணமுடிகிறது.

Yaathoramani.blogspot.com said...

நிறுவனமாக மதம் இருப்பதால் விலகி வாழமுடியாதபடி வாழ்வின் அனைத்து விசயங்களில் அவர்கள் தயவுத் தேவை இருப்பதால் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது..அவ்வளவே

Rathnavel Natarajan said...

CAA குடியுரிமை போராட்டங்கள் - அரசியலைக் கையாளுதல் என்பதனை கிறிஸ்துவ மக்களிடம் இருந்து தான் இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கு தேவை? எப்போது தேவை? எவரைச் சந்திக்க வேண்டும்? என்பதனை சொல்லிவைத்தாற் போல ஆர்ப்பாட்டமின்றி காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர். அவர்களின் லாபி அரசியல் என்பது சர்வதேச அரசியலுடன் தொடர்புடையது. காருண்யா எப்படி டீம்டு யூனிவர்சிட்டி ஆனது? எப்போது மாறியது? என்று யாருக்காவது தெரியுமா? அவர்கள் செய்வது கணவான் அரசியல். தற்போதைய சூழலில் அது தான் செல்லுபடியாகும். இது போன்ற கூட்டங்களில் (திருவிழா கூட்டங்கள் தவிர்த்து) கூட்டம் நடத்துபவர்கள் வழங்கும் எதையும் வாங்கக்கூடாது என்பது முக்கியக் கட்டளை. கட்டாயம் தமிழக காவல் துறை பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி வழங்க வேண்டும் என்பதனை அன்போடு கோரிக்கை வைக்கின்றேன்.
- அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி