பாலகுமாரனுக்கு அஞ்சலி என்ற நோக்கில் எழுதியவர்களை எழுதிக் கொண்டிருப்பவர்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அப்போது ஞாநி அவர்களுக்குப் பலரும் எழுதிய அஞ்சலிக்கடிதங்களையும் (மின்னூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்) ஒப்பிட்டுப் பார்த்தேன்.
பாலகுமாரனின் கதைகளைப் படித்தவர்கள் நெக்குறுகி அதன் கதாபாத்திரம் கொடுத்த பாதிப்பில் இன்றும் எங்களால் வெளி வரமுடிவில்லை, இத்யாதி, இத்யாதி என்று என்ற அவர் உருவாக்கிய வட்டத்திற்குள், அவர் நினைத்த மாதிரியே அவரை விட்டு வெளியே வரமுடியாதவர்கள் எழுதிய வார்த்தைகளில் எவ்வித முதிர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. ஞாநிக்கு அஞ்சலி செலுத்தாத குறிப்பிட்ட சிலர் பாலகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
பார்ப்பனியத்தின் இருவேறு கூறுகள் பாலகுமாரனும், ஞாநியும். ஞாநியுடன் நெருக்கமான பழக்கம் என்பதால் மட்டும் அவர் யாரையும் அங்கீகரிப்பதில்லை. எது சரியோ? என்பதில் கடைசி வரைக்கும் தன்னளவில் நேர்மையாக இருந்தார். காசுக்காக கடைசி வரைக்கும் சோரம் போகவில்லை.
வெற்றி பெற்ற கலைஞர்கள் வெற்றி பெற்ற வியாபாரிகளாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. இருந்தால் அதுவொரு மிகப் பெரிய ஆச்சரியம். அப்படிப்பட்ட மூவர் கலைஞர், வைரமுத்து, பாலகுமாரன். காசு விசயத்தில் படு கறார்.
மூவருமே தத்தமது துறையில் உச்சத்தை தொட்டவர்கள். இதில் வைரமுத்து ஒருவரால் மட்டுமே தனது குடும்ப வாழ்க்கையைச் சரியாக வாழமுடியாவிட்டாலும் இன்று வரையிலும் அது பொதுவெளியில் விவாத பொருளாக மாறாமல் வைத்திருப்பதில் தான் அவரின் தனித்திறமை உள்ளது. பாலகுமாரன் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு உருவங்களாக வாழ்ந்தவர். ஆனால் ஒவ்வொரு நிலையையும் மற்றோடு மோதிக் கொள்ளாத அளவுக்குச் சரியாக கடைபிடித்தவர். சாதியை அதிக அளவு நேசித்தவர். அவர் விரும்பியவர்களுக்கே முன்னுரிமையையும் கொடுத்தவர். இது அவரைச் சென்று பார்த்தவர்களுக்கும், உரையாடல்களில் உணர்ந்து கொள்ள முடியும்.
பத்து நிமிட உரையாடலில் மூன்று முறை சண்டை வந்து விடும். அவர் காலம் முழுக்க தியானப் பயிற்சியை போதித்தவர். அவர் போதித்த எதையும் கடைசி வரையிலும் அவர் கற்றுக் கொள்ளாமல் கற்றுக் கொடுப்பவராக மட்டுமே வாழ்ந்து மறைந்துள்ளார்.
ஆனால் ஞாநிக்கு அஞ்சலிக்கடிதங்கள் எழுதியவர்களின் பெரும்பான்மையினர் நான் என்ன நினைத்து இருந்தேனோ, எவ்வாறு எனக்கு ஞாநி பாதிப்பை உருவாக்கியிருந்தாரோ அதைப் போலவே அவர்களை அவர் பாதித்து இருந்தார் என்பதனை உணர முடிந்தது. அந்த உணர்வில் சமூகத்தின் மொத்த பார்வையும் கலந்து இருந்தது. மானே தேனே பொன்மானே என்ற வார்த்தைகள் இல்லை.
ஒருவர் எழுதியிருந்த வரிகள் மிகப் பொருத்தமான எந்நாளும் நினைவு கூறத் தக்கத்து. ஞாநி ஒரு தலைமுறையின் மனசாட்சி. இது போன்ற வார்த்தைகள் பாலகுமாரனுக்கு எவரும் எழுதியதாக நான் எங்கும் படிக்கவில்லை. ஆனால் இந்த வார்த்தைகள் வேறு விதமாக வந்தது. 80 களில் வாழ்ந்த இளைஞர்களை தன் கதாபாத்திரங்களால் பாதித்தவர் என்று. நானும் அப்படி பாதிக்கப்பட்டவன் தான்.
இதிலிருந்து மீண்டு வரவே எனக்கு பத்தாண்டுகள் ஆனது. அதன் பிறகே எழுத்தின் விசாலமும், கோழை மனதிலிருந்து வெளியே வரவும் முடிந்தது. இவர் உருவாக்கிய ஆணுக்குள் பெண் தன்மை என்ற நிலை தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியைக் கொடுத்தாலும் தொழில் வாழ்க்கையில் அது படுதோல்வியைத்தான் அடையாளம் காட்டியது.
இன்னமும் இப்படியே தான் வாழமுடிகின்றது.
இறந்தவரைப் பற்றி எழுதுவது நாகரிகமாக இருக்காது. ஏன் எனக்குப் பாலகுமாரனின் கடைசிக் கட்ட வாழ்க்கை உச்ச கட்ட எரிச்சலை ஏற்படுத்தியது என்பதனை எழுத வேண்டாம் என்று நினைத்து கடந்து வந்தாலும் எழுத்தாளர் பா.ராகவன் நான் என்ன நினைத்து இருந்தேனோ அதனை அப்படியே எழுதியிருந்தார். கொஞ்சம் ஆச்சரியமாக அதிர்ச்சியாகவும் இருந்தது. தன் புகைப்படத்தைச் சாமியாக மாற்றி வணங்க வைத்த சித்தர் மறைந்து விட்டார்.
பாலகுமாரன் முகநூலில் இருக்கின்றார் என்று அறிந்த நாளில்
அவரைத் தொடரும் மகிழ்ச்சியில் இருந்த நான் அங்கு அவர் செய்து கொண்டிருக்கும் காரியங்களைப் பார்த்த போது வயதாகும் போது எப்படியெல்லாம் மனிதன் மாறுவான் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. அசூயையாகவும் இருந்தது.
90 மற்றும் 95 களில் அடிக்கடி திருவண்ணாமலை சென்று வரும் பழக்கம் இருந்தது. அப்போது இப்போது வளர்ந்த நிலையில் உள்ள யோகி ராம் சுரத் குமார் என்ற கதாபாத்திரத்தை சித்தர் எடுத்து பலரையும் உள்ளே நுழைத்து உருவான உருவாக்கப்பட்ட வளர்ச்சி ஒன்றே இவரின் தனித்திறமைக்கு ஆதாரம். பணம் அதிகமாக புழங்கும் இடங்களில் ஆன்மீகம் அறவே இருக்காது என்பதற்கு இதுவே முக்கிய உதாரணம்.
இதன் மூலம் பலர் வாழ்ந்தனர். வளர்ந்து விட்டனர்.
பாலகுமாரன் கடைசி காலத்தில் லேகியம் விற்கும் விளம்பரங்களில் மட்டும் தான் வரவில்லை. அதிர்ஷ்ட கல் முதல் இன்னமும் பல விளம்பரங்களில் யோசிக்காமல் தன் வருமானத்திற்காக நடித்தவர். கலைஞனுக்கு நடிப்பு என்பது வேறா?
இனி குறிப்பிட்ட அந்தப் பெண்மணி கூட்டம் இவரைச் சாமியாக மாற்றுவார்கள். இவரும் அதைத்தான் விரும்பினார்.
பாலகுமாரனின் எழுத்தை மட்டும் நேசித்தவர்களின் உலகமது தனி.
5 comments:
பாலகுமாரனின் எழுத்தை மட்டும் நேசித்தவர்களின் உலகமது தனி என்பது உண்மையே.
விமர்சனம் இன்னும் கொஞ்சம் கட்டமாக இருக்கலாம், காரம் ரொம்ப கம்மி.சுய சிந்தனையை மழுங்கடித்த முன்னோர் ஒன்றும் முட்டாளில்லை என்று சொல்லி தாழ்வு மனப்பான்மையை வளர்த்தெடுத்த எரிகொள்ளி இவரின் எழுத்துக்கள்.
முழுமையாக அப்படி மொத்தமாக இவர் எழுத்தை புறந்தள்ளி விட முடியாது கமலக்கண்ணன். ஆனால் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு இடத்திலும் எல்லா நிலையிலும் பணத்துக்காக நாடகமாக தன் வாழ்க்கையை நடித்துக் கொண்டிருந்தவர். அதுவும் ஆன்மீகம் என்ற பெயரில் இவர் செய்தது முற்றிலும் அயோக்கியத்தனம். அதைப் பற்றி விமர்சனம் செய்தவர்களை சாபம் கொடுத்து வேறு பயமுறுத்தியது உச்ச கட்ட சோகம். இன்று இவருக்கு அஞ்சலிக்கூட்டம் கூட எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் எவரும் நடத்தியாக தெரியவில்லை. காலம் சிலரை தண்டிக்கும். சிலரை இறந்த பின்பு. சிலரை வாழும் போதே.
நன்றி
அருமை. நன்றி.
Post a Comment