Saturday, October 28, 2017

பயணங்கள் கண்டறியும் பாதைகள்


பேசித் தீரா விசயங்களில் ஒன்று குழந்தைகள் வளர்ப்பு. அது இடம், வாழும் வாழ்க்கை, சூழ்நிலை பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும் விசயமிது. 

என் குழந்தைகள், குழந்தைகளுடன் பழகும் தோழியர்கள், குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடம், அங்கு நிலவும் தற்போதைய நிலையை வைத்து ஓரளவுக்கு நான் யூகிக்கும் அனைத்து விசயங்களும் சரியாகவே இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சென்னையில் உள்ள சூழ்நிலை திருப்பூர் வாழ்நிலைக்குப் பொருந்திப் போகாது. அதே காரைக்குடியைச் சுற்றியுள்ள கல்விச்சூழலை அங்குள்ள சமூக வாழ்க்கை தான் தீர்மானிக்கின்றது. இதைத்தான் இங்குள்ள கல்வியாளர்கள் ஒரு மாணவரின் அறிவை ஒரு தேர்வு தீர்மானித்து விடாது என்கிறார்கள். அதிலும் நீட் போன்ற சம்மந்தம் இல்லாத பாடத்திட்டங்களின் வழியே கேட்கப்படும் கேள்விக்கான பதிலை தனிப்பட்ட பயிற்சியின் மூலமே மாணவர்கள் அணுக முடியும். அது நன்மையை விடக் கெடுதலையே அதிகம் கொண்டு வந்து சேர்க்கும் என்று வாதிடுகின்றார்கள். 

சமச்சீர்க் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வியில் தனிப்பட்ட பள்ளிகள் தனக்கென்று சேர்த்து வைத்துப் பாடத்திட்டம் அடங்கிய கல்வி, மத்திய அரசு பாடத்திட்டம், கேந்திரயா வித்தியாலயா பாடத்திட்டம், நவோதயப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத் திட்டம் என்று இந்தியா முழுக்க ஏன் இன்று தமிழகம் முழுக்கக் கல்வி என்பது எது திசை? எது இலக்கு என்று தெரியாமல் எங்கங்கோ மாணவர்களை இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. 

இது சிறப்பா? அது சிறப்பா? என்று ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய வருமானத்தை, சேமிப்பை தங்கள் குழந்தைகளுக்காகப் பந்தயக்குதிரைகளில் பணம் கட்டுவதைப் போலக் கட்டுகின்றார்கள். 

மொத்தத்தில் கல்வியென்பது கடைச்சரக்கு போல மாறியுள்ளது. இருப்பவனுக்கு ஒரு மாதிரியாகவும், பணம் இல்லாதவனுக்கு வேறொரு மாதிரியாகவும் இங்கே கிடைக்கின்றது. பாடத்திட்டத்துடன் கல்வி நிலையங்கள் வழங்கும் பிற வசதிகள் இன்று பெற்றோர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது. வணிகமயமாகிவிட்ட கல்வியைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் வணிக நிறுவனங்கள் விரும்பும் வார்ப்பு போலவே இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அறிதல் என்பது பின்னுக்குப் போய்ப் பிழைத்தல் என்பது முக்கியமாக மாறியுள்ளது. 

குழந்தைகள் மேல் வைத்துள்ள அன்பு என்பது மாறி அவர்களின் இறுதி இலக்கு இதுவாக இருக்க வேண்டும் என்று எப்போது ஒரு பெற்றோர் நினைக்கத் தொடங்கினார்களோ? அன்றே குடும்பத்தின் அடிப்படை அறம் காணாமல் போய்விட்டது. நான் வெளியே பார்க்கும் பெற்றோர்கள், பழகும் நண்பர்களின் குடும்பம் அவர்களின் குழந்தைகளைக் கையாளும் விதம் போன்ற பலவும் என்னைப் பயமுறுத்துவதாக உள்ளது. தலைமுறை இடைவெளி என்பது ஒரு பக்கம் என்றாலும் இயல்பான வாழ்க்கைக்குத் தேவையானவற்றின் அளவு கோல் படிப்படியாக மாறிக் கொண்டே வருவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. 

பலசமயம் நாம் தனித்து இருக்கின்றோமோ? தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கின்றோமோ என்று நாம் குற்றவுணர்ச்சியுடன் யோசிக்கும் அளவிற்கு வெளிப்புற சமூகம் என்பது வேறொரு பாதையில் விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் ஆரோக்கியம் மாறியுள்ளது. அவர்களின் உணவுப் பழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. யோசிக்கும் திறன் குறைந்து வாசிக்கும் பழக்கம் மாறி புதுயுகத்தில் இப்போதைய கல்விச்சூழல் வினோத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. 

அடுத்த வருடம் வீட்டில் ஒருவர் பத்தாம் வகுப்பு செல்லப் போகின்றார். இதுவரையிலும் மதிப்பெண்கள் குறித்த அக்கறையை உருவாக்காமல் வளர்த்து வந்த எனக்கு இனி அந்த மதிப்பெண்கள் தான் அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றது என்ற எண்ணமே ஏராளமான அச்சத்தை இப்போதே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. கேள்விகள் கேட்டுப் பழகிய அவர்களின் செயல்பாடுகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றது. உங்களிடம் எதிர்பார்ப்பது இது மட்டுமே? என்று திரும்பத் திரும்பப் பள்ளிகளில் சொல்லப்படும் விசயங்கள் தான் அவர்கள் மனதில் பதிகின்றது. 

ஒரு நாளில் அதிகபட்ச நேரம் பள்ளியில் இருக்கும் அவர்களின் குணாதிசியம் என்பது அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியர்களின் குணத்தை வைத்தே உருவாகின்றது என்பதனை என்னால் நன்றாக உள்வாங்க முடிகின்றது. நாம் தற்போது உள்ள கல்வித்சூழலில் கற்றலில் காணும் குறைபாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்தாலும் கேட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் போதும் என்ற நிலைக்கே தள்ளப்படுவதால் வேறு எதுவும் இங்கே தேவையில்லை என்ற நிலைக்கு வந்து நிற்கின்றார்கள். 

இன்று நீட் என்ற மருத்துவக்கல்விக்கு என்று கொண்டு வரப்பட்ட தேர்வுக்குப் பிறகு தமிழகத்தில் பலதரப்பட்ட குரல்கள் பல இடங்களில் இருந்து எழுகின்றது. அத்தனை பேர்களும் நம் உரிமை. நம் தேர்வு என்கிற ஒற்றைவாக்கியத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். ஆனால் கடந்த மூன்று ஐந்தாண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டம் குறித்தோ, தனியார் பள்ளிகள் அரசு கொள்கைகளை மீறி வசூலிக்கும் அடாவடித்தனம் குறித்தோ யாரும் வாய் திறப்பதே இல்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

கொள்கை என்பது எத்தனைச் சிறப்பாக இருந்தாலும் அதில் ஊழல் என்பது சிறிதளவு இருந்தால் கூட அதற்குப் பெயர் கொள்கை அல்ல. கொள்ளை என்றே பொருள். ஆனால் இன்று கல்வி என்ற பெயரால் கொள்ளை தான் நடந்து கொண்டிருக்கின்றது. அதுவும் மாணவர்களின் அறிவு என்பதனை ஒரு வட்டத்திற்குள் வைத்து நடத்தப்படும் கொள்ளை. 

நம்மால் இதைப் பற்றிப் பேச முடியாது. பேசக்கூடியவர்களும் அவரவர் தனிப்பட்ட நலன் பொறுத்தே பேசுகின்றார்கள். காரணம் வியாபாரிகள் லாபத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். கல்வி வியாபாரிகளின் லாபத்திற்காகப் பலிகிடாவாக மாறும் மொத்த பெற்றோர்களும் இன்னும் சிறிது காலத்தில் தங்கள் குழந்தைகளுக்காகத் தகுதிக்கு மீறிச் செலவழித்து அதன் இறுதிப் பலனையும் பெற முடியாத சோகத்தில் தான் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கப் போகின்றார்கள். 

காரணம் தங்களின் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்பு, வெளிநாடுகளில் உயர்ந்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு, சமூகத்தில் உள்ள உயர் பதவிகளுக்கு உண்டான வேலை வாய்ப்பு என்ற இந்த மூன்று கொள்கைகளில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்க்கின்றார்கள். பள்ளிக்கூடக் கட்டணம் தங்கள் தகுதிக்கு மீறியதாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலை தான் தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. 

பள்ளிக்கட்டணம், சிறப்புப் பயிற்சி கட்டணம் என்று ஒவ்வொரு கட்டணமாகக் கட்டி வளரும் மாணவ சமுதாயத்தில் எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தில் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும்? 

மத்திய, மாநில அரசாங்கத்தின் உயர் கல்விக்கூடங்களில் படிக்கும் 90 சதவிகித மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விடுகின்றார்கள். அதிகாரவர்க்கத்தின் உயர்நிலை பதவிகளுக்குத் தேர்வு எழுதும் பத்து லட்சம் மாணவர்களில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்கள் மட்டுமே வருடந்தோறும் தேர்ச்சியடைந்து அந்தப் பதவியை அடைகின்றனர். இதன் படிம நிலைகளை ஒவ்வொரு தேர்வின் மூலமும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும். 

மொத்தத்தில் நல்ல பதவி, நல்ல சம்பளம் என்கிற விதத்தில் தமிழ்நாட்டில் இருந்து வெளியே வரும் அனைத்துத் துறை சார்ந்த படிப்புகளையும் கணக்கிட்டால் அதிகபட்சமாக ஐந்து சதவிகித மாணவர்களே தேறுவார்கள். மற்றவர்கள் படித்த படிப்புக்கு தொடர்பில்லாத துறைகளில் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். 

நான் வாழும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பணிபுரியும் பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள் நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்த வேலையில் தான் இருப்பேன். இப்படித்தான் என் வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற அவர்களின் மாணவ கனவு கருகிப் போய் வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற பரிதாப நிலைக்கு வந்து சேர்ந்து விடுகின்றார்கள். தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வந்தவர்களுக்கு மற்றொரு மிகப் பெரிய பிரச்சனையும் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் கல்விக்காக வாங்கிய வங்கிக் கடன், தனியார்களிடம் பெற்ற கடன் என்ற பெரிய சுமையையும் சேர்ந்து சுமக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். 

இங்கே எவருக்கும் சொந்தத் தொழில் ஆர்வமும் இல்லை. தமிழகத்தில் அதற்கான சூழ்நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. 

ஒவ்வொன்றும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், பணம் அதிகமாக வைத்திருப்பவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. சிறு தொழில்கள் குறித்தோ, மற்ற தொழில்நுட்ப விசயங்களில் ஆர்வம் செலுத்தி அதன் மூலம் மேலே வந்துவிடுவோம் என்ற எண்ணமே இல்லாத மாணவ சமூகத்தின் எண்ணத்திலும் நோக்கத்தில் எளிதில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே நம் கல்விச் சூழல் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. 

பணத்தை வைத்துக் கொண்டு அதனைத் தொடர்ச்சியாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் அதிகாரத்தின் கீழ் நாம் வாழக் கடமைப்பட்டவர்கள். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு நம் குழந்தைகளை மன உடல் ரீதியாக ஆரோக்கியத்தை அளிப்பதே முதன்மையாக இருக்க வேண்டும். 

என் தாத்தா என் அப்பா எப்படி உருப்படப் போகின்றார்? என்று கவலைப்பட்டார். என் அப்பா நான் எங்கே உருப்படப் போகின்றேன் என்று ஆதங்கமாய்ப் பேசினார். என் தாத்தாவுக்கு அவர் வாழ்ந்த சூழ்நிலையில் அவருக்காக எல்லையைத் தொட்டார். என் அப்பாவும் அவருக்கான எல்லையைத் தொட முடிந்தது. 

காரணம் வாழும் வரைக்கும் அவர்களுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியமும், எதையும் எதிர் கொண்டு வாழும் மன ஆரோக்கியமும் கை கொடுத்தது. நானும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் குழந்தைகளுக்கும் அதையே கற்றுக் கொடுக்க விரும்புகின்றேன். அப்படித்தான் கற்றுக் கொடுத்தும் வருகின்றேன். 

அவர்கள் வாழும் சூழ்நிலையைக் கைக்கொண்டு அவர்கள் சிறப்பாகவே வாழ்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எந்நாளும் எனக்குண்டு. போட்டி நிறைந்த உலகில் போட்டிகளால் மட்டுமே வளர்நது கொண்டிருக்கும் உலகில் நாம் வெல்ல வேண்டுமென்றால் நமக்கான ஆரோக்கியம் முதன்மையாகத் தேவைப்படுகின்றது. நம் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம். மற்றவற்றை அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழ்நிலையில் பெறக்கூடிய அனுபவங்கள் வழி நடத்தும். வழி காட்டும். 

(முற்றும்) 


தொடர்புடைய பதிவுகள்


படம் (நன்றி) Henk Oochappan

எனது ஒன்பதாவது மின் நூல் சில ரகசிய குறிப்புகள்.

இது வரையிலும் வெளியான எட்டு மின் நூல்களும் 1,75,000+ தரவிறக்கம் செய்து ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குழந்தைகளை அவ்வப்போது நாம் கவனித்து அறிவுரை கூறிவரவேண்டும். அவர்களும் தத்தம் கால்களில் நிற்கும் அளவிற்கு நாம் பக்குவப்படுத்தவேண்டும். இக்காலகட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு என்பதுகூட சிரமமான நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. அவர்களை மிகவும் நுணுக்கமாக அணுகினால் புரிந்துகொள்வர்.

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய நிலை பெரும் கவலைக்கு உரியதுதான் ஐயா
இன்று கல்வி ஒரு வியாபாரப் பொருளாகிவிட்டது.
பெற்றோர்களே இதன் முதல் காரணம்
..நம் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம். மற்றவற்றை அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழ்நிலையில் பெறக்கூடிய அனுபவங்கள் வழி நடத்தும். வழி காட்டும். ...
உண்மை ஐயா

Unknown said...

இன்றைய நிலையில் கல்வியின் பயன்பாடு, பள்ளிகளின் செயல்பாடு , பெற்றோரின் அவல நிலை மாணவர்களின் பரிதாப நிலை என பல செய்திகளை தெளிவாக ஆய்ந்து
எழுதியுள்ளீர்! அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய பதிவு நன்றி

Rathnavel Natarajan said...

பயணங்கள் கண்டறியும் பாதைகள் - சமச்சீர்க் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வியில் தனிப்பட்ட பள்ளிகள் தனக்கென்று சேர்த்து வைத்துப் பாடத்திட்டம் அடங்கிய கல்வி, மத்திய அரசு பாடத்திட்டம், கேந்திரயா வித்தியாலயா பாடத்திட்டம், நவோதயப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத் திட்டம் என்று இந்தியா முழுக்க ஏன் இன்று தமிழகம் முழுக்கக் கல்வி என்பது எது திசை? எது இலக்கு என்று தெரியாமல் எங்கங்கோ மாணவர்களை இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறப்பான பயணம் இது.