Thursday, July 12, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 10

நான் +2 படித்துக் கொண்டிருந்த போது இரண்டு நல்ல காரியங்கள் நடந்தது. 

ஒன்று. அறிவியல் வகுப்பு சார்பாக இராமேஸ்வரம் கூட்டிக் கொண்டு சென்றிருந்தார்கள். அப்போது இப்போதுள்ள பாலத்தின் தூண்களாக உள்ள கீழ்ப்பகுதி பீம் ஒவ்வொன்றாகக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். அது கட்டும் விதம் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் குழு கடல் பகுதியில் கிடைக்கும் மீன்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இந்தச் சுற்றுலா பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. 

ஆனால் வருட இறுதியில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மாங்குரூவ் காடுகள், சதுப்பு நிலம், உள்ளே தோணியில் போனது என்று இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக உள்ளது. ஆனால் இவற்றை விட அங்கு உள்ள ஒரு ஆராய்ச்சிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தாவரவியல் ஆசிரியர் கண்ணன் தான் அங்கே நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். பல அறைகள் இருந்தது. ஒருவர் மைக்ரோஸ்கோப் மூலம் எதையோ பார்த்து குறிப்பெழுதிக் கொண்டிருந்தார். அவர் பி.ஹெச்டி மாணவர். அப்படியொரு படிப்பு உள்ளது என்பதே அங்கே தான் தெரிந்தது. 

அங்குள்ள சூழல் எனக்கு நிறையவே பிடித்து இருந்தது. அவருடன் பேசினேன். அவர் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் பற்றிச் சொன்னார். அப்போது வாய்த்துடுக்கு, வேகம் மிக மிக அதிகம். நான் பேசிய விதம் அவருக்குப் பிடித்துப் போகப் பல விசயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தை தான் மரபணு. 

மனதில் அப்போது பதிந்த இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் கல்லூரியில் நுழைந்த போது தான் முழுமையாகப் புரிந்தது. நான் படித்த தாவரவியல் பாடங்களில் இதுவொரு தனிப்பாடமாக இருந்தது. என்னுடன் படித்து மற்றவர்கள் நோட்ஸ் மூலம் தமிழில் மனப்பாடம் செய்து பரிட்சை எழுதிக் கொண்டிருந்தனர். நான் கல்லூரியில் இருந்த நூலகங்களில் இருந்து பல புத்தகங்கள் எடுத்து பலவற்றையும் குறிப்பெழுதி மூன்று வருடமும் ஆங்கிலத்தில் தான் பரிட்சை எழுதினேன். 

ஜெனிடிக்ஸ் என்ற பாடம் நிறையவே பிடித்து இருந்தது. மேற்படிப்பு இதில் தான் படிக்க வேண்டும் என்பது அப்போது அது கனவாக இருந்தது. சூழ்நிலையில், சுற்றுச்சூழல், சமன் கெடுதல், ஆலைக்கழிவுகள் உருவாக்கும் தாக்கம் என்று நான் படித்த விசயங்கள் எதுவும் சமூக வாழ்க்கையில் உதவவில்லை. ஆனால் வட்டியிலும் முதலுமாக எழுதத் தொடங்கிய போது உதவியது. 

கல்லூரி முடித்துச் சில நாட்களில் நண்பன் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டான். டைப்ரைட்டிங் தெரிந்த காரணத்தால் எம்.டி க்கு உதவியாளர் மாதிரியான வேலை. அத்துடன் உள்ளே நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்து அவருக்குச் சொல்ல வேண்டும். மொத்தமே 13 நாட்கள் தான் அங்கே இருந்தேன். ஆட்டுத் தோல், மாட்டுத் தோல் உள்ளே உரிக்கப்பட்டு வருவது முதல் அது படிப்படியாக எப்படி மாற்றப்படுகின்றது என்பதனை டேனரியில் நடந்த ஒவ்வொன்றும் இப்போது நினைத்தாலும் உடம்பு முழுக்க ஒரு நாற்றம் உருவாகும் அளவிற்கு உள்ளது.

முதல் முதலாகச் சூழல் எப்படி மாசுபடுகின்றது என்பதன் அரிச்சுவடி அங்கே தான் தெரிந்து கொள்ள முடிந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊருக்கு வந்து விட்டேன். 

மீண்டும் சென்னை பயணம். இதே நிறுவனத்தின் தலைமை அலுவலகம். அங்கே இரண்டு விதமாக இரண்டு இடங்களில் காரியங்கள் நடந்து கொண்டிருந்தது. மணிபர்ஸ், பைக்பேக் தயாரிப்பது மற்றும் செப்பனிப்பட்ட தோல் ஏற்றுமதி. இங்கும் அலுவலக வேலை. இங்கே பணிபுரிந்தவர்களின் உடல்நலம் குறித்துப் பல்வேறு புலம்பல்களைப் பார்த்துக் கொண்டே வந்த போல இன்னும் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. சூழல் ஒத்துழைக்காத காரணத்தால் ஊருக்கு வந்து முதல் முறையாகத் திருப்பூர் பயணம் வந்த போது தான் மொத்த சூழலின் சீர்கேடும் அது சார்ந்த விசயங்களும் பல்கலைக்கழகப் பாடங்கள் போல இங்கே புரியத் தொடங்கியது. 

இதனைப் பற்றிப் பதிவுகளில் பல இடங்களில் படிப்படியாகப் பதிவும் செய்துள்ளேன்.

இன்று திருப்பூர் ஒப்பீட்டளவில் எவ்வளவோ மாறியுள்ளது. மனிதர்களை வேலை வாங்கும் விதம் முதல் பயன்படுத்தும் நவீன எந்திரங்கள் வரைக்கும் அனைத்தையும் கடந்து வந்த போதிலும் எனக்குள் பிச்சாவரத்தில் உருவான விதை நான் எழுதத் தொடங்கிய போது தான் விஸ்வரூபம் எடுத்தது. நான் அறியாத எனக்குள் இருந்த திறமைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியது. 

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்ற விதைகளில் ஜாம்பவானாக இருக்கும் மான்சாட்ட நிறுவனம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் எப்படிச் செல்கின்றது? எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றது? எப்படி அதிகாரவர்க்கத்தை விலைக்கு வாங்குகின்றது? என்பதனையெல்லாம் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தங்களை வைத்து எழுதத் தொடங்கினேன். 

அப்போது காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் இருந்தது. பாராளுமன்றத்தில் இதுவே தினமும் ரகளையை உருவாக்கிக் கொண்டிருந்தது. மன்மோகன் அமெரிக்காவை தனது தாய்வீடாக கருதியிருந்தார்.

சூழலியல் சார்ந்த சிறு, குறு புத்தகங்கள் எங்கே கிடைத்தாலும் வாங்கி வந்துவிடுவதுண்டு. கடைசியில் மாண்சாட்ட நிறுவனம் தான் வென்றது. இன்று காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் அவர்களை மீறி இங்கே ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு இங்கே ஆதரவாளர்களும் இருக்கின்றார்கள். 

இது வரையிலும் அனுபவப்பதிவு எழுதினாலும் அதில் நான் கடந்து வந்த பாதையில் உள்ள சூழல் குறித்து நூறு பதிவுகளாவது எழுதியிருப்பேன். இப்போது சில நாட்களாகப் பூவுலகின் நண்பர்கள் குழுவில் உள்ள பொறியாளர் சுந்தர்ராஜன் காணொளிக் காட்சியை (பழைய பேச்சுகள்) தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்த  போது பல ஞாபகங்கள் வந்தது. 

கடந்த என் முப்பது ஆண்டுக் கால அனுபவத்தில் நான் பார்த்தவரைக்கும் மிக மிக மோசமான தொழிற்சாலை என்றால் அது டேனரி மற்றும் அது சார்ந்த தோல் தொழிற்சாலைகள் தான் என்பேன்.

திண்டுக்கல், பேகம்பூரில் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள அடித்தட்டு மனிதர்களின் கால்களை, கைகளைப் பார்த்தால் நமக்கே அடுத்த நேரம் சாப்பாடு இறங்காது. ஆனால் இன்று வரையிலும் ஆம்பூர் மற்றும் அது சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்தத் தோல் தொழிற்சாலை தான் வாழ்க்கை தந்து கொண்டிருக்கின்றது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது குறித்து எங்கேயும் பேசி நான் கேட்டதே இல்லை. 

அடுத்து ஈரோடு. ஆம்பூர் அளவுக்குத் தோல் தொழிற்சாலை இல்லாவிட்டாலும் இங்கேயும் உண்டு. 

சாயத் தொழிற்சாலையின் கழிவுகள் மண்ணின் தன்மையைக் கெட்டுப் போக வைத்து மலடாக மாற்றி எதற்கும் பலன் இல்லாமல் ஆக்குகின்றது. இதன் தீங்கு படிப்படியாகத்தான் மனிதர்களிடம் நகர்ந்து வருகின்றது. ஆனால் தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தும் ஆசிட் சமாச்சாரங்கள் முதல் மற்ற வேதிப் பொருட்கள் அனைத்தும் நாசகார சமாச்சாரங்கள். இதனைத் தொழிற்சாலைக்காக வாங்கிய போது அதன் மூலக்கூறு சார்ந்த பலவற்றையும் அறிந்தவன் என்ற முறையில் இப்போது அதனைப் பற்றி யோசித்துப் பார்க்க முடிகின்றது. பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளர்களின் உடம்பின் பாதிப்பையும் சில மாதங்களிலேயே கண்டு கொள்ள முடியும். 

நாலைந்து ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் சூழலியல் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் கவனித்து வருகின்றேன். தொடக்கத்தில் இவர்கள் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் இருந்தது. கமலஹாசன் எண்ணூர் சென்றபிறகு நித்தியானந்தம் ஜெயராமன் வெளி உலகத்திற்குத் தெரிய வருகின்றார். அந்தப் பகுதி முழுக்க ஆபத்தின் விளிம்பில் உள்ளதை இன்னமும் எவரும் புரிந்து கொள்ளக்கூடத் தயாராக இல்லை. 

பூவுலகின் நண்பர்கள் குழுவினர், அணுவுலை எதிர்ப்பு பேரவை சார்பாகச் சுப. உதயகுமாரன், இப்போது நடந்து கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள பலர் முக்கியமாக ஃபாத்திமா என்று பலரையும் அவர்களின் அரசியலை, அவர்களின் பார்வையை ஒவ்வொன்றாகக் கவனித்தவன் என்ற முறையில் ஆதங்கம் தான் மிஞ்சுகின்றது. கவனிக்கத் தக்க வகையில் நல்லதும் உள்ளது. அதே சமயத்தில் குறிப்பிட்ட சிலருக்குப் பின்னால் உள்ள நிறுவனங்கள் சார்ந்த அரசியலும் உள்ளது. இதற்குள் மதம், சாதியும் வந்து நுழைந்து விடுகின்றது. கடைசியில் அதுவொரு அரசியலாகவும் மாறிவிடுகின்றது. நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க வருகின்றவர்கள். தேசத்துரோகி என்ற பட்டமும் வந்து சேர்ந்து விடுகின்றது. 

உணவு அரசியல், நீர் அரசியல், மருந்து அரசியல் இந்த மூன்றுக்குப் பின்னால் இருப்பது அனைத்தும் சர்வதேச நிறுவனங்கள். நாம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உலகம் முழுக்க எப்படி ஆயுத லாபி இவ்வுலகை ஆட்சி செய்கின்றார்களோ? அதைவிட இவர்களின் ஆதிக்கம் அதிகம். இவர்களை வென்றவர்கள் மிக மிகக் குறைவு. 

ஒரு பக்கம் நலத்திட்டம் என்று மில்லியன் கணக்கான டாலர்களை ஒரு பக்கம் கொடுத்துக் கொண்டே மறுபக்கம் ட்ரில்லியன் டாலர் வருமானம் பார்க்கும் உலகளாவிய பொருளாதார வியாபார யுக்திகளை வகுப்பவர்கள். உலகப் பணக்காரர் பில்கேட்ஸ் தன் மனைவி பெயரில் நடத்திக் கொண்டிருக்கும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையில் உள்ள நிதி எதன் மூலம் வருகின்றது? அந்த நிதி எப்படி பெருக்கப்படுகின்றது? எங்கே அதனை முதலீடு செய்துள்ளார்கள் என்பதனை வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். அட வெண்ணெய்களா? என்று சொல்லத் தோன்றும். 

மருத்துவர் கு சிவராமன் பேசிய காணொளிக் காட்சிகள், அவரின் புத்தகங்கள் சில வற்றை உங்களால் வாசிக்க முடிந்தால் பேசாமல் பட்டினியாக இருந்து விடுவோமா? என்று இருக்கத் தோன்றும். எதை விடுவது? எதை எடுப்பது? என்ற குழப்பமே மிஞ்சும். 

புரோட்டா குறித்துக் காட்டுக்கத்தலாகக் கத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்று புரோட்டா இல்லாவிட்டால் தமிழர்களில் பாதிப்பேர்கள் செத்தே போய்விடுவார்கள். மைதா வணிகம் படுத்து விட்டால் இங்கே பல மில்லியன் டாலர் வர்த்தகம் படுத்து விடும் அளவிற்கு அதன் தாக்கம் மாறிய உணவுப் பழக்கத்தில் மேலோங்கி நிற்கின்றது. மருத்துவம் என்பது தற்போது ட்ரில்லியனைத் தாண்டிச் சென்ற வணிகமாக மாறியுள்ளது. இது இன்னமும் நெருக்கிக் கொண்டே வருகின்றது. 

மோடி ஆட்சிக்கு வந்தபின்பு இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்.ஜி.ஓ நிறுவனங்களைக் கடந்த மூன்று ஆண்டுச் செயல்பாடுகளை ஒப்படைக்கச் சொன்ன போது பலருக்கும் கிலியடிக்கத் தொடங்கியது. குறிப்பாக மதம் சார்ந்த நிறுவனங்கள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள்.

நான் படித்தவரையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகின்ற வெளிநாட்டு நிதிகளைத் தங்கள் சுகவாழ்வுக்காகத்தான் பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. குரல்வளைப்பிடியில் சிக்கி இன்று பலரும் பிழைக்க வழியில்லாமல் தெருவில் நின்று கொண்டு மோடி ஒழிக என்று கத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

இதன் மூலம் அவர் நாட்டுக்கு நல்லது செய்கின்றார் என்று நான் எண்ணவில்லை. ஆனால் எங்கே அடிக்க வேண்டும்? எவருக்கு அடிக்க வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும்? என்பதான அரசியல் யுக்தியாகத்தான் நான் பார்க்கின்றேன். தமிழகத்திற்குத் தேவைப்படும் திட்டங்களை விடத் தேவைப்படாத அத்தனை திட்டங்களையும் இங்கே கொண்டு வந்து நிறுத்தும் அவர்களின் செயல்பாடுகள் மூலமே தற்போதைய ஆட்சியாளர்களும் யாருக்கு ஆதரவாளராக இருக்கின்றார்கள்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்? 

சர்வதேச லாபி தான் உலகத்தின் ஆட்சியாளர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். உலகத்திற்கே நாகரிகத்தைப் போதிக்கின்ற அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் துப்பாக்கியால் பள்ளியில் படிக்கும் மாணவனே சக மாணவர்களைச் சுட்டு சாகடித்த போதிலும் இன்னமும் அங்கே துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்த முடியவில்லையே. குறைந்த பட்சம் கட்டுப்பாடுகளைக் கூடக் கொண்டு வர முடியவில்லையே. ஒபாமா ஆட்சிக் காலத்தில் என்னன்னவோ செய்து பார்த்தார். பொத்திக்கிட்டு போவீயா? என்று தூக்கி எறிந்து விட்டார்கள். அங்கே உள்ள செனட்டர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னாலும் ஒரு உலகளாவிய லாபி வர்த்தகம் உண்டு. அவர்கள் அதற்கான பிரதிநிதியாகத்தான் இருக்கின்றார்கள். அது அங்கே மட்டுமல்ல. நம்மூர் மாவட்டச் செயலாளர்கள் வரைக்கும் இப்படித்தான் இருக்கின்றார்கள்.

இல்லாவிட்டால் பெப்சியும் கோக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கும் இடத்தில் கூட அரசாட்சி செய்ய முடியுமா? 

சூழலியல் குறித்துப் பேசத் தொடங்கினால் இரண்டு கேள்விகள் நம் முன்னால் வந்து நிற்கும்? அப்படி என்றால் வளர்ந்த மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்புக்கு எங்கே செல்வது? அவர்களின் உணவுக்கு எங்கே செல்வது? 

பசுமைப்புரட்சி என்ன சாதித்தது? 

ஆனால் இன்று இறக்குமதியில் தான் பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் 80 சதவிகிதம் உள்ளே வந்து கொண்டு இருக்கின்றது. நமக்குத் தெரிந்து அரசாங்கத்திற்கு அதிகச் செலவு பிடிப்பது பெட்ரோல் இறக்குமதி என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதனையும் தாண்டி இன்று உணவு இறக்குமதி படிப்படியாக மேலேறிக் கொண்டிருக்கின்றது? 

மேக இன் இண்டியா சாதித்தது? 

குழந்தைகள் பயன்படுத்தும் கிலுகிலுப்பை வரைக்கும் நாம் சீனத் தயாரிப்பை நம்பியே வாழ வேண்டிய சூழல். திருப்பூரில் பயன்பாட்டில் இருக்கும் எந்திரங்கள் அனைத்தும் கொரியா, ஜெர்மனி, சீனா,ஜப்பான் இந்த நான்கு நாடுகளை வைத்து பிழைப்பே ஓடிக்கொண்டிருக்கின்றது. வளர்ந்து இருந்த கோவை இன்று படுத்தே விட்டது. 

ஒவ்வொரு முறையும் வந்தமரும் ஆட்சியாளர்களின் வசதிக்காக, அவர்களின் விருப்பங்களைப் பொறுத்து தான் இங்கே மாற்றங்கள் உருவாகின்றதே தவிர வளர்ச்சிக்கான எந்தத் துரும்பையும் எவரும் இங்கே கிள்ளிப்போட தயாராக இல்லை. 

கொள்கை ரீதியாக இனி குப்பைகளை இங்கே இறக்கக்கூடாது என்று சீனா எடுத்த முடிவின் காரணமாக ஐரோப்பிய, அமெரிக்காவின் மிண்ணணு, மருந்து மற்றும் மற்ற அனைத்து குப்பைகளும் அது சார்ந்த வணிகத்தை இந்தியா முன்னெடுத்து வருகின்றது. 

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் சுற்றும் முற்றும் எதையும் பார்ப்பதில்லை. கவனிப்பதில்லை. நம்மை, நம் குடும்ப உறுப்பினர்கள், நம் உறுப்பினர்களைக் புற்றுநோய் என்ற கொடும் நோய் தாக்காத வரைக்கும். 

இன்று வளர்ச்சி என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் உருவாக்கிய மாற்றங்கள் தமிழகத்தில் புற்றுநோய் என்ற நோயை மிக அதிக அளவு உருவாக்கி உள்ளது. முன்பு இந்த இடத்தைப் பஞ்சாப் பெற்று இருந்தது. இப்போது நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். 

என் நெருங்கிய உறவினர்களின் ஹீமோ தெரபி எடுக்கும் அது சார்ந்த அவஸ்தைகளைப் பார்த்த போது மனம் கூசாமல் ஏன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது? என்று சொன்னது. அதுவொரு நரக வேதனை. எல்லாப் பழக்கங்களும் இருந்து அவருக்கு இந்த நோய் வந்தது என்றால் கூட மனம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ஏன் வந்தது? என்று தெரியாமல் நரகத்தின் பாதையில் செல்லும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் போது என்ன தோன்றும். 

நவீன வளர்ச்சி என்பது பத்தாயிரம் பேரை வாழ வைக்கும். பத்து லட்சம் பேரை காவு வாங்கும் என்று தானே சொல்லத் தோன்றுகின்றது. 

இந்தக் காணொளியில் பொறியாளர் சுந்தர்ராஜன் பேசியதை முழுமையாகக் கேட்டு இரண்டு நாட்கள் ஜப்பான் என்ற நாடும், ஜப்பானியர்கள் குறித்தும் அதிகம் யோசித்துக் கொண்டேயிருந்தேன். 

சுந்தர்ராஜனைப் பொறுத்தவரையிலும் தெளிவாக அழகாக நிதானமாக எந்தக் குறிப்பும் தேவையுமின்றிப் பேசுகின்றார். ஒவ்வொரு பேச்சிலும் மிகுந்த ஆதங்கம் இருக்கின்றது. எந்த இடத்திலும் அலட்சியமில்லை. எதிராளிகள் பலமாக இருந்தாலும் சோர்வு இல்லாமல் இது போன்ற துறைகளில் ஏச்சுக்களைப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு தொடர்ந்து செயல்படுவதற்கெனத் தனி மனோபாவம் இருக்க வேண்டும். 

இவர் படித்த படிப்புக்கும் தற்போது செயல்படும் சூழலியல் துறைக்கும் தொடர்பு இல்லாத போதும் கூடச் சுய ஆர்வத்தின் மூலம் இந்த அளவுக்குச் சமூகப் பணியில் ஈடுபட்டு இருப்பது வியப்பாக உள்ளது. இவரைப் போல அமைச்சர்கள் இங்கே இது குறித்துப் பேச வேண்டும். 

ஆனால் இங்கே மாசுகட்டுப்பாட்டு அமைச்சருக்கு இப்படியெல்லாம் இங்கே நடக்கின்றது? என்பதாவது தெரியுமா? என்று தெரியவில்லை.

ஆனால் திருப்பூரில் மாதம் தோறும் அவருக்கும், அதிகாரிகளுக்குச் செலுத்தும் கப்பம் மட்டும் இன்னமும் குறைந்தபாடில்லை. அதில் மட்டும் தற்போதைய அமைச்சர் தெளிவாகவே இருக்கின்றார். தமிழகத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த இதுவரையிலும் நடந்து பிரச்சனைகளில் எந்தச் சமயத்திலாவது குறிப்பிட்ட ஆலைகள் மாசுகட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளது. இதற்கு அமைச்சரே பொறுப்பு. அவர் பதவி விலக வேண்டும் என்று பேச்சு வந்துள்ளதா? இப்படியொரு துறையிருப்பதே மக்களில் பாதிப் பேருக்குத் தெரியுமா? என்றே தெரியாது. 

வளர்ந்த தொழில் நுட்பமும், அர்ப்பணிப்பும், உழைப்பும், பராம்பரிய பின்புலம் கொண்ட ஜப்பான் இன்று வரையிலும் அணுவுலைக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றது.

அது தான் பன்னாட்டு நிறுவனங்களின் சக்தி. 

அணுவுலை குறித்துப் பேசும்போதெல்லாம் இந்திய அரசாங்கம் தவறாமல் ஒரு வார்த்தையைச் சொல்லும். அது தேச பாதுகாப்புச் சம்மந்தப்பட்டது என்று. 

சரிப்பா? உன் ரகசியம் உன்னோடு வைத்துக் கொள். ஆனால் இதன் கழிவுகளை எங்கே பாதுகாக்க போகின்றாய்? அதையாவது தெரிந்து கொள்ளலாமா? என்றால் கேட்டவுடன் தேசத்துரோகி என்று சொல்கிறார்களே? 

கௌரவம், வளர்ச்சி என்ற இரண்டு வார்த்தைக்குப் பின்னால் அரசாங்கத்திற்கு இருப்பது மக்களுக்குத் தேவைப்படுகின்ற ஆரோக்கியமான வாழ்க்கையல்ல என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் போதும். 

உங்களைச் சுற்றியுள்ள விசயங்களை ஓரளவுக்குக் கவனிக்கத் தெரிந்துள்ளீர்கள் என்று அர்த்தம்.4 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எவ்வளவு விஷயங்களை அலசியுள்ளீர்கள். அப்பப்பா. அனைத்தும் நியாயமாகத் தெரிகிறது. இருந்தாலும் வெளியே சொல்ல பலர் யோசிக்கிறோமே.

G.M Balasubramaniam said...

இதே ரீதியில் சிந்திக்கத் துவங்கினால் வளர்ச்சிக்காகஎன்னசெய்ய முடியும் என்னும் எண்ணமே வராமல்போகலாமோ

ஜோதிஜி said...

வளர்ந்த நாடுகளில் இன்னமும் வளர்ச்சி சீராகவே நடந்து கொண்டே இருக்கின்றது. அங்கே தனி மனித வளர்ச்சி முக்கியம். அதைப் போல நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மிக முக்கியம். எப்படி முடிகின்றது? அதைப் பற்றி நாம் தெளிவாக புரிந்து கொண்டால் இங்கே நடக்கும் வளர்ச்சி என்ற பெயரால் சிலருக்காக நடத்தப்படும் சுரண்டல் சார்ந்த விசயங்களை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்? 1096 கிலோமீட்டர் சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள இடங்களில் காற்றாலை மூலமே நம் தமிழகத்தின் மின் தேவையை பெரும்பாலும் நிறைவேற்ற முடியும். வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும் மின்சார அளவு என்பது சென்னைக்கு அருகே உள்ள கிராமங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தின் அளவு. இதே போல பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஜோதிஜி said...

அந்தந்த துறை சார்ந்தவர்கள் துறையில் இருக்கும் போது தன் துறையில் (நேர்மையாக பணிக்காலத்தில் இருந்தவர்கள் கூட) நடக்கும் அநியாயங்களை கடைசி வரைக்கும் பணிக்காலம் முடிந்தும் கூட வெளியே சொல்வதில்லை. மேலை நாடுகளில் அக்கு வேறாக ஆணி வேறாக ஒவ்வொரு துறை சார்ந்த நிபுணர்களும் தங்கள் அனுபவங்களை ஆணித்தரமாக பொதுவில் ஆவணமாக கொண்டு வந்து விடுகின்றார்கள். ஓலைச்சுவடிகளை அடுத்தவர் கண்ணில் காட்டாமல் நாம் இழந்த பலவித செல்வங்களைப் போல இன்று வரையிலும் காலமாற்றம் தந்த வசதிகளைக்கூட பயன்படுத்த விருப்பம் இல்லாமல் நமக்கென்ன வந்ததது? நமக்கேன் வம்பு? என்கிற ரீதியில் ஒவ்வொருவரும் சுயபாதுகாப்பு கருதி ஒவ்வொன்றையும் மறைத்துக் கொண்டே வருவதால் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் அவர்களின் ஆணவப் போக்கு மாறுவதில்லை என்பது தான் இங்கே நடந்து கொண்டிருப்பது.