Sunday, January 25, 2015

இது மனிதர்களின் கதை

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல் 

ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர். இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தனது பாணியில் வழங்கியிருக்கிறார். எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக வர வேண்டும். மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம். கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று.

இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார், ஜோதிஜி. 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம், வாருங்கள்.

‘நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’

முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மை தயார் செய்வதுடன், இந்த குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி. அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம். ஜோதிஜியின் எழுத்துக்களை படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம். 

இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார். ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம்.  வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது, இங்கே? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது.

முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும், அவர்களை தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில், இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார். அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி, தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன.

இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார். 

டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம்.

தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில்:

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள்,  

தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார். அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை. ‘அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை. ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரை பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்கு சொல்லுகிறார். ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார். சுவாரஸ்யமான அத்தியாயம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது, கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார். நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை. யாராக இருந்தாலும், என்னைப்போன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம். அதேபோல ஜோதிஜி இங்கு சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே. 

அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.

ஒரு சின்ன குறை: ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது. சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாக கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம். 


வலைபதிவர், எழுத்தாளர்,



8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' எனும் நேர்மையுடன், குழந்தை மனம் கொண்ட அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான விமர்சனம், நாங்கள் தொடரைத் தொடர்ந்ததால் நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்தையும் அறிய முடிந்தது. மிகவும் நேர்மையான, நல்ல உள்ளம் கொண்ட நண்பர் ஜோதிஜிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அவரது எழுத்து மட்டுமல்ல அவரையுமெ இந்த வலை யுலகம் போற்றிக் கொண்டாடுகின்றது!!! இன்னும் பல படைப்புகள் அவர் கொண்டு வர வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

அண்ணனின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் மிகச் சிறப்பான விமர்சனம் இது...
அருமையானதொரு படைப்பு ஒரு தொழிற்சாலையின் குறிப்புக்கள்.... மின்னூலாக இருக்கும் இது டாலர் நகரம் போல் புத்தகமாக வேண்டும் அண்ணா...

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நிச்சயம் வரும் குமார். நன்றி

Pandiaraj Jebarathinam said...

வியாழக் கிழமை விகடன் போல
வெள்ளிக்கிழமை ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் நினைவில் வருமளவு, உங்கள் எழுத்தும், நீங்கள் சந்தித்த மனிதர்களும் இருந்தன(ர்).

ஜோதிஜி said...

மகிழ்ச்சி பாண்டியராஜ்