Saturday, March 22, 2014

பயணமும் படங்களும் - மணலுக்கு கீழே பிணங்கள்

உங்கள் வயது 50 வயது என்றால் நீங்க பிறந்த வருடத்தில் தான் நடந்தது. ஒரு வேளை அறுபது வயதை தாண்டியிருந்தால் நிச்சயம் பலரும் சொல்லக் கேட்டுருப்பீர்கள். நான் அப்போது பிறந்திருக்கவில்லை. 

நான் ஈழம் சார்ந்த வரலாற்றுப் புத்தகங்களை மற்றும் அது தொடர்பான பல புத்தகங்களையும் படித்துக் கொண்டு வந்த போது தான் முதல்முறையாகத் தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டு நடந்த கோரத்தாண்டவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். 

ஒரு பகுதியையே மொத்தமாகக் கடல் உள்வாங்கிக் கொண்டதையும், அழிந்து போன மக்கள் தொகை போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தத் துயர சம்பவம் நடந்து முடிந்து ஐம்பது வருடங்கள் கழித்துத் தனுஷ்கோடி பகுதியில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் சென்று சுற்றி வந்த போது என் மனதில் உருவான உறுத்தலுக்கு அளவேயில்லை. 

அந்த மணல்வெளியில் நாம் நடந்து வரும் போது நம்முடைய கால்கள் மணலில் புதைந்து அதன் பிறகே அடுத்த அடி எடுத்து வைக்கும் அளவிற்கு உள்ளது. மொத்தமாக எல்லா இடங்களிலும் மணல் குவியலாகவே உள்ளது. 

நான் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடித்தடத்திற்குக் கீழேயும் எத்தனை பிணங்கள் இருந்ததோ? என்பதை யோசித்துக் கொண்டே சுற்றி வந்தேன். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல் நீர். இதற்கு மேலாக ஹிந்து மத நம்பிக்கைகள் சார்ந்த புராண இதிகாச கதாபாத்திரங்களைச் சிறப்புப் படுத்தும் வழிபாட்டுத்தலங்கள். 

இயல்பான மனிதர்களைப் போலச் சராசரி உணர்ச்சிகளுக்கு எளிதில் கலங்கி விடாத எனக்குள் ஏராளமான மாற்றத்தை இந்தப் பூமியும் இங்கே வாழ்ந்த மக்களும் தந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 

உள்ளே கால் வைத்ததும் இங்கே மக்கள் இன்னமும் வசிக்கின்றார்களா? என்று தான் முதலில் நண்பர்களிடம் கேட்டேன். காரணம் திரைப்படங்களில் உச்சக்கட்ட காட்சியில் கதாநாயகனும், வில்லனும் சேர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத அத்துவான காட்டில் சண்டை போடுவார்களே? அதைப் போலத்ததான் இருந்தது. இங்கே வசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் பகிர்ந்து கொள்ளப் பல கதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஓராயிரம் சோகங்களும் உள்ளது. 

இவர்களின் நாளை பொழுது என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. என்ன வேண்டுமானாலும் நடக்கும்? வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும். அரசாங்கம் இந்தப் பகுதியை "மனிதர்கள் வசிக்க முடியாத பகுதி" என்பதாக மாற்றியுள்ள போதிலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லத் தயாராக இல்லை. இதன் காரணமாகவே எந்த அடிப்படை வசதிகளும் இங்கே நிறைவேற்றப் படவில்லை. 

ஆனாலும் அவர்களின் அப்பாவித்தனத்தையும், ஆடம்பரம் தேவைப்படாத வாழ்கையைப் பார்த்த போதும், அவர்களின் உரையாடல்களும், எதார்த்த மொழியும் ஏராளமான நம்பிக்கைகளை எனக்குள் விதைத்தது. இது போன்ற கோடிக்கணக்கான பகுதிகள் இந்தியாவில் இருப்பதால் தான், இவர்களைப் போன்ற மனிதர்களினால் மட்டுமே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் இன்று வரைக்கும் இந்தியா உடையாத நாடாக உள்ளது. பரந்த தேசமாக இந்தப் பாரதப் பூமி நமக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. 

ஒரு சின்ன உரையாடலை மட்டும் பதிவு செய்ய விரும்புகின்றேன். 

சங்கு, பாசி, மணி இன்னும் பல பொருட்களை வைத்து ஒரு கீற்றுக் கொட்டகையின் கீழ் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து "கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?" என்று யோசித்துக் கொண்டே கேட்டேன். இப்போது பொது இடங்களில் தண்ணீர் கேட்கும் போதே ரொம்பவே யோசிக்க வேண்டியதாக உள்ளது. பக்கத்தில் உள்ள காசு கொடுத்து வாங்க வேண்டிய பாட்டில்களை நோக்கித்தான் கையைக் காட்டுகின்றார்கள். 

"இருங்க தர்றேன்" என்று ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். ஊத்துத் தண்ணீர். மிகுந்த சுவையுடன் இருக்க ஆச்சரியமாகக் கேட்ட போது அவர்கள் குடிநீருக்காகப் படும் அவஸ்த்தைகளைச் சொன்ன போது தொண்டைக்குள் சென்ற தண்ணீர் வெளியே வரட்டுமா? என்று கேட்பது போலவே இருந்தது. 

மெதுவாகப் பேசத் தொடங்கினேன். 

அவர் வைத்திருந்த பொருட்களைப் பார்த்தவுடன் அப்போது தான் வீட்டில் இருக்கும் நான்கு பெண்களைப் பற்றி நினைப்பே வந்தது. எல்லாமே அவர்களுக்குத் தேவைப்படும் சமாச்சாரம். இது போன்ற இடங்களில் விலைகள் அதிகமாக இருக்குமே? என்று யோசித்துக் கொண்டு விலைகளைக் கேட்ட போது பரவாயில்லை என்கிற நிலையில் தான் இருந்தது. "நான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றேன். எனக்குக் குறைத்துக் கொடுப்பீங்களா?" என்று அவரின் மனநிலையை அறிந்து கொள்ளக் கேட்ட போது "நீங்க விரும்பும் விலையில் தருகிறேன்" என்றார். 

சில பொருட்களை மட்டுமே எடுக்கலாம் என்று அவர் கதைகளைக் கேட்டுக் கொண்டே ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பாசி, மணி, தோடு , அலங்காரப் பொருட்கள் என்று அனைத்தையும் எடுத்து "மொத்த கணக்குச் சொல்லுமா?" என்று கேட்ட போது அவர் முகத்தில் உருவான பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே? 

"ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு இன்றையக்குத் தான் ஆயிரம் ரூபாய் வியாபாரம் நடந்துள்ளது" என்றார். அவர் கதையைக் கேட்ட காரணத்தாலும், அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும் ஒவ்வொரு பொருளையும் இரண்டாக எடுத்துக் கொண்டு வந்தேன். இரண்டும் வெவ்வேறு நிறத்தில் இருந்தால் ஒவ்வொரு நாளும் பயன்படுத்த முடியும். எடுத்து வைத்த பொருட்களைச் சரிபார்த்துக் கொண்டு வந்த போது வீட்டில் எப்போதும் நடக்கும் பஞ்சாயத்து என் நினைவுக்கு வந்தது. 

நாம் ஆசைப்பட்டு ஏதாவது வாங்கிக் கொண்டு சென்றால் வீட்டில் உள்ள நான்கு பேர்களும் அது நொள்ளை இது நொள்ளை. இது கூடப் பார்த்து வாங்கத் தெரியாதா? என்று ரவுண்டு கட்டி அடிப்பது வாடிக்கை. இதை மனதில் கொண்டே நிதி மந்திரியை அழைத்துக் கேட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டே அலைபேசியில் டவர் இருக்குமா? என்று பார்த்த போது பிஎஸ்என்எல் வாழ்க என்று கூவத் தோன்றியது. 

அந்தப் பெண்மணியிடம் உரையாடிய போது ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. "பணத்திற்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உள்ளது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டு வாழ முடியும்" என்பதைத்தான் அவர்கள் வாழும் வாழ்க்கை உணர்த்துவதாக இருந்தது.

இங்கு வசிக்கக்கூடிய (ஏறக்குறைய 300 குடும்பங்கள் என்றார்கள்) குடும்பங்களில் உள்ள குழந்தைகள் படிப்பதற்கென்றே ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அதுவும் பாதுகாப்பு பிரச்சனையின் அடிப்படையில் சில மைல்கள் தாண்டி உள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரும் போது அந்தப் பள்ளியைத் தாண்டி தான் இங்கே வர முடியும். 

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தான் பள்ளியும் ஒரு பேரூந்து வசதியையும்
(மட்டும்)அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து பேரூந்தில் பயணித்துப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தப் பேரூந்து வசதியை உருவாக்கியுள்ளனர். இதே போல மாலையிலும் குறிப்பிட்ட நேரத்தில் அதே பேரூந்து இங்கே வந்து சேரும். அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஆசிரியர்கள் (ஒன்பது மணிக்கு மேல்) வந்து சேரும் வரையிலும் கொண்டு போன காலை உணவையும் உண்டு, விளையாடி, அதன் பிறகு படித்து முடித்து வருகின்றார்கள். 

இது தொடர்பாகப் பல சோகங்களையும் பகிர்ந்து கொண்டார். இவர்கள் விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் அண்ணன் நடத்திக் கொண்டிருக்கும் பெரிய கடைகளில் இருந்து தான் வாங்கி வருகின்றோம் என்றார். 

வாழ்க்கையில் அனைவரும் "நாம் இறந்து விடப் போவதில்லை" என்று தான் பத்து தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்து விட வேண்டும் என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

இவர்களோ அடுத்த நிமிடம் "நமக்குச் சாவு வந்து விடக்கூடும்" என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதால் வாழும் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளையும் மகிழ்ச்சியாக மாற்றி வைத்துக் கொண்டு எவ்வித அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் மனதில் வளர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மொத்த பயணத்தையும் முடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் சொன்னேன். "அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தினந்தோறும் மீன்குழம்பு தான் அவர்களின் தினசரி உணவாக உள்ளது".  

சைவ பட்சிணிக்குத் தெரியுமா அசைவ மனிதனின் புலம்பல்கள்?





 






















தொடர்புடைய பதிவுகள்



40 comments:

Amudhavan said...

அறுபதுகளில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் தினத்தந்தியில் கொட்டை எழுத்துக்களில் இதுபற்றிய செய்திகளையும் படங்களையும் பெரியவர்கள் பார்த்து பரிதாபப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த சமயத்தில் பாலத்தின் மீது ரயில் ஒன்று போய்க்கொண்டிருந்ததாகவும் அது அப்படியே கடலில் மூழ்கிப் போய்விட்டது என்ற செய்திதான் பிரதானமாக அடிபட்ட செய்தியாக இருந்தது.
டிஸ்கவரி, யூ டியூப் போன்ற தளங்களில் வேற்று மனிதர்களின் வாடையே படாத இடங்களில் வசிக்கும் மனிதர்களைத் தேடிச்சென்று படம் பிடித்துப் போடுவார்கள். ஆனால் அவையெல்லாம் இயற்கையோடு ஒட்டிய மனிதர்கள் வாழ்கின்ற இடங்கள். தாவரங்களோடும் நல்ல தண்ணீரோடும் தம்மைப் பிணைத்துக்கொண்ட மக்கள் வாழும் இடங்கள்.
ஆனால் தனுஷ்கோடி போன்ற இடங்கள் எந்த நேரத்திலும் உயிர் அபாயத்துடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டபடியே வாழ்ந்து தீர்க்கவேண்டிய நாட்களாகவே ஒவ்வொரு நாளையும் அந்த வறண்ட கடற்கரைப் பிரதேசத்தில் ஓட்டி வருகிற மக்களை நினைக்கும்போதுதான் மனம் கல்லாகிப் போகிறது.
நீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போதுதான் நகரங்களில் நடைபெறும் ரியல் எஸ்டேட்டுகளை நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இதற்காக எத்தனை எத்தனை பிரச்சினைகள், வழக்குகள், கொலைகள்.........அத்தனைப் பேரையும் ஒட்டுமொத்தமாக மூட்டைக்கட்டி அங்கே கொண்டுசென்று எறிந்துவிட்டு வரவேண்டும்போல இருந்தது.
சிதிலமடைந்த கட்டடங்களையும், இடிபாடுகளையும் பார்த்தபோது சமீபத்தில் ஈழத்தில் நடைபெற்ற போருக்குப் பிந்தைய காட்சிகளைப் பார்த்த மனவுணர்வையே தந்தது.

அப்புறம் அந்த மீன் குழம்பு பற்றி எழுதியிருக்கிறீர்களே, அது என்னது?

எம்.ஞானசேகரன் said...

உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் அவர்கள். பொறாமையும் பொச்சரிப்பையும் தங்களுக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் நகரங்களைத்தாண்டி அமைதியான வாழ்க்கையாக, எதற்கும் அதிகமாக ஆசைப்படாத வாக்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் போலும். ராமேஸ்வரம் வரை வந்திருக்கிறேன். ஆனால் தனுஷ்கோட்டி போக சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. உங்கள் பதிவுகளைப் பார்த்து கடந்த ஓரு வாரகாலமாக ஒடிஸாவில் நான் சுற்றிய இடங்களைப் பற்றியும் எழுதலாம் என்றிருக்கிறேன். திங்கட்கிழமையிலிருந்து 13 நாட்கள் நான் தமிழகத்தில் இருப்பேன் ஜோதிஜி அவர்களே!

எம்.ஞானசேகரன் said...

மறந்துவிட்டேன், புகைப்படங்கள் மிக அருமை! என்ன கருவாட்டுக்குப் பக்கத்துல உட்கார்ந்துட்டீங்க அதையும் மொத்தமா விலை பேசிட்டிங்களா என்ன?!

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தப் பெண்மணியின் உரையாடல் "திருப்தி" எனும் சொல்லுக்கு அர்த்தம்
புரிகிறது...

படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்றாலும் சிதிலமடைந்தவைகளைப் பார்க்கும் போது... ம்...

கரந்தை ஜெயக்குமார் said...

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நானும் நண்பர்கள் இருவரும், குடும்பத்தோடு தனுஷ்கோடி சென்று வந்தோம் ஐயா. கண்ணால் கண்ட காட்சிகளை எழுத்தில் வடிப்பது என்பது இயலாத செயல் ஐயா.இனம் புரியா சோகம் மனதைக் கவ்வியது.
பணத்திற்கு அப்பால் உள்ள வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, உணர்ந்து வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதை அனைவரும் உணரும் காலம் எக்காலமோ?
நன்றி ஐயா

ezhil said...

##அடுத்த நிமிடம் "நமக்குச் சாவு வந்து விடக்கூடும்" என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதால் வாழும் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளையும் மகிழ்ச்சியாக மாற்றி வைத்துக் கொண்டு எவ்வித அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் மனதில் வளர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.## சிதிலங்கள் அவர்களுக்கு சில பாடங்களை உணர்த்திக்கொண்டே இருக்கிறதோ....







தருமி said...

//உச்சக்கட்ட காட்சியில் கதாநாயகனும், வில்லனும் சேர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத அத்துவான காட்டில் சண்டை போடுவார்களே? //

மாணவர்களோடு சென்ற போது - 79=80 -இதே எண்ணம் தான் தோன்றிய்து. புகைப் படக்காரர்களுக்கு ஏற்ற இடம்.

என் அடுத்த அமெரிக்கன் கல்லூரி நண்பர்கள் வாரிக்கொண்டு போன ரயிலில் வர வேண்டியவர்கள். அதிர்ஷ்டமாக காலை ரயிலில் வந்து விட்டார்கள். இன்றும் பல சம்யங்களில் அவர்க்ளோடு பேசும்ப் போது இதைப் பற்றியும் பேசுவதுண்டு.

தனிமரம் said...

அழகான பகிர்வும் படங்களும் ஐயா.

குறும்பன் said...

கடல் கொண்டு போன தனுசுகோடி பற்றி இப்ப ஊடகங்கள் யாரும் பெரியளவில் பேசமாட்டுக்கறாங்களே. வெளிநாட்டுக்காரன் விலாவாரியா பெரிசா சொன்னாதான் நம்மாளுங்க பேசுவாங்க போலிருக்கு. சில படங்களை பார்க்கும் போது திரைப்படத்துறையினர் இந்த இடத்தை பயன்படுத்தி உள்ளது போல் தோன்றுகிறது.
\\என் அடுத்த அமெரிக்கன் கல்லூரி நண்பர்கள் வாரிக்கொண்டு போன ரயிலில் வர வேண்டியவர்கள். அதிர்ஷ்டமாக காலை ரயிலில் வந்து விட்டார்கள்.\\
இச்சோகத்தை முழுவதும் புரிந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

கோமதி அரசு said...

இவர்களோ அடுத்த நிமிடம் "நமக்குச் சாவு வந்து விடக்கூடும்" என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதால் வாழும் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளையும் மகிழ்ச்சியாக மாற்றி வைத்துக் கொண்டு எவ்வித அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் மனதில் வளர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.//

நல்ல பக்குவப்பட்ட மனிதர்கள்.

ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பாசி, மணி, தோடு , அலங்காரப் பொருட்கள் என்று அனைத்தையும் எடுத்து//

இந்த வரிகளை படிக்கும் போது என் அப்பாவின் நினைவு வந்து விட்டது , எங்கு சென்றாலும் அழகிய மணிமாலைகளை வாங்கி வருவார்கள். அந்தக் காலத்து சினிமா நடிகைகள் அது போல் டாலருடன் அணிந்து இருப்பார்கள்.
நாங்கள் விளையாடும் போது அது அறுந்து விட்டால் அம்மா அழகாய் அது போல மறுபடியும் கோர்த்து விடுவார்கள்.
என் அப்பா தனுஷ்கோடியில் வேலைப்பார்த்து இருக்கிறார்கள். (சுங்கத்துறை)
படங்கள் எல்லாம் மிக அருமை. காலசுவடுகளை சொல்லும் நினைவு சின்னங்களாக மனதை கனக்க வைத்துவிட்டது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்புயலின் பாதிப்பு இலங்கையிலும் அன்று இருந்தது. சிறுவனாக இச்செய்திகளைப் படித்துள்ளேன். அலையால் அடித்துச் சென்ற ரெயின் பற்றிய செய்தி, பெரிதாகப் பேசப்பட்டது.
உலகெங்கும் இப்போ கடலோரக் கிராமங்கள் அழிவை நோக்கியே செல்கிறது. பிரான்சிலும் பல கடலோரக் கிராமங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இல்லை. ஆனால் அங்கு வாழ்ந்த மக்களுக்கு அரசு உரிய சரியான மாற்றாதார ஏற்பாடு செய்து விட்டது. இங்குள்ள சிறப்பு இதே!
நம் நாடுகளில் இங்கு வாழ்வோரை மனிதராகவே மதிப்பதில்லை. "மீனவர்கள் மீனைக் கொல்வதால் , அவர்களைக் இராணுவம் கொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" எனத் திருவாய் மொழி பகரும், அற்பன்களைப் போற்றுவோர் நாம்.
தெளிவான படங்களுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

//நான் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடித்தடத்திற்குக் கீழேயும் எத்தனை பிணங்கள் இருந்ததோ? என்பதை யோசித்துக் கொண்டே சுற்றி வந்தேன்.//

இவர்களின் நாளை பொழுது என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. என்ன வேண்டுமானாலும் நடக்கும்? //

மனம் கனத்து விட்டது!

அந்தப் பெண்மணியிடம் உரையாடிய போது ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. "பணத்திற்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உள்ளது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டு வாழ முடியும்" என்பதைத்தான் அவர்கள் வாழும் வாழ்க்கை உணர்த்துவதாக இருந்தது.//

கொடுத்து வைத்தவர்கள்! எல்லோருக்கும் ஒருபாடமும் கூட!

அருமையான ஒரு பதிவு சார்! படங்கல் அற்புதம்! அதனுடன் பாசி மணி பற்றி சொன்னதும் உடனே தனுஷ் கோடி சென்று அதைப் பார்வையிட்டு பாசி மணியும் வாங்கி வரத் துடிக்கின்றது ! அது அவர்களுக்கு உதவும் என்பதால்! கண்டிப்பாக அடுத்த பயணம் தனுழ் கோடிதான்!

பின்னூட்டம் இட்ட பிறகும் மனம் இன்னும் அதிலிருந்து வெளிவரவில்லை! நண்பரே!

அப்படி மனதைத் தொட்ட ஒரு பதிவு!
நன்றி பகிர்வுக்கு!

”தளிர் சுரேஷ்” said...

தனுஷ் கோடி மக்களின் உயிர்வலியை புரிந்துகொள்ள முடிகிறது! அருமையான பதிவு! நன்றி!

ஜோதிஜி said...

நீங்க, யோகன் மற்றும் தருமி மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த கோரத்தைப் பற்றி தெரிந்தவர்கள் என்று நினைக்கின்றேன்.

அப்புறம் மீன் குழம்பு சமாச்சாரம் சொந்தக்கதை, சோகக்கதை. இப்போதுள்ள உங்கள் புத்தகம் சார்ந்த நெருக்கடியான சூழ்நிலையில் நிச்சயம் நேரம் கிடைக்காது என்றே நினைக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப் படிங்க. கொஞ்சம் புரியும்.

உண்டு உறங்கி விடு செரித்து விடும்.

http://deviyar-illam.blogspot.com/2010/09/blog-post_2819.html

ஜோதிஜி said...

தலைவரே திருப்பூர் பக்கம் வாங்களேன். அப்படியே எங்கள் தொழிற்சாலையை பார்க்கலாம்.

ஜோதிஜி said...

என்னத்தச் சொல்ல. கவுச்சி வாடையை ரசித்து முகர்ந்தேன். கருவாடு, உப்புக்கண்டம் சாப்பிட்டு 20 வருடம் ஆகி விட்டது. சொந்தக்கதை சோகக்கதை.

ஜோதிஜி said...

மனமே கலங்காதே.

ஜோதிஜி said...

ஓ நீங்களும் போயிட்டு வந்துட்டீங்களா?

ஜோதிஜி said...

உண்மை தான். ஆனால் அதையெல்லாம் அவர்கள் உணரும் நிலையில் இருப்பார்களா? என்று தெரியவில்லை. ரொம்ப யோசிச்சாத்தான் எல்லாமே பிரச்சனை. ஒரு வகையில் பார்க்கப் போனால் அறியாமை என்பது மிகப்பெரிய வரம் தானே?

ஜோதிஜி said...

உடனே அது குறித்து ஒரு பதிவு தேவை.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

குறும்பன் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. நான் வந்தவுடன் யூ டியூப் ல் இது குறித்து அதிகம் தேடிப் பார்த்தேன். நந்தவனம் இதை படித்தால் தனுஷ்கோடி குறித்த ஆவணப்படம் ஏதும் இருந்தால் இணைப்பு தரவும்.

ஜோதிஜி said...

நிச்சயம் உங்க அப்பா மூலம் நிறைய தகவல்களை பெற்று இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நமக்கு எங்கே சென்றாலும் இந்த நான்கு திசைகளும் தான் உள்ளே ஓடிக்கிட்டே இருக்குங்க. என்ன செய்வது? நல்ல பேரு தான் கிடைக்க மாட்டுது.

ஜோதிஜி said...

நீங்க என் வயதில் தான் இருப்பீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

"மீனவர்கள் மீனைக் கொல்வதால் , அவர்களைக் இராணுவம் கொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" எனத் திருவாய் மொழி பகரும், அற்பன்களைப் போற்றுவோர் நாம்.

சாட்டை வரிகள்.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்பில் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்க.

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

Rathnavel Natarajan said...

பயணமும் படங்களும் - மணலுக்கு கீழே பிணங்கள்
திரு ஜோதிஜி அவர்களின் இன்னொரு அருமையான பதிவு.
மனித மனங்களைப் படிக்கிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

நன்றி

Pandiaraj Jebarathinam said...

மனிதனின் பிறப்பின் போதே இறப்பு குறிக்கப்படுகிறது.இதை அறிந்தவன் வாழ்க்கையுடன் ரசித்துப் பழகுகிறான்.

படங்கள் நன்றாக உள்ளது..

Lakshmanan17 said...

”நீங்க, யோகன் மற்றும் தருமி மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த கோரத்தைப் பற்றி தெரிந்தவர்கள்” - அது தவறு - 1964ல் இந்த செய்தி கேட்டு தினசரியில்படித்து மிகவும் சோகத்துக்கு உள்ளானேன். ஒர் ஊர், மனிதர்கள், வாழ்வாதாரம், எல்லாமே சப்ஜாடாக அடித்துக்கொண்டு போனது மட்டுமல்லாமல் இனிமேல் அங்கு யாருமே வாழ இயலாது என்ற செய்தி என் வாழ்நாளில் நான் அறிந்த முதல் பேரிடர். தற்போது சுமார் 300 குடும்பங்கள் அங்கு வாழ்கிறார்கள் என்பது - மகிழ்ச்சியின் கூறு எனவோ பிறந்த உயிரை கொண்டு செல்லும் வரை எப்படியாவது வாழ்ந்தே தீரவேண்டும் என்ற வாழ்வு நிப்பந்தம் ஏற்படுத்தும் அடிப்படை வாழ்வின் ரகசிய மந்திரக்கூறோ என்ற உண்மையும் புலப்படுகிறது. இந்த இடத்தை விட்டு நாம் எங்கு சென்று வாழப்போகிறோம் என்ற கழிவிரக்க உணர்வில் இன்றும் வாழ்வை மகிழ்ச்சியுடன் செலுத்துவது மற்றொரு வாழ்வின் ரகசியம். மனமுவந்து ஒரு சொம்பு நல்ல தண்ணீர் கொடுக்க இயலும் மனமே அச் சூழலில் இயல்பானதாகத் தோன்றுகிறது. நீங்கள் தன்னீர் கேட்டிர்கல் என்றதே எனக்கு பக் என்று ஆகிவிட்டது. தண்னீர் அந்த அளவுக்கு விலை உயர்ந்த பொருள். என் விடலைப் பருவ ஆர்வக்கோளாறு என்னவென்றால் அந்த புயலில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் தனுஷ்கோடியில் மாட்டிகொண்டார்கள் அவர்கள் எப்படி பிழைத்து வருவார்கள் என்ற கவலை வேறு. அவர்கள் பிழைத்தார்கள் என்பது உபரிச் செய்தி.

S.S.KUMAR said...

EXCELLENT HEART MELTING REPORTS.KEEP IT UP AND CONTINUE.

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி குமார்.

ஜோதிஜி said...

ஓ........... நீங்களுமா? ஆகா மகிழ்ச்சி. ஜெமினி சாவித்திரி எனக்கு புதிய தகவல்கள்.

எழுத்து நடை சிறப்பாக வந்துள்ளது. மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி பாண்டியன்.

ஜீவன் சுப்பு said...

http://www.seenuguru.com/2013/01/dhanushkodi-part-4.html

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் பதிவில் இன்றைய தனுஷ்கோடி படங்களைப் பார்த்ததும், எனக்கு அன்றைய தனுஷ்கோடி ஞாபகம் வந்தது. நானும் எனது சிறுவயதில் அப்போதைய தனுஷ்கோடிக்கு, அழிவுக்கு முன்னால், பெற்றோருடன் சென்று இருக்கிறேன். தனுஷ்கோடி கடும் புயலால் (அப்போதைய சுனாமி?) அழிந்த செய்தி, ஜெமினி கணேசன் – சாவித்திரி குடும்பம் தப்பியது, புயல் பாதித்த பகுதிகளுக்கு காமராஜர் சென்றது ஆகிய செய்திகளை அன்றைய தினத்தந்தியில் படித்தது நினைவுக்கு வருகிறது. தனுஷ்கோடி புயல் பற்றிய மேல் அதிக விவரங்களுக்கு தினத்தந்தி அண்மையில் வெளியிட்டுள்ள “வரலாற்றுச் சுவடுகள்” என்ற நூலில் காணலாம். (நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்)

அதெல்லாம் சரி! கருவாடு, மீன் என்றால் விடமாட்டீர்களோ?

ஜோதிஜி said...

அந்த புத்தகம் என் கைவசம் உள்ளது. இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. அன்று முதல் இன்று வரை தினந்தந்தி தான் நம்பர் 1 ல் இருப்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

கருவாடு சுவைத்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. மீன் பழக்கம் இடையே 12 வருடங்கள் (அசைவ உணவை) விட்டுட்டு கடந்த ஒரு வருடமாக மீண்டும் தொடங்கி உள்ளது.

ஜோதிஜி said...

நன்றி குமார்

ஜோதிஜி said...

படித்தேன் சுப்பு

கிரி said...

இடங்களைப் பார்த்தால் நீங்கள் கூறியது போலத் தான் இருக்கிறது. இங்கே சென்று வரவேண்டும் என்று தோன்றுகிறது.