Friday, November 08, 2013

இலவசத்திட்டங்கள் படும் பாடு

ரேசன் கடைகள் பதிவின் தொடர்ச்சி 

கடந்த திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குடும்ப அட்டைக்கு ஒன்று என்ற பெயரில் வந்து சேர அது இன்று வரையிலும் பிரிக்கப்படாமல் ஊரிலேயே பரணில் தான் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சிறப்பான திட்டம். கலைஞருக்கு இது போன்ற திட்டத்தை எந்த அதிகாரி வடிவமைத்துக் கொடுத்தாரோ அவருக்குத் தமிழர்களின் அடுத்த ஏழெழு தலைமுறைகளும் நன்றிக்கடன் பட்டுள்ளது. 

காரணம் டிவி தேவையில்லை என்று கருதியிருந்தவர்களும், நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது என்று நினைத்தவர்களையும் இந்தத் திட்டத்தின் மூலம் அவரவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் தெருவில் கூடும் பழக்கம் குறைந்து விட்டது. வெட்டி அரட்டை முற்றிலும் நின்று விட்டது. 

திரையரங்க கூட்டம் குறைந்து வீட்டில், கடைகளில் என்று சர்வ இடங்களிலும் வந்து சேர்ந்து ‘கனவு காணுங்கள்‘என்ற தினந்தோறும் கொண்டாட்ட மனோநிலையைப் பட்டி தொட்டியெங்கும் பரப்பிய பெருமை கலைஞரையே சாரும். ஒரே வீட்டுக்குள் அறைக்கொன்று என்ற புதிய கலாச்சாரம் உருவானது. 

கலைத்தாகம் மிகுந்த தமிழர்கள் தங்களுக்கான தலைவர்களைச் சினிமாவின் மூலமே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் லட்சியங்களையும் இந்த டிவி பெட்டியின் மூலம் தேடத் தொடங்கினர். ஏற்கனவே சன் டிவி கலாநிதி மாறன் மூலம் தமிழ்நாட்டில் உருவான புதிய ஊடகத்தமிழ் பரவாத இடங்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்த பெருமையும் லட்சியங்களை அடைய அதிக உழைப்பு தேவையில்லை என்ற கூட்டமும் பெருகியுள்ளது. 

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத்தான் இங்கே உள்ள ரேசன் கடையில் பார்த்தேன். நம் அரசாங்கத்தின் இலவசங்கள் யாருக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.


உங்களுக்கு அரசாங்க திட்டங்கள் குறித்துத் தெளிவாகத் தெரிந்தாலும் கூடச் சராசரி அரசாங்க அலுவலகத்தில் நுழைந்தால் நாம் கூமுட்டையோ? என்று தான் தோன்றுகின்றது. இது வேறொரு உலகம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. 

அரசின் திட்டமான இலவச அரிசி இருபது கிலோ என்பது புழுங்கல் அரிசி இருபது கிலோ மற்றும் பச்சரிசி ஐந்து கிலோ என்றாலும் பல கடைகளில் 15 கிலோ என்கிற அளவுக்குத்தான் போடுகின்றார்கள். ஒரு அட்டைக்கு 5 கிலோ என்பதைத் தனியாக ஒதுக்கி விடுகின்றார்கள். பச்சரசி ஐந்து கிலோ வாங்கினால் புழுங்கல் அரிசி 15 கிலோ தான் என்று சமாளிக்கின்றார்கள். 

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நன்கு படித்த வசதியான அத்தனை பேர்களும் அங்கே பணிபுரிபவர்கள் எத்தனை மோசமாகத் திட்டினாலும் பொறுத்துக் கொண்டு அசையாத சிலை போல நிற்பதைப் பார்க்கும் போது இது இவர்களின் இயல்பான குணமா? அல்லது பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருப்பார்களா? என்று யோசிக்கத் தோன்றியது. 

ஏறக்குறைய இரண்டு கோடி அட்டை இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை இன்றைய சூழ்நிலையில் தேவையின் அடிப்படையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு மடங்கு கூட இருக்காது. இந்த அரிசியை மட்டும் வாங்கிச் சமைப்பவர்கள் என்றால் தமிழகத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமங்களைத் தவிர வேறெங்கும் இருக்காது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. 

சிலர் இட்லி, தோசை மாவுக்கு என வெளிச் சந்தையில் வாங்கிய அரிசியோடு சேர்த்துப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஆனால் எழுபது சதவிகித மக்கள் வாங்கிய அரிசியை ஒரு கிலோவை ஐந்து ரூபாய்க்கு விற்று விடுகின்றார்கள். இதே போல ஜீனி, பருப்பு வகைகள், பாமாயில் என்று ரேசன் கடையில் வாங்கும் பெரும்பாலான பொருட்களை வெளியே விற்று லாபம் பார்ப்பவர்கள் தான் அதிகம். 

இதே அரிசி பாலீஷ் செய்து வெளிச்சந்தையில் 35 ரூபாய்க்கு மாறி விடுகின்றது.இது தவிர இந்த அரிசி கோழிப் பண்ணைகளுக்குச் செல்வதுமாக அரசாங்கத்தின் பணம் வீணாகிக் கொண்டிருக்கின்றது. 

சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் கொண்டு வந்த கிலோ இருபது ரூபாய் அரிசியை மக்கள் எவரும் சீண்டக்கூடத் தயாராக இல்லை. ஆனால் மிக நன்றாகவே உள்ளது. சில மாவட்டங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. தற்போதைய சமூகத்தில் பசியைத்தாண்டி ருசிக்கு மாறிவிட்டதால் பொருளாதார ரீதியாக வாழ முடியாதவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாகவே இது போன்ற அரிசி பார்க்கப்படுகின்றது. 

இது தவிர நகர்ப்புறங்களில் இன்று லாபம் கொழிக்கும் தொழிலாகப் பார்க்கப்படும் பையில் மாவு விற்கும் சந்தைக்கும் இது போன்ற அரிசியே பலவிதங்களில் உதவிக்கொண்டு இருக்கின்றது. 

இன்று தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் (யார் எந்தப் பதவிகளில் இருக்கின்றார்கள் என்றே இன்று வரையிலும் தெரியவில்லை) எத்தனை பேருக்கு கணினியை இயக்கி அலுவலகச் செயல்பாடுகளைப் பார்க்கத் தெரியும்? அதிகாரிகளைத் தவிர அமைச்சர்களைப் பொறுத்தவரையிலும் மின் அஞ்சல் என்றால் ஏதோ துபாய்க்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் என்றே நினைத்துக் கொள்ளும் புத்திசாலிகளாகத்தான் இருக்கின்றார்கள். 

ஆனால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் மடிக்கணினி என்பது குறித்துப் பலரிடம் பேசிப் பார்த்தேன்.

இதிலும் பல நடைமுறை சிக்கல் உள்ளது. தொடக்கத்தில் டைப்பிங் தெரிந்து கணினியை பயன்படுத்தும் போது எளிதாக இருந்தது. ஆனால் இன்று பலரும் விரல் வித்தை வீரர்கள் தான். ஆனால் நம் கல்விச்சூழல் கணினியில் படித்துத் தெரிந்து கொள்ளும் அளவில் இருக்கின்றதா? குறிப்பாக அரசாங்க பள்ளிக்கூட ஆசிரியர்களில் விதிவிலக்குகளைத் தவிர்த்து மாணவர்களை ஊக்கப் படுத்துபவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கே கணினி அறிவு இருக்குமா என்பது சந்தேகமே. இதற்கு மேலாகப் பாடங்களைச் சிடி களில் சேமித்து வைத்து அதை வைத்து பார்த்து படிக்கும் அளவிற்கா நம் வகுப்பறை இருக்கின்றது?

இன்று வரையிலும் தனியார் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் கூடப் பள்ளிக்கூடத்தில் கூடக் கணினி என்பதை ஏதோவொரு பூதம் என்பதைப் போலத்தான் பார்த்து தொடுங்க? என்பது போல அறிவுறுத்துகின்றார்கள். அடுத்து இணைய இணைப்பு இல்லாமல் இருக்கும் இந்தக் கணினிகள் தோல் இல்லாத எலும்பு போலத்தான்.

அரசாங்கத்தின் அறிவுரையின் படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும்(மேல்நிலைப்பள்ளி)இந்த மடிக்கணினி வழங்கப் படுகின்றது.

விலைக்கு விற்று விடுகின்றார்கள். சிலர் விளையாட பயன்படுத்துகின்றார்கள். மிகக் குறைவான மாணவர்கள் மட்டும் பிரயோஜனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அஸ்திவாரம் சரியாகப் போடப்படாமல் அடுக்கு மாடி கட்டுவது போலத்தான் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜெ. வின் தேர்தல் வாக்குறுதி சிறப்புத் திட்டமான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி நடுத்தர வர்க்கத்திற்குக் கீழே உள்ள பல குடும்பங்களுக்கு நிச்சயமாக உதவுகின்றது. ஆனால் பல பேர்களிடம் கேட்ட போது மின் விசிறி மட்டும் தரமாக இருப்பதையும் மற்ற இரண்டு பொருட்களும் நல்லதாக அமைந்தால் அதிர்ஷ்டமே என்கிற ரீதியில் உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பேரூந்து சலுகை, சீருடை, மிதிவண்டி, நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் கேள்வியே எழுப்ப முடியாத நல்ல திட்டங்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடங்கிப் பள்ளியின் தலைமையாசிரியர் வரைக்கும் தற்போதைய ஆட்சி குறித்த பயம் இருப்பதால் மாணவர்களுக்குக் கொடுத்து முடிக்கும் வரையிலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பசுமை வீடுகள் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் கட்சிக்காரர்கள் சொல்லும் நபர்களுக்கு வழங்கப்படும் திட்டம். இலவச காப்பீடு என்பது உதவுகின்றதே தவிர அதைப் பெருமையாகச் சிறப்பான செயலாக்கத்தில் உள்ள திட்டம் என்று சொல்ல முடியவில்லை.

ஏறக்குறைய 11 ஆயிரம் கோடிகள் செலவளிக்கப்படும் இலவச திட்டங்களில் வருடந்தோறும் ஆயிரம் கோடிகளை ஒதுக்கி முதலில் அரசாங்க பள்ளிக்கூடங்களின் கட்டிடங்களைச் செப்பனிட்டாலே போதுமானது. அரசு பள்ளிகளின் மேல் நடுத்தரவர்க்கத்திற்கு இருக்கும் எரிச்சலை குறைத்து நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.

கலைஞர் திட்டம் கவிழ்ந்து இப்போது அம்மா திட்டம் உச்சத்தில் உள்ளது. ஜெ. வின் சாதனையான டாஸ்மாக் சாராயப் பாட்டில்களில் மட்டும் இன்னமும் அம்மா என்ற பெயர் வரவில்லை. மற்றபடி எல்லா இடங்களிலும் அம்மா புகழ் தான் தமிழ்நாட்டில் தற்போது கொடிகட்டி பறக்கின்றது.

தமிழ்நாட்டு ‘குடிமகன்‘களின் விருப்ப அம்மாவாக இருப்பவர், ஆங்கிலத்தை வளர்த்து தமிழ்த்தாய்க்கு சிலை வைக்க நினைப்பவரிடம் மனதில் எந்தத் தாய் போய் இதையெல்லாம் சொல்லப் போகின்றாரோ?

தொடர்புடைய பதிவுகள்

கிராம பொருளாதாரம் அழிந்த கதை

தப்புத்தாளங்கள்


மற்ற பதிவுகள்

நதிகள் இணைப்புத்திட்டம்  கனவா கற்பனையா?

வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா?

31 comments:

எம்.ஞானசேகரன் said...

இலவச திட்டங்கள் இல்லாத எந்த ஆட்சியும் இனி இங்கே இருக்க முடியாது. பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கான திட்டங்கள் இப்படி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. காமராஜர் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைக்கும் நோக்கத்தோடுதான். எம்.ஜி.ஆர். பாணியும் அதுதான். காலில் செருப்பு கூட வாங்கமுடியாத ஏழைகள் குறித்த சிந்தனையால்தான். ஆனால் இப்போதெல்லாம் இந்த இலவசத் திட்டங்கள் என்பது தேர்தல் காலங்களில் ஓட்டு அறுவடைக்காக விதைக்கப்படும் விதைகள். அரசுப் பணம் நாம ஏன் இதை விடனும். நாம வாங்கலைன்னா எவனோ ஒருவன் இதையெல்லாம் விற்று சாப்பிடப்போறான் என்கிற மனோபாவம்தான் எல்லாரையும் ரேஷன் கடை வாசலில் தவம் கிடக்க வைக்கிறது.

”தளிர் சுரேஷ்” said...

இலவசங்கள் என்று ஒழிகிறதோ அன்று வளரும் தமிழ்நாடு! தமிழக அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு இலவசங்கள் வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது! எப்போது விழித்துக் கொள்வார்களோ தமிழர்கள்! இந்த இலவச கிரைண்டர், மின்விசிறி, மிக்சி எங்க ஊரில் எல்லோருக்கும் வந்து விட்டது பாதி பேர் வீட்டில் நீங்கள் சொன்னது போல கிரைண்டரும் மிக்சியும் ரிப்பேர்! திட்டிக் கொண்டு அடுத்த இலவசத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்!

ப.கந்தசாமி said...

வெறுப்புதான் மிஞ்சுகிறது.

அ.பாண்டியன் said...

இலவசங்கள் படும் பாட்டைப் பார்க்கும் போது நமக்கும் வேதனையும் வெறுப்பும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நல்லதொரு பதிவுக்கு நன்றி. இலவசம் இப்போது விலையில்லா என்ற பெயரில் உலவுகிறது சகோதரரே. தொடருங்கள். நன்றி.

Amudhavan said...

இந்த இலவசங்களை ஆரம்பித்து வைத்தவர் என்ற முறையில் காமராஜரை மட்டும்தாம் நாம் நல்ல எண்ணத்தோடு ஆரம்பித்துவைத்தவர் என்று சொல்லமுடியும். 'அவனுக்கு இங்கே சோறு கிடைத்தால் அவன் நிச்சயம் பள்ளிக்கு வருவான் இல்லையா?' என்று கேட்டு வயிற்றையும் கல்வியையும் ஒரு சேர நிரப்பியவர் அவர்.
எம்ஜிஆரே இதனை ஓட்டுக்காகத்தான் பயன்படுத்தினார். சரிந்துவரும் இமேஜைத் தூக்கிநிறுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து ஆரம்பித்ததுதான் சத்துணவுத் திட்டம்.(எம்ஜிஆருக்கு இமேஜ் சரிவா? என்று யோசிக்க ஆரம்பிப்பவர்கள் அன்றைய காலகட்டத்தில் வந்த ஜூனியர்விகடன் பார்த்தால் தெரியும்) அதுவும் இலவச மதிய உணவுத்திட்டத்தைத்தான் கொஞ்சம் மேம்படுத்தி சத்துணவு என்று கொண்டுவந்தார்.
அவருக்கு ஏற்கெனவே இருந்த கொடைவள்ளல் இமேஜால் இப்படியொரு திட்டமே எம்ஜிஆரின் மனதிலும் மூளையிலும் தோன்றியது என்பதுபோலவே அன்றைய ஊடகத்தால் செய்தி பரப்பப்பட்டது.
ஓட்டுக்காக 'இலவசம்' என்று ஆரம்பித்தாலும் அடிப்படை விஷயங்களை மட்டுமே கொண்டுவருவது என்றுதான் கலைஞரும் ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்துவைத்தது ஒரேயடியாகச் சரிந்து இன்று எல்லாமே இலவசம் என்ற நிலைமைக்குப் போய்விட்டது. இதிலிருந்து ஆட்சியாளர்களும், ஆட்சிக்கு வர நினைப்பவர்களும் இனிமேல் எப்படி மீளப்போகிறார்களோ தெரியவில்லை. மக்களும் இலவசங்கள் இல்லாமல் இருக்கத் தயாராய் இருப்பார்களா என்பது தெரியவில்லை.

இராஜராஜேஸ்வரி said...

அஸ்திவாரம் சரியாகப் போடப்படாமல் அடுக்கு மாடி கட்டுவது போலத்தான் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சரியான கணிப்பு ..!

bandhu said...

இந்த இலவசங்களிலேயே பெரிய கொடுமை இலவச தொலைகாட்சி தான்! இந்த குப்பை பெட்டியால் யாருக்காவது எள்ளளவிலாவது நன்மை கிடைத்திருக்குமா? சுமங்கலி கேபிள் மூலம் மாத சந்தா மற்றும் தொலைகாட்சி விளம்பர வருவாயினால் சன் தொலைகாட்ச்சியினர் அடைந்த லாபமே இந்த இலவசத்தினால் பயன்.. இது தான் என்னை பொருத்தவரை மிக (குறுக்கு) புத்திசாலித்தனமான விஞ்ஞான ஊழல்!

Anonymous said...

மிக அருமையாக அலசியுள்ளீர்கள். இலவசத் திட்டங்களை வீண் என்று ஒதுக்கிவிட முடியாது, கஞ்சிக்கு வழியில்லாதோரை பள்ளிக்குள் ஒதுங்க வைத்த மதிய உணவுத் திட்டம் முதல் கல்வி சார்ந்து அரசு செய்த பல திட்டங்கள் உன்னதமானது. மேட்டுக் குடிக்கும் வசதி படைத்தோருக்கும் அதன் அருமை தெரியாது போனாலும் ரேசன் கடைகளில் கிடைக்கும் குறைந்த விலை உணவுப் பொருட்களையும், மண் எண்ணெயும். அரசு மருத்துவ இலவசங்களையும் பெற்று உயிர் பிழைத்த கூட்டம் ஏராளம். இன்று காலம் மாறிவிட்டது, பல இலவச திட்டங்கள் மறுபரிசீலிக்கப்பட வேண்டியவை. இலவசத் தொலைக்காட்சி பல கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்தது, உலக அறிவை விரிவடையச் செய்தது. அடுத்து அனைத்துப் பகுதிகளுக்கும் இலவச கணணியும் இணைய வசதியும் கொடுத்தாலும் நல்லதே. ஆனால் பல இலவசங்களை சுருக்கிக் கொண்டு அப் பணத்தை கல்வியில் முதலீடு செய்ய அரசு முன்வர வேண்டும். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, போதனைப் பயிற்சிகள் முதலானவையை சீரமைக்க வேண்டும். இதுவே காலத்தின் தேவை. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கவும் தாய்மொழிக் கல்வி பயின்றோருக்கு வேலை வாய்ப்பு பெருக்கலையும் தொழில் முனைப்பையும் தர ஏற்பாடுகள் செய்தல் அவசியம்.

saidaiazeez.blogspot.in said...

எல்லோருக்கும் சீனப்பழமொழி நன்றாகவே நினைவிருக்கும்...
மீன் தருவதைவிட சிறந்தது மீன் பிடிப்பதை கற்றுக்கொடுப்பது
நாம் எல்லோரும் இலவசம்/விலையில்லா பொருட்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்றே சொல்லலாம். இது ஒரு மிகப்பெரிய வியாதி. இதை நாம் கேவலம் என்று நினைக்கும் காலம் வந்தால்தான் மாற்றம் வரும்.
அரசாங்கங்களும் மக்களாகிய நம்மை இந்த போதையிலேயே இருக்கவைத்து தங்களின் ஓட்டுவங்கியை தக்கவைத்துக்கொள்கின்றனர்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இலவசங்களை விரும்பாதவர் யாரும் இல்லை. எனக்கு இலவச டிவி வேண்டாம் என்று சொன்னதாக மாதிரிக்குக் கூட ஒருவரும் சொன்னதாகத் தெரியவில்லை. விவசாயத்தை பொறுத்தவரை இலவசங்கள் வழங்கலாம். அப்படியாவது விவசாயத்தை ஊக்குவிக்க முடியுமா தெரியவில்லை?

நிகழ்காலத்தில்... said...

நன்கு படித்த வசதியான அத்தனை பேர்களும் அங்கே பணிபுரிபவர்கள் எத்தனை மோசமாகத் திட்டினாலும் பொறுத்துக் கொண்டு அசையாத சிலை போல நிற்பதைப் பார்க்கும் போது இது இவர்களின் இயல்பான குணமா? அல்லது பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருப்பார்களா?//

வாங்காம விட்டாம அட்டை செல்லாதுன்னு சொல்றாங்களே... அதுக்காகத்தான் பல்லைக் கடிச்சிட்டு நிக்கறாங்க..:)

அகலிக‌ன் said...

4 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய தகுதித்தேர்வில் 14 ஆயிரத்தி சொச்சம் ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் எனற செய்தி இத்தனை காலம் தகுதி இல்லா ஆசிரியர்களுக்கா நம் வரிப்பணம் விரையமானதை எண்ணியும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால நிலையை என்ணியும் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கிறது. இதில் இலவசங்களின் விரையங்களை பட்டியலிட்டு மெலும் கிலி கிளப்பிவிட்டுவிட்டீர்களே. நியாயமா?

'பரிவை' சே.குமார் said...

அருமையான கணிப்பு...
பகிர்வுக்கு நன்றி.

ezhil said...

இத்தனை வருட ஆட்சிக்காலத்தில் ஏழைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன அரசுகள்

ஜோதிஜி said...

ஆனால் பாதிப்பேர்கள் இதன் மூலம் வெளியே விற்று லாபம் பார்ப்பது தான் அதிகம்.

ஜோதிஜி said...

தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள் தான் அதிகம்.

ஜோதிஜி said...

இதன் மூலம் சிலரால் வாழ முடிகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜோதிஜி said...

உண்மைதான். இந்த வார்த்தையை சேர்க்க மறந்து விட்டேன்.

விலையில்லாப் பொருட்கள்.

நன்றி பாண்டியன்.

ஜோதிஜி said...

பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தது வறண்டபூமியில் வளர்த்த செடிகள்
எம்ஜிஆர் செய்தது செடிகளை பாதுகாத்து மேற்கொண்டு வளர செய்த உதவிகள்.

இருவரும் செய்தது அடிப்படை தேவைப்பட்டவிசயங்கள்.

இதற்குப் பிறகு வந்தவர்கள் செய்தது? நண்பர் பந்து ஒரு பதில் கொடுத்துள்ளார் பாருங்க.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

மிக மிகச் சரியான கணிப்பு.

ஜோதிஜி said...

பிரச்சினையின் வேர் மிக எளிமையானது. கர்நாடகத்தில் பள்ளி முதல் உயர்கல்வி வரை கன்னட மொழியை ஒரு மொழிப்பாடமாகப் படிக்காமல் யாரும் கல்வி முடிக்க முடியாது. தமிழ்நாட்டிலோ ப்ரீகேஜி முதல் பி.எச்.டி வரை தமிழை மொழிப்பாடமாக எந்தக் கட்டத்திலும் எடுக்காமல் கல்வியை முடித்துவிடலாம். இதற்குக் காரணம் தமிழக அரசியல்வாதிகளும் கல்வி வியாபாரிகளும் கூட்டாகச் செய்துவந்திருக்கும் வணிக சதிதான். இதுதான் பிரச்சினையின் வேர்

எழுத்தாளர் ஞாநி அவர்கள் தனது முகநூலில் எழுதியுள்ள தமிழ் மொழி வளராமல் இருப்பதன் காரணத்தின் ஒரு பகுதி இது.

பல இடங்களில் உங்களின் விமர்சனத்தைப் பார்க்கின்றேன். மிக அழகாக உங்கள் பதிவுகளைப் போல கருத்துக்களையும் ஆழமாக எழுதுகின்றீர்கள். நன்றி நண்பரே.

ஜோதிஜி said...

இந்த முறை நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன் அஜீஸ்

ஜோதிஜி said...

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பற்றி தனியாக எழுத வேண்டும். 50 சதவிகிதம் இதுவும் பெரிய பணக்காரர்களுக்குத்தான் போய்க் கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் கொடுத்த எந்த இலவச பொருளையும் இதுவரையிலும் நான் வாங்கியது இல்லை. ரேசன் அரிசி (பட்டை தீட்டப்படாத) தேவை என்பதால்அதை வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.

ஜோதிஜி said...

மறுக்கமுடியாத உண்மை சிவா.

ஜோதிஜி said...

அடுத்து நான் எழுதி வைத்துள்ள பேதி மருந்து என்ற பதிவின் கடைசி வரிகளை எப்படி தான் மோப்பம் பிடித்தீர்களோ?

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அழகான அற்புதமான உண்மை

Unknown said...

அரசியல் என்றாலே அலர்ஜி என்ற நிலை இதனால் தானோ ???????

ஜோதிஜி said...

நடுத்தரவர்க்கத்தின் இந்த அலர்ஜி என்கிற வார்த்தையால் தான் அரசியலில் குறிப்பிட்ட சில வகையினர் மட்டும் இன்று வரையிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் ஹேமா

கிரி said...

இலவசத்திட்டங்களால் அரசுக்கு வீண் செலவு தான். அதோடு மக்களையும் சோம்பேறிகள் ஆக்கி விட்டார்கள். இந்த திடீர் மின்சாதன வரவுகள் கூட மின் பற்றாக்குறைக்கு ஒரு முக்கியக் காரணம்.

எத்தனை மக்கள் வரிப்பணம் இலவசம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கமிசன் அடித்து இருப்பார்கள் என்று நினைத்தால்....