Thursday, March 27, 2014

ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்?

நம் வாழ்க்கையில் நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளப் பல வார்த்தைகள் உண்டு. அதில் ஒன்று தான் "அடுத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்த வேண்டாம்" என்ற வாக்கியமும். 

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வைத்திருக்கும் நம்பிக்கைகள் ஒன்றா? இரண்டா?

மதம், இனம், மொழி, சாதி, ஊர் எனப் பலதரப்பட்ட நம்பிக்கைகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் சுமந்து கொண்டே தான் திரிய வேண்டியுள்ளது. அது தேவையா? என்பதை உணர்வதும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் நமக்கில்லை. பகுத்தறிய விரும்புவதுமில்லை. சரியா? தவறா? என்று கூட யோசிப்பதில்லை. இந்த வார்த்தையே தவறு. நம்மை யோசிக்க விட விடுவதில்லை என்பது தான் சரி. 

நீ இந்த மதத்தில் பிறந்துள்ளாய். இது தான் உன் தெய்வம். இது தான் உன் பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்று கோட்டை உருவாக்கி சுற்றிலும் அகழியையும் உருவாக்கி உள்ளேயே வாழ்ந்து உள்ளேயே மரணித்தும் போய் விடுகின்றோம். உலக மாறுதல்களை அறிவது இருக்கட்டும், ஊருக்கு அருகே நடக்கும் மாறுதல்களைக் கூடக் கவனிக்க முடியாத அளவுக்குச் சேனம் கட்டிய விலங்கு போலவே நம் வாழ்க்கை குறுகிய வட்டத்திற்குள் உழன்று முடிந்தும் போய்விடுகின்றது. 

கோவிலுக்குள் சென்றாலும் முந்திக் கொண்டு முன்னால் நிற்கவே விரும்புகின்றோம். உண்டியலில் காணிக்கை போடும் போதே நாம் வைத்துள்ள ஆசைகளின் வரவு செலவு அடிப்படையில் கணக்குபுள்ளையாகச் செயல்படுகின்றோம். கோவிலுக்குள் பக்திமானாகச் செல்லும் அனைவரும் வெளியே வரும் போது சீதை விரும்பிய மாயமானை தேடுபவர்களாகத்தான் வருகின்றார்கள். 

கடைசியில் பக்தி என்பது பகல் வேஷம் போல மாறிவிடுகின்றது. 


நாம் வைத்துள்ள எல்லாவிதமான நம்பிக்கைகளும் மதத்திலிருந்து தொடங்கி மத நம்பிக்கைகளுக்குளே முடிந்து போயும் விடுகின்றது. ஏன்? என்று கேட்கக்கூடாது? இது எதற்காக? என்று பார்க்கக்கூடாது. பகுத்தறிவுவாதி என்பதே கெட்டவார்த்தை போலவே பார்க்கப்படுகின்றது. 

நம்மை ஒதுக்கி விடக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்பவர்கள் தான் "ஊரோடு ஒத்து வாழ்" என்ற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எதையும் "ஆராய்ச்சி மனப்பான்மையில் பார்க்காதே" என்பவர்கள் தான் "ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட. 

ஒன்றைப்பற்றி அறியாத போது தான் ஆதங்கம் அதிகமாக உருவாகின்றது. இந்த ஆதங்கம் தான் காலப்போக்கில் ஒவ்வொரு மனிதர்களுக்குக் கழிவிரக்கத்தை உருவாக்கி ஏக்கத்தை மட்டும் சுமந்து வாழும் மனிதர்களாக மாற்றி விடுகின்றது. அவனின் சக்தியை அவனால் உணர முடியாத போது எளிதாக "எல்லாமே விதிக்குள் அடக்கம்" என்பதான யோசனையில் போய் முடிந்து விடுகின்றது. 

'முயற்சித்தேன் கைகூடவில்லை' என்பதற்கும் 'விதியிருந்தால் அது நடக்கும்' என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் ஆன்மீகத்தின் ஆதார பலத்தைப் பற்றி உணர முடியும். 

வயதாகி விட்டது. உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதில் இரண்டு அர்த்தம் உண்டு என்பதை எப்போதும் நாம் மறந்து விடக்கூடாது. உடல் உறுப்புகள் காலப்போக்கில் அதன் வீரியத்தன்மையை இழப்பதென்பது இயற்கை விதி. ஆனால் இளமையில் போட்ட ஆட்டத்தினால் உறுப்புகள் அந்தர்பல்டி அடித்துச் சத்தியகிரகம் செய்யும் போது தான் ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீக ஞானமே பிறக்கின்றது. 

அதாவது நான் திருந்தி வாழ விரும்புகின்றேன். ஆனால் என் மனதை அடக்க முடியவில்லை. அதற்கு ஒரு சாய்வு தேவை என்கிற ரீதியில் தான் பலருக்கும் இந்த ஆன்மீகம் அருமருந்தாக உள்ளது. 

"உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது. ஒரு வேளை அப்படியே மனித இனம் யோசித்திருந்தால் மின்சாரம் இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கும். சீரியல் பைத்தியமாக இருக்காளே என்று சம்சாரத்தைத் திட்ட வேண்டிய அவசியம் வந்திருக்காது. கணினியை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்தக் 'கடவுள் ஆராய்ச்சி' தொடங்கியிருக்காது. இந்த வரிகளை வாசித்திருக்க முடியாது. கல்வியறிவு வளர்ந்திருக்காது. 'கண்டவர் விண்டிலர்' என்ற சொல்லும் போதே "அதெல்லாம் சரிப்பா அதுக்குக் கொஞ்சம் அர்த்தத்தையும் சொல்லிட்டு போ" என்கிற தைரியம் பிறந்திருக்காது. 

மனிதர்களின் ஆசைகள் ஒவ்வொரு சமயத்திலும் அவனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. உழைக்கத் தொடங்கினார்கள். தோல்விக்கு நாமே காரணம் என்று உணர்ந்து மேலும் உழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்து வர மொத்த சமூகத்தின் வேகமும் நாலு கால் பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது. 

எந்த விஞ்ஞானிகளும் கடவுளைப் பற்றி யோசிக்கவில்லை என்பதை விட அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இருக்கவில்லை. லட்சக்கணக்கான சிந்தனைகளின் செயல்பாடுகளின் இன்று உலகம் முழுக்க உள்ள 700 மில்லியன் ஜனத்தொகையை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. பல வசதிகளைத் தந்துள்ளது. 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதை உணரவும் வைத்துள்ளது. 

விஞ்ஞானிகள் கடவுளைப் பற்றி நினைக்கவில்லையே தவிர ஒவ்வொரு காலகட்டத்திலும் மதவாதிகள் நினைக்க வேண்டிய கடவுள்களைத் தவிர மற்ற அனைத்தையும் நினைத்தார்கள். தங்கள் ஆளுமைக்குள் தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். அது தொடர்பான வேலைகளை மட்டுமே செய்தார்கள். அக்கிரமங்கள் மட்டும் நின்றதே இல்லை. கல்லடி கொடுத்தார்கள். கழுவில் ஏற்றினார்கள். உண்மைகளை வெளியே வராத அளவுக்கு உக்கிரமாகச் செயல்பட்டார்கள். 

கடைசியில் "பாவத்தைச் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்" என்று மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு பரிதாபமாகக் கூவினார்கள். உன் விதிப் பயன் மாறும் என்றார்கள். பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் திறந்த அணையைக் கை வைத்து தடுக்க முடியுமா? 

மதவாதத்தை இன்று மார்க்கெட்டிங் செய்து வளர்க்கும் அளவிற்கு மாறியுள்ளது. ஆனால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றையும் மக்கள் தேடிப்போய் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கின்றது. 

வாழ்க்கையை நேசிப்பவர்கள் வசதியை விரும்புகின்றார்கள். இந்த வசதிகள் கொடுத்த தைரியத்தில் தான் 'சிறப்புத் தரிசனம்' என்ற பெயரில் நானும் ஆன்மீகவாதிதான் என்று திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். 

ஒருவன் எந்த நாட்டில் எந்தச் சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம் பெறுகின்றது. இது இயற்கை உருவாக்கிய பொதுவான விதி. ஆனால் ஒருவன் எங்கு வாழ்ந்தாலும் அவனிடம் உள்ள ஆதார பயமென்பது 'அப்பாற்பட்ட ஏதோவொன்று இருக்கின்றது' என்பதாக அவன் மனம் நம்பத் தொடங்குகின்றது. 

அப்போது தான் ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கின்றது. வணங்கும் பொருட்கள் மாறலாம். வழிபாட்டுத் தன்மை கூட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ஆதார பயம் மட்டும் சாவின் கடைசி நொடி வரைக்கும் தொடருகின்றது. ஒரு மனிதனின் பயம் விலக அவன் பார்க்கும் பார்வைகள் ரொம்பவே முக்கியம். எதையும் உணர மறுக்கும் குருடனிடம் போய் எந்தப் பார்வையை உங்களால் உணர்த்த முடியும்? 

'பலவற்றை உன்னால் உணர முடியாது'? என்று சொல்லியே தன்னை உணர மறுக்கும் மனித கும்பலை மதவாதிகள் வளர்த்தார்கள். அப்படித்தான் வளர்க்கவும் விரும்புகின்றார்கள். உருவாக்கப்பட்ட மதக் கொள்கைகளில் இடைச் சொருகலாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றையும் புகுத்திக் கொண்டே வர இன்று எது உண்மையான ஆன்மீகம் என்ற கேள்விக்குறியில் வந்து நிற்கின்றது? 

வாழும் போது மற்றவர்களை வதைப்பவர்களைப் பார்த்து அவன் முன் ஜென்ம பலனால் இன்று அரசாட்சி செய்கின்றான் என்கிறார்கள். வதைபட்டுத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் அதையே தான் சொல்கின்றார்கள்? 

உணர மறுப்பவனின் தவறா? உணர்வே தெரியாதவனின் குறையா? 

எங்கே வந்து முடிந்துள்ளது? 

அழியப் போகும் உடம்பை நினைப்பதை விடச் சேர்த்து விடத் துடிக்கும் சொத்தின் மேல் பற்றுதல் உருவாகி உள்ளது. படபடப்பு என்பது இயல்பான குணமாக மாறியுள்ளது. அறநெறிகள் அவசியமில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு மூலம் சமன் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது. நாம் வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. இளிச்சவாய்த்தனமாக இருக்காதே என்று அறிவுரை சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது. 

ஆன்மீகத்தைப் பற்றி அதன் மொத்த கூறுகளைப் பற்றி அதன் தன்மைகளைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? போன்ற ஆராய்ச்சி கூடத் தேவையில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் வணங்கித்தான் தீர வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க அவர் அரசியல்வாதி அல்ல. 

சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் அவர் கேட்கவில்லை. இந்த உடையில் தான் வரவேண்டும் என்று சொல்வதற்கு அவர் தனியார் கல்விக்கூடம் நடத்தும் நபர் அல்ல. அண்டா நிறைய பாலைக் கொண்டு ஊற்றினாலும், அல்வா போன்ற பட்சணங்களை படைத்தாலும் அவர் மயங்க அமைதிப்படை நாயகன் அல்ல. உங்கள் பாவக் கணக்கை பட்டியலிட மடிக்கணினி ஏதும் வைத்திருப்பதாக தெரியவில்லை. 

ஆனால் உங்கள் மனதில் ஓவ்வொன்றுக்கும் தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் உண்டு என்பதையும், எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்பதையாவது புரிந்திருக்க தெரிய வேண்டும். குறிப்பாக உங்களை நீங்களே அறிந்திருக்க வேண்டும். உங்களின் அளவற்ற சக்தியை உணரத் தெரிந்திருக்க வேண்டும்.  

"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே கிடைக்காத போதும் கூட என் கடமையை சரியாகத் தான் செய்துள்ளேன் என்ற சுய நிர்ணயத்தில் கம்பீரமாக வாழ கற்று இருக்க வேண்டும். குறிப்பாக மெய்யியல் ஆன்மீகத்தையாவது புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 

ஒவ்வொருவரும் தனது ஒரு நாள் வாழ்க்கையை எத்தனை பேர்கள் உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சமயத்தில் யோசித்துப் பாருங்களேன். 

இரவில் தூங்கத் தொடங்கும் வரையிலும் தான் உங்கள் ஆசை, காமம், குரோதம், வன்மம், பொறாமை, எரிச்சல் போன்றவர்கள் பங்காளிகளாகப் பல் இளித்துக் கொண்டு உங்களுடன் தான் இருக்கின்றார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் உங்களின் உயிர் எங்கே இருக்கும்? அந்தரத்திலா? ஆள் அரவமற்ற இடத்திலா? 

காலையில் விழிப்பு வந்தால் மட்டுமே நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பாதித் தூக்கத்திலே பரதேசம் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம் தானே? ஆனால் நாம் தினந்தோறும் பயத்துடன் தான் படுக்கச் செல்கின்றோமா? அடுத்த நாள் ஆட்டையைப் போடும் கணக்கோடு தானே தூங்கச் செல்கின்றோம். 

காலையில் தொடங்கும் வார்த்தைகளே இன்னமும் காபி போடலையா? என்று எரிச்சலுடன் மனைவியைப் பேசத் தொடங்க உள்ளேயிருக்கும் வன்மம் வளரத் தொடங்க வாழ வந்தவளை மதிக்கத் தெரியாதவன் கடைபிடிக்கும் ஆன்மீகம் எதைக் கற்றுக் கொடுக்கும்? குழந்தைகளை கொண்டாடத் தெரியாதவன் சிலைகள் மேல் கொண்டு போய் கொட்டும் பாலையும் தேனையும் ஆண்டவன் மட்டுமல்ல? நக்கிக்குடிக்கும் நாய் கூட சீந்தாது. 

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும். 

)()()()()()(


(ஆசான் பயணத் தொடர் முடிவுற்றது. ஒவ்வொரு பதிவுக்கும் அற்புதமான வரவேற்பு கொடுத்தவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும், விமர்சனங்கள் மூலம் எனக்குக் கற்றுத் தந்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும், ஆசான் தொடர் பதிவுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர்கள் அனைவருக்கும் மற்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றி) 

ஏழெட்டு மாதங்களாக உள்ளே உழன்று கொண்டிருந்ததை இறக்கி வைத்த திருப்தி. பலருக்கும் சென்று சேர உதவிய வருண் மற்றும் ஜெய்தேவ்க்கு என் தனிப்பட்ட நன்றி.

என்னைக் குத்தி விட்டுக் குத்தாட்டம் போட வைத்த நண்பர் 'சவுதி எண்ணெய் கிணறு மொதலாளி' பிகேஆருக்கு ஸ்பெஷல் நன்றி

தொடர்புடைய பதிவுகள்.

எல்லாமே ஏதோவொரு வகையில் தொடர்பு தான். தேடிப்பபாருங்க. நீங்க தான் இந்த பயணத்தை தொடக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்க வேண்டும்.

45 comments:

தனிமரம் said...

உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள்.//மிகவும் சரியான கருத்துப்பார்வை அண்ணாச்சி.

வருண் said...

***வாழும் போது மற்றவர்களை வதைப்பவர்களைப் பார்த்து அவன் முன் ஜென்ம பலனால் இன்று அரசாட்சி செய்கின்றான் என்கிறார்கள். வதைபட்டுத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் அதையே தான் சொல்கின்றார்கள்? ***

எனக்கு "கர்மா" என்கிற காண்சப்ட் பிடிக்கத்தான் செய்தது. ஏன் என்றால், தவறே செய்யாதவன் ஏன் தண்டனை அனுபவிக்கிறான்? என்ற கேள்விக்கு "கர்மா"வால் பதில் சொல்ல இயலும்.

"கர்மா" பற்றி ஒரு கிறித்தவரிடம் (ஹிந்துயிசம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருச்சாம் :) ) வாதம் செய்யும்போதுதான். சரி என்னுடையைந்தப் பிறவியில் நான் அனுபவிக்கும் கஷ்டங்கள் முந்தைய பிறவியில் நான் செய்த வினைகள். ஏற்றுக்கொள்ளலாம். பிரச்சினை இல்லை.

இந்தப் பிறவி -> கடந்த பிறவி-> அதற்கு முந்திய பிறவி இப்படியே போயி ->>> என் முதல் பிறவி. சரியா? இப்போ என்னுடைய முதல் பிறவி! எனக்கு முந்திய பிறவி கர்மாவே இல்லை. சரியா? என் முதல் பிறவியிலும் நான் நல்லது கெட்டது செய்யத்தான் செய்து இருக்கிறேன். Thats not GOVERNED by KARMA? சரியா? இருந்தும் நான் நல்லது கெட்டது செய்கிறேன் என்று வாதம் போனதும்.. அவரால் கர்மா வைச் சொல்லி விளக்கம் சொல்ல இயலவில்லை. ஏதோ "சர்க்கிள்" அது இதுனு சொல்லி சமாளித்தார். அதனால கர்மா என்பதும் பிரச்சினைக்குரிய ஒரு தியரிதான். மேலோட்டமாக பார்க்க சரியாகத்தோனும். கொஞ்சம் உள்ளே இறங்கிப் பார்த்தா பிரச்சினைதான். :)

People think rationalists are just argumentative and they are ruthless and insensible. That's not true. They do think a lot sincerely. They dont want to pretend that they understood something when they really are not.

நாத்திகனா சும்மா வெதண்டாவாதம் பண்ணுவான் என்று சொல்வது ஆத்திகர்களின் இயலாமையை மறைக்க .

கடவுள் இருக்கிறார் என்று நம்ப வேன்றுமென்றே மறுக்கவில்லை. இருந்தால் என்ன? அவர் எதுக்கு? இருந்துட்டுப் போகட்டும் விடு என்றும் சிந்திக்க முடியும் சிலரால்.

Unknown said...

அருமையான பதிவுடன் நிறைவு அருமை

மகிழ்நிறை said...

//கோவிலுக்குள் பக்திமானாகச் செல்லும் அனைவரும் வெளியே வரும் போது சீதை விரும்பிய மாயமானை தேடுபவர்களாகத்தான் வருகின்றார்கள்.//
என்ன வரிகள். ஆஹா!
//வயதாகி விட்டது. உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதில் இரண்டு அர்த்தம் உண்டு //ஒ! இதுக்கு எப்படி ஒரு அர்த்தமிருக்கா!
//குழந்தைகளை கொண்டாடத் தெரியாதவன் சிலைகள் மேல் கொண்டு போய் கொட்டும் பாலையும் தேனையும் ஆண்டவன் மட்டுமல்ல? நக்கிக்குடிக்கும் நாய் கூட சீந்தாது. //இப்படியா ஒவ்வொரு வரியையும் பஞ்ச் வைப்பது!? ஏதேது உங்க ஆசானுக்கு என்னையும் சிஷ்யை ஆக்கிடுவிங்க போலவே! அருமையான பயணம். ரொம்ப சின்ன வயதில் என் அண்ணனோடு பயனித்ததுண்டு. இருபது வருடம் கழித்து அதுபோன்றதொரு பயணம் அமைந்தது. நன்றி அண்ணா! இதோ பயணத்தை தொடர்கிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்பிட்ட பல வரிகளை மேலே கருத்துரையில் சொல்லி விட்டதால்...

/// பகுத்தறிவுவாதி என்பதே கெட்டவார்த்தை ///

தீவிர பசி இருக்கும் போது சாப்பிட தோசை கிடைத்தால், அதைத் தடுத்து சாப்பிட விடாமல், ஓட்டைகள் எத்தனை இருக்குங்கிற ஆராய்ச்சி செய்வதால், இன்றைக்கு கெட்டவார்த்தையாக மாறி விட்டது... இது ஒரு உதாரணம்... புரிந்து கொண்டால் நன்றி...

// தன்னை உணர்வதே ஆன்மீகம் // தன்னை உணர்வதும் தனக்குள் உணர்வதும் ஆன்மீகம் தான்...

/// உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மை காண்பது தான் /// இந்த வரிகளை எனது பல பதிவுகளில் வரும்... உணர்வது சரி... உணர்த்துவது...? அங்கே தான் பிரச்சனையே...

1) ஏன் உணர்த்த வேண்டும்...? தான் உணர்ந்ததை மற்றவர்கள் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற எண்ணமா...? இல்லை அப்போது தான் "ஆணவம்" மெல்ல மெல்ல ஒட்டிக் கொள்வதை அறியாத அறியாமையா...?

2) அறியாமை தான்... நமக்கு வந்த வலியை மற்றவர்களுக்கு உணர வைக்க முடியுமா...?

3) வலி இருக்கட்டும்... சரி அப்படி மற்றவர்கள் உணரவில்லை / உணர முடியவில்லை என்றால் கோபம், எகத்தாளம், வீண்விவாதம், இன்னும் பல எதற்கு...? எதில் அக்கறை...? தனது பெருமைக்கா...?

3) அப்படி பெருமை என்றால், தான் முழுமையாக உணர்ந்தவரா...? ஏனென்றால் மனிதனை மனிதனாக மதிக்கவே தெரியவில்லை என்றால், என்ன உணர்ந்து என்ன பிரயோசனம்...?

அப்படி என்றால் "உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மை காண்பது தான்" ஏன்...? எப்படி...? எவ்வாறு...? எதற்காக...? யோசிங்க ஜி...

சில பாடல்களை வைத்து பல பதிவுகள் எழுதலாம்... அதில் ஒன்று... இதில் பொன் பொருள் + வந்த வழி என்பது வேறு... நன்றி யாருக்கு என்பதும்...

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு... கண் மூடி போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன், எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்... கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது... நினைத்ததை முடிப்பவன் <--- இது படத்தின் பெயரே தான்...!

Amudhavan said...

சரியான திசையில் பயணித்து சரியான புள்ளியில் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். உங்களின் முத்தாய்ப்பான வரிகளே எல்லா விளக்கங்களையும் தந்துவிடுகிறது. நமக்கு வேண்டிய சில விஷயங்களை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வயது வந்தவுடன் நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளுவதுபோல் பக்தி போன்ற விஷயங்களையும் ஆன்மிகம் கடவுள் போன்ற விஷயங்களையும் நமக்கு நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகின்றோம்.

இப்படித் தேர்ந்தெடுத்து முடித்தபிறகு அதையே பின்பற்றிப் போய்கொண்டே இருக்கவேண்டியதுதானே. இதில் எதற்கு முட்டலும் மோதலும்?

இதில் எதற்கு நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும்?
கடவுள் நம்பிக்கை என்பதும் சரி, நம்பிக்கையின்மை என்பதும்சரி தனிப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயமே. இது பொதுவான விஷயமோ சமூகம் சார்ந்த விஷயமோ ஆகக்கூடாது.

இவற்றை நடைமுறைப் படுத்தும்போது (இரண்டு பக்கத்திலும்தான்) மற்றவர்களைப் பாதிக்காமல் நடந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே முக்கியம் என்பதே என் கருத்து.

”தளிர் சுரேஷ்” said...

இன்றைய ஆன்மீகம் குறித்த தேடல்களும் கருத்துக்களும் கசப்பாய் இருந்தாலும் உண்மையை சொல்கின்றன! அருமையான பதிவு! நன்றி!

Rathnavel Natarajan said...

ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்?
திரு ஜோதிஜி அவர்களின்"ஆழ்ந்து படிக்க வேண்டிய அருமையான பதிவு".
நண்பர்கள் படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

வருண் said...

***1) ஏன் உணர்த்த வேண்டும்...? தான் உணர்ந்ததை மற்றவர்கள் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற எண்ணமா...? இல்லை அப்போது தான் "ஆணவம்" மெல்ல மெல்ல ஒட்டிக் கொள்வதை அறியாத அறியாமையா...? ***

இதேபோல் நான் உணர்ந்த ஜீசஸை உணருங்கள் என்று ஒருகிருத்தவர் சொன்னால் ஏன் அடிச்சுக்கிறீங்க அப்போ- இந்துமதப்பற்றாளர்களே???

வருண் said...

***தீவிர பசி இருக்கும் போது சாப்பிட தோசை கிடைத்தால், அதைத் தடுத்து சாப்பிட விடாமல், ஓட்டைகள் எத்தனை இருக்குங்கிற ஆராய்ச்சி செய்வதால், இன்றைக்கு கெட்டவார்த்தையாக மாறி விட்டது... இது ஒரு உதாரணம்... புரிந்து கொண்டால் நன்றி...***

அப்போ காமப்பசியில் உள்ள ஒருவன் கவர்ச்சியான் எயிட்ஸ் நோயாளியுடன் "பசியால்" உறவு கொண்டால் சரியா? எப்படியோ பசி அடங்கினால் சரி. அப்படித்தானே?

ஓடைகள் உள்ள தோசைகளை சாப்பிடாதேனு திண்டுக்கல்ல வேணா சொல்லுவாங்க. விசம் (ஸ்லோ பய்சன்) கலந்த தோசையாக இருந்தால், பசியில் இருப்பவனை தடுப்பதுதான் சரி! :) விஷம் இருப்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை. அது அவர்கள் அறியாமை! :)

வருண் said...

***2) அறியாமை தான்... நமக்கு வந்த வலியை மற்றவர்களுக்கு உணர வைக்க முடியுமா...? ***

ஆன்மீகவாதியும் ஒருவகையில் தன் மனநிம்மதிக்காக தன்னை முட்டாளக்கிக்கொண்டு அறியாமையில்தான் வாழ்கிறான் என்பதுதான் உண்மை. இதையெல்லாம் எல்லாராலும் பகுத்தறிய முடியாது!

வருண் said...

***பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு... கண் மூடி போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன், எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்... கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது... நினைத்ததை முடிப்பவன் <--- இது படத்தின் பெயரே தான்...!***

இந்தப்பாட்டை எழுதியவர் ஒரு குடிகாரர்!!

இந்தப் பாட்டை திரையில் பாடியவர் (ஊருக்கு உபதேசம்) 1980ல தன் அரசியல் சுயநலத்துக்காக் சாராயக்கடையை திறந்துவிட்டு , tasmac னு ஊரில் உள்ளவ்னையெல்லாம் குடிக்க வச்சு இன்னைக்கு 90% குடிகாரனா ஆகித்திரிகிறான். ஆன்மீகத்தைவிட டாஸ்மாக் தண்ணியே பெட்டர்னு ஆக்கிவிட்டுவிட்டு போனவர் இந்தப் பெரியவரு.

இதெல்லாம் ஊருக்காகப் போடும் வேடம்.

இதை எழுதுவது வயித்துப் பொழைப்புக்கு.

இதை திரையில் பாடுவது ஊரை ஏமாற்றுவதுக்கு.

இதுபோல் ஊருக்கு உபதேசம் பண்ணியவர்கள் அவர்கள் வாழக்கையை எப்ப்படி வாழ்ந்தார்கள்னு ஜெயலலிதாவுக்கும் லதாவுக்கும்தான் தெரியும். பாவம் திண்டுக்கல் காரருக்கு எப்படித் தெரியும்?

வருண் said...

I can go on answer every interpretation in a different angle, rationally. But I know there is no use. Just like you guys try preach people like me! Let us agree to disagree and move on!

Of course my way is HIGH WAY holds good for both of us! :) Have a nice day guys!

Ranjani Narayanan said...

ஆன்மிகம் என்பதற்கு இதுதான் பொருள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறார்கள். எதை சரி என்பது, எதைத் தவறு என்பது?
தனது ஆன்மாவை அறிவது ஆன்மிகம் என்றால் எப்படி அறிவது? அதற்கு வழிகள் என்ன? நீங்கள் அறிந்த வழியும், நான் அறிந்த வழியும் ஒன்றா?
உங்கள் வழி உங்களுக்கு, என் வழி எனக்கு. நான் உங்கள் வழியில் குறுக்கிடாமல், என் வழியைத் தவறு என்று நீங்கள் சொல்லாமல் இருந்தால் போதும்.
போன பதிவில் சொன்ன தீமிதிப்பது அந்தப் பெண்மணி அறிந்த நம்பிக்கை. நமக்கு இது என்ன முட்டாள்தனம் என்று தோன்றினாலும், அவருக்குள் இருக்கும் ஒரு நம்பிக்கை அது.
ஆன்மீகவாதி என்று சொல்லும் பலரிடமும் மக்கள் ஏமாறுவது மிகவும் கொடுமை.

விவேகானந்தர் சொன்னதுபோல நம்நாட்டிற்கு இப்போது மதம் (இங்கு நாம் ஆன்மிகம் என்று வைத்துக்கொள்ளலாம்) தேவையில்லை. தங்களுக்கு இருக்கும் சக்தியை படிப்பதற்கும், நல்லபடி வாழ்க்கையை அமைப்பதற்கும் பயன்படுத்துங்கள் என்று சொல்லலாம். அப்பொழுதும் நாம் சொன்னதை மற்றவர்கள் கேட்பார்கள் என்பது என்ன நிச்சயம்?

சாமியார்கள் போலிகள் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் நம் ஊரில் சாமியார்களின் எண்ணிக்கையும் குறைவதில்லை; நம்பி ஏமாறும் மக்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. இவர்களை எப்படித் திருத்துவது?
ஆன்மீகப் போர்வையில் அநியாயம் செய்யும் இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்று என்று கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?
உங்கள் நிறைவுப் பதிவைப் படித்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

sivakumarcoimbatore said...

ஏழெட்டு மாதங்களாக உள்ளே உழன்று கொண்டிருந்ததை இறக்கி வைத்த திருப்தி. ...100% true sir....

தி.தமிழ் இளங்கோ said...

பயணக் கட்டுரைத் தொடராகவே முடித்து விட்டீர்கள். உங்கள் ஆசான் உங்களுக்கு என்ன உணர்த்தினார்? என்பதைச் சொல்லவே இல்லை.கட்டுரையின் இறுதியில் தன்னை உணர்தலே ஆன்மீகம் என்று சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.

ஆத்திகரும் நாத்திகரும் யூகங்களின் அடிப்படையில்தான் வாதங்களை வைக்கின்றனர்.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
- திருமூலர் (திருமந்திரம் 2264)

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரை அண்ணா...

வருண் said...

***/// பகுத்தறிவுவாதி என்பதே கெட்டவார்த்தை ///

தீவிர பசி இருக்கும் போது சாப்பிட தோசை கிடைத்தால், அதைத் தடுத்து சாப்பிட விடாமல், ஓட்டைகள் எத்தனை இருக்குங்கிற ஆராய்ச்சி செய்வதால், இன்றைக்கு கெட்டவார்த்தையாக மாறி விட்டது... இது ஒரு உதாரணம்... புரிந்து கொண்டால் நன்றி...***

சும்மா எதையாவது உதாரணம்னு கொடுத்து, தோசைல ஓட்டையை எண்ணினான் , சோத்துல மண் அள்ளிப் போட்டான்னு சொல்றவா எல்லாம் எப்படி "ஆன்மீக"க் கடலில் நீந்தமுடியும்?

பகுத்தறிவுவாதி என்கிற வார்த்தை சகிச்சுக்கக்கூட இன்னும் பழகல இந்த ஆன்மீகவாதி!

ஆனா ஊரில் உள்ளவனுக்கெல்லாம் ஆன்மிகம் பற்றி உபதேசம்!!

வருண் said...

***// தன்னை உணர்வதே ஆன்மீகம் // தன்னை உணர்வதும் தனக்குள் உணர்வதும் ஆன்மீகம் தான்... ***

தன்னை உணர்தல் சரி. தனக்குள் உணர்தல் என்பது சுத்தமான உளறல்!

தனக்குள் என்னத்தைப்பா உனர்ந்தீங்க?

சும்மா இப்படி புரியாதமாரி பேசிட்டால் எல்லாரும் உங்களை ஆன்மிகக் கடல்னு மெச்சுவானு நெனச்சா அது அடிமுட்டாள்த்தனம்.

வருண் said...

****/// உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மை காண்பது தான் /// இந்த வரிகளை எனது பல பதிவுகளில் வரும்... உணர்வது சரி... உணர்த்துவது...? அங்கே தான் பிரச்சனையே...

1) ஏன் உணர்த்த வேண்டும்...? தான் உணர்ந்ததை மற்றவர்கள் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற எண்ணமா...? இல்லை அப்போது தான் "ஆணவம்" மெல்ல மெல்ல ஒட்டிக் கொள்வதை அறியாத அறியாமையா...?

2) அறியாமை தான்... நமக்கு வந்த வலியை மற்றவர்களுக்கு உணர வைக்க முடியுமா...?

3) வலி இருக்கட்டும்... சரி அப்படி மற்றவர்கள் உணரவில்லை / உணர முடியவில்லை என்றால் கோபம், எகத்தாளம், வீண்விவாதம், இன்னும் பல எதற்கு...? எதில் அக்கறை...? தனது பெருமைக்கா...?

3) அப்படி பெருமை என்றால், தான் முழுமையாக உணர்ந்தவரா...? ஏனென்றால் மனிதனை மனிதனாக மதிக்கவே தெரியவில்லை என்றால், என்ன உணர்ந்து என்ன பிரயோசனம்...?

அப்படி என்றால் "உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மை காண்பது தான்" ஏன்...? எப்படி...? எவ்வாறு...? எதற்காக...? யோசிங்க ஜி...***

பிறரிடம் நம்மைக் காண்பது!

இதை முதலில் புரிந்து கொள்வோம்!

மொதல்ல நம்மை நாம் புரிந்துகொண்டால்தான் பிறரிடம் நம்மைக் காண முடியும். நீ யாருனே உனக்குத் தெரியலைனா உன்னை எங்கே பார்ப்ப? சரியா?

நம்மை நாம் புரிந்துகொள்வது.

இங்கே ஒருவன் தன்னை புரிந்துகொள்ள நினைத்தால் அவனுக்கு திறந்த மனது வேண்டும். மனிதன் நிறைகளுடன் குறைகளும் உள்ளவன். பொதுவாக குறுகிய மனதுள்ள மனிதன் தன் நிறைகளை பூதக்கண்ணாடி போட்டுப் பார்ப்பதுவும், தன் குறைகளை பெரிதுபடுத்தாமல்ப் போவதையும்தான் பார்க்கிறோம். எத்தனை பேரு, தன் மனசாட்சிக்குத் தெரிந்த தன்னைப் பற்றிய அசிங்கமான ரகசியங்களை வெளி உலகுக்குச் சொல்லி தன்னை குறைத்துக்கொள்கிறான்?

ஆக உன்னிடம் திறந்த மனது உண்டா?

உன்னால உன்னைப்போல ஒரு பகுத்தறிவுவாதியைப் பார்க்க முடியுதா?

பார்த்து அவனுடைய உண்மையான உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுதா?

ARE YOU SURE????

பொதுவாக, ஆன்மீகவாதி என்று தன்னை நினைப்பவன், பகுத்தறிவுவாதியை நண்பனாக நினைக்கத் தவருகிறான். அவனுடைய உணர்வுகள மதிக்கத் தவறுகிறான். தன்னுடைய எதிரியாக சித்தரிக்கிறான். அதற்கு காரணம் என்ன என்று நியாயப்படுத்துகிறான். எதை எதையோ பிதற்றுகிறான். இதைத்தானே நாம் பார்க்கிறோம்?

பிறரிடம் நம்மைக் காண நினைக்கும் பலர் அவர்களையே அவர்கள் புரிந்துகொள்ளாமல் போய்விட்டால்?

பிறரிடம் நம்மை கான்பதென்பது 3 வார்த்தைகள்தான். ஆனால் இதை நாம் புரிந்துதான் பேசுகிறோமா? இல்லை புரிந்தமாதிரி நினைத்துக்கொண்டு பேசுகிறோமா? என்பதே பிரச்சினைக்குரியது..


திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... ஹா... நன்றி ஜி - ஜோதிஜி...

ezhil said...

ஆரம்பித்தது புரிந்தது, அடுத்தது தெளிவானது... ஆனால் எங்கு எப்படி முடிகிறதென்று புரியவில்லை....

ஜோதிஜி said...

இன்று தான் நீங்க ஈழத்தமிழர் என்பதை கண்டு கொண்டேன். தொடர் வருகைக்கு நன்றி.

முடிந்தால் இந்த மின்நூலை தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்க.

http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

ஜோதிஜி said...

என் எழுத்தை விட இந்த விமர்சனத்தை, இதில் நீங்க சுட்டிக்காட்டும் விசயத்தை ரொம்பவே ரசித்தேன். யோசித்தேன். நன்றி வருண்.

ஜோதிஜி said...

நன்றி முகமது சலீம். நீங்க தொடர்ந்து படித்து வருவதை கண்டேன். தொடர் பயணத்தில் பங்கெடுத்தமைக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி மைதிலி

ஜோதிஜி said...

எப்படி இப்படி பொறுமையுடன் எழுத முடிந்தது தனபாலன். நீங்க சொன்னபடி அந்த பாடல்வரிகளை வைத்து எழுதுங்களேன். ஏற்கனவே அமுதவன் உங்களுக்கு பாடல் ஆசிரியரை குறிப்பிட்டுக்காட்டியதற்கு பாராட்டு வேறு கொடுத்துள்ளார். மறந்து விட வேண்டாம்.

ஜோதிஜி said...

உங்களுக்கு கீழே தளிர் சுரேஷ் கொடுத்துள்ள விமர்சனத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்தேன். சுரேஷ் அர்ச்சகராக இருந்து கொண்டு டியூசன் வாத்தியாராகவும் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

ஜோதிஜி said...

பெரும்பாலான இந்த பயணக்கட்டுரைகளை பகிர்ந்து கொண்டு பலருக்கும் சென்று சேர்க்க உதவி இருக்குறீங்க. மிக்க நன்றி.

ஜோதிஜி said...

மத விசயங்களில் தீவிர கேள்விகளை எழுப்பினால் உங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.

ஜோதிஜி said...

போச்சுடா? நீங்க எங்கேயோ கோர்த்து விடுவது போல இருக்கே?

ஜோதிஜி said...

ஆன்மீகவாதியும் ஒருவகையில் தன் மனநிம்மதிக்காக தன்னை முட்டாளக்கிக்கொண்டு அறியாமையில்தான் வாழ்கிறான்

நம் மக்கள் மனநிம்மதி என்ற வார்த்தையை துரித உணவுக்கடைகள் போல உடனடியாக கிடைக்க வேண்டும். என்றும், நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி நினைத்த அளவுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே பிரச்சனையின் தொடக்கம் என்று நான் நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

ஜெயலலிதா, லதா இரண்டு பேர்களுக்கும் பெயர்களும் பலவற்றை யோசிக்கத் தூண்டும் பெயர்கள்.

ஜோதிஜி said...

பல கோணங்களில் சிந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கை நிம்மதியை அளிக்குமா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வாழும் போது தன்னை உணர்ந்து கொள்ள முடியும் என்றே நம்புகின்றேன். குறைந்த பட்சம் தன் தலைமுறைகளை நல்ல பாதையில் கொண்டு செலுத்த அவன் சிந்தனைகள் உதவும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஒரு தலைமுறை தார் சாலை பயணத்தில் மெதுவாகச் சென்றாலும் அடுத்த தலைமுறை தேசிய நெடுங்சாலையில் விரைவு பயண சுக அனுபவத்தை அனுபவிக்க முடியும்.

ஜோதிஜி said...

ஆன்மீகப் போர்வையில் அநியாயம் செய்யும் இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்று என்று கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?

போச்சுடா? மறுபடியும் மொதல்ல இருந்தா?

தங்களுக்கு இருக்கும் சக்தியை படிப்பதற்கும், நல்லபடி வாழ்க்கையை அமைப்பதற்கும் பயன்படுத்துங்கள்

இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.

ஜோதிஜி said...

நன்றி சிவகுமார்

ஜோதிஜி said...

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை

முடிந்தால் இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? தெரிந்து கொள்ள விருப்பம்.

வருண் said...

மனநிம்மதி என்பது தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனைகளைப் பொறுத்தது..ஒரு சிலருக்கு பாங்க் அக்கவுண்ட் ல இருக்க சேவிங்க்ஸை பார்த்தால்தான் நிம்மதி. ஒரு சிலருக்கு கையில் ஒண்ணும் இல்லைனாலும் பசிக்கிறவனுக்கு ஒரு வாய் சோறு போட்டோமேனு நிம்மதி.

அம்மாமார்கள்லயே ஒரு சிலர் தன் குழந்தையை இன்னொருவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு (யார் தலையிலாவது கட்டிவிட்டு) நிம்மதியாக வீட்டில் டி வி பார்ப்பாங்க, இல்லைனா பார்ட்டிக்குப் போவாங்க. ஒரு சிலர் தன் குழந்தை, அறியா வயதில் தன் கண்பார்வையில் இருந்தால்தான் நிம்மதி என்று (அதுவும் தரமற்ற ஆண்கள் நிறைந்து வழியும் இவ்உலகில்) யாரையும் நம்பாமல் தன் பார்வையிலேயே வைத்திருந்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. இருவருமே அம்மாதான். அவர்கள் நிம்மதி வேறு வேறு விதமாகக் கிடைக்கிறது. ஒருவருடைய மனநிலை இன்னொருவருக்கு "கேலிக்கூத்தாக"வும் தோனலாம்.

இதுபோல் ஆன்மீகவாதிக்கு நிம்மதி கிடைப்பதில் பகுத்தறியும் மனம் உள்ளவனுக்கு கிடைக்காது. ஒருவன் இன்னொருவனுக்கு முட்டாளாகத் தெரியலாம். ஆன்மீகவாதி நிம்மதியா இருக்கான், சிந்திப்பவன் தூங்குவதில்லை என்பதெல்லாம் உண்மையல்ல என்று என்னை வைத்தே நான் புரிந்துகொள்ள முடியும். சரி விடுங்க :)

வருண் said...

யார் சொன்னால் என்ன? பலகோணங்களில் சிந்தித்து உண்மையை உணர்தல் என்பது அறிவியலாளணுக்கு கிடைக்கும் நிம்மதி.

பெரியவங்க சொன்னால சரியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொண்டு வாழ்வதில் ஒரு சிலருக்கு நிம்மதி.

நான் பிளஸ் 2 படிக்கும்போது, எங்க பள்ளியில் வசதியெல்லாம் கம்மி. மாணவர்கள் பிராக்டிக்கலில் முழுமதிப்பெண்கள் எப்படியாவது பெறவேண்டுமென்று பள்ளியே "உதவியது". அதாவது பள்ளி ஆசிரியரே சரியான விடையை எல்லா மாணவனுக்கும் கொடுத்து அவர்களை "காப்பாத்த" ஒரு செட் அப். செய்து இருந்தாங்க.

எனக்கு கொடுத்து இருந்தது "லெட் சல்ஃபைட்"(PbS) எங்க பள்ளியில் சல்ஃபைட்னா அது லெட் சல்ஃபைட் தான் இருக்கு. அதாவது பேசிக் ராடிக்கல் (S-) சல்ஃபைட்னு கண்டுபிடித்துவிட்டால் ஆசிட் ராடிக்கல் லெட்(Pb+) என்பதை நீங்க ஆராயவே வேண்டியதில்லை.

நான் சல்ஃபட் டெஸ்ட் (S-)செய்யும்போது ஒரு நாளும் இல்லாத திருநாளா, அழகா சல்ஃபைட்க்கு ரிசல்ட் வருகிறது. சந்தேகமே இல்லை. அது (S-) தான். லெட் (Pb+)க்கு விடை சரியாக லெட் டெஸ்ட்ல வருது. சந்தேகமே இல்லை லெட் சல்ஃபட் என்று.

ஆனால் என்னுடைய வாத்தியார் (உதவி செய்ய வந்தவர்), எனக்கு கொடுத்தது "கால்சியம் கார்பனேட்" என்று தவறாக பார்த்து வந்து சொல்லி, கால்சியம் கார்பனேட் என்று விடைத்தாளில் எழுதச்சொல்லுகிறார். நான் சல்ஃபட்க்கும் லெட்க்கும் ஆன்ஸ்வர் வருதுனு சொல்றேன். அவர்,வாத்தியார் இல்லையா? அதிகாரத்தோரனையில் "சொல்றதைக் கேளு" "உனக்கு முழு மார்க் வேணுமா இல்லை ஃபெயில் ஆகனுமா?" னு கால்சியம் கார்பனேட் என்று எழுதச்சொல்லுகிறார். எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் கால்சியம் கார்பனேட் என்று "பொய்யை" எழுதி விடைத்தாளை கொடுக்கிறேன்.

கடைசியில் எனக்கு கொடுத்தது லெட் சல்ஃபைட் தான் என்று எக்ஸ்டேர்னல்ல் எக்ஸாமினர் (என்ன இப்படி இந்த மாணவன் தவறு செய்துள்ளான்) விடைத்தாளை சரி செய்யும்போது குழம்ப. தவரு செய்த வாத்தியார் எப்படியோ உள் நுழைந்து ஒரு 80% மார்க்கை கெஞ்சி கூத்தாடி வாங்கினார் (தான் செய்த தவறுக்காக).

ஆக, பெரியவர் அவர் சொல்றதை நான் ஏற்றுக்காமல், என்னை நான் நம்பி இருந்தால் நான் 100% நியாயமான முறையில் பெற்று இருப்பேன். என் பகுத்தறிதலலை மண்ணில் போட்டு புதைத்துவிட்டு, "பெரியவரின் நம்பிக்கையை" திருப்திப்படுத்த முயன்றதால் நடந்தது இதுதான்.

உண்மைதான் நான் என்னை நம்பி வாத்தியாரை எதிர்த்து விடை எழுதி இருந்தால்,என் செயல் பெரியவரான என் ஆசிரியரை கோபத்துக்கு ஆளாக்கும். ஆனால் எனக்கு மன நிம்மதி கிடைக்கும்.

அதனால் சும்மா பெரியவங்க மனதை புண்மபடுத்தக் கூடாதுனு அவர்கள் சொல்லும், பார்க்கச் சொல்லும் கோணம்தான் சரியான கோணம், நிம்மதி தரும் கோணம் என்பதெல்லாம் கெடையாது.

ஆன்மீகப் பாதையில் போறவர்கள்தான் நிம்மதியா வாழ்றாங்க. சிந்திப்பவன் எல்லாம் தூக்கமில்லாமல் இருக்கிறான் என்பதெல்லாம் உண்மையல்ல. அதெல்லாம் அவரவர் மனநிலையை எப்படி பக்குவப்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்தது.

என்ன என்ன இவ்வளவு பேச வச்சுட்டீங்க!!! :)))

ஜோதிஜி said...

எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு வருண். இம்புட்டு பெரிசா எழுதி நான் பார்த்ததே இல்லையே? கலக்கல். இந்த அளவுக்கு உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இந்த பதிவுக்கு ஏற்றாற் போல அழகாக பொருத்தி கொடுத்து இருக்கீங்க.

Thulasidharan V Thillaiakathu said...

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். அதை உங்களால் உணரத் தெரியாவிட்டால் ஆன்மீகத்தின் மீது தவறல்ல. நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ள தகுதியற்ற ஆசையே காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும்.

மிகச் சரியான தொரு முடிவு!!!

மிக அருமையான தொடர்!

பகிர்வுக்கு மிக்க நன்றி!

Pandiaraj Jebarathinam said...

உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள்.///

உண்மைதான் ..
மன அமைதியும், சரியான உடலோம்பலும் தான் ஆன்மீகமாக இருக்க முடியும்..

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள ஜோதிஜி அவர்களுக்கு, இதற்கு மறுமொழியாக, ஒரு பதிவு எழுதியுள்ளேன். http://tthamizhelango.blogspot.com/2014/04/blog-post_2.html தலைப்பு: மரத்தை மறைத்தது ( ஜோதிஜி திருப்பூருக்கு ஒரு மறுமொழி)

iK Way said...

In my opinion, the answer to your initial loathing in this post is, to have some focus - to feed the ADD / ADHD - there is some requirement of structure. The structure is born religion. If the questions encourages wandering of mind even before immersion and understanding, then it is problematic. Almost all religion preaches the practicalities of day to day life. Labor in Christianity, Karma - Kadamai in Hinduism and so on. Once the need for celestial qn & answers are satisfied then the person is expected to focus on the day to day life - taking care of work, his body, health etc., and I feel this is the purpose of it. After carrying out the duties of that phase of life then the person is expected to graduate to next phase and so on. Please look this in this light and give your views.

Sorry for commenting in English - I am in a slow network currently.

http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/