Saturday, December 31, 2016

ஜோதிமயமானவனின் சில குறிப்புகள்.............


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.  எண்ணிய எண்ணம் 2017 வருடம் மெய்ப்பட வாழ்த்துகள்.


சூழ்நிலைகளை நாம் எவ்வளவு விருப்பத்துடன் எதிர்கொள்கிறோம் என்பதே நம் அனுபவத்தின் தரத்தையும் வாழ்வின் தரத்தையும் நிர்ணயிக்கிறது.

How willingly we go through whatever situations we face decides the quality of our experience and the quality of our life.

++++++


மனித வாழ்க்கையின் மகத்தான சாதனை என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் மனம் தளராமல் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டேயிருப்பது தான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். 

1989 ஆம் ஆண்டுக் கல்லூரிப் படிப்பை காரைக்குடியில் முடிக்கும் வரையிலும் வாழ்க்கையில் உள்ளே, வெளியே எந்தப் போராட்டங்களையும் நான் பார்த்தது இல்லை. நடுத்தரவர்க்கத்தின் இயல்பான ஆசைகள் எப்போதும் போல கிடைத்தது.

ஆனால் அதற்குப் பிறகு கடந்து போன 25 வருடங்களில் போராட்டங்களைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொன்றும் போராட்டத்தின் வழியே தான் கடக்க வேண்டியுள்ளது.  

ஒவ்வொரு போராட்டங்களும் ஒரு அனுபவத்தினைத் தருகின்றது. அந்த அனுபவம் ஒரு பாடத்தைக் கொடுத்து விட்டு நகர்கின்றது. அடுத்தடுத்து புதிய பாடங்கள் புதிய அனுபவங்கள். மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையில் கற்றுக் கொள்வது மட்டுமே பிரதானமாக உள்ளது. 

எனக்குக் கிடைத்த அதிகப்படியான அனுபவங்கள் தான் என் எழுத்துப் பயணத்திற்கு உறுதுணையாக உள்ளது. 

2009 முதல் 2016 வரைக்கும் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இணையம் வழியே கற்றதும் பெற்றதும் ஏராளம். வரலாறு, கட்டுரை வடிவங்களில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க இந்த முறை என் சுய தேடலை இந்த மின் நூலில் உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன். 

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி என் முதல் மின் நூலான "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளிவந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து எனது எட்டாவது மின் நூல் "பழைய குப்பைகள்". இது என் வாழ்வின் காலடித்தடங்கள். ஒவ்வொன்றும் குப்பைகளாக மாறி உரமாக மாறியவை. நான் வெளியிட்ட ஏழு மின் நூல்களும் 1,64,000+ பேர்களை சென்றடைந்துள்ளது.
அட்டைப்பட வடிவமைப்பு திரு மனோஜ்
நான் கடந்து வந்த பாதையை, என் குடும்பச் சூழ்நிலை, பின்னணி, எண்ணங்கள், நோக்கங்கள் போன்றவற்றை ஓரளவுக்கு இந்த மின் நூல் வழியே உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது முழுமையான சுயசரிதை அல்ல. நமக்கான அடையாளத்தை நாமே உணர்ந்து கொள்ள முடியாவிட்டால் நாம் வாழும் சமூகத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்? என் புரிதலின் முதல் பகுதி இது.  

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பயணச்சுவடுகள் இதில் எங்கேனும் தெரியக்கூடும். உங்களின் விடமுடியாத கொள்கைகள் காலப்போக்கில் கேள்வியாக மாறி கேலி செய்யும். மனைவியும், குழந்தைகளும் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உங்களின் அடிப்படை சித்தாந்த அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும். உறவுக்கூட்டம் உறங்க விடாமல் தவிக்கவிடும். மொத்தத்தில் “பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதனை மொத்த உலகமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.

வாழ்க்கையில் எனக்கு உருவாகும் சோர்வினை எழுத்துலகம் மூலமாக ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்துக் கொள்கிறேன். இதுவே காயங்களுக்கு மருந்து போடுவது போல உள்ளது. 

75 வயதுக்குண்டான அனுபவங்கள் எனக்குக் கிடைத்த காரணத்தினால் இந் நூலைப் படிக்கும் உங்களுக்கு உண்மையான பரவத்தைத் தரும் என்றே நம்புகிறேன். 

பணம் என்ற ஒற்றைச்சொல் உங்களின் இறுதிப் பயணம் வரைக்கும் படாய்படுத்தும். ஆனால் அதற்கு உங்களின் ஆரோக்கியம் என்பதனை விலையாக வைக்க வேண்டும் என்பதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல “ருசியான வாழ்க்கை” வாழத் தெரிந்தவர்கள். அளவான பணம் மூலம் நீங்கள் வாழ முடியும். ஆனால் அளவற்ற பணமென்பது எதனையும் ஆள முடியும் என்றாலும் முழுமையாக வாழ முடியுமா? என்று கேட்டுக் கொள்பவனின் காலடித் தடமிது. 
இந்த மின் நூலை நண்பர் இராஜராஜனுக்கு சமர்ப்பிக்கின்றேன்.  தாயுமானவன் நீ.

பொருள் சேர்க்க வேண்டும் என்றால் "இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் ஒழுக்க விதிகளை கடைபிடிப்பவனின் சங்கட விதிகளை சமரசமின்றி எழுதியுள்ளேன். இதனைச் சுற்றியுள்ள உலகம் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனப்படுத்தும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்குப் பிடிவாதமாக "இப்படியே வாழ்ந்து பார்த்து விட்டால் என்ன?" என்ற கேள்வியோடு ஒவ்வொரு நிகழ்வினையும் ரசனையோடு சமூகப் பார்வையோடு எழுதியுள்ளேன். என் பயணம் சோர்வின்றி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. என் ஆரோக்கியம் மட்டுமே பெரும் சொத்தாக உள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட காயங்களை கடந்த ஏழு ஆண்டுகளாக எழுத்து வழியாக மருந்திட்டு வந்துள்ளேன். வாழும் போதே வெளிப்படைத் தன்மையை எல்லா இடங்களிலும் நீக்கமற விதைத்து வந்து உள்ளேன்.

என் ஆரோக்கியம் முழுமையாக இருக்கும் வரையிலும் இந்த எழுத்துலகத்தில் என் தடம் மாறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றே நம்புகின்றேன். 

இந்நூலுக்கு விமர்சனத்தின் வாயிலாக தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் மாறாத அன்பும்.

நல்வாழ்த்துகள். 

ஜோதிஜி  திருப்பூர். 
இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்


ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்  (51.356)

தமிழர் தேசம்  (16.652)


காரைக்குடி உணவகம் (23.713)


பயத்தோடு வாழப் பழகி கொள் (11.407)


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (10,446)


கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (33.475)


வெள்ளை அடிமைகள்  (16. 943)



13 comments:

எம்.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே...

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
மின்னூலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் அனுபவம் பலருக்கும் உதவும் மருந்து என்பதில் சந்தேகமேயில்லை...

வாழ்த்துகள்...

GANESAN said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

இனிய வாழ்த்துகள் ஞானசேகரன்

ஜோதிஜி said...

வாழ்த்துகள் குமார். நன்றி.

ஜோதிஜி said...

நன்றி தனபாலன். இனிய வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றி கணேசன். இனிய நல்வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

எஸ் சம்பத் said...

அன்றாட வாழ்வில் நமக்கு தேவையற்றது என்ற வகையில் பலவற்றை குப்பையில் கொண்டு போய் கொட்டுகிறோம். அதிலும் சூழலியல் ஆர்வலர்கள் மக்கும் பொருட்களை தனியாக, பிளாஸ்டிக் பொருட்களை தனியாக போடுங்கள் என பல பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே கொட்டுகிறோம். அத்தகைய குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை, உலோக சிதிலங்களை, பாட்டில்களை என பொருட்களை பொருக்கிச் சென்று காசாக்குகின்றனர். ஆக குப்பை கூட பலருக்கு வாழ்வளிக்கிறது.
ஆனால் அனுபவ பாடங்களை தொகுப்பாக பழைய குப்பைகள் என நண்பர் ஜோதிஜி ஏன் வகைப்படுத்தினார் என்று புரியவில்லை. அந்த குப்பைகளை புரட்டிப் பார்க்கிறபோது பல ரத்தினங்கள், மதிப்புமிக்க ஆலோசனைகள், வாழ்வியல் கருத்துக்கள் ஏராளமாக இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.
ஏறக்குறைய 7 ஆண்டுகளில் 700 பதிவுகளை கடந்து நிற்கின்றார் நண்பர். முன்னுரையிலும் முதல் அத்தியாயத்திலும் ஒரு மாய எண்ணைக் குறிப்பிடுகின்றார். அரசியல் அரங்கில் அனைவராலும் மறக்க முடியாத எண் அது. 1,70,000 + பார்வையாளர்களை மின்நூல் வாயிலாக தனது கருத்துக்கள் சென்றடைந்துள்ளது என்பதை பதிவு செய்துள்ளார். நிச்சயமாக இந்த எண் சாதனையின் உச்சம் என்பதில் ஐயமில்லை.
யார் ஒருவர் தனது குடும்பத்தை, உறவுகளை நேசிக்கிறாரோ அவர் வாழ்வில் வரும் சங்கடங்கள், சோதனைகள் இதுவும் கடந்து போம் என்ற வகையில் பறந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
3 பெண் குழந்தைகளுக்கு தந்தை நண்பர் ஜோதிஜி, அந்த தேவியரோடு இல்லத்துணையையும் சேர்த்து தேவியர் இல்லம் என தனது வலைதளத்திற்கு பெயரிட்டு பதிவுகள் மேற்கொண்டு வருபவர்.
செட்டிநாட்டு நகரமாம் காரைக்குடிக்கு அருகிலிருந்து விரைவு நகரமாம் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தது,
அந்த சூழலோடு ஒட்டியும், ஒட்டாமலும் வந்து சென்ற தாய், தந்தை அவர்களின் அருமை பெருமைகள்,
படிக்கப் படிக்க தேடல் விரிவடைந்தது,
தாய் தமிழ்ப் பள்ளி, புதுக்கோட்டை ஞானாலயா புத்தக சுரங்கம்,
வலைச்சர ஆசிரியராய் பணியாற்றிய வாரத்தில் அறிமுகப்படுத்திய தளங்கள்,
வலைச்சரம் வாயிலாக விரிவடைந்த நட்பெல்லை,
வந்த வேகத்தில் காணாமல் போகும் வலைபதிவர்கள்,
ஒழுக்கம், நேர்மை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை,
பள்ளி ஆசிரியர்கள், படித்த ஊர், வாழும் ஊரில் உள்ள நட்புகள்
இப்படி ஏராளமான செய்திகளை நேர்த்தியாக தொடுத்த பூச்சரம் போல் சொல்லிக் கொண்டு போகிறார். மாமனாரை பாராட்ட ஒரு மனது வேண்டும். அந்த வகையிலும் நண்பர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறார்.
தந்தைக்கும் மகன்களுக்கும் இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் போல் ஒரு தடுப்பு இருப்பதாகவும், சற்று விலகியிருத்தல்தான் பெரும்பாலான இடங்களில் நிகழ்கிறது என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். அந்த இடத்தில் மட்டும்தான் நான் சற்று மாறுபடுகிறேன். தந்தை மகன் உறவில் பலர் மிக நெருக்கமாகவும், உள்ளுக்குள் நூறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் வெளியில் ஒருவரைப் பற்றி மற்றவர் உயர்வாக பேசுவதைத்தான் பெரும்பாலும் காண்கிறோம். ஜோதியும் தன் தந்தையைப் பற்றி எந்த வரியிலும் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக இன்னும் சற்று நெருக்கமாக இருந்திருக்கலாமோ என்கிற ஏக்கமாகத்தான் அதை உணர முடிகிறது.

நிச்சயமாக இந்த புத்தகத்தை பழைய குப்பைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவரவருக்கு தேவையான பல செய்திகள், அனுபவங்கள் அதிலே பொதிந்து கிடக்கிறது. நண்பருக்கு விரையில் தனது தொழில் சார்ந்து அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணுகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், நிச்சயமாக நம்மைப் போன்ற வாசகர்களுக்கு அருமையான ஒரு பயண சரிதம் மின்நூலாக கிடைக்கும். மேலும் மேலும் சிகரங்கள் தொட உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
ஸம்பத் ஸ்ரீனிவாசன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காயங்களுக்கு மருந்து போடுவதுதான் எழுத்து. மிகவும் நுணுக்கமாகக் கூறியுள்ளீர்கள். தங்களது எழுத்தினை தொடர்ந்து வாசிக்கிறேன்.

கிரி said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி.. நீங்கள் கூறியபடியே உங்கள் எழுத்துக்கள் இணையத்தில் காலத்துக்கும் நிலைத்து இருக்கும்படியான நடவடிக்கைகளை செய்து விட்டீர்கள்.

என்னுடைய பாராட்டுகள்.

எல்லையே இல்லாத ஒரு விசயம் ஆசை மட்டுமல்ல.. நம்முடைய அனுபவங்களும் தான். நம்முடைய இறுதி மூச்சு வரை அனுபவம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.. முடிவே இல்லை.

எனவே,மேலும் பல புத்தகங்கள் எழுத உங்களுக்கு வாய்ப்புள்ளது. வாழ்த்துக்கள்.